2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்
ஜெஜியாங் மாநிலத்தின் சாங்யூ நகரம். அந்நகரத்தின் செல்வந்தர்களில் ஒருவர் சூ. சூ குடும்பத்தினர் நகரின் முக்கிய பிரமுகர்களுக்கு பரிச்சியமான குடும்பமும் கூட. சூ யிங்தாய் அக்குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தை. குடும்பத்தின் ஒரே பெண் குழந்தை. அவள் மிகவும் சாதுரியமான பெண்.
எப்போதும் கற்க வேண்டும், பல்வேறு விசயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகக் கொண்டவள். அவளுக்கு எப்போதுமே பள்ளி சென்று பயில வேண்டும் என்ற ஆர்வம் இருந்து கொண்டேயிருந்தது. ஆனால் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லவே அனுமதி மறுக்கப்பட்ட காலம் அது. அதில் பள்ளிக்கு எங்கே செல்வது? பள்ளி என்பது ஆண்பிள்ளைகளுக்கு மட்டுமே. பெண்கள் அவர்களோடு பயில்வது என்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒரு விசயம்.
யிங்தாய் வீட்டிலிலேயே துணிகளில் நூலால் ஆன கைவேலை செய்யும் வேலையைச் செய்ய பெரிதும் ஊக்குவிக்கப்பட்டாள். ஆனால் அவளோ, புத்தகமும் கையுமாகப் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களை ஜன்னல் வழியாக பார்த்து பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பாள். பெயருக்கு கைவேலை செய்வது போன்று நடித்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு எப்போதுமே வரலாறு, இலக்கியம், கவிதை பற்றி பள்ளியில் பயில வேண்டும் என்ற கனாவிலேயே காலத்தைக் கழித்தாள்.
அவள் வாலிப வயதை அடைந்த போது, பள்ளி செல்லும் ஆசை பெருந்தீயாக கொழுந்து விட்டு எரிந்தது. அந்தத் தீயில் எரிந்து போகாமல், எண்ணியதைச் சாதிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள். தன்னுடைய தோழியாக இருந்த பணிப்பெண்ணுடன் இதைப் பற்றிக் கலந்து ஆலோசித்தாள். எப்படித் தந்தையை தன்னை வீட்டை விட்டு அனுப்ப அனுமதிக்க வைப்பது? அடுத்து, எப்படிப் பள்ளியில் சேர அனுமதி பெறுவது? அதுவும் தூரத்தில் இருக்கும் மிகப் பிரபலமான ஹாங்சாவ் நகரின் வாங்சாங் கலாசாலையில் சேர சம்மதிக்க வைப்பது?
யோசித்து யோசித்து இருவரும் மிகவும் துணிகரமான சிறந்த திட்டத்தை வகுத்தனர்.
ஒரு நாள் யிங்தாய்யின் பெற்றோர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். வாயிலில் அவர்களைச் சந்திக்க ஒருவர் வந்தார். தான் ஒரு ஜோதிடர், வருங்காலத்தைப் பற்றிச் சொல்ல வந்திருப்பதாகக் கூறி, பெற்றோரைச் சந்திக்க அனுமதி கேட்டு நி;ன்றார். பணிப்பெண் வழி காட்ட, அவர் பெற்றோர் இருக்குமிடம் வந்து சேர்ந்தார்.
ஜோதிடர் சூ தம்பதியினரிடம், “உங்கள் வீட்டிற்கு மிகச் தொலைவில் ஒரு காற்று மண்டலம் உருவாகி இருப்பதுத் தெரிகிறது. அந்தக் காற்று மண்டலம் உங்கள் குடும்பத்திற்கு ஒரு நல்ல சேதியைக் கொண்டு வர இருக்கிறது” என்று ஆரம்பித்தார். குடும்பத்திற்கு நல்ல சேதி என்றதும் சூவிற்கு ஆவல் அதிகரித்தது. “ஜோதிடரே.. என்ன சேதி அது? விவரமாகச் சொல்லுங்களேன்..” என்று ஆர்வம் மேலிடக் கேட்டார். உடனே ஜோதிடர், “உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வெகு தூரப் பயணம் காத்திருக்கிறது. அந்தப் பயணம் உங்கள் குடும்பத்திற்கு பேரதிர்ஷடத்தைக் கொண்டு வரப்போகிறது” என்றார். சூவிற்கு மிக்க மகிழ்ச்சி. ஜோதிடருக்கு நன்றி தெரிவித்து பரிசுகளைத் தந்து அவரை வழியனுப்ப வாயிலுக்குச் சென்றார். அவருக்கு விடையளிக்கும் சமயத்தில், ஜோதிடர் தான் தலையில் அணிந்திருந்த சீனத் தொப்பியைக் கழற்றி, தன்னுடைய அழகிய கூந்தலைக் கட்டவிழ்த்து விட்டார்.
“அப்பா .. என்னை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா?” என்று கேட்டாள் ஜோதிடராக வந்த அப்பெண்.
ஜோதிடரின் இந்த திடீர் மாற்றத்தைக் கண்டு சற்றே அதிர்ந்த சூ, சில நொடிகளில் சுதாரித்துக் கொண்டு, மாறு வேடத்தில் இருக்கும் ஜோதிடர் தன் மகள் யிங்தாய் என்பதை உணர்ந்ததும் ஆச்சரியப்பட்டார்.
“நான் வேடம் போட்டு வந்ததும் உங்களால் கூட அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லையா?” என்றாள் கேலியுடன்.
“ஆம் மகளே.. ஆமாம் ஏன் இந்த வேடம்?”
“உங்களிடம் நான் எப்போதும் கேட்பது தான்..”
“என்ன.. பள்ளிக்குச் செல்வது தானே..”
“ஆமாம்.. என்னைப் பள்ளிக்குச் செல்ல அனுமதியுங்கள் அப்பா..”
“நான் எப்போதும் சொல்வது தான்.. பள்ளியில் பெண்களை அனுமதிக்க மாட்டார்களே..”
“அதற்காகத் தான் இந்த மாறுவேடம்.. நான் ஆணாக வேடமிட்டுக் கொண்டு சென்று படித்து வர அனுமதி தர வேண்டும்..”
“அப்படிச் செய்வது தவறல்லவா?”
“நான் படிப்பது தவறா? நான்கு விசயங்களை அறிந்து கொள்வது தவறா? அப்படி இருக்க நான் ஆண் வேடம் கொண்டு பள்ளி செல்வது எப்படித் தவறாகும் அப்பா..”
“நீ சொல்வதும் சரிதான்..” என்று தயக்கத்துடன் ஆரம்பித்ததும் தன்னுடைய தந்தையை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும் என்று உறுதியுடன் தன் பக்க வாதங்களை முன் வைத்தாள்.
“சரி யிங்தாய்.. பள்ளிக்கு அனுப்ப எனக்குச் சம்மதம்.. எங்கு சென்று பயிலப் போகிறாய்?”
“எனக்கு ஹாங்சாவ்விலே இருக்கும் இந்த மாநிலத்திலேயே பிரபலமான வாங்சாங் கலாசாலையில் படிக்க வேண்டும்..”
“அங்கேயா.. அது வெகு தொலைவில் அல்லவா இருக்கிறது..”
“என்ன பத்து நாட்களில் அங்கு சென்றடைந்து விட முடியும்.. எனக்கு அங்கு சென்று பயிலவே விருப்பம்..”
“யிங்தாய்.. இனியும் உன் பிடிவாதத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. நீ அங்கேயே சென்று படிக்கலாம். ஆனால் அதற்கு ஒரு சில நிபந்தனைகளுக்கு நீ ஒத்துக் கொள்ள வேண்டும.;”
“அப்பா.. அனுமதி கொடுத்தால் மட்டும் போதும். நீங்கள் என்ன சொன்னாலும் அதை நான் செய்கிறேன்” என்று வாக்குக் கொடுத்தாள்.
“முதலாவதாக நானும் உன் தாயும் வயோதிகத்தில் இருப்பதால், நான் எப்போது உன்னைத் திரும்பி வரச் சொல்கிறேனோ.. அப்போதே மறுபேச்சில்லாமல் கிளம்பி வந்து விட வேண்டும். இரண்டாவதாக, நீ உயர்ந்த ஒழுக்கக்கட்டுப்பாட்டுடன் இருந்து உன் கன்னித் தன்மையைக் காத்துத் திரும்ப வேண்டும். இதற்கு ஒப்பினால்.. நீ படிக்கச் செல்லலாம்” என்று அரைமனத்துடன் சம்மதம் தெரிவித்தார்.
நிபந்தனையை ஏற்றுக் கொண்டாள் யிங்தாய். தன்னுடைய தந்தையின் மனமாற்றத்தைக் கண்டு பெருத்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கொண்டாள். உடனே தன் பயணத்திற்கான ஏற்பாட்டை கவனிக்கத் தொடங்கினாள்.
வீட்டை விட்டு வெளியே அடி எடுத்து வைக்கும் போதே, அவளும் அவளது தோழிப் பணிப்பெண்ணும் ஆண் ஆடைகளை அணிந்து வெளி வந்தனர் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
ஏழு எட்டு நாட்கள் நடை பயணத்திற்குப் பின், இருவரும் ஒரு ஓய்வுக் கூடத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கு உணவருந்தி விட்டு சற்றே இளைப்பாறினார்கள். அப்போது அங்கு ஒரு வாலிபன் வந்து சேர்ந்தான்.
வாலிபன் அவர்கள் இருவரிடமும், “ஐயா.. ஹாங்சாவ் செல்லும் வழி இதுவா?” என்று கேட்டான்.
தானும் அங்கேயே செல்ல இருப்பதாலும், வாலிபன் மிகவும் இளையவனாக இருப்பதால், அவனும் அங்கு படிக்கச் சென்றாலும் செல்லலாம் என்ற எண்ணத்தில் “ஆமாம்.. நானும் அங்கே தான் போகிறேன். அங்கே என்ன வேலையாகச் செல்கிறீர்கள்?” என்று யிங்தாய் கேட்டாள்.
படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டு, பற்பல கனவுகளுடன் ஹாங்சாவ் நகருக்கு பயணப்படும் அவன், இதைக் கேட்டதும் மிகுந்த உற்சாகத்துடன், “நான் என்னுடைய ஆசிரியர் மெங்கைச் சந்திக்கச் சென்று கொண்டிருக்கிறேன்..” என்று பணிவுடன் கூறினான்.
உடனே யிங்தாய் மட்டற்ற மகிழ்ச்சியுடன், “ஐயா.. நானும் அவரைச் சந்திக்கவே செல்கிறேன். அவர் தான் என்னுடைய ஆசிரியரும் கூட… வாங்சாங் கலாசாலையில் சேரப் போகிறேன்..” என்றாள் பெருத்த உற்சாகத்துடன்.
“உண்மையாகவா? அப்படியானால் மிக்க மகிழ்ச்சி.. என் பெயர் லியாங் ஷான்போ. நான் குவாய்ஜியிலிருந்து வருகிறேன். இனிமேல் நாம் எல்லோரும் சேர்ந்தே பயணம் செய்யலாமா?” என்று கேட்டான் ஷான்போ.
“நிச்சயமாக.. என் விருப்பம் அது தான்.. எனக்கும் மகிழ்ச்சி தான். என் பெயர் சூ யிங்தாய்..” என்றாள் அவன் சொன்னதை ஏற்கும் முகமாக.
இருவரும் சிறிது நேரத்திலேயே நெருங்கிய நண்பர்களானார்கள். பல பிறவிகளாக அறிந்தவர் போன்ற நெருக்கத்தை உணர்ந்தார்கள். அப்போதே இருவரும் ஒருவரை ஒருவர் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ள முடிவு செய்தனர். அதை உறுதிச் செய்ய இருவரும் மண்டியிட்டு விண்ணையும் மண்ணையும் சாட்சியாக வைத்துக் கொண்டு, உயிரோடு இருக்கும் வரை சகோதரர்களாக இருப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். அதன் பின் லியாங் ஷான்போவும் சூ யிங்தாய்யும் சேர்ந்தே ஹாங்சாவ் நகருக்குச் செல்லத் தயாரானார்கள். தங்கள் குரு மெங்கின் கல்விக் கூடத்தை நோக்கி பயணமானார்கள்.
மாலை மங்கிய பின் ஹாங்சாவ் நகரை அடைந்தனர். அவர்கள் கலாசாலையை வந்தடைந்ததும், குருவைச் சந்தித்தனர். இரவு உணவிற்குப் பிறகு இருவரும் தங்கும் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் ஆகி விட்ட படியால், இருவரும் ஒரே அறையைப் பகிர்ந்து கொள்ளச் சம்மதித்தனர். அறையில் ஒரேயொரு மெத்தை தான் இருந்தது. யிங்தாய் பெண் என்ற காரணத்தால், முதலில் இருவரும் ஒரே மெத்தையைப் பகிர்ந்து கொள்ள சற்றே தயங்கினாள். பின்னர், ஒரே மெத்தையில் இரண்டு போர்வைகளுடன் உறங்க முடிவு செய்தனர். அந்த இக்கட்டான சூழ்நிலையில், யிங்தாய்யிற்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. சமையலறைக்குச் சென்று, ஒரு கிண்ணத்தை கேட்டுப் பெற்றாள். அதில் தண்ணீரை நிரப்பி எடுத்து வந்தாள். அதைக் கட்டிலின் மத்தியில் வைத்தாள். காரணம் புரியாது விழித்தான் ஷான்போ. அவள் பெண் என்பது தெரியாத காரணத்தால், அவளது தயக்கற்குக் காரணம் புரியாமல் தவித்தான்.
“இப்போ என்ன செய்கிறாய் சூ.. எதற்கு மெத்தை மேல் தண்ணீர் கிண்ணத்தை வைக்கிறாய்? நாம் தூங்கும் போது தண்ணீர் கொட்டி விட்டால், மெத்தை நனைந்து விடாதா? என்ன விளையாட்டு இது.. ஆண்கள் இருவர் ஒரே மெத்தையில் படுக்க மாட்டார்களா என்ன?” என்று எரிச்சலுடன் கேட்டான்.
“எனக்கு இன்னொருவருடன் சேர்ந்து மெத்தையில் படுத்துப் பழக்கமில்லை.. இந்தத் தண்ணீர் கிண்ணம் நம் இருவரையும் அவரவர் பக்கத்தில் படுத்துக் கொள்ள பெரிதும் உதவும். இது சற்றே பொருத்தமற்றதாகத் தெரிந்தாலும், அப்படி இருந்தால் தான் என்னால் நிம்மதியாகத் தூங்க முடியும்” என்றாள் யிங்தாய். அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் ஷான்போ அன்றிலிருந்து யிங்தாய்யுடன் அப்படியே உறங்கக் கற்றுக் கொண்டான்.
ஒரு நாள் குரு மெங் தன் மாணாக்கர்களுடன் கன்பூசியசின் கொள்கைகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். இப்போது கன்பூசியஸ் பெண்கள் ஒரு பேரரசையே கவிழ்க்கும் அளவிற்கு கீழ்த்தரமான சூழ்ச்சி குணம் கொண்டவர்கள் என்று சொன்னதைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். இதைக் கேட்ட யிங்தாய்யிற்கு அடங்கா கோபம் ஏற்பட்டது. கன்பூசியசின் கூற்றுக்கு மறுப்புத் தெரிவித்தாள். கன்பூசியஸ் சீனாவில் மதிப்பிற்குரிய குருவாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அவர் என்ன சொன்னாலும் அது முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்த விசயத்திற்கு யிங்தாய் மறுப்பு சொன்னது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கன்பூசியசின் கருத்துக்கு எதிர் கருத்து கூறி யாரும் கேட்டதில்லை என்பதால் குருவிற்குமே சற்றே அதிர்ச்சியாக இருந்தது. அவள் அவ்வளவு வாதிட்ட போதும், அதிர்ஷ்டவசமாக யாரும் அவள் ஒரு பெண்ணாக இருக்கக் கூடும் என்று எண்ணியும் பார்க்கவில்லை.
காலம் வெகு வேகமாக உருண்டோடியது. மூன்று வருடங்கள் இருவரும் இணைந்து கல்வி கற்றனர். இந்தக் காலத்தில் யிங்தாய்யிற்கு ஷான்போவின் கல்வித் திறத்திலும் குணத்திலும் பற்று ஏற்பட்டு அது காதலாக மாறியிருந்தது.
யிங்தாய் ஷான்போவிடம் அன்புடன் நடந்து கொள்வது, சகோதரனாக ஏற்றுக் கொண்ட காரணத்தினால் தான் என்று முழுமையாக நம்பியிருந்த காரணத்தால், ஷான்போவிற்கு அவள் பெண் என்று சற்றும் ஐயம் ஏற்படவேயில்லை. மேலும் ஷான்போ மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற காரணத்தால், படிப்பிலேயே அதிக கவனம் செலுத்தி வந்ததால், யிங்தாய் செய்த குறும்புகளையெல்லாம் வேறு விதமாக யோசிக்கவும் அவனுக்குத் தோன்றவேயில்லை. அரசுத் தேர்வில் வெற்றி பெற்று நல்ல பதவி பெற வேண்டும் என்று ஒரே நோக்கில் முழு கவனத்தையும் படிப்பிலேயே செலுத்தினான்.
இந்த மூன்று வருடங்களில் யிங்தாய் பல விசயங்களை ஆசை தீர கற்றுத் தேர்ந்தாள். ஷான்போவின் மேல் காதல் இருப்பதை அவ்வப்போது வெளிக்காட்டிக் கொண்ட போதும், தந்தைக்குத் தந்த வாக்கினை முழுமையாக காக்க முயன்றாள்.
யிங்தாய்யிற்கு ஒரு நாள் பெற்றோரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. தாய்க்கு உடல் நிலை சரியில்லாததால் எத்தனை விரைவில் வர முடியுமோ, அத்தனை விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று தந்தை கடிதம் அனுப்பியிருந்தார். மேலும் படிக்க ஆர்வம் இருந்த போதும், தந்தையின் ஆணைக்குக் கட்டுப்பட்டாக வேண்டிய சூழ்நிலையில், உடனே தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு பயணத்தை மேற்கொள்ளத் தயாரானாள். குருவிடமும் தன்னுடைய சக நண்பர்களிடமும் விடை பெற்றாள். சகோதரனாக ஏற்றுக் கொண்ட ஷான்போவிற்கு பிரிவது சற்றே வருத்தத்தை ஏற்படுத்திய போதும், நெருங்கிப் பழகிய காரணத்தால் அவளை வழியனுப்ப சிறிது தொலைவு அவளுடனே பயணித்தான்.
அவர்கள் அப்படிச் சென்ற போது, வழியில் யிங்தாய் சூசகமாகப் பலமுறை தான் பெண் என்பதையும் அவனைத் தான் காதலிப்பதையும் கூற முயன்றாள். அவர்கள் ஒரு நதியைக் கடந்த போது, இரண்டு வாத்துக்கள் கொஞ்சிக் குலவிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அதைக் குறித்து யிங்தாய் கூறும் போது, “வாத்துகள் இரண்டும் நம் இருவரைப் போன்று இருக்கிறதல்லவா?” என்று கேட்டாள். ஷான்போ எப்போதும் எதையுமே நேரடியாகவே புரிந்து கொள்பவனாகையால், “அது எப்படி இருக்க முடியும். அவை இரண்டும் காதலர்களைப் போலல்லவா கொஞ்சிக் கொண்டு இருக்கின்றன. உன் உவமை தவறானது” என்று தன் கருத்தைக் தெரிவித்தான். அதேப் போன்று ஒரு கிணற்றைத் தாண்டும் போது, யிங்தாய் ஷான்போவை பக்கமாக அழைத்து, நீரில் எட்டிப் பார்க்கச் சொன்னாள். நீரில் தோன்றிய தங்கள் உருவங்களைக் காட்டி யிங்தாய், “அந்த இரு உருவங்களும் மணமகன் மணப்பெண் போல் இருக்கிறதல்லவா?” என்று கேட்டாள். ஷான்போ அதை வெறும் நகைச்சுவைத் துணுக்காக மட்டுமே எடுத்துக் கொண்டு கண்டு கொள்ளவில்லை. தான் எத்தனை தான் எடுத்துக் கூறி புரிய வைத்த போதும் புரிந்து கொள்ளாத வெள்ளை மனம் படைத்த ஷான்போவிடம், விடைபெறும் சமயத்தில் இறுதியாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே, “எனக்கு உடன் பிறந்த சகோதரி இருக்கிறாள். அவள் அச்சு அசல் என்னைப் போலவே இருப்பாள். நான் என் சகோதரியை உனக்கு மணம் முடிக்க விரும்புகிறேன். அதற்காக என் தந்தையிடம் பேசி வேண்டிய ஏற்பாட்டை நானே செய்ய விழைகிறேன். உனக்குச் சம்மதமா?” என்று கேட்டாள்.
“யிங்தாய்.. எனக்கு முழுச் சம்மதம். நீ என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் உன்னைப் போலவே இருக்கும் உன் சகோதரியை மணக்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை..” என்றான் மகிழ்ச்சியுடன்.
“அப்படியென்றால் எவ்வளவு விரைவில் வர முடியுமோ.. அவ்வளவு விரைவில் வந்து பெண் கேட்டு திருமணம் செய்து கொள்.. அது வரை இந்த மரகதப் பட்டாம்பூச்சி பதக்கத்தை, திருமண நிச்சயதார்த்தப் பரிசாக வைத்துக் கொள்” என்றாள் யிங்தாய்.
“நான் என்னுடைய அரசுத் தேர்வை முடித்து வேலையில் சேர்ந்ததுமே வந்து விடுகிறேன்.. போதுமா..” என்று தன்னுடைய வருங்கால திட்டத்தை எடுத்துச் சொன்னான். இருவரும் பிரிய மனமின்றிப் பிரிந்தனர். அதற்குப் பிறகு யிங்தாய் தாயின் உடல்நிலை எப்படி இருக்கிறதோ என்ற கவலையில் அதி வேகமாக பயணப்பட வேண்டிய ஏற்பாட்டினைச் செய்து விரைவில் வீடு திரும்பினாள்.
யிங்தாய் கவலையுடன் வீடு வந்து சேர்ந்த போது, பொதுவாக எல்லாக் கதைகளில் வருவதைப் போன்றே, தாய் நோய் பாதிப்பு ஏதுமின்றி சாதாரணமாக வலம் வருவதைக் கண்டு ஒரு புறம் மகிழ்ச்சி ஏற்பட்ட போதும், படிப்பை நடுவிலேயே விட்டு வந்ததற்காக வருந்தினாள் யிங்தாய். அவளது தந்தை, சான்யூ நகரின் ஆளுநரின் மகனாக மா வென்சாய்யுடன் யிங்தாய்யை மணம் முடிக்க பேச்சு வார்த்தைகள் செய்து கொண்டிருந்த படியால், அவளை அவசியம் வரச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான், இந்த வகையில் கடிதம் எழுதி, அவளை வர வைத்திருந்தார். படிப்பில் அதிகமான ஆர்வம் கொண்ட யிங்தாய் உண்மையான காரணத்தைச் சொன்னால் வருவாளோ மாட்டாளோ என்ற சந்தேகத்தினால், இப்படி அவரைச் செய்யத் தூண்டியது. யிங்தாய்யிற்கு திருமண விசயம் பேரதிர்ச்சியைத் தந்தது. சீனாவில் அந்தச் சமயத்தில் பெற்றோர் பார்த்து திருமணம் முடிக்கும் பழக்கமே இருந்து வந்தது. அதனால், யிங்தாய் எவ்வளவு மறுத்தும், அதற்குத் தந்தை ஒப்பவில்லை.
யிங்தாய்யை வழி அனுப்பி விட்டு, ஷான்போ கலாசாலைக்கு திரும்பினான். சில மாதங்களில் தேர்வினை நல்ல முறையில் எழுதி, நீதித் துறையில் வேலையையும் பெற்றான். உடனே யிங்தாய்யைச் சந்தித்து அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்பினான். அவளைச் சந்திக்க ஆவல் மேலிட சான்யூ வந்து சேர்ந்தான். சூவின் வீட்டைத் தேடிச் சென்றான். வீட்டில் ஏதோ விசேஷம் என்பதை வெளிக்காட்டும் விதமாக வீட்டின் வாயிலில் சிவப்புத் தோரணங்களும் விளக்குகளும் தொங்கிக் கொண்டிருந்தன.
ஷான்போ யிங்தாய்யைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதும், அவன் விருந்தினர் அறையில் அமர்த்தி வைக்கப்பட்டான். சில நொடிகளில் அச்சு அசலாக யிங்தாய் போன்றே ஒரு இளம்பெண் வந்து நின்றாள்.
“ஷான்போ.. நீ வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி..” என்றாள் அறைக்குள் வந்ததுமே.
ஷான்போ சில நிமிட மௌனத்திற்குப் பின், எப்படி யிங்தாய்யின் சகோதரி தன்னை அடையாளம் கண்டு கொண்டாள் என்ற சந்தேகத்துடன், “நீ தான் யிங்தாய்யின் சகோதரியா?” என்று வினவினான்.
ஷான்போவின் அதிர்ச்சிக்கு காரணம் முழுவதுமாக அறிந்த காரணத்தால், சின்ன புன்முறுவலுடன், “ஷான்போ உன்னால் என்னை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லையா? நான் தான் யிங்தாய்” என்றாள்.
ஷான்போ வாயடைத்து நின்றான். “அடடா.. நீ நம்மை ஆண் பெண்ணாக உருவகப்படுத்திப் பேசிய போதெல்லாம் என் முட்டாள் மூளைக்கு எட்டவேயில்லை. இப்போது எல்லாம் புரிகிறது” என்றான் ஷான்போ மிகுந்த மகிழ்ச்சியுடன்.
உடன் தன் மூன்று வருட நட்பு காதலாக மாறக் கண்டான் ஷான்போ. யிங்தாய்யின் காதலை ஏற்பதாகவும் உடனே கூறினான்.
அதற்கு பதிலேதும் சொல்லாமல், “ஷான்போ.. வா நாம் தேநீர் அருந்தலாம்..” என்று கவலை ரேகை படிந்த முகத்துடன் உபசரித்தாள்.
“ஆமாம்.. வந்ததுமே கேட்க வேண்டும் என்று எண்ணினேன்.. ஏன் உன் வீடு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது? வீட்டில் என்ன விசேஷம்?” என்று சாதாரணமாகக் கேட்டான்.
இதைக் கேட்டதும் யிங்தாய் தன்னை அடக்கிக் கொள்ள முடியாமல், கண்ணீர் மல்க, “என் தந்தை என்னை இவ்வூரின் ஆளுநர் மகனுக்கு மணம் முடிக்கப் பேசியிருக்கிறார். இன்று நிச்சயம் செய்யும் நாள். நீ என்னை பெண் கேட்க மிகுந்த காலம் தாழ்த்தி வந்திருக்கிறாய்..” என்றாள்.
ஷான்போவிற்கு இது பேரதிர்ச்சியைக் கொடுத்தது. தன்னுடைய மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட தங்காதது கண்டு, தன்னுடைய வாழ்க்கையில் ஒரு அரிய பொக்கிஷத்தை தவற விட்டதை எண்ணி, அதிர்ந்து, இரத்த அழுத்தம் தலைக்கேறி, வாய் வரை வந்து விட்ட இரத்தத்தை கட்டுபடுத்த முயன்றான். அவன் அதை வெளியே துப்பும் முன்பு, அவனது பணியாள், அவனுக்கு உதவினான். மிகுந்த பலகீனத்துடனும் ஏமாற்றத்துடனும், ஷான்போ இனியும் இங்கே இருப்பது நல்லதல்ல என்று அங்கிருந்து கிளம்ப விரும்பினான். புறப்படுவதற்கு முன்பு, “நாம் இருவரும் மூன்று வருடங்கள் இஷ்டம் போல் மகிழ்ச்சியுடன் இருக்கும் பேரதிர்ஷ்டம் நமக்கு இருந்தது. ஆனால் விதி நம்மை கணவன் மனைவியாக மட்டும் சேர்க்க விரும்பவில்லை போலும்” என்று கூறிவிட்டுச் சென்றான்.
ஷான்போவின் ஏமாற்றத்தையும், மோசமான உடல் நிலையையும் கண்ட யிங்தாய் முழுவதுமாக மனமுடைந்து போனாள்.
ஷான்போ வீடு திரும்பிய பின்னால், யிங்தாய் நினைவினால் உடல்நிலை சீர் பெற முடியாமல் தவித்தான். கவலையினால் ஒரே மாதத்தில் இறந்தும் போனான். அவன் இறக்கும் தருணத்திலும் கூட, யிங்தாய் கொடுத்த மரகதப் பட்டாம்பூச்சிப் பதக்கத்தை கையில் ஏந்திய வண்ணமே உயிரை விட்டான்.
ஷான்போவின் பணியாள் உடனே சேதி தெரிவிக்க யிங்தாய் வீட்டிற்கு ஓடினான். செய்தியைக் கேட்டதும், யிங்தாய் தான் தான் ஷான்போவின் இறப்பிற்குக் காரணம் என்ற குற்ற உணர்வாலும், கவலையாலும் வருந்தினாள். அதிகக் கவலையினால் தன்னை ஒரு அறையில் அடைபடுத்திக் கொண்டு, யாருடனும் பேசாமல் தனித்து இருக்க ஆரம்பித்தாள். யிங்தாய்யின் இந்தப் போக்கைக் கண்ட பெற்றோர், வெகு சீக்கிரம் திருமணம் செய்வது அவளுக்கு நல்லது என்று முடிவு செய்து மண நாளை வேகமாகக் குறித்தனர்.
மணநாளும் வந்தது. யிங்தாய் மணப்பெண் உடையை அணியவும் மறுத்தாள். தந்தையுடன் பெருத்த விவாதத்திற்குப் பிறகு, யிங்தாய், தான் மணமகன் வீட்டிற்குச் செல்லும் வழியில் இருந்த ஷான்போவின் கல்லறைக்குச் செல்ல அனுமதி தந்தாலொழிய திருமணத்திற்கு ஒப்ப மாட்டேன்” என்று வீம்பாக நின்றாள். தந்தையும் வேறு வழியின்றி அனுமதி தந்தார்.
யிங்தாய் மணப்பெண்ணிற்கான அழகிய சிவப்பு உடைக்குள் ஒரு வெள்ளை ஆடையை அணிந்து கொண்டாள். மணமகன் வீட்டிற்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட பல்லக்கில் ஏறி அமர்ந்தாள். ஊர்வலம் ஷான்போவின் கல்லறைக்கு அருகே சென்ற போது, தந்தையின் திட்டப்படி நிற்காமல் செல்ல எத்தனித்தது. ஆனால் அப்போது ஒரு பெரும் காற்று வந்து அவர்களை மேலே செல்ல விடாமல் தடுத்தது.
பல்லக்கிலிருந்து இறங்கிய யிங்தாய் தன் சிவப்பு ஆடையைக் கழற்றி விட்டு வெள்ளை ஆடையுடன் ஷான்போவின் கல்லறையைத் தேடிச் சென்றாள். கல்லறைக் கண்டதும் தன்னுடைய சுயநினைவினை இழந்து, கல்லறையை கட்டிப்பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள். அப்போது திடீரென்று பலத்தக் காற்றுச் சுழியென்று வானில் தோன்றி, மின்னல் வெட்டியது. கல்லறை அப்படியே திறந்தது. இதைக் கண்ட யிங்தாய் சற்றும் யோசியாமல், கல்லறைக்குள் குதித்தாள். நொடியில் கல்லறை மூடிக் கொண்டது. கண் சிமிட்டித் திறக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து விட்டது. அருகே நின்றிருந்த பணிப்பெண்ணால் அவளைக் காப்பாற்ற முடியாமல் போனது.
சில நிமிடங்களில், வானம் தெளிந்தது. யிங்தாய்யைக் காக்கும் முயற்சியில், பணிப்பெண் கல்லறையைத் தோண்ட முயன்றாள். ஆனால், திடீரென்று அவளை ஏதோ சக்தி மயக்கி சிலை போன்று நிற்கச் செய்தது. கல்லறையிலிருந்து இரண்டு பட்டாம்பூச்சிகள் வெளியே வருவதைக் கண்டாள் பணிப்பெண். அவை இரண்டும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரவரித்துப் பறந்தன. இனி எப்போதும் இணை பிரிய மாட்டோம் என்று கட்டியம் கூறுவது போல் பறப்பதாக அவளுக்குத் தோன்றியது.
- அத்தியாயம் 5 திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும்
- கம்மங்கதிரின் வாசத்தோடு – குமாரகேசனின் ” வண்டிப்பாதை ” நாவல்
- மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 73 (1819-1892) தத்துவ அறிவுக் கெல்லாம் மூலம்
- பசிமறந்து போயிருப்போம்
- தொடுவானம். 14. பதினைந்து வயதினிலே
- நிவிக்குட்டிக்கான கவிதைகள்
- பயணச்சுவை ! வில்லவன் கோதை 4 . நீரின்றி அமையாது
- திண்ணையின் இலக்கியத் தடம்- 33
- நீங்காத நினைவுகள் – 44
- சுயத்தைத்தேடி ஒரு சுமூகப்பயணம்.
- சீன காதல் கதைகள் -2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்
- திரை ஓசை வாயை மூடி பேசவும்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) -2
- அது அந்த காலம்..
- பத்மநாபபுரம் அரவிந்தன் கவிதைகள்
- வேள்வி
- தினம் என் பயணங்கள் -15 நமது சுதந்திர நாடு
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். பூமியின் காந்தத் துருவங்கள் அடுத்து எப்போது திசை மாறப் போகின்றன ?
- ஒரு கலைஞனின் கதை – சி.மோகனின் ’விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்’
- விபத்து
- திசையறிவிக்கும் மரம்
- அடையாளம்
- ’ரிஷி’யின் கவிதைகள்
- மூளிகள்
- உஷாதீபனின் 13-வது சிறுகதைத் தொகுப்பு “நான் அதுவல்ல…!” – நூல் மதிப்புரை
- திரை விமர்சனம் நீ எங்கே என் அன்பே
- திரைவிமர்சனம் என்னமோநடக்குது
- களிப்பருளும் “களிப்பே”!
- குமரிக்கண்டமா சுமேரியமா? – பா.பிரபாகரன் நூல்:
- வாழ்க்கை ஒரு வானவில் – 1 (ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் புதிய தொடர்)