1911, டிசம்பர் 6ம் தேதி மகாகவி பாரதியின் “ஆறில் ஒரு பங்கு” என்ற ஒரு நூல் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நூலில் தடை செய்யும் அளவிற்கு அப்படி என்னதான் இருக்கிறது என்று அறியும் ஆர்வம் எழாமல் இல்லை. இதற்கு இன்னொரு முக்கியமான காரணம் 1912 ம் ஆண்டுக்குப் பிறகு பாரதியாரின் படைப்புகள் ஒரு கட்டுக்குள் வந்திருக்கிறது. தம் வாழ்நாளில் எஞ்சிய அந்த ஒன்பது ஆண்டுகள், வறுமையின் கொடுமையில் சிக்கி, சின்னாபின்னமாகிவிட்டது. இந்த காலகட்டத்தில் மகாகவி எழுதிய பாடல்கள் மிகக்குறைவே என்கிறார் ஞானபாரதி தம் நுழைவாயிலில்.
மகாகவி பாரதியின் புதல்வி சகுந்தலா தம் தந்தையாரின் அந்நாட்கள் குறித்து நினைவு கூர்கையில், “கவிதை புனைவதும், கற்பனையுலகில் சஞ்சரிப்பதுமாகக் காலம் தள்ளி வந்த என் தந்தையாருக்கு நாளாக நாளாக மிக சங்கடமான நிலையேற்பட்டுவிட்டது. அநேக நாட்கள் மிகுந்த துன்பத்தோடும் – மனத்துடிப்போடும் எது சொல்வதெனத் தெரியாத வேதனையுடன் கழிக்க ஆரம்பித்தார். நடுப்பகல் உச்சி வேளைகளில் மேன்மாடத்தில் நின்று பாடுவார். அவர் மனது அந்த வெயிலில் என்ன பாடுபட்டதோ யாரறிவார்? நண்பர்கள் உள்பட எல்லாவற்றையும் வெறுக்கத் தொடங்கினார். பல நாட்களாக யாதொரு பாட்டும் எழுதாமல் வேதனையுடன் கழிந்தார்” என்கிறார்.
பாரதி, தம் அரசியல் குரு திலகரின் மரணம், மனித இனத்தின் மாபெரும் படுகொலையான ஜாலியன்வாலாபாத் ஆகியவை பற்றிய அவர்தம் உணர்ச்சியும், எழுச்சியும் மிக்க பாடல்கள் காற்றில் கரைந்தனவோ என்பதையும் பதிவிடுகிறார், ஞானபாரதி. எழுதிப் புதைந்த கவிதைகள் என்று வெளிச்சத்தைக் காணுமோ? என்ற வேதனையும் வெளிப்படுகிறது.
நம் நாட்டின் சாதி, பேதப் பிரிவே நம் அடிமைத் தளைக்குக் காரணம் என்கிறார் பாரதி. ஆனால் நூற்றாண்டுகளுக்கும் மேலான பின்பும் இன்றும் இந்நிலை முற்றிலும் ஒழிந்தது என்று சொல்ல முடியவில்லை என்பது வருத்தத்திற்குரிய விசேசம். இந்நூலை, படிகள் படிப்பகம், மரு. ஜீவானந்தம் அவர்களால், அதே டிசம்பர் மாதம் 6ம் நாள் (1980) வெளியிடப்பட்டுள்ளது. மகாகவி பாரதியார் இப்பூவுலகை விட்டு நீங்கிய ஒரு மாதத்திற்கு முன்னர், மனிதனுக்கு மரணமில்லை’ எனச் சத்தியம் பேசச் செய்த ஈரோடு வழக்குரைஞர், திரு தங்க பெருமாள் பிள்ளை அவர்களின் துணைவியார் திருமதி பார்வதி அம்மாள் அவர்கள் வெளியிட்டும், கொடிகாத்த குமரனின் துணைவியார் திருமதி ராமாயம்மாள் அவர்களின் திருக்கரங்கள் மூலம் பெறச் செய்ததும் வரலாற்றில் பதியப்பட வேண்டிய செய்திகளே.
“பாரதியின் பாட்டொளியில் அவரது உரைநடையை நெடுங்காலம் பொருட்படுத்தாதிருந்தோம். பாரதியின் கட்டுரைகளும் நம் கவனத்திற்குரியன. அவற்றின் நடை, அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முந்திய நடையாக இருக்கலாம். அவற்றின் உள்ளடக்கம் பல அதிமுற்போக்கானவை, இன்றைக்கும் தேவையானவை; பொருத்தமானவை; பறை சாற்றப்பட வேண்டியவை” என்று தம் அணிந்துரையில் எடுத்தியம்பியுள்ள கல்வித் தந்தை நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் அதற்கான சில எடுத்துக்காட்டுகளையும் முன்வைக்கிறார்.
“பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி,
“பிறவி மாத்திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது.
“தம் பொருட்டு உலகங்களை விரும்பாத தீரர்கள் வேண்டும்”
சாதிக் கொடுமைகளைச் சாடும் இயக்கம் இல்லாததொரு காலத்தில் மிகத் துணிச்சலாக, ‘ஜாதிக் குழப்பம்’ என்னும் கட்டுரையில்,
“இங்கனம் ஜாதிக் கொள்கை வேரூன்றிக் கிடக்கும் நாட்டில் மனுஷ்யஸ்வதந்திரம், ஸ்மத்வம், ஸஹோதரத்வம் என்னும் கொள்கைகளை நிலைநிறுத்துவதென்றால், அது சாதாரண வேலையா?” என்ற தம் கேள்விக்குத் தாமே விடை பகரும் வகையில்,
“எல்லா வகுப்பு மக்களுக்கும் சரியான படிப்புச் சொல்லிக் கொடுத்தால், எல்லோரும் ஸமான அறிவுடையோராய் விடுவார்கள்” என்கிறார். அத்தோடு,
“மேல் வகுப்பினர், தம்முடைய உயர்வை மறந்து, கீழ் வகுப்பினருடன் கலத்தல் இதனிலும் சிறந்த உபாயமாகும்”
“கோவிலுக்குப் போனாலும் சரி; போகாவிட்டாலும் சரி, தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி; கும்பிடாவிட்டாலும் சரி, பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால் தெய்வம் அருள்புரியும்!”
“ஆண், பெண் ஸ்மத்வமேதர்மமென்று தெரிகிறதா? அப்படியானால் வாருங்கள் மாதர்களை லஷக்கணக்காக விடுதலை செய்வோம்” இப்படி பலப்பல…..
‘ஆறில் ஒரு பங்கு’ என்ற தம் நூலின் முகவுரையாக,
“ஒரு ஜாதி ஓர் உயிர்; பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புக்கள் இருக்கலாம்; பிரிவுகள் இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம்; பிறவி மாத்திரத்தாலே உயர்வு, தாழ்வு என்ற எண்ணம் கூடாது. மத பேதங்கள் இருக்கலாம்; மத விரோதங்கள் இருக்கலாகது.
இவ்வுணர்வே நமக்கு ஸ்வதந்திரமும், அமரத் தன்மை கொடுக்கும். இந்நூலை பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்” என்கிறார்.
சரி கதைக்கு வருவோம்.. இது பாரதியார் தன்னிலையில் எழுதியுள்ள கதை.
கதை நாயகி மீனாம்பாள் மற்றும் அவளுடைய தனித்திறமைகள் ஆகியவைகளுடன் அழகாக ஆரம்பிக்கிறது கதை. வீணை வாசிப்பதில் சரஸ்வதிக்கு ஒப்பான நாயகி, நாயகனின் ஒன்று விட்ட தாய்மாமன் முறையில் இருப்பவர் ராவ்பகதூர் சுந்தரராஜூலு நாயுடுவின் மகள். இரவு 9 மணிக்கு போஜனம் முடிந்ததிலிருந்து நடுநிசி வரை தம் அறையில் வாசிப்பதை பிரம்மச்சாரி நாயகன் வெளியிலிருந்து ரசிப்பவர். குடும்ப உறவுகள் அனைவரும் நித்திரையில் இருக்க, நாயகனும், நாயகியும் மெய்மறந்திருந்த நிலையை பாரதி,
“வஸந்த காலம், நிலாப்பொழுது, நள்ளிரவு நேரம். புரசைபாக்கம் (பாக்கம் என்றே குறிப்பிடுகிறார்) முழுமையும் நித்திரையிலிருந்தது. விழித்திருந்த ஜீவன்கள் இரண்டே. ஒன்று நான். மற்றொன்று அவள். இன்பமான காற்று வீசிக்கொண்டிருந்தது. மேல் மாடத்தில் மீனாம்பாளுடைய அறையிலிருந்து முறைப்படி வீணைத்தொனி கேட்டது. கந்தர்வ ஸ்திரிகள் வீணை வாசிப்பதுபோல மீனாம்பாள் வாசிப்பாள். பார்ப்பதற்கும் கந்தர்வ ஸ்திரியைப் போலவே இருப்பாள். அவளுக்கு வயது பதினாறு இருக்கும். மன்மதன் தனது அம்பொன்றின் முனையிலே என் பிராணனைக் குத்தி எடுத்துக் கொண்டு போய் அவள் வசம் ஒப்புவித்து விட்டான். அடடா! அவளது இசை, எவ்வளவு நேரம் கேட்டபோதிலும், தெவிட்டாது. தினந்தோறும் புதுமை தோன்றும், அவள் முகத்தில் தோன்றுவதுபோல”.
சுதேசியம் துவங்குவதற்கு முன்பாகவே, பல ஜில்லாக்களில் நெடுங்காலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உத்தியோகம் பார்த்து, ராவ்பகதூர் பட்டம் பெற்றபோதும், வேலையிலிருந்து விலகிவிட்டார். சுதேசியத் தலைவர்கள் மீது ரிப்போர்ட் எழுதிக் கொடுத்து குறுக்கு வழியில் வாங்கிய பட்டம் அல்ல அது என்று சுறுக்கென்று சுட்டிக்காட்டுகிறார். மீனாம்பாளைத் தனக்கு விவாகம் செய்து கொடுக்க வேண்டும் என்ற அவருடைய கருத்து நிறைவேறுவதற்கு நேர்ந்த விக்கினங்கள் பல. அதில் பெரும்பான்மையானவை தன்னாலேயே உண்டானவை. அதற்கான காரணமும் சொல்கிறார் இப்படி..
“பாரத தேசத்தார் அனைவரும் நெஞ்சில் வளர்த்து வந்த பக்திகளெல்லாம் இழிந்த அநாகரிகமான மூட பக்திகள் என்பது முதலான ஆங்கிலேய சத்தியங்கள் எல்லாம் என் உள்ளத்திலே குடிபுகுந்துவிட்டன. ஆனால், கிறிஸ்துவப் பாதிரி ஓர் வினோதமான ஜந்து, ஹிந்து மார்க்கத்திலும், ஹிந்து நாகரீகத்திலும் பக்தி செலுத்துவது பேதமை என்று ருஜூப்படுத்திக்கொண்டு வரும்போதே, அவர் கொண்டாடும் கிறிஸ்து மார்க்கமும் மூடபக்தி என்று வாலிபர் மனதில் படும்படி ஏற்பாடு செய்துவிடுகிறார். மத விஷயங்களைப் பற்றி விஸ்தாரமான விவகாரங்கள் எழுதி, படிப்பவர்களுக்கு நான் தலைநோவு உண்டாக்கப்போவதில்லை. சுருக்கம் நான் எனது பூர்வ மதாசாரங்களில் பற்று நீங்கி, ‘ஞான ஸ்னானம்’ பெறவில்லை; பிரம்ம ஸ்மாஜத்திலே சேர்ந்து கொண்டேன்”
அதன்பின் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கல்கத்தாவிற்கு சென்று பிரம்ம ஸ்மாஜத்தாரின் பாடசாலை ஒன்றில் சேர்ந்து பயின்றிருக்கிறார். பிரம்ம சமாஜத்தாரின் உபதேசிகளில் ஒருவராக வெளியேற விரும்பி, அங்கிருந்து பஞ்சாப், ஹிந்துஸ்தான் என்று பல பிரதேசங்களில் யாத்திரை செய்துவிட்டு கடைசியாக சென்னப் பட்டணம் வந்து சேர்ந்திருக்கிறார். “நான் ஹிந்து மார்க்கத்தை விட்டு நீங்கியதாக எண்ணி எனது ஜாதியார் என்னைப் பல விதங்களில் இம்சை செய்தார்கள். இந்த இம்சைகளினால் எனது சித்தவுறுதி நாளுக்கு நாள் பலம் அடைந்ததேயல்லாமல் எனக்கு மனச்சோர்வு உண்டாகவில்லை”.
மகனின் ஆதம விசுவாஸமும், எப்போதும் உபநிஷத்துக்கள் படிப்பதில் சிரத்தையும் கண்டு, அந்தரத்தில் மிகுந்த உவகையும், வெளிநடப்பில் கோபம் பாராட்டுவது போலவும், இரட்டை வேடம் போட்டாலும், பந்துக்களின் சொற்படி கேட்டு தொல்லைப்படுத்தவில்லை என்பதையும், ஆனால் தமையன் மட்டும் வெறுப்பு காட்டுவது பற்றியும் சொல்கிறார். திடீரென்று தந்தை, ‘வாயுக்குத்தி’ இறந்துவிட, தான் பிரம்மஸமாஸ விதிப்படி ஈமக்கிரியைகள் செய்ய விழைந்தும், தமையன் சாதாரண ஆச்சாரங்களின்படிதான் செய்ய வேண்டும் என்று பிரமாத கலகங்கள் விளைத்து, நானூறு மத்தியஸ்தங்களுக்குப் பிறகு அவன் தனதிஷ்டப்படி கிரியைகள் முடித்தபின்பு, தானும் பிரம்மஸமாஜ குரு ஒருவரை வைத்துக் கொண்டு கிரியைகள் செய்ததால், ராவ்பகதூருக்கு ஏற்பட்ட கெட்ட எண்ணம் விவாகத்தை தடை செய்தது. தன்னை சீர்திருத்தி தன் மகள் மீனாவை பாணிக் கிரஹணம் செய்துகொடுக்க இச்சை கொண்டார்.
ஒருநாள், மீனாம்பாள் மீனாம்பாள் தன் மஞ்சத்தின் உட்கார்ந்து, தனிமையில் பேச வந்தபோது,
“மீனா இன்று உன்னிடத்தில் ஒரு விசேஷம் சொல்லப் போகிறேன் என்றேன். ‘எனக்கு அது இன்னதென்று ஏற்கனவே தெரியும்’ என்றாள்.
“என்னது சொல்லு..” என்றவனிடம், “நீ பிரம்மச்சரிய சங்கற்பம் செய்துகொள்ளப் போகிறாய் என்ற விசேஷம்” என்றாள்.
“ஏன், எதற்கு? எப்படி? உனக்கு யார் சொன்னார்கள்? என்று கேட்டேன்”
“வந்தே மாதரம் என்றாள்” மீனாம்பாளின் அறிவுக்கூர்மை முன்பே அறிந்திருந்ததால் அதில் பெரிய ஆச்சரியமில்லையாம். இப்படி போகிறது கதை. இதன் பிறகு ஊடலும், காதல் வசனமும், முத்தத்துடன் பிரிவதும் என்று விவரணை செல்கிறது. அடுத்த சில மாதங்கள் பிரிவிற்குப் பின்னர், ‘வந்தே மாதரம்’ மார்க்கத்தில் பற்று உடையவனாக ஆனதால் ராவ்பகதூர் விவாகம் செய்யும் எண்ணத்தையே விட்டுவிட்டார். இதன் பிறகு காதல் வேதனை, ஆன்ம விசாரம், பிரிவுத் துயர், கொள்கைப் பிடிப்பு, இரண்டிற்குமான போராட்டம், மீனா வேறு ஒருவனை மணஞ்செய்து கொண்டால் என்ன செய்வது என்ற மனப்போரட்டத்தின் வெளிப்பாடு, அதில் ஏற்படும் ஆன்ம தெளிவு… அதற்கு ஒரு சின்ன ஆதாரம் இதோ……
”மீனா உன்னை நான் அறியேனா? எதுவரினும் நீ என்னை மறப்பாயா? அந்தக் கண்கள், ‘உன்னை மறக்கவே மாட்டேன்’ என்று எத்தனை முறை என்னிடம் பிரமாணம் செய்து கொடுத்திருக்கின்றன! அந்தக் கண்கள்! அந்தக் கண்கள்! ஐயோ, இப்பொழுதுகூட என் முன்னே நிற்கின்றனவே! அவை பொய் சொல்லுமோ?”
அப்பால் ஒரு உள்ளம்: ‘அடா! நல்ல துறவடா உன் துறவு! நல்ல பக்தியடா உன் பக்தி! நல்ல தர்மம்! நல்ல சிரத்தை! ஆரிய நாட்டை உத்தாரணம் செய்வதற்கு இப்படியன்றோ பிள்ளைகள் வேண்டும்? பீஷ்மர் வாழ்ந்திருந்த தேசமல்லவா? இப்பொழுது அதற்கு உன்னைப் போன்றவர்கள் இருந்து ஒளி கொடுக்கிறார்கள்! சீச்சீ! நாய் மனமே! அமிருத வெள்ளத்தை விட்டு வெறும் எலும்பைத் தேடிப் போகிறாயா? லோகோத்தாரணம் பெரிதா, உனது புலனின்பம் பெரிதா? தர்மசேவை பெரிதா, ஸ்த்ரீ சேவை பெரிதா? எதனைக் கைக்கொள்ளப் போகிறாய் சொல்லடா சொல்!’
பல்வேறு விதமான சிந்தைகளில் ஆட்பட்டு உழன்று திரிவதை வெகு யதார்த்தமான வசனங்கள் மூலம் விவரித்திருப்பது, கதையோடு ஒரு படபடப்புடன் சேர்ந்து பயணிக்கவல்லது. மீனா, அனுப்பும் மரண ஓலை நீண்ட மடல், உணர்வு வெளிப்பாட்டின் உச்சம். அதன்பின் நாயகன் தன் கதையை விஸ்தாரப்படுத்தாமல் சுருக்கமாகச் சொல்லப்போவதாகச் சொல்லி, தான் காஷாயம் தரித்துக்கொண்டு துறவியாக வட நாட்டில் ஸஞ்சாரம் செய்துவந்ததாகச் சொல்கிறார். ஆனாலும், வந்தே மாதரத் தர்மத்தை மட்டும் மறக்கவில்லை. அதன் பிறகு பகவத்கீதை வாக்கியங்களை மனனஞ் செய்துகொண்டு வாழும் நாயகனின் தத்துவ வாழ்க்கை விவரணைகள் மிகத் தெளிவாக பதிவிடப்பட்டுள்ளது சிறப்பு.
“நாம் பள்ளர், பறையருக்குச் செய்ததையெல்லாம் நமக்கு அன்னிய நாடுகளில் பிறர் செய்கிறார்கள். “
“மடாதிபதிகளும் ஸந்நிதானங்களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாகக்கொண்டு ஆனந்தமடைந்து வருகின்றனர்”. இப்படி நச்சென்று பல வசனங்கள்!
கதைத் தலைப்பை விரிவுபடுத்தி விளக்கம் அளிக்கும் வகையில் அடுத்த அத்தியாயம் முழுவதும் விரைவாக நகர்கிறது…. “பாரும் பாபு, நம்மில் ஆறில் ஒரு பங்கு ஜனங்களை நாம் தீண்டாத ஜாதியாக வைத்திருப்போமானால் நமக்கு ஈசன் நல்ல கதி கொடுப்பாரா?” என்று சொன்னதுதான் கதையில் பெரும் திருப்பம் ஏற்படுத்தும் பகுதி! ஆம்… அந்த பாபு சொன்ன பதில், “தாங்கள் சொன்ன வாக்கியம் சில தினங்களுக்கு முன்பு இங்கு வந்திருந்த மந்திராஜியம்மாளின் வாயிலிருந்து அடிக்கடி வெளிவரக் கேட்டிருக்கிறேன்………………………………… இவ்வளவு பாலியத்திலே நமது தேசத்தினிடம் என்ன அபரிமிதமான பக்தி! ….. ஸ்தீச சந்திர பாபு என்ற அந்த மனிதர் நாயகனை உற்று நோக்கியவாறு,
“ஸ்வாமீஜி, க்ஷமித்துக்கொள்ள வேண்டும், நீங்கள் ஸ்ந்யாஸி. எந்த தேசத்தில் பிறந்தவரென்பதைக் கூட நான் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. ஆயினும் உங்கள் முகத்தைப் பார்க்கும் பொழுது, அதில் எனக்கு அந்த யுவதியின் உருவம் கலந்திருப்பது போலத் தோன்றுகிறது. உங்களிருவருடைய முகமும் ஒன்று போலிருப்பதாக நான் சொல்லவில்லை. உங்கள் முகத்தில் எப்படியோ அவளுடைய சாயல் ஏறியிருப்பதுபோலத் தோன்றுகிறது” என்கிறார்…….
இனிதான் கதையில் திருப்பம் சட்டென்று துவங்குகிறது… அடுத்த வாரம் பார்ப்போம். மீதமுள்ளதை. அதுவரை உங்கள் கற்பனைக்கு! ஒரு சின்ன க்ளூ… ‘மந்திராஜியம்மாள்’ என்பது ‘மதராஸ் பிரதேசத்து ஸ்திரீ’ என்று பொருள்படும். ‘மதராஸ்’ என்பதற்கு வடநாட்டார் மந்த்ராஜ் என்பார்கள்…
அடுத்த வாரம் முடிந்துவிடும்.
- நான் ஏன் இஸ்ரேலை விமர்சிப்பதில்லை?
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 5- மீராபாய்
- “சொந்தக்குரல்” எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின் ‘சொந்தக்குரல்’சிறுகதைபற்றிய என்குரல்
- முடிவை நோக்கி !
- நெருப்புக் குளியல்
- இயற்கையின் மடியில்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 17
- நல்லவர்களைக் கொல்லாது நஞ்சு
- ஆனந்த பவன் (நாடகம்) காட்சி-1
- நிழல்
- சீதை, அமுதா, நஞ்சா, தீயா?
- தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழா-21, 22.06.2014
- வாழ்க்கை ஒரு வானவில் 16
- தொடுவானம் 29. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி
- நீயும் நானுமா, கண்ணா, நீயும் நானுமா?
- பாவண்ணன் கவிதைகள்
- வண்ணவண்ண முகங்கள் விட்டல்ராவின் நாவல் ‘காலவெளி’
- எலிக்கடி
- உம்பர் கோமான்
- பால்கார வாத்தியாரு
- வேல்அன்பன்
- தினம் என் பயணங்கள் -29 மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் அறக்கட்டளை
- உயிரோட்டமுள்ள உரைநடைக்கு உரைகல் பாரதி!
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 88
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.
- இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம், கடலூர் – 24-08-2014 ஞாயிறுமாலை6 மணி