தாரமங்கலம் வளவன்
‘அன்ன பூர்ணியம்மாள் நினைவு பெண்கள் மன நல காப்பகம்’ என்ற அந்த பெயர் பலகையை பார்த்ததும், ஆட்டோவை நிறுத்தச் சொல்லி ஆட்டோ டிரைவருக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டு இறங்கினாள் லதா.
சற்று தள்ளி, சாலையின் ஓரமாக, அவள் பணி புரியும் அந்த டிவி சேனலின் வேன் நின்று கொண்டிருந்தது. கேமராமேன் ரமேஷ் தன் கேமரா, ஸ்டாண்ட் மற்றும் வீடியோ பதிவுக்கான பைகளை எடுத்துக் கொண்டு இருந்தான்.
ஆட்டோவில் வந்ததினால் அவளுக்கு முடி கலைந்து முகம் வியர்த்து இருந்தது.
மேக்கப்பை டச் அப் செய்து கொண்டாள்.
காம்பவுண்ட் கேட்டுக்கு உள்ளே, பச்சை நிற கவுன் அணிந்து, கிராப் வெட்டப் பட்ட பெண்கள், புல் வெளிகளில் நடந்து கொண்டிருந்தார்கள். சிலர் ஆங்காங்கே இருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள்.
அவள் எதிர்பார்த்ததிற்கு மாறாக, அந்த இடம் அமைதியாக இருந்தது.
ரமேஷ் அவளைப் பார்த்து,
“ இந்த பைத்தியக் கார பொண்ணுங்களுக்கு எண்ணெய் தேய்ச்சு குளிக்க வைச்சு, ஒரு புரோகிராம் எடுத்துக்கிட்டு வரணுமாம்…. தீபாவளிக்கான ஸ்பெஷல் புரோகிராமா அதை நம்ம டிவியில போடப் போறாங்களாம்..”
அவனுடைய இந்த பேச்சுக்கு அவள் புன்னகைப்பாள் என்ற நம்பிக்கையில் அவள் முகத்தை பார்த்தான்.
லதா கண்டு கொள்ளவில்லை.
“ உள்ளே இருக்கிறவங்களுக்கு கொடுக்கறதுக்கு ஸ்வீட்ஸ், துணிமணிங்க கொடுத்து அனுப்பி இருக்காங்க. கையில எடுத்துக்கலாம்.. நல்ல வேளை, பைத்தியங்களுக்கு பட்டாசு மட்டும் கொடுக்கல வெடிக்கறதுக்கு…” என்றான் ரமேஷ்.
இதையும் அவள் ரசிக்கவில்லை.
ஆஸ்பத்திரிக்கு உள்ளே போகலாம் என்று அவள் முடிவு செய்து இரண்டு அடி வைத்த போது, திடீரென்று அந்த கட்டிடத்தின் உள்ளே இருந்து, ஒரு பெரிய அலறல் கேட்டது.
உடனே எல்லோரும் அந்த அலறல் வந்த இடத்தை நோக்கி ஓடுவதும் தெரிந்தது.
அதை தொடர்ந்து, யாரையோ அடிக்கும் சத்தமோ, மிரட்டும் சத்தமோ கேட்டது.
லதாவுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது
அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
இந்த சமயத்தில் டிவி நிகழ்ச்சி எடுக்க உள்ளே போவது சரியா என்று தோன்றியது.
வாட்சு மேனிடம் சென்று,
“ நாங்க ஏற்கனவே பர்மிஷன் வாங்கிகிட்டு தான் வந்திருக்கோம்.. இருந்தாலும் இந்த சமயத்தில உள்ளே போக எங்களுக்கு விருப்பமில்ல… நாங்க வந்திருக்கிறோம்ங்கிறத மட்டும் இண்டர் காமில போன் பண்ணி சொல்லிடுங்க.. நெலம சரி ஆனதும் கூப்பிடச் சொல்லுங்க. அது வரைக்கும் வேன்ல வெயிட் பண்ணறோம்..” என்று சொல்லி விட்டு வேனுக்கு திரும்பி வந்தாள் லதா.
