இடையன் எறிந்த மரம்

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

வளவ. துரையன்

திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தில் ஆண்டு தோறும் குமரகுருபர சுவாமிகளுக்கு விழா எடுப்பார்கள். 1937- ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவிற்கு உ.வே.சா போயிருந்தார்.
அந்த மடத்தில் மாடுகளைப் பாதுகாத்துப் பராமரிக்க ஓர் இடையனை நியமித்திருந்தனர். மாடுகளைப் பற்றித் தான் அறியாதவற்றை அறிந்து கொள்ளலாம் என்று அவனிடம் உ.வே.சா பேச்சுக் கொடுத்தார்.
அவன் மாடுகளின் வகைகள், மாடுகளைப் பிடிக்கும் முறைகள், சுருக்குப் போட்டுக் காளைகளை அடக்குதல், ஆகியனவற்றைக் கூறினான். பிறகு மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போவதைப் பற்றிப் பேச்சு திரும்பியது.
அவன், “ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்குக் காட்டுப் புறங்களுக்கு ஓட்டிக் கொண்டு போவோம். ஆடுகள் தின்ன மரக் கிளைகளை வெட்டுவோம். அப்படி வெட்டுகையில் கிளை முழுவதும் துண்டித்து விழாமல் முறிந்து தொங்கும்படி வெட்டுவோம். ஆடுகள் அதில் முன்னங்காலை வைத்துக் கொண்டு தழைகளைத் தின்னும்” என்றான்.
”ஏன் அடியோடு வெட்டிப் போட்டால் என்ன?” என்று கேட்டார் உ.வே.சா.
”அப்படி வெட்டிவிட்டால் அந்தக் கிளை பிறகு பயன்படாமல் போய் விடும். நாங்கள் வெட்டும் கிளை இன்னும் மரத்தோடு ஒட்டிக் கொண்டிருப்பதால் மறுபடியும் தழைக்கும்” என்று அவன் பதில் கூறினான்.
’இடையன் எறிந்த மரம் முழுவதும் அறாமல் அரைகுறையாக உயிர் வைத்துக் கொண்டிருக்கும்’ எனும் எண்ணம் அவருக்குள் உருவானது.
பட்டென்று அவருக்குத் தாம் முதல்முதல் பதிப்பித்த சீவக சிந்தாமணியின் 1914-ஆம் பாடல் நினைவுக்கு வந்தது.
அந்தப் பாடல் இதுதான்:
”கெடலருங் குரைய கொற்றம் கெடப்பிறந் ததுவு மன்றி
நடலையுளடிகள் வைக நட்புடையவர்கள் நைய
இடைமகன் கொன்ற இன்னாமரத்தினேன் தந்த துன்பக்
கடலகத் தழுந்த வேண்டா களை கவிக் கவலை”
அதில் சீவகன் தன் தாயிடம் “ என் தந்தை மரணமடைந்து யான் பிறந்தேன். நீயும் மனம் வருந்த, நண்பர்களும் மனம் வருந்த இடையன் வெட்டிய இன்னா மரம் போல இருந்தேன்” என்று கூறுகிறான்.
இதற்கு நச்சினார்க்கினியர் “உயிருடன் இருந்தேனாய்ப் பகையை வென்றேனும் அல்லேன். உயிரையும் நீத்தேன் அல்லேன்” என்று கருதி ’மரத்தினேன்’ என்று உரை எழுதுகிறார்.
உயிரையும் விடாமல் தொங்கிக் கொண்டிருக்கும் மரக் கிளை வேறு இலக்கியங்களில் வருவதும் அவர்க்குத் தோன்றியது.
பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார் ‘இடையன் எறிந்த மரம்’ என்னும் தொடரைப் பயன்படுத்தி உள்ளதை அவர் நினைத்துப் பார்த்தார்.
”படைநின்ற பைந்தா மரையோ டணிநீலம்
மடைநின் றலரும் வயலாலி மணாளா
இடையன் எறிந்த மரமேஒத் திராமே
அடைய அருள்வாய் எனக்குன் அருளே”
திருமங்கையாழ்வார் திருவாலித் திருநகரியில் உள்ள பெருமாளை நோக்கி
”ஆலி மணாளனே! நான் இன்னும் உன் அருளைப் பெற வில்லையே எனும் ஏக்கத்தால் மனம் அழிந்தும், பெறுவோம் என்ற நம்பிக்கையால் உயிர் வைத்துக் கொண்டும் இடையன் எறிந்த மரம் போல நிற்கிறேனே” என்கிறார்.
பழமொழி நானூறு என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூலில் உள்ள ஒரு பாடலும் அவருக்கு நினைவில் தோன்றியது.
”அடையப் பயின்றார்கொல் ஆற்றுவராக் கேட்டால்
உடையதொன் றில்லாமை ஒட்டிந்—–படைபெற்[று]
அடைய அமர்த்தகட் பைந்தொடி அஃதால்
இடையன் எறிந்த மரம்.
என்ற பாடலிலும் இடையன் எறிந்த மரம் உவமை கூறியிருப்பதை அவர் எண்ணிப் பார்த்தார்.
உ.வே.சா அந்த இடையனிடம் “அவ்வளவு ஜாக்கிரதையாக வெட்டி விழச் செய்வது கஷ்டமல்லவா?” என்று கேட்டார்.
அவனோ “அது கைப்பழக்கம்; இல்லாவிட்டால் பழமொழி வருமா?” என்று கேட்டான் பதிலுக்கு.
””என்ன பழமொழி?” என்று அவர் கேட்டார்.
”அதாங்க; இடையன் வெட்டு அறாவெட்டு என்ற பழமொழியைத்தான் சொல்கிறேன். என்றான் அவன்.
இந்த நிகழ்வைக் குறிப்பிடும் உ.வே.சா “அந்த உபமானத்தின் கருத்தை ஆயிரம் வார்த்தைகளால் விரித்து உணர்த்தப் புகுவதைவிட
“இடையன் வெட்டு அறாவெட்டு” என்ற சூத்திரத்தை மாத்திரம் சொல்லி நிறுத்தினால் போதும்” என்று எழுதுவது பழம் ஒழிகளின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துகிறது.

Series Navigation
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *