மானசா

This entry is part 12 of 19 in the series 6 ஜூலை 2014

பவள சங்கரி

“மானசா.. ஏய் மானசா.. எந்த உலகத்துல இருக்கே நீ.. எப்பப் பார்த்தாலும் காதுல பாட்டை மாட்டிக்கிட்டு, ஏதோ உலகத்துல சஞ்சாரம் பண்ணிக்கிட்டு .. என்ன பண்றே.. நான் கழுதையா கத்துறது ஏதாவது உனக்கு காதுல உழுகுதா.. இல்லைனா எப்பப் பார்த்தாலும் சிரிப்பும், கும்மாளமும் தான்”

ஏனோ இந்த அம்மாக்களுக்கு மட்டும் தான் கடந்து வந்த அந்த ஸ்வீட் சிக்ஸ்டீன் மனசு மறந்தே போகுது.. எத்தனை சுகமான பருவம் அது. கண்ணுல பார்க்குறதெல்லாம் அழகு. எதோ எல்லாமே தனக்காகவே படைக்கப்பட்டது போல ஒரு நினைப்பு. அதோட உலகத்துலயே தன்னைவிட வேற அழகியே இல்லைங்கற மதர்ப்பு.. 1008 கோணத்துல கண்ணாடியில அழகு பாக்குறதே முக்கியமான வேலை.. இத்தனை கற்பனையையும் அந்த ஒற்றை வரியில் தவிடு பொடியாக்க அம்மாவுக்கு மட்டுமே சாத்தியம். “இங்க பாருடி, சும்மா சிலுப்பிக்கிட்டுத் திரியாத.. பன்னிக்குட்டி கூட பருவத்துல அழகாத்தான் இருக்கும்.. போ.. போ.. போய் பொழப்பப் பாரு..”

இந்த ரோசம் 5 நிமிசம்தான் தாக்குப் பிடிக்கும் அதுக்குள்ள அடுத்த ஆசை, கருகருவென அடர்த்தியான, நீண்ட கருங்கூந்தலை பல விதமாக அலங்காரம் பண்ணிப் பாக்குறதுல ஒரு தனி ஆர்வம் மானசாவிற்கு. அம்மாவுக்குத் தெரியாமல் இரண்டு காதோரமும் குழலாகச் சுருண்டு தொங்குவது போல முடியை வெட்டிவிட்டுக்கொண்டு, அதை அம்மா கண்ணில் படாமல் சர்வ ஜாக்கிரதையாக வீட்டில் இருக்கும் வரை ஹேர்பின் குத்திக்கொண்டு, வீட்டை விட்டுத் தாண்டியவுடன், அதை ரிலீஸ் பண்னுவதில் ஏகக்குஷி அவளுக்கு. எப்படியும் என்றாவது மாட்டிக் கொண்டு கேவலமாகத் திட்டு வாங்கினாலும், கோபித்துக்கொண்டது போல ஜாலியாக தன் அறையில் கதவைச் சாத்திக்கொண்டு ஆனந்தமாகப் பாட்டு கேட்க வசதியாகப் போச்சு. அப்பா வந்தவுடன் சமாதானம் செய்து சாப்பிடக் கூப்பிட்டால் கொஞ்சிக்கொண்டே ஓடி விட வேண்டியது. இதெல்லாம் மானசாவிற்கு கைவந்த கலை. துள்ளலும், குறும்பும், கலகலவென்ற பேச்சும், அனைவரிடமும் ஒட்டி உறவாடுதலும், அன்பிற்குப் பஞ்சமில்லாமல் வாரி வழங்குதலும் அவளுக்கு ஒரு கூட்டத்தையே சேர்த்து வைத்திருந்தது. குடும்ப விழாவோ, நண்பர்கள் வட்டமோ எல்லாவற்றிலும் தன்னுடைய கபடமற்ற நடவடிக்கைகளால் மிக எளிதாக அனைவர் மனதிலும் இடம் பிடித்துவிடுவாள். கன்றுக் குட்டியாய் துள்ளி விளையாடிய வாழ்க்கையில் தென்றல் மெல்ல புயலாக மாற ஆரம்பித்தது..

மைலாப்பூரில், கல்யாணி ஆஸ்பத்திரி ஸ்டாபிங்கில் இருந்து 45 B பஸ் பிடித்து ஸ்டெல்லா மேரி கல்லூரிக்குச் செல்வது அவளுக்கு வழக்கம். புகுமுக வகுப்பில் சேர்ந்த புதிது. கண்ணில் கனவுகள் பட்டாம்பூச்சியாய் சிறகடித்துப் பறக்க, உலகமே தன்னை வியந்து பார்ப்பது போல எண்ணத்தில் தலை நிமிர்ந்து கம்பீரமாக சென்று கொண்டிருந்தாள். அன்றுதான் முதன் முதலில் சஹானாவை சந்திக்கிறாள். பேருந்தின் இடையில் சன்னலோர இருக்கையில் உட்கார்ந்துகொண்டு ஒரு குழந்தை பள்ளிக்குப் போகமாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்ததை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அருகில் ஏதோ சலசலப்புத் தெரிய சட்டென்று திரும்பிப் பார்த்தாள். லேட்டஸ்ட் பாட்டியாலா டிசைன் சுடிதாரும், ஷார்ட் டாப்ஸூம் போட்டுக்கொண்டு, கொடியிடையுடன், தேர்ந்த ஒப்பனையுடன், மிக அழகாகத் தெரிந்தாள் அந்தப் பெண். பல நாட்கள் பழகியவளாக புன்னகை பூத்தவாறு இருந்தாள். முதல் பார்வையிலேயே நட்பூ பூத்துவிட்டது இருபது நிமிட பயணத்தில் ஓராயிரம் விசயங்களை இடைவெளியில்லாமல் பேசித் தீர்த்தவுடன், கடைசி ஐந்து நிமிடம் மட்டும் சஹானா சற்றே இடைமறித்தாள்.

“மானசா, நான் இன்னைக்கு உன்னை சந்திக்கணும்னே பஸ்ஸில வந்தேன். ஆமா, நான் தினமும் கார்லதான் காலேஜுக்கு வருவேன்”

”ஆமா நானே உன்னை கேட்கணும்னு நினைச்சேன். இன்னைக்கு மட்டும் ஏன் பஸ்ஸில வரே நீ. கார் ரிப்பேரா”?

“இல்லை. எங்க வீட்டில மூனு கார் இருக்கே. அதனால அந்தப் பிரச்சனை இல்லை. எனக்கு காலேஜுக்கு தனியா போக போர் அடிக்குதுப்பா.. அதான் இன்னைக்கு பஸ்ஸுல வந்தேன்”

அட, இப்படிக்கூட ஒருத்திக்கு கார்ல தனியா போறதுக்கு போர் அடிக்குமா.. ‘ கண்கள் அகல ஆச்சரியத்தின் உச்சமாக அவள் பார்த்த பார்வையை அர்த்தமுள்ள ஒரு ஆழ்ந்த புன்னகையுடன் கடந்து சென்றாள் சஹானா. கல்லூரியின் சமீபத்தில் வந்தவுடன்,

“மானசா, என்னோடு தினமும் காரில் காலேஜுக்கு வருவியா. உன்னைக் கூப்பிடத்தான் இன்னைக்கு பஸ்ஸுல வந்தேன். நான் டெய்லி உங்க வீட்டுக்கு வந்து பிக்கப் பண்ணிக்கிறேன். சரியா?” என்று அவள் கேட்டபோது, பெருமை பிடிபடவில்லை. அடித்துப்பிடித்து, உடையெல்லாம் கலைந்து, போட்டிருக்கும் முகப்பூச்சும், டால்கம் பவுடரும் காலேஜூக்குப் போறதுக்குள்ளேயே கரைஞ்சுப் போயிடும்ங்கற கவலை இனி இல்லையே. அலுங்காம, குலுங்காம, அலங்காரம் கலையாம, அப்படியே புத்தம் புது மலரா கல்லூரியில் போய் இறங்கலாமே என்று ஆனந்தத் துள்ளல் போட்ட மனதின் போக்கை முகம் அப்படியே காட்டிக்கொடுத்துவிட்டது என்பதை சஹானாவும் புரிந்து கொண்டதை அவள் புன்னகை வெளிக்காட்டிவிட்டது. ஆனால் இன்று தானாக வந்த இந்த நட்பும், அதனால் சுகமான பயணமும், தன்னுடைய தலையெழுத்தையே மாற்றியமைக்கப் போகும் முடிவு என்பதை அறிந்திருந்தால் ஒரு வேளை இந்த அழைப்பை மறுத்திருப்பாளோ?

தங்கைகள் மத்தியில் தனக்கு மட்டும் ஏதோ கொம்பு முளைத்துவிட்டது போல பெருமையுடன் அலட்டலாகத் திரிந்தாள். சில நாட்கள் சஹானா காரில் வந்து வீட்டு வாசலில் ஹார்ன் அடித்தால் ஓடி வந்து ஏறிக்கொள்வாள். அடுத்து வந்த சில நாட்களில், சஹானா கிளம்புவதற்கு தாமதமாகிவிடுவதால் முதலில் மானசாவை வந்து பிக்கப் செய்துகொண்டு போக டிரைவர் வந்தார். நாளடைவில் இதுவே வழக்கமாகி, சஹானாவின் அக்கா, அத்திம்பேர், அம்மா என அனைத்து உறவுகளும் தனக்கும் உறவாகிவிட்டது. ஒரு பிரபல தொழிலதிபர்தான் சஹானாவின் அத்திம்பேர் என்பது வெகு நாட்கள் கழித்துதான் அவள் அறிந்துகொண்டாள். பல பிரபலங்கள் அவர்கள் வீட்டிற்கு வந்து செல்வார்கள். மானசா நன்கு பழகிவிட்டதால் சஹானாவின் படுக்கை அறை வரை நுழைந்து வருவாள். சஹானாவின் அக்காவிற்கு குழந்தை இல்லாதலால் சஹானாதான் அவர்களுக்குச் செல்லக் குழந்தை.

கோடை விடுமுறை சமயம். சென்னையிலிருந்து சித்தப்பா வீடு இருக்கும் சேலத்திற்கு விடுமுறையைக் கழிக்க குடும்பத்துடன் கிளம்பத் திட்டம் இருந்தும், மானசாவின் அப்பா பணி புரிந்த வங்கியில் அவசரமாக ஆடிட்டிங் செய்ய அதிகாரிகள் வந்துவிட்டதால், பயணத்தைத் தள்ளிப் போட்டிருந்தனர். வீட்டில் சும்மா இருந்துகொண்டு போர் அடிப்பதாக அலுத்துக் கொண்ட மானசா அம்மாவிடம் சினிமாவிற்குச் செல்ல வேண்டும் என்று நச்சரித்துக்கொண்டிருந்த போது, திடுதிப்பென்று சஹானா வந்து நின்றாள்.

“ஹேய், வாட் அ சர்ப்ரைஸ்.. என்ன இப்படி திடீர்னு சொல்லாம கொள்ளாம வந்து நின்னுட்டே.. கிரேட் யா… இப்பதான் போர் அடிக்குதுன்னு சொல்லி அம்மாகிட்ட சினிமா போலாம்னு கெஞ்சிக்கிட்டிருந்தேன்.. நல்ல வேளை நீ வந்துட்டே.. வா கேரம் விளையாடலாமா.. பொழுது போறதேத் தெரியாது..”

“ஏய் நோ.. நோ.. வேண்டாம்ப்பா.. நாம ஜாலியா ஒரு சக்கர் போலாமே.. எனக்கும் கொஞ்சம் ஷாப்பிங் இருக்குடீ. சில முக்கியமான பொருளெல்லாம் வாங்கணும். நீ வந்தாதான் பரவாயில்லை. அக்காவுக்கு கொஞ்சமும் பொறுமை இல்லை. சீக்கிரம், சீக்கிரம்னு அவசரப்படுத்திண்டே இருப்பா.. டிரையல் பார்க்கக்கூட விட மாட்டா..”

“என்ன டிரெஸ் ஏதும் வாங்கப் போறயா.. நீ ஒரு டிரஸ் செலக்ட் பண்ண ஒரு நாளே இல்ல அலைய விடுவ.. ஐயோ என்னை ஆளை விடும்மா…”

”ஏய் .. டிரஸெல்லாம் இல்லைப்பா… வரவர சைஸ் பத்தவே இல்லை பாறேன். அக்கா பழைய சைஸ் உள்ளதையே ஒட்டுக்கா ஒரு டஜன் வாங்கித் தள்ளிட்டா.. இப்ப என்னடான்னா பத்தவே இல்ல.. ஒரே டைட்டா இருக்கு..” என்று சொல்லும் போது ஒரு நாணம் கலந்த பெருமை அவள் முகத்தில்…

“ஓ இதானா விசயம்.. சரி.. சரி.. ரொம்பத்தான் வெட்கப்படாதே.. உனக்கு அதெல்லாம் சூட் ஆகாதும்மா… சும்மா ஒவர் ஆக்டிங் வாணாம்..”

“ஏய், கழுதை, உன்னை என்ன செய்யிறேன் பார். ரொம்பதான் திமிறுடி உனக்கு.. “
காதைப்பிடித்து திருகியவாறு அவளைத் துரத்திக் கொண்டு ஓடினாள்..

“ஏய் என்னடி இது குழந்தைகளாட்டம் வீட்டுக்குள்ள ஓடிக்கிட்டிருக்கீங்க..” என்றவாறு அம்மா சஹானாவிற்குப் பிடித்த பொறி உருண்டையும், தூள் பக்கோடாவும் கொண்டு வந்து கொடுத்தார். ஐந்தே நிமிடத்தில் தட்டு காலியாகியது.. ஜூஸ் தருகிறேன் என்று சொல்லி உள்ளே சென்ற அம்மாவை ,

“வேண்டாம்மா நாங்க வெளியிலதான் போறோம். அங்கேயே குடிச்சிக்கிறோம். நீங்க சிரமப்படாதீங்க” என்றவாறு மானசாவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு, “அம்மா நாங்க போயிட்டு சீக்கிரம் வந்துடுவோம் என்றவாறு ஹேண்ட்பேக்கை தூக்கிக்கொண்டு கிளம்பியவளிடம், கையைப் பிடுங்கிக்கொண்டு, “இருடி, அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன்” என்று ஓடினாள் மானசா.

சமயலறையில் சிடுசிடுத்த முகத்துடன் தனக்கெனவே காத்திருந்த அம்மாவைப் பார்க்கவே பயமாக இருந்தது அவளுக்கு…..

“வாடி.. வா. முன்னாடியே அவகிட்ட சொல்லி வச்சுட்டு இப்ப ஒன்னும் தெரியாத மாதிரி , அவ முன்னால சீன் பண்றயா.. அப்பா வரட்டும் இரு, இருக்கு உனக்கு..”

“அம்மா, சத்தியமா இல்லம்மா. அவ திடீர்னுதான் வந்திருக்கா.. நான் வேணா வர்லைன்னு சொல்லிடவா?”

“சும்மா நடிக்காதடி. இன்னும் அவ வேற என்கிட்ட வந்து கேக்கணுமாக்கும்.. போ..போ, போயிட்டு சீக்கிரம் வந்து சேரு.. இதுதான் இப்புடி நீ போறது கடேசியா இருக்கட்டும் ஆமா.. அவகிட்ட என்ன சொல்லுவியோ தெரியாது. இனிமேல அவ இங்க வந்து உன்னை கூப்பிடக்கூடாது. காலேஜூக்குப் போனமா, படிச்சமான்னு இருக்கணும் ஆமா.. போ.. போயிட்டு நேரத்தோட வீடு வந்து சேர்ர வழியைப்பாரு.. “

ஷாப்பிங் முடித்து, வீட்டிற்கு வரும் வழியில் சஹானா, தான் முதலில் இறங்கிக்கொண்டு மானசாவை டிராப் பண்ணச்சொல்வதாகக் கூறினாள். அவள் வீட்டின் அருகில் செல்லும்போதே வெளியிலேயே ஒரே பரபரப்பாக இருந்தது. கப்பல் போன்ற பெரிய வெளிநாட்டுக் கார் ஒன்றும் மற்றும் வேறு பல கார்களும் நின்றிருந்தது. கப்பல் போன்ற அந்தக் காரைக் கண்டவுடன் சஹானா, “அட, சேச்சா வந்திருக்காங்க…. மானசா ரொம்ப நாளா நீயும் சேச்சாவை பார்க்கணும்னு ஆசைப்பட்டியே, வா பார்த்துட்டுப் போகலாம். உன்னை அவருக்கு அறிமுகப்படுத்தறேன் வா..”

ஏற்கனவே நேரமாகிவிட்டதில் அம்மாவின் ருத்ர தாண்டவ முகம் அவ்வப்போது முன்னால் வந்து மிரட்டிக்கொண்டிருக்க, தான் வெகு நாட்களாகப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்த அந்தப் பிரபலமான நடிகரும், அரசியல் தலைவருமான அவரை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பை நழுவ விடவும் மனமில்லை அவளுக்கு. ஒரு நொடிப் போராட்டத்தில், சஹானாவின் அவசரத்தில், தன் ஆசை வென்றது மானசாவுக்கு. ஆனது ஆகட்டும் அம்மாவை சஹானாவுடன் சென்றே சமாதானம் செய்துவிடலாம் என்று முடிவுசெய்து கொண்டு தயக்கத்துடனேயே அவள் பின்னாலேயே சென்றாள். வீட்டிற்குள் சென்றவுடன் அக்கா, பரபரப்பாக சமயலறையில் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார். அத்திம்பேரின் அறையில் கதவு சாத்தியிருந்தது. அக்காவிடம் சென்ற சஹானா, “அக்கா சேச்சா வந்திருக்காங்களா” என்றாள் ஆவல் பொங்க.

“ஆமாண்டி, எல்லோரும் ஒரு மீட்டிங்கல இருக்காங்க. இங்கதான் டின்னர் சாப்பிடப் போறாங்க” என்றவாரு இவள் எதற்கு வந்திருக்கிறாள் என்ற சந்தேகத்துடன் மானசாவைப் பார்த்தார். அதைப்புரிந்து கொண்ட சஹானா வெகு நாட்களாக அவரைப் பார்க்க வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டதை எடுத்துக் கூறினாள். அதற்கு அவரும், ‘சரி, சரி வெயிட் பண்ணும்மா, ஆச்சு மீட்டிங் முடிஞ்சிருக்கும், வந்திடுவாங்க.. உட்காரும்மா நீ..’ என்றவாரு, சமையல் ஆட்களை சுழல வைக்கச் சென்றுவிட்டார்.

மானசாவிற்கு அந்தப் பிரபல நடிகரைப் பார்க்கப் போகிறோம் என்ற பரபரப்பும், பின் அதை தங்கைகள், தோழிகள் மற்றும் உறவினர்களிடமும் எப்படி பெருமை பேசிக்கொல்ளலாம் என்ற கற்பனையில், அம்மாவின் கோபாவேசமான முகத்தைக்கூட மறந்துதான் விட்டாள்.

அத்திம்பேரின் அறையிலிருந்து கதவு திறக்கும் சத்தமும் அவர் குரலும் கேட்டவுடனேயே இவளுக்கு ஒரே படபடப்பு. சஹானாவின் பின்னால் வந்து நின்றுகொண்டாள். அவளும், “ஹலோ சேச்சா, எப்படியிருக்கீங்க.. ரொம்ப நாளா பார்க்கவே முடியலையே, பிசியா” என்றாள்

“ஆமாண்டா வெளிநாடு ஷூட்டிங்.. சரி நீ எப்படியிருக்கே.. ஒழுங்கா படிக்கறயா.. “ என்றார். அவள் பின்னால் மருண்ட மான்குட்டியாக ஒளிந்துகொண்டு நிற்கும் மானசாவைக் கவனித்தவர், “அது யாரு உன் பிரண்டா…” என்றார்.

“ஆமாம் சேச்சா, உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கா, ஆனால் பயந்துகிட்டு முன்னால வரமாட்டீங்கறா பாருங்க” என்றவாரு தான் அவளை விட்டு விலகி ஒதுங்கி நின்றாள்.

“அப்படியா, என்னம்மா நீயும் சஹானாவோடத்தான் படிக்கறயா” என்றவாரு அவளை ஏற இறங்கப் பார்த்தவர், ஒரு நிமிடம் தடுமாறி, அத்திம்பேரை திரும்பிப் பார்க்க, அவரும் ஏதோ அர்த்தமுள்ள பார்வைவீச, இது எதுவும் புரியாமல், மானசா, கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்ற அவசரத்தில் தம் தயக்கத்தையெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு படபடவென பொரிந்து தள்ளினாள். பட்டாம்பூச்சியாய் படபடக்கும் அந்த விழிகளையும் நல்ல, உயரமும், அதற்கேற்ற பூசினாற்போன்ற உடல்வாகும், பொன் நிறமும், அவருக்கு அவளை உற்று நோக்கச் செய்தது. ஒரு கட்டத்தில் அவள் நெளிய ஆரம்பித்து, மெல்ல பின்வாங்கினாள். சஹானாவிடம் முணுமுணுப்பாகத் தான் வீட்டிற்குக் கிளம்ப வேண்டும் என்று சொன்னாள். அவளும் அதைப் புரிந்துகொண்டவளாக, “சரி நீ கிளம்பறியா மானசா, அம்மா தேடுவாங்க இல்லையா..?” என்றாள்.

“இல்லை, இல்லை. இன்று மானசாவும் நம்முடன் டின்னர் சாப்பிடப் போகிறாள். அப்பறம் போகலாம்” என்றார் சேச்சா. அத்திம்பேரும் உடனே, “சரிம்மா, சாப்பிட்டுப் போகலாம். அப்பாகிட்ட நான் பேசிக்கிறேன். நீ ஒன்னும் கவலைப்படாதே” என்றதை மறுக்க முடியாமல் தயக்கத்துடனேயே சாப்பிட அமர்ந்தாள். அரட்டையும், கிண்டலுமாக மிக இனிமையான பொழுதாக இருந்தது. சாப்பிட்ட அதே வேகத்தில் அந்தப் பிரபலமான நடிகர் கிளம்பிவிட்டார். மானசாவையும் பார்த்து விடைபெற்றுச் சென்றது அவளுக்குப் பெருமையாக இருந்தது. அத்திம்பேர் அவர் கூடவே கார் வரை சென்று அங்கு ஏதோ சீரியசாக பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினார். அதுவரை கிளம்ப முடியாமல் தவித்த மானசா அம்மாவின் கோபாவேசமான முகம் நினைவிற்கு வர உடனே வீட்டிற்குச் செல்ல துடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

அத்திம்பேர் வந்தவுடன், “வாம்மா, நானே வீட்டில் சொல்லி விட்டுவருகிறேன். சஹானா நீயும் வா” என்றார்.

அதை மறுத்து பேசும் சந்தர்ப்பம் கூட கொடுக்காமல் கிளம்பி காரில் உட்கார்ந்துவிட்டார். மானசா அத்திம்பேர் முன்னால் அம்மா, தான் நேரங்கடந்து வந்ததற்கு கண்டபடி திட்டிவிடாமல் இருக்க வேண்டுமே என்ற அச்சத்திலேயே வந்து கொண்டிருந்தாள். காரை விட்டு இறங்கியவுடன் சத்தம் கேட்டு அப்பா வெளியே வந்தார். சஹானாவை உள்ளே சென்று மானசாவை அம்மாவிடம் சொல்லிவிட்டு விட்டுவரச் சொன்ன அத்திம்பேரை, அப்பா உள்ளே வரச் சொல்லி அழைத்தும் அவரும், தான் அவசரமாகக் கிளம்ப வேண்டும் என்றும் இன்னொரு நாள் வருவதாகவும் கூறிவிட்டு, அப்பாவின் வேலை, குடும்பம் என்று பொதுப்படையாக விசாரித்துவிட்டு, ஒரு முக்கியமான விசயமாகப் பேச வேண்டும் என்று அப்பாவின் போன் நம்பரை வாங்கிக்கொண்டு அடுத்த நாள் அழைப்பதாகக் கூறிச் சென்றார். அடுத்த சில நாட்கள் வீட்டில் பல மாற்றங்கள், அப்பாவும், அம்மாவும் ஏதோ முக்கியமாகப் பேசிக் கொண்டிருப்பதும், புரிந்தது. சரி ஏதோ பிரச்சனை போல இருக்கிறது. பாட்டி வீட்டு பிரச்சனை ஏதாவது இருக்கும் என்று நினைத்துவிட்டாள். சஹானா அடுத்த சில நாட்களில் சிங்கப்பூர் டூர் கிளம்பிப் போய்விட்டாள். இன்னும் ஒரு வாரத்தில் எப்படியும் சித்தப்பா வீட்டிற்குச் செல்லப் போகிறோம் என்று ஆவலாகக் காத்திருந்தவளுக்கு, அடுத்த நாளே அப்பா மானாசா, அம்மா மற்றும் இரண்டு தங்கைகளுக்கும் ரயில் டிக்கட் வாங்கி வந்தது ஆச்சரியமாக இருந்தது. அம்மாவும் அதைப்பற்றி ஏதும் பெரிதாகப் பேசாமல், அனைவரும் சேலத்திற்கு கிளம்பினார்கள். அடுத்தடுத்து பல அதிர்ச்சிகள் காத்திருந்தது மானசாவிற்கு.

குடும்பத்தை முன்னால் அனுப்பி வைத்த அப்பா நான்கைந்து நாட்களுக்குள் வேலையை முடித்துவிட்டு வந்து சேர்ந்தார். பாட்டியிடமும், சித்தப்பாவிடமும் ஏதோ கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பாட்டி மட்டும் அவ்வப்போது, மானசாவைப் பார்த்து, “அதுக்குத்தான் பொட்டப் புள்ளைக அடக்க ஒடுக்கமா இருக்கணுங்கறது. காலேஜுக்குப் படிக்கப் போனமா, வந்தமான்னு இருக்கணும். பெரிய இடத்து சிநேகிதமல்லாம் நமக்கு என்னத்துக்கு” என்ற போக்கில் அடிக்கடி எதையாவது சொல்லி முறைத்துக்கொண்டே இருந்தார். பாட்டி வழக்கமாக இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள் என்பதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும், வீட்டில் தன்னை மையப்படுத்தி ஏதோ முக்கியமாக நடப்பது மட்டும் தெரிந்தது. அம்மாவிடம் கேட்டால், நானே சொல்லுவேன், அதுவரை பொறுமையா இருடி என்று சொன்னதால், அத்தை பிள்ளைகளும் விடுமுறைக்கு வந்திருந்ததால் அவர்களுடன் விளையாட ஆரம்பித்துவிட்டாள்.

அன்று வெள்ளிக்கிழமை காலை ஆறு மணிக்கே எழுப்பிவிட்ட அம்மா, தலைக்குத் தேய்த்துவிட்டு குளிக்க வைத்தார்கள். பிறகு தலை சீவி அலங்காரமும் செய்துவிட்டு புடவை கட்டிவிட முயற்சி செய்தபோதுதான் ஒரே பிடியாக எதற்குப் புடவை என்று கேட்டாள் மானசா. அம்மாவும், “உன்னைப் பெண் பார்க்க வர்றாங்க” என்று ஒத்தை வார்த்தையில் சொன்னது குண்டைத் தூக்கிப் போட்டது போல இருந்தது. அதற்குப் பிறகு மானசாவின் வாழ்க்கை நொடியில் திசை திரும்பிப்போனது…. தன் மகளை சினிமாவில் நடிக்க வைக்க விரும்பி, லேசாகக் கட்டாயப்படுத்துவது போல அப்பாவிற்கு வந்த அழைப்பே இந்த அவசர திருமணத்திற்குக் காரணம் என்று புரிந்தபோது அவளுடைய விருப்பத்தைக் கேட்பதற்கும் நாதியில்லாமல் போனதுதான் உண்மை. மானசாவின் அந்த அதிர்ச்சி விரைவில் தீரும் என்ற உத்திரவாதம் இல்லை! இந்த மிடில் கிளாஸ் மேனியாவில் ஒரு பெண்ணின் எதிர்காலம் பாழாவதைப் பற்றி அங்கு எவரும் கவலைப்பட்டதாகவேத் தெரியவில்லை!

Series Navigationகானகத்தில் ஒரு கஸ்தூரி மான்செவ்வாய்க் கோள் செல்லும் நாசாவின் எதிர்கால மனிதப் பயண தட்டுத் தளவூர்தி மெதுவாய் இறங்குவது நிரூபிக்கப் பட்டது.
author

பவள சங்கரி

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    பவள சங்கரியின் ” மானசா ” சிறுகதையின் முடிவு கொஞ்சம் சோகமாக இருந்தாலும், துவக்க முதல் இறுதிவரை படிக்க சுவையாகவும், ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், ஒரு வகையில் ஜாலியாகவும் இருந்தது. ஒரு நல்ல குடும்பக் கதை சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மானசா, அவளுடைய அம்மா, சாஹானா , சேச்சா பாத்திரப் படைப்புகள் இயல்பாக படைக்கப்பட்டிருக்கின்றன. பாராட்டுகள் பவள சங்கரி. டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *