வேட்பு மனுவில் தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும்.

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 33 in the series 12 மே 2014

வழக்கறிஞர் கோ. மன்றவாணன்

 

இந்திய மக்களவைக்கான 16-வது பொதுத்தேர்தல் அண்மையில் நடந்தது. சிதம்பரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திரு. மணிரத்தினம் அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்;டதற்குச் சொல்லப்பட்ட காரணம், வேட்பு மனுவில் 10 பேர் முன்மொழிவதற்குப் பதிலாக ஒரே ஒரு நபர்தான் முன்மொழிந்துள்ளார் என்பதாகும். இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தால், வேட்பு மனுவில் ஒருவர் முன்மொழிந்தால் போதும். அங்கீகரிக்கப்படவில்லை எனில் வேட்பு மனுவில் 10 பேர் முன்மொழிய வேண்டும். இந்தியத் தேர்தல் ஆணையத்தால் பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே அங்கீகாரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்;டது.
காங்கிரஸ் கட்சியில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தப்படுவோம் என்று நம்பி இருந்து, கடைசியில் ஏமாற்றப்பட்டு, வேட்பு மனு தாக்கலுக்கு இரண்டொரு நாள் முன்னதாகப் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்த மணிரத்தினம் அவர்களுக்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரம் ரத்தான விவரம் தெரியாமல் போய்விட்டது.
எல்லாருக்கும் எல்லா விவரங்களும் தெரியாது என்பதுதான் நடைமுறை.
இந்திய மக்களவைத் தேர்தலில் 27 வயது நிரம்பிய எவரும் வேட்பாளராகப் போட்டியிடலாம். அவர்கள் படித்தவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கைநாட்டுக்காரர்களும் போட்டி இடலாம்.
தேர்தல் ஆணைய அதிகாரிகளும் அவ்வப்போது ஒவ்வொரு விளக்கம் சொல்கின்றனர். ஒரு பிரச்சனை என்றால் ஒவ்;வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் வௌ;வேறு விதமாக விளக்கம் சொல்கின்றனர்.
தமிழகத் தேர்தல் ஆணையர் திரு. பிரவீண்குமார் அவர்கள், செய்தியாளர்களிடத்தில் ஒரு கருத்துத் தெரிவித்தார். இரவு 10 மணிக்குமேல் ஒலிபெருக்கி இல்லாமல் ஓட்டு கேட்கலாம் என்றார். அடுத்த நாள் அவரே இரவு 10 மணிக்குமேல் யாரும் ஓட்டு கேட்கவே கூடாது. மீறிக் கேட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னார். தேர்தல் ஆணையருக்கே குழப்பங்கள் உள்ளன.
அதுபோல் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. இராஜாராமன் வேட்பு மனு பரிசீலனையின்போது செய்தியாளர்களை அனுமதிக்கவில்லை. பிற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வேட்பு மனு பரிசீலனையின் போது செய்தியாளர்களை அனுமதித்துள்ளனர். ஆக, அதிகாரிகளுக்கே தேர்தல் விதிமுறைகள் குறித்துப் பல்வேறு குழப்பங்கள் உள்ளன.
இந்நிலையில் சாதாரண குடிமகனுக்குத் தேர்தல் விதிமுறைகள் முழுமையாகத் தெரிந்திருக்க முடியாது. அதுமட்டுமல்ல அதிகாரிகளுக்கு அதிகாரி தேர்தல் விதிமுறைகள் குறித்து வௌ;வேறு புரிதல்கள் உள்ளன.
இந்நிலையில் சின்னச் சின்ன காரணங்களுக்காக- எளிதில் சரிசெய்துகொள்ளக் கூடிய விஷயங்களுக்காக வேட்பு மனுக்களைத் தள்ளுபடி செய்வது நியாயம் ஆகுமா?
ஒரு பக்கத்தில் கையொப்பம் விடுபட்டுவிட்டது. ஓரிடத்தில் ஒரு விவரம் சரியாக பூர்த்தி செய்யாமல் போய்விட்டது என்பதற்கெல்லாம் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு அளிக்காமல் மனுவைத் தள்ளுபடி செய்வது சரியாகுமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சட்ட அறியாமை மன்னிக்கப்படக் கூடியதல்ல. என்றாலும் நடைமுறையில் அனைத்துச் சட்டங்களும் விதிகளும் ஆணைகளும் எந்தவொரு நபருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
வேட்பு மனுவைச் சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டும். அதில் ஒரு சிறு தவறு நேர்ந்தாலும் மனு தள்ளுபடி ஆகிவிடும் என்பதில் வேட்பாளருக்கு ஒருவித மனஅழுத்தத்தையும் அடிவயிற்றைப் புரட்டிப்போடும் அச்சத்தையும் உருவாக்கப்படுகிறது. உடன் இருப்பவர்களின் தவறான ஆலோசனையாலும் அல்லது அறியாமையாலும் சிறு தவறு ஏற்பட்டு மனு தள்ளுபடி ஆகும்போது, அந்த வேட்பாளரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும்.
உயர்ந்த கல்வி அறிவு பெற்றவர்களுக்கே சில படிவங்களைச் சரியாக நிரப்ப முடியாது. இந்தியத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்குக் கல்வி அறிவு தேவை இல்லை என்றான பிறகு, வேட்பு மனுவில் ஏற்படும் தவறுகளைத் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை ஏன் கொடுக்கக் கூடாது?
அரசியல் கட்சியில் ஒருவர் சீட்டு வாங்குவதே பெரும்பாடு. அப்படி சீட்டு வாங்கி வந்துவிட்டால் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அதைவிட பெரிய பாடு. தேர்தலில் ஒருவர் வெற்றி பெறுவது என்பது வாழ்வா சாவா என்ற முயற்சியாக இருக்கலாம். ஆனால் வேட்பு மனுவைச் சரியாக பூர்த்தி செய்வதே வாழ்வா சாவா என்ற பிரச்சனையாக ஆகிவிடக் கூடாது. ஒரு வெற்றி வேட்பாளரை, திருத்திக்கொள்ளக்கூடிய வேட்பு மனுத் தவறால் தோல்வி அடையச் செய்ய முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டும்.
வேட்பு மனு பரிசீலனையின்போது தவறுகள் கண்டுபிடிக்கப்படுமானால், அந்தத் தவறுகளைக் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் திருத்திக்கொடுக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்துக்கு மதிப்பு சேர்ப்பது ஆகும்.
வேட்பு மனுவையே சரியாக நிரப்ப முடியாதவர், நாடாளுமன்றத்துக்குப் போய் என்ன செய்துவிட முடியும் என்று நீங்கள் கேட்கலாம். மத்திய மாநில அரசு அலுவலகங்களில் உள்ள படிவங்களை எத்தனை பேர் சரியாகப் பூர்த்தி செய்ய முடியும்? கடவுச் சீட்டு விண்ணப்பம், வருமான வரி அலுவலகங்களில் வழங்கப்படும் படிவங்களை எத்தனைபேர் சரியாக நிரப்ப முடியும்? அதற்கான அனுபவம் உள்ளவர்களிடத்தில் கொடுத்துத்தான் நிரப்ப முடிகிறது. ஒரு படிவத்தை நிரப்ப முடியாததாலேயே ஒருவரின் நிர்வாகத் திறமையைக் குறைத்து மதிப்பிட முடியாது. கைநாட்டுக்காரரும் கல்லூரி நிறுவி, தாளாளராக… கல்வி வள்ளலாக வலம்வரும் காலமிது.
நீதிமன்றங்களில் கற்றறிந்த வழக்கறிஞர்களால் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் தப்புத் தவறு இருக்குமானால், அதைத் திருத்திக்கொடுக்க வாய்ப்பும் அவகாசமும் அளிக்கப்படுகிறது. அப்படி இருக்கையில் வேட்பு மனுவில் ஏற்படும் தவறுகளைத் திருத்திக்கொடுக்கக் கட்டாயமாக வாய்ப்பும் கால அவகாசமும் அளிக்க வேண்டும்.
இல்லையேல், வேட்பு மனுவைப் பூர்த்தி செய்வதில் ஏற்படும் சின்னத் தவறுக்கு, ஏதும் அறியாத ஒரு வேட்பாளர் சிலுவையில் அறையப்பட வேண்டுமா?

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *