சிற்றிதழ்களில் சங்கு(2010-2011): கவிதைகள் ஓர் ஆய்வு

author
0 minutes, 5 seconds Read
This entry is part 3 of 24 in the series 9 பெப்ருவரி 2014

முனைவர். ந.பாஸ்கரன்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
பெரியார் கலைக் கல்லூரி,
கடலூர்-607 001.

பல்வேறு களங்களை மையமாகக் கொண்டு இதழ்கள் வெளிவருகின்றன. இவற்றைப் பொருண்மை நிலையில் வெகுஜன இதழ்கள், சிற்றிதழ்கள் என பிரித்துணர முடிகின்றது. இலக்கியங்களை வார்ப்பது, வளர்ப்பது, விமர்சிப்பது என்ற நோக்கில் சிறந்த ஊடகமாய்;ச் சிற்றிதழ்கள்  உள்ளன. வியாபார நோக்கம் அற்றதாய் மொழி, சமூகம் எனும் இருநிலைகளை  மையமாகக் கொண்டு இயங்குவதாய்ச் சிற்றிழதழ்கள் உள்ளன. மேலும், பல துறை சார்;ந்த மொழி உணர்வாளர்களை இலக்கியம் என்னும் தளத்தில் குவியச்செய்வதாகவும,; தமிழை உலகளவில் விவாதிக்கச் செய்வதாகவும் கூட சிற்றிதழ்கள் பணியாற்றி வருகின்றன. தமிழ் இலக்கிய வகைகளையும் வகைமைகளையும் வளர்த்தெடுப்பதாகவும் சிற்றிதழ்களின் பணி அமைந்துள்ளன. இச்சிற்றிதழ்களின் வரிசையில் கடலூரிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் காலாண்டிதழான கடலூர் வளவதுரையனின் சங்கு எனும் சிற்றிதழின் தமிழ்ப்பணியினை இக்கட்டுரையின் வழி காண்போம்.

தமிழ்ச் சூழலில் சிற்றிதழ்கள் : சில பதிவுகள்

தமிழ் இலக்கிய வரலாற்றில் இலக்கிய கருப்பொருள்களிலும் கட்டமைப்புகளிலும் மாற்றங்கள் அல்லது திருப்பங்கள் நடப்பதற்கு முக்கியக்காரணியாக சிற்றிதழ்கள் செயலாற்றியுள்ளன. எழுத்து என்ற இதழிலிருந்து சிறுபத்திரிகைக்கான வரலாற்றை உணர வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு மணிக்கொடி, கிராம ஊழியன் போன்றவை இருந்தன இருப்பினும் ஆனந்த விகடன், கலைமகள் போன்றவை இலக்கியம், அரசியல், விமர்சனம் என்னும் உள்பொருள்களில் செயலாற்றி உள்ளன. சிறுபத்திரிகை , பெரும் பத்திரிகை என்ற அளவில் இல்லாவிட்டாலும் கூட மணிக்கொடி முதலானவை சிறுநிறுவனமாகவும் கலைமகள் முதலானவை பெரு நிறுவனமாகவும் இருந்துள்ளன. 1960 –க்குப்பின் சிற்றிதழ்கள் தரமான படைப்பு – படைப்பாளர்கள் புதுப்புது இலக்கியக்கொள்கை என வளரத்தொடங்கி 1970 –ல் இதனை எழுத்து, நடை, கசடதபற, அஃ, பிரக்ஞை, நிகழ், மீட்சி, கனவு, லயம், முன்றில், விருட்சம், படிகள் முதலானவை வளர்ந்துள்ளன. 1980 –ன்  பின்பகுதியில் சிறுதேக்கம் ஏற்பட்டு மீண்டும் 1990- களில் லயம், காலச்சுவடு, நிகழ், கிழக்கு என்பன தமிழிலக்கிய கருத்துக்களைப் புதிய நோக்கில் வடிவமைத்து அமைப்பியல் வாதம், பின்அமைப்பியல் வாதம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் என்னும் கோட்பாடுகளை முன்னெடுத்து சென்றுள்ளன.

மக்களிடையே அரசியல், கலை, முதலானவற்றின் விழிப்புணர்வை தரும் வகையில் சுதந்திர காலக்கட்டத்தில் மணிக்கொடி, கிராமஊழியன்,கலாமோகினி, இலக்கிய வட்டம,; சரஸ்வதி போன்றவை இயங்கி உள்ளன. இருப்பினும் இவற்றால் பெரிய அளவில் வளர இயலவில்லை. பெரும் நிறுவன பத்திரிகைகள் சந்தாதாரரை நம்பியே இல்லாமல் முகவர்களை நம்பி இயங்கின. அதோடு புதிய எழுத்தாளர்களுக்கும் பரிசோதனைக்கும் இடமளித்தன. இதுபோன்ற செயல்களால் இவை முன்னோடியாயின. சிற்றிதழ்களின் வருகை தனிநபர் அல்லது நண்பர்கள் முயற்சியால் நிகழ்வதாய் உள்ளன. மேலும், போதுமான நிதி பலம் இல்லாமையால் அல்லது நிதிக்கு முதன்மை தராமையால் வெளியீடுகளும் சிறிய அளவிலேயே நிகழ்ந்துள்ளன. சிறுபத்திரிகைகளின் முன்னோடியாக வெளிவந்த சி.சு.செல்லப்பாவின் எழுத்து (ஜனவரி-1959) சந்தாதாரருக்கு மட்டுமாய் 200 பிரதிகள் வெளியிட்டுள்ளார். அதன் தலையங்கத்தில்,

“ ஆழமும் கனமுமான இம்முயற்சிகொதிக்கின்ற
முயற்சி என்று நன்குணர்ந்து  தொடங்கப்படுகிறது”

என்று குறிப்பிடுகிறார். இம்முயற்சியும் 1990 –ல் மிகுந்த நட்டத்துடன் நின்று போனதாகவே சிற்றிதழ் வரலாறு கூறுகிறது.

எழுத்து வாசகர்களான சி.மணி, ந.முத்துசாமி இவர்களால் 1964-ல் தொடங்;கப்பட்ட நடை என்ற சிற்றிதழ் இளம்படைப்பாளிகளுக்கானப் பொதுமேடை என்ற குரலோடு அசோகமித்திரன் , ஞானகூத்தன்  போன்றோரில் 1970 –ல் தொடங்கப்பட்டு குழுமனப் போக்குகளால் வலுவிழந்து  போன கசடதபற சிற்றிதழ் இராசமார்த்தாண்டனால,; 1976-ல் வந்த கொல்லிப்பாவை, குமாரசாமியால,; 1977-ல் வந்த வைகை, இதற்கிடையிலும் சுவடு, நீலக்குயில் என பல சிற்றிதழ்கள் தோன்றி நின்றன. எண்பதுகளில் நிகழ், காலச்சுவடு, முன்றில்,விருட்சம், மண், மீட்சி, கனவு, என பல. 1981-ல் ஞானக்கூத்தனின்; கவனம்என்றசிற்றிதழ், 1982-ல் பிரம்மராஜனின் ஸ்வரம், மீட்சி(1983), 1985 –ல் க.நா.சு. பொறுப்பாசிரியராக இருந்து தொடங்கிய ஞானரதம,; 1988-ல் சுந்தரராமசாமியால் தொடங்கப்பட்டு இன்றும் தொடரக் கூடிய  காலச்சுவடு, பெண்ணியம், தலித்தியம் போன்றவற்றின் களமாக ஞானியால் எழுதப்பட்ட நிகழ் சிற்றிதழ், தொண்ணூறில் அழகிய சிங்கரின் விருட்சம் இதனைத் தொடர்ந்து நிறப்பிரிகை, கிரணம், கணையாழி, தீபம், சுபமங்களா என்று சிற்றிதழ்களின் தொடர்ந்த வரலாறு  பதிவாகிக் கொண்டே தான் வருகின்றன. இந்த வரிசையில் எண்ணத் தக்கதாக கடலூர் வளவ துரையனின் சங்கு என்ற சிற்றிதழும் உள்ளது.

சங்கு (2010-2011) சிற்றிதழின் கவிதைகள்-சில பதிவுகள்

தமிழகத்தின் ஆகச்சிறந்த படைப்பானர்கள் அனைவரின் படைப்புகளையும் சங்கும் வெளியிட்டு வருகின்றது. கதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு,நுல்விமர்சனம், ஆய்வுகள் என்று பல வகையானப் படைப்புகளும் சங்கின் வழி வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் பாவண்ணன் நாஞ்சில் நாடன், பொன்குமார், சத்தியமோகன், தேவதேவன், விக்ரமாதித்யன், அன்பாதவன், நிலாமகன், இரா. தமிழரசி, அமீர்ஜான் விக்ரமாதித்யன் நம்பி போன்றோரின் கவிதைகள் வெளிவந்துள்ளன.

நவீனத்தும், பின்நவீனத்துவம் என்னும் பெயர்களில் வாசகனை விழிபிதுங்க வைக்கும் கவிதைகளிலும் கவித்துவத்துவக்கு குந்தகம் ஏற்படுத்தாத கவிதைகளையே சங்கினில் காணமுடிகிறது. நவீனம் என்பது பெரும்பாலும் நல்லதை ஏற்க மறுப்பதாக இருக்கிறது. என்பதை விக்ரமாதித்தன் நம்பி,

“  அம்மாவைப் பற்றி எழூதினால்
அது நவீன கவிதையாகாதோ
அருவியையும் ஆற்றையும் கொண்டு வந்தால்
அவற்றை ஏற்க மாட்டீர்களோ
அம்பாளையும் சுவாமியையும் சொன்னால்
அதெல்லாம் பழசாகிப் போகுமோ?
;               —————————————————–
தமிழ் சினிமா, திரைப்படப் பாடலென்றால்
தப்பு தவறெனத் தலையிலடித்துக் கொள்வீர்களோ
நல்லது நல்லது தள்ளிப்போங்கள்
நான் நவீன கவிஞனில்லை” ( சங்கு – பிப்ரவி 2010)

என்னும் கவிதையில்; பதிவு செய்கிறார். நவீனம் என்பது எதையும் சொல்லும் சொலல் முறையில் தான் வேறுபட்டு நிற்கிறது. என்பதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். கவிதை என்பது ஒரு பெயரை தலைப்பாய்த் தொங்கவிட்டுக் கொண்டு அதனின்று சற்றும் பிசகாமல் எழுதுவது அல்ல எனும் முடிவிற்குசங்கு இதழ் நவீனம் இட்டுச் செல்கிறது. மேலும், கவிதையினுள் புதையுண்டிருக்கும் பொருண்மையும் ஒன்று அன்று என்பதையும் ‘ராமசாமி ரெங்கசாமி நடேசு’ வின் கவிதை புலப்படுத்துகிறது. இதனை,

“ஒன்றாய்த் தானிருக்கிறது
ஒன்றாயிருந்த பாடில்லை
ஒன்றாகவே யிருந்தால்
நன்றாகவேயிருக்காதென்று
தெரியுமோ தெரியாதோ
ஒன்று
ஒரு போதும் ஒன்றாகவே இருப்பதில்லை”

என்ற கவிதையாய் ——————-
“அலை பிறிதொரு அலை —– கடல்” (சங்கு சூலை 2010) என்னும் தலைப்பில் வந்துள்ளது. மதம் என்னும் ஊடகத்தை கட்டுடைக்கும் போக்கில் இக்கவிதை சென்றாலும் மதம் கதைக்கும் வேதாந்தத்தைப் போலவே இதன் போக்கும் அமைய வேண்டும் என்;பதன் அவசியம் அறியமுடியாததாகவே உள்ளது.
பொன் குமார், கவிதைகளின் சொல் விளையாட்டும் அதனுள் ஆழ்ந்துள்ள பொருளும் சுருக்கமாகவும் சுருக்கென்றும் தந்துள்ளது சங்கு. இதனை,

வேறுபாடு

“கால்மேல் கால்போட்டு
கூட்டத்தில் அமர்ந்தான்
‘ஆணவன்’ என்றார்கள்
கால்மேல் கால்போட்டு
கூட்டத்தில் அமர்ந்தால்
‘ஆணவம்’ என்றார்கள்’;.  (சங்கு : 2010 அக்)

என்பதாய்க் காணமுடிகிறது. வாசிப்பாளரை மனதில் கொண்டு ஒரே துறையில் பல படிநிலைகளில் உள்ள படிப்பாளிகளையும் நிறைவு செய்யும் பாங்கு சங்கிடத்து உள்ளது. இதனை,

“பழம் விற்கும் பாட்டிகையில் கைத்தொலைபேசி
பாம்பாட்டிக் கூடையிலும் கைத்தொலைபேசி
குழந்தைக்குப் பால்கொடுக்கும் சினனக்குறத்தி
கூச்சமுடன் பேசுகிறாள் கைத்தொலைபேசி”

என்னும் ‘கைத்தொலைபேசி’என்ற ம.இலெ.தங்கப்பாவின் கவிதை வழியாகவும் காணமுடிகிறது. சிற்றிதழ்களில் பொருள் லாபத்தை பொருட்படுத்தாமல் இன்று பல இயங்கிவருகின்றன. இவைகளால் தமிழ் இலக்கியங்கள் உலா இலக்கிய தளத்தையும் தாண்டி பயணித்து வருகின்றன. இவ்வகையில் காலாண்டிதழாக இயங்கிவரும் சங்கு இதழ் தமிழ்ப்பணி போற்றத்தக்கதாய் அமைந்துள்ளது.

பயன்பட்ட நூல்கள்

1. நவீனத்துவமும் பின் நவீனத்துவமும் – ஜெயமோகன்

2. சங்கு – காலாண்டிதழ் – வளவ துரையன், கடலூர்
சூன் 2013-சங்கில் வெளியானது.

Series Navigationஆத்மாநாம்வலிநாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *