கம்மங்கதிரின் வாசத்தோடு – குமாரகேசனின் ” வண்டிப்பாதை ” நாவல்

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

சுப்ரபாரதிமணியன்

கொங்கு பகுதி மக்களின் கிராம வாழ்வை நுணுக்கமாகத தன் சிறுகதைகளில் சித்தரித்த குமாரகேசன் வியத்தக்க விதத்தில் ஏறக்குறைய தீரன் சின்னமலைக்கு 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சவாலாக எடுத்துக் கொண்டு இந்த சரித்திரக் கதையைப் படைத்திருக்கிறார். சரித்திரக் கதைகள் என்றால் கொங்கு வேம்பாக தூரம் போகும் நான் கொங்கு நாட்டு வாழ்க்கை எனும் விதத்தில் நாவல் குமாரகேசனை கவனமாய் படிக்க வேண்டியிருந்தது. நுணுக்கமான வாசிப்பைக் கோரும் நுணுக்கமான விவரிப்புகள் கொண்ட நாவல். கொங்கு பேச்சு மொழியிலேயே எழுதப்பட்டது என்பதை பலமாகவும், பலவீனமாகவும் எடுத்துக் கொள்ளலாம். சொல்லும் விதத்தில் நூற்றுக்கணக்கான தொன்மங்கள் விரவிக் கிடக்கின்றன. கம்மங்கதிரை ஊதிஊதி தின்று கொண்டே நடந்து போகிற சுகானுபமாய் வாய்த்தது.

கரட்டுப்பாளையம் ஜக்கம்மாவின் சாவு மீதான சாபம் அந்த ஊரை பீடித்திருக்கிறது.கன்னிமார் ஒடைக்கரையில் அவள் செத்துப் போனாள். கணவனின் கொலைவெறித்தாக்குதலில் இறந்து போனவளை கல்லைக்கட்டி கிணற்றில் போட்டு செத்துப்போனதாய் காட்டுகிறார்கள். அவள் சாவில் சந்தேகம் கொண்ட அவளின் அப்பா போடும் சாபம் அந்த ஊரை அலைக்கழிக்கிறது. அந்த சாபத்தின் விளைவுகள் பின் தலைமுறைகளுக்கும் தொடர்கிறது.
வண்டிக்காரன் மகளான சின்னத்தாயின் வாழ்க்கையும் இது போல் புதைக்குழிக்குள் போய்விடுகிறது. சின்னத்தாயியின் மாமன் மாயபாண்டி அவளைக்கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்யத் திட்டமிடுகிறான.வீடு தீக்கிரையாகிறது. பெரியகுடுமபத்து மனச்சிதைவு ஆறுமுகத்திற்குத் திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. மாயபாண்டியால அதுவும் தடைபடுகிறது. அவன் அப்பா ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் நட்க்க வேண்டும் என்று மூன்றாம் தாரமாய் கட்டிக் கொள்கிறார். குலதெய்வம் கோவிலுக்கு ஆற்றில் இறங்கிப்போகிறவர் செத்துப் போகிறார். கன்னிகழியாமலே அவள் விதவையாகிறாள். வண்டியோட்டியும், அரப்பு உருவப்போயும் சித்தப்பா அரவணைப்பிலும் வாழ்கிறாள். கட்டின ஊர் குளம் பலி இல்லாமல் வீணாகிப் போகிறதைத் தடுக்க ஏதோவகையில் பலியாகிறாள்.
ஜக்கம்மா, சின்னதாயிற்குமிடையிலான பல ஆண்டுகால கொங்கு மக்களின் வாழ்க்கை குதிரையின் வேகத்தோடு ஓடுகிறது.

இதற்கிடையில் எத்தனோ மனிதர்கள் வாழ்க்கை சொல்லப்பட்டு விடுகிறது. “ பாப்பாத்தி “ குதிரைக்காரனான குதிரையோட்டத்திலும் ஈட்டி எறிதலிலும் வீரனான வெள்ளியங்கிரி, மலையண்டியூர் பொம்மி நாயக்கர், அவரின் சாவல் கட்டு சாகசம், கரட்டுப்பாளையம் மலையன் பொந்தப்பனுவன், கோம்பேறி மூக்கன், மாயபாண்டி போல் பல கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். பேய்ப்புளியமரம், மலைக்கோட்டை, ஆறுகள் ஊர்களைக் காக்கின்றன. அடிபட்ட புலி, ஆட்டுக்கிடை, சோளக்குழி, பனை உடும்பு, கல்லுக்கோட்டை போன்றவை மனிதர்களைப் போலவே உயிருடன் உலாவுகின்றன. பிலவங்க வருச தை மாதமோ, இலையுதிர்காலமோ, கீலக வருச சித்திரை மாதமோ காலமும் வெளியும் இணைந்தபடி படிமங்களாகியிருகின்றன.

திருடுவதும் கொள்ளையடிப்பதும் தொழிலாகவும் சாகசமாகவும் ஆகியிருக்கிறது. திருட்டு அறம் போற்றப்படுகீறது.
வெள்ளியங்கிரி பதவி இறக்கம் செய்யப்பட்டு செல்லாக்காசாகிறான்.குளத்தைக் கட்டி முடித்திருந்தால் ஊருக்கு வறட்சி வந்திருக்காது என்று சொல்லப்படுகிறது அவன் குளத்தை முடிக்கும் வேலையில் ஈடுபடாமல்தான் போனான், வெள்ளியங்கிரிக்கு அருக்காணி மேல் ஈர்ப்பு இருந்தது. சின்னத்தாயி பஞ்சம் பிழைக்க வரும் போது அவளுடன் மையல் உருவாகிறது. ” பஞ்சம் பிழைக்க அகதியா தேடி வந்தவங்ககிட்ட பலவந்தமா கட்டிக்கத் தயாரான்னு கேக்கறது முறையல்ல. குளத்து வழிப்பறிக்கூட்டமும், வேலை முடியற வரைக்கும் நீ அவள ஓரக்கண்ணுல கூடப் பாக்கக் கூடாது. சொல்லுக்கு மீறி நடந்தா குளம் பகுதியோட நிக்கும் ” கொள்ளையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதை செய்கிற சமூகமும் இருந்து கொண்டே இருக்கிறது, ஆட்டையும் மாட்டையும் பொன்னையும் பொருளையும் அபகரித்து வந்த கட்டக்குத்தன் கூட்டம் பொண்ணைத் தூக்கி வரும் விபரீதங்களும் நடக்கிறது. மாயப்பாண்டி சின்னத்தாயியை தூக்கிக் கொண்டு போக செய்யும் சாசகங்கள் விறுவிறுப்பானவை. ஆனால் அவன் சின்னத்தாயின் பார்வையில் இப்படித்தான் சாபம் கொண்டவனாகிறான். அவன் செத்துக்கிடக்கிற போது சின்னத்தாயி இப்படிச் சொல்கிறாள் : ” இதுதானுங்க என்னோட தாய் மாமக்காரன் மாயப்பாண்டி. என்னோட துயரத்துக்கும் சின்னய்யனோட மரணத்துக்கும் மூலகாரணமே இந்த ஆளுத்தானுங்க ” அறுத்தவ மறு கடு கட்டும் பழக்கம் இதுவரை இல்லாதைச் சுட்டிக் காட்டி சின்னத்தாயின் வாழ்க்கையும் வெறுமையில் கழிகிறது. குளம் போன்ற பொதுக்காரியங்கள் என்றைக்கும் பெயரை நிலைக்க வைக்கும் என்பது வலியுறுத்தப்படுகிறது. அவரவர் பூமியை அவரவர் அனுபவிக்கட்டும் பாரம்பர்யமாக அதில் உழைக்கும் ஆள்காரர்கள் அனுபவிக்கட்டும் என்பது பரவலாக்கப்படுகிறது. அசலூர்காரர்கள் அனுபவிக்கக் கூடாது ஆளில்லாத ஊர் அழிந்து போகும் என்பது உண்மையாகக் கூடாதென்று நிர்பந்தங்கள் பலரின் வாழ்கையை வேறு கோணத்திலும் பார்க்கச் செய்கிறது.:
கொங்கு நாட்டு மனிதர்களின் மானமுள்ள வாழ்க்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

கொங்கு நாட்டு பகுதியின் ஒரு பகுதிகால சரித்திரத்தை நாவல் குமரகேசன் அவர் கேள்விப்பட்ட வாய் மொழிக்கதைகள் வாயிலாக இதில் முன் வைத்துள்ளார். கொங்கு நாட்டுச் சரித்திரம் பழம்பொருள் அகழ்வாராய்ச்சி மூலம் அவ்வளவாய் பெறப்பட்டதில்லை என்ற குறை இருக்கிறது. கிடைத்துள்ள வரையில் ஏறத்தாள கி.பி. முதல் நூற்றாண்டில் தொடங்கி கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் முடிகிறது என்கிறார்கள். கி.பி 250 வரை… கொங்கு நாட்டின் பழைய சரித்திரம் சங்க இலக்கிய நூல்கள் மூலம் அதிகம் பெறப்பட்டிருக்கிறது.நாவல் குமார கேசன் தான் எடுத்துக் கொண்ட காலப்பகுதி கொங்கு மக்களின் பயிர்த்தொழில், கைத்தொழில், வணிகம், தொன்மக்கதைகள் என்று விரவி இந்நாவலை நிறைத்திருக்கிறார். மண்ணோடும் மனிதர்களோடும் வெகு நேசிப்பு கொண்ட மனிதரால் மட்டுமே இவ்வளவு நுணுக்கமாக சதையும் நகமுமாய கொங்கு மனிதர்களை அந்தக்காலத்துப் பின்னணியுடன் படைக்க முடியும். சமகால கொங்கு மனிதர்களைச் சிறுகதைகளில் அடையாளம் காட்டியவர் அதே உள்ளுணர்வுடன் சரித்திர கால மனிதர்களையும் நடமாட விட்டுப் பதிவு செய்திருப்பது இந்நாவலில் வரும் தலைமுறைகளுக்கான குளம் வெட்டுவதற்கு ஒப்பாகும்.

சுப்ரபாரதிமணியன்

Series Navigation
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *