வாழ்க்கை ஒரு வானவில் 8.

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

ஜோதிர்லதா கிரிஜா
8.
ரமணியின் வீட்டை யடைந்த ராமரத்தினம் கூப்பிடு மணியை அழுத்திய போது அந்த வீட்டுச் சுவர்க் கெடியாரம் `டங்’ என்றது. மணி சரியாக ஆறரை என்று அவன் நினைத்துக்கொண்டான்.
ரமணியின் அப்பாவே கதவைத் திறந்தார்.
“வாப்பா!” என்று வழக்கம் போல் சொல்லாமல், அதன் பொருளில் தலையை மட்டும் இலேசாக அசைத்தார்.
உள்ளே நடக்கத் தொடங்கிய அவரை அவன் பின்பற்றிச் சென்றான். அவரது முகத்தில் புன்னகையே இல்லை என்பதையும் அது இறுகி யிருந்ததையும் கண்டு அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. `ஏதோ மோசமான விஷயமாகத்தான் இருக்க வேண்டும். நல்லது பற்றிப் பேச இவர் என்னை அழைத்திருப்பார் என்று தோன்றவில்லை….’
சட்டென்று அவனது மூளை நரம்பொன்று புரண்டு கொடுத்தது. `ஒருவேளை இப்படி இருக்கலாமோ? ரமணி மாலாவையோ அல்லது கோமதியையோ கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்பட்டு அதை இவரிடம் சொல்லி யிருந்திருப்பானோ? ஆனால், அப்படி யென்றால், என்னிடம் அதைப்பற்றி ரமணி ஒரு வார்த்தை சொல்லி யிருந்திருப்பானே! ஒருகால், தன் அப்பாவிடம் முதலில் சொல்லிச் சம்மதம் வாங்கிய பிறகு என்னிடம் சொல்ல எண்ணி யிருந்தானோ! வீணாக என் மனத்தில் ஒரு நம்பிக்கையை விதைக்க வேண்டாமே என்று அவன் எண்ணி யிருந்திருக்கக் கூடுமே. ஆனால் இவருக்கு அவனது விருப்பம் பிடிக்கவில்லை. அதனால்தான், அது பற்றிச் சொல்லக் கூப்பிட்டு அனுப்பி யிருக்கிறார்…’
அவர் கூடத்தில் இருந்த தமது அறைக்குள் புகுந்ததும், அவன் அவரைப் பின்தொடராமல் வெளியிலேயே நின்றான்.
அவர் பின் புறம தலையைத் திருப்பி, “வாப்பா உள்ளே.” என்று அழைத்தார்.
அவன் உள்ளே போனான்.
”நாற்காலியில உக்காருப்பா,“ என்று உபசரித்து விட்டு அவர் ஒன்றில் அமர்ந்தார்.
“இருக்கட்டும், சார். பரவாயில்லே. நான் நின்னுண்டே பேசறேனே,” என்றான் அவன்.
“அட, உக்காருப்பான்னா?” என்ற அவரது குரல் ஓர் அதட்டலாக ஒலித்தது. அவன் நாற்காலியின் விளிம்பில் பட்டும் படாமலும் உட்கார்ந்தான்
அந்தக் கணத்தில் அவரது மேசை மீதிருந்த தொலைப்பேசி கிணுகிணுத்தது. அவர் ஒலிவாங்கியை எடுத்து அதனுள், “கணேசன் ஹியர். யாரு பேசுறது?” என்றார்.
சில நொடிகளுக்குப் பிறகு, “என்னது! தீ விபத்தா? ஷார்ட் சர்க்யூட்னாலேன்றாங்களா? இதோ, இப்பவே நான் கிளம்பறேன்…” என்று பதற்றத்தோடு பேசிக்கொண்டே அவர் எழுந்து நின்றார்.. பிறகு ஒலிவாங்கியைக் கிடத்தினார்.
ராமரத்தினமும் எழுந்து நின்றான். அவர் இருந்த அவசரத்தில், இன்று தன்னிடம் விஷயத்தைச் சொல்லப் போவதில்லை என்று புரிந்துகொண்டான்.
அவர், “உன்னை அப்புறமாக் கூப்பிடறேன். இப்ப உன்னோட பேச எனக்கு நேரமில்லே. எங்க ஆஃபீஸ்ல ஒரு தீ விபத்தாம்….” என்றவாறு அவர் வெளியே புறப்பட ஆயத்தமானார்.
அவருக்குப் பின்னால் நடந்தவாறே, “எதுக்குன்னு மட்டும் ரெண்டொரு வார்த்தையிலே சொன்னீங்கன்னா…” என்று தொடங்கிய அவனைத் தம் கை உயர்த்தி அமர்த்திய அவர், “ரெண்டொரு வார்த்தையிலோ ரெண்டே நிமிஷத்திலேயோ பேசி முடிக்கிற சமாசாரம் இல்லேப்பா அது. நீ போயிட்டு வா. நான் மறுபடியும் கூப்பிடறேன்…” – வாயிலை நோக்கி நடக்கலானார்.
வேறு வழியற்ற நிலையில் அவனும் வெளியேற வேண்டியதாயிற்று.
தெருவில் நடந்துகொண்டிருந்த அவனுக்கு ஒன்றுமே ஓடவில்லை. `ரமணி திரும்பி வரும் வரை காத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். அதற்கு முன்னால் அவன் அப்பா கூப்பிடாமல் இருந்தால் நன்றாக இருக்கும்….’
அவன் பேருந்து பிடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்த போது இரவு ஏழரை மணி ஆயிற்று. அவனுக்காகக் கதவு திறந்த பருவதம் சிந்தனை தேங்கியிருந்த அவன் முகத்தைக் கவனித்துவிட்டு, “ஏன் ஒரு மாதிரி இருக்கே?” என்றாள்.
“ஒரு மாதிரியும் இல்லேம்மா. எப்பவும் போலத்தான் இருக்கேன். கம்பெனியில வேலை ஜாஸ்தி…” என்றவாறு கதவைச் சாத்தியபின் அவன் அவளைப் பின்தொடர்ந்தான்.
“காப்பி குடிக்கிறயா, ராஜா?” என்று அப்போது அங்கு வந்த மாலா அவனைக் கேட்டாள்.
“ஏழரை மணிக்கு மேல காப்பியா? வேணாம். அப்புறம் பசிக்காது…”
அன்றிரவு முழுவதும் அவனுக்குச் சரியான உறக்கமில்லை. அடிக்கடி விழித்துக் கொள்ளுவதும் யோசிப்பதுமாக இருந்தான். ஆயினும், காலையில் வழக்கமான நேரத்துக்கே எழுந்து விட்டான். பல் துலக்கிக்கொண்டே திடீரென்று சேதுரத்தினம் பற்றி யோசித்தான். முந்தின நாள் ஓட்டலில் தன்னைக் காணாதது பற்றிக் கணபதியை விசாரித்திருப்பார் என்று நினைத்துக்கொண்டான். அடுத்து அவரைச் சந்திக்கும் போது, ரமணியின் அப்பா தன்னைக் கூப்பிட்டு அனுப்பியது பற்றிச் சொல்ல வேண்டும் என்றும் எண்ணினான்.
…முந்திய நாளைப் போன்றே, ஓட்டலிலிருந்து ரமணியின் அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு, அவன் வரும் வியாழனன்று வருவதற்கு இருந்ததைத் தெரிந்துகொண்டான்.
வழக்கம் போல் அன்றிரவு சேதுரத்தினம் ஓட்டலுக்கு வந்தான். தான் முந்தின நாளிரவு வராதது பற்றி ராமரத்தினம் தன்னிடம் கேட்காததில் அவன் வியப்புற்றான். அதே போல், ஓட்டலில் முந்தின நாள் தான் இல்லாதது பற்றிச் சேதுரத்தினம் விசாரிக்கவில்லையே என்று ராமரத்தினம் வியப்படைந்தான்.
“என்ன சார் சாப்பிடறீங்க? சூடா வெண்பொங்கலும் மசால்வடையும் இருக்கு.”
“ரெண்டையும் கொண்டுவாப்பா… அதுசரி, நேத்து நான் ஏன் ஓட்டலுக்கு வரலைன்னு கேக்க மாட்டியா?”
“அட! நீங்களுமா வரலை? நானும் திடீர்னு பெர்மிஷன் போட்டுட்டுப் போயிட்டேன்…நான் உங்களைக் கவனிக்கச் சொல்லியிருந்த செர்வெர் கணபதி இன்னைக்கு லீவு. இல்லேன்னா நீங்க நேத்து வரலைன்னு சொல்லியிருப்பான்…”
“அப்படியா? நேத்து எனக்கு ஒரு சிநேகிதன் வீட்டிலே ஆறரை மணிக்கு மேல கேசரி, பஜ்ஜி, காபியோட விருந்து. ராத்திரி பசி எடுக்கல்லே. அதான் வரலை. ஆனா நீ எதுக்குப் பெர்மிஷன் போட்டுட்டு சீக்கிரம் போயிட்டே? ஏதாவது பிரச்சனையா? சொல்லலாம்னா சொல்லு.”
“உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன, சேது சார்?” என்ற அவன் பக்கத்து மேசையருகே வந்தமர்ந்தவரைக் கவனிக்க அவசரமாய் ஓடினான். அவரைக் கவனித்த பின் இவனிடம் வந்து, தன் அலுவலில் ஈடுபட்ட வாறே முந்தின நாள் நடந்தவற்றை அவனிடம் தெரிவித்தான்.
சேதுரத்தினமும் ரங்கனின் திடீர் அழைப்பைப் பற்றிச் சொல்லிவிட்டு உடனே லலிதா பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தான்.
“என்ன சேது சார் யோசிக்கிறீங்க?”
“நேத்து எனக்கும் ஒரு விந்தையான அனுபவம் ஏற்பட்டது. அனா அதை நான் உன்னோட பகிர்ந்துக்க முடியாது…அது வேற ஒருத்தரோட அந்தரங்கம்.”
“சரி, சார். சொல்ல வேண்டாம்.”
அப்போது கல்லாவிலிருந்தபடியே, “ராமு! உனக்கு ஃபோன்ப்பா!” என்று முதலாளி குரல் கொடுக்க, அவன் ஓடினான்.
பேசிவிட்டு இரண்டே நிமிடங்களில் திரும்பிய ராமரத்தினம், “ரமணியோட அப்பாதான். நாளைக்கு சாயங்காலம் ஆறரை மணிக்கு மேல வரச் சொன்னார்,” என்று சேதுரத்தினத்திடம் தெரிவித்தான்.
சாப்பிட்ட பின் அவன் கிளம்பிக் கடற்கரைக்குச் செல்லும் பேருந்தில் ஏறினான்.
…. அலைகளைப் பார்த்தவாறு கடலை நோக்கி நடந்துகொண்டிருந்த அவன், “ஒரு நிமிஷம்!” என்ற குரலைத் தனக்குப் பின்னால் வெகு அருகில் கேட்டுத் திரும்பினான்.
பின்னால் ரங்கனின் மனைவி லலிதா நின்றுகொண்டிருந்தாள். அவன் திகைப்புடன் அவளை நோக்கினான். – தொடரும்,

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *