வேல்அன்பன்

author
0 minutes, 1 second Read
This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

எஸ். கிருட்டிணமூர்த்தி
அவுஸ்திரேலியா

(தாய்த் தமிழ்ப் பள்ளியின் “ஆஸ்திரேலியா – பல கதைகள்” சிறுகதைப் போட்டி  – இரண்டாம் பரிசு)

விடிந்தால் புது வருடம். நாளை பிறக்க விருக்கும் இரண்டாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டைவரவேற்று எல்லா இணையத்தளங்களும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டு கொண்டிருந்தது. சலசலப்புத்தமிழ் இணையம் வேல்அன்பனது கதையொன்று இரண்டாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டு புது வருச சிறப்பு மலரில் வருகின்றது என பரபரப்பு செய்தி வெளியிட்டிருந்தது. இதுதான் வேல்அன்பன் கடைசியாக தமிழ் மீடியாக்கு அனுப்பிய படைப்பு என கட்டம் போட்டுச் செய்தி வெளியிட்டது. கடந்த ஒருவாரமாக தமிழ் ஊடகங்களில் மெதுவாக வந்த கசிந்த செய்தி இப்போது காட்டுத்தீயைப் போன்று எல்லா இணையத்திலும் பரவியுள்ளது.  ஒருவாரமாக வேல்அன்பனைக் காணவில்லை. அவரை எந்த மீடியாவாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வழமையாக அவர் தொடர்பு கொள்ளும் முக்கிய சில மீடியாக்களும் அவர் ஓரு வாரமாக தம்முடன் தொடர்பு கொள்ளவில்லை என அறிவித்துள்ளன. அதைவிட அவர் தனது சொந்த இணையத்தளத்தில் தினசரி பதிவேற்றம் செய்வார். அதிலும் ஒரு வாரமாக எதுவும் பதிவேறவில்லை.

வேல்அன்பன் யார் என்று கேட்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்குத் தமிழ் தெரியாது அல்லது நீங்கள் இரண்டாயிரத்து இருபத்தோராம் ஆண்டுக்குப்பிறகு இந்த உலகில் இல்லை என்ற அர்த்தம். இரண்டாயிரத்து பத்து காலப் பகுதியில் சில இணையத்தளத்தில் இவரது சில கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வந்தன. அந்தகாலட்டத்தில் பெருகிய நூற்றுக்கணக்கான இணையப் பதிவாளர்களில் இவரும் ஒருவர். அப்போது யாரும் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு இவர் எழுத்தாளர் அல்ல. இப்போது இவரின் படைப்பை எதிர்பார்த்து எல்லா இணையத்தளங்களும்  காத்திருக்கின்றன. இவர் என்னத்தை கொடுத்தாலும் கண்ணை  மூடிக்கொண்டு இணையங்கள் பதிவேற்றும். இவரது படைப்புக்கள் இணையத்தில் பதிவேறியதும் இலச்சக்கணக்கான வாசகர்களின் வருiகால் இணையமே திக்கு முக்காடும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில்தான் இவருக்கு வாசகர்கள் அதிகம். ஐரோப்பா, கனடா, அவுஸ்த்திரேலியா ஆகியவற்றில் நூற்றுக்கணக்கானவர் மட்டும் இவரது படைப்புக்கு விசிற் பண்ணுவார்கள். அவர்களது வருகையும் ஒன்று ஒன்றாக் குறைந்து கொண்டிருக்கிறது.  இதில் ஆச்சரியப்பட பெரிதாக  எதுவுமில்லை. இந்த இடங்களில்  இலட்சக்கணக்கில் தமிழர் வாழ்ந்தாலும் தமிழ் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. அவர்களும் எழுபது வயதைத்தாண்டியவர்கள். ஓவ்வென்றாக மடிந்து கொண்டிருக்கிறார்கள்.

சமீர் வேல்அன்பனின் தீவிர வாசகன். மதத்தால் இஸ்லாமியர். அண்மையில்தான் அவுஸ்த்திரேலியாவிற்கு அகதியாக வந்தவன். மெல்பேணில் வாழ்கிறான். இலங்கையின் மத்திய சிங்கள பொளத்த அரசும் வடக்கு கிழக்கு குறும் தேசியவாத தமிழ் மாநிலஅரசுகளும் ஒன்றிணைந்து முஸ்லிம்களை நசிக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் நாட்டை விட்டு தப்பியோடும் சிறுதொகை முஸ்லிங்களில் சமீரும் ஒருவன். மெல்பேணில் வயோதிபர் இல்லம் ஒன்றில் வேலை செய்கிறான். அவனுக்கு நாட்டுபிரச்சனை ஓரு புறம் வாட்டிக்கெபண்டிருந்தாலும். இப்போது சில நாட்களாக வேல்அன்பனைப் பற்றிய செய்திதான் மனதை அரித்துக் கொண்டிருந்தது. வேல்அன்பனது எழுத்துக்கள் இளமையும் வசீகரமும் கொண்டவை அத்துடன் தத்துவத்தையும் கிண்டல்களை இடைக்கிடைபுகுத்தி கோடிக்கணக்கான வாசகர்களைக் கொள்ளை கொண்டவர். சமீரும் இணையத்தில் வேல்அன்பனைப் பற்றி நல்ல செய்திவராதா என அடிக்கடி தேடினான்.

வேல்அன்பனது படைப்புக்களை வைத்து பணத்தையும் வாசகர் கூட்டத்தை சம்பாதித்த பல இணைய முதலாளிகள். இப்போது அவரைப் பற்றிய செய்திகளைப் போட்டு பணத்தையும் வாசகர் கூட்டத்தையும் பெருக்குகிறது. யானை இருந்தாலும் பொன் இறந்தாலும் பொன் என்பது போல. ஆனால் அவரைப் பற்றிய தனிப்பட்ட எல்லாத் தகவல்களும் இருபது வருடங்களுக்கு முற்பட்டவை. அவரது படம் கூட இருபது வருடங்களுக்கு முந்தியவை. அவரைப் பற்றிய தனிபட்ட விசயங்களை வெளியிட அவர் விரும்புவதில்லை. அவர் பல தடவை குறிப்பிடும் விடயம் “என்; எழுத்தைப் படியுங்கள், என்னைப் படியாதீர்கள். என்னை ஆராயாதீர்கள் என் படைப்பை ஆராயுங்கள்”என்பதுதான். எந்த வொரு இணைய ஆசிரியர் கூட இவரை நேரிலோ அல்லது அல்லது ஸ்கைப்பிலோ பார்த்தது கிடையாது. அவுஸ்த்திரேலிய மெல்பேணில்hதன் இவர் பல காலமாக இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் அதுக்கு மேலே எதுவும் தெரியாது. மெல்பேணில் அவர் காலத்து எழுத்தாளர்களைப்பற்றி ஆராய்ந்தது ஒரு இணையம். ஆராய்சிமுடிவில் அது சொல்லியது மெல்பேணில் அவர்காலத்து எழுத்தாளர்கள் எழுத்துலகில் இல்லை சிலர் இவ்வுலகிலே இல்லை. அத்துடன் வேல்அன்பனது வயது எண்பதிற்கு மேல் என்று கணித்துக் கூறியது.

இன்னொரு இணையமோ அவுஸ்த்திரேலியா சனத்தொகைத் திணைக்களகத்தை; தொடர்பு கொண்டு விசாரித்தில் வேல்அன்பன் என்ற பெயரில் சிலர் இருந்தாகவும். அவர்கள் எப்போதோ மரணமடைந்து விட்டார்கள் எனக் குறிப்பிட்டது. அத்துடன் வேல்அன்பன் அவரது புனைபெயராக இருக்கலாம் எனத் தாம் கருதுவாதாச் சந்தேகம் வெளியிட்டது. அதீத தொழிநுட்ப வளர்ச்சியடைந்தும். தமிழின் பொரும் படைப்பாளியை அதைக் கொண்டு கண்டு பிடிக்க முடியதுள்ளதை சோகத்துடன் அந்த இணையம் சொன்னது.

இணையத்தில் செய்திகை பார்த்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே சமீருக்குத் தெரியவில்லை. வேலைக்கு வெளிக்கிடவேண்டிய நேரம் வந்துவிட்டது. அவசரஅவசரமாக வெளிக்கிட்டான். வருடஇறுதி விடுமுறை காலமானதால் அவுஸ்ரேலியர் பலர் விடுமுறையில் சென்று விட்டார்கள். சீனர்களும், ஆபிரிக்களும்தான் இவனுடன் இன்று வேலைக்கு வர உள்ளனர்.

அந்த முதியோர் இல்லத்தில் நத்தாருக்கு அலங்கரிக்கப்பட்ட அலங்காரங்கள் இன்னமும் கலையாமல் இருந்தது. உள்ளே வந்து வேலையை ஆரம்பித்தான். அவன் இரவு வேலை என்றபடியால் வேலை குறைவு.  ஓவ்வெரு கட்டிலாகப் பார்வையிட்டபோது மிஸ்டர் பிள்ளையின் கட்டில் காலியாக இருந்தது.

வேலுப்பிள்ளை பெயர் ஆனால்,அந்த முதியோர் இல்லத்தில் பிள்ளை என்று தான் அழைப்பார்கள். சமீர் அந்த முதியோர் இல்லத்தில் வேலைக்குச் சேர்ந்து இரண்டு மாதம்தான் ஆகிறது. அந்த இல்லத்தில் தனித்தனியாக பிரிக்கப்பட்ட அறைகள். ஓவ்வெரு அறையினிலுள்ளும் ஒரு சிறிய தொலைக் காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி இன்னநெற்றுடன் கூடிய கணணி என இருந்தது. அந்த இல்லத்தில் பலநாட்டவர்கள் இருந்தாலும் ஒரேஒரு தமிழர் இந்த மிஸ்டர் பிள்ளைதான். இவர்  மற்றவர்களுடன் அதிகம் ஒட்டமல் எந்த நேரமும் கணணியில் இருப்பார்;. சமீருடன் பல தடவை பேச முயற்ச்தார். ஆனால் சமீரோ வேலைச் சுமை காரணமாகவும் புதிதாக வேலைக்கு வந்தாதல் மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பதற்காகவும். அவருடன் அதிகம் கதைப்பதைத் தவிர்த்தான்.

போனவாரம் அவருக்கு திடீரென காட்அற்றாக் வந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சமீருக்கு நல்ல நினைவு காட்அற்றாக் சில மணித்தியாலத்துக்கு முன்புதான். மிஸ்டர் பிள்ளையைப் பார்ப்பதற்கு அவரது மகளின் மகள் அதாவது பேத்தி ஐந்து குழந்தைகளுடன் வந்தாள்.  ஐந்தும்  வௌ;வேறு கலரில் இருந்தன. அன்று மிஸ்டர் பிள்ளை குதுகலத்துடன் இருந்தார்.

அன்றுதான் மிஸ்டர் பிள்ளையுடன் அதிக நேரம் பேசக் கூடியதாக இருந்தது. ஒவ்வெரு பூட்டப்பிள்ளைகளைக் காட்டி சமீருக்கு அறிமுகப்படுத்தினார்.
“இந்த இரண்டு குழந்தைகளும் எனது மூத்த பேத்தியின் குழந்தைகள்.” எனக் கூறியபடி சமீரை கூர்ந்து கவனித்தார். சமீருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஓரு குழந்தை சிறிய கண்களுடன் சீனக்கலவை கலந்த மாநிறக்குழந்தையும். மற்றது, சுரண்ட தலைமுடியுடன் ஆபிரிக்க கறுப்புமில்லாமல் இந்தியக் கறுப்புமில்லாமல் இரண்டும் கெட்டான் கலரில் இருந்தது.
சமீரின் குழப்பத்தை புரிந்து கொண்ட மிஸ்டர் பிள்ளை,
“ஒன்று பேத்தியின் முந்தைய சைனீஸ் கணவனுக்குப் பிறந்தது. மற்றது, பேத்தியுடன் திருமணச் செய்யமல் சேர்ந்து வாழும் ஆபிரிக்கக்காரனுக்குப் பிறந்தது.” என்றார்.

இன்னொரு சிறுவனைக் காட்டி “ எனது மகனின் பேரன், இத்தாலிக் கலப்பு” என்றார்.

மற்றைய இரண்டு சிறுமிகைகளையும் அழைத்தார். இரு சிறுமிகளும்தான் எந்தவிதக் கலப்பும் இல்லாத அசல் சிறீலங்கன் குழந்தைகள் போல இருந்தன. சமீரது மனவோட்டத்தை மிஸ்டர் பிள்ளைக்கு புரிந்ததோ என்னவோ.

“ இதுவும் கலப்புத்தான் பிஜி நாட்டுக்கலப்பு. அந்த நாட்களில் எனது பெற்றோர் எஙகளுக்கு பக்கத்து ஊரில் திருமணம் செய்து வைக்கவே நிறைய யோசித்தினம். அந்தச்சாதியோ இந்தச்சாதியோ என்ற ஆராய்சி. ஒரேசாதியெண்டாலும், அந்த வீட்டில் சொம்பு எடுக்கிறதில்லை, இந்த வீட்டில் கை நனைக்கிறதில்லை. இப்படி பல கட்டுப் பெட்டித்தனம்.” என்றார்.

சமீர் மௌனமாக சின்ன புன்னகை செய்தான். மிஸ்டர் பிள்ளை சின்னவொரு மௌனத்தின் பின் தொடர்ந்தார்.

“அவுஸ்திரேலியா  பல்கலாச்சாரம் கொண்டது.  அது மாதிரத்தான் எனது குடும்பமும். இங்கு ஆரம்பத்தில் ஆதிவாசிகளான, அபுஜீற்சினிஸ் இருந்தார்கள். இங்கு வந்த பிரிட்டிஸ்காரர் ஆதிவாசிகளை கொன்று அழித்தார்கள். எஞ்சியோரை மதுவிற்கு அடிமையாக்கி அந்த இனத்தையே சிதைத்தார்கள். ஆங்கிலேயரால்  இந்த நாட்டைத் தனித்து கட்டியெழுப்ப முடியாததால், இத்தாலியர், கிரேகத்தவர், பசினோலியர், என ஐரோப்பியக் கண்டத்தைச் சேர்ந்த பலரை இறக்கினார்கள். நாடு கொஞ்சம் கொஞ்சமாக பல் கலாச்சாரத்திற்கு மாறியது. இருந்தும் வெள்ளை அவுஸ்த்திரேலியாக் கொள்கையை இரகசியமாக கடைப்பிடித்தார்கள். ஆனால் அது கனகாலத்துக்கு தாத்கு பிடிக்கவில்லை. மாறும் உலகத்திற்கு ஏற்ப மாறாமல் இருந்தால் நாடு முன்னேறாது என்பதை உணர்ந்ததால், பின்னர் சீனர், அரபுக்காரர், இந்தியர், ஆபிரிக்கர் என வெள்ளையில் பல் வண்ணத்தைக் கலந்தார்கள்.”

என்று கூறிவிட்டு, அருகில் இருந்த தண்ணீரை ஓரு மிடறு குடித்துவிட்டு, தான் அறுக்கிறனோ என்று சமீரின் முகத்தை ஆராய்தார். சமீருக்கும் இந்தத் தவகல்கள் சுவார்சியமாக இருந்ததால், இரசனையுடன் கேட்டான்.

“இதே போலத்தான் எனது பரம்பரையிலும் பல கலர்கள் கலந்துள்ளது. மாற்றம் தவிர்க முடியாது மட்டுமல்ல மாறாமலிருப்பதும் வளர்ச்சியற்று இருப்பது போன்றது. ஆனால் இப்பவும் தாயகத்தில் தமிழர்கள் மாற்றமற்று இருக்கிறார்கள். சாதி தொடக்கம் அரசியல் வரை பழையதையே கட்டிக் காக்கிறார்கள்.” என ஆதங்கப்பட்டார் மிஸ்டர் பிள்ளை.
அவரது உரை சிறந்த பேச்சாளரின் உரை போன்று சமீரது மனதை வசீகரித்தது.

மிஸ்டர் பிள்ளையின் நினைவுகளுடன் இருக்கையில் தொலைபேசிமணி சமீரை சுயநினைவுக்கு வரச் செய்தது. நேரத்தைப்பார்த்தான். நேரமோ இரவு பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.  இன்னும் சில நிமிடத்தில் இரண்டாயிரத்து நாற்பத்து இரண்டாம் ஆண்டு வந்துவிடும். என்னஇந்த நேரத்தில் தொலைபேசி அழைப்பு என்ற நினைவுடன் தொலைபேசியை எடுத்தான்.

மறு முனையில் றோயல் மெல்பேண் வைத்தியசாலையில் இருந்து அழைப்பதாகச் சொன்னார்கள். மிஸ்டர் வேலுப்பிள்ளை அன்பழகன் இன்றிரவு பதினொண்டரைக்கு காலமானதாக அறிவித்தார் வைத்தியசாலையைச் சேர்ந்தவர். அப்போது வெளியே புதுவருடத்தை வரவேற்று வாணவேடிக்கைகள் வானத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தது. சமீருக்கோ அது மிஸ்டர் பிள்ளைக்கு செலுத்தப்படும் அஞ்சலியாகத் தோன்றியது.

காலையில் சமீரது மேலதிகாரி மிஸ்டர் பிள்ளையின் உறவினர்கள் வரும் போது கொடுப்பதற்கு உடமைகளை தயாராக எடுத்து வைக்கச் சொன்னார்.

சமீர் அவரது அலுமாரியைத் திறந்தான். அதற்குள் சில உடைகளும், புத்தகங்களும்  சில பைல்களும்  ஒரு மடிக்கணணியும் இருந்தன. சமீர் புத்தகத்தைப் ஒவ்வொன்றாகப்  பார்த்தான் எல்லாமே வேல்அன்பன் எழுதிய புத்தகம். இவரும் வேல் அன்பனது வாசகரோ என்று எண்ணியபடி பைலை எடுத்து அடுக்கினான். பைலுக்கில் இருந்து சில தமிழ் பத்திரிகை கட்டிங்குகள் வெளியே  நீட்டிக்கொண்டிருந்தன. திறந்து பார்த்தான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மெல்பேணிலிருந்து வெளியான தமிழ் பத்திரிகை, உதயம் என்று இருந்தது. அதில் வேல்அன்பன் எழுதிய படைப்புக்கள் இருந்தன. அப்போதுதான் சமீரது மூளைகுள் கிளிக் பண்ணியது. மிஸ்டர் பிள்ளை அதுதான் வேலுப்பிள்ளை அன்பழகன்தான் வேல்அன்பன். தமிழ் இணைய உலகின் கலக்கிக் கொண்டவர்.

அப்போது இருபத்து ஐந்து வயதுடைய வாலிபன் வந்து தன்னை மிஸ்டர் பிள்ளையின் பேரன் என அறிமுகப்படுத்தினான். அவனிடம் மிஸ்டர் பிள்ளையின் உடமையை சமீர்கொடுத்தான். மேலேட்டமாக அதைப் பார்த்துவிட்டு அதிலிருந்து ஒரு போட்டோ அல்பத்தை எடுத்துக்கொண்டு மற்றவற்றை குப்பைக்குள் வீசச்சொல்லி விட்டு போனான்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

 

 

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 88பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *