பயணச்சுவை 3 . வாடிய பயிரைக்கண்டபோது . . .

author
0 minutes, 1 second Read
This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

வில்லவன் கோதை

 

3 . வாடிய பயிரைக்கண்டபோது . . .

 

இரண்டு கார்களும் ஒன்றன்பின் ஒன்றாக வளைந்து வளைந்து  எதிர்பாராமல் எதிர்வரும் வாகனங்களை ஒதுக்கி லாவகமாக மலையேறிக் கொண்டிருந்தன. .

கருங்கற் பாறைகளை செதுக்கியும் குறுக்கே தடுத்துநின்ற குன்றுகளை பிளந்தும் வாகனங்கள் செல்ல வழி அமைத்திருந்தார்கள். மேலே ஏற ஏற சாலையின் இருபுறமும் மாறிமாறி  குன்றுகளின் அடிவாரங்கள் கண்களுக்குபட்டு  எங்கள் உரையாடலை நிறுத்தின.

வெளியே சூழ்ந்திருந்த வெப்பம்  எனக்குள் எதிர்பாராத ஒரு ஏமாற்றத்தை தந்தது.  உடலுக்கு இதமான ஒருமாறுபட்ட வெப்பநிலையை மனம் எதிர்பார்த்திருந்தது.

நெரிசலான காடுகள் சாலைக்கு வெளியே அடர்ந்து காணப்பட்டாலும் நெடுநாட்களாக மழையின்றி இங்கு வரட்சிதான் குடிகொண்டிருந்திருக்கிறது..

வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம்  என்று வள்ளலார் சொன்னது போல ஏற்காட்டை கண்டு  என்னால் வாடாமல் இருக்க முடியவில்லை.

இரண்டு மூன்று  குறுகிய கொண்டைஊசி வளைவுகளை கடந்தபோது எங்கள் வாகனம் இரண்டும் தடுத்து நிறுத்தப்பட்டது.  ஐந்தாறு அரசு ஊழியர்கள் சாதாரண உடையில் சூழ்ந்தனர். இரண்டு காவல் துறை ஊழியர்களும் உடன் நின்றிருந்தனர்.

தொலைக்காட்சியையோ  செய்தித்தாள்களையோ  தினமும் பார்க்கின்ற வாய்ப்பு பெற்றவர்கள்  இதற்கான காரணத்தை சாதாரணமாக புரிந்து கொள்ள முடியும். பாராளமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால்  நாடெங்கும் பணபரிவர்த்தனையை கட்டுப்படுத்தும் தேர்தல் ஆணையத்தின் முயர்ச்சி .

நோக்கம் நல்லதென்றாலும்  பாதிக்கப்படுவது பெரும்பாலும் பொதுமக்களும் வணிகர்களும்தான். அடுத்த நாளே இதையெதிர்த்து சேலத்து வணிர்கள் பெரும்கடையடைப்பு ஒன்றை நடத்தியதை பத்திரிக்கைகளில் படித்தேன்..

‘ நாங்க  எல்லாம் ரிட்டயர்டு ஈ பி  ஸ்டாப்ங்க .ஏற்காடு வரை போறோம்  ’

காரின் கண்ணாடியைத்திறந்து  விபரத்தை சொன்னார்  தங்கவேலு.

‘ சரி சார் !  சரி . டூர் போரீங்களா. ..  ஒரு வீடியோ மட்டும் எடுத்துகுறோம் ’

என்றார் அந்த நடுத்தர வயதைக்கடந்த அரசு ஊழியர்.  ரிட்டையர்டு என்று சொன்ன பிறகும்கூட  அந்த ஊழியர்  தந்த பணிவு  மனிதர்கள் அத்தனை பேரும்  ஒரே அச்சில் வார்க்கப்படவில்லை என்று உணர்ந்து கொண்டேன்.

தற்காலிகமாக அமர்த்தப்பட்ட அந்த வீடியோ கிராபர்  வாகனத்தை  டிக்கி உள்பட பல்வேறு கோணங்களில் பதிவு செய்தார்.

வண்டியை எடுத்தார் தங்கவேலு.

சோதனைக்குப்பின் இரண்டு வண்டிகளும் ஒன்றன்பின் ஒன்றாக மலைச்சரிவில் ஏறத்துவங்கின..

‘ நல்ல வேளை .நான் வைத்திருந்த ரெண்டாயிர ரூபாயை அவர்கள்   கவனிக்கவில்லை ! ’

என்ற என் பதிலைக்கேட்டவுடன் வண்டிக்குள் சிரிப்பலைகள்  எழுந்து அடங்கிற்று.  ஒவ்வொருமுறையும் கொண்டை ஊசி வளைவுகளை கடக்க முற்படும்போது  கனரக வாகனங்களும் அரசுப்பேரூந்துகளும் சற்றும் எதிபாராத தருணத்தில்  முன்வருகின்றன.

மலைகளை செதுக்கி  போடப்பட்ட  குறுகிய சாலைகள். ஒரு புறம் குன்றுகளின் கரடு முரடான  வடிவங்கள்  கண்களை மறைக்கிறது. இன்னொருபுறம் கண்ணுக் கெட்டிய தூரம் மங்கலாக தெரியும் அடிவாரங்கள் இயற்கையின் பேரழகையும் அதனுள் அடங்கியிருக்கும் பிரமிப்பையும் ஏற்படுத்தியது.

பின் இருக்கையில் நடுவில் இருந்த வீ .மணி  இதையெல்லாம் பொருட்டாக கருதாமல்  அவரது துபாய் பயணத்தில் முஸ்லீம்  ஷேக் அரசாங்கம் அவருக்கிழைத்த அநீதிகளை  அவர்களுக்கே கேட்குமாறு உரத்த குரலில் பேசினார்.

சூரியன் ஏறத்தாழ உச்சியை தொட்டிருக்கவேண்டும். அவனுடைய சஞ்சாரம் அந்தபிரதேசத்தில் இப்போது கண்களுக்கு அவ்வளவாக புலப்படவில்லை. மதியம் ஒரு மணி இருக்கவேண்டும். சூரிய வெப்பம் மனதுக்கும் உடலுக்கும் இதமாகத்தான் இருந்தது. தொடர்ந்து மலையேறிய இரண்டு வண்டிகளும்  வேகத்தை குறைத்து கொண்டு   ஒரு நகரிய சூழலில் பிரவேசித்தது.

???????????????????????????????ஆமாம் ! ஏற்காட்டை  நாங்கள் அடைந்து விட்டோம்.

ஆங்காங்கே குடியிறுப்புகளுக்கான வீடுகள் காணப்பட்டன. எல்லாமே சிமெண்ட் தகடுகள் வேயப்பெற்று மலையோர மேடு பள்ளங்களில் ஒட்டிக்கொண்டு நின்றது. பரவலாக மனிதர்களிள் நடமாட்டம்  கண்களுக்குப்பட்டது. சுற்றுப்புறங்களில்  குன்றுகள் பெரிதும் சிறிதுமாக முளைத்திருக்க  மையத்தில் ஒழுங்கற்ற வடிவில் ஒரு தண்ணீர் பரப்பு  காணப்பட்டது .எவராவது ஏற்காட்டைப்பற்றி பேசும்போது இடையிடையே குறுக்கிடுகிற  மனங்கவர்ந்த அந்த  ஏரியாகத்தான்  இருக்கக்கூடுமென்பதை உணர்ந்து கொண்டேன்.

வண்டிகள் மேடும் பள்ளமுமாக  காணப்பட்ட அந்த குறுகிய  சாலைகளில் பயணித்து ஏற்காடு இன்டர்நேஷனல் விடுதிக்குள் நுழைந்தன.ஒரு மலைச்சரிவில் மரங்களும் செடி கொடிகளுடன் நிறைந்து காணப்பட்ட அந்த விடுதி எங்களுக்காக முன் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இப்போதெல்லாம்  நகர கிராம முச்சந்திகளில் நின்றிருக்கும் நவீன விளக்கு கம்பங்களைப்போல ஏராளமான நெடிந்துயர்ந்து நின்ற மரங்களைக் காணமுடிந்தது இந்த பகுதியில் பரந்துகிடந்த வித்தியாசமான தாவரங்களை  வேறெங்கும் பார்க்க நேர்ந்ததில்லை.அத்தனையும் புதுமை.

சுற்றுச் சுவர்களுடன்  இருந்த அந்தவிடுதி  குழந்தைகள் விளையாடிக்கழிக்கும் பெரும்பாலான கருவிகளை பொருத்தியிருந்தது  நீரூற்றுகளுக்கான அமைப்பும் காணப்பட்டது ஆனால் அத்தனையும் தேவையான நீரின்றி வரண்டு சருகுகளின் சங்கமமாக காட்சிதந்தது..

ஒரு புறம் விசாலமான உணவுக்கூடமும் அதையொட்டி உயரமான மேடைகளில் இரண்டிரண்டாக வரிசையாக அ்மைக்கப்பெற்ற தங்கும் அறைகள். இரண்டு அறைகளுக்கு நடுவில் ஒரு வரவற்பு வராண்டாவும் உண்டு . விடுதி முழுதும் கண்ணாடிகதவுகள் பொருத்தப்பட்டு புற சூழல்களை தடுத்தன.

இருவர் இருவராய்  அறைகளுக்குள் நுழைந்தோம். விசாலமான இரட்டை படுக்கைகள் களைப்பை விரட்ட காத்திருந்தன. தொலைக்காட்சி பெட்டியும் தொலைபேசியும் இருந்தது. சுடு தண்ணீர் , கழிவறையுடன் ஒரு சுத்தமான குளியலறை. குளிர்சாதன பெட்டியொன்றுதான் இல்லாமலிருந்தது.. அந்த பிரதேசத்துக்கு அதற்கான தேவை இருந்திருக்காது. பெரும்பாலான மலைப்பிரதேசங்களில்  வெப்பத்தை பரப்பும் கருவிகள்  அனேகமாக எல்லா அறைகளிலும் இருப்பதை பார்த்திருக்கிறேன். மின் விசிறிகள்கூட எதுவும் இருப்பதில்லை.

பயணக்களைப்பை  குளிர்ந்தநீரில் கழுவினோம். ஒருமணி நேர ஒய்விற்குப்பிறகு ஒன்றாக     எதிர்புறமிருந்த உணவறைக்குள் நுழைந்தோம். இயல்புக்கு அதிகமான உயரத்தில் தூக்கி சிமெண்ட தகடுகளால் வேயப்பெற்ற அந்த விடுதி விசாலமாயிருந்தது. மையத்தில் போடப்பட்டிருந்த உணவக மேஜையைச்சுற்றி நாங்கள் அமர்ந்து கொண்டோம்.

சூடான ஒரு சைவ உணவு பரிமாறப்பட்டது.அந்த உணவின் சுவை ஒரு தரமான வீட்டு உணவை நினைவூட்டிற்று.

‘ அரிமா சங்க கலந்துரையாடலுக்கு இங்கே எப்போதாவது வருவதுண்டு. அதோடு மாதம் ஒருமுறை இங்கே படிக்கிற என் பேத்திகளை அழைத்துச்செல்ல வருவேன். மற்றவிடுதிகளை காட்டிலும் இது பரவாயில்லை என்று தோன்றிற்று. அதனால் இப்போதெல்லாம் இங்குதான் வருகிறேன். ’

உணவக ஊழியர்களுக்கு எங்களுக்கான தேவையை சொன்னவாறே பேசினார் தங்கவேலு. தங்கவேலு தனது மகள் வயிற்று பேத்திகள் இருவரை இந்த ஏற்காடு புனித இருதயம் உண்டு உறைவிடபள்ளியில் சேர்த்திருந்தார்.

‘ முதல்வகுப்பில்  இளையவளையும்  சேர்த்த பிறகு அவ அம்மாவும்  இப்போதெல்லாம் மாசாமாசம் மகளை அழைத்துச்செல்ல என்னோடு வருகிறாள்  ’

நெகிழ்வோடு பேசியவாறே எழுந்தார் தங்கவேலு.

எத்தனை குழந்தை இருந்தாலும் கடைகுட்டிக்கு கிடைக்கும் பாசமும் பரிவும் தனியேதான்.

(  அடுத்த வாரம் பார்க்கலாம் !   )

 

 

 

 

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *