நிகழ்வு பதிவு அன்னம் விருது பெறும் எழுத்தாளர் எஸ்.ஷங்கரநாராயணன்

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014

 

 

இலக்கிய வீதி எனும் அமைப்பை, ஐம்பது  ஆண்டுகாலமாக நடத்தி வரும் இனியவன், மாதந்தோறும் ஒரு எழுத்தாளரை கவுரவித்து, விருது வழங்கும் விழா ஒன்றினை நடத்தி வருகிறார். ஏப்ரல் மாதம் 4ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று, மாலை சென்னை திநகரில் உள்ள கிருஷ்ண கான சபையின் சிற்றரங்கில், இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் க.ந.சுப்பிரமணியம் பற்றிய சிறப்புரை ஆற்ற வந்திருந்தார் மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி. ‘ மறுவாசிப்பில் க.ந.சு’ என்கிற தலைப்பில் அவர் கொட்டிய தகவல்கள் ஒரு களஞ்சியம்.

“ க.ந.சு. ஒரு விமர்சகராகவே இலக்கிய உலகில் அறியப்படுகிறார். அதையும் தாண்டி அவர் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவரது முதல்  சிறுகதை “தெய்வஜனனம்”. அவர் நாவல்களும் எழுதியிருக்கிறார். ஆனால் நீண்ட நெடிய நாவல்களில் அவருக்கு ஈடுபாடில்லை. முந்நூறு பக்கங்களில் கதை சொல்லத் தெரியாதவன் எப்படி மூவாயிரம் பக்கங்கள் எழுதுவான். அப்படி அவன் எழுதினால் அதில் எப்படி அடர்த்தி இருக்கும். அது நீர்த்துத்தான் இருக்கும் என்று அவர் சொல்லுவார். அவரது முதல் நாவல் ‘ சர்மாவின் உயில் ‘ அது வெறும் இருநூறு சொச்ச பக்கங்களே கொண்டது. மணிக்கொடியின் ஆசிரியராக இருந்த பி.எஸ். ராமையாவின் ‘ வார்ப்படம் ‘ என்கிற சிறுகதையே க.ந.சு.வை எழுதத் தூண்டியது என்று சொல்வது உண்டு. ஆனால் ராமையாவின் எழுத்தின் மேல் க.ந.சு.வுக்கு பெரிய ஈர்ப்போ ஈடுபாடோ இருந்ததில்லை. அந்த காலத்தில் ரசிகன் என்றொருவர் கதைகள்  எழுதிக் கொண்டிருந்தார். அவரது கதைகளை க.ந.சு. வெகுவாகக் கொண்டாடினார். அதேபோல மௌனியை இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்ததில் க.ந.சு.வுக்கு பெரும் பங்குண்டு. கல்கி கிருஷ்ணமூர்த்தியையோ ஜெயகாந்தனையோ அவர் பெரிய எழுத்தாளர்களாக கருதியதே இல்லை. நா. பார்த்தசாரதியும் க.ந.சு.வும் எப்போதும் ஒன்றாக இருப்பார்கள். ஆனால் நா.பா.வின் கதைகள் மீது அவருக்கு உயர்ந்த  அபிப்ராயம் இல்லை.”

க.ந.சு.வின் மருமகனும் திரைப்பட நடிகருமான பாரதிமணியின் பேச்சு யதார்த்த மாகவும் நகைச்சுவையுடனும் இருந்தது. க.ந.சு.வின் மாப்பிள்ளை என்பதால் அவரைப் பார்க்க வருபவர்களெல்லாம் நொடிக்கொரு தடவை இவரை ‘மாப்பிள்ளை’ என்று அழைத்து கொண்டிருப்பார்களாம். ஆனால் தன் மாமனார் ஒரு தடவை கூட தன்னை அப்படி அழைத்ததில்லை என்றார்.

ஷங்கரநாராயணனுக்கு பொன்னாடை போர்த்தி, விருதும் வழங்கியது இலக்கிய வீதி. விருதில் பொறிக்கப்பட்ட வாசகங்களை தொகுப்பாளர் வாசித்து அளித்தது ஒரு புதிய அனுபவம்.

ஏற்புரை வழங்கிய எழுத்தாளர் ஷங்கரநாராயணன், க.ந.சு. தலைமையில் தன் முதல் தொகுப்பு  வெளியிடப்பட்டதை நினைவு கூர்ந்தார். இதுவரை 65 நூல்கள் வெளியிட்டிருக்கும் ஷங்கரநாராயணன் தற்போது மொழிபெயர்ப்பு நூல்களில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதாக சொன்னார்.

அரங்கில் திருப்பூர் கிருஷ்ணன், கவிஞர் ஜெயபாஸ்கரன், கவிஞர் கிருஷாங்கினி போன்றோர் அமர்ந்திருந்தது இலக்கிய வீதி அமைப்பின் பாரம்பரியத்தை பறை சாற்றியது.

0

Series Navigation
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *