திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் அத்தியாயம்…8

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

அத்தியாயம்…8
புதியமாதவி, மும்பை

திராவிட இயக்கம் பெண்ணிய தளத்தில் ஏற்படுத்திய சமூகப்புரட்சி மிகவும் போற்றுதலுக்குரியது. அந்தப் புள்ளியில் பெரியார் ஒருவர் மட்டுமே இந்த நூற்றாண்டின் தன்னிகறற்ற போராளியாக திகழ்கிறார். இன்றைய நிலை என்ன

பெரியாரை நான் வாசித்ததில்லை என்று சொல்லிக்கொண்ட தமிழகத்து பெண்ணியவாதிகள் கூட தற்போதெல்லாம் பெரியாரைப் பற்றி பேசிக்கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது, என்றாலும் ஏதோ பேஷன் மாதிரி ஊறுகாய் மாதிரி தொட்டுக்கொள்கிறார்களோ என்ற சந்தேகம் என்போன்றவர்களுக்கு ஏற்படுகிறது.
ஏனேனில், பெரியார் பெண் பிள்ளைபெறும் எந்திரமல்ல என்று சொன்னதையும் தாலி பெண் அடிமையின் சின்னம் என்று சொன்னதையும் பேசுகின்றார்களே தவிர
பெரியார், பெண் அடிமைத்தனமும் சாதி அடிமைத்தனமும் ஒன்று மற்றொன்றைக் காத்து நிற்கின்றன என்ற புள்ளியில் நின்று கொண்டு பெண் உரிமையைப் பேசினார் என்பதை இன்றுவரை முன்னெடுத்து செல்லவில்லை. சாதி ஒழிய வேண்டும் என்றால் அதை ஒழிக்கும் ஆற்றல் பெண்ணிடம் மட்டுமே இருக்கிறது..
எனவே, பெண்ணிடமிருக்கும் அந்த ஆற்றலுக்குத் தடையாக குடும்பம் என்ற அமைப்பு இருந்தாலும் அதையும் கடந்து பெண் பொதுவெளிக்கு வர வேண்டும் என்று பாடுபட்டார். இந்த அடிப்படைக்கருத்தை திராவிட இயக்க பெண்ணியம் வளர்த்திருக்கிறதா?

சுயமரியாதை இயக்க கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் பெண்கள் பெருமளவில் வரவேண்டும், பங்கேற்க வேண்டும் என்று அன்று பெரியார் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். அப்படியே தோழர்களும் தங்கள் மனைவியுடன் வந்தார்கள். ஆனால் பெண்களின் அந்த வருகை எந்தளவுக்கு ஆண் – பெண் உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியது, குடும்ப பண்பாடு எந்தளவுக்கு மாற்றம் பெற்றது? பெரியார் பேசிய பெண்ணியக் கோட்பாடுகளை அவர் இயக்கத்தின் தோழர்களில் எத்தனைப் பேர் முழுமையாக கடைப்பிடித்தார்கள்? எத்தனைப் பேர் உள்வாங்கிக்கொண்டார்கள்? இந்தக் கேள்விகளை நாம் புறந்தள்ளிவிட முடியாது. இன்றைக்கும் சாதி எதிர்ப்புக்கான களத்தில், சாதிக் க்டந்த உறவுகளை கட்டியமைப்பதில் பெரியார் வழி வந்தவர்கள் முன்னணியில் இருக்கிறார்கள்.ஆனால் அவை தனிமனித அனுபவங்களாக குறுகிப்போய்விட்டன. அந்த அனுபவங்களை பொதுமைப்படுத்தும் பொதுவெளி இப்போது இல்லை., இன்னும்சொல்லப்போனால் 1950களில் திராவிட இயக்கம் வளர்த்த பண்பாடும் வாழ்ந்த வாழ்க்கையும் கடந்த காலமாகிவிட்டது.

திமுக ஆட்சிக் காலத்தின் பெருமையாக இரண்டு விசயங்களைப் பற்றி அடிக்கடி பேசிக்கொள்வார்கள். ஒன்று: பெரியாரின் சுயமரியாதை திருமணச்சட்டத்தை சட்டப்படி சேர்க்கப்பட்டது . இரண்டாவது பெரியார் கனவின் தொடர்ச்சியாக ” எவரும் அர்ச்சகர் ஆகலாம் ” என்று சட்டம் கொண்டு வந்தது.

இதைப் பற்றிய விவரங்களைச் சொல்லியே ஆகவேண்டும். பெரியாரின் சுயமரியாதை திருமணச்சட்டத்தை சட்டப்படியான திருமணமாக்கினார்களே. அந்த சுயமரியாதை திருமணச் சட்டம் இப்போதும் இந்து திருமணச்சட்டத்தின் கீழ் அதன் 7வது பிரிவின் உட்பிரிவாக 7 (அ) என்ற பிரிவில் சுயமரியாதை திருமணச்சட்டம் சேர்க்கப்பட்டது அதாவது 1956ல் பார்ப்பன புரோகிதம் விலக்கிய திருமணம் செல்லாது என்று தீர்ப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதே , அதில் ஒரு மாற்றமாக பார்ப்பன புரோகிதம் விலக்கிய திருமணமும் இந்து திருமணமாகிறது. இந்து திருமணத்தையே விலக்கியவர்கள் அத்திருமணத்தின் உட்பிரிவாகவே சுயமரியாதை திருமணத்தையும் சேர்த்திருப்பதை எப்படி திராவிட இயக்க வரலாற்றின் மாபெரும் சாதனையாகக் கொண்டாடுகின்றார்களோ தெரியவில்லை.

1929 முதல் 1967வரை 40 ஆண்டுகளில் நடந்த சுயமரியாதை திருமணங்கள் எத்தனை? அதன் பின் 1968ல் சுயமரியாதை திருமணச்சட்டம் நடப்புக்கு வந்தப்பின் 45 ஆண்டுகால திராவிடக்கட்சிகளின் ஆட்சியில் ஆண்டுக்கு எத்தனை சுயமரியாதை திருமணங்கள் நடந்திருக்கின்றன என்பதை தமிழக அரசு கணக்கெடுக்காமல் சுயமரியாதை திருமண செல்லுபடி சட்டம் செய்ததை மட்டும் ஒரு சாதனையாகச் சொல்லிச் சொல்லி மனநிறைவடைவது பொருத்தமற்ற செயல் ” என்கிறார் பெரியார் தொண்டர் ஆனைமுத்து அவர்கள். (சிந்தனையாளன் செப் 2013)

அடுத்தது அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசு ஆணை. “பூசாரி ஆகலாம்!அர்ச்சகர் ஆகமுடியாது? என்ற கேள்வியை எழுப்பி நான் ஏற்கனவே திண்ணை மின்னிதழில் எழுதி இருக்கின்றேன்.

எல்லோரும் தமிழ்நாட்டில் அர்சகராகலாம் என்று சட்டமியற்றப்பட்டதை தங்களின் மகா ம்கா சாதனையாக எழுதியும் பேசியும் என்னவோ பெரிய புரட்சி நடத்திவிட்டதாக அரசியல் கட்சி சொல்லிக்கொண்டிருக்கும்போதே விட்டேனா பார் என்று உச்சநீதிமன்றத்தில் இச்சட்டத்தை எதிர்த்து உடனே சிலர் வழக்குத் தொடுத்தார்கள். அதன் பின் என்னவோ அவர்கள் வழக்கு தொடுத்தக் காரணத்தாலேயே இந்த ஜாம்பவான்கள் நிறைவேற்றிய சட்டம் அமுலுக்கு வரமுடியாமல் போய்விட்ட மாதிரியும் ஒரு காட்சி உருவாக்கப்பட்டது!

நான் சட்டம் போடற மாதிரி போடறேன், எனக்கு அது தேவையாக இருக்கிறது, நீங்கள் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு போயீடுங்க, மறந்திடாதீங்க, என்று வாதியும் பிரதிவாதியும் ஒருவருக்கொருவர் பேசி வைத்துக்கொண்டு இந்த மாதிரி ஸ்டண்ட் அடிக்கிறார்களோ என்னவோ..

உச்ச நீதிமன்றத்தால் ஏன் செய்ய முடியாது என்று நம் அரசியல் தலைவர்களுக்குத் தெரியும்தானே.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அமுலுக்கு கொண்டுவரும் போது அச்சட்டத்தின் சொல்லப்பட்டவை மட்டுமே சட்டமாகவில்லை, அதற்கு முன்பிருந்த சட்டங்களும் வால் போல ஒட்டிக் கொண்டே வந்தன. அந்த வால் வலிமையானது என்பதை உணர்ந்த பாபாசாகிப் அம்பேத்கர் சட்டத்தில் மிகவும் தந்திரமாக நுழைக்கப்பட்டிருக்கும் வர்ணாசிரம தர்மம், சடங்கு சம்பிரதாயங்களைக் காப்பாற்றும் வரிகளை நீக்க இந்து சட்ட வரைவை முன்வைத்தார்.

(Dr. Ambedkar as chairman of the constitutuon drafting committee was aware that those who prepared the first draft of the constitution in 1947 had cunningly enjoined provisions to protect Varunashrama dharma and traditional customs and usages. with an aim to defeat their purpose , Ambedkar presented the amendment in the form of the “Hindu code bill ” in 1947, that all the laws which were in force till date of adoption of the Indian constitution will stand abolished)

ஆனால் அவர் தோல்வி அடைந்தார்.

எனவே மாநில அரசு சமூகப்புரட்சிகளை தன் சட்டங்களின் மூலம் சட்டமன்றத்தில் நிறைவேற்றினாலும் மதம் சார்ந்த சட்டங்களில் இருக்கும் இப்பிரச்சனை குறித்து எவரும் வெளிப்படையாக பேசுவதில்லை.

சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளும் திராவிட இயக்கத்தார் இந்தியாவெங்கும் பரவி இருக்கும் மக்களின் சடங்கு சம்பிரதாயங்களில் உயிரோட்டமாக
இருப்பவை திராவிட இனக்கூறுகளின் எச்சங்கள் தான் என்பதை வட இந்தியாவில் இருப்பவர்கள் கண்டு கொண்ட அளவுக்கு கூட திராவிட நாகரிகத்தைப் பேசிய இந்த இயக்கத்தார் கண்டுகொள்ளவில்லை. திராவிடம், திராவிட இனம் என்பதை தமிழகத்தின் எல்லைக்குள் குறுக்கிக்கொண்டார்கள்.

இக்காலக்கட்டத்தில் வாழ்ந்த பாபாசாகிப் அம்பேத்கர் இன அடையாளத்தையும் சாதி அடையாளத்தையும் பற்றி மிகத்தெளிவாக இருந்ததுடன் ஆரியர், ஆரியரல்லாதோர் என்பதையும் மறுக்கின்றார். அவருடைய ஆய்வுகளை மறுவாசிப்பு செய்ய திராவிட இயக்கம் முயற்சிக்கவில்லை.

இவ்வளவுக்கும் பிறகும் திராவிட இயக்கத்தின் பின்னால் கூட்டம் இருக்கிறது. ஆரம்பித்தால் கூதமிழ்நாட்டில் விஜயகாந்த் கட்சிக்கும் திராவிட என்ற பெயர் தேவைப்படுகிறது? ஏன்?

திமுகவிலிருந்து அதிமுக பிரிந்தப்பின் எம்ஜிஆர் காலத்திலேயே மோசமான போட்டி அரசியல் தமிழ்நாட்டில் நுழைந்தது.

திமுக அரசியலில் சோரம்போன காலக்கட்டத்தில் சில நம்பிக்கை நட்சத்திரஙகள் தோன்றாமலில்லை. தமிழக அரசியலில் தோன்றிய தமிழ்த்தேசியம் : திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்மொழிப்பற்றாளர்களுக்கும் இன உணர்வாளர்களுக்கும் நம்பிக்கை அளிக்கிறது , எனினும் மொழிப்பற்றும் இனப்பற்றும் சாதி ஏற்றத்தாழ்வுகளை நீக்கி தமிழ்த் தேசியத்தையும் தமிழ்த்தேசத்தையும் உருவாக்கிவிடுமா?

தேசிய இன கருத்துருவாக்கத்திற்கு மொழி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது “பொதுவான வாழ்விட உணர்வு” இது இன்றுவரை தமிழ் மண்ணில் சாத்தியப்பட்டிருக்கிறதா? தமிழ் மண் சேரியாகவும் ஊராகவும் பிரிந்து தானே இருக்கிறது. இது தமிழ்த்தேசியத்தின் தோல்வி.

அடுத்து திராவிட இயகக்த்துடன் இணையாகவும் இன்னும் சொல்லப்போனால் அதற்கு முன்பே வளர்ந்த ஆதிதிராவிட இயக்கம். இவர்களில் பலர் திராவிட இயக்கத்தில் சங்கமித்து காணாமல் போனார்கள். மீதி இருப்பவர்களும் ஒடுக்கப்பட்ட சாதியின் உள்சாதி அமைப்புகளாக சிதறிப்போனார்கள். அத்துடன் எப்போதும் திராவிட அரசியல் கட்சிகளின் வீசி எறியப்படும் எலும்புத்துண்டுகளுக்கு காத்திருக்கும் அவலமான நிலையில் இருக்கிறார்கள். சேரிகளும் கூட இந்த நாட்டில் தனித்தனியாக அவரவருக்கான உள்சாதி அடையாளங்களைத் தக்கவைத்துக்கொண்டு தான் இருக்கின்றன. இங்கேயும் நம்பிக்கை கானல்நீராகிவிட்டது. திராவிட அரசியல் குதிரைகளின் மீதேறி சவாரி செய்வதையை வழக்கமாக்கிக்கொண்டிருக்கும் இடது வலதுசாரிகளிடமிருந்து என்ன எதிர்ப்பார்க்கமுடியும்?

கலை இலக்கியத்தில் இக்காலக்கட்டத்தில் சமூக அக்கறையுடன் எழுந்த வானம்பாடி இயக்கம் , கல்லூரி காலங்களில் என் போன்றவர்களுக்கெல்லாம் மிகுந்த நம்பிக்கைகையைக் கொடுத்த ஓரியக்கம். ஆனால் என்னவானது?
திராவிட இயக்க அரசியலை மறுப்பதற்கான நியாயத்துடன் மார்க்சிய சார்பைக் கொண்ட வானம்பாடிகள் மார்க்சிய பார்வை காரணமாக மிக விரிவான உலக அளவிலான அரசியலை முன்வைத்தார்கள். வானம்பாடிகள் ஒரு சமூக அரசியல் புரட்சியை ஏற்படுத்தி இருக்க முடியும். ஆனால் கோவை ஞானி அய்யா அவர்கள் சொல்வது போல இவர்களும் “கவியரங்கம் நிகழ்த்த ஒரு சிறு குழுவைச் சேர்த்துக்கொண்டு கச்சேரி செய்து கொண்டிருந்தது. கவிதையில் கச்சேரியும் உரைநடையில் பட்டிமன்றமும் நடத்திக்கொண்டிருந்தார்கள். கருப்பொருளுக்கு கவிதை இயற்றுவது என்பதற்கு மேல் இது செல்லவில்லை. தாம் கேள்விப்படும் அரசியலை அப்படியே அங்கீகரித்துக் கொண்டார்களே தவிர கேள்விக்கு உட்படுத்திச் சரிவரத் தெரிந்து கொள்ளவில்லை. இவர்கள் சிந்தனாவாதிகளாக விமர்சகர்களாக விரிவடையவே இல்லை” என்கிறார்.

இவர்களும் திராவிட அரசியல் கட்சிகளின் விருதுகள், அங்கீகாரங்கள், பதவிகளுக்குள் தொலைந்து போனது இலக்கிய உலகத்திற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பு தான்.

அதிமுக, மதிமுக, தேதிமுக என்று திமுக வரிசையில் வரும் எந்த ஒரு திராவிட அரசியல் கட்சிக்கும் அதன் இயக்கத்திற்கும் எவ்விதமான தொடர்புகளும் கிடையாது.

திமுக எப்போதாவது பகுத்தறிவு பேசிக்கொள்வார்கள் ஆனால் செயல்பாடுகளில் பூஜ்யமாகிப்போனார்கள். அதிமுகாவிலோ பகுத்தறிவு பேசினால் பதவி பறிபோகும். திராவிடர் கழகமோ அரசாங்கத்தின் அனுமதியோடு பேரணிகளும் கூட்டங்களும் நடத்துவதையே பெரும்சாதனையாக சொல்லிக்கொள்கிறது.

தணிக்கை இல்லாமல் எங்கள் நாடகங்களை அரங்கேற்ற முடியும் என்றால் சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்திவிடுவோம் என்ற குரலுக்குச் சொந்தக்காரர்களின் கைவசம் இன்றைக்கு தொலைக்காட்சிகள் இருக்கின்றன. ஆனால் அவர்களால் எந்தப் பகுத்தறிவு கருத்துக்கும் அரைமணிநேரம் கூட ஒதுக்க முடியவில்லை. அண்ணாவின் நூற்றாண்டு கொண்டாடியபோது கூட அண்ணாவின் ஒரு நாடகத்தைக் கூட தொலைக்காட்சிகளில் காட்ட இவர்கள் யாரும் தயாராயில்லை.

திராவிட இயக்க திமுகவின் ஆரம்பகால தொடர்புச் சங்கிலி முழுவதும் அறுபட்டுவிட்டது.
.
திமுக இன்று ஓர் அரசியல் கட்சி என்று சொல்வதை விட ஓட்டுப்பொறுக்கி கார்ப்பரேட் நிறுவனம், பெரியாரின் அசையும் அசையா சொத்த்துக்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் இன்னொரு நிறுவனம் இன்றைய திராவிடர் கழகம்.

அரசியல் அதிகாரம் பதவி விருதுகள் எளிதில் கிடைக்கும் ஊடக அங்கீகாரம் என்ற விஷக்கிருமிகள் தமிழ்நாடெங்கும் பரவிவிட்டன. அரசியலை மட்டுமல்ல, கலை இலக்கிய உலகத்தையும் கரையானைப் போல அரித்து தின்று கொண்டிருக்கின்றன. இச்சூழலில் எழுகின்ற இயக்கங்களும் அமைப்புகளும் கலைவடிவங்களும் காலூன்றி நிற்பதற்கு முன்னரே காணாமல் போய்விடுகின்றன.

?

இந்த இயக்கத்தின் சுயமரியாதை, பகுத்தறிவு கருத்துகள் தமிழர் வாழ்வியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன.
இந்த இயக்கம் சமூகத்தில் பெண்ணிய தளத்தில் ஏற்படுத்தி இருக்கும் மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை.
அதை மறுப்பதற்கில்லை.

சரியோ தவறொ திமுகவும் இன்றைய கலைஞரும் திராவிட இயக்கத்தின் எச்சங்களாகவே கருதப்படுகிறார்கள். அவர்களின் அரசியல் , பதவி வேட்டையில் படிந்தக் கறைகள் இந்த இயக்கத்தின் மீதும் படிந்துவிட்டன. இந்தக் கறைகள் வெறும் தூசியல்ல என்கிற உண்மையை கனத்த இதயத்துடனேயே பதிவு செய்து விடை பெறுகின்றேன். .

குறிப்புகள்:

>திராவிட இயக்க நூற்றாண்டு – கி. வீரமணி
>திராவிட இயக்க வரலாறு: முதல்பகுதி – முரசொலிமாறன்
>சிந்தனையாளன் – டிசம்பர் 2013
>திராவிட இயக்க நாடகங்கள் – வெளி. ரங்கராஜன்.
>Dravidian movement in Tamil Nadu – by Marguerite Ross Barnett
> Caste , Nationalism adn Ethnicity – An interpretation of Tamil Culture
By Jacob Pandiyan.

> four stages of social movements By jonathan

இயக்கங்களில் சரிவுகளுக்கு காரணமாக ஆய்வாளர்கள் சில கருத்துகளை முன்வைக்கின்றார்கள்.

அடக்குமுறை, செயல்திட்ட மாற்றங்கள், அபரிதமான வெற்றி, நிறுவனமயமாதல் .

திராவிட இயக்கமும் இந்திய அரசின் மறைமுகமான அடக்குமுறையால் தன் அரசியல் கோட்பாடுகளைக் கைவிடுகிறது. அரசியல் கட்சிகளின் அபரிதமான வெற்றிகளில் செயல்திட்டங்கள் மாற்றம் பெறுகின்றன அல்லது கைவிட்டப்படுகின்றன. 1967 முதல் தொடர்ந்து 46 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட திராவிட கட்சிகள் தங்கள் கருத்துகளை இளைஞர்களிடன் பரப்ப எதுவும் செய்யவில்லை. தங்கள் அரசியல் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக பேரம் பேசும் நிறுவனங்களாகிவிட்டன. இயக்கங்கள் நிறுவனமயமாகும் போது சரிந்துவிடுகின்றன

1999ல் திமுக பிஜேபியின் அரசியல் கூட்டணியை ஏப்ரல் 26, 1999 அவுட்லுக் தன் கவர்ஸ்டோரியில் “ஒரு சகாப்தம் முடிந்தது” this is the end of an era என்று எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.

Series Navigation
author

புதிய மாதவி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *