புதியமாதவி, மும்பை
அத்தியாயம்…7
திராவிட இயக்கம் முன்வைத்த சமூகப்புரட்சிக் கருத்துகளில் ஏற்பட்ட பின்னடைவுகளைப் பார்ப்போம்.
பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கை வழிவழியாக தமிழர் வாழ்வியலின் மெய்யியலைப் புறக்கணித்தது.
கடவுள் என்பது மனிதச் சமூகம் படைத்துக் கொண்ட ஒரு கருப்பொருள். உலகின் முதற்பொருள் நிலமும் பொழுதும் என்று சொன்ன தொல்காப்பியர் நிலம், பொழுது ஆகியவற்றின் இயக்கம் சார்ந்து தோன்றும் கருப்பொருள்களாக பறவை, விலங்கு என்று பட்டியலிடும் போது நிலம் சார்ந்த கருப்பொருள்களில் ஒன்றாக மக்கள் வழிபாட்டுக்குரிய கடவுளையும் பட்டியலிடுகிறார்.. அதனால் தான் கடவுள் என்பது மனித சமூகம் படைத்துக் கொண்ட ஒரு கருப்பொருள் என்பது தெளிவாகிறது.
கடவுள் என்ற அந்தக் கருப்பொருள் இயறகையுடன் தொடர்புடையது.
கதிரவனையும் திங்களையும் மழையையும் போற்றி இளங்கோவடிகள் தன் காப்பியத்தைத் தொடங்குவது தமிழர் மெய்யியல் சிந்தனைதான். இயற்கை நிகழ்வுகள் முதலியவற்றைப் பொருள்முதல்வாத நோக்கில் தொடர்ந்து விளக்க முடியாத பழங்காலச் சூழலில்தான் இயற்கை> இறை>இறைவன் என்ற கருத்துருவாக்கம் ஆளுமை பெறுவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முருகன் என்ற தமிழ்க்கடவுளின் ஆரம்பகாலங்களில் முருகு என்று ஆண் பெண்பால் என்ற பால்பேதத்தைக்
க்டந்த சொல்லாகவே இருந்ததையும் அறிவோம்.
யூதர்களின் கடவுளுக்கு கூட பால்பேதம் ஆரம்பத்தில் இல்லை என்று வாசித்திருக்கிறேன்.
.
தொன்மையான தமிழ் வரலாற்றைத் தேடிச் சென்றால் நமக்கு இன்று கிடைத்திருக்கும் சங்க இலக்கியம் காட்டும் சமூகத்தில் தமிழன் மீது சாதியோ மதமோ கடவுளோ வந்து அமர்ந்து கொள்ளவில்லை. சங்க காலத்திலேயே இவை நுழைந்துவிட்டன எனினும் தமிழ் மக்களின் வாழ்வியலை தீர்மானிக்கும் சக்திகளாக இல்லை
இந்தச் சிந்தனை மரபின் தொடர்சியாகவே சித்தர்கள்.
அதனால் தான் திராவிடர் நாகரிகம் உலகியல் சார்ந்தும் ஆரியர் நாகரிகம் உலகியலை மறுப்பதாகவும் இருந்தது. திராவிடருக்கும் சடங்குகள் இருந்தன. கடவுளர் இருந்தனர். ஆனால் அனைத்தும் திராவிடர் உலகியலின் எல்லைக்குள் இருந்தன. மனிதனிலிருந்து முற்றாக கடவுளைப் பிரித்து கடவுள் ஆதிக்கத்தில் மனிதனைக் கட்டுப்படுத்தல் என்ற ஆரியர் கருத்துருவாக்கத்தை ஆரம்பத்திலிருந்தே திராவிடர் எதிர்த்து வந்துள்ளனர். இம்மை செய்தது மறுமைக்காமெனும் அறவிலை வணிகன் ஆய் அலன் என்ற இம்மை மறுமைக்கோட்பாட்டைக் கேள்விக்குட்படுத்தியவன் தமிழன்.
‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டல்’ என்பதை திருவள்ளுவர் எதிர்த்தார்.. தமிழர் கண்ட மெய்யியலில் தெய்வம் அவன் சாயலில் தான் இருந்தது. தெய்வங்களுடன் சமத்துவம் என்ற முறையில் உறவு கொண்டவன். தெய்வங்களைப் படைத்தவன் மனிதன் தான் என்ற உணர்வோடு தெய்வங்களை இல்லை என்று சொல்லும் மன உறுதியைத் தொடர்ந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் தாமரை இலைத் தண்ணீராக சுமந்து வந்தவர் தமிழர்.
இந்தியாவில் ஆரிய நாகரிகத்தின் தொடர்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் இருப்பது இந்துத்துவம். இந்துத்துவம் தன் ஆதிக்கத்தையும் அடையாளத்தையும் அரசியல், பொருளியல், கல்வி, பண்பாடு முதலிய அனைத்து களங்களிலும் தீவிரமாக திணிக்கிறது. வர்ணாசிரமம் தான் ஒரே தர்மம் என்று பேசுகிறது. சமத்துவமோ சமதர்மமோ இந்துத்துவத்திற்கு உடன்பாடில்லை. இசுலாமியரும் கிறித்தவரும் இந்திய தேசத்துக்கு அந்நியர்கள். இந்தியாவுக்குள் இவர்கள் வாழ்வது என்றால் இந்து மரபு தங்கள் மரபு என்று ஏற்க வேண்டும்.
அறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்துராஜ்யம் என்ற நாடகத்தில் இக்கருத்துகளைக் காணலாம்.
“ஊர்மன்றத்தில் நெடுஞ்சுவர் மேல்விட்டம் அமைத்து மாடம் வைத்து வைக்கோல் போரால் கூடாரம் வெய்ந்து அதன் உள்ளே – எழுதுஅணிக்கடவுள் – அதாவது வரையப்பட்ட கடவுள் உருவம் – வைத்து
அதன் முன்னால் பலிபீடமும் திண்ணையும் எழுப்பி மெழுகி வழிபட்டனர் ( அக. 167) என்ற கடவுளின் முதல் உருவவழிபாட்டையும் கோவிலின் தோற்றுவாயும் சங்க காலத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
திராவிட இயக்கம் தமிழரின் வாழ்வின் அடிநாதமாக இருந்த அறம் சார்ந்த மெய்யியலை கண்டு கொள்ளவே இல்லை. மனித நாகரிகத்தில் கடவுளின் உருவாக்கம் குறித்த மேலைநாட்டாரின் ஆய்வுகளுடன் தமிழ்ச்சமூக கடவுள் வழிபாட்டையும் ஆய்வுமனப்பான்மையுடன் அவர்கள் அணுகவில்லை.
பிள்ளையார் பிறந்த புராணக்கதையை மட்டும் விமர்சித்த திராவிட இயக்கம் ஏன் பிள்ளையார் சிலைகள் அரசமரத்தடியில் வைக்கப்பட்டன? என்பதைக் குறித்தும் அதிலிருக்கும் இந்துத்துவ அரசியலையும் காணத்தவறியது. தமிழகமெங்கும் பரவியிருந்த பவுத்தம் எப்படி துடைத்து எறியப்பட்டது? அரசமரம் புத்தமார்க்கத்தின் அடையாளம் அல்லவா ? என்ற ஆய்வுகளுக்குள் எட்டிப்பார்க்கவில்லை.
தமிழ் மொழியைக் கொண்டாடிய இவர்கள் தமிழ்வழிக்கல்வியைக் கொண்டாடவில்லை. தமிழாசிரியர்கள் மூலம் தங்கள் தொண்டர்களை உருவாக்கத்தெரிந்த இவர்கள் அதே தமிழாசிரியர்களை கல்வி உலகத்தில் இரண்டாம் பிரஜைகளாக்கினார்கள். தமிழ்ப் படித்தால் வேலைக்கிடைக்காது என்று ஒரு நிலையை பொதுமக்கள் புத்தியில் ஏற்றியதில் இவர்களின் பங்கு கணிசமானது. பட்டித்தொட்டிகள் எங்கும் எங்கள் நாடகங்களைத் தணிக்கை இன்றி மேடை ஏற்றும் வாய்ப்பு கிடைத்தால் தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும், பொற்காலம் திரும்பும் என்று சொன்னவர்களின் கைகளில் இன்று நம் நடுவீட்டில் உட்கார்ந்திருக்கும் தொலைக்காட்சி என்ற ஊடகம் வந்தப் பின் என்ன நடந்திருக்கிறது? மானாட மயிலாட தவிர இவர்கள் செய்தது என்ன? தமிழ்க்கவிதைகளை கவியரங்க மேடைகளுக்கு அப்பால் எடுத்துச் செல்லவிடாமல் தனக்கான வாழ்த்துக்கவிதைகளாக சிறைவைத்திருக்கின்றார்களே! வர்கள் வீட்டுப் பேரன்கள் இந்திப் படித்ததால் நடுவண் அமைச்சாராகும் தகுதியைப் பெற்றுவிட்டார் என்று காரணம் சொல்கின்றவர்களுக்கு அடுத்தவர் வீட்டுப்பிள்ளையை இந்திப் படிக்க கூடாது என்று சொல்லும் தகுதி இருக்கிறதா? இவர்களைப் போன்று மிகக்குறுகிய காலத்தில் வளர்ந்தவர்களும் இல்லை, இவ்வளவு விரவில் அடுக்கி வைத்த சீட்டுக்கட்டு சரிவது போல சரிந்தவர்களும் இல்லை.
தொடரும்
- வாழ்க்கை ஒரு வானவில் அத்தியாயம் 3
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் அத்தியாயம்…7
- பயணச்சுவை! 6 . முடிவுக்கு வராத விவாதங்கள் !
- மராமரங்கள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 75 வேர்களும், இலைகளும் தனித்தே உள்ளன !
- முக்கோணக் கிளிகள் படக்கதை – 4
- கையறு சாட்சிகள்
- தொடுவானம் 16. இயற்கையின் பேராற்றல் காதல்.
- தனியே
- 2025 ஆண்டிலிருந்து ரஷ்யா விண்வெளிப் பயணம் தொடங்கி, வெண்ணிலவில் மனிதர் குடியேறத் திட்டமிட்டுள்ளது
- ‘கா•ப்கா’வின் பிராஹா -1
- தினம் என் பயணங்கள் -17 ஓரினச் சேர்க்கை பற்றி.
- பசுமைப் பூங்கா – சுப்ரபாரதிமணியனின் சிறுவர் கதைகள்
- வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்
- அந்த நாளும் ஒரு நாளே.
- நீங்காத நினைவுகள் 46
- சீன காதல் கதைகள் 4. வெண்ணிற நாக கன்னி
- திண்ணையின் இலக்கியத் தடம் -35
- ஹிட்லர் பாட்டியும் ஒரு சிண்டரெல்லா தேவதையும்
- மோடி என்ன செய்ய வேண்டும் …?
- விளைவு
- சீதாயணம் படக்கதை நூல் வெளியீடு