அத்தியாயம் 5 திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும்

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

புதியமாதவி

மிகக் குறுகிய காலத்தில் திராவிட இயக்கம் அரசியலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் அந்த வெற்றிக்குப் பின் என்ன ஏற்பட்டது. சரிவை நோக்கி இந்த இயக்கம் போனது அல்லது போய்க்கொண்டிருக்கிறது.

எப்படி இது ஏற்பட்டது? காரணங்கள் என்ன?
திராவிட இயக்கத்தின் மிக முக்கியமான பங்களிப்புகள் இரண்டு : ஒன்று நாடகத்துறை , இன்னொன்று பத்திரிகைதுறை.

திராவிட இயக்க நாடகங்கள் என்ற கட்டுரையில் வெளி. ரங்கராஜன் அவர்கள் சில கருத்துகளை முன்வைக்கிறார். அதை அப்படியே கொடுத்திருக்கிறேன். இதோ..ரங்கராஜன் எழுதியிருப்பது

///////நாடகங்களை தூரத்தில் இருந்து பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் சக மனிதனின் பிரச்சினைகளைப் பேசி ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியவை திராவிடர் இயக்க நாடகங்கள். . அண்ணாவைப் பின்பற்றி கருணாநிதி, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, சி.பி. சிற்றரசு போன்ற பல நாடக எழுத்தாளர்கள் உருவாயினர். ஆனால் சமூக விமர்சனத்தைத் தவிர இவர்களின் நாடகங்களில் அதிக கற்பனையோ, கலைநயமோ இல்லை. ஆனால், அண்ணாவிடம் ஒருவிதமான பல்நோக்கு பார்வை இருந்தது. இரு வேறுபட்ட இலக்குகள் இருந்தன. லெனினை கொலை செய்ய நிலவிய ஒரு சதி பற்றி `துரோகி கப்லான்’ என்ற நாடகமாக எழுதினார். ரொம்பவும் திட்டமானதாகவும் கூர்மையாகவும் இருந்தது அந்த நாடகம். சுய சிந்தனையைக் கூண்டில் நிறுத்தி எதிரிகள் வழக்காடுவதாக `ஜனநாயக சர்வாதிகாரி’ என்ற நாடகம் எழுதினார். இந்திய விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை காங்கிரஸ் அனுமதிப்பதாக உருவக பாணியில் `சகவாச தோசம்’ என்ற நாடகத்தை எழுதினார். பெரும்பாலான நாடகங்கள் நேரடித் தன்மை கொண்டிருந்தாலும் ஒரு விஸ்தீரமும் விசாரணையும் அவருடைய நாடகங்களில் பிரதானமாக இருந்தன.

அண்ணா மற்றும் முன்னணி எழுத்தாளர்களுடைய நாடகங்கள் சாடுதலையே நோக்கமாகக் கொண்டவை என்றால் என்.எஸ். கிருஷ்ணன் நயமான நகைச்சுவை மூலம் சமூக விமர்சனக் கருத்துக்களை வழங்கினார். அவருடைய நல்லதம்பி இதற்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு. பகுத்தறிவுப் பாதையையும், காந்தியத்தையும் அரவணைத்துக் கொண்டு செல்வதைப் போன்ற ஒரு போக்கை அவர் மேற்கொண்டார். வேதம், புராணம், பக்தி என்ற பிராம்மணக் கலாச்சாரத்துக்கு மாற்றாக எளிமை, மனிதாபிமானம், சமத்துவம் கொண்ட புதிய தமிழ்க் கலாச்சாரத்துக்கு – மக்கள் கலாச்சாரத்துக்கு என்.எஸ். கிருஷ்ணன் ஆதாரமாக இருந்தார்.

எம்.ஆர். ராதா உருவகப்படுத்திய ஒரு கலகப் பண்பாடு திராவிடர் இயக்கத்தின் இன்னொரு முக்கியமான போக்கு. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாடக மேடைக்கு ஒரு புதிய அழுத்தத்தை உருவாக்கியவர் அவர். தமிழில் முதன்முதலில் தடை செய்யப்பட்டவை எம்.ஆர். ராதாவின் நாடகங்களே. அந்த அளவுக்கு ஒரு கலகக்கார நாடகக்காரராக அவர் விளங்கினார். மிகவும் உண்மையானதும் கசப்புமான யதார்த்தங்களை அவர் எடுத்துக் கூறினார். ராமாயணப் பாத்திரங்களை கேலி செய்து அவர் எழுதிய கீமாயணம் நாடகம் தடை செய்யப்பட்டது. தடையை மீறி திருச்சி தேவர் ஹாலில் அந்த நாடகத்தை நிகழ்த்திக் காட்டினார். நாடக மேடையில் ஒருவிதமான பரிசுத்த நாயகர்களையே காட்டிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் தறிகெட்டு அலையும் ஒருவனை நாயகனாக்கி `ரத்தக் கண்ணீரை’ உருவாக்கினார். ரத்தக் கண்ணீர் நாடகம் தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் நிகழ்த்தப்பட்டது. பெரியாரின் கருத்துக்களுக்கு நாடக வடிவம் கொடுத்து தமிழ்நாடு முழுவதும் சுயமரியாதை பிரச்சாரத்திற்கு ஒரு மதிப்பை அளித்தவர் எம்.ஆர். ராதா. எம்.ஆர். ராதாவைப் பின்பற்றி திருவாரூர் தங்கராசு போன்றவர்களும் நாடகங்கள் நிகழ்த்தினர். என்.எஸ். கிருஷ்ணனின் கலை அம்சத்தையும், எம்.ஆர். ராதாவின் கலகப் பண்பாட்டையும்பின்பற்றி பலர் உருவாகாதது திராவிட இயக்கத்தின் ஒரு பெரிய குறைபாடு.

இந்த நாடக உணர்வை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல திராவிட இயக்கம் தவறிவிட்டது. சக மனிதனை முதன்மைப் படுத்துதல், சமூக யதார்த்தம் பற்றிய விமர்சனப் பார்வை ஆகியவை பல்வேறுபட்ட இலக்கியப் போக்குகளை உருவாக்கி இருக்க முடியும். ஆனால், தி.மு.க. அரசியலில் தீவிரமாகப் பங்கெடுக்க ஆரம்பித்ததுமே அதன் கலை, இலக்கியக் கண்ணோட்டத்திலும், சமூக விமர்சனப் பார்வையிலும் பெரும் சரிவு ஏற்பட்டது. பகுத்தறிவுக் கருத்துக்களின் பின்னணியில் ஒரு புதிய

எதிர்காலச் சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய ஒரு இயக்கம் கடந்த காலப் பெருமைகளில் தன்னை இழக்க ஆரம்பித்தது. நம்முடைய வரலாற்றையும் இலக்கியங்களையும் பற்றிய அறிவு நிகழ்காலம் பற்றிய புதிய மதிப்பீடகளுக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் விமர்சனமற்று வெறும் கடந்த காலத்தைப் பூஜிப்பது மட்டுமே நிகழ்ந்தது.

ஆசாரம், பக்தி என்பதற்கு மாற்றாக அன்பு, சமத்துவம் ஆகியவற்றை முன்நிறுத்த வேண்டியவர்கள் போலித்தனம், கவர்ச்சி இவற்றில் மூழ்கிப் போனார்கள். ஆரம்பகால திராவிட இயக்க உணர்வுகள் நீர்த்துப் போய் சகமனிதனின் வாழ்நிலையும் சமூக யதார்த்தமும் இன்னும் சிரழிவிற்கு உள்ளானது. ////////

ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மிக அதிகமான இதழ்களைக் கொண்டு இயக்கம் வளர்த்தவர்கள் என்று சொன்னால் அது திராவிட இயக்கம் மட்டும்தான். நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் மன்றம், பாசறை, அறிவகம், படிப்பகம் என்று பல்வேறு அமைப்புகளைத் தோற்றுவித்து இதழ்களை வாங்கி ஒரு இதழை குறைந்தது 5 பேர் முதல் 25 பேர் வரை இலவசமாக வாசித்து விவாதித்து கொண்டிருந்தார்கள். ஆனால் என்னவானது இதெல்லாம்?

கோவை ஞானி அவர்கள் சொல்லியது போல ” அறிஞர் அண்ணா சரியான நேரத்தில் காலமாகிவிட்டார்” ஏனேனில் அதற்குப்பின் இந்த இயக்கம் முழுமையாக அதிகாரமையமானதுடன் அந்த அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள மிகவும் விரைவாகச் சரிவைநோக்கி உருண்டு சிதறியக்காட்சியைப் பார்க்கிறோம். இது திராவிய இயக்கத்தின் நான்காவது கட்டத்தில் கலைஞர் தான் முதன்மைப்பாத்திரம் .

ஒரு உதாரணம் சொல்லுகிறேன். தந்தை பெரியார் இதழ்களின் விற்பனையில் பெரும் அக்கறை காட்டினாலும், விற்பனையை வைத்து இதழ் பணியையோ, எழுத்துப் பணியையோ நிர்ணயித்துக் கொள்ளவில்லை பெரியார். ”நான் எழுதியதை நானே அச்சுகோத்து நானே அச்சிட்டு நான் மட்டுமே படித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டாலும் ”குடி அரசை” வெளியீட்டு என் கருத்துக்களை வரும் தலைமுறைக்கு விட்டுச் செல்வது என் கடமை” என பிரகடனப்படுத்தியவர்

ஆனால் கலைஞர் என்ன செய்தார்?. கலைஞரும் முரசொலி மாறனும் இணைந்து தமிழ்ச்சமூகத்திற்கு குங்குமம் வைத்தார்கள். சாவி குங்குமத்தின் ஆசிரியராக இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
KU
வாசிக்கும் பழக்கம் அதிகமுள்ள பிராமண சமூகத்தவர்களை வாடிக்கையாளர்களாக பெறவேண்டி அதற்கேற்றாற் போன்ற கட்டுரைகள், கதைகள் அதிகமாகப் பிரசுரிக்கப்பட்டன. குங்குமம் தி.மு.க.வின் சாயல் இல்லாத, திராவிட இயக்க படைப்பாளிகளுக்கு வாய்ப்பளிக்காத, பிராமண சமூகத்துப் படைப்பாளிகளுக்குப் பிரதான இடம் தந்த ஒரு வார இதழாக சுமார் ஒன்றரை லட்சம் பிரதிவரை விற்பனையானது.

அப்போது திராவிட இயக்கத்தின் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு வளர்ந்த ஒரு தலைமுறை கேட்டது…

சூரியனே , உனக்குச் சூடில்லையா?
உனக்கு மட்டும் சாவி,
எங்களுக்குப் பூட்டா? என்று.

தொடரும்/

Series Navigation
author

புதிய மாதவி

Similar Posts

2 Comments

 1. Avatar
  ஷாலி says:

  பகுத்தறிவு சுயமரியாதை,தமிழின உயர்வுக்காக அண்ணாவால் உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகம் கருணாநிதியின் கையில் சிறைப்பட்ட கைதியாக மாறி வெற்றுக்கூச்சலாக இன்று முனங்கிக்கொண்டிருக்கிறது.முப்பது வருடம் முதல்வராக இருந்த ஒரு சாமானியன் ஒரு கோடிஸ்சுவர குடும்பத்தை உருவாக்கியதே சாதனையாக உள்ளது.தொடர்ந்து இரண்டு நிமிடம் தமிழிலேயே பேசுவதற்கு இங்கு ஆட்களை தேட வேண்டியுள்ளது.இதுதான் முத்தமிழ் காவலர் தமிழுக்குச் செய்த தொண்டு.ஒவ்வொரு தேர்தலிலும் பெரும்பான்மை சாதி ஆட்களை வேட்பாளராக்கி சாதிக்கட்டமைப்பை காப்பதும் கருணாநிதிதான்.எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்ற பதவி சுகத்திற்கு பலியான ஆட்டு மந்தை கூட்டமே கருணாநிதியின் கழகம்.

  பெண்ணைக்காட்டி போதை ஏற்றும் மலிவான பத்திரிக்கைகளை வெளியிட்டும்,பெண்ணே பிரதானமான தொலைக்காட்சியை தொடங்கி மக்களுக்கு போதையூட்டி காசு தேடும் கேவலமே இவரது குடும்பம்.இன்று தள்ளாடும் முது வயதிலும் தினமும் ஒரு அறிக்கை ,செய்தியென தன்னை காட்டிக்கொள்ளும் கருணாநிதியின் ஆற்றல் தமிழின உயர்வுக்கு பயன்பட வில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.திமுகவின் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அடிதடி நடத்தும் பிள்ளைகளை பெற்ற மனிதரிடம் இன்னும் பகுத்தறிவு,சுயமரியாதை,இன உயர்வை எதிர்பார்ப்பது பேதமை.மக்கள் பணத்தை உண்டு கொழுத்தவர்களிடம் ஒழுக்க மாண்புகளை எதிர்பார்க்கக்கூடாது.

 2. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள புதிய மாதவி அவர்களே. நான் எதிர்பார்த்தபடியே தங்களுடைய படைப்பு மிகவும் அருமையாகச் செல்கிறது.நல்ல ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளீர்கள்.நீங்கள் கூறியுள்ளபடியே நாடகத் துறையும் பத்திரிகைத் துறையும் திராவிட இயக்கத்தின் எழுச்சிக்கு பெரிதும் உதவியுள்ளன. அத்துடன் திரைபடத் துறையையும் சேர்த்துக்கொள்ளலாம். கலைஞரின் பராசக்தி, மலைக்கள்ளன், மனோகரா, ஜெனோவா, மந்திரிக்குமாரி,பூம்புகார் போன்ற அருமையான திரைப்படங்களும், எம்.ஜி. ஆர்., எஸ். எஸ். ஆர்., கே.ஆர்.ராமசாமி. எம். ஆர். ராதா கலைவாணர் போன்ற நட்சத்திர நடிகர்களின் பங்கும் பெருமளவில் இயக்கத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளன. திரைபடத் துறையை முழமையாக கொள்கை பரப்பும் சாதனமாகப் பயன் படுத்தி அதில் வெற்றி கண்டவர்களும் இவர்களே! அதன் மூலமாக தமிழகத்தில் பெரும் புரட்சியையே உண்டு பண்ணிவிட்டார்கள் என்றால் அது மிகையன்று.அண்ணா அதை வைத்து ஆட்சியைப் பிடித்தாலும் அண்ணா முதல்வராக இருந்தவரை தமிழகத்தின் பொற்காலமாகத்தான் இருந்தது. அவருக்குப் பின் முறைப்படி நாவலர்தான் முதல்வராகி இருக்க வேண்டும்.அதை கலைஞர் பறித்துக்கொண்டது தவறுதான்.அதன்பின்புதான் இயக்கத்தின் வளர்ச்சியில் தளர்ச்சி உண்டானது. பதவிக்கு வந்தபின் அவர்களின் எழுத்துகளும் கலைப் படைப்புகளும் பின்னடைவு கண்டன.பதவி ஆசையே மேலோங்கியது. கலைஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும், கவிஞர்க்ளகவும், நடிகர்களாகவும் இருந்தவர்களெல்லாம் முழுநேர அரசியல்வாதிகளாகிவிட்டனர்.அரசியல் சாக்கடையில் விழுந்த பின்பு பகுத்தறிவுக் கொள்கைகளை கொஞ்சங் கொஞ்சமாக அரசியல் காரணத்திற்காக விட்டுக்கொடுத்து இன்று மறந்துபோன பரிதாப நிலைக்குள்ளயினர் .இதுவே திராவிட இயக்கத்தின் வீழ்ச்சிக்கு அடிகோலியது! இன்று அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் காரணமாக பிளவுபட்டு வலுவிழந்து போனது. வெறும் பெயரளவில் ” திராவிடர் ” என்ற சொல்லை பயன்படுத்தி அரசியல் நடந்து கொண்டிருக்கிறது இதிலிருந்து இவர்கள் எப்படி மீண்டு வருவார்கள் என்பதை காலம்தான் சொல்லவேண்டும். மீண்டு வராவிடில் தமிழ் இனம் மீண்டும் அடிமை இனமாகத்தான் தொடர நேரிடும்! டாக்டர். ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *