புதியமாதவியின் மின்சாரவண்டிகள்

author
0 minutes, 7 seconds Read
This entry is part 3 of 24 in the series 9 பெப்ருவரி 2014

கோவை ஞானி.

 

புதியமாதவி அவர்களின் இந்த முதல் சிறுகதை தொகுப்பு 2005ல் வெளிவந்ததாகக் குறிப்பிடுகிறார். தொகுப்பில் 15 சிறுகதைகளும் மின்சார வண்டிகள் என்ற குறுநாவலும் உள்ளன. பெரும்பாலான கதைகள்

நல்ல கதைகள். சில கதைகள் அற்புதமான படைப்புகள்.

மின்சாரவண்டிகள் குறுநாவல் ஏற்கனவே பம்பாயைப் பற்றி, பம்பாயில் தமிழர்கள் வாழ்வது பற்றி நிறைய கதைகளை  நாம் படித்திருக்கிறொம். இந்தக் கதையும்

அவ்வகையான கதைகளில் ஒன்று. சுமாரான கதை.

இதை விட்டுவிடலாம். இன்னும் சில சிறுகதைகளையும் ஒதுக்கிவிட்டால் இத்தொகுப்பில் ஐந்தாறு கதைகள் மிகச்சிறப்பான கதைகள்.

புதியமாதவியின்  கருத்தியல் வெற்றிக்கெல்லாம் சார்பானது என்று இக்கதைகள் தெளிவுப்படுத்துகின்றன.

 

தென்மாவட்டத்திலிருந்து பம்பாயில் குடியேறி, அதன் விளைவாக பம்பாய்வாசியாகியாக மாறிவிட்டவர் புதியமாதவி. (பிறகு அவருடன் உரையாடிய போது தெரியவந்தது புதியமாதவி பம்பாய் தமிழர்களின்

நான்காவது தலைமுறை என்கிற விவரம்)

தமிழ்நாட்டிலிருந்து போகிற போதே பகுத்தறிவுவாதத்தையும் உடன் கொண்டு போயிருக்கிறார். தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து வாழ்ந்திருந்தால் அவரது பகுத்தறிவு பார்வை இன்று இருப்பது போல சுத்தமாக இராது என்றே கருதுகிறேன்.

கூடுதலாக பெண்ணியச்சார்பு முதலிய சமூக இயக்கச்சார்புடையவர் புதியமாதவி. கதைகளில் கருத்தியல் தளங்களை ஒருபக்கம் வைத்துவிட்டு அவரது கலை நேர்த்திப் பற்றி மிகச்சிறப்பாகக் குறிப்பிடலாம். தமிழை அவர் எத்தனை அழகாக, நேர்த்தியாக எழுதுகிறார், சிறுகதைக்குரிய சிறப்பான நிகழ்ச்சி சித்தரிப்புகள்.. இவ்வகை சித்தரிப்பில் இவரிடம் குறை காணவே முடியாது. தமிழுக்குக் கிடைத்திருக்கும்

ஓர் அற்புதமான கலைஞர்.

 

 

இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளைப் பார்ப்போம்.

 

முதலில் “கண்பதி பப்பா மோரியா!”

மும்பை நகரத் தெருக்களில் மாபெரும் கணபதி ஊர்வலம். பலவண்ண கலவையில் பல்வேறு வடிவங்களில் சிலைகள். மேளதாள ஊர்வலங்கள்.

கணபதிக்கு காதடைக்கிறது. தாய் மீனாட்சி அம்மையை நோக்கி கணபதி பேசுவதாகக் கதை. இந்த ஆரவாரங்கள் எனக்குப் பிடிக்கவில்லை என்பதில் அவர் சொல்லும் சான்றுகள் 4. அதில் ஒன்று கீழ் வருமாறு:

 

“தாயே … கம்சன், சூரன், சிசுபாலன், இரணியன் இவர்களை எல்லாம் அழிக்க நடந்த நம் பரம்பரையின் அவதாரங்கள் என்னால் வெறும் கதையாகிவிட்டன.

 

ஏனேன்றால் நான் இன்று அவர்களின் இல்லங்களில் தான் அவதரிக்கின்றேன். அவர்களின் மண்டபத்தில் தான் எனக்கு பூஜையும் பஜனையும் ஆரத்தியும் அலங்காரமும் நடக்கிறது. உன் பிள்ளை , உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ய அறியாதவன் தாயே!

 

அவர்களை என்னால் அழிக்கவும் இயலவில்லை, என் தும்பிக்கையால் அவர்களை என்னால் அணைக்கவும் முடியவில்லையே!

 

ஆண்டாண்டுக்கு என் இந்த வேதனை, மனதை ரணமாக்குகிறது தாயே!”

 

கணபதி இப்படிப் புலம்புவதாகக் கதை இயங்குகிறது.

கணபதிக்கே பிடிக்காத வழிபாடுகள், ஆரவாரங்கள் ஆசிரியரின் பகுத்தறிவுவாதக் கதை. பகுத்தறிவை மீறி

கலைத்திறன் பளிச்சிடுகிறது.

 

அடுத்து, “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற தலைப்பில் ஒரு கதை.

ஆசிரியர் பகுத்தறிவுவாதிதான் என்றாலும் தமிழ் மரபில் வந்த, தமிழ மரபுக்கே உரிய சில சின்னங்கள், சில அடையாளங்கள், சில வாழ்க்கை முறைகள் முதலியவற்றை நம் வாழ்வுக்குள்ளிருந்து எடுத்தெறிய விரும்பவில்லை. என்றும் இவை நமக்கான அடையாளங்கள். கிராமத்திலிருந்து திருமணம் செய்து கொண்டு நகரத்தில் குடியேறுகிறான் மகன். இவன் நவீன வாழ்க்கையை விரும்புகிறவன். மனைவி நகரத்துப் பெண்தான். கிராமத்து வீட்டில் இவனால் ஒதுக்கப்பட்ட குதிர் மற்றும் கும்பாவை , பழைய கலைப் பொருட்கள் விற்பனையாகும் ஒரு கண்காட்சியிலிருந்து  மனைவி வாங்கிவந்து வீட்டில் அலங்காரச் சின்னமாக வைக்கிறாள். மாமியாருக்கு அளவற்ற மகிழ்ச்சி. அற்புதமான குதிர் மற்றும் கும்பா சின்னங்களை நாம் ஒதுக்கிவிடவா முடியும்? சிறுகதைக்குள் இப்படி நம் வரலாறு இடம் பெறத்தான் வேண்டும்.

 

 

இன்னுமொரு கதை. இன்று பாகிஸ்தானில் எத்தனையோ வழக்குகளுக்கு ஆளாகி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் முன்னைய அதிபர் முஷ்ரப் பற்றி வெளிவந்த ஒரு செய்தி இங்கு கதையாகிறது. முஷ்ரப் தான் பிறந்த இந்திய கிராமத்திற்கு வருகிறார். சிறுவயதில் தனக்குத் தோழியும் இன்றும் அவரால் மறக்க முடியாதவளுமான அவள் வீட்டுக்குச் செல்கிறார். வீட்டின் சுவரில் படங்கள் பல மாட்டப்பட்டிருக்கின்றன. இந்த வீட்டில் பிறந்த மக்கள், அவர்கள் மூவரும் இந்திய பாகிஸ்தான் போரில் கொல்லப்பட்டவர்கள். தீவிரவாதியாய் சுட்டுக் கொல்லப்பட்டவர் கணவனும் குழந்தையும். மனநிலை பாதிக்கப்பட்டவராய் முஷ்ரப் பையும் அடையாளம் தெரியாதவளாய் பிரம்மைப் பிடித்தவளாய் நிற்கிறாள் அந்தப் பெண். கதை நம் மனதை உருக்குகிறது. நம் மனத்தைக் கலங்கடிக்கிறது. இத்தனைப் பேர் சாவுக்கும் ஒரு காரணமாய் நிற்கிறார் முஷ்ரப். அவரும் மனம் கலங்குகிறார். இன்றும் இந்த முஷ்ரப் தான் நாட்டு நலனுக்குத்தான் எல்லாவற்றையும் செய்தேன் இவைக் குற்றம் என்றால் என்னை மன்னியுங்கள் என்று பாகிஸ்தான் மக்களை வேண்டுகிறார். இந்தக் கதையில் ஆசிரியர் தன் கற்பனைகளையும் சேர்க்கத்தான் செய்திருப்பார். எல்லாமே இணைந்து ஒரு நல்ல சிறுகதையை நமக்குத் தந்திருக்கிறார். போர் அறவே வேண்டாம். இந்தியா பாகிஸ்தான் போருக்கு பாகிஸ்தான் மட்டுமே காரணம் தானா?

 

நான்காவது கதை சிஸ்டர். சற்று விரிவான கதைதான். வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய கதை. கல்லூரி விடுதியில் இருவர். ஒருவர் சிஸ்டர், இன்னொருத்தி தான் காதலித்தவனின் கடிதம் கண்டு துணுக்குற்று இருக்கிறாள். இருவரும் பலநாள் பழகியவர்கள். சிஸ்டர் கேட்கிறார் ” மறந்துவிட்டானா?” தன் கதையை சிஸ்டருக்கு இவர் சொல்லவில்லை. சிஸ்டர் எப்படி தெரிந்து கொண்டார்?  இந்த வயதில் இவள் கலங்க வேறு என்ன காரணம் இருக்க முடியும்? இவள் சோகத்தை எப்படி சிஸ்டர் புரிந்து கொண்டார்? இந்தப் புள்ளியில் தான் கதை முன்னும் பின்னுமாக நகர்கிறது. சிஸ்டர் ஆவதற்கு முன்பு இவருக்கும் ஒரு காதலன் இருந்தான். ஏதோ ஒரு காரணத்திற்காக அவன் இவளை மறுத்துவிட அந்த சோகம் தாக்கிய ஒரு கணத்தில் சிஸ்டர் ஆவது என முடிவு செய்தாள். இந்நாள்வரை அதற்காக சிஸ்டர் தனக்குள் வருந்திக் கொண்டிருக்கிறாள். சில நாட்கள் சென்ற பிறகு அவர் தோழி மகிழ்ச்சியாக திருமண பத்திரிக்கை கொண்டு வருகிறாள்.

 

காதலன் மனம் மாறிவிட்டானா? இல்லை, இன்னொருவனோடு அவளுக்குத் திருமணமா? சிஸ்டர் அன்று இயேசுவிடம் மன்றாடுகிறார். தன் தவறுக்காக மன்னிப்பு கோருகிறார். பகுத்தறிவாளர் ஒருவர் தான் இப்படிக் கதை சொல்ல வேண்டும் என்பதில்லை, எல்லோருக்குமான வாழ்வியல் இது.

ஜெயகாந்தனின் ‘பாவமன்னிப்பு” சிறுகதை நினைவுக்கு வருகிறது. அவர் கதையிலும் சிஸ்டர் கர்த்தரிடம் மன்னிப்பு வேண்டுகிறார். பேருந்தில் பயணம் செய்தப்போது எதிர் இருக்கையில் இருந்த ஒரு தாய் குழந்தைக்கு பாலூட்டிய போது அவளைக் கொஞ்சுவதைப் பார்த்து இப்படி ஒரு பாக்கியத்தை நாம் இழந்துப் போய்விட்டோமே என்பதாக கர்த்தரிடம் மன்னிப்பு வேண்டுவார் சிஸ்டர்.

சிஸ்டர் என்றால் இவர்களுக்கு ஏன் இப்படி ஒரு உணர்வு?!

 

கடைசியாக ஒரு கதை, “ஆண்டாளும் ஆத்தங்கரைச் சாமியும்”. கதையின் கொள்ளை அழகை இங்குச் சொல்லவே வார்த்தையில்லை. இந்தத்  தொகுப்பில் உள்ள இச்சிறுகதை “ஒரு நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்பில் சேர்க்கப்பட வேண்டியது”

 

நகர வாழ்க்கையில் மிதந்த கணவன் மனைவி இருவர். கணவன் கிராமத்தில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கொடைவிழாவிற்கு கணவனுடன் வருகிறாள் அமுதா.

கிராமத்தின் கூத்தும் கும்மாளமும் இவளுக்குப் பிடிக்கவில்லை. நண்பன் எழுதிய ஆண்டாள் நாவலைப்

படித்துக்கொண்டிருக்கிறாள். ஆண்டாளுக்கு இறுதியில் என்ன நேர்ந்தது? பெருமாள் ஒருவருக்குப் பின்னால் இருந்த சுரங்கத்திற்குள் போய்ச் சேர்ந்தாள் ஆண்டாள். உருக்கமான கதை. இரவு 12 மணிக்கு சுடலைக்குச் சென்று ஒற்றை எலும்பை எடுத்துக் கொண்டு சாமி ஏறிய நிலையில் ஒரு காலை மடித்துக் கட்டியபடி இன்னொரு காலால் இவர்கள் தெருவில் ஆவேசமாக ஆடிக்கொண்டு வருகிறான் மாடசாமி. இவர்கள் தெருவாசிகள் உயர்சாதியினர். ஆத்தங்கரை சாமி இவர்களுக்கு கீழ்ப்பட்ட சாதியினரின் சாமி. இரு சாதிகளுக்கும் இடையில் பகைமை என்ற போதிலும் கொடை விழாவில் சாமிவருவதை மறுக்க முடியவில்லை.

 

நகரத்தில் ரிலையன்ஸ் சர்ட்டும் இண்டிகா காரோடும் இருந்தக் கணவன் விழாவில் கலந்துக் கொண்டு அழுக்கேறிய உடையோடு உள்ளே வருகிறான். தன் கிராமத்து சாமி அவனுக்கு வேண்டும். அவன் கிராமத்தான். நகரில் நவீன நாகரிகத்தோடு வாழ்ந்தாலும் அவனுக்குள் அந்தக் கிராமத்தான் வாழ்கிறான். சாதியைக் கடந்தவன் இவள். அம்மன் கொடை இவளுக்கும் வேண்டும். அப்பொழுது முதற்கொண்டே ஆண்டாளையும் ஆத்தங்கரை சாமியும் இவள் நினைவுக்கு வருகிறார்கள். மனிதர்கள் மத்தியில் நகரங்கள் என்ன> கிராமங்கள் என்ன,? சாதிகளுக்கு இடையில் ஏற்ற தாழ்வுகளுக்கு என்ன அர்த்தம்?

மரபும் நவீனமும் இரு வேறு துருவங்கள் தானா?

இந்த வேறுபாடுகள் மனிதனுக்குள் என்ன ஆகின்றன?

 

 

புதியமாதவியும் அவர் மின்சாரவண்டிகளும் தொடர்ந்து

ஓடிக்கொண்டே இருக்கின்றன.

 

(கோவை இலக்கியச் சந்திப்பு: 37ஆம் நிகழ்வு.

29/12/2013 , எஸ் பி நரசிம்மலு நாயுடு உயர்நிலைப் பள்ளி, கோவை 1. நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

 

Series Navigationஆத்மாநாம்வலிநாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *