தொடுவானம் 22. வீட்டை விட்டு ஓடினேன்

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

டாக்டர் ஜி. ஜான்சன்

22. வீட்டை விட்டு ஓடினேன்

எதிரிகளான குரூப்பும் நானும் அதன் பின்பு அன்றாடம் பார்த்துக்கொள்வோம். அனால் முன்பு போல் முறைத்துக்கொள்வது இல்லை. சிரித்துக்கொள்வோம். அவன் அன்றிலிருந்து என்னுடைய மெய்க் காப்பாளனாகவே மாறிவிட்டான். நான் என்னுடைய அப்பாவிடம் அடி வாங்கி உடலில் காயம் பட்டால் கூட அவனை அது பாதிக்கலாம் என்ற பயம் அவனுக்கு. அதனால் அப்பாவிடமும் நல்ல விதமாகவே நடந்து கொண்டான்.
கொஞ்ச நாட்கள் அமைதியாகக் கழிந்தன. நான் பாடங்களில் கவனம் செலுத்தினேன். அதோடு தமிழ் நாவல்கள் படிப்பதிலும் கதை கட்டுரைகள் எழுதுவதிலும் ஒவியங்கள் வரைவதிலும் ஓய்வு நேரங்களை செலவழித்தேன். தினமும் இருட்டியபின்பு திடலில் ஓடுவதையும் நிறுத்தவில்லை.
ஒரு நாள் இரவு கோவிந்தசாமி வீடு சென்று அவனுடன் சிறுகதைகள் பற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டு உணவு உண்ண அறைக்குத் திரும்பினேன்.
சமையல் கட்டில் தண்ணீர்க் குழாய் அருகே நின்ற அப்பா காலி அடுக்குச் சட்டிகளை பார்த்து கம்பியில் மாட்டிக்கொண்டிருந்தார்.நாங்கள் அடுக்குச் சட்டியில் உணவு வாங்கிய நேரம் அது. எப்போதுமே அவர் சாப்பிட்டு விட்டு எனக்கு அதில் மீதம் வைத்திருப்பார். அன்று அவர் சாப்பிட்டது போக மீதத்தைக் கொட்டிவிட்டு காலி அடுக்குகளை கம்பியில் மாட்டிக் கொண்டிருந்தார்! எனக்குக் காரணம் புரியவில்லை.நான் லதாவைப் பார்த்து பல நாட்கள் ஆகின்றன.கொஞ்ச நாட்கள் பார்க்க வேண்டாம் என்று நாங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டு அதன்படி நடந்து கொண்டோம். பெரும்பாலும் நான் யாருடனாவது ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டால் கடைசி வரை வார்த்தை தவற மாட்டேன். ( இப்போதும்கூட அப்படித்தான். )
” எங்கேடா போனாய் ? ” என்னைப் பார்த்து கோபமாகக் .கேட்டார்.
” கோவிந்தசாமியின் வீட்டுக்கு. ” என்றேன். அதுதானே உண்மையுங்கூட.
” நீ அவளோடுதானே வெளியே போயிட்டு வரே? ” என்றார் ஆத்திரம் பொங்க.
இல்லை. அவனைத்தான் பார்க்கப் போனேன்.” என்றேன்.
” என்னிடம் பொய்யா சொல்லுறே? ” என்று கத்தியவாறு கையில் வைத்திருந்த கம்பியிலிருந்து மாட்டிய அடுக்குகளை மீண்டும் கழற்றினார். காலியான அந்த இரும்புக் கம்பியை என்னை நோக்கி ஓங்கினார். நான் அதைப் பார்த்து சிரித்தேன். ( துன்பத்திலும் சிரித்துவிடும் பழக்கம் அப்போது எனக்கு அதிகமிருந்தது. ) அவ்வளவுதான்.! கம்பியை வேகமாக என்னை நோக்கி வீசி விட்டார்! அதை நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை!
பறந்து வந்த கம்பி என் வலது காதில் பட்டது. காது கிழிந்து இரத்தம் வழிந்தோடி சட்டையை நனைத்தது!
என்னால் வலியையும் கோபத்தையும் தாங்க முடியவில்லை. பற்களை நறநறவென்று கடித்தவண்ணாம் அவரை நோக்கி ஓடினேன்! என் கைகளில் ஒன்றுமில்லை.
அவர் மீது வைத்திருந்த கோபத்தையெல்லாம் அருகில் இருந்த கண்ணாடி ஜன்னல் மீது காட்டினேன். ஒரே குத்தாக பலம்கொண்ட மட்டும் குத்திவிட்டேன்! அந்தக் கண்ணாடி உடைந்து தூள் தூளாகச் சிதறியது. என் கையும் கண்ணாடிக்குள் சென்ற விட்டது.
இப்போது கை முழுதும் இரத்த வெள்ளம். பல இடங்களில் வெட்டு பட்டிருந்தது! ஒரு பக்கம் காது வலி! மற்றொரு பக்கம் கை வலி!
இந்தக் கடுமையான வலியைவிட என்னுடைய மனதில் ஏற்பட்ட வலிதான் பலமாக இருந்தது. இப்படி இவரிடம் அடிபட்டுச் சாவதா? நானும் ஒரு தனி மனிதன்தான்! அப்பாவாக இருந்தாலும் இப்படி அடிக்க இவருக்கு என்ன உரிமை உள்ளது? என் உள்ளம் கலங்கியது!
காதிலும் கையிலும் வலி கடுமையானது.
கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறினேன்.நேராக ஜெயப்பிரகாசம் வீடு சென்றேன். அவன் என்னுடைய கோலம் கண்டு பதறினான். அவனிடம் நடந்ததைச் சொன்னேன். உடன் தேநீர்க் கடை சென்றோம். அங்கு டாக்சி மூலம் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குச் சென்றோம்.
காதில் நான்கு தையல்கள் போட்டு தலையில் பெரிய கட்டு போட்டனர்.
வெளியே வந்தபோது அங்கு இரத்தினசாமி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தோம். அவர் நல்லவர் போல் மிகுந்த அக்கறை கொண்டவர்போல் பேசி வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.வேறு வழி தெரியாமல் அவருடன் திரும்பினோம்.
மறு நாள் தலையில் கட்டுடன் லதா வீட்டுக்குச் சென்றேன்.அவளிடம் நடந்தவற்றைக் கூறினேன். அழுதாள் .வீட்டுக்கு வந்து அப்பாவிடம் முறையிடுவதாகக் கூறினாள். நான் தடுத்தேன்.
16.11. 1962 அன்று இரவு உணவு உண்ண அடுக்குச் சட்டியைத் திறந்து பார்த்தேன்.அது காலியாக இருந்தது. அவர் சாப்பிட்டுவிட்டு மீதமுள்ளதை கொட்டி விட்டார் போலும்.
ஏமாற்றமும் எரிச்சலும் கொண்ட நிலையில் சட்டையை மாட்டிக்கொண்டு ஆச்சா ஒட்டுக்கடைக்குச் சென்றேன். பரோட்டா சாப்பிட்டுவிட்டு திரும்பி நடந்து வந்தேன்.
அப்போது நன்கு இருட்டி விட்டது. கடை அருகில் திறந்த வெளியில் அலெக்சாண்டிரா சமூக நிலையத்தின் சார்பில் இலவச ஆங்கிலத் திரைப்படம் காட்டிக்கொண்டிருந்தனர். அங்கு ஜெயப்பிரகாசம் நின்று கொண்டிருந்தான்.அவனிடம் என்னுடைய மனக் குறையைக் கூறி வருந்தினேன்.
தன்னால் ஆன உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தான்.அப்பாவிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படியும் எச்சரித்தான்.
அறைக்குத் திரும்பும் பொது அங்கு கடைக்காரர் மூலமாக நன் கேள்விப்பட்டவை எனக்கு திகிலைத் தந்தன. அப்பா இரவு உணவை சாப்பிட்டுவிட்டு பைத்தியம் பிடித்தவர்போல் சிரித்தாராம்.
” அவனைப் பட்டினி போட்டு சாகடிக்கப் போறேன் ! ” என்று பயங்கரமாகக் கத்தினாராம். அது கேட்டு நான் அதிர்ச்சிக்கு உள்ளானேன். கடைக்காரர் அங்கு குடும்பத்துடன் வாழ்பவர். நல்லவர். அவர் நிச்சயம் பொய் சொல்ல மாட்டார்.
இரவு எப்படி அவருடன் அந்த அறையில் ஒரே கட்டிலில் படுத்திருப்பது? என் மனம் படபடத்தது.
அங்கிருப்பது உயிருக்கு ஆபத்து என்ற முடிவுடன் இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளிடேறினேன். மாற்று உடைகளை ஒரு பையில் எடுத்துக்கொண்டேன். வரு எதையும் நான் அப்போது எடுக்கவில்லை. எங்கு போவது என்று தெரியாத நிலை.
நேராக மீண்டும் ஆச்சா கடைக்குச் சென்று நடந்ததை அவனிடம் கூறினேன். ஆனால் அவனோ மேலும் அதிர்ச்சியை உண்டுபண்ணினான்.
அப்பா அவனிடம், முதலில் லதாவை வெட்டிக் கொல்லப் போவதாகவும், பிறகு என்னை வெட்டப் போவதாகவும், கடைசியில் தன்னைத் தானே வெட்டிக்கொண்டு சாகப் போவதாகவும் கூறியுள்ளார்! அது கேட்டு வெலவெலத்துப்போன நான் , அதுபோன்று உண்மையில் நடந்து விடுமோ என்று நடுங்கினேன்.
அன்று இரவு ஜெயப்பிரகாசத்தை மீண்டும் தொந்திரவு செய்ய விரும்பவில்லை. சிதம்பரம் சித்தப்பாவிடமும் சொல்லவில்லை.பள்ளியின் பின்புறம் சென்று காற்பந்து திடலிலேயே படுத்து உறங்கினேன்.அப்போது மனதில் ஏதேதோ துயர எண்ணங்கள் தோன்றின. இப்படி நான் அனாதையாகி விட்டேனே என் எண்ணிக் கதறினேன்!
இத்தனை பாடுகளும் ஒரு பெண்ணுக்காக! இதை நான் எண்ணி வருந்தினேன். ஆனால் யார் மேல் குற்றம் சொல்ல முடியும்? எல்லாமே தானாகவே நடந்ததுதானே எனவும் ஆறுதல் கொண்டேன். அப்போது நான் கடவுள் மீது நம்பிக்கையோ விதியின் மீது நம்பிக்கையோ கொஞ்சமும் இல்லாத ஒரு பகுத்தறிவாளன்!
இவையெல்லாம் என் வாழ்க்கையில் சுவையூட்டும் கதைகள் போலும். பின்னாளில் வாய்ப்பு கிட்டும்போது இவற்றையெல்லாம் தொகுத்து ஒரு தொடர் கதையாக எழுதி அதை நாவலாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்தப் புல் திடலில்,குளிர் பனியில் நனைந்தவாறு அயர்ந்து கண்களை மூடினேன். ( அந்த வாய்ப்பு இப்போது இப்படி கிடைத்துள்ளது குறித்து உண்மையில் உவகை கொள்கிறேன் இதை படித்துவிட்டு வாசகர்கள் பாராட்ட வேண்டும் என்பது என் குறிக்கோள் இல்லை. ஒரு மனிதன் கடந்து வந்துள்ள பாதையை பதிவு செய்ய வேண்டும் என்பதே என் குறிக்கோள்.)
அதிகாலையிலேயே விழித்துக்கொண்ட நான் நேராக ஆவ்லேக் ரோடு நடந்து சென்றேன்.அங்கு அருமைநாதன் எட்டரை மைக்கு வந்து விடுவான். அங்குதான் அவன் மாடி வீடுகள் கட்ட அஸ்திபாரம் போடும் வேலை செய்தான். அவன் மூலமாக எங்காவது கண் காணாத இடம் சென்று அப்பாவிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
நான் எதிர்ப்பார்த்தபடியே அவன் வந்தான். என் நிலை அறிந்து கவலைப்பட்டான். எனக்கு காலை உணவு வாங்கித் தந்து அங்கேயே இருக்கச் சொன்னான். என்னதான் அவன் சரியாகப் படிக்காமல் அப்பாவுடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போனவன் என்றாலும், அவன் என்மேல் காட்டிய அன்பு என்னை வியக்க வைத்தது! அன்றைய பகல் முழுதும் அங்கிருந்த ஒரு தகரக் கொட்டகையில் கழித்தேன்.
மாலையில் அவனுடன் வேலை செய்தவர்களுடன் என்னையும் லாரியில் ஏற்றிக்கொண்டான். அது எங்கோ தூரம் சென்றது. அது சென்றடைந்த இடம் எனக்குத் தெரியவில்லை. நானும் அது பற்றி யாரிடமும் கேட்கவில்லை. எங்கே போகிறோம் என்பது தெரியாமலேயே இருப்பது நல்லது என்று அப்போது தோன்றியது.பின்புதான் தெரிந்தது அது தூரத்திலுள்ள யுவோ சூ காங் பகுதி என்பது. அது ஒரு வகையில் நல்லதுதான். அப்பா எளிதில் அங்கு என்னைத் தேடி வர முடியாது.
அருமைநாதன் தங்கியிருந்த ” கேம்ப் ” எனக்கு இராணுவ வீரர்களின் கூடாரத்தை நினைவூட்டியது.அது ஒரு நீண்ட தகரக் கொட்டகை. இரு மருங்கிலும் வரிசையாக கட்டில்கள் காணப்பட்டன.அங்கு தங்கியவர்க்ளில் பாதிக்கு மேற்பட்டவர்கள் மலையாளிகள். அனைவருமே கட்டிடம் கட்ட அஸ்திவாரம் இடும் வேளையில் ஈடுபடுபவர்கள். அதை பைல் அடிக்கும் வேலை என்று அப்போது கூறுவார்கள்.
இரவு உணவு அங்கேயே சமைத்தனர். நானும் அவர்களுடன் சாப்பிட்டேன். அதன் பின்பு கால் நடையாகவே மேக்ரிச்சி நீர்த்தேக்கம் சென்றோம்.அங்கு அமர்ந்து நீண்ட நேரம் பேசினோம். இருவருமே வீட்டை விட்டு ஓடி வந்துள்ளோம். அவன் இனி படிப்பு பற்றி கவலைப் படவில்லை. நானோ படிப்பு நின்றுவிடுமோ என்று அஞ்சினேன். அதை உணர்ந்துகொண்ட அவன் அதற்கு ஒரு நல்ல ஆலோசனை கூறினான். அதை வைத்து நாங்கள் இருவரும் எதிர்காலத் திட்டம் தீட்டினோம். அந்த ஏழு அம்ச அவசரத் திட்டம் வருமாறு.

1. வீடு சென்று அப்பாவுக்குத் தெரியாமல் என்னுடைய பள்ளி பாட நூல்களை எடுத்து வந்து விடவேண்டும்.

2. அவனுடைய முதலாளி ஒரு மலையாளி. அவரும் குடும்பத்துடன் அங்குதான் அருகில் தனி வீட்டல் வசிக்கிறார். அவருடைய இரு புதல்விகளை Convent of the Holy Infant Jesus கத்தோலிக்க காண்வெண்ட் பள்ளிக்கு காரில் அனுப்புகிறார். அந்த இரண்டு மாணவிகளுக்கும் நான் டியூஷன் எடுக்க முயற்சி மேற்கொள்வது. அவரிடம் என்னுடைய நிலையைக் கூறி சம்மதம் கேட்பது. என்னுடைய பள்ளியின் பெயர் அதற்கு இங்கும் கை கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

3. அந்த காண்வெண்ட் பள்ளி என்னுடைய பள்ளியின் அடுத்த வீதியில்தான் இருந்தது. அதனால் நானும் அவர்களுடன் சேர்ந்து அவர்களுடைய காரிலேயே பள்ளி செல்ல அனுமதி கேட்பது.

4. இனிமேல் வீடு திரும்பி அன்றாடம் அப்பாவுக்கு பயந்து பயந்து வாழத் தேவையில்லை. இனி உயிருக்கும் ஆபத்து இருக்காது. அப்படியே அவர் தேடி வந்தாலும் இனி வரமுடியாது என்று மறுத்து விடுவது.

5. வேறு சிந்தனைகள் இல்லாமல் முழு மூச்சுடன் பாடங்களைப் படிப்பது. இறுதித் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெறுவது.

6. தேர்வுகள் முடிந்தவுடனேயே வேலை தேடிக்கொள்வது.அந்தப் பகுதியிலேயே ஒரு வீடு பார்த்து அதில் அருமைனாதனோடு குடி புகுவது.

7. தேர்வுகள் முடியும் வரை லதாவைப் பார்ப்பதில்லை.அனால் பத்திரமாக இருப்பதை தெரிவித்து விடுவது. வேலை கிடைத்ததும் அவளுடைய வீட்டில் சொல்லி அவளை மணந்து கொள்வது.

இந்த திட்டம் ஒருவகையில் மன அமைதியைத் தந்தது. நடந்தேறினால் நல்லது. அதற்கு அந்த மலையாளி முதலாளி சம்மதம் தெரிவிப்பார் என்ற நம்பிக்கையும் இருந்தது. காரணம் இது என்னுடைய படிப்புடன் கூடிய மனிதாபிமானம். நிச்சயம் எந்தவொரு நல்ல மனிதரும் இதுபோன்ற சூழலில் இரக்கம் காட்டி உதவவே செய்வார்..
இரவு வெகு நேரம் சென்றுதான் இருப்பிடம் திரும்பினோம். இரவெல்லாம் அந்தத் திட்டம் பற்றியே என் சிந்தனை சுழன்று கொண்டிருந்தது!

( தொடுவானம் தொடரும் )

Series Navigation
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    அன்பு நண்பர் சகலகலாவல்ல நண்பர் ஷாலி அவர்களே. வணக்கம். நம் பேசியே பல காலம் ஆகிவிட்டது. தொடுவானம் தொடர்ந்து படிப்பது தெரிகிறது. நன்றி. இப்போதெல்லாம் பின்னூட்டங்கள் தாமதமாக வெளிவருவதால் இந்த நீண்ட இடைவெளி என்று கருதுகிறேன்.
    காதல் பகுதிக்கு ஏற்ற வகையில் பாடல் தேடி அனுப்பியதற்கு மிக்க நன்றி. ஆம் நான் கிறிஸ்துவன், அவள் இந்து. நாங்கள் இதுபற்றி கொஞ்சமும் எண்ணியதில்லை. எங்கள் காதல் அப்படி. உங்களின் பாடல் படித்த பின்புதான் இந்த உண்மையே தெரிய வருகிறது! ஆச்சரியமாக உள்ளது.நன்றி மீண்டும் சந்திப்போம்.வணக்கம். அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *