பயணச்சுவை! 6  .  முடிவுக்கு வராத விவாதங்கள் !

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 22 in the series 18 மே 2014

வில்லவன் கோதை

 

 

அடுத்ததாக அரசியல் மொழி இனம் சார்ந்த திசைகளில் எங்கள் விவாதங்கள் விரிந்தன. இறுதிக்காலத்தில் கலைஞருக்கேற்பட்ட பின்னடைவு  , முதலமைச்சர்  ஜெயலலிதாவின் அசாத்திய எதேச்சதிகாரம் ,திரையில் நாயகன் விஜயகாந்தின் அரசியல் காமெடி ,   மன்மோகன் சிங்கின் தவிர்க்க முடியாத மௌனம் , நரேந்ரமோடியும்   மோடிமஸ்தானும் இவையெல்லாம் விவாதத்தில்  இடம்பிடித்தன.

மன்மோகன் சிங்கைப்பொருத்தமட்டில்  அவருடை செயல்பாடுகள்  அவர் சொன்னதுபோல ஒருகாலத்தில் பேசப்படும் என்பது என்னுடைய அபிப்ராயம்.

நாங்கள் ஒன்பதுபேரும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக  ஒருவருக்கொருவர் நட்புடன்தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இருந்தாலும்   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து இருந்தது. அவை பெரும்பாலும் அவரவர் வாழ்வின் புறசூழ்களே அவைகளை வடிவமைத்திருந்தன. இந்த துணைக்கண்டத்தைப்போலவே  அத்தனை பேரும் தங்கள் தங்கள் கருத்துக்களில் தனித்துவமாக இயங்கினார்கள் .

அறுபத்தியேழுகளில் இந்தி மொழியை அறவே அகற்றிய திராவிடஇயக்கத்தின் செயலை கடுமையாக சாடினார் வீ. மணி. தனது துபாய் பயணத்தில் ஒரு சக இந்தியனோடு சாதாரணமாக உரையாட முடியாததை சுட்டிக்காட்டினார். அந்த சக இந்தியனும்  தமிழை கற்றுக்கொடுக்காத தன் அரசை ஒருவேளை சபித்திருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றியது.

பல்வேறு மொழிகளை பயில்வதர்க்கு திராவிட இயக்கங்கள் என்றைக்குமே குறுக்கே நின்றதில்லை. ஒவ்வொருவரும் தமிழுக்கு அடுத்தபடியாக வேறு  சில மொழிகளையும் அறிந்திருக்கவேண்டு மென்பதில் இரண்டுவித கருத்துக்களும் இல்லை.

இந்த தேசம் ஒரு துணைக்கண்டம் என்பதை முதலில் மனதிற்கொள்ள வேண்டும். விதம் விதமான கலாச்சாரங்களையும் வெவ்வேறு மொழிகளையும்  உள்ளடக்கியது இந்தியா. கடந்த காலங்களில் ஆங்கில அரசு உட்பட எந்த அரசுகளும் இந்த தேசத்தை முழுமையாக ஆண்ட வரலாறு இல்லை. அங்கீகரிக்கப்பெற்ற பதினான்கு தேசிய மொழிகளில்  ஒருமொழியை மட்டும் ஆட்சிமொழியாக்க வளமான மொழிகள் எப்படி அனுமதிக்கும்.

பதிலுக்கு என் கருத்துக்களை வைத்தேன்.

பெரும்பான்மை மக்களைக்கொண்ட ஒரு அரசில் பெரும்பான்மை மக்களின் தேவைகளுக்காகத்தான் அரசின் திட்டங்களே தவிற துபாய் போகிறவர்களுக்கும் தில்லிக்கு போகிறவர்களுக்கும் அரசு செலவில் பாடம் சொல்லித்  தரமுடியாது என்ற என் வாதம் அங்கு ஏற்கப்படவில்லை.

‘ எனக்கு பிடிக்காதது பங்கு வர்த்தகமும் ஆயுள் காப்பீடும்தான் ! ’

விவாதத்தை திசைதிருப்பினார் நண்பர் ஜெகநாதன்.

ஒரு உயர்ந்த திட்டத்தைக்கூட தெளிவற்ற புரிதலும் ஒழுங்கற்ற நிர்வாகமும் ஒன்றாகச்சேர்ந்து  உருப்படாமல் ஆக்கும்  என்பதை பல்வேறு நிகழ்வுகளில் இருந்து  நான் அறிந்திருக்கிறேன்.

பங்கு வர்த்தகமும் ஆயுள் காப்பீடும் என்னைப்பொருத்தமட்டில் அற்புதமான திட்டங்கள்தாம். இருந்தாலும் ஒழுங்கீனமான நிர்வாகமும் அடிப்படை அணுகுமுறை அறியாமல்  ஈடுபடுதலும் அந்த திட்டங்களுக்கு மோசமான பெயரை பெற்றுத்தந்திருப்பதாக கருதுகிறேன். இது இந்த இரண்டு துறைகளுக்கு மட்டுமல்ல.எல்லாவற்றிர்க்கும் பொருந்தும்.

காப்பீடை எடுத்துக்கொள்வோம் !

எதிர்வீட்டுக்கு வரும் விருந்தாளி நம்வீட்டுக்கு வரமாட்டார் என்று நம்பிக்கொண்டிருக்கிறது இந்த சமூகம். இன்றைக்கு விதைப்பதை இன்றே அநுபவிக்கு துடிக்கிறது இந்த தலைமுறை.

குடும்பத்தில் கட்டிய மனைவியையும் பெற்றெடுத்த குழந்தை குட்டிகளையும் நேசிக்கிறவனுக்கும்  கைநீட்டிவாங்கிய கடனை ஒழுங்காக கொடுக்க நினைப்பவனுக்கும்  துணையாயிருப்பது காப்பீடு மட்டுமே.

ஆயுள் காப்பீடு மூன்று வழிகளில் இந்த சமூகத்துக்கு பயனளிக்கிறது . மிகமிக குறைந்த வயதில் ஏற்படுகின்ற இறப்பு அவர் நேசித்த குடும்பத்துக்கு துணையாக நிற்கிறது. அவர் வாங்கிய அபரிதமான  கடனை அவருக்குப்பிறகு நேர் செய்கிறது.

இரண்டாவதாக வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் சந்திக்கின்ற நிதி பற்றாகுறையை  ஈடு செய்கிறது.

மூன்றாவதாக நெடுநாட்கள் உயிர் வாழ்ந்து அதனால் ஏற்படும் இடர்களை நிதி பங்கீடு மூலம் போக்குகிறது.

இன்றையசூழலில் மருத்துவகாப்பீடு புரியும் சாகசம் ஒரு சாட்சி.

ஒன்றே ஒன்று. ஆற்றின் ஆழத்தை அறிந்து கால்வைக்கவேண்டும்.. இது    இந்த இரண்டுக்கும்  பொருந்தும் என்று நினைக்கிறேன்

இந்தமுறை திராவிட இயக்கத்தின் முரட்டு பக்தரான நண்பர் திருவாரூர் குமாரசாமி அத்தனை ஆர்வமாக விவாதங்களில் ஈடுபடவில்லை. உடலில் ஏற்பட்ட தற்காலிக நலிவே காரணமாயிருக்ககூடும் .

‘ உடலில் தற்காலிகமாக நலிவேற்பட்டபோது தன் துணைவியாருக்கு சொத்துகளை மாற்றி எழுதி அவர் வாழ்வுக்கு உத்ரவாதம் செய்தவர் குமாரசாமி .பிறகுதான் அவர் வழியை நானும் தொடர்ந்தேன் ’

என்றார் ஜெகநாதன்.

‘ என்னைப்பொறுத்தவரை எல்லாமே மனைவி பெயரில்தான்  ..’

இடையில் தங்கவேலுவும் கலந்துகொண்டார்.

‘ அது முகராசி சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கும் ’

இடையில் குறுக்கிட்டேன் நான்.

‘அதுவும் முழுக்க முழுக்க  உண்மைதான்  ! ’

என்றார் தங்கவேலு. அடுத்து நான் மௌனமானேன்.

இன்னும் இந்த மண்ணில் முடிவுக்கே வராத  பல்வேறு விவாதங்கள் இந்த சந்திப்பிலும் ஏற்பட்டு வழக்கம்போல் முற்றுப்பெறாமலேயே  முடிந்தது .நேரம் நடுநிசியைத்தாண்டியபோது படுக்கைக்குபோனோம்.

காலையில் எனக்கு ஏமாற்றமளித்த ஏற்காடு  போகப்போக தன் குணத்தை காட்டிற்று. வெப்பநிலை  21 க்கு இறங்கியதைப்பார்த்தேன்.. கம்பளியும் போர்வையும் எதற்கென்று யோசித்தவன் படுக்கையில் கம்பளிக்குள் நுழைந்தேன். வேகமாக சுழன்ற மின்விசிறியை அவசரமாக நிறுத்தினேன்.

( அடுத்த வாரம் பார்க்கலாம் ! )

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *