வாழ்க்கை ஒரு வானவில் 9

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

ஜோதிர்லதா கிரிஜா

சேதுரத்தினத்தின் முகத்தில் திகைப்பு அப்பியிருந்தது.. அவனது விரிந்த விழிகளிலிருந்து அவனது திகைப்பை லலிதாவும் புரிந்துகொண்டாள். தற்செயலான சந்திப்பாக அது இருக்காது என்று அவனுக்குத் தோன்றியது. தன் அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்து தன்னைப் பின்தொடர்ந்து ஓட்டலுக்கு வெளியேயும் காத்திருந்துவிட்டு அவள் வந்திருந்ததாக அவன் ஊகித்தான். அவளை எண்ணி அவனுக்குப் பாவமாக இருந்தது.
அவன் பார்வை சுழன்றது. ரங்கன் அன்று கடற்கரைக்கு வந்தது போல் இன்றும் வந்து தங்களைப் பார்த்துவிட்டால் என்ன செய்வது எனும் கேள்வி அவனை அச்சுறுத்தியது.
“என்ன, லலிதா? எங்கே இப்படி?” என்று வினவிப் புன்னகை செய்தான்.
“உங்களோட கொஞ்சம் பேசணுமே?”
“என்னைப் பின் தொடர்ந்து வந்தீங்களா, இல்லேன்னா இங்க வந்து என்னைப் பார்த்தது தற்செயலாவா?”
“பின்தொடர்ந்துதான் வந்தேன், ரத்தினம்!”
“தற்செயலா ரங்கனும் இங்கே வந்தான்னா?”
“வரட்டுமே. நாம இங்கே சந்திச்சது தற்செயலான்னு சொல்லிட்டாப் போச்சு. தவிர அவருக்கு இன்னிக்கு ஆபீசைவிட்டுக் கிளம்ப எட்டு மணிக்கு மேல ஆகும்னு பக்கத்து வீட்டுக்கு ஃபோன் பண்ணிச் சொன்னார்…”
“ஆமாமா. மறந்துட்டேன். ரங்கன் அவசரமா டில்லிக்கு ஏதோ ஸ்டேட்மெண்ட் அனுப்ப வேண்டியிருக்கு. ஹெட்க்ளெர்க்கும் அவனும் செக்‌ஷன்லெ இருக்காங்க.”
“அந்த தைரியத்துலதான் நான் உங்க ஆபீசுக்கு எதிர்ல இருக்கிற பஸ் ஸ்டாப்ல நின்னு ஒரு ஆட்டோவில பஸ்ஸை ஃபாலோ பண்ணினேன். அப்புறம் ஓட்டல் வாசல்லே நின்னுண்டே நீங்க வெளியில வந்ததும் மறுபடியும் ஒரு ஆட்டோவில உங்க பஸ்ஸை ஃபாலோ பண்ணினேன். நீங்க பீச் ஸ்டாப்ல இறங்கினதும் ஆட்டோவை அனுப்பிட்டு உங்க பின்னடியே வந்தேன்…”
“சரி…. அப்படி உக்காரலாமா?”
“உக்காரலாம்.”
இருவரும் எதிரெதிராக அமர்ந்து கொண்டார்கள்.
எடுத்த எடுப்பில், “ஏதோ காரணத்தால திடீர்னு கிளம்பி ரங்கன் தற்செயலா இங்க வந்துடறான்னு வைங்க.. அப்ப என்ன சொல்லிச் சமாளிக்கிறது?” என்று ரங்கன் கேட்டான்.
“அதான் சொன்னேனே! தற்செயலாச் சந்திச்சதாத்தான். நான் மெரினாவில இருக்கிற ஷாப் ஒண்ணுக்கு வந்ததாச் சொல்லுவேன். பீச்ல அப்படியே கொஞ்ச நேரம் உக்காந்தப்ப நீங்க தற்செயலா வந்ததாவும் சொல்லுவேன். இதோ கையில பெரிய பை வெச்சிண்டிருக்கேன், பாருங்க!”
“சரி. சொல்லுங்க.”
முந்தின நாள், அவனோடு தெருவில் நடந்துகொண்டிருந்த போது, `சேது! உங்கிட்ட லலிதாவைப் பத்தி ஒண்ணு கேக்கணும். நீ அவங்க ஊர்க்காரன்கிறதால உனக்குத் தெரிஞ்சிருக்கலாம்’ என்று ரங்கன் பேச்சைத் தொடங்கியது உடனே அவனுக்கு நினைவில் நெரடியது.
`கேளு, ரங்கன். என்ன கேக்கப் போறே?’
`அவளைப் பத்தி இப்படி ரகசியமா உங்கிட்ட விசாரிக்கிறதுக்கு எனக்கு வெக்கமாத்தான் இருக்கு. ஆனா, கேட்டுத் தெரிஞ்சுக்கல்லைன்னா தலையே வெடிச்சுடும்னு தோணுது. எத்தனையோ நாளா என் மனசில உறுத்திட்டிருக்கிற விஷயம் அது.’
`கேளேன், ரங்கன். எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்றேன். ஆனா, நீ என்ன கேக்கப் போறேன்றதை என்னால கொஞ்சங்கூட ஊகிக்க முடிய.ல்லே!’ என்று சேதுரத்தினம் பொய் சொன்னான்.
`ரொம்பத் தயக்கமாத்தான் இருக்கு. … ஆனா நான் அவளைப் பத்தி உங்கிட்ட கேட்டது அவளுக்குத் தெரியவே கூடாது.’
`சேச்சே. சத்தியமாச் சொல்ல மாட்டேன்.`
`எங்களுக்குக் கல்யாணம் ஆகிக் கொஞ்ச நாளுக்கெல்லாம் எனக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்தது. ..’
`என்னன்னு?’
`அவ எவன் கூடவோ ஒடிப்போனதாயும், அவளுக்கு ஒரு குழந்தை கூடப் பொறந்ததுன்னும், அதை ஏதோ ஒரு அநாதை விடுதியிலே விட்டு வெச்சிருக்கிறதாயும் உண்மைவிளம்பின்ற பேர்லே எவனோ எழுதியிருந்தான்… `நல்லா ஏமாந்தியா, இளிச்சவாயா’ அப்படின்னு முடிச்சிருந்தான்…’
`சேச்சே! அப்படி யெல்லாம் எதுவுமே இருக்க சான்ஸே இல்லேப்பா. லலிதா அழகா யிருக்காங்கல்லே? ஒரு பதினேழு பதினெட்டு வயசுலே இன்னும் எவ்வளவு அழகா யிருந்திருப்பாங்க! இப்ப அவங்க இருக்கிறதை வெச்சு உன்னால ஊகிக்க முடியாதா என்ன! நான் சொல்லணும்னுட்டு என்ன்! ஒரு பொண்ணு அழகாயிருந்தாலே இது மாதிரியான வதந்திகள்லாம் அவளைப் பத்திப் பரவும். போதுபோக்கத்த பொறுக்கிங்க இது மாதிரி அழகான பொண்ணுங்க கிட்ட வம்புக்குப் போவாங்க. ஐ லவ் யூன்னுவானுக. அந்தப் பொண்ணுங்க அதுக்கு இடங் கொடுக்கல்லைன்னாலோ, இல்லாட்டி அவங்களைப் பத்திப் புகார் பண்ணினாலோ, உடனே இப்படியெல்லாம் செஞ்சு பழி தீர்த்துக்குவானுக… அதனால, இதை யெல்லாம் நம்பி நீ உன் மனசைப் போட்டு உழப்பிக்கக் கூடாது, ரங்கன்!’
`நீ சொல்றது சரிதான். நானும் கேள்விப்பட்டிருக்கேன் – பல பெண்கள் விஷயத்துல இது மாதிரி அநீதி நடக்குதுன்னு… ஆனா அவ்வளவு நிச்சயமாச் சொல்லிடவும் முடியாது. நீ வத்தலப்பாளையத்தை விட்டு வந்து ரொம்ப நாளாயிடுத்தில்லே? நீ கெளம்பினதுக்கு அப்புறம் ஒரு ரெண்டு வருஷம் அவங்க குடும்பம் அங்தேதானே இருந்திருக்கு? அந்த ரெண்டு வருஷ இடைவெளியில நடந்தது பத்தியெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?’
`நான் ஏன் அவ்வளவு நிச்சயமாச் சொல்றேன்னா, ஊரை விட்டு வந்துட்டாலும், எங்களுக்கு அங்கே நிலபுலன்கள் இருந்ததால அடிக்கடி அங்கே போறதுண்டு. அப்படி ஏதானும்னா எங்க காதுல விழாம இருக்காது. … உனக்காக நான் ஒண்ணு வேணாப் பண்ணட்டுமா?’
`என்ன?’
`இன்னும் ரெண்டு நாள் கழிச்சு நான் மதுரைக்கு டூர் போக வேண்டியிருக்கும்னு எங்க ஆஃபீசர் சொன்னார். அப்படியே பக்கத்துல இருக்கிற வத்தலப்பாளையத்துக்கும் போய் நைஸா விசாரிச்சுப் பார்க்கறேனே? என்ன சொல்றே?’
`ரொம்ப நல்லதாப் போச்சு. காதுல விழற விஷயம் எதுவாயிருந்தாலும் நீ உள்ளபடியே எங்கிட்ட சொல்லணும். .’
`பின்னே?… அது சரி, உனக்கு அப்படி ஒரு மொட்டைக் கடிதம் வந்தது பத்தி உன் ஒய்ஃப் கிட்ட சொன்னியா?’
`இல்லே. அவ மனசு கஷ்டப்படும்னு சும்மா இருந்துட்டேன்.’
`நான் உன்னை ஒண்ணு கேக்கட்டுமா?’
`என்ன?’
`அந்த மொட்டைக் கடிதத்துல இருக்கிறது உண்மைதான்கிறாப்ல தெரிய வந்தா நீ என்ன செய்யிறதா இருக்கே?’
` ………. `
`என்ன, பேசாம இருக்கே? மொட்டைக் கடிதம் பத்தி அவங்க கிட்ட சொன்னாலே அவங்க மனசு கஷ்டப்படும்கிறதுக்காக அதைச் சொல்லாம இருக்கிற நீ, அப்ப மட்டும் அதைப் பத்திக் கேட்டு அவங்க மனசைக் கஷ்டப்படுத்துவியாடா? தவிர, விசாரிக்கிறதால தெரிய வர்ற சேதி உண்மையா யிருக்கணும்கிற கட்டாயம் கிடையாது. இல்லியா?.’
`கிடையாதுதான். இருந்தாலும் அவ என்ன சொல்றான்னு தெரிஞ்சுக்கலாமே?’
`உன்னிஷ்டம்ப்பா. இதுல நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்லே. ஆனா வீணா சந்தேகப்பட்டு உங்க சந்தோஷத்தைக் கெடுத்துக்காதே.’
“என்னங்க? யோசிச்சுண்டே ஒண்ணும் சொல்லாம இருக்கீங்க? நான் உங்களைத் தனியாச் சந்திச்சுப் பேசுறது பிடிக்கல்லியா?”
சேதுரத்தினம் தன் எண்ணங்களிலிருந்து விடுபட்டு, “சேச்சே. அப்படி யெல்லாம் இல்லீங்க. நீங்க என்ன பேசப் போறீங்கன்ற திகைப்பில இருக்கேன். வேற ஒண்ணுமில்லே…”
“… எப்படிச் சொல்றதுன்னே தெரியல்லே. …நான் வத்தலப்பாளையத்துல இருந்தப்போ எனக்கு ஒரு… ஒரு…. வி..வி..விபத்து ஏற்பட்டுது. அது பத்தி ஊர் முழுக்கத் தெரியும். உங்ளுக்கும் தெரியும்… பக்கத்து வீட்டில குடி இருந்த பாஸ்கர்ங்கிறவரை நம்பி ஏமாந்து நான் ஓடிப்போனேன்…” – லலிதாவின் தலை தாழ்ந்திருந்தது.
“தெரியும். சொல்லுங்க. ..”
“எனக்கு ஒரு கு…கு…குழந்தை கூடப் பிறந்தது. அதுக்கு அப்புறம் அவன் என்னை விட்டுட்டு ஓடிப்போயிட்டான்… குழந்தையை எனக்குப் பழக்கமான ஒரு புருஷன்-மனைவி வாங்கி வளர்த்தாங்க. அவங்க்ளுக்குக் குழந்தை இல்லே. அதனால. ஆனா குழந்தை ஆறே மாசத்துல மாந்தம் வந்து செத்துப் போயிடுத்து. ஆண் குழந்தை.”
“தெரியும். கேள்விப்பட்டேன். ஆனா அது செத்துப் போனது தெரியாது.”
“இதை யெல்லாம் நீங்க அவர் கிட்ட சொல்லிடப் போறீங்களேன்ற பயத்துலதான் உங்களைச் சந்திக்க வந்தேன். சொல்ல மாட்டீங்கதானே?” – லலிதாவின் விழிகள் சட்டெனப் பொங்கிவிட்ட கண்ணீரில் மிதந்தன.
“சேச்சே! அதையெல்லாம் ரங்கன் கிட்ட சொல்லி உங்க ரெண்டு பேரோட நிம்மதியையும் கெடுக்கப்பட்டவன் மாதிரியா என்னைப் பார்த்தா தெரியுது?”
“மன்னிச்சுக்குங்க. அப்படி ஒரு சந்தேகம் உங்க மேல கடுகளவும் எனக்குக் கிடையாது. இருந்தாலும் சொல்லி வைக்கணும்கிற ஆதங்கம் எனக்கு வந்தது இயற்கைதானேங்க?”
“ஒத்துக்கறேன். நீங்க பயப்படவே வேணாம். நான் சொல்லவே மாட்டேன். ரங்கனே ஏதாவது கேள்விப்பட்டு என்னை விசாரிச்சாலும் அப்படி எதுவும் கிடையாதுன்னு அடிச்சுச் சொல்லிடுவேன். நீங்க நிம்மதியா யிருங்க… ஆணோ, பெண்ணோ பழசை யெல்லாம் கிளறக்கூடாது. எத்தனையோ ஆண்கள் வாழ்க்கையிலேயும்தான் இது மாதிரியான களங்கங்கள் இருக்கு. ஆனா அவங்க தப்பிச்சுடறாங்க….”
“சரியாச் சொன்னீங்க. அப்ப நான் கிளம்பட்டுமா? ரொம்ப தேங்க்ஸ் உங்களுக்கு. நாம பீச்ல தற்செயலாச் சந்திச்சோம்கிறதா அவர் கிட்ட சொல்லிடறேன். சரியா?”
“சரி. நானும் அப்படியே சொல்லிடறேன்.”
“தேங்க்ஸ்…”
“அதெல்லாம் வேணாம்.”
எழுந்து நின்ற அவளுக்கு அவனும் எழுந்து நின்று விடை கொடுத்தான். அவள் தன் கண்களைச் சேலைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு நடக்கலானாள்.
அவள் சென்ற பின்னர், சேதுரத்தினம் உட்கார்ந்துகொண்டான். லலிதாவின் குடும்பம் பற்றி அவன் எண்ணமிடலானான். லலிதாவின் அம்மாவுக்கு அல்லிஅரசாணி என்று அவ்வூரில் பட்டப் பெயர் உண்டு. அந்த அளவுக்கு அவள் தன் கணவரைத் தன் அழகால் ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தாள். லலிதா அவர்களுக்கு ஒரே மகள். …
எட்டு மணி வரை அவன் கடற்கரையில் இருந்தான். ஆனால் ராமரத்தினம் வரவில்லை. ஏதோ நடந்திருக்க வேண்டும் என்று அவனுக்கு உள்ளுணர்வாய்த் தோன்றியது. அவன் கவலையுடன் எழுந்து நடக்க முற்பட்டான்.

-தொடரும்

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *