சூரியன் உதிப்பதும் பின் மறைவதும் போல என் அனுதினப் பயணமும் சலிப்பில்லாத இயக்கம். உண்மையில் சூரியன் நிலைத்திருப்பதும் புவி அதனைச் சுற்றி வருவது அறிவியல் உண்மை என்ற போதிலும், பேச்சு வழக்கில் சூரியன் தான் உதிக்கிறது. பின் மறைகிறது.
அதனை ஒத்ததாகவே என் பயணமும் மாயை, பொய்க் கூற்றுதான். இதில் நான் எண்ணுவதும் பின் செயல்படுவதாகத் தோன்றினாலும், பெருவாரியான சம்பவங்களும், நிகழ்வுகளும் என் வசம் இருப்பதில்லை. ஏன், எதற்கு, எப்படி என்று அடுக்கடுக்காக எழும்பிவிடும் கேள்விகளினூடே பயணப்படுகிறது மனம்.
புவியின் கீழ் நடக்கும் எந்த நிகழ்வும் புதியதில்லை என்பது போன்ற பிரமை எனக்கு அடிக்கடி ஏற்பட்டுவிடுகிறது. அந்த நிகழ்வு சூரியன் மற்றும் கோள்களின் இயக்கம் போல மாறாத தொடர்நிகழ்வு. மறு சுழற்சி போல ஒவ்வொருவரின் வாழ்விலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது என் மனதில் உதித்த சமீபத்திய எண்ணம். இது உண்மையாகவும் இருக்கலாம், அல்லது அறியாமையாகவும் இருக்கலாம்.
இலக்கில்லா சிந்தனையுடனே இந்த சாலையில் இடது ஓரத்தில் பயணிக்கும் போது தான் எனக்கு நேர் எதிரில் இருசக்கர வாகன ஓட்டி எவரேனும் தயங்கி நிற்பர். இன்றும் அப்படித்தான் அந்த இருசக்கர வான ஓடிட்டியும் தயங்கி நின்றான். சண்டை போடவோ அல்லது வாதிடமோ நேரமும், மனமும் இல்லை என்னிடத்தில்.
சட்டப்படி அது விதி மீறல், நிதானித்துப் பார்க்கும் போது அவன் என் இடது சாரியில் இருந்த ஏதோ ஒரு அங்காடியில் பொருட்களை வாங்கிக்கொண்டு, எதிர்புறம் தாண்ட இயலாமல், வாகன நெரிசல் குறைந்தவுடன் கடந்து விடலாம் என்று நேர் திசையிலேயே வந்திருக்கக் கூடும். அவன் கொஞ்சம் வேடிக்கை பார்க்காமல் வாகனம் ஓட்டி யிருக்காலாம். அல்லது நானாவது எச்சரிக்க மணி அடித்திருக்கலாம், இலக்கற்ற சிந்தனையில் கவனம் குவிக்கப்பட்டிருந்ததால், நான் மணி அடிக்கத் தவறினேன். அவன் என் மிதிவண்டியின் கால்வைப்பதற்காக அமைப்பட்பட்டிருந்த படுக்கையில் இடித்து வாகனத்தை நிறுத்தினான். அவன் சங்கடமாக பார்க்க, நான் புன்னகைத்து, என் மிதி வண்டியை இரு பாத அளவு பின் எடுத்து, வலது புறமாக வளைத்து அவனைக் கடந்து போனேன். என் மிதி வண்டிக்கு பெயிண்ட் தோல் உரிந்ததில் கொஞ்சம் எரிச்சல் ஏற்பட்டிருக்கும் என்ற எண்ணத்தை ஏனோ தவிர்க்க இயலவில்லை.
அனுபவம் பெரும் மன மாற்றத்தைத் தருகிறது. மன ஏக்கங்களைக் கடக்க உதவுகிறது. அனுபவம் ஓர் அறிவுத் தெளிவு உணர்ச்சி, அது ஒரு ஆசான், வாழ்க்கையில் எதிர்பார்ப்பது, எதிர்பார்க்கும் சமயத்தில் நடந்து விடுவதும் இல்லை. நடக்கப் போவது முன் கூட்டியே காட்சியாவதும் இல்லை.
அன்றும் அப்படி தான் நடந்தது. தெலுங்கு வருடப்பிறப்பு, 2014 மார்ச்சு 31 திங்கட் கிழமை இரவு 12.30 மணிக்கு மேல் என் வாழ்க்கையையைத் திசை திருப்பும் ஓர் எதிர்பாராத நிகழ்வு, எப்போதும் மது போதையில் உளறும் அல்லது அவன் வாழ்வின் எல்லையற்ற தோல்விகளை எண்ணி அழும் என் சகோதரன், உறங்கிக் கொண்டிருப்பவளின் பின்னந் தலையில் பலம் கொண்ட மட்டும் அடித்து, துடித்து உயிர்க்க வைப்பான் என்றோ, எந்த சுதாரிப்பும் இல்லா நிலையில் தரையில் படுத்திருக்கும் என் தலை மயிரைப் பற்றி அருகிருந்த கட்டிலின் கால்களின் இடித்து துன்புறுத்து வான் என்றோ நான் ஒரு போதும் எண்ணியிருக்க வில்லை.
இது ஏழ்மைக் குடும்ப வீட்டில் அனுதினமும் நிகழும் குடி போதைக் கணவன் மனைவி அடிதடிச் சண்டை. ஆனால் என்னை அன்று காயப் படுத்தியவன் கூடப் பிறந்த என்னிளைய சகோதரன் !
முதல் முறை இராமஜெயம் பேருந்து ஓட்டுனரும், மறுமுறை என் சகோதரனும் எனக்கு உயிர் பயத்தை காண்பித்திருக்கிறார்கள். “என்ன காப்பாத்துங்க, என்ன காப்பாத்துங்க,” என்று என்னுடைய அலறல், இரவின் உறக்கப்பிடியில் சிக்கியிருந்த எவருக்கும் கேட்டிருக்க நியாயமில்லை. எதிர் மாடியில் குடியிருக்கும் பெரியவர் இறங்கி வந்து, மாடிப்படிகளில் அமர்ந்து வேடிக்கைப் பார்க்க அமர்ந்து கொண்டார். சமூதாயத்தின் ஒரு பிரஜைக்கு நான் காட்சி பொருள்.
யாரும் என்னைக் காப்பாற்ற வர வில்லை.
“சகோதரன் அடிக்க வருகிறானே,” என்று, அடுத்த இளைய சகோதரனுக்கு நான் போன் செய்ய, அந்த போனையும் பிடுங்கி உடைத்துப் போட்டான் அவன். என் முழங்கால் முட்டி வலிக்க நான் நடந்து வாசலின் வெளியே வந்த போதும், அவன் என்னை விடவில்லை. இரும்புக் கதவின் ஒரு பாதியை எடுத்து என் தலையை நோக்கி அவன் குறி வைக்கவும், இளையவனும் என் வாலிப மகளும் ஓடிவரவும் சரியான பாதுகாப்புத் தருணமாக இருந்தது அன்றைய தினம்.
என்னை அணைத்தபடிக் கதறிய என் மகளின் கதறல், மன ஆழத்தில் எனக்கான காதல் தேடலை, ஆழமான அன்பின் எதிர்பார்ப்பை நிறைவு செய்தது.
அதன் பிறகு இளையவன் பெரியவனை அடித்ததும், என் பின்னந் தலையில் நீரை ஊற்றி, வலிகுறைக்கும் முயற்சியில் ஈடுபட்டதும், இளைவனின் மாடி குடியிருப்பிற்கு நான் போய் படி ஏற இயலாமல் தடுமாற, என் மகள் அருள்மொழியாலும், இளைவனின் மனைவி சூர்யாவாலும் தூக்கிச் செல்லப்பட்டதும், மறக்க முடியாத மாபெரும் சோகக் கதை!
அன்று இரவு முழுவதும் எனக்குள் எழுந்த தொடர்ப் போராட்டச் சிந்தனையும், என் கண்ணாடி அவனால் உடைக்கப்பட்ட பின்பு கண்ணாடி இல்லாமல் பார்க்கவோ, ஆஃபீசில் பணியாற்றவோ முடியாமல் தடுமாறிய நிகழ்வு தான் என் வாழ்வின் திருப்பு முனை !
எதற்காக இப்படி ஒர் மாற்றுத் திறனாளி வாழ வேண்டும் என்றோர் எண்ணம் வாட்டிய தென்னை !
என் மகளின் கண்ணாடியை ஒரு பாதுகாப்பிற்காய் அணிந்து, நான் அலுவலகம் போய் சேர, (அதற்கு மட்டுமே உதவியது அந்த கண்ணாடியின் அரைப் பார்வை) தட்டச்சு செய்ய இயலாமல் தடுமாற, என் தைரியத்தின் இறுதிச் சொட்டும் வடிந்து போனது.
ஆண் துணை இல்லாமல், ஒரு வாலிபப் பெண்ணை எப்படிப் படிக்க வைத்து வளர்ப்பது இந்த சமுதாயத்தில், என்கிற பயமே பிறந்தகத்தை விட்டு வெளியேற முடியா பெருந்தடையாக இருந்தது எனக்கு. அதிகபட்சமாக 35 வருடங்கள் அந்த வீட்டில் தான் வசித்து இருக்கிறேன். அதனால் ஏற்பட்ட இடப்பற்றும், என் நண்பர் இராஜகுருவோடு சில நாட்கள் வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுமாக ஆரம்ப காலங்கள் என்னை அங்கிருந்து விலக இயலாமல் தடுத்திருந்தது.
காலப் போக்கில் நினைவுகள் மங்குவதும், மறப்பதும், மூளையின் இயல்பு என்று தேற்றிக் கொண்டு, இராஜகுரு என்னை விட்டு விலகிக் காணாமல் போனதற்கு ஒரு காரணத்தை நானே காட்டிக் கொண்டேன் என்பதே உண்மை.
ஏப்ரல் முதல் தேதி, செவ்வாய்க் கிழமை அன்று நான் ஒரு முடிவிற்கு வந்து விட்டேன். இந்த வீட்டை விட்டு நான் வெளியேறுவது என்று. கடந்த 2 மாத காலமாக நான் வீடு தேடி அலைந்த போது, இந்த சமுதாயம் ஒரு ஆணோடு பிணைந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. சமுதாயம் ஒருவரைக் குறை நிறைகளோடு அப்படியே ஏற்பதில்லை.
வீடு தேடிப் போனான் !
பழைய போலீஸ் லைன் தெருவில் வாடகைக்கு வீடு இருக்கிறதா என விசாரிக்கச் செல்ல, அந்த வீட்டுப் பெண் ….
“யார் யார் எல்லாம் இருப்பீங்க ?”
“நான் என் மகள், எப்போதாவது என் அம்மாவும் இருப்பார்கள்.”
“உங்க வீட்டுக்காரு ?”
“அவர் இறந்துட்டார்.”
“இறந்துட்டாரா ? இல்லையே உன்ன பத்தி வேறமாதிரி இல்ல பேசிக்கிறாங்க, பொய் சொல்றியா ?”
“வீடு வாடகைக்கு இருக்கு இல்ல ரெண்டுல ஒரு பதில் மட்டும் தான் வேண்டும்” என்றேன்.
“வச்சிக்கிட்டு பெத்துக்கிட்டயா, இல்ல கட்டிக் கிட்டயா ? அந்தாள் வருவாப்டியா? ஏன் கேக்குறேனா நாலு பேரு நாலுவிதமா பேசக்கூடாது, கண்டவனுங்களும் வீட்டுக்கு வந்தால்……… !”
அவள் இழுக்க ஓங்கி அறையலாம் போல் வந்த கோபத்தை அடக்கியபடி கடந்து போனேன்.
சண்டை போடுவதும், கூப்பாடு போடுவதும் விடுத்து இவ்விடத்தை விட்டு நான் விலகுவதே நல்ல இயல்பு.
கணவர் விலகிச் சென்று விட்டார் என்று சொல்லி, பின் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தொடர்ந்து, பதிலை சொல்லிக் கொண்டிருப்பதை காட்டிலும், செத்துட்டான்னு சொல்றது பாதுகாப்பான பதில்.
ஆரம்ப நாட்களில் இந்த பதில் என்னை மிகவும் பாதித்தது. உயிரோடு இருக்கும் ஒருவனை இறந்துட்டான்னு சொல்றது பாவம் என்ற மனசாட்சியின் உறுத்தல். நாள் பட மனதில் இறக்கடிக்கப்பட்டிருக்கும் அவனை இறந்துவிட்டான் என்று சொல்வதில் எந்த தவறுமில்லை என்று தோன்றியது.
தவறா, சரியான்னு புரியாத குழப்பத்தில் நான்……………இந்த கட்டுரையை அடுத்த பகுதியிலும் தொடர்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்
- ஜெய் பீம் காம்ரேட் (தமிழ்) திரையிடல் @ பெரியார் திடல்
- தினமும் என் பயணங்கள் – 12
- தொடுவானம் 11. செம்பனைத் தோட்டம்
- இலக்கியச் சோலை நாள் : 20-4-2014 ஞாயிறு காலை 10 மணி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 70 ஆதாமின் பிள்ளைகள் – 3
- திண்ணையின் இலக்கியத் தடம் -30
- நீங்காத நினைவுகள் – 42
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-29 நிறைவுரை.
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – அத்தியாயம் 2
- பயணச்சுவை 1 . சென்னையிலிருந்து சேலம் !
- திரை விமர்சனம் – மான் கராத்தே
- மருத்துவக் கட்டுரை பித்தப்பைக் கற்கள்
- சீதாயணம் நாடகப் படக்கதை – 28
- பொலிவு
- 3 Books Launch in Canada – 6 th April 2014 – Kalam
- சூரிய மண்டலத்தில் துணைக்கோள் நிலவு எப்போது பூமியைச் சுற்றத் தோன்றியது ?
- நிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதியும்,இலங்கை எதிர்ப்பு அரசியலும்-சில கருத்துக்கள்.
- நரகம் பக்கத்தில்…..(நிறைவுப் பகுதி)
- தேர்தல் சீர்திருத்தங்களின் தேவையை வலியுறுத்தும் தேர்தல் முடிவுகள்