நாள்தோறும் கவிதை எழுதிக்கொண்டிருந்தாலும், கவிதையில் சிந்தித்துக்கொண்டிருந்தாலும் என்னுடைய வாசிப்பு இப்போது சிறுகதைகள் பக்கம் திருப்பப்பட்டிருக்கிறது. அப்படியொரு கட்டாயத்தை நானே எனக்கு உருவாக்கிகொண்டேன்.நூல்களைப்படித்த விவரங்களைக் குறித்துவந்திருப்பதுபோல், படித்த சிறுகதைகளைப்பற்றிய விவரங்களையும்கூட குறித்துவைத்திருக்கிறேன்.நினைவில் வைத்துச்சொல்வதற்கு கைவசம் ஒரு சிறுகதைகூட இல்லை. ஆனால்,என்னுடைய கதைகளைத்தான் சொல்லமுடியும். காரணம் அவை என்னுடைய கதைகள்.நினைவிலிருந்து நழுவும் நிலை கதைகளுக்கு ஏற்படுவதால் அதைத் தவிர்க்கவே உடனடியாக இப்படிப்பதிவுசெய்கிறேன். அப்படித்தான் ஒரு சிறுகதை வாசிப்பாளனாக என்னை நிலைநிறுத்துகிறேன். அண்மையில் சிங்கப்பூர் கிளிமண்டி நூலகத்தில் ஐந்து நூல்களை எடுத்தேன். அதில் இரண்டு சிறுகதைநூல்கள்.அதிகமாக ஒரே நேரத்தில் இரவல் எடுத்தது இதுதான் முதல்முறை. இதுவரை ஒரு நூலை எடுப்பேன்,படிப்பேன். அவ்வளவுதான். ஆனால் இந்தமுறை எடுத்த ஐந்து நூல்களில் நான்கு நூல்களை உடனே படித்துமுடித்துவிட்டேன். இன்னும் ஒன்று இருக்கிறது. இதை எழுதி முடித்தவுடன் அதையும் முடிப்பேன்.அந்த ஐந்தாவது நூலையும் படிக்கத்தொடங்கிவிட்டேன். நேற்றிரவு படித்த கதை மாப்பசனானின் ‘கல்லறை மோகினி’.கதையின் சித்திரம் கரைவதற்குள் எழுதிவிட ஆசையிருந்தும் நேரமில்லை என்பதே வேதனை. வெவ்வேறு பணிகளில் ஈடுபடுவதால்தான் இந்தத்தள்ளிப்போடுதல் நிகழ்கிறது.
எஸ். இராமகிருஷ்ணன் ஒரு முழுநேர எழுத்தாளர்.; படிப்பாளர். சென்னையில் நேரில் சந்தித்தும் இருக்கிறேன். அவருடைய வாழ்நாள் உழைப்பெல்லாம் எழுத்தாகவே வெளிப்பட்டிருக்கிறது; வெளிப்படுவருகிறது என்பது உண்மை. காரணம் அது அவர் அமைத்துக்கொண்ட; தேர்ந்துகொண்ட வாழ்க்கைமுறை; வாழ்க்கைப்பாதை. படிப்பும் எழுத்தும்தான் அவருடைய வாழ்க்கை. அப்படியொரு வாழ்க்கையை எல்லாரும் அமைத்துக்கொள்ள முடியாது..அது எளிதல்ல. ‘எழுத்தைமட்டுமே வாழ்க்கையாகக்கொண்டு வாழ்வதற்கு என்னை அனுமதிக்கும் அன்பு மனைவி சந்திரபிரபா’ என்று இராமகிருஷ்ணன் நன்றிகூறியதிலிருந்து அது புலப்படும். ஒருவகையில் எனக்கு அவர்மீது பொறாமைதான்.
நான் கையிலெடுத்த நூலின் தலைப்பு ‘குதிரைகள் பேசமறுக்கின்றன’குதிரையைக்குறியீடாக நான் ஒரு கவிதையும் எழுதியிருக்கிறேன். தலைப்பு ‘சேணம் கட்டிய குதிரை’அதில் “பாவம் குதிரைகள்
அவை
சவாரிக்குரியவை”என்றவரி நினைவுக்கு வருகிறது.நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் இத்தொகுப்பில் பதினைந்து சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதுமட்டுமல்ல, தேர்வுசெய்யப்பட்ட சிருகதைகளின் தொகுப்பும் கூட. கடந்த பத்தாண்டுகளில் எழுதிய சிறுகதைகளிலிருந்து தேர்வுசெய்யப்பட்டவை.நினைவுகளும் நிகழ்வுகளும் கற்பனையும் இணைந்துதான் சிறுகதைகளைக் கட்டமைக்கின்றன என்பது அவருடைய அனுபவக்கூற்று. காலத்தின் பிரமாண்டமான திறந்த புத்தகம் ஒன்றைப்போலவே எனது ஊர் இருக்கிறது என்று எழுதியதைப்படித்ததும் மல்லாங்கிணறும் பிச்சினிக்காடும் தோழமைக்கொள்கின்றன. எஸ் .இராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் வாசகர்களை சிரமப்படுத்துவதில்லை என்று தயக்கமின்றி கூறலாம். சரளமான நடையில் நாமும் இணைவது எளிதாகிறது. விரல்பிடித்து அழைத்துச்செலவதுபோல் உணர்கிறேன். முழுக்கமுழுக்க கற்பனைகதைகளையும் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு கதையையும் படித்துமுடிக்கும்போது ஆங்காங்கே சில கோடுகளைப் போட்டுவைப்பேன். திருப்பிப்புரட்டும்போது அவை உதவிசெய்யும். முதல் கதையில் ஓரிடத்தில் அப்பா சொன்னதாக வரும் சொற்றொடர் “தூரத்தில் வசிக்கும்போதுமட்டும்தான் நீங்கள் என் பிள்ளைகள் என்ற நினைவுவருகிறது.அருகிலிருந்தால் வேறுயாரையோபோல் இருக்கிறீர்கள்.” இதற்குள் அடங்கிய உணர்வுகளை தரிசிக்கமுடிகிறது. அறிவியல் அடிப்படையிலும் எழுதியிருக்கிறார். ‘ரசவாதியின் எலி அந்தக்கதைதான். “விஞ்ஞானிகளிடம் இயல்பாக இருக்கவேண்டிய உயர்கற்பனை இன்று முழுமையாக விலக்கப்பட்டிருக்கிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் வணிகப்பயன்பாடும் ஒன்று சேர்ந்ததுதான் ஆய்வுமுறைகளின் ஆதாரத்தவறு. “ “நேற்றைய புனைவுகள்தான் இன்றைய விஞ்ஞானம்.”அறையின் சுவரில் தலைகீழாக எண்ணெய் இல்லாமல் தொங்கும் விளக்கு ஒன்று எரிந்துகொண்டிருக்கிறது. என்று ஆயிரத்தோரு அராபிய இரவுக்கதைகளில் ஒரு வரி இடம்பெற்றிருக்கிறது. “எல்லாக்கண்டுபிடிப்புகளின் பின்னேயும் உள்ளுணர்வே அடிப்படையாக இயங்கிக்கொண்டிருக்கிறது””கடவுளின் நிரந்தரமான எதிரி விஞ்ஞானம். விஞ்ஞானத்தின் இருப்பு கடவுளுக்கு எதிரானது” “எடைதான் மனிதனை பூமியோடு பிணைத்து வைத்திருக்கிறது” “மனித உடலின் வலியும் சந்தேகமும்தான் வாழ்வின் ஆதார அம்சங்கள்”’எலிகள் பறக்கத்துவங்கும் காலம் பேரழிவின் துவக்கக்காலம்.’ என்று நூல்கள் கூறுகின்றன. “நவீன உயர்விஞ்ஞானம் அடிப்படை மனித அறங்களை ஒருபோதும் கவனிப்பதேயில்லை.”
இருளும் வெளிச்சமும் எதிரானதல்ல. எதிரான இரண்டல்ல. ஒன்றைப்புரிந்துகொள்ள இன்னொன்று அவசியமானது. இப்படிப்படித்ததும் ஒரு கவிஞனின் கவிதை நினைவுக்கு வருகிறது. “நட்சத்திரங்களை
வெளிச்சப்படுத்துகிறது
இரவு”
விரும்பிக்கேட்டவள் கதையில் பின்னணிப்பாடகர் பிபிஎஸ்சின் குரல்விரும்பியான சித்தி சொல்கிறாள்: “இந்த உலகத்திலேயே மனுசனோட குரலுதான் பெரிய ஆச்சர்யம். அது என்னவெல்லாம் மாயம் பண்ணுகிறது.சிலரோட முகம் மறந்துபோய் குரல்மட்டும்தான் ஞாபகத்திலிருக்கிறது. குரலுக்கு வாசனை இருக்கு, நிறமிருக்கு.வெளிச்சமிருக்கு. ருசியும் இருக்குடா” என்று சொல்லும் கதையைத்தான் விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் நான் எடுத்துக்கொண்ட கதை ‘சொந்தக்குரல்’ தரமணியில் கரப்பான் பூச்சிகள் கதையில் “புதிய மனிதர்களை எதிர்கொள்ளும்போது அவர்கள் கண்களைத்தான் மக்கள் கவனிக்கிறார்கள்.” பொய்கள் எளிதாகப்பழகிவிடுகின்றன. உண்மையைச்சொல்வதற்குத்தான் நிறைய நடிக்கவேண்டியிருக்கிறது. “கண்கள் ஒருபோதும் பொய்சொல்வதில்லை. உதடுகள்தான் பொய்சொல்கின்றன”நானூற்றுப்பதினாறு விதமான பூச்சிகள் நம்மோடு சேர்ந்துவாழ்கின்றன. ‘மனிதர்கள் உறங்கும்போது உலகம் அமைதி அடைகிறது’ என்று காலண்டர்தாளில் படித்த வாசகத்தையும் பதிவு செய்கிறார் எஸ்ரா. கவித்துவமான சொற்றொடர்களைக் கதைக்குள் காண்பது மகிழ்ச்சியைத்தந்தது. அதுமட்டுமல்ல இன்றைய எதார்த்தத்தை “பனிரெண்டு வருடமாக இந்த அறையைவிட்டு வெளியே போவதே கிடையாது.. பிள்ளைகள் அமெரிக்கா போய்விட்டார்கள்.யாரும் என்னைத்தேடிவருவது கிடையாது.நான் முப்பதுவருடம் அறிவியல் ஆய்வுத்துறையில் வேலை செய்திருக்கிறேன்.. பதவி, சம்பாத்தியம்,உறவு,பெயர், புகழ் எல்லாம் பொய். மயக்கம் எதுவும் நமக்குக்கைகொடுக்கப்போவதில்லை. முதுமை ஒரு நீண்ட பகலைப்போல் இருக்கிறது” அடுத்து “ஆம் புருனோ, அவர்கள் குற்றவாளிகளே” என்ற கதையும் என்னை எழுதச்சொன்னது. அதில் வரும் ஒரு சொற்றொடரை நீங்கள் படிக்கத்தருகிறேன். “நீதி போதகர்களே,யோசியுங்கள்.
மனிதர்களுக்கு எதற்காக புத்தகங்கள் தேவைப்படுகின்றன. கடவுளை நம்பாதவன் புத்தகத்தைத்தேடுகிறான் அவன் கடவுளில்லாத உலகம் ஒன்றை இந்தப்பூமியில் உருவாக்க முயற்சிக்கிறான்”
கடவுள் சொற்களின் வழியேதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார். மனிதர்கள் கேட்பதைவிடவும் பார்க்கப்படுவதை அதிகம் நம்பக்கூடியவர்கள்.சொற்கள் கடவுளின் வீட்டிற்குச்செல்லும் ஏணியைப்போன்றவை.இந்த இடத்தில் நான் எழுதிய ‘சொல்காதலி’ ‘சொல்லும் சொல்லும் கவிதை’’சொற்சிலை’ என்ற கவிதைகள் நினைவுக்கு வந்தன. புத்தகங்களை நம்பும் மனிதன் மிக ஆபத்தானவன். அவனைத் தண்டிப்பதின்வழியே நாம் கடவுள்மீது சுமத்தப்பட்ட அவமானத்தைத் துடைத்து எறியமுடியும்.
“புத்தகம் என்பது வெளிச்சம். அதனால் உலகின் இருள் விலகியோடுகிறது.”தொழுவத்திலுள்ள பன்றிகளைப்போல பகலிரவைப்பற்றிய பிரக்ஞையே இல்லாமல் வாழ என்னால் முடியும்.
புத்தகங்கள் வெறும்
அச்சடித்த காகிதங்கள் அல்ல
அவை
வீரியமிக்க தானியவிதைகள்”
இது எனக்கு ஒரு வாசகமாகத்தெரியவில்லை. கவிதையாகவே இனம் கண்டேன்.
“மனிதன் தனது அறிவைப் பயன்படுத்தாத வரை உலகில் அவனுக்கு மேம்பாடு கிடையாது. ஒரேயொரு எண்ணம்,ஒரே ஒரு சிந்தனை மட்டுமே உலக ஜீவித்த்திற்கு வேண்டும் என்று நினைப்பது ஒரு வன்முறை. அறிவு விமர்சனத்திற்கு உட்பட்டது.விவாதிக்கப்படவேண்டியது. நெருப்பு அழிவில்லாதது. அதை நாம் கைகொள்ளமுடியும்;கட்டுப்படுத்த முடியாமலும் போய்விடும். அப்படியானதுதானே காதல்.”
இப்படித் தத்துவ, கவித்துவ,விஞ்ஞானப்பூர்வ சொற்றொடர்களின் தொகுப்பாக ‘குதிரைகள் பேச மறுக்கின்றன’ சிறுகதைத்தொகுப்பு அமைந்திருக்கிறது. இந்தக்கதயைச்செய்வோம், இந்தக்கதையைச்செய்வோமென என்னையே மாற்றிக்கொண்டு நான் வந்து நின்ற இடம் ‘சொந்தக்குரல்’என்ற கதை. இது வயதான அம்மாவின் குரல். இருட்டில் தடுமாறி விழுந்துவிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்மாவின் குரல். 73 வயதைத்தாண்டிய அம்மாவின் குரல். இது பொதுவாக ஒவ்வொரு வயதான அம்மாக்களின் குரலாக ஏடுத்துக்கொள்ளலாம்.தானாகப்பேசிக்கொண்டிருக்கும் நிலைக்குவந்த அம்மாவின் குரல். 85 வயதைத்தாண்டிய என் அம்மாவின் குரலாக எடுத்துக்கொண்டேன். கதையின் சாரமாக இருவேறுபிம்பங்களைக்காணமுடிகிறது.இரண்டும் இருவேறு கோணத்தில் சரிதான். மனைவியின்மீது அக்கறையான ஒரு கணவர் தன்மனைவிக்குத்தேவையான நகை,மனைவியின்பேரில் வீடு, ஆண்டுகொரு பட்டுப்புடவை போன்ற எதிலும் எந்தக்குறையையும் வைக்கவில்லை. பொறுப்பான கணவராக வாந்த ஒருவர், கட்டுப்பாடு மிகுந்தவராக, மனைவின்னா இப்படித்தான் இருக்கணும் என்ற முடிவுடைய மனிதராக, பழமைவாதியாக விளங்குகிறார்.
ஒரு மனைவி குடும்பத்தைத்தவிர எந்தச்சிந்தனையும் இல்லாதவளாக அல்லது கணவன்சொல் கேட்பவளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிற கணவராகக் காட்டப்படுகிறார்.. இது மனைவியை அடிமையாக நடத்தப்பட்டதாகவும் காட்டுகிறது. இவர் ஒரு கொடுமைக்காரர் என்பதைவிட கடுமைக்காரர் என உணரமுடிகிறது. இரண்டுக்கும் பெரிய அல்லது சிறிய வேற்றுமை இருப்பதாக உணர்கிறேன்.
கூட்டுக்குள் அடைபட்ட கிளியாக மனைவியின் வாழ்க்கை அமைந்ததையும் காட்டுகிறது. அத்துடன் சிந்திக்கத்தெரிந்த, படைப்பாற்றல்மிக்க ,ஓர் இலக்கியவாதியை மடக்கிப்போட்ட கதையாகவும் இது தெரிகிறது.பக்கத்திலிருந்த நூலகத்தில் கணவனுக்குத்தெரியாமல் காண்டேகர் எழுதிய நூலைப்படித்து, அதுமாதிரியே ஒரு கதையை எழுதி கலைமகளுக்கு அனுப்பி நாலுமாசம் கழித்து அது வெளிவந்துவிட்டது. எல்லாரையும்போல அச்சில்பார்த்த சந்தோசம் தாங்காத படைப்பாளியை அடக்கி ஒடுக்கிய கதையாகவும் இது தெரிகிறது. இது எப்படி நியாயம்? இது என்ன கொடுமை? எனச்சிந்திக்கவைக்கிறது.
படித்த நூல் காண்டேகர் நூல். என் கதைபோல் இருந்தது என்கிறாள் அம்மா..இதுதான் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின் உத்தி. காண்டேகரைக்குறிப்பிட்டது ஒரு குறியீடு. பெண்ணுரிமை அல்லது பெண்கொடுமை என எழுதவில்லையே தவிர உணரவைத்ததில் வெற்றிபெறுகிறார்.
சிந்திக்கிற மனைவியை எந்தக்கணவனுக்கும் பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் வருகிறது.
படித்து முடித்து படைப்பை நெருப்பில் இட்ட கணவனை யார் ஏற்கமுடியும்.? அப்பவே விவாக ரத்து கேட்டிருக்கலாம் என்றே படைப்பாளரின் மனம் விரும்ம்புகிறது. ஒருபக்கம் படைப்பாற்றல் மிக்க,உணர்வுப்பூர்வமான மனைவி. இன்னொரு பக்கம் குடும்ப அக்கறைமிக்க,குடும்பத்தைத்தவிர வேறெதையும் எற்காத; சிந்திக்காத கடுமையான கணவர்.பேருந்தில், ரயிலில் மனைவியை ஏற்றிவிடும்போதுகூட அவர்காட்டிய அக்கறையை அந்த அம்மா குறிப்பிடத்தவறவில்லை. என்ன லாபம்? என்ன நட்டம்?எடைபோட்டுப்பார்க்கவேண்டியது நாம்தான். பாசத்தோடு குழந்தைகளை வளர்த்தத் தாயாக,குடும்பத்தைக்கவனிக்கிற இல்லத்தரசியாக, ஓய்வு நேரத்தில் படித்து சமுகப்பயனுள்ள படைப்பாக வெளியிடும் படைப்பாளியாக விளங்கவேண்டிய ஒரு பெண்ணை இழந்துவிட்டோம். இந்தப்பெண் இவ்வளவு ஆற்றலுடன் கணவனையும் நேசிக்கிற பெண்ணாக அமைந்துவிட்டால் அதைவிட வெற்றிபெற்ற குடும்பம் இன்னொன்று இருக்கமுடியாது. பாசத்தோடு குழந்தைகளை வளர்க்கிற தாயை; குடும்பத்தைக்கவனிக்கிற இல்லத்தரசியை நாம் பெற்றிருப்போம்.. ஆனால், ஓர் இலக்கியவாதியை இழந்துவிட்டோம். தமிழுக்கு இழப்பும்கூட. அந்தக்கணவனின் கடுமை, கொடுமையெல்லாம் அந்தமனிதனின் இயல்பாக இருந்தாலும், குடும்பத்தைவிட்டு விலகி நின்று அனுபவிக்கிற மனிதனாகப்படைக்கப்படவில்லை. அதற்கு சாட்சி “உங்கப்பா எனக்கு நிறைய நகைவாங்கிக்கொடுத்திருக்கிறார். என்பேர்ல வீடு வாங்கிக்கொடுத்தார். வருசத்துக்கு ஒரு புடவை. இஷ்டப்பட்ட கோவில்,குளம், எல்லாம் கூட்டிட்டுப்போய் வந்திருக்கார். ஆனா அவருக்கு நான் ஒரு துணையாள். அவர் அதிகாரத்துக்குக் கட்டுப்படுகிற நல்ல வேலையாள் அவ்வளவுதான்”
பிள்ளைகளை வளர்ப்பதில், அவர்களுக்கு உதவுவதில் எந்த இடையூறும் அவரிடமிருந்து அவளுக்கு வரவில்லை. ஒரு சாதாரண குடும்ப மனிதராக அவர் காட்டப்படுகிறார்.. ஒரு குடும்பம் குறையில்லாக்குடும்பமாக காட்டப்படுகிறது.இழப்பு-ஒரு பெண்ணின் ஆற்றலுக்கு உதவிசெய்து அன்போடு அரவணைத்து மிகப்பெரிய படைப்பாளியைத்தறத் தவறியதுதான்.
வேறுகோணத்தில் பார்ப்போம்.இந்தக்கதையில் மனைவியின் உணர்வுகள், ஆற்றல்கள் மதிக்கப்படவில்லை.தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டிருக்கின்றன.சில முன்மாதிரிகளை நினைவுக்குகொண்டு வருவோம். சில துடிப்பான, சுய சிந்தனைமிக்க, திருமணம்செய்துகொண்டு கணவனின் ஆதரவோடு வாழ்க்கையைத்தொடங்கியவர்கள் நாளடைவில் இருவருக்குமிடையே சந்தேகங்கள் உருவாகி, அதிகாரம் மேலோங்கி, கசப்புகள் பெருகி மணவிலக்கில் முடிந்திருப்பதை பார்த்திருக்கிறோம்.; கேள்விப்பட்டிருக்கிறோம். தன் மனைவி ஒரு படைப்பாளி என்று கர்வப்பட்ட கணவன், தன் மனைவி ஒரு துரோகி என்று தூற்றப்பட்டதையும் செய்திகளில் படித்திருக்கிறோம்.இங்கே கணவன் குற்றவாளியாகவும் இருந்திருக்கலாம். இல்லாமலும் இருந்திருக்கலாம். நமக்கு உண்மை தெரியாது. விளைவைவைத்து முடிவுக்கு வருகிறோம்.
எஸ். இராமகிருஷ்ணனின் இந்தக்கதையில் அவள் அடக்கிவைக்கப்பட்டிருந்தாள் என்பதை அவளுடைய வாக்குமூலத்திலிருந்து உணர்கிறோம். கொடுமைப்படுத்தப்படவில்லை. அளவான சுதந்தரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. அளவுக்கு அதிகமான அக்கறைகாட்டப்பட்டதாகத்தான் கதையில் இருக்கிறது. பொறுப்பான வாசகராக நம்மை நினைத்துக்கொண்டால் மனைவியின்மீதுகட்டுப்பாடுமிக்க அக்கறைகாட்டிய ஆணாதிக்கப்போக்கையும், பலவீனமற்ற சராசரி தன்மையையும் மன்னித்துவிடலாம் அல்லது மறந்துவிடலாம். முதல் கதையே கலைமகளில் வந்திருந்ததால், தொடர்ந்து அனுமதிக்ப்பட்டிருந்தால் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளராக வந்திருக்க முடியும் என்பதையும் ஏற்றுக்கொள்கிறோம்.
புகழைநோக்கி சுயநலத்திற்கு முன்னுரிமைகொடுக்காமல்,குடும்பநலம்,குழந்தைநலம் கருதி கட்டுப்பாடுகளை ஏற்பதும், கட்டுப்படுவதும் ஆரோக்கியமாகப்படுகிறது.புகழை இழந்திருக்கிறோம். ஆனால் குடும்பத்தை இழக்கவில்லை என்பதே மனநிறைவைத்தருகிறது.
எழுதிச்சாதிப்பதைவிட ஒரு குடும்பத்தைக்கட்டிக்காத்துவிட்ட அம்மா என்று பெருமைப்படலாம். சுயநலத்திற்கு முன்னுரிமைதந்து குழந்தைகளைத் தவிக்கவிடுவது தவிர்க்கப்பட்டது எண்ணி
பெருமூச்சு விடலாம்.. அம்மாவின் குரலைப் படித்துமுடிக்கும்போது நானும் என் அம்மாவைப்பற்றி ஒரு கவிதை எழுதினேன் என்பது ஒரு கூடுதல் பயன். அம்மாவின் ‘சொந்தக்குரல் ‘ கதையைப்படிக்கவைத்து நடுநிலைப்போக்கை எழுத்தாளர் கடைபிடிக்கிறார். கருத்துத்திணிப்பு எதுவும் நிகழவில்லை.
தத்துவ சிதறல்களும் இல்லை. முதுமை எய்திய ஒரு பெண்ணின் குரலாக அது ஒலிக்கிறது. உறங்கிக்கொண்டிருந்த ஒரு படைப்பாளியின் குரலாக வெளிப்படுகிறது. படைப்பாளிகள் எதைத்தியாகம் செய்யவேண்டும்? எதற்காக? எதை இழக்கலாம்? என்ற பாடமும் மறைமுகமாய் இழையோடுவதை கதை காட்டுகிறது அல்லது உணர்த்துகிறது. எங்கேயும் அறிவுரை இல்லை. சொந்தக்க்குரல் அனைத்து அம்மாக்களின் குரலாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு அம்மாவிடம் இப்படிபுதைந்து கிடப்பவை ஏராளம் என்பதையும் சிந்திக்கவைக்கிறது ‘சொந்தக்குரல் ‘ என்னும் எஸ் .இராமகிருஷ்ணனின் கதை.
(18.03.2014.
- நான் ஏன் இஸ்ரேலை விமர்சிப்பதில்லை?
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 5- மீராபாய்
- “சொந்தக்குரல்” எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின் ‘சொந்தக்குரல்’சிறுகதைபற்றிய என்குரல்
- முடிவை நோக்கி !
- நெருப்புக் குளியல்
- இயற்கையின் மடியில்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 17
- நல்லவர்களைக் கொல்லாது நஞ்சு
- ஆனந்த பவன் (நாடகம்) காட்சி-1
- நிழல்
- சீதை, அமுதா, நஞ்சா, தீயா?
- தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழா-21, 22.06.2014
- வாழ்க்கை ஒரு வானவில் 16
- தொடுவானம் 29. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி
- நீயும் நானுமா, கண்ணா, நீயும் நானுமா?
- பாவண்ணன் கவிதைகள்
- வண்ணவண்ண முகங்கள் விட்டல்ராவின் நாவல் ‘காலவெளி’
- எலிக்கடி
- உம்பர் கோமான்
- பால்கார வாத்தியாரு
- வேல்அன்பன்
- தினம் என் பயணங்கள் -29 மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் அறக்கட்டளை
- உயிரோட்டமுள்ள உரைநடைக்கு உரைகல் பாரதி!
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 88
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.
- இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம், கடலூர் – 24-08-2014 ஞாயிறுமாலை6 மணி