லதா வந்து உட்கார்ந்ததும், காமிராமேன் ரமேஷ்,
“ ஏன் அப்படி சொன்னே.. நல்ல சந்தர்ப்பத்தை மிஸ் பண்ணிட்டோம்.. இப்பவே நாம உள்ளே போயிருந்தா, நடந்து கிட்டு இருக்கிற இந்த ரகளையை அப்படியே கவர் பண்ணி ஒரு திரில்லிங் புரோகிராம், தீபாவளிக்காக கொடுத்திருக்கலாம்.. பார்க்கிறவங்க மனசு பட படன்னு அடிச்சிக்கிற மாதரி, ரெடி பண்ணியிருக்கலாம்.. நம்ம டைரக்டர் மேடம் அப்ரிஷியேட் பண்ணி இருப்பாங்க.. இப்படி ஒரு சந்தர்ப்பம் மறுபடியும் கெடைக்குமா.. வேஸ்ட் பண்ணிட்டே..” என்றான்.
லதா அதை காதில் வாங்கிக் கொள்ள வில்லை.
கொஞ்சம் நேரம் இருவரும் காத்து இருந்தார்கள்.
தொடர்ந்து உள்ளே இருந்து கதறல்களும், மிரட்டல்களும் கேட்டுக் கொண்டே இருந்தன. லதாவுக்கு மனது வலித்தது.
தன் டைரக்டர் மேடத்திடம் போன் செய்து நிலைமையை விளக்கினாள்.
கோபப்பட்ட டைரக்டர் மேடம்,
“ தீபாவளிக்கு இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு.. நீங்க இப்படி லேட் பண்ணினா, புரோகிராமை எப்ப ரெடி பண்ணறது.. சும்மா அங்க உட்கார்ந்துகிட்டு இருக்காதீங்க.. அந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரி இல்லேன்னா வேற ஏதாவது புரோகிராம் உடனே செஞ்சாகணும்.. என் கிட்ட ஒரு அனாதை ஆசிரமத்து அட்ரஸ் இருக்கு. அங்க போய் வேற ஒரு புரோகிராம் ரெடி பண்ணுங்க.. அட்ரஸ் சொல்றேன் நோட் பண்ணிக் கோங்க.. அவங்களுக்கும் போன் பண்ணி, நீங்க வர்ரதா சொல்றேன்.. புறப்படுங்க..” என்று மேடம் சொல்ல,
“ சரி.. சொல்லுங்க..” என்று அந்த அனாதை ஆசிரமத்து விலாசத்தைக் குறித்துக் கொண்டாள் லதா.
தினமும் லதா வீட்டிற்கு வரும்போது இரவு எட்டு மணி ஆகி விடும். திடீரென்று ஒரு போன் கூட செய்யாமல் ஐந்து மணிக்கெல்லாம் அவள் வந்ததைப் பார்த்து லதாவின் அம்மா மகேஸ்வரிக்கு திகைப்பு.
கால் செருப்பைக் கழட்டிக் கொண்டே அவள்,
“ அம்மா.. தீவாவளிக்காக எங்க டிவியில ஸ்பெஷல் புரோகிராம் ஒண்ணு கொடுக்கணும்னு சொன்னாங்க.. அதுக்காக ஒரு அனாதை ஆசிரமத்துக்கு போய் ஒரு புரோகிராம் ரெடி பண்ணிகிட்டு வரச்சொல்லி எங்கள அனுப்பினாங்க.. அந்த அனாதை ஆசிரமத்தில, நம்ம கார்த்தியை பார்த்தேன்…”
சொல்லி விட்டு மூச்சு வாங்கியது லதாவுக்கு.
மகேஸ்வரிக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை.
பேரன் கார்த்தி கிடைத்துவிட்டானா..
அப்படியானால் லட்சுமி எங்கே..
“ அப்ப லட்சுமி.. அவளும் அங்க தான் இருக்கிறாளா… அவளையும் பாத்தியா..” என்று அம்மா படபடப்பாய் கேட்டாள்.
“ லட்சுமியைப் பத்தி நான் கேட்டேன்மா.. அதுக்கு அந்த வார்டன் நான் புதுசா வந்திருக்கேன்.. எப்படி கார்த்தி இந்த ஆசிரமத்துக்கு வந்தான், யார் கொண்டாந்து சேர்த்தாங்க…. நீங்க சொல்ற மாதரி, அவனோட அம்மா கூடவே இருந்தாங்களா.. இப்ப கார்த்தியோட அம்மா, எங்கே இருக்காங்கன்னு, ரிஜிஸ்டரில விபரம் பாத்து வைக்கிறேன், கொஞ்ச டைம் கொடுங்கன்னு சொன்னாரும்மா.. எனக்கு அங்க வெயிட் பண்ண முடியல.. மொதல்ல கார்த்தி கெடைச்சா விபரத்தை உன் கிட்ட சொல்லணும்னு ஓடி வந்தேன்மா..” என்றாள் படபடப்பு அடங்காமல்.
“ கார்த்தியை ஏன் கையோட கூட்டிக் கிட்டு வர்ல..”
“ எப்படிம்மா உடனே அனுப்புவாங்க.. நம்ம வீட்டு குழந்தை தான் கார்த்திங்கறதை, அவங்களுக்கு பூரூப் பண்ணனும்.. அவங்களுக்கு திருப்தி பட்டா தான் நம்ம கிட்ட கொடுப்பாங்க..”
மகேஸ்வரிக்கு தான் உடனே அந்த அனாதை ஆசிரமத்துக்கு ஓடிப்போய் தன் பேரனை கூட்டி வரவேண்டும் என்று மனம் துடித்தது.
இதுதான் என் பேரன், என்னோடு அனுப்புங்கள் என்று சொன்னால் அந்த அனாதை ஆசிரமத்தில் இருப்பவர்கள் நம்பி அனுப்புவார்களா..
எப்படி அவர்களை நம்ப வைப்பது.. என்ன செய்வது என்று புரியவில்லை மகேஸ்வரிக்கு.
நினைத்து பார்க்கும் போது, கண்களில் நீர் வழிந்தது. வழிந்த நீரை துடைத்துக் கொண்டு, ஓடிப் போய் அலமாரியில் இருந்து லட்சுமி, மருமகன் சுந்தரம், குழந்தை கார்த்தி மூவரும் இருக்கும் போட்டோவை எடுத்து வைத்து கொண்டு, லதாவைப் பார்த்து,
“ உடனே புறப்படு.. சீக்கிரம் போய் கார்த்தியைப் பார்க்கணும்..” என்றாள் மகேஸ்வரி.
“ சரிம்மா போகலாம்.. ஒரு விஷயம்.. கார்த்தியை ஆசிரமத்தில பார்த்ததினாலே, அந்த சந்தோசத்தில, அந்த புரோகிராமை சரியா எடுக்க முடியல.. காமிரா மேன் ரமேஷ் எடுத்ததை ஸ்டுடியோவுக்கு கொண்டு போயிருக்கான்.. போகும் போது, அவன் சொன்னான்.. நாம ஷூட் பண்ணனிது சரியா வருமா, ஸ்டுடியோவில இருக்கிறவங்க எடுத்த புரோகிராமை மானிட்டர்ல போட்டு பாத்திட்டு, ஏத்துப்பாங்களாங்கறது சந்தேகம்னு சொன்னான். ஏற்கனவே காலையில ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு போயிட்டு அந்த புரோகிராமை சரியா எடுக்க முடியாம திரும்பி வந்து இந்த புரோகிராமை எடுத்தோம். இதுவும் சரியா வர்லேன்னா டைரக்டர் மேடம் ரொம்ப கோபிச்சுக்குவாங்க.. அவரு என்ன சொல்லப் போறாருன்னு தெரியல.. இது திருப்தி படலேன்னா, மேடத்துகிட்ட இருந்து போன் வரும்னு நெனக்கிறேன்மா..” என்றாள் லதா.
“ என்ன பேசற நீ… எவ்வளவு முக்கியமான விஷயம் இன்னிக்கு நடந்து இருக்கு.. இப்ப இதுவா முக்கியம்.. இந்த வேலையே போனாலும் பரவாயில்ல.. பேசாம வா என் கூட..” என்று மகேஸ்வரி அதட்ட,
“ அதுக்கில்லம்மா.. இது தீபாவளி நாள்ல, எங்க டிவியில வரவேண்டிய புரோகிராம்.. அதை உடனடியா ரெடி பண்ணி ஆகணும்.. தீபாவளிக்கு இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு..” என்றாள் லதா.
“ வேற வேலை வாங்கிக்கலாம்.. இந்த வேலையை மறந்திடு..” என்று மறுபடியும் கண்டிப்புடன் அம்மா சொல்ல,
“ சரிம்மா.. நா போய் ஒரு ஆட்டோவை கூட்டிக்கிட்டு வர்ரேன்..” என்று சொல்லி விட்டு, தெரு முனைக்கு சென்று ஒரு ஆட்டோ கூட்டி வந்தாள் லதா.
இரண்டு பேரும் ஏறி உட்கார்ந்தார்கள்.
ஆட்டோவை அந்த அனாதை ஆசிரமத்துக்கு வழி சொல்லி போகச் சொல்லி விட்டு, தன் அம்மாவைப் பார்த்து லதா சொன்னாள்,
“ நம்ம கார்த்தி, நான் அக்கா லட்சுமி மாதரி இருக்கிறதனால, என்ன பார்த்ததும், அம்மான்னு சொல்லிக்கிட்டு ஓடிவந்து என்னை கட்டி பிடிச்சிகிட்டான்… உடனே, அந்த காமிராமேன் ரமேஷ், என்ன சந்தேகமா பார்த்தான், ஏதோ அந்த குழந்தை என்னோட இல்லீகல் சைல்ட் மாதரி…”
“ அப்படின்னா என்னடி…” மகேஸ்வரி கேட்டாள்.
“ சரி வுடு… உனக்கு புரியாது..” என்றாள் லதா.
அப்போது, அதாவது அந்த அடுக்கடுக்கான சோகங்கள் நடப்பதற்கு முன், மகேஸ்வரியின் குடும்பம் பெங்களூரில் இருந்தது. மகேஸ்வரியின் கணவர் இறந்து போனது, பிறகு லட்சுமிக்கு கல்யாணம் ஆகி, லட்சுமியின் கணவன் சுந்தரம் இறந்து போய், லட்சுமியும், கார்த்தியும் காணாமல் போனது என்று தொடர்ந்து சோகங்கள் நடந்து முடிந்தன. காணாமல் போன, லட்சுமியையும், கார்த்தியையும் தேடும் பொருட்டு அவர்கள் சென்னைக்கு வந்தார்கள். மேலும் லதா ஜெர்னலிஸம் படித்து முடித்துவிட்டு வந்த பிறகு அவள் தமிழ் டிவி சேனலில் வேலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். அதற்கும் சென்னை தான் வசதி.
மகேஸ்வரியின் கணவர், பெங்களூரில் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தவர், திடீரென்று இறந்து விட, இரண்டு பெண்களை வைத்துக் கொண்டு மகேஸ்வரி என்ன செய்வது என்று அதிர்ச்சியில் மூழ்கிப் போனாள்.
தன் கணவன் இறந்து போனதற்கு கம்பெனியில் இருந்த கிடைத்த தொகையில் லட்சுமிக்கு உடனடியாக கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து வரன் தேடினார்கள். நல்ல குடும்பம், நல்ல மாப்பிள்ளை என்று தெரிந்தவர்கள் மற்றும் உறவுக்காரர்கள் சுந்தரத்தைப் பற்றி சொன்னார்கள். சொந்த ஊர் திருச்சிக்கு பக்கத்தில் ஒரு கிராமம். பெங்களூரில் வேலையில் இருப்பதாகச் சொன்னார்கள். இரு வீட்டாருக்கும் பிடித்து போகவே கல்யாணம் நல்ல படியாக நடந்தது.
ஆட்டோ அனாதை ஆசிரமத்துக்குள் நுழையும் போது இருட்டிக் கொண்டு வந்தது.
“ டே.. காலையில வந்த டிவி ஆண்ட்டி வந்திருக்காங்கடா…” கத்திக் கொண்டே ஒரு பையன் உள்ளே ஓடினான்.
இருவரும் நேராக வார்டன் அறைக்கு சென்றார்கள். அவர்களைப் பார்த்ததும் வார்டன்,
“ காலையில நீங்க வந்திட்டு போனதில இருந்து கார்த்தி அழுது கிட்டு இருக்கான்.. அம்மாவைப் பார்க்கணும்னு…” என்றார்.
“ தயவு செஞ்சி கார்த்தியை கூப்பிடுங்க..” மகேஸ்வரியும், லதாவும் கெஞ்சினார்கள்.
“ கார்த்தி எப்படி காணாம போனான்னு விபரம் சொல்ல முடியுமா.. அப்ப தான் எங்ககிட்ட இருக்கிற விபரத்தோட பொருந்தி வருதான்னு பாக்க முடியும்.. கேக்கறது எங்களோட கடமை. தப்பா நெனச்சுக்காதீங்க..”
மகேஸ்வரிக்கு வார்டன் இப்படி சந்தேகப் பட்டு கேட்டது பிடிக்கவில்லை.
கையோடு எடுத்து வந்த போட்டோவை காண்பித்து விட்டு,
“ இதை பாருங்க.. மகள், மருமகன், பேரன் கார்த்தி மூணு பேரும் இருக்கிற போட்டோ.. மருமகன் சுந்தரம் கிராமத்தில வளர்ந்தவருங்க.. கார்த்தி பொறந்ததிலேயிருந்து, வட இந்தியா டூர் போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு.. நான் தான் கார்த்திக்கு மூணு வயசாகுட்டும்னு சொல்லி தள்ளி போட்டுக்கிட்டு இருந்தேன். கார்த்திக்கு மூணு வயசு ஆன உடனே டூர் கெளம்புனும்னு நின்னாரு. டெல்லி, ஜெய்ப்பூர், குவாலியர்னு பிளான் பண்ணி சுத்தி பாக்க மூணு பேரும் கெளம்பினாங்க… வரும் போது சென்னைக்கும், திருச்சிக்கும் போயிட்டு வர்ர்தா சொன்னாங்க.. அப்படி அவங்க திரும்பி வரும் போது, இது நடந்திச்சு…”
நிறுத்தி விட்டு, கண்களை புடைவைத்தலைப்பால் மகேஸ்வரி துடைத்துக்கொள்ள,
“ நான் சொல்றேன்….” என்று லதா பேச ஆரம்பித்தாள்.
“ போபால் ஸ்டேஷன்ல பிளாட்பாரத்தில சென்னை ரயிலுக்காக காத்திருந்தாங்களாம்… அக்காவும், கார்த்தியும் பெஞ்சில உட்கார்ந்துகிட்டு இருக்கும் போது, மாமா பிளாட்பாரத்தில ஓரமாக நின்னுகிட்டு இருந்தாறாம்.. அப்போ பின்பக்கமா வந்துகிட்டு இருந்த ரயிலை கவனிக்காம நின்னுகிட்டு இருந்தாராம் மாமா.. அதைப் பார்த்த அக்கா, பின்பக்கமா ரயிலு வருது, தள்ளி நில்லுங்கன்னு கத்தினாங்களாம்… அக்கா கத்தினது அவரு காதிலே விழலையாம்.. அக்கா லட்சுமியோட கண் எதிரே ரயில் மோதி மாமா, இறந்து போயிட்டாரு….”
லதா கொஞ்சம் நிறுத்தினாள். அவளுக்கும் சற்று கண் கலங்கியது.
“ அதை நேரில பாத்த அக்காவுக்கு உடனே புத்தி பேதலித்து போயிடிச்சாம்… குழந்தை கார்த்தியை, புத்தி பேதலித்த அக்கா ஏதாவது செஞ்சிடப் போறான்னு குழந்தையை யாரோ எடுத்துக்கிட்டாங்களாம்.. அதுக்கு அப்புறம், லட்சுமி எங்கே போனா, குழந்தை என்னா ஆச்சுன்னு தெரியலைன்னு சொல்லி, மாமா சுந்தரத்தோட பாடியை மட்டும் எங்ககிட்ட கொடுத்தாங்க… போபால்ல காணாம போன கார்த்தியை இப்ப தான் மறுபடியும் பாக்கிறேம்.. போட்டோவை வேணா பாருங்க.. அதில கார்த்தி இருக்கான் பாருங்க..”
லதாவும் கண்களை துடைத்து கொண்டாள்..
“ நானே போய் கார்த்தியை கூட்டி வர்ரேன்..” என்று கிளம்பிய வார்டன், ஏதோ ஞாபகம் வந்தவராய்,
“ கார்த்தியோட அம்மாவைப் பத்தி கேட்டீங்களே.. எங்ககிட்ட இருக்கிற தகவல் படி, அவங்க இதே ஊர்லதான் ஒரு பெண்கள் விடுதியில இருக்காங்க.. நீங்க சொன்னபடி அவங்களுக்கு கொஞ்சம் மன நில சரி இல்லைன்னு தகவல் எழுதி இருக்கு. அம்மா, தங்கச்சி, குழந்தையெல்லாம் பாத்தா அவங்களுக்கு எல்லாம் சரியாயிடும்.. நீங்க கேட்டபடி விலாசம் எழுதி வைச்சிருக்கேன்.. இந்தாங்க..” என்று ஒரு காகிதத்தை தந்து விட்டு கார்த்தியை கூட்டி வர அவர் ஆசிரமத்துக்கு உள்ளே போனார்.
அவர் கொடுத்த விலாசத்தை வாங்கி லதா படித்தாள். அதில்
‘அன்ன பூர்ணியம்மாள் நினைவு பெண்கள் மன நல காப்பகம்’
என்று எழுதி இருந்தது.
அப்படியானால் அக்கா லட்சுமி அங்கு தான் இருக்கிறாளா…
அப்போது, காமிரா மேன் ரமேஷிடம் இருந்து போன் வந்தது.
“ நாம எடுத்த அனாதை ஆசிரமத்து புரோகிராம்ல மேடத்துக்கு திருப்தி இல்ல.. அதனால எனக்கு ஒரு ஐடியா தோணுது.. காலையில போயிட்டு திரும்பி வந்தோமே, பொண்ணுங்களுக்கான பைத்தியக்கார ஆஸ்பத்திரி.. அங்க உடனே நாம திரும்பவும் போயி, வேற ஒரு புரோகிராம் எடுத்து மேடத்துக்கிட்ட காண்பிக்கலாம்.. அவங்களுக்கு அது புடிக்குதான்னு பார்க்கணும்…” என்றான்.
யோசித்த லதா, கையிலிருந்த மொபைலில், டைரக்டர் மேடத்தை கூப்பிட்டு,
“ மேடம்.. நாங்க அந்த பொண்ணுங்களுக்கான பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு போயிட்டிருக்கோம்.. அந்த ஆஸ்பத்திரியில இருந்து நீங்க எதிர்பார்க்கிறதை விட பெட்டரா, பார்க்கிறவங்க மனசை தொடற மாதரி, ஒரு விறுவிறுப்பான ஸ்டோரி நாங்க எடுத்துக்கிட்டு வரப்போறோம் மேடம்..” என்றாள் லதா.
- மனிதர்களின் உருவாக்கம்
- ஆரண்யகாண்டம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 74 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 என்னைக் கவர்ந்த புதியவன் நீயா ?
- ”மென்மையானகுரலோடு உக்கிரமானசமர்” -நா. விச்வநாதன்
- மாணவர்களுக்கு மொழிப் பயிற்சியும் துறைசார்ந்த அறிவும்
- கடற்புயல் நாட்கள்
- 2014 ஏப்ரலில் பூதச் செர்ன் அணு உடைப்பு யந்திர விஞ்ஞானிகள் புதிய அணுக்கருத் துகள் ஒன்று கண்டுபிடிப்பு
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 3
- காணாமல் போன கவிதைகள் (கவிதை தொகுப்பு) நெப்போலியன். விமர்சனம் – இமையம்.
- எங்கெங்கும்
- தினம் என் பயணங்கள் -16 என் கனவுகள்
- தாரிணி பதிப்பகம் மற்றும் ஹார்ட் பீட் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் கவிதைப் போட்டி
- பிரசாதம்
- நீங்காத நினைவுகள் 45
- துளிவெள்ளக்குமிழ்கள்
- பயணச்சுவை ! வில்லவன் கோதை 5 . மின்வாரியத்தின் முத்துக்கள் !
- அத்தியாயம்…6 திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும்
- வேட்பு மனுவில் தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும்.
- தொடுவானம்
- வாஸந்தியின் நாவல் “விட்டு விடுதலையாகி”
- தாஜ்மஹால் டு பிருந்தாவன்
- நிலம்நீர்விளைச்சல்
- இலக்கிய நிகழ்வு சுஜாதா விருது விழா
- திரைவிமர்சனம் போங்கடிநீங்களும்உங்ககாதலும்
- தீபாவளிக்கான டிவி புரோகிராம்
- நரை வெளி
- கண்ணகியும் , காங்கேயம் கல்லும்: இரா. முருகவேளின் “ மிளிர்கல் “ நாவல்
- சீன காதல் கதைகள் 2. இடையனும் நெசவுக்கன்னியும்
- திரைப்படங்களில் அனிமேஷன் தொழிற்நுட்பம்:ஒரு பார்வை
- ‘அசோகனின் வைத்தியசாலை’ நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை
- யாருமற்ற சொல் – கவிஞர் யாழன் ஆதி
- திண்ணையின் இலக்கியத் தடம்-34
- வாழ்க்கை ஒரு வானவில் அத்யாயம் 2