பாவண்ணன் கவிதைகள்

This entry is part 2 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

 

 

1. வருவதும் போவதும்

 

பேருந்து கிளம்பிச் சென்றதும்

கரும்புகையில் நடுங்குகிறது காற்று

வழியும் வேர்வையை

துப்பட்டாவால் துடைத்தபடி

புத்தகம் சுமந்த இளம்பெண்கள்

அணிஅணியாக வந்து நிற்கிறார்கள்

மனபாரத்துடன்

தவித்து நிற்கிறான் சில்லறை வியாபாரி

ஏற்றப்படுவதற்காகக் காத்திருக்கின்றன

விற்காத போர்வைக்கட்டுகள்

மின்னல் வேகத்தில் தென்பட்டு

நிற்பதைப்போல போக்குக்காட்டி

தாண்டிப் பறக்கிறது நிறுத்தங்களற்ற வாகனம்

கடற்கரை கடைத்தெரு தனிப்பாடல் பள்ளி

நண்பர்கள் வீடு திரைப்படம்

மதுச்சாலை இசைக்கச்சேரி செல்ல

வந்து நிற்கிறார்கள் தனித்தனியாக

கணிக்கமுடியாத மழையை நினைத்து

தற்காப்புக்கு சிலரிடம் உள்ளன குடைகள்

தொலைவில் தென்படும்

பேருந்துத் தடத்தை உய்த்தறிந்து

பரபரப்புக் கொள்கிறார்கள் இடம்பிடிக்க

நேரத்துக்குள் செல்லும் பதற்றத்தால்

நிற்கும் மனநிலையுடன் ஏறுகிறார்கள் பலர்

வாய்ப்பின்மைக்கு வருத்தம் சுமந்து

 

2. மாயத்தோற்றம்

 

தாள்களுக்கிடையே வைத்து மூடிய

மைதோய்ந்த நூல்

விதம்விதமாக இழுபடும்போது

உருவாகின்றன எண்ணற்ற சித்திரங்கள்

ஒரு தாளில் தென்படுகிறது

ஊமத்தம்பூ

இன்னொன்றில் சுடர்விடுகிறது

குத்துவிளக்கு

அடுத்த பக்கத்தில் ஆர்ப்பரிக்கிறது

அலை உயர்த்திய கடல்

அதற்கடுத்து படபடக்கிறது

முகமற்ற பெண்ணின் விரிகுழல்

பிறிதொரு பக்கத்தில்

உடலைத் தளர்த்தி

தலையை உயர்த்தி

செங்குத்தாய் விரிந்த

பாம்பின் படம்

 

3. அதிசய மலர்

 

எப்படியோ புரியவில்லை

ஒருநாள் அதிகாலையில்

என் வாசலில் வைக்கப்பட்டிருந்தது ஒருமலர்

 

அழகின் வசீகரத்தால்

தொட்டெடுக்கத் துடித்தேன் நான்

தொடாதே என்று தடுத்தன குரல்கல்

அக்கம்பக்கம்

ஆள்முகம் தெரிகிறதா என்று தேடினார்கள்

பார்க்காத பூ என்பதால்

சூடுவதற்கு அஞ்சினாள் மனைவி

 

ஒரு மலரை

மலர்களல்லாத காரணங்களுக்காக

தள்ளமுடியுமா?

புத்தக அடுக்குக்கிடையே

மலருக்கு இடமொதுக்கி வைத்தேன்

படிக்கமுடியாத புத்தகம்போல்

இதழ்மலர்ந்து கிடந்தது வண்ணமலர்

 

அதிசயமலரின் அச்சத்தில்

விலகி இருந்தனர் வீட்டார்கள்

வனப்பின் ஈர்ப்பு நாள்பழக

கலவரம் துறந்து சிரித்தார்கள்

 

பனி புயல் மழை எதுவானாலும்

தவறாது கிட்டியது விசித்திர மலர்

அச்சம் உதறிய மனைவிக்கு

மலர்மீது பிறந்தது ஆசை

எடுத்துச் சூடிக்கொண்டாள்

 

மறுநாள் காலை

வெறிச்சிட்டிருந்தது மலரற்ற வாசல்

 

4. பூக்காரி

 

எஞ்சிய பூச்சரத்தை வாங்கும் ஆள்தேடி

அவசரத்தோடும் கவலையோடும்

பரபரக்கிறாள் பூக்காரி

 

வந்தி நிற்கும் வாகனங்களைப் பார்க்கிறாள்

இறங்கிச் செல்லும் நடுவயதுப் பெண்களை

குழந்தையைத் தோள்மாற்றிக்கொள்ளும் தம்பதிகளை

தோள்பையுடனும் சோர்வுடனும்

நடக்கும் முதிர்கன்னிகளை

சிரிப்பும் ஆனந்தமும்

குமிழியிடும் இளம்பெண்களை

ஒருகணம் நின்று தலைவாரிச் செல்லும் இளைஞர்களை

திரைப்பாடலை முணுமுணுத்தபடி நடக்கும் நண்பர்களை

எல்லாரையும் பார்க்கிறாள் பூக்காரி

 

முழத்தின் விலைசொல்லி

வாங்கிச் செல்லுமாறு தூண்டுகிறாள்

பேரத்துக்குத் தயார் என்பதைப்போல்

அவள் குரல் தயங்கித்தயங்கியே ஒலிக்கிறது

நாலுமுழம் கேட்பவர்களிடம்

முழுச்சரத்தையும் தரும் முடிவிலிருக்கிறாள்

ஆனால் முகம்பாராமலேயே நடக்கிறார்கள் பலர்

நெருங்கிச்செல்லும்போது தள்ளிநடக்கிறார்கள் சிலர்

விலைசொல்லும் குரலையே நிராகரிக்கிறார்கள் சிலர்

 

ஏராளமான பேர்கள் தத்தம் வீட்டைத் தேடி

எல்லாத் திசைகளிலும் போய்க்கொண்டிருக்கிறார்கள்

வாகனங்களின் விளக்குகளால் கண்கள் கூசுகின்றன

மழைபெய்வதைப்போல வானம் இருள்கிறது

கைகோர்த்து நடந்து செல்லும்

இரு சிறுவர்களைப் பார்த்ததும்

அதிகரிக்கிறது வீட்டு ஞாபகம்

செய்யவேண்டிய வேலைகளின் பட்டியல்

மனத்தில் தோன்றியதும் பதற்றம் பெருகுகிறது

 

இன்னுமொரு வாகனத்தைப் பார்த்தபிறகு

கிளம்பும் முடிவுடன் நிற்கிறாள் பூக்காரி

Series Navigationதொடுவானம் 30. மறந்து போன மண் வாசனைவால்ட் விட்மன் வசனக் கவிதை – 89
author

பாவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *