சிவக்குமார் அசோகன்
சென்னை.
அதிகாலை ஐந்தரை மணி. தாம்பரத்திலிருந்து மேற்கு மாம்பலத்திற்கு ரயில் டிக்கெட் எடுத்துக் கொண்ட வசந்தி, சுதாகரை செல்போனில் அழைத்தாள்.
”சொல்லுங்க வசந்தி, எங்கே இருக்கீங்க?”
”நான் வெஸ்ட் மாம்பலம் டிக்கெட் எடுத்துட்டு தாம்பரம் ஸ்டேஷன்ல நிக்கிறேன் சுதாகர்!”
”ஓகே, நான் வெஸ்ட் மாம்பலம் ஸ்டேஷன் வந்துடறேன். உங்க ஹாஸ்டல் பக்கத்துல ரெங்கநாதன் தெருல தான் இருக்கு!”
”ஹாஸ்டல் நல்லா இருக்குமா சுதாகர்?”
”கொஞ்சம் அப்படி இப்படி தான். உங்களோட ரெண்டு பேர் தங்குவாங்க. கட்டில் இருக்கும். தற்காலிகம் தான். வேற ரூம் பார்த்துக்கலாம்.”
”சரி”
மின்சார ரயிலில் ஏறி உட்கார்ந்ததும் அம்மாவிற்கு போன் செய்தாள் வசந்தி.
”வந்துட்டேன்மா… ஹாஸ்டல் போயிட்டுருக்கேன். நீங்க பத்திரமா இருங்க. எதுக்கும் கவலைப்படாதே… வசுமதி, கெளதம் கிட்ட சாயங்காலம் பேசுறேன்னு சொல்லு!” என்று வசந்தி பேசிக் கொண்டே போக,
”நீ ஜாக்கிரதையா இரும்மா! பெரும்பட்டணம். எவ்ளோ சொல்லியும் கேக்காமப் போயிட்டே பார்த்தியா?” என்றாள் ஆண்டாள் கோபமும், வருத்தமுமாக.
”எல்லாம் நம்ம நல்லதுக்குத்தாம்மா… நீ கவலைப்படாம தூங்கு, வெச்சுடறேன்.”
வசந்தியின் முகம் சரியான தூக்கமின்மையால் வாடியிருந்தது. இரண்டு நாட்களாக அம்மாவிடம் நச்சரித்து சென்னை செல்ல சம்மதம் வாங்கியதோடு திருமணப் பேச்சையும் தற்காலிகமாகத் தள்ளிப் போட வைத்தாள்.
இரண்டு நாட்களுக்கு முன் ஆண்டாள், ”மனசுல யாருமில்லைன்னா பின்னே என்ன தான் காரணம்?” – என்று வெளிப்படையாகக் கேட்டது சற்று வியப்பாக இருந்தாலும் இது தான் சமயம் என்பது போல வசந்தி உணர்ந்தாள்.
”நான் சென்னை போறேன்மா! ஒரு ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டேன்னா, நம்ம நிலைமையே தலைகீழா மாறிடும்.”
”மாறும்டி நல்லா மாறும். தலைமுடி நரைச்சுப் போகும்! இப்பவே பார்க்குறவங்க எல்லாரும் கேட்கிறாங்க. என் மனசை புரிஞ்சுக்காமப் பேசுறியே…?”
”நம்ம பேங்க பேலன்ஸ் எவ்ளோம்மா? மினிமம் பேலன்ஸையாவது மெயின்டெயின் பண்றோமா? மாசக் கடைசியில வழிச்சுருவோம். தோடுலேர்ந்து வளையல் வரை எல்லாமே கவரிங்! வசுமதி கொலுசு கூட அடகுல இருந்து இன்னும் மீட்டலை!” – சொல்லும் போதே வசந்திக்குத் தொண்டை அடைத்தது.
”அதுக்கு என்ன தான்டி பண்றது? நீ ஒருத்தி பலிகடா ஆகறேங்கறியா? நீ வயசுக்கு வந்து பதினஞ்சு வருஷமாகுது. நைட் இட்லிக் கடை போடலாம்னு சொல்றான் கெளதம்!”
”ஆமாக்கா…. ரோட்டுக் கடை தான்கா.. இப்ப நல்லா ஓடுது” என்ற கெளதமை வெறுமையாகப் பார்த்தாள் வசந்தி.
”இப்போதைக்கு உன் வேலை, படிக்கறது தான். அதை உருப்படியா பண்ணிட்டாலே போதும். போய்ப் படி!” என்று ஓர் அக்காவுக்கு உண்டான தொனியிலேயே சொல்ல, வசுமதி சிரித்தாள்.
அப்பாவின் மரணம், அதன் பின், நெறித்த கடன் சுமை என்று ஆண்டாளுக்கும் வசந்திக்குமிடையே பேச்சு வலுத்துக் கொண்டே போனது.
”கடைசியாக உன் கூட பேசினா எனக்கு இருமல் தான் வருமே ஒழிய தீர்வு வராது, இஷ்டம் போல செய்டி!” என்று முடித்தாள் ஆண்டாள் விரக்தியாக.
”இன்னிக்கு பாஸ்கிட்ட பேசியிருக்கேன்மா.. சென்னை வேலை பத்தி. இன்னும் ரெண்டு நாள்ல இந்த மாசம் முடிஞ்சவுடனே ரிலீவ் ஆகலாம்னு ப்ளான் பண்ணேன். சுதாகர் கூப்பிட்டுக்கிட்டே இருக்கான். நல்லக் கம்பெனியாம். நீ ஓகே சொன்னா….”
”எல்லாத்தையும் நீயே முடிவு பண்ணிட்டே.. அப்புறம் என்ன கேள்வி? நடத்து!” என்றாள் ஆண்டாள்.
மறுநாள் அலுவலகத்தில் எல்லோரும் விசாரித்தனர்.
”மேனேஜர் சொல்றது உண்மையா வசந்தி? சென்னை போறதாக் கேள்விப்பட்டேன்!” என்று ரம்யா கேட்கும் போது குரு அருகில் இருந்தான்.
”ஆமா, இந்த ஆபிஸ் போதும்னு ஆகிடுச்சி ரம்யா!” என்று சொல்லிக் கொண்டே குருவைப் பார்த்தாள் வசந்தி. குரு கவனிக்காதவன் போல செல்போனைத் தட்டிக் கொண்டிருந்தான்.
வசந்திக்கு சுதாகர் டெலிபோனிலேயே இண்டர்வியூ ஏற்பாடு செய்திருந்தான். இண்டர்வியூ எடுத்த அதிகாரி, ”அஞ்சு வருஷம் டீலிங்ல அனுபவம், செம ஸ்பீடுனு சுதாகர் வேற சொல்றான். நீங்க டைரக்டா ஜாயின் பண்ணிடுங்க வசந்தி. டேட் என்னைக்குன்னு நீங்களே சொல்லிடுங்க… நோ மோர் ஃபார்மாலிட்டிஸ்!”- என்று அதிரடி செய்தார்.
வசந்திக்கு எதுவும் புரியவில்லை ”சார் அவ்ளோ தானா? என் சாலரி பத்தி எதுவுமே….?” என்று இழுத்தாள்.
”நாப்பதாயிரம் டேக் ஹோம்! மூணு மாசத்துக்கொரு தடவை உங்க ரெவினியூ ஜெனரேஷனைப் பொறுத்து இன்செண்டிவ்ஸ்!” – அவர் சொன்னதும் வசந்திக்கு சின்னத் திக்குமுக்காடல் வந்தது. சுதாகர் தன்னைப் பற்றி ஏதோ பில்டப் கொடுத்திருக்கிறான் என்பது அந்த அதிகாரியின் பேச்சில் தெரிந்தது. வசந்தியைத் தன் கம்பெனிக்கு இழுக்கும் வேகம் அந்தப் பேச்சில் இருந்ததை வசந்தி உணர்ந்தாள்.
அன்று மதியம் குரு வசந்தியிடம் ”என்னால தான் சென்னை போறீங்களா மேம்?” என்றான்.
”இல்லை குரு! ரொம்ப நாளாகவே சுதாகர் சொல்லிட்டு இருக்கான். எனக்கும் ஒரு மாற்றம் தேவைப்படுது. சென்னை போக வேண்டிய நேரம் வந்துடுச்சினு நினைக்கிறேன். இல்லேன்னா எங்க அம்மா ஒத்திட்டிருப்பாங்களா? நீ ஒரு வகையிலும் காரணமில்லை..”
”உங்க கம்பெனியில எனக்கும் சிபாரிசு பண்றீங்களா?”
”ஜோக்கடிக்காதே குரு! நானே இப்ப தான் ஜாயின் பண்றேன். சுதாகர் கிட்ட கேட்டுப் பாரேன்?”
”ஓகே.. அப்புறம் எப்ப தான் மேடம்?” – குரு கேட்கும் போது மெலிதாகச் சிரித்தான்.
”என்ன?” என்றாள் வசந்தி.
”உழைச்சுட்டே இருக்கிறதா திட்டமா? செட்டில் ஆகறது பத்தி யோசனையே இல்லையா?”
வசந்தி ஏனோ உள்ளங்கை ரேகைகளை ஒரு கணம் பார்த்தாள். ”அதைப் பத்தி யோசிக்கிறதுக்கு அவகாசம் இல்லை குரு. முதல்ல அம்மாவுக்கு சென்னைல மாஸ்டர் ஹெல்த் செக்கப் பண்ணனும். சுகர் வேற சேர்ந்துடுச்சி இப்ப..”
‘உங்களை எனக்குப் பிடிச்சுப் போனதுக்கு இது தான் காரணம்னு நினைக்கிறேன். எப்பப் பார்த்தாலும் அம்மா தங்கச்சி தம்பி! உங்களைப் பத்தி ஒரு கவலையுமில்லையா? உங்களைப் பார்த்தா எனக்குப் பொறாமையா இருக்கு மேம்!”- குரு நிஜமான வார்த்தைகளை உதிர்க்க,
”குரு ஐஸ் வைக்காதே… என் மேல நீ ஒரு தேவையில்லாத இரக்கத்துல இருக்கேனு நினைக்கிறேன். அதோ பூசினா மாதிரி உட்கார்ந்திருக்காளே, புதுசா ஜாயின் பண்ணவ, அவ பேரென்ன?”
”சுபா… ஏன்?”
”யெஸ், அவளை ட்ரை பண்ணு. உனக்கும் அவளுக்கும் நல்லப் பொருத்தம். அவ அப்பா கூட ஏதோ ரியல் எஸ்டேட் பிசினஸ்னு சொன்னா… நல்ல காசு!”
”அட போங்க மேடம்! ஃபீலிங்க்ஸைக் கேவலப்படுத்தாதீங்க… பண்ணனும்னு நினைச்சிருந்தா படிக்கிற காலத்துலேயே எத்தனையோ பேரைக் கரெக்ட் பண்ணியிருப்பேன். தெளிவா சொல்றேன், ஐ நீட் யூ! அவ்ளோ தான்!”
படார் படாரென்று, கூச்சமில்லாமல் குரு இப்படிப் பேசியது வசந்தியை இம்சித்தது. ஒரு பலஹீனமான தருணத்தில் எவரையும் அசைத்துப் பார்த்துவிடக் கூடிய வார்த்தைகளான ‘ஐ நீட் யூ’ என்பதனை குரு சொன்ன போது வசந்தி நெகிழ்ந்தாள். ‘என்னைப் போய் வேண்டுமென்கிறானே? என் மாநிறம், என் கெச்சல் தேகம், சற்றே நீள்வட்ட முகம், கடந்துவிட்ட இளமை! இவற்றில் எது வேண்டுமாம் இவனுக்கு? பைத்தியக்காரன்! இவனை நம்புவதற்கில்லை. பழகின விதத்தில் ஏதோ இரக்கப்பட்டு பிதற்றுகிறான். விட்டால் என்னையும் குழப்பிவிடுவான். எத்தனைக் கதைகள் படித்திருக்கிறோம்? ஏமாந்துவிடக் கூடாது!’
”மனசு மாறிடும் குரு! இப்ப இப்படி சொல்லுவே… நாளைக்கு சொஸைட்டி, ஸ்டேட்ட்ஸ்னு ஏதாவது காரணத்தோட வந்து நிப்பே.. விட்ரு, என் தங்கச்சி நம்பர் கேட்டவன் தானே நீ…?”
”அது ச்சும்மா… மேம்.,. நானும் சொல்றேன் மைண்ட்ல வெச்சுக்கோங்க!”
”என்ன?”
”மனசு மாறப் போறது உங்களுக்குத் தான்!” என்றான் குரு தீர்க்கமாக.
- ஏன் என்னை வென்றாய்! அத்தியாயம்- 3
- வாழ்க்கை ஒரு வானவில் 9
- சிவமே
- இந்த இதழ்கள் இடம்பெயராதா…..
- இடையன் எறிந்த மரம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 81 ஆதாமின் பிள்ளைகள் – 3
- பகைவனும் நண்பனே – நூல் பற்றிய கண்ணோட்டம்
- மல்லித்தழை
- சுமை துணை
- ஒரு நதி ஒரு கடல் ஒரு சில கரைகள்
- இளைப்பாறல்
- புதுச்சேரியில் 13 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு
- தொடுவானம் 22. வீட்டை விட்டு ஓடினேன்
- ப்ரதிகள்
- ஆத்ம ராகம்
- நீங்காத நினைவுகள் – 52
- தினம் என் பயணங்கள் -23 என்னைப் போன்றவர்கள்
- யானை டாக்டர்.
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 10
- கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் உச்சத் திறனில் இயங்குகிறது
- இருக்கிற கடவுள்களும், இனி வரப் போகும் கடவுள்களும் கை விட்ட தங்கர்பச்சானின் மனிதர்கள் – தங்கர்பச்சான் கதைகள் தொகுப்பு
- மல்லிகை ஜீவாவுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது
- தி.க.சி. யின் நினைவில்