திரை விமர்சனம் – மான் கராத்தே

This entry is part 8 of 19 in the series 13 ஏப்ரல் 2014

 

 

கண்களில் ஒற்றிக் கொள்ளக்கூடிய ஒளிப்பதிவு. மெல்ல மனதை வருடும் பின்னணி இசை. பட்டையைக் கிளப்பும் பாடல்கள். மெழுகுச் சிலையாக நாயகி. ஆரோகண பில்ட் அப்பில் அவரோகணமான படம் “ மான் கராத்தே “

சிவகார்த்திகேயன் அவசரப்பட்டிருக்க வேண்டாம். நான்கைந்து படங்களிலேயே சூப்பர் ஸ்டார் ஆகும் அவரது கனவை, அவரது  நல விரும்பிகள் வலுக்கட்டாயமாக கலைத்திருக்கலாம்.. அப்படி செய்யாததால் மீசையில் ஓட்டாத மண்ணாகப் போயிருக்கிறது இந்தப் படம்.

ஏ.ஆர். முருகதாஸின் கதை வித்தியாசமானது. படத்தின் ஆரம்ப நிமிடங்கள் பெரிய எதிர்பார்ப்பைத் தூண்டுகின்றன. அதற்கு முக்கிய காரணம், சுகுமாரின் அட்டகாச ஒளிப்பதிவும் அனிருத்தின் சாஸ்திரிய வீணை இசையும். அனிருத்தின் நரம்புகளில் இசை ஓடிக்கொண்டிருப்பது இந்தப் படத்தின் மூலம் உறுதியாகிறது. வயலினும், தபேலாவும், புல்லாங்குழலும் இழையோடும் பின்னணி இசை, இந்தப் பிறவிக் கலைஞனை அடையாளம் காட்டுகிறது. வெல் டன். ராஜமோகனின் கலைத்திறமையில் தரையில் பாம்புகள் போலப் படர்ந்து வளையும் மரக்கிளைகளும், குத்துச் சண்டை அரங்கமுமே சாட்சி. சூப்பர். செந்தில் குமாரின் வசனங்கள் இயல்பாகவும் நேர்மையாகவும் இருக்கின்றன.

“ பொய் சொல்லி கழட்டி விடறது பொண்ணுங்க பாலிசி.. பொய் சொல்லி கரெக்ட் பண்றது பையனுங்க பாலிசி”

“ இங்கே திறமையில்லாதவங்கன்னு யாருமே இல்லை.. திறமையைப் பயன்படுத்தாதவங்க தான் நிறைய பேர் இருக்காங்க “

ஏற்கனவே பண்பலைகளில் பிரபலமாகியிருக்கும் “ ஓபன் தி டாஸ்மாக் “ தேனிசைத் தென்றல் தேவாவின் குரலில் கணீர் என்று ஒலிக்கிறது. “ டா டிகு டம்பக்கு “ ஒரு கிராமிய பாடல், “ மாஞ்சா போட்டுத்தான் “ என்கிற நவீன இசைத் துள்ளல், என வெரைட்டி விருந்தாக பாடல்கள்.

சிவா, தன் உருவத்தில் நளினத்தையும், உடைகளில் கவனத்தையும்,  நடனத்தில் அக்கறையையும் சேர்த்திருப்பது, அவரது ஈடுபாட்டைக் காட்டுகிறது. பாராட்டுக்கள். மெலிந்த ஹன்சிகா கண்களுக்கு கோன் ஐஸ்கிரீம். சந்தோஷாக வரும் சதீஷின் ஜோக்குகள் எடுபடாமல் போவதற்கு, சிவாவும் ஒரு காரணம். கவுன்டருக்கு கவுன்டர் என்பது ஆதிக்கத்தைக் காட்டுகிறது. காட்சி காலியாகிறது.

குத்துச்  சண்டை தெரியாத ராயபுரம் பீட்டர் ( சிவகார்த்திகேயன் ) யாழினியின் ( ஹன்சிகா மோத்வானி ) காதலை வெல்ல, சாம்பியனாக நடிப்பதும், எதிர்காலத்தைச் சொல்லும் சந்திரகிரி சித்தர் கூற்றை நம்பும் சந்தோஷும், அவனது நண்பர்களும், இரண்டு கோடி பரிசுப் பணத்திற்காக அவனை உசுப்பேற்றி விடுவதும் கதை. கடைசியில் சித்தர் கூற்றுப்படி வெல்லப்போவது ராயபுரம் பீட்டர் இல்லை, ராயபுரத்தில் இருக்கும் கில்லர் பீட்டர் ( வம்சி கிருஷ்ணா ) தான் என்று தெரிய வரும்போது, அவர்கள் கூடுதல் பணத்திற்காக கட்சி மாறுவது டிவிஸ்ட். ஆனால் தனக்கு விட்டுக் கொடுக்கும்படி கெஞ்சும் பீட்டரிடம், கில்லர், அதற்கு உடன்பட, யாழினியை ஒரு இரவுக்கு துணையாகக் கேட்கும் கட்டத்தில், வெகுண்டெழுந்து பீட்டர், கில்லரை சாய்த்து விடுகிறான். சுபம்.

இடைவேளைக்கு அடுத்த சில நிமிடங்களிலேயே, முடிந்து விட வேண்டிய படத்தை, நாற்பது நிமிடங்களுக்கு மேல் இழுத்து முடித்ததால், ‘நச் ‘ போய் ‘சப் ‘ என்று ஆகிவிடுகிறது ரசிகனுக்கு.

வெளியே வரும் ரசிகர் கூட்டம் பின்னணி இசையை, பாடல்களை, ஒளிப்பதிவை, ஹன்சிகாவை என எல்லாவற்றையும் சிலாகித்து பேசுகிறது. அதில் சிவகார்த்திகேயன் மட்டும் மிஸ்ஸிங். அடுத்த படத்திலாவது கவனமாக இருக்கவேண்டும் சிவா. இல்லையென்றால் பாக்ஸ் ஆபீஸ் பஸ் மிஸ் ஆகிவிடும். உஷார்.

0

 

மொத்தத்தில்: சவுரிமான்

 

ரசிகன் குமுறல் : அழுவறதைக் கூட காமெடியா செய்யறாரே சிவா.. அதுக்கு ஆஸ்கார் குடுப்பாய்ங்களா பிரதர்.

 

0

Series Navigationநீங்காத நினைவுகள் – 42
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

 1. Avatar
  ரமேஷ் கல்யாண் says:

  இது ஒரு சினிமா என்று படம் எடுத்தவர்களின் தைரியத்தை பாராட்ட வேண்டும். அதைப் போய் பார்த்துவிட்டு வந்த நம் போன்றவர்க்ளின் துணிச்சலை இன்னும் பாராட்ட வேண்டும்.

  முருகதாஸ் பேசாமல் இதை ஒரு சிறுகதையாக எழுதியிருக்கலாம். குத்துச்சண்டை போட்டியை (ஏதோ)மையமாக வைத்து போகும் படத்தில் கராத்தே எங்கிருந்து வருகிறது? குத்துச்சண்டை – கராத்தே இரண்டையும் பற்றி தெரிந்தவனையும் சரி தெரியாதவனையும் சரி மு்ட்டாளாக்கும் விஷயம். அபத்தங்களின் குவியல். சிவகார்த்திகேயன் 3 மணி நேர ஆதித்யா சேனல் பார்த்தது போல் இருக்கிறது. “அமலாபால்” உள்ளிட்ட தேய்ந்து தீய்ந்துபோன ஜோக்குகள். மேலும் அந்த லிப்ட் காட்சி அசிங்கத்தின் உச்சம். ரசனையை எந்த லெவலுக்கு கொண்டுபோகிறார்கள்! கற்பனை வறட்சி. பாவம் சதீஷ் வீணடிக்கபட்டுவிட்டார். துருத்திக்கொண்டு வந்து போகும் பாடல்கள். சூப்பர் ஹீரோவாக காட்ட முடியாமலும் குறைவாக காட்ட முடியாமலும் அவஸ்த்தை பட்டிருக்கிறார்கள்.

  சுவார்சியமான கதையின் ஆரம்பத்தை வீணடித்த பெருமை யாருக்கு என்று பட்டிமன்றம் நடத்தலாம். ஆரம்பத்தில் அந்த செய்தித்தாள் காட்டப்படுகையில் இவளோ பெரிய செய்தியில் போட்டோ இருக்காதா என்று நானே யோசிக்கையில் அதை யோசிக்காதா ஐடி மூளை? கிழிக்கப்பட்டதாளை கடைசியில் கிராபிக்ஸில் காட்டும் வரை தியேட்டர் கலைய ஆரம்பித்துவிட்டதை டைரக்டர் கவனத்தில் கொள்க.

  லிப்டில் இருந்து வெளிவந்து சி.கா வும் – ஹ வும் உவ்வே செய்யும் காட்சியை இந்த படத்தின் விமர்சனமாக வைக்கலாமா என்று தோன்றுவதை தவிர்க்முடியவில்லை. ஆதங்கத்தில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *