புதியதைத் தேடுகிறார் {வளவ.துரையனின் “ஒரு சிறு தூறல்” கவிதைத் தொகுப்பை முன் வைத்து}

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

கோ. மன்றவாணன்

இந்த உலகம் உயிரோட்டமாக இருப்பதற்கும்- புதுப்பொலிவோடு சிறப்பதற்கும், ஒரு காரணம் உண்டு. அது, காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்வதுதான்! இதில் கவிதைக்கு விதிவிலக்கு இல்லை. காலத்துக்கேற்ப கவிதை மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு கவிஞனின் வாழ்நாளிலேயே கவிதையின் போக்கு மாறிப்போய் விடுகிறது.
புளித்துப் போன சொற்களாலும், சலித்துப்போன உவமைகளாலும், அலுத்துப்போன உத்திகளாலும், இனி கவிதை எழுதினால் யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். புகழ் பெற்ற பல கவிப்பேரரசுகளே கூட, ஒரு காலத்தில் எழுதிய அதே பாணியைக் கடைசி வரை கடைப்பிடித்துத் துருப்பிடித்துப் போகிறார்கள். கவிதை மாறும்போது கவிஞனும் மாறவேண்டும். இல்லை எனில் இக்கவிதை நூலின் முதல் கவிதையான ‘ பார்வை ‘ என்ற கவிதையில் சொல்லப்படும் பழுதாகி நிற்கும் பேருந்துபோல் கவிஞனின் நிலை மாறி விடும்.
அட்டா………..என்ன அதிசயம் இது! நம் கவிஞர் வளவ. துரையன் தன் இலக்கிய வாழ்வின் ஒவ்வொரு கால கட்டத்திற்கும் ஏற்ப கவிதையின் போக்கிலேயே பயணம் செய்திருக்கிறார். சில வேளைகளில் கவிதையின் போக்கையே மாற்றி மற்றவர்களுக்கு வழிகாட்டியும் இருக்கிறார்.
வெண்பா, விருத்தப்பா வகைகளில் விளையாடிய நம் கவிஞர் இன்றைய நவீன கவிதைகளிலும் தனக்கென ஒரு நட்சத்திர மேடையை அமைத்துக் கொண்டிருக்கிறார். நித்தமும் தன்னைப் புதுப்பித்துக் கொள்வதால் இவரை ”இலக்கிய மார்க்கண்டேயர்” எனப் புகழலாம்
மரபுக் கவிதை, வசன கவிதை, புதுக் கவிதை, நவ கவிதை, நவீன கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, சொற்பொழிவு எனப் பன்முக ஆற்றல்களை நிறைவாகப் பெற்றவர் பாச்சுடர் வளவ. துரையன். இவையன்றி மாதந்தோறும் இலக்கியக் கூட்டங்கள், இறையியல் நிகழ்ச்சிகள் நடத்தி, ஒரு சிறந்த தமிழ் வளர்ச்சிச் செயல்பாட்டாளராகவும் திகழ்கிறார். பல நூல்களை எழுதிப் பல பரிசுகளும் பெற்றிருக்கிறார்.
வளவ. துரையன் அவர்களின் நுட்பமான கவியுணர்வின் செப்பமான வெளிப்பாடுதான் ” ஒரு சிறு தூறல் “ என்ற இந்தக் கவிதை நூல். ஒரு வகையில் இந்நூல் ஒரு சிந்தனைத் தூறல்.
ஒரு குளத்தில் ஒரு கல்லை விட்டெறிந்தால் பலப்பலவாய் அலை வட்டங்கள் பரவும். அதுபோல் இவரின் ஒவ்வொரு கவிதையையும் படித்தறிந்தால் நமக்குள் சிந்தனை அலை வட்டங்கள் தோன்றிச் சிந்தையைத் சிலிர்க்க வைக்கும்.
நாம் அன்றாடம் பார்த்துப் போகும் சாதாரணமான நிகழ்வுகளிலிருந்து கூட, கவிதை மின்சாரத்தை எடுக்கிற இவரின் ஆற்றலை வியக்காமல் இருக்க முடியவில்லை. இதனை இக்கவிதை நூலில் எங்கெங்கும் காணலாம்.
இந்த நூலில் ஒரு கவிதையை மட்டும் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுங்கள் என்று என்னைக் கேட்டால், தேனில் எந்தப் பக்கம் தித்திப்பு என்று கேட்பதுபோல் இருக்கும்.
இருப்பினும் இதுவரை நன் சொன்னவைக்குப் பொருத்தமான ஒரு கவிதையை இங்கே சுட்டுகிறேன்.
நேற்று பல சொற்கள்
மிதந்து வந்தன.
கவிதையில் எழுத
நான் சொல்லைத் தேர்ந்தெடுத்துப்
பிடித்து வைத்தேன்.
அதுவோ இன்று வேண்டாம்
நாளை எழுது என்றது.
மறுநாள் வேறு சொல்
வந்துவிடும் என்றதற்கு
இருவரையும் இணத்து
எழுதச் சொன்னது.
உடன்பட்டேன்.
ஆனாலோ
இரு சொற்களும்
ஏமாற்றிப் பறந்தே போயின.
ஆம்! ஒவ்வொரு நாளும் புதிய ஒன்றைத் தேடிக்கொண்டே இருக்கிறார் வளவ. துரையன். அவருக்கு வாழ்த்து சொல்ல புதிய சொல்லைத் தேடிக் கொண்டே இருக்கிறேன்……………….

Series Navigation

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *