உத்தமபுத்திரா புருஷோத்தம் – தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமை

This entry is part 6 of 26 in the series 13 ஜூலை 2014

தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமை சேர்க்கும் நல்லதொரு படைப்பு

முனைவர் மு.பழனியப்பன்

தமிழாய்வுத் துறைத்தலைவர்

மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி

சிவகங்கை, 630562

9442913985

 

 

படைப்பு மனம் வேறுபட்டது. மற்ற மனங்களை விட அது மிகவும் மாறுபட்டது. நுழையாத வாசல்களிலும் அது நுழைந்து பிரிக்கமுடியாத இழைகளையும் அது பிரித்து சேர்க்க முடியாத சேர்மானங்களைச் சேர்த்து, தொடர்பற்றவற்றை தொடர்புபடுத்தி, தொடர்புடையவற்றைத் தொடர்பிலாததாக்கி படைப்பு மனம் செய்யும் புதுமை  காலகாலத்திற்கும் விரிந்து கொண்டே போகின்றது.

முழுவதும் எழுதிவிட்ட வள்ளவருக்குப் பின் என்ன எழுத இருக்கிறது. ஆனால் இருந்து கொண்டுதானே இருக்கிறது. இன்னும் படைக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டுதானே இருக்கிறது. எழுதும் கலைஞர்களை நாளும் உலகம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அவர்கள் எழுதுவதைப் பற்றிச் சிந்திந்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

எழுதுவது என்பது ஒருவகையான  சித்தநிலை.- அறிவு நிலை- அனுபவநிலை. எழுதத் தொடங்கிவிட்டால் எழுத்தெல்லாம் அதுவே நிறையும். பார்ப்பதெல்லாம் அதுவாக நிறையும். சுவாசிப்பது, பசிப்பது எல்லாம் அதுவாக படைப்பது என்பது ஒருவகையான சித்தநிலை.

படைப்பாளனின் உள்ளே நி்ன்று எது எழுதத் தூண்டுகின்றது. அவன் எழுதுவதெல்லாம் சரியா? எழுதும் மனோநிலையில் எண்ணறிய தத்துவங்கள் வந்து குவிந்துவிடுமா? படைப்பாளனின் தன் படைப்பிற்குள் அறிந்தது அறியாததெல்லாம் எப்படி வந்து ஒன்றாய்க் கூடுகட்டி நிற்கின்றது. இந்தப் புதிர்த்தன்மையால்தான் படைப்பாளிகள் தனித்த மனிதர்களாக சமுதாயத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சமுதாயத்தில் ஒன்றாமலும் விலகாமலும் நிற்கிறார்கள்.

படைப்பாளன் எழுத்துகளைத் தொடர்ந்து அமைந்து ஒரு சங்கிலியை உருவாக்குகின்றான். இந்தச் சங்கிலிக்குள் பொருள் நீள நிற்கின்றது. அழகு தோகை கட்டுகின்றது. தத்துவம் மையமாக பரிணமிக்கின்றது. இப்பொதுத்தன்மையில் இருந்துத் தற்போது எழுத்துக்களுக்குள் தொடர்புகள் (லிங்க்) பல வந்து தொடரும்படியான முயற்சி வந்துசேர்ந்துள்ளது.

கணினி அறிஞர்கள் அறிவியல் சார்ந்தவர்கள். படைப்பு மனம் சார்ந்தவர்கள். இவர்கள் இயந்திரத்தை இயக்கும்போது இந்த இரண்டு பண்புகளும் அவர்களிடத்தில் அளவுகடந்து நிற்கவேண்டும். இவர்கள் புதிய இலக்கியப் படைப்புகளைப் படைக்கும்போது அவர்களின் அறிவியல், படைப்பியல், தொடர்பியல் அறிவும் இணைந்தே் படைப்பிற்குள் செயல்படத் தொடங்கிவிடுகின்றது. எனவே கணினி சார்ந்த படைப்பாளர்களின் படைப்பில் புது மெருகு தென்படுகின்றது. அப்படி ஒரு புதுமெருகு கொண்ட கணினியாளர் –படைப்பாளர் உத்தமபுத்திரா புருஷோத்தம்.

இவர் கணினித் துறையில் மென்பொருள் வல்லுநர். இவரின் மென்கரங்கள் பட்டு கடினமானவையும் எளிமையாயின. இவரின் கரம் பட்டு தமிழ்க்கவிதை உலகம் புத்துலகிற்குப் பயணிக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.

ஒரு கவிதைக்குள் எத்தனை தொடர்புகளை ஏற்படுத்த இயலுமோ அத்தனை தொடர்புகளைப் படைப்பாளராகவும், மென்பொருள் வடிவமைப்பாளராகவும் இருந்து அவர் தொடுத்துள்ளார். இந்தச் சிந்தனை எப்படி அவருக்கு வாய்த்தது.கனவில் வாய்த்தது. மனத்தின் சித்த நிலையில் வாய்த்தது.

மரபுக் கவிதை எப்படி அவருக்கு வாய்த்தது. மரபு சரியாக இருக்கிறதா! என்று பத்துமுறை பார்த்தும் தளைதட்டுகிற தமிழாசிரியர்களின் நிலைக்கு மேலாக அவரிடத்தில் வெண்பாவும் ஆசிரியமும் கலித்துறையும் எவ்வாறு கலிநடம் புரிகின்றன. ஒரு பாடலைப் படித்தவுடன் அதன் அலைவரிசை அவர் மனதிற்குள் உட்கார்ந்து கொண்டுவிடுகின்றது. அந்த மரபில் தானும் செய்யப் பழகிய அவர் மரபுக் கவிதையினை எளிமையாகக் கற்றுக் கொண்டுள்ளார். தமிழின் தலைசிறந்த மரபுக்கவிதைகளின் வாசகராகவும் அவர் உள்ளார். கண்ணதாசனும், அபிராமிப்பட்டரும், குமரகுருபரரும் அவரின் நூலக நண்பர்கள்.

நான்கு அடி வெண்பாவில் உள்ள ஒவ்வொரு சொல்லும் ஒரு விருத்தமாக அவர் மொழியில் ஐந்து சொல்- நான்கடி (அதாவது இருபது வார்த்தைகள்) என்ற நிலையில் விரிகின்றது. அவரின் படைப்பாற்றலை படைப்புத் தொடர்பினை அவரே நூலின் தேவையான பக்கங்களில் விளக்கியுள்ளார் என்றாலும் முப்பெருந்தேவியருக்கு நூறு பாடல்கள் என்ற அமைப்பில் வெண்பா ஒன்றுக்கு பதினாறு சொற்கள், இரு வெண்பாவிற்கு முப்பத்தியிரண்டு சொற்கள். முப்பத்தியிரண்டு சொற்களில் தொடரும் முப்பதியிரண்டு கவிதைகள். இவை அந்தாதியாகவும் தொடரும். இதுபோன்று மூன்று அன்னையருக்கும் படைத்துள்ளார். இவைதவிர  கடவுள் வாழ்த்து, பாயிரம் என்ற நிலையில் நூற்றெட்டுப் பாடல்களை படைத்துக்கொண்டுள்ளார். கவிதையைப் படைத்தது மட்டுமில்லாமல் அதற்கான உரைகளையும் வரைந்து, நல்ல தலைப்புகளையும் தந்து அத்தத்தலைப்புகளையும் இணைத்து ஒரு கவிதையாகவும் ஆக்கி இவர் செய்துள்ள படைப்பின் தொடர்புபடுத்தும் தன்மை இதுவரைத் தமிழ்க் கவிதையுலகிற்குக் கிடைக்காத புதிரான அதிசயத்தன்மையாகும்.

இப்பெருநூலில் கவியழகும், சொல்லழகும், தத்துவழகும், எண்அலங்காரம் போன்ற நலன்களும் சிறந்துள்ளன. மொத்தத்தில் இந்தக் கவிதை நூலை மென்பொருள் நிலையில் படைத்துள்ளார் என்பது சுருக்கமான கருத்தாக இருக்க முடியும்.

தாயறிவாய் ஒருமனத் திருகண்

முக்குணச் சதுர்மறை

நாயகியாய் ஐம்பொறி அறுசுவை

ஏழிசை நல்லறச்

சேயகமாய் எண்திசை நவரசப்

பற்றாகித் தீதெனும்

பேயகலப் பிணயிகலப் பேணுவித்து

வாலறிவாய் பேதித்தவளே (கலைமகள் அந்தாதி, 13)

என்ற பாடலில் கலைமகளை எண்ணலங்காரம் செய்து அலங்கரிக்கிறார் கவிஞர். ஒன்றாய் நிற்கிறாள் கலைமகள். அதே நேரத்தில் வேறாய்ப் பேதித்தும் நிற்கிறாள் என்பதை இக்கவிதை ஒன்றில் தொடங்கி ஒன்பதில் முடிந்து உணரத்துகின்றது.

இவர் செல்வத்தைப் புரக்கும் இலக்குமிக்கும் அந்தாதியை அழகாகப் பாடியுள்ளார். அன்றைக்கு வந்த எங்கள் இலக்குமி என்றைக்கும் நீங்காமல் வளர்ந்து வாழ யாருக்கும் அருளும் அந்தாதி இது.

பெருஞ்சிகைப் பெய்வளையே! பெருநிதியம்

பெறுனர்பால் பெரும்பலந்

தருஞ்சிகை அகநெய்வார் தகைப்பேணி

முனைவர்பால் தனமளக்கும்

அருஞ்சிகை அளவறிந்து செயலாக்கும்

அனைவர்பால் அமுதளிக்கும்

நெருஞ்சிகை நெய்வாச நறுமதிநின்

நெஞ்சின்பால் நெடியோனே!

(திருமகள் அந்தாதி, 11)

என்ற இந்தப்பாடலில் ‘‘முனைவர் பால் தனமளக்கும் ’’ என்ற தொடர் இலக்கியச் சிறப்பும் மந்திரச் சிறப்பும் மிக்க தொடராகும். இச்செய்யுளில் பெருநிதியம், அமுதம் ஆகியன குறிக்கப்பெற்றுள்ளன. இவை திருமகளோடு பாற்கடலில் உடனாகப் பிறந்தவையாகும். எனவே திருமகளையும் செல்வத்தின் குறியீடுகளையும் இல்லத்தில் வந்துசேர்க்கும் நலமிக்க பாடல் இதுவாகும்.

‘பராபரையாய் பகுத்தளித்த பராசக்தியைப்

பரிந்துவக்கப் பகிருதலும்

பராமரித்துப் பிறர்களிக்கப் பண்ணுதலும்

பரானுபவப் பரமானந்தத்

தராதரமாய் துய்ப்பதிலும் துன்பமதைத்

துடைப்பதிலும் ஐம்புலத்துச்

சராசரமாய் உள்ளமதாய்ச் சலனிப்பதும்

சுவாசிப்பதுவும் கடவுளுறையே (அம்பிகை அந்தாதி, 10)

என்ற பாடல் அம்பிகையைப் போற்றும் நல்ல பாடல். சிவதத்துவத்தையும், சக்தி தத்துவத்தையும் முழுமையாய் விளக்கும் பாடலும் இதுவாகும். பாரசக்திக்குத் தன்சக்தியைப் பகுத்தளித்த பிரானுக்கு உரிய நிலையில் உதவுவதும், துன்பமதைத் துடைப்பதுவும்,  உடலுக்குள் உயிராக சலனிப்பதுவும் அம்பிகையின் இயல்பென மொழிகின்றது  இப்பாடல்.

தமிழ்க் கவிதைகள் தத்துவம், கவித்துவம், சொல்வளம், பொருள்வளம், மந்திர வளம், இலக்கிய வளம், அருள்வளம் பெற்றவை என்ற நிலையில் இதுவரை இருந்து வந்ததன. கவிதையின் சொற்கூட்டம் என்பது வெற்றுச் சொல்கூட்டம் அல்ல. அச்சொற்களுக்குள் எண்ணிலா தொடர்பலைகளைச் சேர்க்கமுடியும். அதன்வழி தமிழ்க்கவிதையை வலிமைப்படுத்த முடியும் என்ற புது நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார் உத்தமபுத்திரா புரஷோத்தம்.

இவர் நல்ல கவிஞர். நல்ல உரையாசிரியர், நல்ல தொகுப்பாளர். நல்ல நண்பர். நல்ல எண்ணங்கள் விளைவிக்கப் பாடுபடுவர். அவரின் கவிதை வழி பெருகட்டும். கலைகளும்,செல்வமும், வலிமையும் நம் அனைவரின் வாசலுக்கும் வந்துசேரட்டும். முதல் நூல் இது என்பதை இவரின் படைப்பாற்றலுக்கு இது கடவுள் வாழ்த்து. இனி தொடரட்டும் அவரின் வளமான படைப்புகள்.

இவர் இந்நூலை இணையத்திலும் இட்டுள்ளார். இவரின் வலைப்பூ முகவரிகள்

http://thamilkavithaikal.blogspot.in/2014/02/4.html

ivraman.wordpress.com

http://kuralamutham.blogspot.in/2009/06/blog-post_12.html

Series Navigationசிறை பட்ட மேகங்கள்எங்கே செல்கிறது இயல்விருது?
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

4 Comments

 1. Avatar
  RajiViji says:

  நிலமகள்!

  //பச்சைப் பட்டு உடுத்தி
  பாதிக் கண் மூடி
  இச்சை தரும் எழிலாய்
  இயற்கை நகை செய்வாய்!

  வானிற் கோலந் தன்னை
  வளைந்தே வரைவது போல்
  நாணித் தலை குனிந்தாய்
  நங்கையே எந்தநிலம் நோக்கி?

  சுட்டும் கதிரவனைத் தினம்
  சுழன்று தனை மறந்தே
  வட்டம் போடுவது ஏன்
  வருடம் கழிவதும் ஏன்?

  எட்டும் தூரத்திலே நிலவு
  ஏங்கித் தவிக்கிறதே! நின்னை
  வட்டம் அடித்தேயது தன்
  வாழ்வைக் களிப்பதும் ஏன்?

  திங்கள் ஓர் முறையில்
  தேய்ந்து வளரும் மதி
  பொங்கும் முழு அமுதாய்
  பொழிந்துபின் உருக் கரையும்…

  ஏதுக்குக் காலம் எல்லாம்
  ஏகவழிப் பாதை யதில்
  தூதுக்கும் யாரும் இன்றி
  தொடர்ந்தே காதல் செய்வீர்

  மேதினி முழுவதுமே கொட்டி
  மின்னிடும் வைரங்கள் போல்
  மேகத்து வெளியிலெலாம் வெள்ளி
  மீன்களின் கண் அடிப்போ?

  கடலில் அலை காற்றில்
  கதிர் கனலொடு புனலுமதில்
  நடனமே ஆடுகிறாய் நங்கை
  நாளும் பொழுது எல்லாம்!

  வெம்மை ஆகுதியோ மேனி
  வேகும் வேள்விப் போதினிலே?
  தம்மைத் தழுவிச் சீரமைக்க
  தாரை மழை பெய்குவதோ?

  தெய்வத் தீர்த்தமதோ இரவில்
  தெளிக்கும் பனித் துளிகள்?
  மெய்யைத் துலக்கவோ அருகில்
  மேகப் பஞ்சுத் திரள்?

  அண்டப் பெரு வழியே
  ஆடும் நாயகியே; உந்தன்
  கண்டக் குரல் ஒலிதான்
  கனிந்த பிரணவஓ மதுவாம்!

  உடலும் எமக்குத் தந்து
  உயிர் அதிலே பொதிந்து
  கடமையில் உணவு ஈந்து
  கருணையில் வாழ்வு வைத்தாய்!

  ஆக்கி ஆட்டுவித்து எம்மை
  அன்பில் அரவணைத்தே, நித்தம்
  தூக்கிச் சுமக்கின்றாய்; நெஞ்சில்
  தூங்கவும் வைக்கின்றாய்; அம்மா!

  நாடகம் முடிந்தபின் தன்னுள்
  நலமுடன் ஒடுங்கவைத்தே எமக்கு
  பாடமும் புகட்டுகின்றாய்; தாயே
  பரம ஞானமும் ஊட்டுகின்றாய்!

  அறிவுத் திருமகளே! எங்கள்
  அன்புப் புவி மகளே!
  அருமைத் தலைமகளே! எங்கள்
  அன்னை நில மகளே!//

  திரு. உத்தம்புத்திர புருஷோத்தமன் அவர்களின் நிலமகள் பற்றிய இந்த தமிழ் கவிதை,
  இன்பம் ஐம்பது, துன்பம் ஐம்பது, கைபேசி ( Mobile ) ….
  எனும் தமிழ் கவிதைகள் இவரின் தமிழ்கவிதையின் புதுவலிமை மட்டுமில்லாமல் இவரின் தமிழ் வளமையையும் அறிய முடியும்

  இவரின் படைப்புகள் ஆலம் விருட்சிகமாக வளர்ந்து, படர்ந்து பெருக என் அய்யனை வேண்டி வாழ்த்துகிறேன்.
  அங்கு இளைப்பாறும் தமிழ் கவிதை ரசிகர்களில் நானும் ஒருவராக என்றும் தொடர்வேன் .

 2. Avatar
  Raji Viji says:

  நிலமகள்!
  //பச்சைப் பட்டு உடுத்தி
  பாதிக் கண் மூடி
  இச்சை தரும் எழிலாய்
  இயற்கை நகை செய்வாய்!
  வானிற் கோலந் தன்னை
  வளைந்தே வரைவது போல்
  நாணித் தலை குனிந்தாய்
  நங்கையே எந்தநிலம் நோக்கி?
  சுட்டும் கதிரவனைத் தினம்
  சுழன்று தனை மறந்தே
  வட்டம் போடுவது ஏன்
  வருடம் கழிவதும் ஏன்?
  எட்டும் தூரத்திலே நிலவு
  ஏங்கித் தவிக்கிறதே! நின்னை
  வட்டம் அடித்தேயது தன்
  வாழ்வைக் களிப்பதும் ஏன்?
  திங்கள் ஓர் முறையில்
  தேய்ந்து வளரும் மதி
  பொங்கும் முழு அமுதாய்
  பொழிந்துபின் உருக் கரையும்…
  ஏதுக்குக் காலம் எல்லாம்
  ஏகவழிப் பாதை யதில்
  தூதுக்கும் யாரும் இன்றி
  தொடர்ந்தே காதல் செய்வீர்
  மேதினி முழுவதுமே கொட்டி
  மின்னிடும் வைரங்கள் போல்
  மேகத்து வெளியிலெலாம் வெள்ளி
  மீன்களின் கண் அடிப்போ?
  கடலில் அலை காற்றில்
  கதிர் கனலொடு புனலுமதில்
  நடனமே ஆடுகிறாய் நங்கை
  நாளும் பொழுது எல்லாம்!
  வெம்மை ஆகுதியோ மேனி
  வேகும் வேள்விப் போதினிலே?
  தம்மைத் தழுவிச் சீரமைக்க
  தாரை மழை பெய்குவதோ?
  தெய்வத் தீர்த்தமதோ இரவில்
  தெளிக்கும் பனித் துளிகள்?
  மெய்யைத் துலக்கவோ அருகில்
  மேகப் பஞ்சுத் திரள்?
  அண்டப் பெரு வழியே
  ஆடும் நாயகியே; உந்தன்
  கண்டக் குரல் ஒலிதான்
  கனிந்த பிரணவஓ மதுவாம்!
  உடலும் எமக்குத் தந்து
  உயிர் அதிலே பொதிந்து
  கடமையில் உணவு ஈந்து
  கருணையில் வாழ்வு வைத்தாய்!
  ஆக்கி ஆட்டுவித்து எம்மை
  அன்பில் அரவணைத்தே, நித்தம்
  தூக்கிச் சுமக்கின்றாய்; நெஞ்சில்
  தூங்கவும் வைக்கின்றாய்; அம்மா!
  நாடகம் முடிந்தபின் தன்னுள்
  நலமுடன் ஒடுங்கவைத்தே எமக்கு
  பாடமும் புகட்டுகின்றாய்; தாயே
  பரம ஞானமும் ஊட்டுகின்றாய்!
  அறிவுத் திருமகளே! எங்கள்
  அன்புப் புவி மகளே!
  அருமைத் தலைமகளே! எங்கள்
  அன்னை நில மகளே!//

  திரு. உத்தம்புத்திர புருஷோத்தமன் அவர்களின் நிலமகள் பற்றிய இந்த தமிழ் கவிதை,
  இன்பம் ஐம்பது, துன்பம் ஐம்பது, கைபேசி ( Mobile ) ….
  எனும் தமிழ் கவிதைகள் இவரின் தமிழ்கவிதையின் புதுவலிமை மட்டுமில்லாமல் இவரின் தமிழ் வளமையையும் அறிய முடியும்
  இவரின் படைப்புகள் ஆலம் விருட்சிகமாக வளர்ந்து, படர்ந்து பெருக என் அய்யனை வேண்டி வாழ்த்துகிறேன்.
  அங்கு இளைப்பாறும் தமிழ் கவிதை ரசிகர்களில் நானும் ஒருவராக என்றும் தொடர்வேன்.

  நன்றி!

 3. Avatar
  Uthamaputhra Purushotham says:

  பதிப்பிற்கு தயாராகவிருக்கும் ‘அன்னையர் அந்தாதி’ எனும் நூலிற்கான மதிப்புரை வழங்கி, அதனை இங்கு வெளியிட்டும் உள்ள நண்பர் முனைவர் திரு. மு. பழனியப்பன் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள் பல.

  அன்பன்
  – உத்தமபுத்திரா புருஷோத்தம்.

 4. Avatar
  Uthamaputhra Purushotham says:

  பின்னூட்டத்தில் வாழ்த்தி உள்ள அன்பர் ராஜி விஜி அவர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.

  அன்பன்
  உத்தமபுத்திரா புருஷோத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *