நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்!

author
0 minutes, 3 seconds Read
This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்!

(நகைச்சுவைப் பயணக் கட்டுரை)

ஒரு அரிசோனன்

 

அரிசோனாவில் கண்ணை மூடிக்கொண்டு கார் ஓட்டப் பழகிக்கொண்ட எனக்கு – அதாவது, கிழக்கு-மேற்காகவோ, அல்லது தெற்கு-வடக்காகவோ நூல் பிடித்தால் போல் செல்லும் பல தடங்கள் கொண்ட நேர் பாதைகளிலும், பிரீவேக்களிலுமே கார் ஓட்டிப் பழகிக்கொண்ட எனக்கு – என் மகன் வேலை பார்க்கும் நியூ ஜெர்சிக்குச் சென்றதும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு காரோட்டி, திண்டாடித் தெருப் பொறுக்கிய என் நகைச்சுவை அனுபவங்களை உங்களுடன் பகிர்த்து கொள்கிறேன். நியூஜெர்சி வாசகர்கள் என்னை மன்னிப்பார்களாக! அல்லது, “வேணும் கட்டைக்கு வேணும்” என்று சிரிப்பார்களாக!

ஒரு வழியாக, வாடகைக் காரைப் பெற்றுக் கொண்டு, நியூவெர்க் விமான நிலையத்தை விட்டு வெளிவந்தால் மாறி மாறி குழப்புகிறமாதிரி வழிகாட்டிகள்! தவறிப்போய் வேறு ஒரு வழியை எடுத்து விட்டால், உடனே, அடுத்த வெளிவழியில் (exit) வந்து, திரும்பிச் சென்று, சரியான சாலையில் பொய் விட முடியாது. ஐந்தாறு மைல் சென்றால்தான், நாம் வர வேண்டிய சாலைக்கு வரமுடியும்! இல்லாவிட்டால், நியூயார்க் சென்று சுற்றிப்பார்த்து விட்டு மெதுவாக வீடு வந்து சேரலாம்!

உதாரணமாக, என் மகன் இருந்த ஹில்ஸ்பரோவிளிருந்து நியூவெர்க் விமான நிலையம் செல்லவேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள், நியூயார்க் போகும்வழியில்தானே நியூவெர்க் விமான நிலையம் இருக்கிறது என்று நியூயார்க் போகும் சாலையை எடுக்க முடியாது. எடுத்தால் அது எங்கோ சுற்றி நியூயார்க்குக்குக் கொண்டு விட்டுவிடும்! நியூவெர்க் விமான நிலையம் செல்லவே முடியாது!

மோரிஸ்டவுன் என்று மேற்கே செல்லும் வழியை முதலில் எடுத்து, இரண்டு மைல் தூரம் சென்று, அங்கிருந்து நியூயார்க் செல்லும் இன்னொரு வழியை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால், நியூவெர்க் போகாமல் மோரிஸ்டவுனுக்கே சென்று விடுவோம்!

என்ன, தலை சுற்றுகிறதா? படிக்கும் உங்களுக்கே இப்படி இருந்தால், விடிகாலையில், அருணோதயம் கூட வராத இருட்டில், நியூவெர்க் விமான நிலையம் செல்லப் புறப்பட்ட எனக்கு எப்படி இருந்திருக்கும்?

நீங்கள் ஊகித்தது சரிதான்! தப்பான வழியை எடுத்துத் தொலைத்துவிட்டேன்! கார் போகிறது, போகிறது, போய்க்கொண்டே இருக்கிறது! வெளிவழியைக் காணவே முடியவில்லை. கிட்டத்தட்ட ஐந்து மைல் சென்று வெளியேறினால், திரும்பிச்செல்ல உள்வழி (onramp) இல்லை!

தட்டுத்தடுமாறி, ஒரு பெட்ரோல் பங்க், சாரி, காஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, வழி விசாரித்துக்கொண்டு திரும்ப சரியான சாலைக்குச் செல்வதற்குள் விழி பிதுங்கிவிட்டது! பீனிக்ஸ் செல்லும் விமானம் தாமதமாகக் கிளம்பியதால் பிழைத்தேன், அதைப் பிடிக்க முடிந்தது!

சும்மா சொல்லக்கூடாது, புத்தம் புதிய பிரீவேக்கள், பளபளக்கும் சாலை விளக்குகள், என்று. பீனிக்சில் என்னைக் கெடுத்துத்தான் வைத்திருந்தார்கள்! அதுவும் டெம்ப்பியில் (Tempe)போக்குவரத்து விளக்குகள் (stop lights), தெருப் பெயருடன் இருக்கும் அழகே தனி! நீங்களே விரும்பினாலும் தொலைந்து போக முடியாது. என் மகன் இருந்த ஹில்ஸ்பரோவில் போக்குவரத்து விளக்குகள் கம்பியில் தொங்கி ஊசலாடிக்கொண்டு இருந்தன! அவை காற்றில் ஆடும் வேகத்தைப் பார்த்தால், பிய்ந்து விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று பயமாகவே இருக்கும்!

பீனிக்சில் சாதாரண ரோடுகள் கூட போக இரண்டு, வர இரண்டு என்று நால்வழிப் பாதைகளாகவே இருக்கின்றன. ஆனால், மத்திய நியூஜெர்சியில் பெரிய சாலைகள்கூட போக ஒன்று, வர ஒன்று என்று இருவழிப் பாதைகளாகவே இருக்கின்றன.  ஆனால், ஹில்ஸ்பரோவில் 206 என்ற சாலையில் நெரிசல் நேரத்தில் மாட்டிக்கொண்டால் தொலைந்தோம்! பீனிக்சின் 10, 17, 202, 101 போன்ற பிரீவேக்களின் நெரிசல்கள்கூட  ஒரு நேரிசல்களாகவே தோன்றாது!  என்னை மாதிரி ஒருவர் வழி தெரியாமல் நத்தை போல ஊர்ந்துகொண்டிருப்பார், அவரை முந்திச் செல்ல முடியாமல் ஒரு மாப்பிள்ளை ஊர்வலமே சென்று கொண்டிருக்கும்!

பொதுவாக, இடது பக்கம் திரும்ப வேண்டும் என்றால் இடதுபுறத் தடத்தில்தானே (lane) இருக்கவேண்டும்?  அப்படி நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள்! பெரும்பாலான வழிகள் ஜாடிக்காது (jug handle)  இடது திருப்பம் உள்ளவை.  அதாவது, இடது பக்கம் திரும்பவேண்டும் என்றால், வலது பக்கத் தடத்திற்கு வரவேண்டும். நாம் திரும்பவேண்டிய சாலை வருவதற்குச் சற்றுதூரம் முன்னதாக “இடது பக்கத்திருக்குத் திரும்ப” என்று வலது பக்கத்தில் ஒரு அறிவிப்புப் பலகை இருக்கும். அதைப் பார்த்துப் படித்துத் தெரிந்துகொண்டு, வலது பக்கம் திரும்பி, குறுக்குத் தெருவுக்குச் சென்று காத்திருக்க வேண்டும்.  இது விபத்துக்களைத் தடுக்கிறதாம்!

சரிதான், இனிமேல் இடது பக்கம் திரும்ப வேண்டுமானால் வலது பக்கம் இருந்து விடலாம் என்று நினைத்தோமானால் வந்தது ஆபத்து! என்னை மாதிரி ஆட்களை — நியூஜெர்சி சாலைகளைப் பழிக்கும் ஆட்களைப் பழி வாங்கவேண்டும் என்றே சில தெருக்களுக்கு சாதரணமான இடது திருப்பம் வைத்திருப்பார்கள்!  இதை எப்படி முன்னுக்கு முன்னதாவே தெரிந்து கொள்வது?  பத்துப் பதினைந்து தடவை திண்டாடினால். தன்னாலேயே தெரிந்துவிடும்!

யாராவது நண்பர்கள் என்னைத் தங்கள் வீட்டிற்கு அழைத்து, அவர்களிடம் நான் வழி கேட்டால், சொல்லத் தடுமாறுவார்கள். நீங்களே வரை படத்தில் பார்த்துக்கொண்டு வந்துவிடுங்களேன் என்று சொல்லிப் போனை வைத்துவிடுவார்கள்!

சரி, பரவாயில்லை, நாமே, கூகுளில் பார்த்துக்கொண்டு கிளம்புவோம் என்று இரவில் மட்டும் கிளம்பவே கூடாது! வழி தேடிக் கண்டுபிடிக்கவே முடியாது! சூழல் உணர்வு (eco-sense)  சற்றுகூட இல்லாமல், பீனிக்சில் இரவைக்கூடப் பகலாக்கும் வண்ணம் மின்விளக்குகள் சாலையில் கண்ணைப் பறிக்கும்,! ஆனால், சூழல் உணர்வு அதிகம் உள்ள நியூஜெர்சியில் அந்தக் கண் கூச்சே இல்லை! இருட்டு என்னைப் பயமுறுத்தியது.  புறநகர் (suburban) சாலைகளில் விளக்கே இல்லை. வீடுகளும் உள்ளடங்கி இருந்ததால், நான் தேடிச் சென்ற வீட்டிக்கு முன்னாலே இருந்தால்கூட என்னால் அதை அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை!

ஜி.பி.எஸ் இருந்தால் ஒருவேளை பிழைத்தாலும் பிழைக்கலாம்.  சில சமயம் ஜி.பி.எஸ்ஸால்கூட நம்மைக் காப்பாற்றமுடியாது! சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

ஒரே ஒரு கார்தான் இருந்ததால், என் மகனின் காரை நாங்கள் வைத்துக் கொண்டிருந்தோம்! படேல் காஷ் அண்ட் காரியில் காய்கறிகள் வாங்கிக்கொண்டிருந்தபோது எங்கள் மகன் எங்களைக் கூப்பிட்டு, அவனது அலுவலகத்திலிருந்து அழைத்துப்போகச் சொன்னான்.

முன்னதாகவே ஒரு ஜி.பி.எஸ் வாங்கி வைத்துக்கொண்டு இருந்ததால், அதில் என் மகனின் அலுவலக முகவரியை ஏற்றினேன். நாங்கள் இருந்த இடத்திற்கு வடமேற்கில் அவனது அலுவலகம் இருந்த போதிலும், ஜிபிஎஸ் என்னைத் தெற்கே போகுமாறு பணித்தது. அதை நம்பாமல், நான் வடக்குப் பக்கம் செல்ல ஆரம்பித்தது வினையாகப் போய்விட்டது.

திடுமென்று ஜிபிஎஸ் என் மகனின் அலுவலகத்திற்கு நேர் எதிர்த் திசையில் கிழக்குப்பக்கம் செல்லுமாறு வழிகாட்டியது,. ஜிபிஎஸ்சை மனதிற்குள், மனதிற்குள் என்ன மனதிற்குள், வாய்விட்டுத் திட்டிக்கொண்டே நான் செண்டுகொண்டிருந்த வழியில் தொடர்ந்தேன், கிழக்குப் பக்கம் செல்லும் சாலை வரும் என்ற நப்பாசையில்.

நான் என்னதான் அதை உதாசீனப் படுத்தினாலும், அது நான் செல்லலும் வழி தப்பு என்றே சொல்லிக்கொண்டு வந்தது. பனிக்காலமாதலால் இருட்டவேறு ஆரம்பித்துவிட்டது.

கடைசியில் இரண்டு மைல் சென்றதும் இடது பக்கம் திரும்புமாறு என்னைப் பணித்தது அந்த வழிகாட்டி. என்னால் நம்பவே முடியவில்லை! ஏனென்றால் அது காட்டிய திசை கிழக்கு1 என் மகனின் அலுவலகம் இருக்கும் திசை!

ஆனால், அடுத்த கணமே, எனது வியப்பு ஏமாற்றமாக மாறியது!

ஏனென்றால், இடது புறம் திரும்பும் இடம் வந்ததும் அதை அடைத்து ஒரு சுவர் தொடர்து கட்டப் பட்டிருந்தது! வேறு வழியில்லாமல், ஒரு கடையில் காரை நிறுத்தி, வழி கேட்டுக்கொண்டு, என் மகனின் அலுவலகத்திற்கு ஒருவழியாக வந்து சேர்ந்தேன்.

என் மனவருத்தத்தை என் மகனிடம் கொட்டினால், அவன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான். நியூஜெர்சி மாநிலம் ஒரு மாதத்திற்கு முன்னர்தான் அந்த ரோடை அடைத்து விட்டதாம்! அது வழிகாட்டியின் சாப்ட்வேரில் புதுமைப்படுத்தப் படவில்லை.

வழிகாட்டி முதலில் சொல்லியபடி கேட்டிருந்தால் ஒருவேளை சீக்கிரமாக வந்து செர்ந்திருப்பேனோ இல்லை, சுற்றிக்கொண்டிருந்திருப்பேனோ தெரியாது.

எது எப்படி இருந்தாலும் சரி, புதிதாகச் செல்பவர்களுக்கு நியூஜெர்சியில் சரியான இடத்திற்கு, சரியான வழியில், சரியான நேரத்திற்குப் போய்ச்சேர, அங்கு கார் ஓட்ட நிறையப் பொறுமை இருக்கவேண்டும், கார் டாங்க் முழுக்கப் பெட்ரோல் இருக்கவேண்டும், அதிர்ஷ்டமும் அதிகமாகவே இருக்கவேண்டும்! அது முடியாவிட்டால், அந்த ஊர்க்காரர்களைக் கார் ஓட்டச் சொல்லி விட்டு, நிம்மதியாகக் கண்ணை மூடிக்கொண்டு ஒரு தூக்கம் போட்டு எழுந்திருக்கவேண்டும்.

ஒருவேளை அவர்களாலும் குறித்த நேரத்திற்குப் போய்ச்சேர முடியாவிட்டால் நம் மீது பழி விழாது அல்லவா!

அதனால்தான் நிறையப்பேர் நியூஜெர்சியிலிருந்து அரிசோனா வந்து கொண்டிருக்கிறார்கள், என் மகன் உள்பட!

யாரவது நியூஜெர்சிக்காரர்கள் அரிசோனா வந்தால் எனக்கு ஈமெயில் போடுங்கள்! நிம்மதியாக எங்காவது டீ, அல்லது காப்பி குடித்துக்கொண்டு நமது காரோட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வோம்!

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *