கண்ணீரைக்கசியவைத்த நூல் – திரு த. ஸ்டாலின்குணசேகரன் எழுதிய ‘மெய்வருத்தக் கூலிதரும்’

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

 

 

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

 

சில எழுத்துப்பணியின் காரணமாய்ப் படிப்பது கொஞ்சம் அண்மையில் தடைபட்டது.

விளைவு படிப்பதே நின்றதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது.

என்ன செய்வது ?

ஏற்றுக்கொண்டதை முடிக்கவேண்டுமே என்ற அக்கறை ஒருபுறம்.

நேரத்தை வீணாக்காமல் எழுதிகொண்டுதானே இருகிறோம் என்ற சமாதானம் மறுபுறம்.

நீடிக்கும் இந்தமனநிலையில் கைக்குக்கிடைத்த நூல் ஈரோடு மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் திரு த. ஸ்டாலின்குணசேகரன் எழுதிய ‘மெய்வருத்தக் கூலிதரும்’ என்ற வானொலி உரைநூல்.

அண்மையில் நடைபெற்ற பத்தாவது ஈரோடு புத்தகத்திருவிழாவில் கலந்துகொண்டு சிங்கப்பூர் சார்பாக பெருநிதியையும் வழங்கிவிட்டு திரும்பிய நண்பர் ,கணினி பொறியாளர், கவிஞர் இறைமதியழகன் அந்நூலை எனக்கு 17.08.2014 அன்று சிங்கப்பூர் எழுத்தாளர்கழகத்தின் கதைக்களம் நிகழ்ச்சியில் வழங்கினார்.

அன்றையதினம் சிறப்புரையாற்றியவர் கவிஞர் உதயை மூ.வீரையன்.

 

கனமின்றியும் கச்சிதமாகவும் வெளிவந்திருக்கும் அந்நூல் என்னை வாசிக்கத்தூண்டியது.

இப்போதும் என்னைக் கவியரங்க பட்டிமன்றத்திற்கு தயார்செய்துகொண்டுதான் இருக்கிறேன்.

இடைவேளையில் இதை முடிக்கமுடியுமா?என்ற உள்மனக்கேள்வியோடு 18.08.2014 இரவு ‘மெய்வருத்தக்கூலி தரும்’நூலை கையிலெடுத்தேன்.

161 பக்கங்களில் 55 கட்டுரைகள் அடங்கியநூல்.

மலைப்போடு கையிலெடுத்து வாசிக்கத்தொடங்கினேன்.

முன்னுரை என்னைக்கவர்ந்தது.

முன்னுரை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அது எடுத்துக்காட்டு.

மிகையின்றி,சொற்களின் தடுமாற்றமின்றி,வாக்கியச்செம்மையோடு அமைந்திருந்தது.

படித்துமுடிக்கும்போதுதான் தெரிந்தது எழுதியவர் என் நண்பர்.

இருவரும் திருச்சி வானொலியில் ஒன்றாகப்பணியாற்றினோம்.

நாங்கள் கேபிஎஸ் என்றுதான் அழைப்போம்.

ஆனால், பெயரை மிக திருத்தமாக க.பொ.சீநிவாசன் என்று வெளியிட்டிருக்கிறார். நடுவண் அரசில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒருவர் தன்பெயரை இவ்வளவு அழகாகக்குறிப்பிடுவது வியப்புடன்கூடிய பெருமையாகும்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அழகாக வெளியிட்டிருக்கிறது.

தலைப்பும் அட்டைப்படமும் வண்ணமும் வடிவமைப்பும் என்னைக்கவர்ந்தன.

கையிலெடுத்து வாசிக்கத்தொடங்கினேன்.

வாசித்துக்கொண்டே இருந்தேன்.

இருபத்திரண்டாவது கட்டுரையான மக்களின் கவிஞர் என்ற கட்டுரையில் வந்து நின்றேன்.

மீண்டும் 19.08.2014 இரவு எடுத்தேன்.

20.08.2014 காலை எட்டு மணிக்கு முடித்தேன்.

எடுத்தேன் முடித்தேன் என்ற நிலை இன்னும் எனக்கு வாய்க்கவில்லை.

காரணம் இடையிடையே பலபணிகள்.

ஒவ்வொரு கட்டுரையும் வெவ்வேறு செய்திகளைச்சொல்கிறது.

ஐந்துநிமிட வானொலி உரையாக அமைந்துவிட்டதால் படிப்பவர்களுக்கு மலைப்பும் இல்லை.சலிப்பும் இல்லை.

இரண்டுபக்கத்தில் தவிர்க்க முடியாத தகவல்கள்.

சிங்கப்பூர் வானொலியில் ‘எளிமை இது இனிமை’ என்ற தலைப்பில் 101 வாரமும், ‘பாடல்தரும் பாடம்’ என்ற தலைப்பில் 42 வாரமும், ‘வாழநினைத்தால் வாழலாம்’ என்ற தலைப்பில் 52 வாரமும் பேசினேன்.

குறைந்தநேரத்திற்குத் தயார்செய்யும்போது நீர்த்துப்போன வார்த்தைக்கும் வாக்கியத்திற்கும் இடமில்லை.

இல்லையேல் பாலில் நீர் கலந்த கதையாகிவிடும்.

ஆனால், இன்றைக்குச்சிலர் நீரையே பாலாகவிற்கவும் வந்துவிட்டார்கள்.

இந்த ஆபத்தான காலகட்டத்தில் திரு த. ஸ்டாலின் குணசேகரன் தகவல் அடர்த்தியோடு நீட்டாமல் முழக்காமல் கச்சிதமாகத் தந்திருக்கிறார்.

எழுத்தும் மொழியும் இயல்பாக இருக்கிறது.

சொல்விளையாட்டிற்கு இடமின்றிச் சொல்லிச்சென்றிருக்கிறார்.

எனினும் அவ்விளையாட்டு தாமாக நிகழ்ந்திருக்கிறது ஓரிடத்தில். எடுத்துக்காட்டு:

“ என்ன விலை கொடுத்து விடுதலையைப்பெற்றோம் என்று அனைத்து இளைஞர்களும் முழுமையாக அறிகிறபோதுதான் என்ன விலைகொடுத்தும் இது பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணமும் இக்கால இளைஞர்களுக்கு உருவாகும்”

ஒரு ‘ம்’ என்ற எழுத்தைப் பொருத்தமான இடத்தில் கையாண்டதால் ஏற்படும் விளைவையும் அதன்வழி கிடைக்கும் உணர்வையும் நாம் பெற முடிகிறது.

படித்த பயனுள்ளவற்றை பதிவுசெய்வது எனக்கும் உங்களுக்கும் பயன்படும் எனக்கருதி ஒவ்வொரு கட்டுரையிலும் நான் அடிக்கோடிட்ட பகுதிகளைத்தந்தால் போகிறபோக்கில் படிக்கிற உங்களுக்குப் பயன் படும்.

நடைபெற்ற புத்தகத்திருவிழாவுக்கு சிறப்பாக வருகைதந்தவர் முன்னாள் மேதகு குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள்.

அவருடைய சொற்றொடரான ‘நாம் தூங்குகிறபோது காண்பதல்ல கனவு.’ ‘நம்மைத்துங்கவிடாமல் செய்வதுதான் கனவு’ அனைவரும் மனத்தில் நிலைநிறுத்தவேண்டிய ஒன்று.

எவ்வளவு நுட்பமான விளக்கம்.

அது இடம்பெற்ற இரண்டாவது கட்டுரையில் இலட்சிய கனவுக்கு மரணமென்பதே இல்லை.

ஒவ்வொரு இளைஞனின் கனவிலும் உண்மையும் சத்தியமும் ஊடும்பாவுமாக இருப்பின் தனிப்பட்ட மனிதனின் கனவாக இருந்தாலும் சமுகக்கனவாக இருந்தாலும் அது நிறைவேறும்; வெற்றிபெறும் என்று முடிக்கிறார்.

ஒரு பொன்மொழிக்கு எவ்வளவு ஆற்றல் உள்ளது என்பதை ஒரு நாளிதழ்ச்செய்தி நிருபித்துள்ளது.

குளிரால் வாடி இருவர் இறந்தசெய்திகேட்டு உடனே ஐநூறுபோர்வையை வரவழைத்து யாருக்கும் தெரியாமல் நள்ளிரவிலேயே நண்பரை அழைத்துக்கொண்டு எங்கெல்லாம் மனிதர்கள் ஆதரவற்றவர்களாகவோ, அனாதைகளாகவோ இருக்கிறார்களோ அவர்களைப்பார்த்துத்தேடி அவர்களுக்குப்போர்த்திய செய்தி நெஞ்சைப்பிசைகிறது.

எங்கேயும் அவர்களைக் (பிச்சைக்கார்ர்கள்) குறைவாகக்குறிப்பிடாதது மனித நேயத்தின் நுட்பமாகும்.

ஒரு செய்தியின் பாதிப்பில் விவேகாநந்தரின் கூற்றைநிரூபித்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது.

விவேகாந்ந்தர் சொன்ன செய்தியென்ன?

“நீ யாருக்கு உதவிசெய்கிறாயோ அவர் முகம் உனக்குத்தெரியக்கூடாது. உன்முகம் உன்னிடம் உதவிபெறக்கூடியவர்க்குத் தெரியக்கூடாது.”

இது இன்றிலிருந்து நாம் கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகும்.

தூக்குமேடைக்குப்போகும்போதும் படித்துக்கொண்டிருந்த ‘பகத்சிங்’ பற்றிய கட்டுரை படிக்கும் இளைஞர்களைப்பாதிக்கும்.

1931 மார்ச்ச் 23ஆம் தேதியை இனி எப்படி மறக்கமுடியும்.

சிறை அதிகாரி தூக்குமேடைக்கு அழைக்கும்போது வலது கையிலே புத்தகத்தைவைத்துக்கொண்டு அதிகாரியைப்பார்த்து “கொஞ்சம் பொறுத்திரு.நான் இப்போது இந்தப்புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனைச் சந்தித்து உரையாடிக்கொண்டிருக்கும் நேரமிது” என்று பகத்சிங் சொன்னதையும் மறக்கமுடியுமா?

அப்பழுக்கற்ற வ.உ.சியும் சுப்ரமணியசிவாவும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு சுதந்தர எழுச்சியை உருவாக்கியகதை மெய்சிலிர்க்கவைக்கிறது.

இவருடைய கட்டுரைகளின் ஆவணமெல்லாம் நம்காலத்தில் நம்முன்னே நடந்தவை.

அவருடைய நட்பிலும் தொடர்பிலும் விளைந்தவை.

அவருடைய அனுபவங்கள் கலந்தவை.

அதில்தான் உண்மை இருக்கமுடியும்.

நூல்களில்படித்த செய்திகளைமட்டும் தொகுத்து கட்டுரையாக வழங்காமல் அன்றாடம் செய்திகளாகவந்து வரலாறாகிப்போனவற்றைப்பயன்படுத்தி கட்டுரை யாத்திருப்பது உண்மை, சத்தியம், அர்ப்பணிப்பு, தொண்டு இவற்றிற்கு அடிப்படை என்பதையே காட்டுகிறது.

தலைமை ஆசிரியராகப் பட்டம் சூட்டப்பெற்ற பாபர் அலி,

தொ.மு. சியின் படைப்பு அனுபவம்,

நாட்குறிப்பு எழுதிய ஆனந்தரங்கம்பிள்ளை,

உடன்கட்டை ஏறும் கொடுமை,

அரை செண்ட் நிலம் இல்லாத விடுதலை வீரர் ஈரோடு எம்.ஏ.ஈஸ்வரன் அவர்களால் உருவான 2,07,000 ஏக்கர் விளைநிலம்,

உலகைமாற்றிய புத்தகங்கள் பற்றிய செய்தி,

அன்றைய ‘ஹிந்து’ இதழில் வெளிவந்த “A barber refuses to shave” என்ற செய்தியின் அடிப்படை,

விமர்சனம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஜீவா கூறிய விளக்கம்,

இளைஞர் ஜீவாவை இந்தியாவின் சொத்தென்று கூறிய மகாத்மா காந்தி,

‘இலக்கியமே உலகின் இதயம்’ என்ற மாக்ஸிம் கார்க்கி,

மக்கள் கவிஞர் பற்றிய செய்தி,

பெர்சனாலிட்டி என்ற ஆங்கிலச்சொல்லுக்கு ‘ஆளுமை’ என்று பொருள் தந்த தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெரியசாமி தூரன்,

வ.உ.சி பாரதியின் சந்திப்பு, அதுமட்டுமல்ல ‘பாரதியைக் கம்பனாகவும் என்னைச்சோழனாகவும் நினைக்கும்படி செய்தது’ என்ற வ.உ.சியின் வாக்குமூலம்,

கொடுக்கும் மனம் படைத்த எம்ஜிஆர், என்.எஸ்.கே,

நன்றிக்கடனாக தம் பிள்ளைக்கு ‘வாலேஸ்வரன்’ என பெயர் சூட்டிய வ.உ.சி,

இப்படி எண்ணற்ற விரல்நுனியில் வைத்திருக்கவேண்டிய தகவல்களோடு வெளிவந்திருக்கிறது இந்நூல்.

வாய்ப்புகளை நழுவவிடக்கூடாது என்பதைச்சுட்டுவதற்கு வாய்ப்புகளை நழுவவிட்டு ஏங்கும் கவிஞர் மு.மேத்தாவின்

“வரம் கொடுக்கும் தேவதைகள்

வந்தபோது தூங்கினேன்

வந்தபோது தூங்கிவிட்டு

வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்

 

 

கரம்கொடுக்கும் வாய்ப்புகளை

கைகழுவி வீசினேன்

கைகழுவி வீசிவிட்டு

காலமெல்லாம் பேசினேன்”

கவிதை வரிகளைப் பொருத்தமாக, மனதில்படும் வகையில் கையாண்டிருக்கிறார் ஆசிரியர்.

இந்திய தேசியப்படையில் பங்கேற்ற கேப்டன் லட்சுமி அவர்களைச்சந்தித்து பேட்டிகண்ட முறையை நேரில் விளக்கியபோது கண்கலங்கியிருக்கிறேன்.

அவரைபேட்டிக்கண்டு அதன்வழி ‘ இந்திய வீரங்கனைகளில் 90 விழுக்காட்டினர் தென்னிந்தியாவைச்சேர்ந்தவர்கள். அதிலும் 75விழுக்காட்டினர் தமிழ்ப்பெண்கள்” என்ற செய்தி நமக்கு பெருமையையும் பெருமிதத்தையும் தருகின்றது.

தன்னுடைய அனுபவம்சார்ந்த செய்திகளைப்பகிர்ந்து அவை உலகத்திற்கான செய்திகளாக்கிய நூலாசிரியரைப் பாராட்டவேண்டும்.

தன் தாத்தாவிடமிருந்து அவர்பெற்ற செய்தி உலகச்செய்தியாகிவிடுகிறது.

மூன்று தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு வசதியிருந்தும் உழைக்காமல் சாப்பிடகூடாது என்பதை “பாடுபடாமல் எப்படி சோறு உங்கிறது” என்ற தாத்தாவின் கிராமியமொழி எத்துணைப் பொருள்பொதிந்தது என்பதை உணரவைக்கிறார்.

இது உலகமொழியல்லவா.?

இது உலகத்துக்கான மொழியல்லவா?

ஒவ்வொரு மனிதனும் உணரவேண்டிய மொழியல்லவா?

சென்னையில் இயங்கும் ஸ்ரீராம் ஸ்ட்டுடியோவின் உரிமையாளர் எம்.சி. மாரியப்பன் சந்தித்த விபத்து, அதிலிருந்து அவர் மீண்டு சாதித்த சாதனை ஒவ்வொரு மனிதனும் நிகழும் நிகழ்வுகளை எப்படி எடுத்துக்கொண்டு முன்னேறவேண்டும் என்பதற்குச்சான்றாகும்.

வீரத்தாயின் அன்பளிப்பு,

கைதியே கலெக்டர் ஆன செய்தி,

“தமிழர்களுக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என்ற காந்தியடிகளைச் சொல்லவைத்த தமிழர்களும் பாலசுந்தரமும்,

எந்தச்சூழ்நிலையிலும் கல்வி நிலையங்கள் மூடப்படக்கூடாது என்பதற்கான தகவல்,

88 வயதில் 121 படைப்புகளை உருவாக்கிய எழுத்தாளர் ஆர்.எஸ்.ஜேக்கப்,

தவிர்க்கவேண்டிய பொறாமைத்தீ,

கிராமமே பரிசாக்க்கிடைத்தும் வேண்டாமென்ற உ.வே.சா,

இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பாலிடெக்னிக் கல்லூரி,

ஒரே இரவில் அடித்தல் திருத்தலின்றி நாடகம் எழுதிய சங்கரதாஸ் சுவாமிகள்,

பன்முக ஆளுமைகொண்ட99 வயது இளைஞர் ஐ.மாயாண்டிபாரதி போன்றோரின் தரிசனம் தந்த நூல் ‘மெய்வருத்தக்கூலிதரும்’

பாரதியைத் திசைமாற்றிய சம்பவத்தோடு நூல் நிறைவுபெறுகிறது.

ஆனால்,

வ.உ.சிக்கு இரட்டைஆயுள் தண்டனையை நீதிபதி வாசித்தபோது அதாவது 35 வயது இளைஞருக்கு 45 ஆண்டு சிறைத்தண்டனை அறிவித்தபோது அவருடைய அன்புத்தம்பி மீனட்சிசுந்தரத்துக்கு புத்தி பேதலித்துவிட்டது.

சிறையிலிருந்து விடுதலையானதும் சென்னையில் அரிசிக்கடை வைத்து வியாபாரம் செய்தார்.

திலகர் மாதந்தோறும் வ.உ.சிக்கு ஐம்பது ரூபாய் அனுப்பினார். இந்தக்காலகட்டத்தில் தம்பி மீனாட்சிசுந்தரம் பைத்தியமாக அலைவதுகேட்டு கலங்கிப்போகிறார்.

துணிக்கடைக்காரர்களுக்கும் உணவுக்கடைக்காரர்களுக்கும் வ.உ.சி கடிதம் எழுதியதைப்படிக்கும்போது என்னையறியாமல் அழுதுவிட்டேன். அழுதுகொண்டுதான் புத்தகத்தைப்படித்து முடித்தேன்.

நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்த கப்பலோட்டியதமிழன் படம்பார்த்து சக்திகிருஷ்ணசாமி வசனத்தில் அழுதவன் நான்.

நடிகர்திலகம் மறைந்தபோது நான் எழுதிய கவிதை இதுதான்:

“ எந்தக்கோணத்தில்

படமெடுத்தாலும்

ஒருகோணலுமில்லாத

கப்பலோட்டிய தமிழன்”

இங்கே நடிகர்திலகத்தைவிட வ.உ.சி அவர்களைத்தான் நான் படம்பிடித்திருக்கிறேன்.

எந்தச்சூழலில் வ.உ.சியைப்படிக்கிறபோதும் நம் உள்ளம் தூய்மையாகி எந்தத்தியாகத்திற்கும் நாம் தயாரகிறோம் என்பதே உண்மை.

கோவையிலும் ஈரோட்டிலும் இன்னும் பிற இடங்களிலெல்லாம் இருக்கிற வ.உ.சி மைதானங்களைப், பூங்காக்களைப் பார்க்கிறபோது, நினைக்கிறபோது அவரது தியாகநெஞ்சம், அப்பழுக்கற்ற வாழ்க்கை, ஆழந்த தமிழறிவு, வெள்ளையனை எதிர்த்த வீரம், அவர்காட்டிய நன்றி எல்லாம் தோன்றி நம்மையே புதுப்பித்துக்கொள்ளச்செய்கிறது.

இந்நூலில் புகழ்பூத்த என்ற சொல் அதிகம் இடம்பெற்றதாக உணர்கிறேன்.

அது ஒன்றும் குறையில்லை.

ஒற்றுப்பிழை ஆங்காங்கே தென்படுகிறது.

இவைதவிர இந்நூல் என்னை படிக்கவைத்த நூல்.

பையிலேயே வைத்திருக்கவேண்டிய நூல்.

கண்ணீர் கசியவைத்தநூல்.

‘மெய்வருத்தக்கூலிதரும்’ நூலைப்படித்ததினால் நிறைய கூலிபெற்றேன் என்ற மனநிறைவைப்பதிவுசெய்கிறேன்.

 

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)22.08.2014

Series Navigation
author

பிச்சினிக்காடு இளங்கோ

Similar Posts

3 Comments

 1. Avatar
  கிருத்திகா says:

  செப்டெம்பர் மாதக் கதைக்களத்தில் ‘மெய் வருத்தக் கூலி தரும்’ என்ற புத்தகத்திற்கு விமர்சனம் திண்ணை.காம் வலைப்பதிவில் உள்ளது என்று அறிந்தவுடனேயே, உடனே படித்துப்பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களில் ஒன்று என்பதால் கண்டவுடன், உடனே வலைத்தளத்தில் முழுவதும் படித்தேன்.

  புத்தகத்தில் நான் உள்வாங்கிக் கொண்டிருக்கும் கருத்துகளை ஒத்து மிக அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள். ஒவ்வொரு கட்டுரையிலும் ஆழமான கருத்துகள் உள்ளன என்பதை “இரண்டுபக்கத்தில் தவிர்க்க முடியாத தகவல்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

  அது மட்டுமல்லாமல் தான் படித்ததில் முக்கியம் எனக் கருதும் வரிகளை இங்கே கொடுத்துள்ளார். இதனால், உடனே அந்தப் புத்தகத்தை வாங்கி நாமும் படிக்க வேண்டும் என்று வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும்.

  தூக்குமேடைக்குப் போகும்போதும் படித்துக்கொண்டிருந்த ‘பகத்சிங்’ பற்றிய கட்டுரை என்னை அசைத்தது. அது இங்கேயும் குறிப்பிடப் பட்டிருப்பது மிகவும் அருமை என்று கருதுகிறேன்.

  எளிமையாக நடையில் இந்த விமர்சனம் எழுதப்பட்டிருப்பதால், எல்லோரும் சலிப்பில்லாமல் படித்து கருத்துகளை உள்வாங்க வகையாகிறது. நிறைய நிறைய தகவல்களை இங்கே பகிர்ந்திருக்கிறார். புத்தகமும் அருமை. அதனை இங்கே நமக்கு அறிமுகப்படுத்திருக்கும் விதமும் அருமை.

  “இந்திய வீரங்கனைகளில் 90 விழுக்காட்டினர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதிலும் 75 விழுக்காட்டினர் தமிழ்ப்பெண்கள்” என்ற செய்தியை இவருடைய விமர்சனத்தில் படித்தவுடன் மனம் நெகிழ்கிறது. அந்தக் கட்டுரையை நான் இன்னும் படிக்கவில்லையே, அந்தக் காலத்தில் நான் வாழவில்லையே என்ற ஏக்கங்கள் தோன்றுகின்றன.

  அடையாளக் குறியுடன் மீண்டும் தொடரலாம் என்று நான் தள்ளி வைத்திருக்கும் புத்தகத்தை உடனே கையிலெடுத்து படிக்கத் தூண்டுகிறது இந்த ஆய்வுரை.

 2. Avatar
  கௌசல்யா says:

  நான் இந்த நூலை வாசிக்கவில்லை. ஆனால் பிச்சினிகாடு இளங்கோ ஐயா அவர்களின் கண்ணோட்டத்தையும் கிருத்திகா அவர்களின் பதிவையும் வாசித்த பின்பு இந்த நூலைக் கட்டாயம் வாசித்தே ஆக வேண்டும் என்ற ஆவல் அதிகமாக எழுகிறது. நானும் இதை வாசித்த பின்பு உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

 3. Avatar
  arun narayanan says:

  Wonderful review of a book. Your review brings in tears when you referred to V.O.C. Kindly, provide the publishers and the price.
  We pray that your reviews keep appearing in Thinnai and educate us more and more.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *