இன்னொரு யுத்தம் (ஓர் உரைச்சித்திரம்)

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 29 in the series 25 மே 2014

எஸ்.எம்.ஏ.ராம்

(பழைய இதிகாசங்களைப் புதிய வெளிச்சத்தில் மீள்வாசிப்பு செய்தல்)

(விராட ராஜனின் அரண்மனை. அக்ஞாத வாசம் முடித்துப் பாண்டவர்கள் யுத்த நிமித்தம் மந்திராலோசனைக்காகக் கூடியிருக்கிறார்கள்.)

யுதிஷ்டிரன்: கிருஷ்ணா, துரியோதனிடம் தூது போன அந்தணர் தோல்வியோடு திரும்பி வந்து விட்டார். இனி ஆவதென்ன? யுத்தம் தானா? தருமன் தன் பங்குக்காக சுற்றத்தையே அழித்துக் குவித்தான் என்ற அவப்பெயர் எனக்கு ஏற்பட வேண்டுமா? வேண்டாம். துரியோதனனைச் சந்திக்கிற மனோபலமும் புத்திபலமும் அற்ற ஓர் ஏழைப் பிராமணன் தூது போனதாலேயே இந்த சமரச முயற்சி தோற்றுப் போனது. சாகசங்களில் வல்லவனே! நீயே இதற்குத் தகுதியானவன் எங்கள் பொருட்டு மீண்டும் துரியோதனனிடம் தூது செல். ஐந்து நிலங்களையாவது எங்களுக்காகக்  கேள். அதுவும் இல்லை என்றால் ஐந்து வீடுகளையாவது கேள். யுத்தத்தை மட்டும் கேட்காதே.

பீமன்: (கோபமாய்) இப்படிப் பேசுவதற்கு நீர் வெட்கப்படவில்லையா? ஓர் ஆண்மையும் நெஞ்சுரமும் மிக்க க்ஷத்திரியன் பேசுகிற பேச்சா இது? பதின்மூன்று வருஷங்கள் தினவெடுத்துக் கிடக்கும் என் தோள்களும் மரப் பொந்தில் தூசி மண்டிக் கிடக்கும் அர்ச்சுனனின் அஸ்திரங்களும் இத்தனை காலம் காத்துக் கிடந்தது, கடைசியில் ஒரு மந்திராலோசனை மண்டபத்தில் உமது இந்தப் பேடி உபதேசத்தைக் கேட்பதற்குத் தானா? உமக்காக அன்று அர்ச்சுனன் அந்தப் பெருங்காட்டை அழித்து அழகிய நகராகப் பண்ணியது வீண். உமது தர்மங்களுக்கும் மந்தித்த சாத்வீகங்களுக்கும் காடே ஏற்றது; நாடல்ல.

கிருஷ்ணன்: பீமா, அமைதி கொள். வெற்று வெறியில் அன்று நீங்கள் பண்ணின வீண் சபதங்களுக்காக இன்று உணர்ச்சி வசப்பட்டு உன் அண்ணனின் விவேகங்களைப் பழிக்காதே. தர்மபுத்திரர் எந்த சந்தர்பத்திலும் தர்மமே பேசுவார்.

(பாஞ்சாலி வேகமாய் உள்ளே நுழைகிறாள்.)

பாஞ்சாலி: புருஷோத்தமர்களே, மந்திராலோசனை மண்டபத்தில் அனுமதியின்றிப் பிரவேசித்ததற்காக மன்னியுங்கள். தர்மபுத்திரர் தர்மமே பேசட்டும்! ஆனால், அன்று அந்தப் புலைச்சபையில் விரித்தெறிந்தேனே இந்தக் கருங்கூந்தல்- இதன் கதி?

சகாதேவன்: பெண்ணே, சுருட்டிய கூந்தலை விட இந்த விரித்த கூந்தலே உனக்கு இன்னும் சோபையைக் கூட்டுகிறது! அதைக் கெடுத்துக் கொண்டு ஏன் கூந்தலை முடித்துக் கொள்ள ஆசைப்படுகிறாய்?

கிருஷ்ணன்: (புன்னகையோடு) ஆமாம், பாஞ்சாலி. உன் கூந்தல் எத்தனை நீளம் தெரியுமா! மேகம் கண்டு தன் முழுத்தோகையையும் விரித்துக் கொண்டு நிற்கும் ஒரு மாலைக் காலத்து மயிலைப் போல நீ இப்போது காட்சி தருகிறாய்.

திரௌபதி: (சினத்தோடு) சே, இந்த ஆடவர்கள் எத்தனைக் கொடூரமான ரசனை படைத்தவர்கள்! குருதி கொதிக்க வேண்டிய நேரத்திலும் இவர்கள் ஒரு பெண்ணின் கூந்தலை ரசித்துக் கொண்டு நிற்கிறார்கள். ஐயோ, நீங்கள் எல்லாம் ரசிப்பதற்காகவா நான் என் கூந்தலை அவிழ்த்தெறிந்தேன்? என் சுயமரியாதைகள் அனைத்தும் உங்கள் சுயநலமிக்க வறட்டு தர்மங்களின் கனலில் உருகி வெந்து போக வேண்டியது தானா? மனைவியின் உணர்வுகளை மதிக்கிற புருஷன் ஒருவன் கூட இந்த உலகில் தோன்றவே மாட்டானா? (துயரத்தோடு வெளியேறுகிறாள்)

(கிருஷ்ணன் கைகளைக் கட்டிக் கொண்டு குறுக்கும் நெடுக்கும் உலவுகிறான். சற்று நேரம் அவையில் அமைதி நிலவுகிறது. எல்லோர் முகத்திலும் கவலை படர்ந்திருக்கிறது. கிருஷ்ணனே மௌனத்தைக் கலைக்கிறான்.)

கிருஷ்ணன்: இந்தப் பிரச்சனையை ஏன் வீணே வளர்க்கிறீர்கள்? தர்மன் யுத்தத்தை விரும்பவில்லை. உங்களில் ஒவ்வொருவராய்ச் சொல்லுங்கள். யாருக்கு யுத்தத்தில் விருப்பமுண்டு, யாருக்கு இல்லை?

(மறுபடியும் மௌனம் பரவுகிறது. எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பேசாமால் இருக்கிறார்கள். சட்டென்று பீமன் எழுந்து வந்து தன் கதையைக் கண்ணனின் முன் தரையில் வெறுப்போடு வீசி எறிகிறான்)

பீமன்: என் கதை உளுத்துப் போகட்டும் கிருஷ்ணா. மூத்தவனின் வழி நிற்பது தானே இளையவனின் தருமம்? யுத்தத்தை நீ போய்த் தாராளமாய்த் தவிர்த்து விடலாம்.

(அர்ச்சுனன் எழுந்து வந்து தனது காண்டீபத்தைத் தரையில் போடுகிறான்.)

அர்ச்சுனன்: என் காண்டீபமும் எந்த மரப் பொந்திலாவது தொடர்ந்து உறங்கட்டும். என் அம்பறாத்தூணியில் இனி அரண்மனைப் பெண்கள் அர்ச்சனைக்குப் புஷ்பங்கள் எடுத்துச் செல்லட்டும். யுத்தம் எதற்கு? அண்ணன் சொற்படி ஐந்து வீடுகளையாவது யாசகம் பெற்று அந்தணர்களைப் போல உஞ்சவிருத்தி பண்ணிக் கொண்டு சமாதான சக வாழ்க்கை வாழ்வோம்.

நகுலன்: (எழுந்து வந்து) கூடவே துரியோதனிடம் எனக்கு ஒரு குதிரை லாயம் மட்டும் தானமாய் வாங்கி வா, மதுசூதனா. மனிதர்களுடன் யுத்தம் பண்ணுவதை விடக் குதிரைக்குக் கொள்ளு காட்டுவது சுகமானது!

கிருஷ்ணன்: சகாதேவா! நீ என்ன சொல்லப் போகிறாய்?

சகாதேவன்: மூத்தவனின் தர்மமே இளையவனின் தர்மமாமே? அவ்விதமானால் புருஷன்மார்களின் தர்மமே மனைவியரின் தர்மம் என்பதும் சரி தான். அடடா! புருஷனை விட மனைவி இளையவளாய் இருக்க வேண்டியதின் சூட்சுமம் இப்போதல்லாவா விளங்குகிறது! இனித் திரௌபதியின் தர்மத்தைப் பற்றி நமக்கென்ன கவலை? அர்ச்சுனனிடமிருந்து நன்கு தீட்டிய வாளாய் ஒன்று எனக்கு வாங்கிக் கொடு, கிருஷ்ணா. திரௌபதியின் அந்த அழகிய தலைக் குழலை முழுமையாய் அரிந்து கொய்து விடுகிறேன். இனி அது அவளுக்கெதற்கு? நீ சந்தோஷமாய்த் தூது போய் சமரசம் பேசி விட்டு வரலாம். வரும்போது முடிந்தால், அஸ்தினாபுரத்துச் சுவடிச் சாலையிலிருந்து தத்துவச் சுவடிகள் ஏதாவது இரவலாய் வாங்கி வா. அமைதிக் காலத்தில் அவை எனக்குக் கொறிப்பதற்குப் பயன்படும்.

துருபதன்: (துக்கம் தோய்ந்த குரலில்) அர்ச்சுனனை மணக்கவென்று ஒரு மகளும், துரோணரை வதைக்கவென்று ஒரு பிள்ளையும் வரம் வேண்டிப் பெற்றேன். முன்னது மெய்யானது. பின்னது பொய்யாகி விடுமா?

சகாதேவன்: (சிரித்து) முன்னதே ஐந்தில் ஒரு பாகம் தான் மெய்யாகி இருக்கிறது துருபதரே! அர்ச்சுனன் பெற்றுக் கொண்டது துரௌபதியில் ஐந்தில் ஒரு பங்கு தானே!

திருஷ்டத்யும்னன்: (சீற்றத்தோடு) விளையாடுவதற்கு இது நேரமில்லை. துரோணரை சம்ஹரிக்கும் நோக்கிலேயே என் பிறப்பு நேர்ந்தது. அது இந்தப் போர் நிறுத்த முயற்சிகளால் பயனற்று வீணாகப் போகிறது.

சகாதேவன்: (விரக்திச் சிரிப்போடு) ஒரு பிறப்பின் நோக்கம் இன்னொன்றின் மரணமாய் இருத்தல் மிகவும் கொடிய விசித்திரம் தான். மனித நாகரிக வளர்ச்சியில் எங்கோ வெளித்தெரியாமால் கோளாறு நேர்ந்திருக்கிறது.

கிருஷ்ணன்: திருஷ்டத்யும்னா, உன் தந்தை பெற்ற வரம் பொய்க்குமானால், துரோணரைப் போன்ற ஒரு மகாவீரரை இந்த உலகம் பாதுகாத்துக் கொள்ளும். ஒரு சுத்த வீரன் சாகாமல் எஞ்சியிருப்பது க்ஷத்திரிய குலத்துக்கு நல்லது தானே!

சகாதேவன்: அது போலவே திரௌபதியின் சபதமும் பொய்க்குமானால் பெண்குலத்துக்கே நல்லதாய் முடியும். ஏனென்றால், வருங்காலத்தில் ஓர் ஆணை நம்பித் தன் கூந்தலை அவிழ்த்தெறிகிற அசட்டுத் தனத்தை எந்தப் பெண்ணும் செய்ய மாட்டாள்.

கிருஷ்ணன்:(கனைத்து) நல்லது, ராஜகுமாரர்களே! அப்படியானால் நான் புறப்படுகிறேன். துரியோதனன் மனதை மாற்றி நல்ல செய்தியோடு வருவதற்கு முயலுவேன். யுதிஷ்ட்ரரே, உங்கள் எல்லாரிடமும் அபிப்பிராயம் கேட்ட மாதிரியே துருபத குமாரியிடமும் ஒரு வார்த்தை கேட்டு விட்டுப் போவதில் உமக்கு ஆட்சேபனை இல்லையே?

யுதிஷ்ட்ரன்: சே,சே..வேண்டாம். அரச விவகாரங்களில் பெண்களிடம் அபிப்பிராயம் கேட்பது நமது நியதி இல்லை. அது விவேகமும் அல்ல.

 

சகாதேவன்: உண்மை தான் கிருஷ்ணா! பெண்கள் நமக்குத் தேவையாய் இருப்பது அந்தப்புரங்களில் மட்டுமே. அபிப்பிராயங்களில் அல்ல. பாவம், அவர்கள் அபலைகள்! பிள்ளை பெறுவதற்கு மேல் அவர்களுக்கு வேறொன்றும் செய்யத் தெரியாது. ஆண்களே வருங்காலத்தில் பிள்ளை பெற முடியும் என்றால், அந்த சிரமத்தையும் அவர்களிடத்தில் கொடுக்க வேண்டிய அவசியம் நேராது!

யுதிஷ்ட்ரன்: சகாதேவன் எல்லாரையும் குழப்புவது என்று தீர்மானித்து விட்டான். கிருஷ்ணா, நீ யாரிடம் வேண்டுமானாலும் அபிப்பிராயம் கேட்டுக் கொண்டு போ. உனது தூதே எனக்கு முக்கியம். அது பற்றி யார் சொல்கிற அபிப்பிராயாங்களும் அல்ல.

(கிருஷ்ணன் கிளம்புகிறான். சகாதேவன் எதையோ நினைத்து வாய்விட்டுச் சிரிக்கிறான். கிருஷ்ணன் திரும்பிப் பார்க்கிறான். சகாதேவன் ‘ஒன்றுமில்லை, கிருஷ்ணா, நீ போ..’ என்கிறான். கிருஷ்ணன் நிலைவாயிலைக் கடக்கிற போது தானும் எதற்கோ சிரித்து விட்டுப் போகிறான்.)

***********

(வேறு காட்சி)

(அரண்மனை அந்தப்புரம். திரௌபதியும் கிருஷ்ணனும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.)

திரௌபதி: (சிவந்த விழிகளோடு) அங்கிருந்தவர்கள் எல்லாம் ஆண்பிள்ளைகள் தானா, அல்லது, தன்மானத்தை அடகு கொடுத்து விட்ட கோழைகளா?

கிருஷ்ணன்: அவர்களைப் பார்த்தால், ஆண் பிள்ளைகளைப் போலத்தான் தோன்றியது, துருபத குமாரி! சமாதான நாட்டம் கோழைத்தனத்தோடு சேர்த்தியாகுமா?

திரௌபதி: (ஏதோ யோசித்து விட்டு) அவர்கள் ஆண் பிள்ளைகளாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், எந்த சந்தர்ப்பத்திலும் ஆண் பிள்ளைகள் அப்படித் தான் நடத்து கொள்வார்கள்.

கிருஷ்ணன்: எப்படி நடந்து கொள்வார்கள்?

திரௌபதி: தங்கள் சுயதர்மத்தையே மேலானதாகக் கருதுவார்கள். பெண்களை வெறும் அடிமைச் சரக்காய் எண்ணுவார்கள். அவர்களின் மனோபாவங்களை ஓர் ஒப்புக்காகக் கூடக் கணக்கில் கொள்ள மாட்டார்கள்.

கிருஷ்ணன்: நீ என்ன சொல்கிறாய்? ஒரு பெண்ணின் சபதத்துக்காகக் கணக்கற்ற ஆண்கள் யுத்த களத்தில் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும் என்கிறாயா?

திரௌபதி” (சிறிது மௌனத்திற்குப் பின்) ஒரு பெண்ணின் சரீரத்துக்காக மட்டுமே அவர்கள் சண்டையிட்டுக் கொள்ள வேண்டுமா, கிருஷ்ணா?

கிருஷ்ணன்: (தடுமாற்றங்களுடன்) பெண்ணிடம் அபிப்பிராயம் கேட்காதே என்று இதற்குத் தான் தர்மபுத்திரர் சொன்னார் போலிருக்கிறது!

திரௌபதி: (ஆவேசத்துடன்) அப்படியா சொன்னார்? ஐயோ, இது எத்தகைய அவமானம்! ஒரு பெண்ணின் உணர்வுகளைப் பலியிடுவது தர்மருக்கு இது மூன்றாவது தடவை! தன்மானமுள்ள எந்த ஒரு க்ஷத்திரியப் பெண்ணும் இதைத் தொடர்ந்து சகித்துக் கொள்ள மாட்டாள்.

கிருஷ்ணன்: மற்ற இரண்டு தடவைகள் எது, எது திரௌபதி?

திரௌபதி: தன் தாயின் வார்த்தைகளைச் சாக்காகக் காட்டி, அர்ச்சுனன் வெற்றி கொண்ட என்னை, ஐவருமே பங்கு போட்டுக் கொண்டது, முதல் தடவை. பின் அந்த நீசர்களின் சபையில் அந்தப் பாவி துச்சாதனன் என்னை நிர்வாணமாக்க முயன்ற போது, பொங்கி எழுந்த வீமனையும் அர்ச்சுனனையும் அடக்கி விட்டுத் தானும் பேடியாய்ச் செயலற்று அமர்ந்திருந்தது இரண்டாம் தடவை.

(கிருஷ்ணன் பதில் பேசாது கைகளைக் கட்டிக் கொண்டு உலவுகிறான்.)

திரௌபதி: கிருஷ்ணா, அந்த சகாதேவன் எதுவும் சொல்லவில்லையா?

கிருஷ்ணன்: சொன்னான், திரௌபதி. உன் கூந்தலை அரிந்து கொய்து விட்டு யுத்தத்தையும்   நிறுத்தச் சொன்னான்.

திரௌபதி: (முகத்தில் ஒரு மின்னல் ஓட) ஆகா, அவன் புத்திமான்! ஒரு பெண்ணின் சுயமரியாதையைத் தான் அவன் கூந்தல் என்று குறிப்பிட்டிருக்கிறான். கிருஷ்ணா, சதா பெண்கள் மத்தியிலேயே இருந்து பழகிய ஆண்பிள்ளையாயிற்றே, நீ? ஒரு பெண்ணின் இயல்புகள் கொஞ்சமேனும் உன்னிடம் தொற்றியிருக்காதா? என் மனப் போராட்டாங்களின் நியாயங்களை நீயாவது புரிந்து  கொண்டு எனக்கு உபகாரம் செய்.

கிருஷ்ணன்: தூது போகாதே என்கிறாயா?

திரௌபதி: இல்லை, கிருஷ்ணா. ஆனால், இந்த தூதை ஒரு நாடகமாக்கு. பெண் தர்மத்தைக் காப்பாற்ற வேண்டி இந்த ஆண்பிள்ளைகளை யுத்தத்தில் இழுத்து விடு.

கிருஷ்ணன்: இது அதிகபட்சமான வேண்டுகோள் திரௌபதி! வேறு ஏதேனும் கேள்.

திரௌபதி: கிருஷ்ணா, நீயும் நன்றி மறந்தாய். அன்று ஆற்று நீரில் நீ உன் கௌபீனத்தைப் பறிகொடுத்து விட்டுக் கரையேற முடியாமல் தவித்த போது, என் சேலைத் தலைப்பைக் கிழித்து உன் பக்கம் வீசி உன்னை அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றினேன்…

கிருஷ்ணன்: அதற்குப் பிரதி தான் நான் எப்போதோ செய்து விட்டேனே? அன்று, துரியோதனன் சபையில் உன் புருஷன்மார்கள் கையாலாகாதவர்களாய்ச் சமைந்து கிடந்த போது, குவியல் குவியலாகச் சேலைகளை அனுப்பி உன் மானம் காத்தது உபகாரம் இல்லையா, துருபதபுத்ரி?

திரௌபதி: அதற்காக நான் உனக்குக் கடமைப் பட்டிருக்கிறேன், கிருஷ்ணா. ஆனால், அன்று நீ செய்தது, என் கணக்கில் பிரதி உபகாரம் என்பதை விட,, உன் கணக்கில் பரிகாரமாகத் தான் அது வரவு வைக்கப் பட்டிருக்கிறது. உனக்கு  நினைவிருக்கிறதா, கிருஷ்ணா, அன்றைக்கு யமுனைக் கரையில் அத்தனை யாதவப் பெண்களின் புடவைகளையும் ஒளித்து வைத்து, அவர்களின் தவிப்பை வேடிக்கை பார்த்த உன் அந்தப் பொல்லாத விளையாட்டை? அது ஒரு வெறும் பிள்ளைப் பிராயத்துக் குறும்பு தான் என்பதையும், அதைத் துச்சாதனின் நீசத் தனத்தோடு ஒப்பிடுவது தவறு என்பதையும் நான் அறிவேன். இருந்தாலும், ஒரே மாதிரியான செயல்கள், நோக்கங்கள் வேறு வேறானாலும், தங்கள் தோற்றப் பிழைகளால் தவிர்க்க முடியாமல் அறிவு மயக்கங்களை  உண்டு பண்ணி விட்டுப் போய் விடுகின்றன.

கிருஷ்ணன்: என்னைத் தர்மசங்கடத்தில் இழுத்து விடுகிறாய் பெண்ணே.

திரௌபதி: ஒவ்வொரு தர்மமும் ஒரு சங்கடம் தான் கண்ணா! நீ என் பொருட்டு வரவழைக்கப் போகிற இந்த மகா யுத்தம், வெறும்  பங்காளிப் போராட்டமாய் வெளி உலகுக்குத் தோற்றம் காட்டட்டும். ஆனால் இதன் பின்னணியில் தொடர்ந்து நசுக்கப் பட்ட ஸ்த்ரீபிம்பமே இந்த ஆண் வர்க்கத்தைப் பழி தீர்க்கிற ஆவேசத்தோடு சூட்சுமமாய் விஸ்வரூபமெடுத்து உள் நிற்கும். புருஷ தர்மங்களைப் பேணுவதே ஒரு பெண்ணின் தொழிலாக ஆதிக்க வெறியில் இவர்கள் இங்கே ஸ்தாபித்த அந்தப் புலைச்சாத்திரம் இந்த யுத்தத்தில் இவர்களோடு சேர்ந்து தானும் மரணமடையும். பாண்டவர்கள் ஜெயித்த பிற்பாடும் கூட, இந்தப் படுகொலைகளைத் தவிர்க்க முடியாமால் தாங்கள் அதர்மவான்களாகிப் போனதற்காக அல்லும் பகலும் அவர்கள் மனம் அமைதியின்றிப் புழுங்கும்….

கிருஷ்ணன்: திரௌபதீ, சாந்தமடை. உன் ஆசைகளை நான் நிறைவேற்றி வைக்கிறேன். மகாபாரதப் போர், ஒரு பங்குப் பிரச்சனையாய் பாண்டவர்களுக்கும் அவர்களது  நூறு சகோதரர்களுக்கும் நேர்ந்ததென்று நாளைய உலகம் நன்றாய் ஏமாறும். ஏன் இந்த வியாசன் கூட அவ்விதமே ஏமாறுவான். ஆனால், அது உண்மையில் ஓர் ஆண்-பெண் கௌரவப் பிரச்சனையாய், திரௌபதிக்கும் அவளின் ஐந்து புருஷர்களுக்கும்  நடந்த யுத்தம் என்பது நீயும் நானும் மட்டுமே அறிந்த ரகசியங்களாய் இருக்கும்.

திரௌபதி: (கண்ணீரைத் துடைத்துக் கொண்டு) கிருஷ்ணா, உண்மையில் உன் வாக்கு சத்தியமாகுமா? எனக்கு நீ அத்தகைய உதவியும் செய்வாயா?

கிருஷ்ணன்: செய்கிறேன் பாஞ்சாலி. இந்தத் தூதை வீணாக்குவதற்காகவே, துரியோதனின் விருந்தேர்ப்பாடுகளை எல்லாம் புறக்கணித்து விட்டு, அந்த ஏழை விதுரன் வீட்டில் போஜனம் பண்ணி விட்டுப் போவேன். திருதராஷ்டிர புத்திரனுக்கு இதை விடப் பெரிய அகௌரவம்  வேறு நேரமுடியாதாகையால், அவன் எரிச்சலடைந்து தூதுவனாகப் போகும் என்னை அவமானப் படுத்தி விரட்டுவான். பாண்டவர்களின் தூது தோற்கும். திரௌபதியின் அந்தரங்கம் வெல்லும். யுத்தம் மூளும்.

திரௌபதி: அந்த யுத்தகளத்திலேயே பெண்ணைப் பணயப் பொருளாக்கிப் பகடை ஆடிய இந்த ஆண்களின் அகங்காரம் அழிந்து நிர்மூலமாகும்..(சற்று அமைதிக்குப் பின்) இதில் உனக்கும் லாபங்கள் உண்டு கிருஷ்ணா. அரண்மனை விருந்தை விலக்கி விட்டு அந்த ஏழை விதுரனின் குடிலில் உணவருந்தப் போவதால், உனக்கு ஏழைப் பங்காளன் என்று இன்னொரு திருநாமம் கிட்டும்!

கிருஷ்ணன்: (நழுவுகிற மேலங்கியைச் சரி செய்து கொண்டு) உன்னை அந்தப் பாண்டு புத்திரர்கள் ரொம்பவுமே  குறைவாக எடை போட்டு விட்டார்கள், திரௌபதி! சரி, நான் வரட்டுமா? கடைசியில் நீயே ஜெயித்தாய்.

திரௌபதி: ஆமாம்; ரகசியமாய்! ஏனென்றால், ஓர் ஆணின் ஜெயங்களைப் போல், ஒரு பெண்ணின் ஜெயங்கள் அம்பலத்துக்கு வருவதில்லை. அல்லது, அப்படி வர அனுமதிக்கப் படுவதில்லை.

கிருஷ்ணன்: (போகிற போக்கில்) ஆனால், ஒரு பெண் ஜெயிப்பதற்கும் கடைசியில் ஓர் ஆண் பிள்ளையே வேண்டி இருக்கிறதென்பதை மறந்து விடாதே, பாண்டவ தேவி!

திரௌபதி: (பெரிதாய்ச் சிரித்து) அநீதி இழைக்கப் பட்ட வர்க்கத்திற்கான பிராயச்சித்தம், அநீதி இழைத்த வர்க்கத்திடமிருந்து வருவது தான் நியாயம், கிருஷ்ணா!

(கிருஷ்ணன் பதில் எதுவும் சொல்லத் தெரியாமல், ஓர் அசட்டுச் சிரிப்புடன் அங்கிருந்து நழுவுகிறான். திரௌபதி, தான் கடைசியாய்ச் சொன்னதை நினைத்தோ  என்னவோ, தனக்குத் தானே குலுங்கிச் சிரித்துக் கொண்டிருக்கிறாள். அந்தச் சிரிப்பின் குலுங்கலில்  அவளது விரிந்த கூந்தலின் பிரிந்த முடிக் கற்றைகள் அதிர்ந்து அதிர்ந்து, தீப ஒளியில்  தீ நாக்குகள் போல் காற்றில் அலைகின்றன.)

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *