பழநியப்பன் சிங்கப்பூர் வந்தபோது அவன் மகள் பிரேமாவதி தொடக்கநிலை 3. இப்போது உயர்நிலை 3. வரும்போது அப்பா சொன்னது ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. ‘இந்த மண்ணில் ஒரு சொத்து வாங்கிப் போடு. நீ இந்த மண்ணை மறந்தாலும் இந்த மண் உன்னை மறக்காது.’ இப்போதும் அது ஞாபகத்துக்கு வந்தபோது தொலைபேசி ஒலித்தது. எடுத்தான். ராஜமாணிக்கம்தான் பேசுகிறான். பழநியோடுதான் அவனும் சிங்கப்பூர் வந்தான். பழநியப்பன் அறந்தாங்கி. ராஜமாணிக்கம் அமரடக்கி. அறந்தாங்கியிலிருந்து 10 மைல். தினமும் பேருந்தில் வந்து அறந்தாங்கி உயர்நிலைப் பள்ளியில்தான் படித்தான். பழநியைவிட இரண்டு வகுப்பு மூத்தவன். அதிகமாகப் பழக்கமில்லை. சிங்கப்பூரில் சந்தித்தால் ஊரைப்பற்றிப் பேசுவான். புதிதாக வந்த எம் எல் ஏ அவன் ஊராம். எது வேண்டுமானாலும் கேள் செய்துதருகிறேன் என்பான். லட்சம் கோடி என்றுதான் பேசுவான். முடிவெட்ட 5 வெள்ளிக் கடையைத் தேடுவான். அந்த ராஜமாணிக்கம்தான் பேசுகிறான். ‘பழநி ஒரு முக்கியமான சேதி. பாக்குடி கொளத்துக்கு பக்கத்திலே நம்ம விஸ்வநாதனுக்கு 10000 சதுரஅடி ஒரே பிளாட்டா கெடக்கு. அத அவன் விக்கப்போறான். சதுரஅடி 100 ரூபாய்தான் சொல்றான். மொத்தமே 10 லட்சம்தான். 20000 வெள்ளி. அருமையான சொத்து. நான் வாங்கிடுவேன். இப்பத்தான் 80 லட்சத்துக்கு வேறொரு சொத்தை முடுச்சேன். அத நீ வாங்குறது நா வாங்குறது மாதிரி. சவுதிக்கோ துபாய்க்கோ சொன்னாப் போதும். வந்து கொத்திக்கிட்டு போயிடுவாங்கே. உன் அபிப்ராயம் தெரியாம யாருக்கும் சொல்லக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டே.ன். அருமையான சொத்து. அஞ்சு நிமிசத்துலே பாலிடெக்னிக். பதினஞ்சு நிமிசத்தில ஆவுடையார்கோயில். பத்து நிமிசத்திலே அறந்தாங்கி. பக்கத்திலேயே ஆர்ட்ஸ் காலேஜுக்கு அப்ரூவல் ஆயிடுச்சு. ரெண்டு நாள்ல நான் அறந்தாங்கி போறேன். 5 லட்சம் மட்டும் கொடு. அக்ரீமெண்டை முடுச்சு அடுத்த வாரமே பத்திரத்தோடு வர்றேன். அடுத்த 5 லட்சத்தை மூணு மாதத்திலே கொடுக்கலாம். அதாவது டிசம்பர் 24க்குள்ள நீ கிரயம் செஞ்சுக்கலாம். என்ன சொல்றே.’ பழநி மண்டைக்குள் சிவப்பு விளக்கும் பச்சை விளக்கும் மாறி மாறி எரிகிறது. ராஜமாணிக்கம் தொடர்ந்தான். ‘உனக்கு ஏதும் பிரச்சினையின்னா 5 லட்சத்தை என் சொந்தப் பொறுப்புல திருப்பித் தந்துர்றேன்’ என்றான். ‘சரி. நாளக்கி சொல்றேன்’ என்று பேச்சை முடித்துக்கொண்டான் பழநி. இரவு முழுதும் யோசித்தான். மனைவி ஜெயா சொன்னாள் ‘மண்ணுலதானே காசு போடுறோம். ஒன்னும் ஆகாது. வாங்கிப் போடுங்க.’ ஜெயாவுக்கு ஒரு அருள்வாக்கு இருக்கிறது. அது பழநியப்பனின் சொந்த அனுபவம். பொதுவாக அபிப்ராயம் சொல்லமாட்டாள். இப்போது சொல்லிவிட்டாள். மண்டைக்குள் பச்சைவிளக்கு தொடர்ந்து எரிந்தது. அடுத்தநாள் காலை ராஜமாணிக்கத்தை அழைத்தான். ‘வணக்கம் ராஜா. நீ எப்போ அறந்தாங்கி போறே?’ ‘நாளக்கால பத்தரைக்கி’ ‘ சரி. இன்னிக்கு ராத்திரி 9 மணிக்கு தேக்கா வந்துரு. செக் தர்றேன். அக்ரீமென்ட முடுச்சிடு.’ ‘கன்கிராட்ஸ் பழநி. நல்ல முடிவு எடுத்திருக்கே.’ ‘இன்னொரு விஷயம்’ பழநி தொடர்ந்தான். ‘விஸ்வநாதனிடம் அந்த இடம் பற்றிய விபரம் விலையுடன் எனக்கு விற்கச் சம்மதம் என்ற ஒப்பதலையும் அதற்கிடையே ஈமெயிலில் எனக்கு அனுப்பச் சொல். அதோடு நீயும் அக்ரீமெண்டு ரெஜிஸ்டர் செய்து தர்றத ஒப்புக்கொண்டு ஒரு ஈமெயில் அனுப்பிரு’ ‘ ‘இதோ இப்பவே. இன்னும் ஒரு மணிநேரத்தில ரெண்டு ஈமெயிலும் உனக்கு வந்திரும்’ என்றான் ராஜமாணிக்கம். விஸ்வநாதன் எல்லா விபரங்களையும் தமிழிலேயே எழுதி அனுப்பிவிட்டார். ராஜமாணிக்கமும் பழநி எதிர்பார்த்ததுக்கும் மேலான விபரங்களோடு தமிழிலேயே எழுதி அனுப்பிவிட்டான். இரண்டும் பழநியின் அஞ்சல் தொகுப்பில் வந்து விழுந்தது.
இரவு மணி 9. சொன்னபடி ராஜமாணிக்கம் வந்தான். 5 வட்சத்துக்கான கரூர் வைஷ்யா பேங்க் காசோலை கைமாறியது. புறப்பட்டுவிட்டான் ராஜமாணிக்கம். இரண்டு நாட்கள் ஓடியது. ராஜமாணிக்கம் எதையுமே சிந்திக்கவிடவில்லை. விரட்டி விரட்டி முடிக்கவைத்துவிட்டான். சரி ஊரில் அண்ணனிடம் சேதியைச் சொல்லிவிடலாம். தொலைபேசியில் அண்ணனின் எண்களைப் பிதுக்கினான். அடுத்த முனையில் அண்ணன் மூர்த்தி. தகவல்கள் பரிமாறப்பட்டன. மூர்த்தி சொன்னார் ’நீ சொல்ற இடம் தெரியும். இப்போ நல்ல மழையா இருக்கு. நாளக்கே போய்ப் பார்த்துட்டு உனக்கு எல்லா விபரத்தையும் சொல்றேன்.’ மூன்று நாட்கள் ஓடிவிட்டன. ராஜமாணிக்கம் அழைத்தான். ஒப்பந்தப் பத்திரம் பதிவு செய்யப்பட்டுவிட்டதாம். அதன் புகைப்படப்பிரதியை மின்னஞ்சலில் அனுப்பிவிட்டானாம். பார்த்துக்கொள்ளச் சொன்னான். நாளை இரவு சிங்கப்பூர் வருகிறானாம். பத்திரத்தின் உண்மை நகலை நேரில் கொடுத்துவிடுவானாம். அவன் தொலபேசியை வைத்தான். அண்ணன் மூர்த்தி உடன் அழைத்தார். இழுத்து இழுத்துப் பேசினார். ‘தம்பீ. நல்லா யோசிச்சியா. போயி எடத்தப் பாத்துட்டேன். நம்ம வடிவேலு அங்கதான் இரும்புப் பட்டறை வச்சிருக்கான். அவன் எல்லாத்தயும் ஒடச்சுச் சொல்லிட்டான். அவனிடம் 50 ரூபாய்க்கு பேசியிருக்கிறார் விஸ்வநாதன். அந்தக் காசுக்கே அத வாங்க யாரும் வரல. இப்ப அந்த இடத்துல தண்ணி கெத்து கெத்துனு நிக்குது. நீ உடனே புறப்பட்டு வா. ராஜமாணிக்கத்த விட்ரு. அவன் ராஜநாகம். லேசா ஒரசுனாலே போதும். தொரத்தித் தொரத்தி கொத்தீருவான். விஸ்வநாதன்ட சமரசமா பேசி எப்படியாவது அட்வான்ஸை வாங்கிருவோம். வந்து ஒன் கண்ணாலயே அந்த இடத்தப் பாரு.’ என்றார். பழநிக்கு லேசாக உடம்பு சுட்டது. கைத்தொலைபேசியை பாக்கெட்டில் வைத்தபோது கை நடுங்கியது. மனைவி ஜெயாவிடம் எந்தச் சலனமும் இல்லை. ‘போய் எடத்தப் பாத்துட்டு வந்துருங்க. நாம போய்ப் பாக்கிறதும் நல்லதுதான்.’ என்றாள்.
திருச்சி விமானநிலையம். அண்ணன் மூர்த்தி வந்திருந்தார். இருவரும் நேராக பாக்குடி சென்றார்கள். பாக்குடி குளக்கரையில் இறங்கினார்கள். அந்தக் குளம் ஏரிபோல் காட்சியளித்தது. மழை இன்னும் தூறிக்கொண்டுதான் இருக்கிறது. நெடுக வளர்ந்த கருவேல மரங்கள் ஆங்காங்கே காவலுக்கு நிற்பதுபோல் தண்ணீருக்குள் நிற்கிறது. ஏராளமான கிளிகள் போர்த்திக்கொண்டு கிளைகளில் அமர்ந்திருந்தன. ஒரு தண்ணிப்பாம்பு சுருட்டிக்கொண்டு கரையில் கிடந்தது. ஒரு தவளை தண்ணிருக்கு மேலே வாயைப் பிளந்து பிளந்து மூடியது. அந்தத் தவளையை இன்னும் கொஞ்ச நேரத்தில் பாம்பு விழுங்கிவிடலாம். அந்தப் பாம்பைப் பார்த்ததும் ராஜமாணிக்கத்தின் நினைவு வந்தது. அண்ணன் மூர்த்தி சொன்னார். ‘இந்த தண்ணிக்குள்ளதான் நீ வாங்குன இடம் இருக்கு. அஸ்திவாரச் செலவுக்கே 10 லட்சம் ஆகும்பா. மொதமொதல்ல வாங்குற. ஒரு வார்த்த சொல்லீருந்தா ஊருக்குள்ளேயே வேற இடம் வாங்கியிருக்கலாம்.’ ‘முடுஃஞ்சிருச்சுண்ணே. ஏமாந்துட்டோம். வாங்க விஸ்வநாதனப் பார்ப்போம்.’
விஸ்வநாதான் வீடு. காப்பி சாப்பிட்டார்கள். விஸ்வநாதன்தான் ஆரம்பித்தார். டிசம்பர் 24க்குள்ளே நீங்க கெரயம் செய்யணும். ஒங்க வசதியப் பாத்துக்கங்க. எப்ப வர்றீங்கங்கிறத முன்னாடியே சொல்லிடுங்க. நா அங்கங்க ஓடுற ஆளு.’ பழநி சொன்னான்.’தப்பா நெனக்காதீங்க விசு. ஒங்க எடம் நல்ல எடந்தான். கட்டட வேலய ஒடனே பாக்கணும். தண்ணி நிக்குது. அஸ்திவாரச் செலவே அதிகமாகும்போல இருக்கு. அக்ரீமெண்ட கான்சல் பண்ணிடுவோம். ஒரு லட்சத்த எடுத்துக்கங்க. மீதி 4 லட்சத்த கொடுத்திங்கன்னா போதும்.. துபாய்லயும் சவுதிலயும் நம்ம ஆளுங்களுக்குத் தெரிஞ்சா வந்து கொத்திக்கிட்டு போயிடுவாங்கன்னு ராஜமாணிக்கம் சொன்னான். அவங்கள்ட வித்துடுங்க விசு.’ ‘ரொம்ப சரி பழநி. அந்த எடத்த நீங்க பேசி முடுச்சிட்டிங்கன்னு எல்லாருக்குமே தெரியும். இப்ப நீங்க வேணாம்னு சொல்லிட்டீங்கன்னுதான் அவங்கக்கிட்ட சொல்லணும். அவங்க யோசிப்பாங்க. வேணும்னா நீங்க கிரயம் பண்ணாதீங்க. சட்டப்படி அந்த 5 லட்சத்த நீங்க மறந்துட வேண்டியதுதான்.’ நிச்சயமாகத் தெரிந்துவிட்டது இது ஒரு கூட்டுச்சதி. இதையேதான் இவர் திரும்மத் திரும்பச் சொல்கிறார். இனி பேசிப் பயனில்லை. மூர்த்தியும் பழநியும் வெளியேறினார்கள். மூர்த்தி சொன்னார் ‘ரெண்டு காரியம்தான் நடக்கமுடியும். ஒன்னு நாம 5 லட்சத்த இழக்கணும். இல்லாட்டி இன்னொரு 5 லட்சம் கொடுத்து வாங்கணும். யோசித்துக்கொள்வோம்.’
சிங்கப்பூர் வந்துவிட்டான் பழநி. ஜெயாவிடம் நடந்ததைச் சொன்னான். எந்தச் சலனமும் அவளிடம் இல்லை. ‘மூன்று மாதம் இருக்கிறது. மத்த வேலயப் பாருங்க. நடப்பது நடக்கட்டும்’ என்றாள்.ஒரு மாதம் ஓடிவிட்டது அக்டோபர் 20. ராஜமாணிக்கம் அழைத்தான். ‘என்ன பழநி. எப்போ கிரயம்.’ என்றான். விஸ்வநாதனை தன் அண்ணனுடன் சென்று பார்த்ததைப்பற்றியோ முன்பணத்தைக் கேட்டதுபற்றியோ அவன் மூச்சுவிடவில்லை. இவனைத் தெரிந்நிருந்தே ஏமாறியிருக்கிறோம். இதுதான் விதியோ? அவனிடம் எதுவுமே பேசக்கூடாது. ‘போகும்போது சொல்கிறேன்’ என்று மட்டும் சொல்லிவிட்டு பேச்சை முடித்துக்கொண்டான் பழநி. பல இரவுகள் தூங்கா இரவுகளாக கழிந்தன. ஜெயா நன்றாக தூங்குகிறாள். இந்த விவகாரம் அவளுக்கு எந்த உளைச்சலையும் தரவில்லை.. இது எப்படி முடிகிறது.?
நவம்பர் 15, ராஜமாணிக்கம்தான் அழைக்கிறான். சுருதி தலைகீழாகியிருக்கிறது. ஆனால் அதை எப்படி நம்புவது. பாம்பிடம் பால் கறக்கலாம் என்று சொன்னாலும் பழநி நம்பத் தயார். ராஜமாணிக்கம் நமக்கு ஒரு நல்லது செய்வான் என்பதை அவன் நம்பத் தயாராக இல்லை. அவன் சொன்ன சேதி இதுதான். விஸ்வநாதனிடம் அட்வான்ஸை திருப்பிக் கேட்ட விஷயம் அவனுக்கு இப்போதுதான் தெரியுமாம். ஒப்பந்தத்தை ரத்துசெய்துகொள்வோம் என்று சொன்னதும் இப்போதுதான் தெரியுமாம். அவன் விஸ்வநாதனிடம் பேசிவிட்டானாம். அட்வான்ஸ் மொத்தத்தையும் வாங்கித்தந்துவிடுவானாம். ஒப்பந்தப் பத்திரத்தை திருப்பி கொடுத்துவிடவேண்டுமாம். இதை எப்படி நம்புவது. ‘இப்ப ஒரு மீட்டிங்ல இருக்கேன். நாளக்கி பேசுவோம்’ என்றான் பழநி. உடனே அண்ணனை அழைத்தான். ‘தம்பீ நானே பேசுவோம் என்றிருந்தேன். விஷயம் தலைகீழாகி இருக்கிறது. நீ உடனே புறப்பட்டு வா. கிரயம் செய்யும் தோதுலெயே வா. நீ வர்றது அந்த ராஜநாகத்துக்குத் தெரியவேண்டாம். நீ வரும் தேதியச் சொன்னால் தாசில்தாரிடம் அப்பாயிண்ட்மென்ட் வாங்கிருவேன். நம்ம ரெண்டு பேரையும் தாசில்தார் வரச்சொன்னார்.’ ‘தாசில்தார நாம ஏன் பாக்கணும்’ என்றான் பழநி.. எதையும் போனில் பேசவேண்டாமென்று ஐயா சொல்லிவிட்டார். ஆனால் நல்ல விஷயம்தான். நீ உடனே புறப்பட்டு வா.’ என்றார் மூர்த்தி. ‘வரும் நாளை மட்டும் சொல். திருச்சி ஏர்போர்ட்டுக்கு நான் வந்துவிடுகிறேன்.’
டிசம்பர் 10. திருச்சி விமானநிலையம். மூர்த்தி காத்திருந்தார். பழநி வந்திறங்கினான். மூர்த்திதான் பேசினார். ‘அரையும் குறையுமா நான் எதுவும் சொல்லக்கூடாது. உன்னிடம் தாசில்தார் நேரில் சொல்வதாகச் சொல்லிவிட்டார். இன்று மாலை 5 மணிக்கு நாம தாசில்தாரப் பாக்குறோம்’ எப்போது அந்த 5 மணிவரும் என்று காத்திருந்தனர்.
மாலை மணி 5. தாசில்தார் வீடு. வரவேற்பறையில் மூர்த்தியும் பழநியப்பனும். தாசில்தார் வந்ததும் ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார். ‘நல்லா இருக்கியா பழநி. ஒன்னப் பாத்தா அப்படியே ஒங்க அப்பா காசிநாதனப் பாக்குறதுமாதிரி இருக்கு.’ என்றார். அப்பா ஞாபகம் வந்ததில் பழநிக்கு உதடுகள் துடித்தன. தாசில்தார் சொன்னார். ’நீ வாங்கியிருக்கிற எடத்துல காற்றாலை மின் நிலையம் கட்ட முடிவாகியிருக்கு. அந்த இடத்தின் சொந்தக்காரர்களுக்கு விபரம் சொல்லியிருக்கிறோம். விஸ்வநாதனுக்கும் தெரியும். பப்ளிக்குக்குத் தெரியாது. சொல்லக்கூடாது என்று சொல்லியிருக்கிறோம். அந்த எடத்துக்கு அரசாங்கம் கொடுக்கிற விலை நீ வாங்கின விலயப்போல பல மடங்கு. அக்ரிமென்ட்படி டிசம்பர் 24க்குள் நீ கிரயத்தை முடித்துவிடு. நீ வக்கீல் ராமமூர்த்தியிடம் அக்ரீமென்டையும் பாக்கித் தொகையையும் கொடுத்துவிடு. அவர் எல்லாத்தையும் பாத்துக்குவார். விஸ்வநாதன் ஒத்துவராவிட்டால் போலிஸ் அவனைப் பார்த்துக்கொள்ளும். அவன் உனக்கு விற்றே ஆகவேண்டும் என்று சொல்லி பழநியின் கைகளைக் குலுக்கினார். தோளில் கைபோட்டுச் சொன்னார் தாசில்தார். ‘எனக்கு தோணுது பழநி. நீ நல்லா வருவே. நல்லா வருவே.’
அரசாங்கம் அந்த இடத்தை பழநியிடமிருந்து வாங்கிக்கொண்டுவிட்டது. அந்தத் தொகை அப்படியே ‘காசிநாதன் காலனி’ என்ற சொத்தாக மாறிக்கொண்டிருக்கிறது. காற்றாலை மின் நிலையம் திறக்கப்படும் அதே நாளில் காசிநாதன் காலனியும் திறப்புவிழாக் காணக் காத்திருக்கிறது. அடுத்த வாரம் திறப்புவிழா. சிங்கப்பூர் விமான நிலையத்தில் பழநியப்பன் ஜெயா, பிரேமாவதி. ‘அடேங்கப்பா எத்தனை உளைச்சல்கள். எத்தனை தவிப்புகள். எல்லாம் இவ்வளவு சுகமாய் முடியுமென்று நம்பவே முடியவில்லை ஜெயா. இத்தனை சம்மட்டி அடியிலும் எப்படி உன்னால் சலனமற்று இருக்கமுடிகிறது.’ ஜெயா சொன்னாள். ‘நல்லவர்களைக் கொல்லாது நஞ்சு. நீங்கள் நல்லவர்.’
யூசுப் ராவுத்தர் ரஜித்
- நான் ஏன் இஸ்ரேலை விமர்சிப்பதில்லை?
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 5- மீராபாய்
- “சொந்தக்குரல்” எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின் ‘சொந்தக்குரல்’சிறுகதைபற்றிய என்குரல்
- முடிவை நோக்கி !
- நெருப்புக் குளியல்
- இயற்கையின் மடியில்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 17
- நல்லவர்களைக் கொல்லாது நஞ்சு
- ஆனந்த பவன் (நாடகம்) காட்சி-1
- நிழல்
- சீதை, அமுதா, நஞ்சா, தீயா?
- தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழா-21, 22.06.2014
- வாழ்க்கை ஒரு வானவில் 16
- தொடுவானம் 29. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி
- நீயும் நானுமா, கண்ணா, நீயும் நானுமா?
- பாவண்ணன் கவிதைகள்
- வண்ணவண்ண முகங்கள் விட்டல்ராவின் நாவல் ‘காலவெளி’
- எலிக்கடி
- உம்பர் கோமான்
- பால்கார வாத்தியாரு
- வேல்அன்பன்
- தினம் என் பயணங்கள் -29 மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் அறக்கட்டளை
- உயிரோட்டமுள்ள உரைநடைக்கு உரைகல் பாரதி!
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 88
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.
- இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம், கடலூர் – 24-08-2014 ஞாயிறுமாலை6 மணி