பர்வதத்திற்கு தன் வாழ்நாள் லட்சியம் எது என்றால், இதே ஊரில் இருப்பதாக அம்மா சொன்ன தன் அப்பா யார் என்று முதலில் கண்டுபிடிப்பது, அப்படி கண்டுபிடித்த பிறகு அவரை நான் தான் உன் அப்பா என்று பகிரங்கமாகச் சொல்ல வைத்து, ஊர் அறிய தன்னை மகளாக அவரை ஏற்று கொள்ள வைப்பதுதான்.
அவளுடைய அப்பா யார் என்று அவள் அம்மா சுந்தரவல்லி கடைசி வரைக்கும் சொல்லவில்லை. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இதே ஊரில் அவர் இருக்கிறார். ஆனால், அவர் யார் என்று சொல்ல மாட்டேன் என்று சொல்லி வந்தவள், உயிர் போவதற்கு முன்னால் ஒன்று சொன்னாள்.
“ இதே ஊர்ல இருக்கிற உன்னோட அப்பா, ஒரு நாள் அவரே விரும்பி, நீ தான் தன்னோட மகள்னு சொல்லி, உன்ன ஏத்துப்பாருன்னு நெனக்கிறேன்…” என்று.
யார் அந்த மனிதர். ஏன் அதை அம்மா மறைத்து வைத்து இறந்து போனாள். எப்படி அவரை கண்டுபிடிப்பது. அம்மா சொன்ன படி ஒரு நாள் அவரே தன்னை மகள் என்று சொல்லி ஏற்றுக் கொள்வாரா…
ஆறு மாதத்திற்கு முன் ஒரு நாள் காலை. மாற்று புடைவை சகிதமாய், பர்வதம் குளத்தங்கரை படிக்கட்டில் குளிப்பதற்காக இறங்கும் போது, மளிகைக் கடை கந்தசாமியின் மகள் லட்சுமி குளித்து முடித்து விட்டு, ஈரப் புடைவையோடு படிக்கட்டில் ஏறி எதிரே வந்து கொண்டிருந்தாள்.
பர்வதத்தைப் பார்த்த லட்சுமி, லேசாய் புன்னைகைத்தாள். பிறகு வெட்கப் பட்டுக் கொண்டாள். பர்வதத்திற்கு இது ஆச்சர்யமாய் இருந்தது. தன்னைப் பார்த்து எதற்காக இந்த பெண் வெட்கப்பட்டுக் கொள்ள வேண்டும்?.
பர்வதம் திரும்பிப் பார்த்தாள். ஈரப் புடைவை தடுக்கி, படிக்கட்டில் ஏறுவதற்கு சிரமம் கொடுத்தாலும், வேகமாய் ஏறி ஓடிப் போனாள் லட்சுமி.
பர்வதத்திற்கு தன்னைப் பற்றி ஊர்க்காரர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரியும். தன்னைக் கண்டால் ஊரே பயப்படும். அவளிடம் வாய் கொடுக்க, நின்று பேச மற்ற பெண்கள் பயப்படும் போது, இந்த பெண் லட்சுமி, தன்னைப் பார்த்து சிரித்தது, பிறகு வெட்கப் பட்டு கொண்டது, நம்ப முடியாமல் இருந்தது பர்வதத்திற்கு.
அதே சமயம், தான் மற்றவர்கள் வாய் கொடுக்க பயப்படும் அளவுக்கு மாறிப் போனதற்கு என்ன காரணம் என்று யோசித்து பார்த்தாள்.
இது தனக்கு தானே போட்டுக் கொண்ட ஒரு திரை, ஒரு பாதுகாப்பு வளையம் என்பது அவளுக்கு புரிந்தது. ஒருக்கால் இப்படி ஒரு திரையை அவள் தனக்கு போட்டுக் கொள்ளாமல் இருந்திருந்தால், தன் அம்மாவைப் போல் தானும் ஒருவனால் ஏமாற்றப் பட்டு இருக்கலாம். இந்த ஊர் ஆண்கள் தன்னை சீரழித்து இருக்கலாம். இந்த ஊர் பெண்கள் கூட தனக்கு வேசிப் பட்டம் கட்டி இருக்கலாம்.
பர்வதத்தை எட்டாம் கிளாஸ் வரைக்கும் அவள் அம்மா படிக்க வைத்து இருந்தாள். வீட்டில் தையல் மிஷின் வைத்து அம்மா தையல் வேலை செய்து கொண்டிருந்தாள். அம்மா இறந்தவுடன் பர்வதம் என்ன செய்வது என்று ஸ்தம்பித்து போய்விட்டாள். அப்பா பேர் தெரியாத அனாதை பெண் என்பதை உபயோகப் படுத்தி ஊர் தன்னை கேவலப்படுத்தி விடும் என்பது தெரிந்த பர்வதம், தானே தேர்ந்து எடுத்துக் கொண்ட கணவன் தான் சுப்பிரமணி. அவனை அவள் கணவனாக தேர்ந்தெடுக்க காரணம் அவளுடைய பார்வையில் அவன் அப்பாவியாகத் தோன்றியது மட்டும் தான். அவள் கல்யாணம் செய்து கொண்டதே ஒரு பாதுகாப்புக்குதான். அவளுடைய தேவை ஊர் அறிய ஒரு கல்யாணம். ஒரு தாலி.
சுப்பிரமணி பத்தாம் கிளாஸ் வரைக்கும் படித்திருக்கிறான். சுப்பிரமணியின் அப்பா அம்மா சின்ன வயதிலே இறந்து விட, தன் தம்பி கோபாலுடன் ஒரு பெட்டிக்கடை வைத்திருந்தான் அவன்.
பர்வதத்திற்கு கல்யாணம் ஆனவுடன் சுப்பிரமணியின் தம்பி கோபால் அவர்கள் கூடவே இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை. அந்த பெட்டிக்கடைக்கும் அவன் பங்கு கேட்டு விடுவானோ என்ற பயம் தான் அதற்கு காரணம். சுப்பிரமணியை வற்புறுத்தி, ஏதேதோ சொல்லி கோபாலை வீட்டை விட்டு போகும் படி செய்தாள்.
கோபாலை வீட்டை விட்டு அனுப்பிய அடுத்த நாள், சுப்பிரமணி தன் தம்பியை பற்றி கொண்டு வந்த செய்தி அவளுக்கு சற்று ஆச்சர்யத்தை கொடுத்தது. வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னவுடன் கோபால், மளிகைக் கடை கந்தசாமியிடம் போய் வேலை கேட்டதாகவும், அவர் உடனே சம்மதித்து அவனை வேலைக்கு வைத்துக் கொண்டதாகவும் சுப்பிரமணி முதலில் சொன்னான். சம்பளம் கூட சற்று கூடுதல் என்றும், ஏன் அதிக சம்பளம் கொடுத்து கோபாலை வேலைக்கு அவர் வைத்துக் கொண்டார் என்பது தனக்கு புரியவில்லை என்றும் சுப்பிரமணி சொன்னான். பர்வதத்தாலும் அதை நம்ப முடியவில்லை.
குளத்தங்கரையில் லட்சுமியை பார்த்து விட்டு வந்த பர்வதத்திற்கு, வீட்டை நெருங்கும் போது, வீட்டிற்குள் அண்ணனும் தம்பியும் பேசிக் கொண்டிருப்பது கேட்டது.
அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. கோபால் ரொம்ப ரோஷக்காரன். வீட்டை விட்டு போகச் சொன்ன பிறகு அவன் திரும்பவும் வீட்டிற்கு வந்தது கிடையாது. அப்படி இருக்க, அவன் வந்து இருக்கிறான் என்றால் என்ன விஷயமாக இருக்க முடியும். வீட்டிற்கு பின் பக்கம் போய் அவர்கள் பேசுவதை ஒளிந்து கொண்டு கேட்டாள்.
“ என் முதலாளி சொன்னதனால, வேறு வழியில்லாம உங்கிட்ட வந்து கேக்கிறேன்..” என்று சொன்னான் கோபால் தன் அண்ணனிடம்.
அதற்கு சுப்பிரமணி,
“ நா வேணா வர்ரேன்.. உன் அண்ணியைப் பத்தி உனக்கு தெரியாதா.. அவ வர மாட்டா.. நல்ல வேளை… இப்ப அவ வீட்டில இல்லை.. அவளை கூப்பிட்டுட்டு, வர மாட்டேன்னு சொன்னதுக்கு அப்புறம் என்னையும் போக விட மாட்டா.. அதனால அவகிட்ட இதைப் பத்தி சொல்ல வேண்டாம். அவளுக்கு தெரியாம நான் மட்டும் பொண்ணு கேக்க வர்ரேன்..” என்றான்..
“ முதலாளி கண்டிப்பா சொல்லிட்டாரு.. அண்ணனும், அண்ணியும் வந்து பொண்ணு கேட்டா, லட்சுமியை எனக்கு கல்யாணம் கட்டி கொடுக்கிறேன்னு சொல்றாரு.. எதுக்கு அண்ணியும் கூட வரணும்னு சொல்றாருன்னு புரியல, அண்ணி இல்லாம நீ மட்டும் வந்து கேட்டா சரியாக இருக்குமா ..”
இதைக் கேட்ட பர்வதத்திற்கு புரிந்தது, ஏன் குளத்தங்கரையில் லட்சுமி தன்னைப் பார்த்து வெட்கப் பட்டுக் கொண்டு ஓடினாள் என்று.
வீட்டிற்கு உள்ளே நுழைந்த பர்வதம் இரண்டு பேரையும் பார்த்து கிண்டலாக, “ நீங்க பேசினதை எல்லாம் கேட்டுகிட்டு தான் இருந்தேன்… நீ உன் அண்ணனை பொண்ணு கேட்க வான்னு கூப்பிட்ட மாதரி, அந்த லட்சுமி பொண்ணு, குளத்தங்கரையில, என்னப் பார்த்து, பொண்ணு கேட்க வர்ரீங்களான்னு கேட்டிச்சி.. உனக்காக இல்லைனாலும் அந்த லட்சுமிக்காக வர்ரேன்..” என்றாள்.
லட்சுமி குளத்தங்கரையில் பர்வதத்தை பார்த்து, தன்னை பெண் கேட்க வீட்டுக்கு வரச்சொன்னாளா…
அப்படி நடந்து இருக்க முடியுமா…
பர்வதம் சொன்னது புரியாமல் அண்ணனும் தம்பியும் முழித்தார்கள்.
இதே போல், லட்சுமியின் வீட்டிலும், லட்சுமியின் அம்மா பாக்கியத்திற்கு தன் கணவன் கந்தசாமியின் முடிவு திகைப்பாய் இருந்தது. தங்கள் மளிகைக் கடையில் சம்பளத்துக்கு வேலை செய்யும் அந்த கோபால் பையனுக்கு தங்கள் மகளை கல்யாணம் செய்து கொடுப்பதா..
தெரிந்த பையன், அப்பா அம்மா கிடையாது, வீட்டோட மாப்பிள்ளையாக இருக்க, இவன் தான் சரியானவன், அதற்காகத்தான் தன் கணவன் கோபாலை தேர்ந்து எடுத்து இருக்கிறார் என்று நினைத்தாள்.
பாக்கியத்தை பொறுத்தவரை தன் ஒரே பெண்ணான லட்சுமி தன்னோடு இருக்க வேண்டும். அதற்காக வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க சம்மதிக்கும் ஒருவனை தேர்ந்து எடுத்து ஆக வேண்டும், அதற்கு கோபால் சரியான பையன் என்று நினைத்து சமாதானப்படுத்திக் கொண்டாள்.
ஆனால் பாக்கியத்திற்கு ஒரு ஆச்சர்யம் காத்து இருந்தது.
கல்யாணத்தின் போதும் சரி, அதற்கு பிறகும் சரி, தன் கணவர் கந்தசாமி, கோபாலின் அண்ணன் சுப்பிரமணியிடமும் அண்ணி பர்வதத்திடமும் தேவைக்கு அதிகப்படியான உபசரிப்பும் மரியாதையும் காண்பிப்பதாகத் தெரிந்தது. வசதி குறைவானவர்கள் என்றாலும் சம்மந்திகள் என்ற முறையில் அவர்களிடம் மரியாதை காண்பிப்பதாக முதலில் நினைத்தாள்.
பிறகு மற்றுமொரு வித்தியாசத்தை அவள் கவனித்தாள் அது சுப்பிரமணியனை விட அந்த பர்வதத்திடம் அதிக மரியாதையும் உபசரிப்பும் தன் கணவர் காண்பிப்பதை.
அது பாக்கியத்திற்கு பல சந்தேகங்களை கிளப்பியது.
பர்வதத்தையும் லட்சுமியையும் ஒன்றாய் பார்க்கும் போதெல்லாம், உங்க ரெண்டு குடும்பமும், ஒன்னா இருக்கணும், ஒத்துமையா இருக்கணும் என்பார்.
பாக்கியத்திற்கு ‘இது என்ன தேவை இல்லாத விஷயம்’ என்று தோன்றும்.
‘ உன் அக்கா பர்வதம்’ என்று அடிக்கடி கந்தசாமி லட்சுமியிடம் சொல்வதை கேட்கும் போது பாக்கியத்திற்கு சற்று கோபம் வரும். “ அக்காவாம்… அக்கா…” என்று வாய்க்குள் முனகுவாள். லட்சுமி சற்று வெகுளி. அவளுக்கு பர்வதத்தை அக்கா என்று சொல்வதில் சந்தோசம் தான்.
கல்யாணம் முடிந்து ஒரு மாதம் இருக்கும். மாரடைப்பு என்று கந்தசாமியை ஆஸ்பத்திரிக்கு ஒரு நாள் கொண்டு போனார்கள். சற்று குணமானவுடன் வீட்டிற்கு போக அவசரப் பட்டார் கந்தசாமி. அவரின் வற்புறுத்தலினால் வேகமாய் டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு கொண்டு வந்தார்கள். வீட்டிற்கு வந்தவுடன் அவர் மனதில் தான் அதிகம் நாள் இருக்க மாட்டோம் என்ற எண்ணம் தோன்றியது.
ஒரு நாள் உடல் நலம் சரியில்லாத அவரை பார்ப்பதற்கு சம்பந்தி என்ற முறையில் பர்வதம் வந்தாள். அவளைப் பார்த்தவுடன், கட்டிலில் படுத்து கொண்டிருந்த கந்தசாமி சற்று பதட்டத்துடன் அவளிடம்,
“ வீட்டில வேறு யாராவது இருக்காங்களா பாரு..”
போய் பார்த்து விட்டு பர்வதம்,
“ யாரும் இல்ல போலிருக்கே…” என்றாள்.
“ வெளியே போயிருக்கிற பாக்கியமும், லட்சுமியும் திரும்பி வர்ரதுக்குள்ள, ஒரு உண்மையை உங்கிட்ட சொல்லிடறேன், கிட்ட வந்து உட்காரு..” என்றார்.
பர்வதம் உட்கார்ந்தாள்.
“ பர்வதம்.. நான் தான் உன் அப்பா..” என்றார்.
தாங்க முடியாத சந்தோசத்துடன் பர்வதம்,
“ தெரியும்..” என்றாள்..
திடுக்கிட்ட கந்தசாமி,
“ உன் அம்மா சொன்னிச்சா..” என்று கேட்க,
“ இல்ல… இல்ல.. அம்மா கடைசிவரைக்கும் சொல்லலே.. சொல்லக்கூடாதுன்னு நீங்க தான் அம்மாகிட்ட சத்தியம் வாங்கிட்டீங்களே… என் கிட்ட நீங்க நடந்துகிட்டதை வைச்சி நானே ஊகிச்சேன்…” என்றாள் பர்வதம்..
சுந்தரவல்லி தன் சத்தியத்தை சாகும்வரை காப்பாற்றி இருக்கிறாள். மகளிடம் கூட சொல்லவில்லை என்பதை நினைக்கும் போது அவருக்கு பெருமையாக இருந்தது. அவர் மௌனமாக இருக்க, பர்வதம்,
“ அம்மா, உங்களோட பேரு வெளியே வராம இருக்கணுங்கறதுல தான் குறியா இருந்தாங்க.. எனக்கு கல்யாணம் செஞ்சு வைக்கிறதுல கூட அக்கறை காட்டல… அம்மா செத்ததுக்கு அப்புறம் நானேதான் எனக்கு மாப்பிள்ளை தேடிக்கிட்டேன்..”என்றாள்.
கந்தசாமி இதற்கும் மௌனமாக இருந்தார்.
அப்பாவின் மனதை புண்படுத்தி விட்டோமோ என்று தோன்றியது பர்வதத்திற்கு. அவளும் ஏதும் பேசாமல் இருந்தாள்.
கொஞ்ச நேரம் கழித்து கந்தசாமி,
“ நான் செஞ்சது தப்பு தான்.. அதுக்கு தான் பிராயசித்தம் பண்ணிக்கிட்டு இருக்கேன்..” என்று சொன்னார்.
பர்வதத்திற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
திடீரென்று “ நெஞ்சு வலிக்குது..” என்று சொன்னார் கந்தசாமி..
பதறிப்போன பர்வதம், தான் அவருடைய மனதை புண்படுத்தியது தான் அவருடைய நெஞ்சு வலிக்கு காரணம் என்று நினைத்தாள். மருந்து எங்கு இருக்கிறது என்று கேட்டு, அதை தேடி எடுத்து கொடுத்தாள்.
மருந்து சாப்பிட்டு விட்டு, மறுபடியும் அவர் பேச ஆரம்பிக்க,
“ அப்பா.. இப்ப எதுவும் பேசாதீங்க…மறுபடியும் பேசிக்கலாம்..” என்று அவர் பேசுவதை தடுத்தாள்.
“ இல்லமா.. இப்பவே பேசிடலாம்… எப்படி இருந்தாலும் என்னோட உயிர் போகப் போகுது.. அதுக்கு முன்னாடி நான் இவ்வளவு நாளா பேசணும்னு நெனச்சதை எல்லாம் பேசிடறேன்.. நீயும் என்ன கேக்கணுமோ எல்லாத்தையும் கேட்டுடு.. ” என்றார்.
அவள் கேட்க நினைத்தது, ஊர் அறிய தன்னை மகளாக அவரை ஏற்றுக் கொள்ள செய்ய வேண்டும் என்பதுதான். அதை எப்படி கேட்பது என்று யோசித்தாள். பர்வதத்திற்கு தன் அப்பாவிடம் எவ்வளவோ கேட்க வேண்டும் என்று தோன்றினாலும், அவருடைய மனம் புண்படும்படி ஏதாவது பேசி, மறுபடியும் அவருக்கு நெஞ்சு வலி வரவழைக்க விரும்பவில்லை. அதனால் பேசாமல் இருந்தாள்.
கொஞ்ச நேரம் கழித்து அவரே,
“ உன்னோட கொழுந்தனுக்கு நான் வேலை கொடுத்தது, அப்புறம் அவனை மாப்பிள்ளையாக்கிகிட்டது எல்லாம் உன்ன மனசில வைச்சி தான்..”
“ முதல்ல அது எனக்கு புரியல.. அப்புறம் புரிஞ்சிக்கிட்டேன்….” என்றாள் பர்வதம்.
“ உன் கொழுந்தன் கோபாலுக்கு வேலை கொடுத்தா, அதன்மூலமா நம்ம ரெண்டு பேரும் பார்க்கறதுக்கும், பேசறதுக்கும் வாய்ப்பு கெடைக்கும்னுதான் வேலை கொடுத்தேன்…” என்றார் கந்தசாமி.
“ லட்சுமியை கோபாலுக்கு கல்யாணம் செஞ்சு கொடுத்தது கூட எனக்காகவா…” என்று கேட்டாள்.
“ ஆமாம்.. உன்ன பார்க்கறதுக்கும், பேசறதுக்கும், உன்ன இந்த வீட்டில அடிக்கடி சாப்பிட வைச்சு கண் குளிர பார்க்கிறதுக்கும் தான்…”
தனக்காக லட்சுமியை கோபாலுக்கு கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்த அப்பா கந்தசாமியின் நல்ல மனதை நினைத்துப் பார்த்தாள். இது நாள் வரை தன்னை காத்திருக்க வைத்து, கடவுள் நல்ல ஒரு அப்பாவை தனக்கு கொடுத்து இருப்பதற்காக நினத்துக் கொண்டாள். கண்களில் நீர் வந்தது.
தன் அப்பாவைப் பார்த்தாள் பர்வதம். அவருடைய கண்களிலும் நீர்.
கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு மீண்டும் பேசினார்,
“ இவ்வளவும் நான் செஞ்சது… இது வரைக்கும் உனக்கும் உன் அம்மாவுக்கும், செஞ்ச துரோகத்துக்கு பிராயச்சித்தம் செய்யணும்… உன்னோட காலடி இந்த வீட்டில படணும்னுதான்,..”
பர்வதத்திற்கு பதில் பேச முடியவில்லை..
“ உன்ன என் வீட்டுக்கு வரவழைக்க, கோபாலுக்கிட்ட உன் அண்ணனும் அண்ணியும் வந்து பொண்ணு கேட்டாதான் லட்சுமியை உனக்கு கொடுப்பேன்னு திட்டவட்டமா சொன்னேன். முதன்முதலா உன்ன என் முன்னால உட்காரவைச்சி கண் குளிர பாத்தேன்.. கல்யாணத்துக்கு அப்புறம் சம்மந்தி வீட்டுக்காரங்களுக்கு செய்யற மரியாதைன்னு மத்தவங்கள நம்ப வைச்சி உனக்கு வாய்க்கு ருசியா சாப்பாடு போட்டு அதை பாத்து சந்தோசப் பட்டேன்..” என்று கந்தசாமி சொன்னார்.
அதற்கு பர்வதம், “ அப்பா…. நானும் அதுக்கு முன்னாடி அப்படி ஒரு நல்ல சாப்பாடு சாப்பிட்டதில்லை..” என்றாள்.
அதைக் கேட்டு அவருக்கு கண்களில் மறுபடியும் நீர் வந்தது.
பர்வதம் கேட்டாள்..
“ எனக்கு ஒரு ஆசை. நான் தான் உங்க மகள்னு மத்தவங்ககிட்ட சொல்வீங்களா…”
“ இல்லம்மா.. லட்சுமியோட அம்மாகிட்டியோ மத்தவங்ககிட்டியோ இதை சொல்ல எனக்கு தைரியம் இன்னும் வரலம்மா.. என்ன மன்னிச்சுடுமா..” கெஞ்சினார் கந்தசாமி.
“ சரிப்பா… உங்களுக்கு விருப்பம் இல்லன்னா விட்டுங்க..” என்றாள் பர்வதம்.
அதைக்கேட்ட அவர் முகத்தில் நிம்மதி தோன்றியது.
பர்வதம் தன் வீடு திரும்பினாள்.
மாலையில் கந்தசாமி இறந்து விட்டதாக வந்து சொன்னார்கள்.
எட்டாம் நாள் காரியம் முடிந்த உடன் அவர் எழுதி இருந்த உயிலை எடுத்து படித்தார்கள். அதில், “ என் சொத்தை லட்சுமியும், அவள் அக்கா பர்வதமும் சமமாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.. இரண்டு குடும்பங்களும் ஒற்றுமையாக, நல்லபடியாக வாழ வேண்டும் ” என்று எழுதி இருந்தது.
————————————————————————————————-
- வாசிக்கப் பழ(க்)குவோமே
- தொடுவானம் 4. உன்னோடு நான் எப்போதும்
- சீதாயணம் நாடகப் படக்கதை – 21
- தூமணி மாடம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 63
- வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் : அமிர்தம் சூரியாவின் கவிதைகள்
- தினம் என் பயணங்கள் – 6
- பிழைப்பு
- ஒரு மகளின் ஏக்கம்
- பூர்வீகச் செவ்வாய்க் கோளில் மூன்றிலோர் பகுதியை மாபெரும் கடல் சூழ்ந்திருந்தது
- மருமகளின் மர்மம் – 17
- தமிழ்த்தாத்தா உ.வே.சா.: கற்றலும் கற்பித்தலும் -1
- நீங்காத நினைவுகள் – 35 ஜோதிர்லதா கிரிஜா
- புகழ் பெற்ற ஏழைகள் - 47
- ஹாங்காங் தமிழ் மலர்
- திண்ணையின் இலக்கியத் தடம் – 23
- குலப்பெருமை
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-23 கடோத்கஜனின் முடிவு.
- கிழவியும், டெலிபோனும்
- பாலு மகேந்திரா – திரைப்படங்கள் திரையிடல். நாள்: 01-03-2014