“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை -2

author
0 minutes, 28 seconds Read
This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

apsara-bust-hard-sand-stone-statue-500x500

ஷாலி

மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரைகம்பராமாயணத்தைப் பாடமாக வைக்கும்போது கல்லூரிகளில் இந்தச் சிக்கல் எழுவதாகப் பேராசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். சீதையின் முலைகளைப் பற்றிச் சொல்லாமல் கம்பன் முன்னகர்வதில்லை. கம்பனில் ஊறிய பேராசிரியர் ஒருவர் சொன்னார், ‘கனல் போல் கற்பினாளை’ மாணவர்கள் வேறு நோக்கில் எண்ணாமல் தடுக்க அவருக்கு வழிதெரியவில்லை ஆனால் மனத்தடைகளில்லாமல் இயற்கையின் அற்புதம் ஒன்றின் முன், கனிவும் அழகும் ஒன்றேயாகும் ஒன்றின் முன், தன்னை நிறுத்திக் கொண்ட கலைஞனின் தரிசனமே நான் கம்பனின் வரிகளில் காண்பது.
‘அருப்பு  ஏந்திய கலசத்துணை
அமுது ஏந்திய மதமா
மருப்பு ஏந்திய’  எனல் ஆம் முலை,
மழை ஏந்திய குழலாள்
கருப்பு ஏந்திரம் முதலாயின
கண்டாள் இடர்காணாள்
பொருப்பு ஏந்திய தோளனோடு
பொருந்தினள் போனாள். [ அயோத்தியா காண்டம். 1931]

[அரும்பு ஏந்திய அமுது நிறைந்த இணைக் கலசங்கள் போலவும் மதயானை தந்தங்கள் போலவும்  முலைகளும் மேகம்போன்ற கூந்தலும் கொண்டவள் கரும்பு இயந்திரம் முதலியவற்றைக் கண்டபடி துயரங்களை அறியாமல் மலைகள் பொருந்திய தோள்கொண்டவனுடன் இணைந்து சென்றாள்]

ராமனோடு காடு ஏகும் சீதையின் சித்தரிப்பு இது. கணவனோடு செல்வதனால் காடுசெல்லுதலும் அவளுக்கு ஓர் உலாவாகவே இருக்கிறது. கரும்பு இயந்திரம் முதலியவை கண்டும் இடர்களைக் காணாமலும் அவனுடன் இணைந்து சென்றாள். அவ்வரியில் சீதையை வெறுமெ குறிப்பதற்காக அவள் முலைகளுக்கு இரு உவமைகளை அளிக்கிறான். அரும்புகளை உச்சியில் ஏந்திய அமுது விளைந்த இணைக்கலசங்கள்!  மூத்தமதயானை தன் முகத்தில் ஏந்திய இரு தந்தங்கள்! ராமனைக் குறிக்க மலை பொருந்தியவை போன்ற தோள்களைக் கொண்டவன் என்று வரும் வரியைப்போலவே இயல்பாக இவ்வருணனையும் வருகிறது.

எவ்வித தனியழுத்தமும் இன்றி ஓடிச்செல்லும் ஒரு சித்தரிப்பின் துளிதான் இது. ஆனால் இதில் கம்பன் ஒருமுலையிணைக்கு இரு உவமைகளைச் சொல்லிச் செல்கிறான். ஒருகாம்பில் ஒன்பது பூக்களைப் பூக்கவைப்பதே செவ்வியல்கலை என்பவர்கள் உண்டு. அணியலங்காரங்கள் அதன் அடிப்படை அலகுகள் என்பது உண்மையே. ஆனால் கம்பனைப்போன்றதோர் கரையிலா கவிப்பெருக்கில் வீண்சொல் என்பதுஒருபோதும் நிகழ்வதில்லை. அந்த பிரக்ஞையுடன் மீண்டும் மீண்டும் இவ்வரிகளை வாசிக்கும்போது அவ்விரு உவகைகள் இருகைகளாக நின்று அள்ளியளிக்கும் சித்திரம் பெரும் மனக்கிளர்ச்சியை ஊட்டுகிறது.

மலர்மொட்டை மேலே வைத்த இரு அமுதகலசங்கள் என்ற உவமை அவள் முலைகளின் நேர்க்காட்சியை காட்டுகின்றது. இரு பொற்குவைகள். ஆனால் மதயானையின் தந்தங்கள் என்ற உவமை அவற்றைப் பக்கவாட்டில் காட்டுகிறது. அவற்றின் நெகிழ்வை, வளைவை, நுனி மேலெழுந்த கூர்மையை, நடக்கும்போது உந்தி முன்செல்லும் அசைவை. கம்பனும் இடம் மாறிச் சென்று நோக்கிச் சொல்கிறான்போலும்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் குறத்தியைச் சொல்ல சொல்தேடியலைந்த மனம் இவ்விரு உவமைகளையும் கண்டுகொண்டது. அமுதப்பெருங்கருணை நிறைந்த கலங்கள். கொலைமத யானையின் தந்தங்களும்கூட!
http://www.jeyamohan.in/?p=374

இனி அடுத்து வருவது சாதாரண எழுத்தாளர் அல்ல சாகித்ய அகாடமி பரிசில் பெற்ற எழுத்தாளர்.திரு.நாஞ்சில் நாடான். நாஞ்சில் என்றால் கலப்பை..ஆம்! அகலமாக அல்ல ஆழமாக ஆய்வு செய்து  ஏர்  என்னும் மார்  பிடித்து உழுகிறார்.ஏராளமான இலக்கிய தகவல்கள்.சங்ககால மங்கையரிலிருந்து இன்றைய திரைத்துறை பெரும்தனக்காரிகள் வரை விரிவாக விளக்குகிறார்.   இதோ நாஞ்சிலார் நேரடியாகவே பாடு பொருளுக்கு வந்துவிட்டார்.

நாஞ்சில் நாடன்:

சில பெண்களுக்கு முலைகள் நெஞ்சிலிருந்து நேரே முளைத்தனவாயும் சிலருக்கு மேல் நெஞ்சிலிருந்து வடிந்தனவாயும் சிலருக்கு மேல் விலாவிலிருந்து முன்னோக்கிப் படர்ந்து வருவன போலவும் இருக்கும். உண்மையில் உலகின் கோடிக்கணக்கான மனிதருக்குத் தனித்தனி முகங்கள் என்பது போல பெண்களுக்குத் தனித்தனி முலைகளாக இருக்க வேண்டும். ஒருவர் முகம்போல் உலகில் ஏழுபேர்கள் இருப்பார்கள் எனும் தேற்றத்தை ஒத்துக்கொண்டால், உலகின் மக்கட்தொகையின் பாதியை ஏழாக வகுத்துக்கொள்ளலாம், முலைகளின் தினுசுகளுக்கு. ஈர்க்கு இடைபுகாத, காற்று இடைபுகாத முலைகள் உண்டு. கொங்கைகளில் சந்தன, குங்குமக் குழம்பு பூசியதாகத் தமிழ் இலக்கியம் பேசியதுண்டு. “வெறிக் குங்குமக் கொங்கை மீதே இளம்பிறை வெள்ளை நிலா எறிக்கும்’ என்பது ஓர் எடுத்துக்காட்டு. நுங்குக் குரும்பை போன்றவை உண்டு. கெவுளி பாத்திரம் எனும் பெயரில் அழைக்கப் பெறும் செவ்விளநீர் எனக் கூறுவோருண்டு.

பழைய காலத்தில் சுள்ளிக்காடுகளில் குழுவாக வாசிக்கப்பட்ட சரோஜாதேவி இதிகாசங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட உவமை தேன்கூடு. அந்த உவமை சகிக்கவில்லை. பாலடை என்பது தேனடை அல்ல. மேலும் தீப் பந்தத்துடன் அணுகும் உறுப்புமல்ல அது. சொக்கநாதப்புலவன் பாடுகிறான், “முன்னே இரண்டு முலை, முற்றியபின் நாலு முலை, எந்நேரம் என் மதலைக்கு எட்டு முலை’ என்று.

வடிவாக உடைக்கப்பட்ட தேங்காய் முறி சரியானதாக இருக்கும். சிறியதும் திண்ணியதும் கருமையானதும் என்றால் கண்முளைத்த உடன்குடி கருப்பட்டி என்பார்கள். நான் பயின்ற பல்கலைக்கழகங்களில் ஒருவர், எழுபத்து ஆறாவது வயதில் பால்நோய் வந்து இறந்தவர், மாநிறமும் வýயதும் இளகியதுமான முலைகள் எனில் சூரங்குடி கருப்பட்டி என்பார். கருப்பட்டிகள் எஞ்ஞான்றும் பால்வெள்ளை நிறமோ பொன்னின் நிறமோ கொண்டவை அல்ல.

அபினி மலர் மொட்டுக்கள் போன்ற முலைக் காம்புகள் என்றான் ஈழத்துக்கவிஞன் வ.ஐ.ச. ஜெய பாலன். பொல்லா வறுமையினால் முலைக்காம்பின் சுரப்பித் துளைகள் தூர்ந்து போயின தன் மனைவிக்கு –இல்லி  தூர்ந்த பொல்லா வறுமுலை – என்றார் ஒப்பிலா மணிப் புலவர். அந்தப் பாடம் நடத்தியபோது, எனது விரிவுரையாளர், முலை எனும் இடங்களில் எல்லாம் கலை என்று வாசித்தார். நான் வாசித்த கல்லூரி இருபாலருக்குமானது. அன்றெல்லாம் எனக்கு உடலில் கொழுப்புக் கிடையாது எனினும் மனதில் கொழுப்பு உண்டு. விரிவுரையாளர் “வறுமுலை’யை “வறுகலை’ என்று வாசித்தபோது, “ஐயா, அது இடைக்குறை, வறுகடலை என்று இருக்க வேண்டும்’ என்று சொன்னேன். எட்டு நாட்கள் வகுப்பில் ஏற முடியவில்லை. எவனோ ஒரு தமிழ்முனி அவருக்குக் கொடுத்த சாபத்தினால், பின்னர் எனது நாவலொன்றை அவர் பாடம் நடத்த வேண்டியது வந்தது.

உங்களில் பலர் தாடிக்கொம்பு, கிருஷ்ணாபுரம், தாரமங்கலம், திருவில்லிப்புத்தூர், பேரூர், திருவானைக் காவல் போயிருக்கலாம். அடுத்துப் போனால் சற்று இணக்கமாக நின்று கவனியுங்கள். நமது சிற்பிகள் எத்தனை நுணுக்கமாய் தெளிவும் தேர்ச்சியும் உடற்கூற்றறிவும் கொண்டவர்கள் என்பது தெரிய வரும். மொத்தமாகப் பார்த்தாலும் பங்கு பங்காய்த் தசைக்கோளம், கருவட்டம், காம்பு எனப் பார்த்தாலும் ஒன்று போல் மற்றொன்று இல்லை. ஒன்றின் அழகுபோல் மற்றதின் அழகு இல்லை. முலைகளுக்கும் அரசியல் பார்வை உண்டு, இடதுசாரி வலதுசாரி என்று. என்றாலும் வடிவில், தன்மையில், கொள்கையில் சிறிய வேறுபாடுகள் மட்டுமே.

முலைகள் என்பவை mammal glands அடங்கிய தசைக் கோளம் எனவும் பாலியல் அதற்கு வேறெந்த சிறப்பான பணியும் இல்லை என்பர் உடற்கூற்றியல் விஞ்ஞானிகள். அதைப் பால்சுரப்பிகளின் கோளம் என்று மட்டும் மனிதன் பார்க்கவில்லை. கவிஞனும் காமுகனும் பார்க்கவில்லை.

“என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க’ என்பது திருவெம்பாவை. ஏனதை எதிர்மறையில் சொன்னான் மாணிக்கவாசகன்? “உன்னடியார் தாள் பணிவோம், ஆங்கவர்க்கே பாங்காவோம், அன்னவரே எங்கணவராவார்’ என்று உடன்பாட்டில் பேசியவன்தானே! “என் கொங்கை நின் அன்பர் தோற் சேர்க’ என்பதுதானே இயல்பு. இயல்பில் கவிதை வாய்ப்பதை விடவும் எதிர்மறையில் சரியாக வாய்க்கிறது என உணர்ந்திருப்பான் போலும்.

“கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை
தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்தென்
அழலைத் தீர்வேனே!’

என்கிறாள் ஆண்டாள் நாச்சியார் திருமொழியில். “திரி விக்கிரமன் திருகஙிகைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் சாயுடை வயிலும் என் தடமுலையும்’ என்கிறாள். “முற்றிலாத பிள்ளைகளோம், முலை போந்திலாதோம்’ என்கிறாள்.

“பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகுலஞ் செய்யும்’

என்கிறாள். “கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளி சோரச் சோர்வேனை’ என்கிறாள். “குற்றமற்ற முலை தன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு அற்ற குற்றம் அவை தீர அணைய அமுக்கிக் கட்டீரே’ என்கிறாள்.

ஆண்டாளை, பெரியாழ்வாரின் double act என்பாரும் உளர். ஒரு பெண் விரகதாபத்தை இத்தனை வெளிப்படையாகப் பேசும் போக்கு பெண் குலத்துக்கே இழிவு என்று காபந்து செய்யும் முயற்சியாகக்கூட இருக்கலாம் அது. ஆனால் கவிதையின் மொழியை, தொனியைக் கவனிக்க வேண்டும். மேலும் பெரியாழ்வார் ஏன் இன்னொரு புனைபெயரில் எழுத வேண்டும்? நாயகி பாவம் என்பது புனைபெயரில்தான் வருமா?

மாணிக்கவாசகனின் “நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க’ என்பது அரற்றல் இல்லை. தோள் சேர்தல் என்பது அணைதல் மட்டுமல்ல. தோளோடு இறுக அணைதலில் ஆசையும் காமமும் வெளிப்பாடு. தோள் சேர்தல் என்பதில் ஒரு கொஞ்சல், இசைவு, இணக்கம், கனிவு, காதல் . . . காதலித்தவர்க்கும் காதலுள்ள மனைவியைக் கொண்டவர்க்குமே அது அர்த்தமாகும். ஆண்டாளின் முலைகள் காமத்தின் வெளிப்பாடு எனின் எங்ஙனம் ஐயா அது mammal glands மட்டுமே ஆகும்?

திருப்பூவனத்துத் தாசியை – “முலை சுருங்கிய வையை திருப்பூவனத்துப் பொன்னனையாள்’ என்று எனக்கு அறிமுகப்படுத்தியவர், மதுரை மீனாட்சியின் கிழக்கு வாசல் சமீபம் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கும் கவிஞர் ந. ஜயபாஸ்கரன்.

முலை சுருங்கிப் போனது இன்று வையையுமே ஆகும். பொன்னனையாள் திருப்பூவன நாதர் மீது வைத்த நகக்குறி புராணம் என்றாலும், நகக்குறி வைத்த தாசி பொன்னனையாளின் கொங்கைகள் காமத் திரவியம்தானே! முலையழுந்தத் தழுவிக் கிடந்திருப்பாள்தானே! ஆனால் குட்டி ரேவதி, “முலைகள்’ என்ற கவிதை எழுதினால் தமிழ்ப் பண்பாட்டுக் காப்பீட்டுக் கழக நிறுவனர்களுக்கும் இயக்குனர்களுக்கும் பொது மேலாளர்களுக்கும் கோபம் வருகிறது. “சாயாத கொம்பு’ என்று அந்தக் காலத்தில் பாடிய போது பக்திப் பரவசத்தில் நின்றார்கள் போலும்.

“எங்கள் தனம் கச்சிருக்கும் பாலிருக்கும் காம பாணங்கள் பட்டுப் பிச்சிருக்கும்’ என்பதை என் செய்யலாம்? “முலையும் குழலும் முளைப்பதற்கு முன்னே கலையும் வளையும் கழன்றாள்’ என்பதை என் செய்?

தாசனின் மோகம் உணர லால்குடி சப்தரிஷி ராமமிர்தத்தின் “அபிதா’ படியுங்கள் ஐயா!

ஒரு முலை திருகி எறிந்து சங்ககால மதுரையை எரியூட்டியவள் இளங்கோவின் கண்ணகி. அதென்ன bolt-nut போட்டு இறுக்கி வைத்திருந்தாளா என்றனர் திராவிடர்கள். “வா, மீத முலை எறி’ என்கிறார் நெல்லை கண்ணன். உடம்பெல்லாம் இந்திரனுக்கு அல்குல் கண் முளைத்ததைப் போல, முலை முளைத்து ஒவ்வொன்றாய்த் திருகி எறிந்து எரியூட்ட இங்கே ஏராளம் மாநகர்கள் உண்டு. மறுபடியும் பசுக்களையும் சிசுக்களையும் அறவோரையும் பத்தினிப் பெண்டிரையும் தீயிலிருந்து காத்துவிடலாம்.

ஆனால் அந்த முலை, நம் சொந்த முலை, தமிழனுக்குக் கெட்ட வார்த்தை. சுந்தர ராமசாமி ஒருமுறை எழுதினார், சிறுகதையில் முலை என்று எழுதினால் பத்திரிகை ஆசிரியர் வெட்டிவிடுவார் என. “அச்சமில்லை அச்சமில்லை’ எனும் பாரதி பாடலிலேயே “கச்சணிந்த கொங்கை மாதர்’ எனும் வரியைத் தணிக்கை செய்தவர் ஆகாஷ்வாணியினர். ஆனால் இன்று தூர்தர்ஷன் சானல்களில் முலையைப் போட்டு குலுக்கு குலுக்கு என்று குலுக்குகின்றனர். சூர்ப்பனகையின் முலையரிந்த இலக்குமணரின் வம்சாவளியினர் அவர்கள். முலைக்குப் பதில் மார்பு என்று அச்சுக் கோப்பார்கள். முலையும் மார்பும் ஒன்றா ஐயா? கிருஷ்ணன் நம்பியின் “மருமகள் வாக்கு’ சிறுகதையில் வரும் “எனக்குத்தான் மாரே இல்லையே’ என்பது வட்டார வழக்கு. சமகாலத் தமிழருக்கு நெஞ்சு, மார்பு, மார்பகம், மாங்கனி, ஆப்பிள், குத்தீட்டி, இளநீர், நுங்கு எல்லாம் முலைக்கு மாற்றுச் சொற்கள்.

“கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வாழைப்பூ, கூடையில் என்ன பூ, குஷ்பு’ என்றெழுதினால் பத்மபூஷண் விருதுக்குக் கோளுண்டு. ஆனால் முலை எனில் தீட்டு; குண்டி, பீ, மூத்திரம் எல்லாம் அமங் கலம். என்னுடைய சிறுகதை ஒன்றினைப் பிரசுரித்தவர் பீ, மூத்திரம் என வரும் இடங்களை வெட்டிவிட்டார். நேரில் பார்த்தபோது கேட்டேன், “உமக்கு அதுவெல்லாம் வருவதில்லையா? ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் என்றுதான் வருமா?’ என. எனவே இடக்கரடக்கல், குழுஊக்குறி பயன்படுத்த வேண்டும். ஆனால் மனதின் மொழி முலை எனும் சொல். அது பால்பண்ணையும் பசி நிவாரணியும் மட்டுமல்ல. வளமுலை, இளமுலை, இணைமுலை, தடமுலை, உண்ணாமுலை என்பதெல்லாம் தமிழ் இலக்கியம்.

நாம் தப்புக்கொட்டும் திராவிட மொழிக் குடும்பத்தின் உறுப்பான மலையாளத்தில் முலை கெட்ட வார்த்தை இல்லை. “முலையும் தலையும்’ என்பது அன்றாட மலையாள வழங்கு. “முலை கொடு’ என்றால் பால்கொடு. “முலை குடிச்சு’ என்றால் பால் குடித்தது. “முலை குடி மாறாத்த குட்டி’ என்றால் பால்குடி மாறாத குழந்தை. “பகவத் கீதையும் குறைய முலைகளும்’ என்பது பேப்பூர் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய சிறுகதைத் தலைப்பு. “ஆழ்ஹ”விற்கு முலைக்கச்சை என்பது வழக்கமான மலையாளப் பிரயோகம். ஆனால் நமக்கு “அவளுட ராவுகள்’ என்பதை “அவளுட பிராவுகள்’ என்று துணுக்கு வெளியிட்டுக் கிறுகிறுக்கத் தெரியும்.

“வாருருவப் பூண் முலையீர்’ என்று மாணிக்கவாசகர் குறிக்கிறார்.

“பார இளநீர் சுமக்கப் பண்டே பொறாத இடை
ஆர வடம் சுமக்க ஆற்றுமோ-நேரே
புடைக்கனத்த கொங்கையின் மேல் பூங்களபம்
சாத்தி
இடைக்கு அனத்தம் வைத்தவரார் இன்று’

என்பது கவிஞனின் கரிசனம்.

“பிரம்மம் சத்யம், ஜகத் மித்யா’ என்பது breast,bra போல என்கிறார் மலையாளக் கவி குஞ்சுண்ணி (நன்றி : விகடகவி விஜயகுமார் குனிசேரி). நடக்கவே போகாததோர் காரியத்தை “கோழிக்கு முலை முளைத்தாற்போல’ என்னும் பழமொழியில் சொல்லும் பழக்கம் மலையாளத்தில் உண்டு. தமிழனுக்கு “ஸ்தனம்’ என்றால் அது கெüரவமான சொல். குண்டியைப் “பிருஷ்டம்’ எனச் சொல்லிப் புளகாங்கிதப்படுவதைப் போல. முலைமீது மட்டும் என்ன காழ்ப்பு என்பது புலப்படவில்லை. ஸ்தனம் என்பதும் அற்புதமான வார்த்தைதான். சஸ்தனீ எனில் முலைகொடுக்கின்ற உயிரினங்கள் என்பது பொருள். ஆங்கிலத்தில் சொன்னால் mammals.

“சங்கீதாமபி சாகித்யம் சரஸ்வதீய ஸ்தனத்வயம்’ என்பது சங்கீதமும் சாகித்யமும் சரஸ்வதியின் இரண்டு ஸ்தனங்கள் என்றாகும். நான் சரஸ்வதியின் இரு தனங்களிலும் பால் குடித்தவன்.

பார்வதிக்கு மூன்று ஸ்தனங்கள் இருந்தன என்றும் நாதனைக் கண்டு நாணியபோது மூன்றாவது ஸ்தனம் மறைந்தது என்பதும் புராணம். லா.ச.ரா. “புத்ர’ நாவýல் “அவளுக்கு மூன்றாவது ஸ்தனம் மறைந்தது’ என்று எழுதியதைப் புரிந்து அனுபவிக்க புராணம் தெரிந்திருக்க வேண்டும்.

“விள்ளப் புதுமை ஒன்றுண்டு ஆலவாயினில் மேவு தென்னன்
பிள்ளைக்கு ஒருகுலை மூன்றே குரும்பை
பிடித்து அதிலே
கொள்ளிக் கண்ணன் திட்டியால் ஓர் குரும்பை
குறைந்து அமிர்தம்
உள்ளில் பொதிந்த இரண்டு இளநீர் கச்சு உறைந்தனவே’

என்றார் கவி காளமேகம். அதுதான் லா.ச.ரா.

“அன்று இரவு’ சிறுகதையில் பிட்டுக்கு மண் சுமந்தவன் பிரம்படி வாங்கியபோது, பிரம்படி எங்கு எல்லாம் விழுந்தது என்பதைச் சொல்லப் புறப்பட்ட புதுமைப்பித்தன் “மூன்று கவராக முளைத்து எழுந்ததன் மீது’ என்று எழுதுவதும் மூன்று முலைகளையே என்று தோன்றுகிறது.

முலை என்பது மனித உறுப்பின் பெயர் மாத்திரம் இல்லை. கோமாதா என்று இன்று காவியர் கொஞ்சும் பசுக்களின் மடுவை அல்லது மடியை முலை என்றுதான் ஆண்டாள் அழைக்கிறாள். “சீர்த்த முலை பற்றி வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள்’ என்பது திருப்பாவை.

முலை என்பது வெகுஜனத் தமிழில் கெட்ட வார்த்தையே தவிர, பெரியதோர் தொழில்துறையான திரைப்படத் துறையில் அஃதோர் மூலதனம். காற்று, தண்ணீர், சூரிய ஒளிபோல செலவில்லாததோர் கால்ஷீட். குனிந்து பெருக்கும், குதித்து மாங்காய் பறிக்கும், மழையில் நனைந்து கொடுங்கும், குலுங்கக் குலுங்க ஓடிவரும் சங்க கால யானை கற்கோட்டையை மத்தகத்தால் இடித்துத் தகர்க்க முயல்வதுபோல காதலனை ஓடிவந்து முலைகளால் இடித்துத் தாக்கும் காட்சிகளை நமது கலையுலகத் திலகங்கள் அறியாமலோ நோக்கமின்றியோ வைப்பதில்லை.

மேலும் பெருந்தனக்காரிகள் மீது அவர்களுக்குப் பெரும்பித்து. இறுகப் பிதுங்கக் கட்டிய முலைகள் குலுங்காது என்பதும் அவர்களுக்குத் தெரியும். என்ன வேகத்தில், எந்தக் கோணத்தில் என்ன சந்தத்துக்கு ஓடிவந்தால் எம்முலை எப்படிக் குலுங்கும் என்பது அவர்களின் தொழில்நுட்ப அறிவு. தகப்பன் இறந்துபோன காட்சியானாலும், தம்பி சாகக் கிடக்கும் காட்சியானாலும், காதலன் கரிந்து கிடக்கும் காட்சியானாலும் முலைகளுக்கு முக்கியமானதோர் பங்களிப்பு உண்டு. ஆனால் நீதி சொல்லாமல், தர்மத்தின் பால் நில்லாமல், பெண்ணைப் பேணாமல், சமத்துவம் பேசாமல், அரசியல்வாதிகளின் காவல்துறையின் ஒழுக்கம் பற்றிப் போதிக்காமல் ஒரு திரைப்படம் காணக்கிட்டாது இங்கே.

பன்னிரண்டு வயதிலிருந்தே, நாற்பத்தைந்து ஆண்டுகளாக, முகக்கண்களை விடவும் அகக் கண்களைவிடவும் முலைக்கண்கள் தீவிரமாக வெறித்து வெறித்துப் பார்க்கின்றன. பாலூறும் பரிவுடன், காமத்தின் வெப்பத்துடன், வடிவுப் பெருமை பொங்க, “சீ, நாயே’ எனும் சுளிப்புடன், “நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா?’ எனும் வெறுப்புடன், தனது இருப்பையே பொருட்படுத்தாத செருக்குடன், வாயைப்போல் மூக்கைப்போல் செவியைப்போல் தானே நானும் எனக்கென ஏன் சிறப்புச் சலுகை எனும் அலட்சியத்துடன், உனது தகப்பன் வயதொத்தவன் பருகியது அல்லது தொட்டுத் தடவியது எனும் தெளிவுடன். . .

“இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து வடங்கொண்ட கொங்கை’ என்பது பட்டர் பார்த்த அபிராமியின் முலைகள். அது பக்தியின் வெளிப்பாடு.

“அனைத்திரவும் சேர்ந்துறங்க முலை ரெண்டு
வேண்டும்
வேறு குறையொன்றுமில்லை
நிறைமூர்த்தி கண்ணா’ என்பதும்

கொங்கைச் செல்வி என்பவள் குடமுலையாட்டி என்பதும் விடலை விளையாட்டு.

அறவுரையாகச் சொல்லும், பேயைப் பெண்ணாக மாற்றிய ஒளவையின் வெளிப்பாடு “பெண்ணாவாய், பொற்றொடி மாதர் புணர்முலைமேல் சாராரை என்றோ மற்றெற்றோ மற்றெற்று’ என்பதன் கடுமை.

இரயில் பயணங்களிலும் பிற பயணங்களிலும் பொதுக்கழிப்பிடங்களில் பாரத தேசத்தவர், செப்பும் மொழி பதினெட்டு உடையவர் (முழு வளர்ச்சி பெற்ற ஆனால் வரி வடிவம் இன்னும் வாய்க்காத ஆயிரக்கணக்கான இந்திய மொழி பேசுகிறவர் பற்றிய கணக்குத் தெரியவில்லை) தங்கள் கலை உணர்வையும் உடற்கூறஙிறு அறிவையும் வெளிப்படுத்துவது மூன்றே மூன்று உறுப்புகளில்தாம். ஆண்குறி, பெண்குறி, முலைகள் . . .

“பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மடநெஞ்சம்
கறந்த இடத்தை நாடுதே கண்’

என்றார் பட்டினத்தடிகள். பட்டினத்தடிகள் பெண்ணை என்னவென்று நினைத்துப் பாடினார் என்று தெரியவில்லை. “எத்தனை பேர் தொட்ட முலை, எத்தனை பேர் நட்ட குழி, எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ்’ என்கிறார். தென்மாவட்டங்களில் பட்டினத்தடிகளைப் பெண்கள் வாசிப்பதில்லை. அதில் ஒரு நியாயம் இருப்பதாகத் தோன்றுகிறது.

லதா ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதை ஒன்று -முலைகள் முதுகில் முளைத்தால் என்னவாகும் என்பது பற்றியது. முகத்துக்குச் செய்வது போல் முலைகளுக்கும் இன்று ஒப்பனைகள் செய்கிறார்கள் வசதி உடையவர்கள். முலைக்காம்பில் பொன் வளையம் அணிகிறார்கள். அல்லி வட்டம், புல்லி வட்டத்தில் வண்ணச் சித்திர வேலைப்பாடுகள் செய்கிறார்கள். முலை கொழுக்க, வெளுக்க, மினுங்கத் தைலம் தடவுகிறார்கள். முலை மணக்கச் சாந்துகள், குழம்புகள், லோஷன் பூசுகிறார்கள். இறங்கிச் சரிந்த முலைகளை, தவிலுக்கு வார் பிடிப்பதைப் போன்று, அறுத்துத் தைத்து ஏற்றிக் கட்டுகிறார்கள். சிறுமுலையாட்டிகள் சிலிக்கன் ஜெல்லி  செலுத்தி வடிவு செய்கிறார்கள்.

ஆனால் வயலில் களை பறிக்கிறவர்கள், சிற்றார்கள், செங்கற்சூளைப் பணிப்பெண்கள், தமிழ் சினிமாக்களும் வாராந்தரத் துணுக்குகளும் சித்தரிக்கும் “முனியம்மா’க்கள், பூக்காரிகள், கீரைக்காரிகள், கூறுகட்டிக் காய்கறி விற்போர், ஓய்வுபெற்ற பால் தொழிலாளிகள் ஆதிவாசிகள் எல்லோரும் என்ன செய்வார்கள்? பட்டினத்தடிகளுக்கு அவர்பற்றி எல்லாம் அக்கறை உண்டா?

சமீப காலம் வரை நம்பூதிரி, நாயர், ஈழவப் பெண்களும் தீயரும் புலைச்சிகளும் கேரளத்தில் முலை மறைத்ததில்லை. இன்னும் கிராமத்துச் சிற்றோடைகளில் குளங்களில் முலைகள் தொங்கக் கிழவிகள் துவைத்துக் குளிக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தின் தோள்சீலைப் போராட்டம் பற்றி எழுதுகிறவர்கள் அரை உண்மைகளையே எழுதுகிறார்கள். வரலாறு என்பதே சார்புடையதுதான் போலும். அன்று கேரளத்தில் பெண்கள் நடக்கும்போது முலைகள் ஆடக்கூடாது. ஆடினால் அதற்கென்று வரி இருந்தது, “முலை குலுக்கிப் பணம்’ என்று. கேரளம் என்பது கடவுளின் சொந்த நாடு.

ஆனால் என்ன கொடுமை பாருங்கள் “மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா, மார்க்கட்டுப் போகாத குண்டு மாங்கா’ என்றெழுதும் கவிச் சிற்றரசு, பேரரசு, இணையரசு, துணையரசு ஆகியோரின் வம்சாவழியினர் எல்லாம் மாலதி மைத்ரிக்கும், குட்டி ரேவதிக்கும், சல்மாவுக்கும், கனிமொழிக்கும், உமா மகேஸ்வரிக்கும், க்ருஷாங்கினிக்கும், இளம்பிறைக்கும் கவிதை எழுதப் பாடம் நடத்துகிறார்கள். கிருத்திகா, அம்பை எனும் பெயர்களை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

பிறப்புறுப்பு பற்றிப் பேசினால் பத்தினித் தன்மைக்கு என்ன பங்கம் வந்துவிடும் என்று தெரியவில்லை. முதலில் பத்தினி என்பதன் பொருள் என்ன என்று யாராவது சொல்வார்களா? ஒரு சிலர் சொல்கிறார்கள் அதிர்ச்சிக்கும் பரபரப்புக்கும் வேண்டி மட்டும் யோனி என்றும் முலைகள் என்றும் எழுதுகிறார்கள் என்று. அவ்வாறெனில் பட்டினத்தாரும் ஆண்டாளும் அதிர்ச்சிக்கு ஆளாக்கவே எழுதினார்களா? தமிழ் சமூகத்தை அவ்வளவு எளிதில் அதிர்ச்சிக்கு ஆளாக்கிவிட முடியுமா? தமிழ் சினிமா பார்த்து, pulp நாவல்கள் படித்து, வணிக இதழ்கள் படித்து, blow-ups ம் pin-ups ம் பார்த்து, சமூக நிகழ்வுகளையும் அரசியல் நிகழ்வுகளையும் பார்த்து தமிழ் சமூகம் அதிர்ச்சிக்கு ஆளாகிக் கிடக்கிறதா இங்கு? மலை முழுங்கி மகாதேவனுக்குக் கதவு ஒரு பப்படம் அல்லவா?

மேலும் நாங்கள் எங்களுக்காகவே எழுதி, எங்களுக்குள்ளேயே வாசித்து, எங்களுடனேயே சச்சரவு கொண்டு, எங்களுக்குள்ளேயே முடங்கிப் போகிறவர்கள் தானே வெகுஜன ஊடக மதிப்பீட்டில்! சென்னைவாழ் திரைப்பட உதவி இயக்குநர்கள் இருநூற்றுச் சொச்சம் பேர் தவிர எங்கள் வாசகர் அயலில் யார் ஐயா?

ஆனால் இதில் பெண்ணின் தரப்பு பற்றி யார் யோசிக்கிறார்கள்? “விரிகிறதென் யோனி’ என்றும் “உன்னித் தெழுந்தது என் முலை’ என்றும் எழுதினால் அதன் பொருள் கவிஞரின் யோனி அல்லது முலை என்பதல்ல. என் கதாபாத்திரத்துக்கு நான்கு மனைவியர் எனில் எனக்கு நான்கு மனைவியர் என்றா பொருள்? கவிதையின் வெளியில் துலங்குவது பெண்ணின் மனம். அது ஆண்டாள் ஆனால் என்ன, ஒளவையார் ஆனால் என்ன?

ஒரு ஆணின் மார்பு போன்ற தட்டையான, பலகை போன்ற நெஞ்சு கொண்ட வாலிபப் பெண்ணின் நிலையைச் சற்று யோசித்துப் பாருங்கள்! மேனாடுகள் போல், நம் நாட்டிலேயே மேட்டுக் குடியினர் போல் சிலிக்கன் ஜெல் அல்லது செலைன் வாட்டர் பைகள் கொண்டு முலைகளைச் சீரமைத்துக்கொள்ளும் வசதியும் வாய்ப்பும் அற்ற பெண்களின் துயரத்தைப் பெண் கவிஞர் ஒருவர் எழுதினால் சொல்வார்கள், காம விகாரம் கொண்டு அலைகிறாள் என. ஆனால் படைப்பிலக்கியவாதி கிருஷ்ணன் நம்பி யோசித்திருக்கிறார். வள்ளுவன் அதுபற்றி கவன்றிருக்கிறான் –

“கல்லாதான் சொற்காமுறுதல் முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்றற்று’ – என்று.

நமது சங்கத் தமிழ் இலக்கியங்களின் அகத்துறைப் பாடல்கள், கலிங்கத்துப் பரணியின் “கடைதிறப்புக் காதை’, விறý விடு தூது எனப் பலவும் “நகக்குறி இடுதல்’ பற்றி சொக்கிச் சொக்கிப் பேசுகின்றன. எனக்கு நீண்ட நாட்களாய் ஒரு கேள்வி உண்டு. அதென்ன நகக்குறி “இடுதல்’? அது நெற்றிக்கு இடுதல் போலவா? அல்லது மாகாளிக்கிழங்கு ஊறுகாய் இடுதல் போலவா?

புணர்ச்சியின்போது அல்லது புணர்ச்சிக்கான முன்களியின்போது இருபாலருக்கும் பற்தடம் பதியும். நகங்கள் கீறும். விரல்பட மென்தசை கன்னும். உதைத்தலும் கடித்தலும் கழுதைகளுக்கு மாத்திரமான முன்களி அல்ல. ஆனால் நகக்குறி “இடுதல்’ என்றால், இடுதல் எனும் சொல்லில் ஒரு மனப்பூர்வம் தெரிகிறது. உத்தேசம் தெரிகிறது. சற்று அணுகிப் பார்த்தால் வன்முறை தெரிகிறது. நகக்குறி விழுதல் என்பதல்ல, நகக்குறி இடுதல் என்பது. தனங்களில் இடப்பட்ட நகக்குறியைப் பெண் பகல்பொழுதுகளில் தடவித் தடவித் திரிவாள் என்றும் அடுத்த இரவுப் புணர்ச்சிக்கு ஆயத்தம் கொள்வாள் என்றும் ஆண்பாற் புலவர்க்கும் உரையாசிரியர்களுக்கும் கற்பித்தார் எனில் பெண் எங்கு நகக்குறி இட்டாள்? யாரும் பதில் சொன்னதாகத் தெரியவில்லை.

நகக்குறி போகட்டும். ஆண்குறி பற்றி சங்கப் பரப்பில் குறிப்பேதும் உண்டா எனப் பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்களிடம் கேட்க வேண்டும். விதைப் பை பற்றிக் குறிப்புகள் உண்டா? கலவிக்கும் காமத்துக்கும் கிரியா ஊக்கி முலைகள்தானா? கம்பனோ எனில், “தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலத்தன்ன தாள்கண்டார் தாளே கண்டார்’ எனத் தோளிலிருந்து நேரே ராமன் தாளுக்குச் சரிகிறான். ஆனால் சூர்ப்பன கையைப் பாடும்போது சல்லாப சரசம் செய்கிறான்.

சங்கம் இருக்கட்டும், காப்பியங்கள், நீதி நூற்கள், இராமகாதை, பெரியபுராணம், தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், அந்தாதி, திருமுறைகள், நாலாயிரம் தொடங்கி இன்றைய கவியரசுகள் வரை எங்கேனும் ஆண்குறி பற்றிய பேச்சு உண்டா? ஒருவேளை அது மாய காம உறுப்போ? ஆனால் நம் சிற்பிகள் அது போன்ற ஓரவஞ்சனை கொண்டவர்கள் அல்ல.

நெப்போலியனின் 29.984750333 செ.மீ. நீளமுள்ள, ஐரோப்பிய ஆண்களின் பெருமையின் வாழும் அடையாளமான, பதப்படுத்தப்பட்ட, தோற் சுருக்கங்கள் நீக்கப்பட்ட, முழு நீள சாத்தியத்தை நீட்டியெடுத்த ஆண்குறி இன்னும் காட்சியில் இருக்கிறது என்கிறார்கள். ஐரோப்பிய கலைப்பயணங்கள் மேற்கொண்டவர் கண்டிருக்கக் கூடும்.

ஐரோப்பியப் பெருமைக்குத் தலை தாழ்த்தி நின்ற ருஷ்யப் பெருமையின் பங்கப்பட்ட வடிவத்திற்கு விடிவொன்று கிட்டியிருப்பது சமீபத்திய செய்திக் குறிப்பில் தெரிய வந்தது. ஙஹக் ஙர்ய்ந், ஞப்க் ஙர்ய்ந்அல்ல, என்றழைக்கப்பட்ட ரஸ்புடீன் ஆண்குறி மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது எனவும் அதன் பதப்படுத்தப்பட்ட, தோற் சுருக்கங்கள் நீக்கப்பட்ட, முழு சாத்தியத்தை நீட்டி எடுத்த, 30.18794666 செ.மீ நீளம் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது எனவும் முற்போக்குப் பயணிகள் இனி காணலாம். நமது தொல் தமிழ் மன்னர்களின் குறி பற்றிய பரணியும் இல்லை பள்ளும் இல்லை. செம்மொழி என்றால் முலைபற்றி மட்டும் பேசினால் போதுமா? அல்லது முலை பற்றிப் பெண்கள் மட்டும் பேசக்கூடாது என்பதா?

நாஞ்சில் நாடன்

http://nanjilnadan.wordpress.com/2010/12/16/முலை/

 

Series Navigationஉறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழாசீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​5​
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *