பயணச்சுவை 7 . ஆங்கிலேயர் அளித்த கொடை !

author
0 minutes, 1 second Read
This entry is part 1 of 29 in the series 25 மே 2014

வில்லவன் கோதை

அடுத்தநாள் அதிகாலை ஆவிபறக்கும் காபியோடு எழுப்பினார்கள் விடுதிப்பணியாளர்கள். படுக்கையிலிருந்து எழுந்த நாங்கள் காலைக் கடன்களை ஒருவாறு முடித்து மிதமான உணவு உட்கொண்டோம். தயாராக நின்றிருந்த இரண்டு கார்களும் பயணத்தை துவக்கின.
இடையில் குறுக்கிட்ட ஏற்காடு பேரூந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. சேலத்துக்கும் இரு வேறு திசைகளுக்கும் அடுத்தடுத்து பேரூந்துகள் இயக்கப்படுவதாக சொன்னார்கள்.
பகோடா முனைக்கு முன்னாலேயே இரண்டு புகழ்வாய்ந்த கிருத்துவ உறைவிட பள்ளிகளைக்காண முடிந்தன. எவரும் எளிதில் நெருங்கமுடியாத கம்பீரம்.
1894 ல் துவக்கப்பெற்ற ( SACRRED HEART CONVENT ) புனித இருதயம் உண்டு உறைவிடப்பள்ளி.
இதில் ஆரம்ப காலங்களில் இருபாலரையும் அனுமதித்தார்களாம் காலப்போக்கில் பெண்களுக்கென தனியொரு பள்ளியாயிற்று. நண்பர் தங்கவேலுவின் பேத்திகள் இங்கேதான் படிப்பதாக சொன்னார்.

இன்னொன்று 1917 துவக்கப்பெற்ற ( MONT FOTR ) மாண்ட் போர்ட் உண்டு உறைவிட பள்ளி இது இருபாலருக்கும் உகந்ததாக அமைந்திருக்கிறது.
பச்சிளம் குழந்தைகள் இந்த பள்ளிகளில் மாதம் ஒருமுறை மட்டுமே பெற்றவர்களையும் உற்றவர்களையும் காண சுற்றுச்சுவர்களுக்கு வெளியே வரமுடியும். இந்த கட்டுப்பாடுகளில் எனக்கு மாறுபட்ட கருத்திருந்தாலும் இந்த வாய்ப்புகளை நானும் பெறவில்லை என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்தது.
இன்றைய பாமாக வாரிசு அன்புமணி ராமதாஸ் , காங்கிரஸ் பேரியக்கத்தின் விளையாட்டுப்பிள்ளை சசி தரூர் , நடிகர் விக்ரம் , கிரிக்கட் வீரர் ரோஜர் பின்னி , திமுகா பிரமுகர் மதுரை பி டி ஆர் பழனிவேல் ராஜன் இவர்கள் எல்லாம் இங்கே படித்தவர்கள் என்ற தகவலை சொன்னார்கள். ஒழுக்கத்தையும் உழைப்பையும் சொல்லித்தரும் இந்த பள்ளிகளில் படித்த இவர்கள் நான் அறிந்தவரையில் பொதுவாக இந்த பள்ளிக்கு பெருமை சேர்த்தவர்களே.
. சேலத்தைச்சூழ்ந்த பகுதிகளில் வாழ்ந்த ஐரோப்பியர்கள் தங்கள் குழந்தைகளின் நலனைக்கருத்தில் கொண்டு துவக்கப்பட்ட இந்தபள்ளிகள் ஆங்கிலேயர்கள் நமக்கு அளித்த கொடை என்றே சொல்லலாம்.
இதோடல்லாமல் கன்னிகாஸ்ரீ மாடங்களும் ஒருசில இறையியல் கல்லூரிகளும் ஏற்காட்டில் இயங்கிவருவதை அறிந்தேன். ஆண்டுமுழுதும் சீரான வெப்பநிலையைப் பெற்ற ஏற்காட்டை ஆங்கிலேயர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டவிதம் நாம் கற்கவேண்டியவை. இவைகள் மட்டுமல்லாமல் பல்வேறு தனியார் பள்ளிகளும் அரசு பள்ளிகளும்கூட ஏற்காட்டில் காணமுடிகிறது.
ஏற்காடு ஏரியின் மேல்கரையையொட்டி வடக்குநோக்கி நீண்டு கிடந்த குறுகியசாலையில் எங்கள் பயணம் ஆரம்பமாயிற்று. கரடுமுரடாக காணப்பட்ட அந்த சாலையில் சாலையை விரிவாக்கும் பணி நடப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டது. இருப்பினும் இப்போதைக்கு இந்த பணி முடிவடையும் என்று தோன்றவில்லை.
கடல் கடந்து வர்த்தகம் செய்யவந்த வெள்ளையர்கள் இந்த வனப்பகுதியை சொகுசுப்பிரதேசமாக கண்டார்கள். கனவான்கள் இளைப்பாரவும் , குழந்தைகள் கல்வி பயிலவும் , கன்னிகாஸ்ரீகள் இறைப்பணி ஏற்கவும் தகுந்த இடமாக அவர்களுக்குத் தோன்றிற்று.
ஆனால் இன்று நம்மை ஆள்வோர்க்கு இந்த ஏற்காட்டின் அருமை பெருமைகள் புரிந்ததாக தெரியவில்லை.அதர்க்கான நேரமும் சிந்தனையும் அவர்களுக்கு இருப்பதாகவும் தோன்றவில்லை.
மெல்ல மெல்ல மேலேறிய வாகனங்கள் அடுத்த ஐந்து நிமிடங்களில் ஓரம் கட்டப்பட்டன. எங்களுக்கு முன்னதாகவே வேறு சில வாகனங்களும் சாலையோரத்தில் நின்றிருந்தன.
சாலையின் மேற்குச்சரிவில் செங்குத்தாக படிகள் அமைத்து ஒரு நந்தவனத்துக்குள் அருள்மிகு இராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில் கொண்டிருந்தாள்.ஏறக்குறைய கல்கத்தா காளியை நினைவூட்டும் வடிவம்.
திரைமூடி அலங்கரிக்கப்பெற்ற அம்மன் அடுத்த பத்து நிமிடங்களில் எங்களுக்கு காட்சி கொடுத்தாள்.
திருவண்ணாமலையை ஒட்டி காணப்படும் திருக்கோவிலூர் தபோவனத்தைச்சார்ந்த ஒரு சாது ஏற்படுத்திய ஆலயமாம் . அம்மனை தரிசித்து அடுத் த இடத்துக்குப் பயணித்தோம்.
மீண்டும் வண்டிகள் மலையேறத்துவங்கின. ஏற்காட்டின் அதிகபட்ச உயரத்தில் ஏறிக்கொண்டிருப்பது எங்களால் உணரமுடிந்தது. ஏற்காட்டின் முழுமையான தோற்றம் பருந்துப்பார்வையாய் மாறிமாறி எங்கள் கண்களுக்குப்பட்டு வியப்பை ஏற்படுத்திற்று. நாலாபுறங்களிலும் சிறிதும் பெரிதுமான பச்சைப்பசேலென்ற குன்றுகள் , வளைந்து வளைந்து குன்றுகளின் உச்சியை எட்ட முயற்சிக்கும் ஒற்றையடிப்பாதைகள் பார்க்கப்பார்க்க கண்கொள்ளா காட்சியாயிருந்தது
உயர்ந்த மேடு ஒன்றில் தம்பிடித்து ஏறிய வண்டிகள் இப்போது வளைந்து சரிந்து ஒரு திருப்பத்தில் நின்றன.
‘ 3400 அடி உயரம் ! இப்போது ஏற்காட்டின் மிக உயரமான பகுதியிலிருக்கிறோம் ! ’
என்றார் தங்கவேலு
ஆழ்ந்த பெருமூச்சுடன் இறுக்கத்தை.தளர்த்திக்கொண்டு வண்டியிலிருந்து இறங்கினோம் .
( அடுத்தவாரம் சந்திக்கலாம் ! )
slide2-vert

DSC00146

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *