தினம் என் பயணங்கள் -29 மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் அறக்கட்டளை

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

Heartbeat -3

எப்போதேனும் ஒரு நினைவு வந்துவிட்டு போகும், நாம் இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்றொரு ஆத்மார்த்த வெற்றிக்கான எண்ணம். எனக்கு எப்போதும் வந்துக்கொண்டிருந்தது அது ஒன்று தான். எங்கும் கல்வி கூடங்களை அமைக்க வேண்டும். கல்வி தரமானதாக இருக்கவேண்டும். கட்டணம் ஏதும் வசூலிக்கப்படக் கூடாது. அதையும் தாண்டி என் முழுமையான கனவு என்பது மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கியதே! நான் எதையெல்லாம் வலியாக உணர்ந்தேனோ அந்த வலிகளை நிவர்த்திக்க கூடிய வகையில் அநேகருக்கு வேலை வாய்ப்பை தரும் தொழில் நிறுவனத்தை உருவாக்குவது. அது மாற்றுத்திறனாளிகள் செய்யக் கூடிய இலகுவான பணியாக இருக்க வேண்டும் என்பதும். மாற்றுத்திறனாளிகள் தங்கள் சுய மரியாதையை வளர்த்து வெளி உலகில் சம நிலையில் வாழ வேண்டும் என்பது தான்.

Heartbeat -2

 

அதற்கு முதல் சுழியாக 2009 ஆம் ஆண்டு நான் மற்றும் என் தாயார், சிநேகிதி என்று மூவரால் பதிவு செய்யப்பட்டது ஹார்ட் பீட் டிரஸ்ட் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றவரின் கூற்றை போல எங்கெல்லாம் மாற்றுத்திறனாளிகள், ஏழைகள், பாமரர்கள் என்று என்னை தாக்கிய ஒவ்வொருவரின் மேலும் ஏற்பட்ட பரிதவிப்பு அதனால் அதிகரித்த என் இதயத்துடிப்பு.

Heartbeat -5

அதன் பிறகு அறக்காவலர்கள் சிலர் எங்களோடு இணைந்தார்கள். திரு. வையவன், திரு. யுவராஜ். திரு. அன்புராஜ், இதில் திரு. ஜெயபாரதன் அவர்கள் ஹாரட் பீட் டிரஸ்ட் டிற்கான நிதி நிலை சீரமைப்பாளராக இருந்து வருவதில் எனக்கு பெரிதும் உறுதுணை. திரு.சௌமா ராஜரத்தினம் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி நவிலல் வேண்டும். ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவரின் உந்துதலினாலேயும் பண உதவியினாலேயும் நிறுவனத்திற்கு என்று தனி கணக்கு துவங்கப்பட்டது.

Heartbeat -6

 

இதற்கிடையில் திரு. வையவன் அவர்கள் தொலைப்பேசியில் அழைத்து, நாம் ஒரு செய்தி மடல் வெளியிடலாம் அதற்கு இலக்கிய தீபம் என்று பெயரிடலாம் என்றார். சரி என்று ஒப்புக்கொண்டேன். இதற்கு முன்பும் இப்படி ஒரு இதழ் நடத்த வேண்டும் என்ற உந்துதல் என் மனதில் இருந்துக்கொண்டே இருந்தது. பிறகு இலக்கிய தீபம் இதயத்துடிப்பானது. இந்த இதயத்துடிப்பு கருவாகி உருவாகி கையில் அழகிய வண்ண அட்டையுடனும் தனிச்சிறப்புடனும் நடமாட முழுக்க முழுக்க திரு.வையவன் அவரே உதவி செய்தார். இந்த இதயத்துடிப்பிற்காக நான் அவருக்கு மிகவும் நன்றியுடையவளாக இருக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

 

 

கடந்த ஐந்து வருடங்களில் என் கனவு உயிர்ப்பெற்று வருவதை காண்கிறேன். அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 15 அன்று எங்கள் நிறுவனத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திரதினம். அங்கு வந்த மாணவர்கள் அவர்களின் பங்களிப்பு என்னை மிகவும் மகிழ்ச்சியுற செய்தது. எதிர்காலத்தில் சகோதரத்துவம் வலுபெறும் என்பதை கண் கூடாக கண்டது அன்று.

 

 

அன்றே இதயத்துடிப்பு செய்தி மடல் வெளியீட்டு விழாவும், அன்று இதயத்துடிப்பு புத்தகத்தை குறித்து அநேகர் பாராட்டிக்கொண்டிக்க வந்திருந்த துரை.தேவேந்திரன் ஆசிரியர் அவர்கள் எனக்கும் ஒரு புத்தகத்தையாவது படைப்பாக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தும், பொருளாதார நிறைவு பெற்றிருந்தும்  அதை செய்ய இயலவில்லை. தனக்கே உதவிக்கு ஒரு ஆள் தேவைப்படும் பொழுதும் பொருளாதாரத்தில் பின் தங்கியும், இப்படி புத்தகங்கள் வெளியிடுவதில் ஆர்வமாய் இருப்பதைப் பற்றி பேசிய போது. அவருடைய படைப்பை பதிப்பிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்ட வேண்டும் என்ற ஆசை எழுந்தது. எதிர்காலத்தில் இந்நிறுவனம் தன் நிதிக்காகவும் அநேகருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் புத்தக விற்பனை மற்றும் பதிப்புத்தொழிலில் ஈடுபடும். மேலும் மாணவர்கள் மற்றும் மக்களிடையே படிக்கும் ஆர்வம் அதிகரிக்க செய்ய தன்னால் ஆன முயற்சிகளை செய்யும். அதன் மூலம் வரும் வருவாய் மாற்றுத்திறானாளிகளுக்கு வாழ்வாதாரமாகும். தானும் சராசரி மனிதன் தான் என்பதை பொருளாதார தரமும் வாழ்வியல் சூழலுமே உணர்த்தும்.

 

 

நான் படித்த கிராமத்தில் இருந்தே இப்பணியை விரிவடையச் செய்ய வேண்டும் என்பது என் நெடுநாளைய இலட்சிய கனவு. பெரும்பாலும் என் தந்தையார் என் கனவிற்கு உடன் படுவார் எனும் போதிலும், என் தாயாரோ மறுப்பு தெரிவிப்பவர். அவரே பிற்காலத்தில் எனக்கு முழு மனதோடு ஒத்துழைத்து வருவது என் கனவின் முக்கியத்துவத்தை என் குடும்பம் அறிந்துக்கொண்டதையே பறைசாற்றுகிறது.

 

 

ஆகஸ்ட் 15 அன்று காலை 8 மணியளவில் முன்னாள் இராணுவவீரர் திரு.விக்டர் வெங்கடாசலம் அவர்கள் கொடியேற்றினார்கள். ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர் க.ச கோபால் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். கொடி பாடல் செல்வி. எஸ்.பி ஜாஸ்மின் மற்றும், செல்வி அருள்மொழி பாடினார்கள். இனிப்பு அளிப்புடன் கொடியேற்றம் முடிந்தது.

 

 

அதன் பின் மலையேற்றம், நிகழ்ச்சி மாடியில் என்பதால், என் சிநேகிதி நிர்மலாவும் வந்திருந்தாள். அவள் இலகுவாக படிகளில் ஏறிவிடுகிறாள். என்னால் ஏற இயலவில்லை. அய்யோ ஏற இயலவில்லையே என்று கவலைப்படவும் நேரமில்லை. ஹார்ட்பீட் டிரஸ்டின் உறுப்பினரான, கோகுல வாணன், +2 மாணவன் வாங்கம்மா நான் தூக்கிட்டு போறேன் என்று சொல்லியபடி என் அனுமதி எதிர்பார்க்காமல் தூக்கிச்சென்ற இந்த நிகழ்வு முன் போல் எந்த மன சஞ்சலத்தையும் ஏற்படுத்தாமல், என்னை தாங்கவென அநேக கைகள் இருப்பதை எனக்கு உணர்த்தியது.

 

 

இதயத்துடிப்பு செய்தி மடல் வெளியீடு, திருமதி.மெர்சி வெங்கட் வெளியிட கோ. கலைச்செல்வி பெற்றுக்கொள்ள பலரின் பாராட்டுரைகளோடும் மாணவியரின் நடன நிகழ்ச்சி மற்றும், மாணவர்களுக்கான பரிசுவழங்குதலோடு இனிதே நிறைவேறியது.

 

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 88பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *