சுயத்தைத்தேடி ஒரு சுமூகப்பயணம்.

author
0 minutes, 4 seconds Read
This entry is part 1 of 31 in the series 4 மே 2014

நாகபிரகாஷ்

டேவிட் ஜி மேயர்ஸ் என்ற சமூக உளவியல் அறிஞர் தன்னுடைய மனித இனத்தின் மகிழ்ச்சியைப்பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரைத் தொகுப்பின் உபதலைப்புக்கான தேடலைப்பற்றி ஒரு இதழில் குறிப்பிட்டிருந்தார் “மனிதர்களை எவை மகிழ்விக்கிறது? – என்பதை பயன்படுத்தலாமா என்று ஆசிரியர் கேட்டார். ஆனால் அது இந்த புத்தகமும் சரி, எந்த புத்தகமும் சரி பதில் தரமுடியாத கேள்வி என்றேன். நாம் அறிந்ததெல்லாம் சாதாரணமாக எது மகிழ்ச்சியோடு சம்மந்தப்பட்டிருக்கிறது என்றும் எது மகிழ்ச்சியைத் தரக்கூடும் என்பதுதான். அதனால் அந்தத் தலைப்பு – யார் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள், ஏன்? என்பதாக மாற்றப்பட்டது.”

உண்மையில் பல்வேறு உளவியல் கருத்துக்கள் இதைப்போன்றவொரு பதிலைக்கொண்டதுதான். சுயமதிப்பீடு (Self-Esteem) சார்ந்த சிந்தனைகளையும் இதைப்போன்ற ஒரு பார்வையில்தான் பார்த்தாகவேண்டும். சதாரணமாக நமது சுயத்தைப்பற்றிய அறிதல்கள் வெறும் புரிதல்களாகவே பார்க்கப்படுகிறது அது ஒருவிதத்தில் உண்மையும் கூட. ஆனால், உளவியலின் கூற்றுப்படி அது நம் வாழ்வையே தீர்மானிக்கும் முதல் காரணி. இதை விளங்கிக்கொள்வது ஒன்றும் நமக்குக் கடினமில்லை.

நம்மைப்பற்றி நாமே ஆராய்ந்து நான் இப்படித்தான் என்று முடிவுகட்டி வைத்திருப்பதுதான் சுயமதிப்பீடு என்று ஒற்றைவரியில் சொல்லிவிடலாம்தான் ஆனால் அதுமட்டுமல்லாமல் பல விஷயங்களில் உங்களின் சிந்தனையென்பதே இந்த முடிவுகட்டுதலுக்கு தேவைப்படாத ஒன்று. உங்கள் உள்மனது அந்த வேலைகளை கவனிக்கிறது (Sub-Consciously, Implicitly) என்று சொல்கிறார்கள், பெரியவர்கள் சொல்லும் மனசாட்சியாகவும் கொள்ளலாம்.

தனியொருவன் தன் குடும்ப சமூக கலாச்சார மற்றும் சார்ந்திருக்கும் குழு வழக்கங்கள் அல்லது சட்டங்களை மதித்து நடப்பது, மற்றவர்களின் அவனைப்பற்றிய புரிதல்கள், எதிர்வினைகள் மற்றும் கருத்துக்கள் போன்றவற்றில் அவனில் நிலைப்பாட்டைப்பற்றிய தரஅளவீட்டை நிகழ்த்தி அதைப்பொருத்தே உயர்ந்த சுயமா (Higher Self-Esteem) அல்லது தாழ்ச்சியான சுயமா (Lower Self-Esteem) என்ற முடிவுக்கு வரமுடியும். அதனுடன் இதில் நம்முடைய அழகு அறிவு நல்லசெயல்பாடு என மேலும்பல இதைப்போன்றவையும் சம்மந்தப்படுகிறது, அன்றைய தினத்து உடை அழுக்கா? கொஞ்சமாக சுயமதிப்பீடு காலி.

தோல்வியைக்கண்டு மலைக்காமல் தயங்காமல் அடுத்த அடியை பலமாக எடுத்துவைப்பது உயர்-சுயமதிப்பீடு கொண்டு சிறப்பவர்கள் மட்டும்தான். அதிகப்படியான மகிழ்ச்சியோடு நல்லவாழ்க்கையை வாழ்வதும் ஆரம்பம் தொட்டே உயர்ந்த-சுயமதிப்பீடு கொண்டவர்கள்தான். அவர்கள் நெர்மறைக்கு நேர்மாறானவற்றை யோசிப்பதும் இல்லை அதனால் வாழ்வில் யாரிடமும் யாசிப்பதும் இல்லை. நிலையான மனநிலையை இவர்கள் கொண்டிருப்பதோடு மற்றவர்களையும் முன்னேற்றத் துடிக்கிறார்கள். பொதுவாகவே கொஞ்சம் கோபக்காரர்கள் இவர்கள்.

என்னதான் ஆகிறார்கள் சுயமதிப்பீட்டில் முற்றிலும் குறைந்தவர்கள்? அவர்கள் இங்கு சுயமரியாதைக்காகவே போராடித் தீரவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள். விவாதப் பொருளாவது என்றாவது நடக்கும், அவர்களின் தற்கொலையைப் பற்றிய விவாதம். சாதாரண வார்த்தைகளாலேயே அவர்களுக்குள் வெறியைத் தினித்து வெடிகுண்டாக்க முடியும், பொதுவுக்கு நாசம் நிச்சயம்.

அங்கிருப்பவர்கள் வெளியே வந்துதான் தீரவேண்டும். போதைக்கு அடிமையாவது, அடிப்படைத் தேவைகளுக்கே உழைக்க முடியாமல் போவது, அதிகப்படியான மனஅழுத்தம் மற்றும் பிரச்சனைகள் என வாழ்கிறார்கள். நமக்குள் நாம் நமக்காக மட்டுமில்லாமல் பொதுவாகவே உயர்ந்தவர்களாக வாழும்போதுதான் வாழ்வு தொடங்குகிறது, உலகம் இனிக்கிறது.

உயர்-சுயமதிப்பீடு கொண்டவர்களுக்கு சிக்கலே இல்லாத வாழ்க்கை என்று மட்டும் மூடித்துவிட முடிவதில்லை. நான் வளர்க்கும் நரிக்கு நான்கு காதுகள் என்பவர்களைப்பற்றி நாம் பேசவே இல்லை. ஆமாம் அவர்களும் உயர்-சுயமதிப்பீடு கொண்டவர்கள்தான், என்ன மனித கணக்குவழக்குக்குள் அடங்காத அளவு அதீத-சுயமதிப்பீடு (Narcissism) கொண்டவர்கள் அவர்கள். இந்த வேறுபாட்டை நாம் புரிந்தே ஆகவேண்டும்.

தலைக்கனம் கூடாது என்று முதுமக்கள் இடித்துரைத்ததெல்லாம் இதைப்பற்றித்தான். மற்றவர்களைப் பற்றி கவலைப்படாத பிறவிகள் என்பதாலேயே மற்றவர்கள் இவைகளைப்பற்றி மன்னிக்கவும் இவர்களைப்பற்றி கவலைப்படுவதில்லை. தேவையற்ற மணமுறிவுகளின் இயக்குனர்களும் இயங்குனர்களுமாக இருப்பது இவர்கள்தான், கோபத்தில் கொதிப்பது சாதாரண செயல் இவர்களுக்கு.

சுயத்தைத் தேடுவோம். ஒன்றுமட்டும் நிச்சயம், தேடிக்கண்டவருடைய பாதைகள் நமக்கானது அல்ல.

– நாகபிரகாஷ்

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *