காணாமல் போன கவிதைகள் (கவிதை தொகுப்பு)
நெப்போலியன்.
விமர்சனம் – இமையம்.
தமிழில் கவிதை புத்தகங்கள் விற்பனை ஆவதில்லை என்று சொல்லப்படுவது நிஜமல்ல. தமிழில் ஆண்டுக்கு குறைந்தது இருநூறு முதல் முந்நூறு கவிதை தொகுப்புகள் வெளிவரும் நிலையில் கவிதை தொகுப்புகள் விற்பனை ஆவதில்லை என்று கூறுவதை ஏற்பதற்கில்லை. கவிதை படிப்பதும், கவிதை எழுதுவதும் சமூகம் சார்ந்த செயல். சமூகம் சார்ந்த சிந்தனை, அக்கறை, ஈடுபாடு, கவலை. கவிதையை எழுதுவதும் படிப்பதும்தான் முக்கியமானது. விற்பனை அல்ல. உலகில் விற்பனைக்கு எவ்வளவோ இருக்கிறது. விற்பனைக்கான பொருள்களின் பட்டியலில் கவிதை நூல்கள் இல்லாமல் இருந்தால்தான் கவிதைக்கு மதிப்பு. ஒரு கவிஞனின் சிந்தனையும் ஒரு கம்பெனியின் முதன்மை நிர்வாகியின் சிந்தனையும் ஒன்றல்ல. அறிவை, சிந்தனையை, அன்பை எதன் பொருட்டு விற்கிறோம்? நெப்போலியன் தன் கவிதைகளை விற்பனைக்காக, புகழ் பெறுவதற்காக, கவிஞர் என்ற அடையாளத்திற்காக எழுதியது மாதிரி தெரியவில்லை. மாறாக அவருடைய எழுத்தை சமூக அக்கறை, கரிசனம் என்று சொல்ல முடியும்.
நெப்போலியனின் கவிதைகள் புது உத்தி, சோதனை முயற்சி, சிடுக்கான வாக்கியம், புரியாத தன்மை, மொழி அலங்காரம், ஆங்கிலப் படிப்பின் அகங்காரம் என்று எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. எல்லா படைப்புகளின் நோக்கமும் கருத்து பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். பிரச்சாரம் எல்லை தாண்டாமல் பார்த்துக்கொள்வதில் கவிஞனின் படைப்புத்திறன் அடங்கியிருக்கிறது. ஒரு மதபோதகரின் பிரச்சாரத்திற்கு, ஒரு சாதியவாதியின் பிரச்சாரத்திற்கு, பிற்போக்குவாதியின் பிரச்சாரத்திற்கு நேரெதிரானது ஒரு கவிஞனின் பிரச்சாரம். அந்த பிரச்சாரத்தில் நெப்போலியன் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார்.
நெப்போலியனின் காணாமல் போன கவிதைகள் – தொகுப்பில் சுருக்கமாக பேசுகிறார். அதையும் நேரிடையாக பேசுகிறார். தற்காலக் கவிதைக்கான உயர்ந்த குணங்கள் என்று போற்றப்படுகிற பூடகம், புதிர், மாயத்தன்மை, விளங்காத தன்மை, நவீனத்துவ கோசம் என்று எந்த வேடிக்கையையும் காட்டாமல் எழுதப்பட்ட கவிதைகள். மனதில் பட்டதை மட்டும் நெப்போலியன் எழுதவில்லை. சமூகத்திற்கு எது தேவையோ, எதை சொல்ல வேண்டுமோ அதைத்தான் கவிதைகளாக்கி இருக்கிறார். கவிதையை தனக்கு பரிச்சயமான மொழியில் எழுதியிருக்கிறார். கவிதைக்கு இதுவும் ஒரு அழகுதான். வெளிப்படையான தன்மை கவிதைகளின் பலகீனம் என்று சொல்ல முடியாது. யாருக்கும் புரியாத இருண்மை தன்மைகொண்ட கவிதைகளை எழுதுவதில் பெருமையும் இல்லை. எல்லாருக்கும் புரியும் கவிதை எழுதுவது சிறுமையும் இல்லை. மொழியின் எளிமை குறித்து நமது பார்வை சரியானதாக இல்லை. எளிமையாக சொல்வதையும் நேரடியாக சொல்வதையும்- எளிமையின் வலிமை புரியாமல் இளக்காரமாகப் பார்க்கவும் பேசவும் பழகியிருக்கிறோம். பழமையானது, காலாவதியானது என்று நாம் நம்பும் நம்பிக்கை பிழையானது. வடிவ ரீதியான பரிசோதனைக்காக நெப்போலியன் கவிதைகளை எழுதவில்லை. மாறாக முற்றிலும் நகரமயமான வாழ்வின் நெருக்கடிகள், நவீன வாழ்வின் அபத்தங்கள் இக்கவிதைகள் எனலாம். தான் பார்த்ததை, அனுபவித்ததை, வாழ்ந்ததை எழுதியிருக்கிறார்.
இலக்கியப் பரிச்சயம் இருக்க வேண்டும். கவிதைகளைப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்களால் என் கவிதையைப் படிக்க முடியாது. என் கவிதையைப் புரிந்து கொள்ள முடியாது. நான்கு ஐந்துமுறை படித்தால்தான் என்கவிதை புரியும் என்று சொல்கிற கவிஞர் அல்ல நெப்போலியன். புரியாத கவிதைகள் நிறைந்த தொகுப்புமல்ல காணாமல் போன கவிதைகள். நெப்போலியனின் கவிதைகள் கற்பனையை மாய உலகத்தை, இழந்த பொன்னுலகத்தை, வரப்போகிற பொன்னுலகத்தைப் பேசவில்லை. மாறாக நிகழ்காலச் சமூகச் சிக்கல்களைப் பேசுகிறது. அறிவியலைப் பேசுகிறது. இன்று நாம் நம்முடைய பெருமையாகப் பேசுகிற, விளம்பரப்படுத்திக்கொள்கிற, சாதி, மத, இன அடையாளங்கள் உண்மையில் பெருமைப்படக்கூடியதுதானா என்று ‘ஆறாம் அழிவு‘ என்ற கவிதை கேள்வி எழுப்புகிறது. விந்து யாரோ கொடுக்கிறான். கருமுட்டை யாரோ கொடுக்கிறார். விந்துவையும் கருமுட்டையையும் யாரோ ஒருத்தி தன் கர்ப்பப்பையில் வைத்து வளர்த்து கருவாக்கி, உயிராக்கித் தருகிறாள். குழந்தை உருவாவதற்கு முதலீடு போட்டவரிடம் குழந்தையை ஒப்படைத்ததும் – அந்த குழந்தைக்கு சாதி வந்து விடுகிறது, மதம் வந்து விடுகிறது, இன அடையாளம் வந்துவிடுகிறது. இது எப்படி நிகழ்கிறது என்பதுதான் ஆறாம் அழிவு கவிதை. நம்முடைய சமூகம் யாரையெல்லாம் சமூக விரோதிகள், கொள்ளையர்கள் என்று சொல்கிறது? சொல்லியது? சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட, சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனையும், சம்பல் பள்ளத்தாக்கு பூலான்தேவியையும் கொள்ளையர்கள் என்று சமூகமும், ஊடகங்களும் அடையாளப்படுத்தின. வீரப்பனும், பூலான் தேவி மட்டும்தான் கொள்ளையர்களா? வாழ்வில் ஒருபோதும் சிகப்பாக மாறவே முடியாது என்று தெரிந்தும் – சிகப்பாக மாற முடியும் என்று கிரீம் தயாரிப்பவர்கள், அதை விளம்பரப்படுத்துகிறவர்கள் யார்? விவசாய நிலங்களையெல்லாம் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றிக் கொண்டிருப்பவர்கள் யார்? நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களை நடத்திக்கொண்டிருப்பவர்கள் யார்? முற்றும் துறந்த சாமியார்கள், துறவிகளுக்கு எப்படி உலக நாடுகளில் யோகா கிளைகளும் கோடிக் கணக்கில் சொத்துகளும இருக்கின்றன? தங்க கட்டிகளை படுக்கையில் படர்த்தி வைத்து தூங்கியது யார்? மூன்று நான்கு தொலைக்காட்சி சேனல்களை யார் வைத்திருக்கிறார்கள்? உண்மையான கொள்ளைர்கள் யார்? உண்மையான சமூக விரோதிகள் யார்? என்று ஒரு கவிதை கேட்கிறது. கற்பனையை எழுதுகிற எழுத்தைவிட நிஜத்தை எழுதுகிற எழுத்துக்கு அதிக வலிமை உண்டு. இப்படி வலிமை நிறைந்த கவிதைகள் என்று வேடம், ஆத்தா, காயம், நாற்காலி, வாசல், நிறம், விளிம்பு, கறியாடுகள், மாற்றத்தின் காற்று என பல காணாமல் போன கவிதைகள் தொகுப்பில் இருக்கின்றன.
நம் நாட்டில் முதியோர் இல்லங்கள் ஏன் நாளுக்குநாள் பெருகியபடியே இருக்கின்றன என்று ஒரு கவிதை கேட்கிறது. படித்த, நாகரீகமடைந்த, பண்பாட்டில் சீர்பெற்ற, பொருளாதார மேம்பாடு பெற்ற சமூகத்தில் முதியோர் இல்லங்கள் எப்படி உருவாக முடியும்? எது படித்த சமூகம், எது நாகரீகச் சமூகம், எது அறிவார்ந்த, பண்பாட்டில், நாகரீகத்தில் சீர்பெற்ற சமூகம் என்று கேட்பதற்காகத்தான் நெப்போலியன் கவிதையே எழுதியிருக்கிறார். கவிதைகள் ஏன் எழுதப்படுகின்றன, ஏன் படிக்கப்படுகின்றன என்பதற்கு சாட்சிகளாக பல கவிதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன.
வார்த்தைகள், சொற்கள் என்பது எவ்வளவு முக்கியமானது? சொற்களின் இயல்பை, தன்மையை, அதன் உண்மையான பொருளை உணர்ந்துதான் பேசுகிறோமா, எழுதுகிறோமோ என்று ஒரு கவிதை கேட்கிறது. குறிப்பாக கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகக்காரர்கள் சொற்களை சரியான பொருளில் சரியான விதத்தில்தான் பயன்படுத்துகிறார்களா? இன்று சராசரியாக ஒரு தமிழ் குடும்பத்தில் ஒரு நாளில் மட்டும் ‘சூப்பர்‘ என்ற சொல் குறைந்தது ஐநூறு முதல் ஆயிரம்முறை உச்சரிக்கப்படுகிறது. இப்படியான சமூகம் மொழியின் வளமை குறித்து பெருமை குறித்து பேசமுடியுமா என்று நெப்போலியனின் கவிதை ஒன்று கேட்கிறது. மொழிக்கான வளம், வலிமை என்பது அதன் இலக்கிய படைப்புகள்தான். இலக்கிய படைப்புகள் தரமாக இல்லாதபோது மொழி மட்டும் வளமாக இருக்குமா? இப்படி காணாமல்போன கவிதைகள் தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையும் நிகழ்கால சமூகத்தின் மிகவும் சிக்கலான பிரச்சினைகளையே மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. முக்கியமாக முந்தைய தலைமுறையினருக்கும், இன்றைய தலைமுறையினருக்குமான மனவேறுபாடுகள், அம்மாக்கள் அனாதைகளாக்கப்படுவது, அறிவியலும், பணமும், நாகரீகமும் எவ்வாறு மனிதர்களை தனித்தனி தீவுகளாக்குகிறது என்பதெல்லாம் வலியோடு பேசப்பட்டுள்ளது. நகர வாழ்வின் சிக்கல்களில் ஊழலும் மனதின் அவஸ்தைகள்தான் நெப்போலியனின் கவிதைகள். நகர மயம், தொழில் மயம், நவீன மயம், உலக மயம் என்பதெல்லாம் எப்படி மனிதர்களை தனித்த அடையாளமற்றவர்களாக, பணம், பொருள் என்பதைத்தாண்டி சிந்திக்க மறந்தவர்களாக, சுய அடயாளங்களை துறந்தவர்களாக எப்படி மாற்றியிருக்கிறது? மனிதனும் இன்று ஒரு பொருள்தான், பொருள்களை மட்டுமே தேடுகிற மனிதன், என்று ஒரு கவிதை நிரூபிக்க முயல்கிறது.
இதெல்லாம் முக்கியமான விஷயமா என்று நாம் எளிதில் ஒதுக்கித்தள்ளி விடுகிற, புறக்கணித்துவிடுகிற, அலட்சியப்படுத்துகிற பல விஷயங்கள்தான் நெப்போலியனின் கவிதைக்கான மையமாக இருக்கிறது. நிகழ்கால பிரச்சினைகளை மட்டுமே பேசுவது இத்தொகுப்பின் சிறப்பு. கவிதைகளுக்கான வடிவத்தை கவிதைகளே முடிவு செயதிருப்பது மற்றொரு சிறப்பு. தனி மனிதனின் கண்ணீரைவிட, துயரத்தைவிட, இழப்பைவிட சமூகத்தின் கண்ணீர், துயரம், இழப்பு முக்கியமானது. நிஜமான கலைஞன் தனிமனித புலம்பல்களை, சோகங்களை எழுதமாட்டான். மாறாக சமூகத்தையே எழுதுவான். அந்த வகையில் நெப்போலியன் சமூகத்தின் எழுத்தாளராக இருக்கிறார்.
காணாமல் போன கவிதைகள் புத்தகம் கண்களிலிருந்து மறைந்து போகலாம். கவிதைகள் மனதில் நிற்கும்.
காணாமல் போன கவிதைகள்
(கவிதை தொகுப்பு)
நெப்போலியன்.
தங்கத்தாய் வெளியீடு,
புளோக் 101, #02 – 318 , போத்தோங் பாசிர் அவென்யூ 1,
சிங்கப்பூர் – 350101
- மனிதர்களின் உருவாக்கம்
- ஆரண்யகாண்டம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 74 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 என்னைக் கவர்ந்த புதியவன் நீயா ?
- ”மென்மையானகுரலோடு உக்கிரமானசமர்” -நா. விச்வநாதன்
- மாணவர்களுக்கு மொழிப் பயிற்சியும் துறைசார்ந்த அறிவும்
- கடற்புயல் நாட்கள்
- 2014 ஏப்ரலில் பூதச் செர்ன் அணு உடைப்பு யந்திர விஞ்ஞானிகள் புதிய அணுக்கருத் துகள் ஒன்று கண்டுபிடிப்பு
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 3
- காணாமல் போன கவிதைகள் (கவிதை தொகுப்பு) நெப்போலியன். விமர்சனம் – இமையம்.
- எங்கெங்கும்
- தினம் என் பயணங்கள் -16 என் கனவுகள்
- தாரிணி பதிப்பகம் மற்றும் ஹார்ட் பீட் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் கவிதைப் போட்டி
- பிரசாதம்
- நீங்காத நினைவுகள் 45
- துளிவெள்ளக்குமிழ்கள்
- பயணச்சுவை ! வில்லவன் கோதை 5 . மின்வாரியத்தின் முத்துக்கள் !
- அத்தியாயம்…6 திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும்
- வேட்பு மனுவில் தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும்.
- தொடுவானம்
- வாஸந்தியின் நாவல் “விட்டு விடுதலையாகி”
- தாஜ்மஹால் டு பிருந்தாவன்
- நிலம்நீர்விளைச்சல்
- இலக்கிய நிகழ்வு சுஜாதா விருது விழா
- திரைவிமர்சனம் போங்கடிநீங்களும்உங்ககாதலும்
- தீபாவளிக்கான டிவி புரோகிராம்
- நரை வெளி
- கண்ணகியும் , காங்கேயம் கல்லும்: இரா. முருகவேளின் “ மிளிர்கல் “ நாவல்
- சீன காதல் கதைகள் 2. இடையனும் நெசவுக்கன்னியும்
- திரைப்படங்களில் அனிமேஷன் தொழிற்நுட்பம்:ஒரு பார்வை
- ‘அசோகனின் வைத்தியசாலை’ நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை
- யாருமற்ற சொல் – கவிஞர் யாழன் ஆதி
- திண்ணையின் இலக்கியத் தடம்-34
- வாழ்க்கை ஒரு வானவில் அத்யாயம் 2