நீங்காத நினைவுகள் 46

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

ஜோதிர்லதா கிரிஜா

பல்லாண்டுகளுக்கு முந்திய விஷயம். தமிழ் வார இதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. அதை எழுதியவர் இந்து முன்னணிக் கட்சியைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். அந்தக் கட்டுரை என்னென்ன விஷயங்களை உள்ளடக்கியதாக இருந்தது என்பது இப்போது முக்கியமானதன்று. ஆனால் அதை எழுதியவர் அதில் சொல்லியிருந்த ஒன்று மட்டும் இன்றளவும் மறக்கவே இல்லை. அவர் சொன்னதை இங்கே திருப்பி எழுதுவதற்கே கை கூசுகிறது. அதாவது – அன்னை தெரசாவின் முகம் ஒரு சூனியக்காரியின் முகம் போல் உள்ளது என்று அந்த மனிதர் குறிப்பிட்டிருந்தார்!
மேற்கொண்டு இது பற்றி எழுதுவதற்கு முன்னால் அன்னை தெரசா அவர்கள் பற்றித் தெரிந்துகொள்ளுவோம். பெரும்பாலோர்க்குத் தெரிந்த வரலாறுதான் அவர்களுடையது. இருப்பினும், அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை நினைவுக்குக் கொண்டுவரவேண்டிய அவசியத்தை அந்த இந்து முன்னணிக் கட்சிக்காரரின் விமரிசனம் விளைவித்துள்ளதால் அவரைப் பற்றி நினைவுகூர வேண்டியதாகிறது.
1910 ஆம் ஆண்டில், ஆகஸ்டு மாதம் 28 ஆம் நாளில் அவர் பிறந்தாராம். 26ஆ இன்றேல் 27ஆ என்பதில் ஐயம் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனினும் 27 ஐயே பெரும்பாலோர் அவரது பிறந்த நாளாய்க் கொண்டாடிவருகின்றனராம். அவர்களுடையது பழமையான கத்தோலிக்கக் குடும்பமாம். தெரசாவுக்கு 8 வயது ஆன போது திடீரென்று நோய்வாய்ப் பட்ட அவர் தந்தை இறந்து போனார். அரசியல் காரணங்களுக்காக அவர் கொல்லப்பட்டதாக ஒரு வதந்தி உண்டாம். தந்தை இறந்த பின், தெரசா தன் தாயோடு மிகுந்த மன நெருக்கம் கொண்டார். அவருடைய தாயார் மிகுந்த மத உணர்வு உள்ளவராய்த் திகழ்ந்தாராம். தெரசா சின்னஞ் சிறுமியாக இருந்த போதே அவர் உள்ளத்தில் ஆதரவற்றோர்க்கு உதவும் மனப்பாங்கை அவர் தாயார் விதைத்து விட்டிருந்தார். பணக்காரக் குடும்பமாக அவர்களுடையது இல்லாத போதிலும், தெரசாவின் தாயார் அடிக்கடி அநாதை மக்களைத் தம் வீட்டில் விருந்தோம்பலுக்கு அழைப்பதுண்டாம். ‘ இவர்க ளெல்லாம் யார்?’ எனும் தெரசாவின் கேள்விக்கு, ‘ இவர்கள் எல்லாருமே நம் உறவினர்கள்தான்’ என்று தெரசாவின் தாய் சொல்லுவாராம்.
தாயின் மதப்பற்றாலோ என்னவோ, அவரது பன்னிரண்டாம் வயதிலேயே அவர் மனம் மத ஈடுபாட்டில் ஈர்ப்புக் கொண்டது. புனித வாழ்க்கையில் ஈடுபடவேண்டும் எனும் உள்ளுணர்வு அவருக்கு ஏற்பட்டதாம். பள்ளியில் படிக்கும் போது அவரது தனி இசைக்கு – SOLO- ஏகப்பட்ட கோரிக்கைகள் வரும் அளவுக்குக் கிறிஸ்துவப் பாடல்களை மிக இனிமையாகப் பாடுவதுண்டாம்.
தமது 18 ஆம் வயதில் அவர் கன்னிகை – NUN -விரதம் பூண்டார். இதன் பின், அவர் இந்தியாவில் உள்ள டார்ஜிலிங்குக்கு ஒரு பயிற்சிக்காக வந்தார். அது முடிந்த பின் அவர் கலகத்தாவில் இருந்த செய்ன்ட் மேரி பள்ளி எனும் பெண்களின் பள்ளி ஒன்றுக்குப் பணி புரிய அனுப்பி வைக்கப்பட்டார். வங்காளத்தில் இருந்த ஏழைப் பெண்களுக்குக் கல்வி கற்பிக்கும் பணிக்கு அவர் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார். கல்கத்தாவில் இருந்த காலத்தில் அவர் வங்காளம், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் பேசக் கற்றுக்கொண்டார். வங்காளத்து ஏழைப் பெண்களின் வாழ்க்கையை அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதன் மூலம் மேம்படுத்தும் பணியில் அவர் முனைப்பானார். 1937, மே மாதம் அவர் தம்மை ஏழைமை, தொண்டு, கீழ்ப்படிதல் ஆகியவற்றுக்குத் தத்தம் செய்துகொள்ளுவதாய் விரதம் ஏற்றார். இதன் பின்னர் தான் அவர் அன்னை தெரசா என்று அழைக்கப்படலானார். 1944 இல் அவர் அப்பள்ளியின் முதல்வர் (Principal) ஆனார். அப்பள்ளியின் மாணவியர்க்கு அவர் இயேசு கிறிஸ்துவின் அருமை, பெருமைகளை எடுத்துச் சொல்லிவந்தார்.
செப்டம்பர், 1946 இல் அவருக்கு இன்னோர் அழைப்பு வந்தது. இது அவரது வாழ்வையே மாற்றி அமைத்தது. கல்கத்தாவிலிருந்து இமயமலையின் அடிவாரத்துக்கு அவர் ட்ரமில் (Tram) பயணித்துக்கொண்டிருந்த போது, அவர் செவிகளில், ‘பெண்களுக்குக் கல்வி புகட்டுவதை நிறுத்திவிட்டு, கல்கத்தாவின் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பரம ஏழைகளுக்கும், மிக மோசமான நோயாளிகளுக்கும் சேவை செய்’ என்ற இயேசுகிறிஸ்துவின் சொற்கள் கேட்டனவாம். ’கீழ்ப்படிதல்’ என்பது அன்னை தெரசாவின் பண்புக்கூறுகளுள் ஒன்றாக இருந்தமையால் பள்ளி அதிகாரிகளிடம் விண்ணப்பித்த பின் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து அவர் பள்ளி முதல்வர் பணியினின்று விடுவிக்கப்பட்டார்.
அதன் பின் நீலக்கரையுள்ள வெள்ளைப் புடைவையையே எப்போதும் அணிந்தவாறு அவர் கல்கத்தாவின் தெருக்களில் தென்படலானார். ஆறு மாதங்கள் மருத்துவத் துறை சார்ந்த பயிற்சியையும் மேற்கொண்டார் அன்னை தெரசா. அதற்குப் பிறகு கல்கத்தாவின் குடிசைப் பகுதிகளுக்கு ஒற்றை ஆளாக அங்கிருந்த “புறக்கணிக்கப்பட்ட, நேசிக்கப்படாத, அக்கறை காட்டப்படாத” (the unwanted, the unloved and the uncared for”) மனிதர்களுக்கு உதவுவதே நோக்கமாகப் பயணிக்கலானார்.
கல்கத்தா அரசிடமிருந்து சிதிலப்பட்ட நிலையில் இருந்த ஒரு பழைய கட்டடத்தை நன்கொடையாகப் பெற்று அதில் அன்னை தெரசா தெருக்களில் இருந்த சாகக்கிடந்த அநாதைகளின் இல்லமாக அதை மாற்றினார். ஒரு திறந்த வெளிப் பள்ளியையும் நிறுவினார். அவர் முதல்வராக இருந்த செய்ன்ட் மேரி பள்ளியின் பழைய மாணவர்களும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் இங்கே பணி புரிய முன்வந்தார்கள். 1950 இலிருந்து 1960 க்குள் அன்னை தெரசா கல்கத்தாவில் தொழு நோயாளிகளுக்கான ஒரு குடியிருப்பு, ஓர் அநாதை விடுதி, ஒரு மருத்துவ மனை, குடும்ப மருத்துவ விடுதி பொன்ற பல உடல்நலம் நல்கும் விடுதிகளை நிறுவினார். 1965 இல் போப் ஆண்டவர் இவருக்குப் புகழாரம் (Decree of Praise) சூட்டினார். இந்தக் கால கட்டத்துள், அன்னை தெரசாவின் பணிகள் உலகம் முழுவ்துமாய் விரிவடைந்து 4000 கொடை நிறுவனங்களாயின. இவற்றில் ஆயிரக்கணக்கான பெண் ஊழியர்கள் சேவை செய்தனர். ஏழு கண்டங்களிலும், 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்கள் ஏற்பட்டன. 1971 இல் நியூயார்க்குக்குச் சென்ற அன்னை தெரசா எய்ட்ஸ் நோயாளிகளுக்கான உணவு விடுதியை அங்கே நிறுவினார்.
அவரைத் தேடிவந்த பல்வேறு கவுரவங்களில் “இந்தியாவின் மாணிக்கம்” – The jewel of India”, அன்றைய சோவியத் ஒன்றியம் சோவியத் அமைதிக் குழுமத்தின் சார்பில் அளித்த தங்கப் பதக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாம். சாகுந்தருவாயில் அவர் சொன்னது – பிறப்பால் நான் ஓர் அல்பேனியன். குடியுரிமையால் நான் ஒர் இந்தியன். என் மதம் கிறிஸ்துவ மதம். என் பணியைப் பொறுத்த மட்டில் நான் இந்த முழு உலகுக்கும் சொந்தமானவள். என் இதயத்தைப் பொறுத்த வரை, அது ஜீசஸ்ஸின் இதயத்துக்குச் சொந்தமானது.
இத்தகைய அருமையும் பெருமையும் வாய்ந்த ஓர் அரிய பெண்மணி தம் கண்களுக்கு ஒரு சூனியக்காரி போல் தெரிகிறார் என்று விமர்சித்த மனிதரை என்ன செய்தால் தகும்? இவருக்கு உள்ள மதப் பற்றே – அல்லது வெறியே – இப்படி ஒரு கருத்தை இவர் வெள்யிட்டமைக்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும். அன்னை தெரசா தம் ஆதரவின் கீழ் வரும் எளிய மக்களை மதமாற்றம் செய்தார் என்பது அவரது குற்றச்சாட்டு. இருக்கட்டுமே! அவரென்ன, பலவந்தமாக அவர்களை மத மாற்றம் செய்தாரா? அல்லது, பயமுறுத்தி அதைச் செய்தாரா? நீங்கள் கிறிஸ்தவர்களாக மாற மறுத்தால் உங்களுக்கு என் உதவி கிட்டாது என்று சொன்னாரா! இல்லையே! தம் நிழலில் வந்து நின்ற அனைவரையுமே அவர் மதமாற்றம் செய்திருந்திருக்க வாய்ப்பில்லை. மறுத்தவர்கள் கட்டாயம் இருந்திருப்பர்.
தெருக்களில் நிராதரவாய்த் தவிக்கும் நோயாளிகளையும், படு ஏழைகளையும் புறக்கணிக்கும் ஒரு மதம் சார்ந்தவர்கள் அவர்களிடம் அன்பு காட்டும் பிற மதத்தினரைச் சாடக் கடுகளவேனும் உரிமையுள்ளவர்களாக முடியுமா? அப்படி அவர்கள் மதமாற்றமே செய்தாலும், அவர்களைக் குறைகூறும் இவர்களில் யாரும் அவர்களின் மதமற்றத்தைத் தடுப்பதற்காகவேனும் அவர்களுக்கு உதவியும் தொண்டும் செய்ய முன்வராத நிலையில் அவர்களைக் குறை கூறமட்டும் யோக்கியதை உள்ளவர்களாக இயலுமா? ‘உங்களுக்கு அவர்கள் உதவுகிறார்கள் என்பதற்காக நீங்கள் கிறிஸ்தவர்களாக ஆகாதீர்கள். இந்துக்களாகவே இருங்கள். இந்துக்களாகிய நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்” என்று என்றேனும் இவர்கள் சொன்னதுண்டா? அன்னை தெரசாவைக் குறை சொல்ல இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?
இன்னமும் தீண்டாமையைக் கட்டிக்கொண்டு அழுகிறோம். கிராமப் புறங்களில் உள்ள உணவுவிடுதிகளில் இன்றைக்கும் “இரட்டைத் தம்ப்ளர்” முறை வழக்கத்தில் உள்ளது. இந்த மூடத்தனமான அநீதியை எதிர்த்து இன்றைய அரசியல் கட்சிகளோ அல்லது இந்துத்வா மதவாதிகளோ போராட்டங்களில் ஈடுபடுகிறார்களா? இப்படியெல்லாம் கேவலப்படுத்தாமல், தங்களை மதிக்கிற மதத்துக்குச் சிலர் மாறும் போது குமுறவும், அந்தப் பிற மதக்காரர்களைத் திட்டவும் மட்டும் வாய் கிழிகிறதே இவர்களுக்கு!
தீண்டத்தகாதவர்கள் என்று நம்மால் ஒதுக்கிவைக்கப்ட்டுக் கிற்ஸ்துவப் பாதிரிமார்களின் பிரசாரத்தால் மதம் மாறி, கல்வியறிவு பெற்று, சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையை அடைந்த கிறிஸ்துவரகள் எத்தனை பேர் இருந்து வந்துள்ளார்கள்! இன்றும் இருக்கிறார்கள்! அவர்களுக்குப் படிப்புவராது என்றோம். கிறிஸ்துவர்களில் எத்தனை கல்விமான்கள் இருந்துள்ளார்கள்! இன்றும் இருக்கிறார்கள்! எவ்வளவு திறமை வாய்ந்த மருத்துவர்கள் இருந்து வருகிறார்கள்! இவர்களைப் பட்டியல் இட்டால் அது மிக நீளமாக இருக்கும். கிறிஸ்துவச் செவிலியரைப் போல் நோயாளிகளிடம் அன்பு காட்டுவோர் பிற மதச் செவிலியரில் உள்ளார்களா! இவர்கள் யாவரும் யார்? நம்மால் தீண்டத்தகாதவர்கள் என்கிற பெயருடன் நாம் ஒதுக்கி வைத்தவர்கள்தானே!
சில் ஆண்டுகளுக்கு முன் ஒரு மே மாதத்தில் அமரர் ஆன தோல் நோய் வல்லுநர் திரு தம்பையா அவர்கள் ஒரு தமிழ்நாட்டுக் கிறிஸ்துவராவார். அனைத்துலக அளவில் மிகச் சிறந்த முதல் ஏழு தோல் நோய் வல்லுநர்களுள் இவர் ஒருவராம்! இவர்களை யெல்லாம் ஒதுக்கிவைத்தே வந்துள்ள நமக்கு அன்னை தெரசா போன்றவர்களைக் குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறதாம்? “என் மதத்தில் உள்ள ஏழை, எளியவர்களையும் அநாதைகளையும் நான் கவனிக்க மாட்டேன். ஆனால் மற்றவர்கள் கவனித்து அவர்களைத் தங்கள் மதங்களுக்கு இழுப்பதற்கு எதிராய்க் கூச்சல் மட்டும் போடுவேன்” என்பது என்ன நியாயம்?
அன்னை தெரசாவின் முகத்துக் கோடுகள் முதுமையால் மட்டுமே வந்தவை யல்ல. அநாதைகள், தொடக்கூசும் நோயாளிகள், நடைபாதை மக்கள் ஆகியோரைக் கண்டு முகம் சுருங்கச் சுருங்க வருந்தியதால் விளைந்த கோடுகளே அவை என்று தோன்றுகிறது. அவர் சூனியக்காரி போல் ஒருவர்க்குத் தோன்றினால், அது அவரது ஞான சூனியத்தையே காட்டுகிறது எனலாம்.

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *