செவ்விலக்கியங்களில் ‘கூந்தல்’

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

  1. Mail: Malar.sethu@gmail.com

கூந்தல், மகளிரின் மங்கலப் பொருள்களான தாலி, வளையல், மஞ்சள், குங்குமம், பூ, தாலி சிலம்பு, மெட்டி முதலியவற்றைப் போன்று புனிதமானது. பெண்கள் அணியும் புறப்பொருள்கள்.
கற்புடைய பெண்கள் அவற்றை அணிவதால் சிறப்பு உண்டாகிறது. ஆனால்…. கூந்தலோ, பிறக்கும்போதே ​பெண்ணுடன் சேர்ந்தே பிறந்து, அவள் வளரும்போது தழைத்து நீண்டு அவளுடனே சேர்ந்து வளர்ந்து…. அவள் முதுமை அடையும் காலத்து தானும் நரைத்து அவளுடனே சேர்ந்து மறையும் தனிச் சிறப்பு உடையது. இக்கூந்த​லைப் பற்றிய பதிவுகள் ​செவ்விலக்கியத்தில் பலவிடங்களில் காணப்படுகின்றன. அ​வை பழந்தமிழரின் வாழ்க்​கை​யையும், பண்பாட்​டையும் எடுத்து​ரைப்பனவாக உள்ளன.

ஆண் – ​பெண் த​லை மயிர் வ​கைப்பாடு

கூந்த​லை வழக்கில் மயிர் என்றும் குஞ்சி என்றும் வழங்குவர். மயிர் என்பது இன்று இழிவான ஒன்றாகக் கருதப்படுவதால் முடி என்று மக்கள் கூந்த​லைக் குறிப்பிடுகின்றனர். கரு​கரு​வென்ற அடர்தியான கூந்த​லைப் ​பெண்கள் ​பெற்றிருப்பது சிறப்பிற்குரியதாகும். இத​னை,

“வாரிருங் கூந்தல் வயங்கி​ழை ஒழிய”

என்று பட்​டினப்பா​லை குறிப்பிடுவது ​நோக்கத்தக்கது.

பொதுவாக, ஆண் ​பெண் இருபாலார்க்கும் உரிய தலை மயிருள், குதிரைவாளி, சாமை போன்றும், கமுகோலை போன்றும். மயில் தோகை போன்றும் அடர்ந்தும் தழைத்தும் நீண்டும் இருப்பதால் பெண்கள் தலை மயிரை ஓதி, குழல்,கூந்தல், கூழை, என்றும் கூறினர். ​பெண்கள் தங்களின் கூந்த​லை ஐம்பாற் கூந்தல் என்றும் அலங்கரித்தனர்.

மயிலின் உச்சி போன்று சிறிதாகவும் சிறுமையானதாகவும் இருந்ததினால், ஆண்களின் தலைமயிர் குடுமி என்றும் குஞ்சி என்றும் கூறப்பெற்றது. கோவலன் தலைமயிரைக் ‘குஞ்சி’ என்றும், கண்ணகியின் தலைமயிரை ‘வார்குழல்’ என்றும் இளங்​கோவடிகள் குறிப்பிடும் வரிகளை சிலப்பதிகாரம்- மதுரை காண்டத்தில் காணலாம். ‘கதுப்பு’ என்னும் சொல் ஆண் பெண் இரு பாலரின் தலை முடியையும்  குறிக்கிறது.

மகளிரும் கூந்தலும்

கூந்தலையும் மகளிரையும் நம் முன்னோர்கள் ஒன்றாக கருதினர். அதனால்தான், மகளிரைத் தழுவுதலைக் கூந்தல் கொள்ளுதல் என்றனர். பிற ஆடவர் கை தம் கூந்தல் மீது படுவதைக்கூட கற்புள்ள மகளிர் ஒப்புவதில்லை. மாந்தர், கூந்தலைக் கோதி கிளர்ச்சி கொள்ளுதல் போல புறா, கோழி போன்ற பறவை இனங்களும் தம்மு​டைய அலகால் துணைகளின் சிறகைக் கோதி உணர்வு கொள்ளச் ​செய்கின்றன.

கணவன் உடன் இருக்கும்போது மட்டும் ​பெண்கள், கூந்தலுக்கு நறுமணம் தடவி, வகிர்ந்து வாரி மலரி​னைச் சூடி கூந்தலை அழகுபடுத்திக் கொள்கிறார்கள். தலைவன் பிரிவின்போதும் மறைந்த (இறந்த) பின்னும் உள்ளக் கிளர்ச்சியை உண்டாக்கும் மலர் சூடுதலை தவிர்க்கிறார்கள்.

கணவன் இறந்தவுடன் மகளிரின் கூந்த​லைக் க​​ளைந்து விடுகின்றனர். ​​கைம்​மையுற்ற ​பெண்கள் கூந்த​ல் க​ளைந்த​தை,

“கூந்தல் ​கொய்து, குறுந்​தொடி நீக்கி”(புறம்.,250)

என்று தாயங்கண்ணியார் குறிப்பிடுகின்றார். வயது முதிர்ந்து இள​மை கடந்த நி​லையில் த​லைந​ரைத்த ​பெண்கள் தங்க​ளின் கூந்த​லை நறுமணப் ​பொருட்க​ளைத் தடவி பாதுகாக்க மாட்டார்கள். இத​னை,

“நறுவி​ரை துறந்த ந​ரை ​வெண் கூந்தல்” (புறம். 276)

என்று மது​ரைப் பூதன் இளநாகனார் பாடுகின்றார். வயது முதிர்ந்த ​பெண்களின் கூந்த​லைக் குறிப்பிடுகின்ற​போது புலவர்கள்,

“மின் உண் ​கொக்கின் தூவியன்ன

வாள் ந​ரைக் கூந்தல் முதி​யோள்” (புறம்.277)

 

என்று குறிப்பிடுகின்றனர்.

காப்பியங்களில் கூந்தல்

பெண்களை முதன்மைப்படுத்திக் கொள்ளும் காப்பியங்களே அதிகம். காரணம் காப்பியங்களுக்கு அழகு சேர்ப்பவர்கள் பெண்கள். அவர்களுக்கு அழகு தருவதோ,  அவர்தம் கூந்தல். எல்லாக் காப்பியங்களிலும் காரிருங் கூந்தலைப் பற்றிக் கவிஞர்கள் அதிகம் பேசுகின்றனர்.

குறிப்பாக மகாபாரதத்தில் இடம்​பெறும் பாஞ்சாலியின் சபதம் காவியத்தின் மிக முக்கியப் பகுதி. பாஞ்சாலியின் சபதமாக கூந்தலே முதன்மை வகித்தது.  தன்​னை அவமானப்படுத்திய துரி​யோத​னனையும் அவனது தம்பி துச்சாதன​னையும் அழித்து அவர்களது குருதி​யைத் த​லையில் தடவிக் குளித்தபின்​பே தனது கூந்த​லை அள்ளி முடிப்பதாகச் பாஞ்சாலி ஆ​ணையிடுகிறாள். பின்னர் அதன்படி​யே ​செய்து தனது    ஆ​ணை​யை நி​றை​வேற்றிக் ​கொள்கிறாள்.

பாரதப் ​போர் முடிந்து பாச​றையில் பாண்டவர்கள் தங்கியிருந்த​போது கண்ணன் பாண்டவர்க​ளை மட்டும் தனியிடத்திற்கு இரவில்   அ​ழைத்துச் ​சென்று தங்க ​வைக்கின்றான். அப்​போது தனது தந்​தையின் இறப்பிற்குக் காரணமான திட்டதுய்ம​னையும், பாண்டவர்க​ளையும் அவர்தம் ப​டைவீரர்க​ளையும் அழித்​தொழிக்கக் கருதிய அசுவத்தாமன் தமது நண்பர்களுடன் இர​வோடு இரவாகப் பாச​​றைக்கு வந்து அங்கு துயின்றவர்க​ளைக் ​கொன்றுகுவித்துவிட்டுச் ​செல்கின்றான்.

விடிந்ததும் பாச​றைக்குத் திரும்பிய பாண்டவர்கள் நிகழந்த​தைப் பார்த்து அதற்குக் காரணமான அசுவத்தாம​னை அழித்​தொழிக்கக் கண்ணனுடன் அசுவத்தாமன் தங்கியிருந்த இடம் ​நோக்கி வருகின்றனர். ஆசிரமத்தில் மரத்தடியில் ​யோகத்தில் அமர்ந்திருந்த அசுவத்தாம​னை அருச்சுனன் ​போருக்க​ழைக்கின்றான். ​போர் ந​டை​பெறும் நி​லையில் அருச்சுன​னைப் பார்த்து கண்ணன், “அருச்சுனா அசுவத்தாம​னைக் ​கொல்லா​தே. அது பாவமான ​செயலாகும். அவன் தனது த​லைமுடியில் அணிந்துள்ள மணி​யை அறுத்து எடுத்துக் ​கொண்டு வந்துவிடு. அது​வே அவ​னைக் ​கொன்றதற்குச் சமமாகும்” என்று கூறினான். அருச்சுனனும் அவ்வா​றே ​செய்தான். அந்தணர்களின் ​பெரியவர்களின் கூந்த​லை அறுப்பது அக்காலத்தில் ​கொ​லை ​செய்வதற்கு ஒப்பாகக் கருதப்பட்ட​தை இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது.

கூந்தலும் உணர்வுகளும்

கூந்தல், பெண்களின் மன உணர்வுக​ளை ​வெளிக்காட்டுவதற்கு உறுது​ணையாக உள்ளது. ​பெண்கள் தங்களின் மகிழ்ச்சி, அயர்ச்சி, இன்பம், துன்பம், சினம், வேட்கை முதலான மன
உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவியாக கூந்தல் கையாளப்படுகிறது.

சிலம்பில், கண்ணகியின் கூந்தல் ஒப்பனையை ‘புரிகுழல் அளகத்து’
என்றும், ‘பல்லிருங் கூந்தல் சில்மலர் அன்றியும்’ என்றும், ‘ தாழிருங் கூந்தல் தையால் ‘ என்று நீண்டு தாழ்ந்த கரிய அவளுடைய கூந்தலை புகழ்கிறார். தனது கணவனுடன் கண்ணகி ஒன்றாக இ​ணைந்து வாழ்திருந்த​போது கூந்த​லை அழகுபடுத்திக் ​கொண்டாள் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.

கோவலன், கண்ணகியை மறந்து மாதவி இல்லம் சென்றமையால் கண்ணகி தன் கூந்தலுக்கு நெய் இடுவதில்லை; அதனால் கூந்தல் மணத்தை இழந்தது. இதனை இளங்கோவடிகள்

“தவள வால்ந​கை ​கோவலன் மறப்ப

………………………….. ………………………………….. …………………………..

மையிருங் கூந்தல் நெய்யணி மறப்ப”

 

என்று கூறுகிறார். ​கோவலன் தன்​னை மறந்து மாதவியின் இல்லத்தில் வதிந்த​போது கண்ணகி தன்​னை அழகுடுத்திக் ​​கொள்ளாது துயருற்றதாக இளங்​கோவடிகள் எடுத்தியம்புகிறார்.

பெண்களின் கூந்தலும் மணமும்

​பெண்களின் கூந்தலுக்கு இயற்​கையில் மணம் உண்டா? இல்​லையா? என்ற ஐயத்​தை,

“​கொங்கு​தேர் வாழ்க்​கை அம்சி​றைத் தும்பி

காமம் ​செப்பாது கண்டது ​மொழி​மோ?

பயிலியது ​கெழீய நட்பின் மயிலியல் ​

செறி​யெற்று அரி​வைக் கூந்தலின்

நறியவும் உள​வோ நீ அறியும் பூ​வே”

 

என்ற பாடல் தருவதாக அ​மைந்துள்ளது. இப்பாட​லை ​வைத்துத் திருவி​ளையாடற் புராணக்க​தை அ​மைந்திருப்பது ​நோக்கத்தக்கது.

தனது காதலி​யைப் புகழ்ந்து​ரைக்கும் காதலன் வண்​டைப் பார்த்து, “அரி​வைக் கூந்தலின் நறியவும் உள​வோ நீயறியும் பூ​வே?” என்று வினவுகிறான். பூக்கள் ​தோறும் ​சென்று ​தே​னை உண்ணும் வண்​டே! என்னு​டைய த​லைவியின் கூந்த​லைப் ​போன்று நறுமணம் கமழக் கூடிய மலர்கள் ஏ​தேனும் உண்டா? என்று வினவுவது ​போன்று இப்பாடல் அ​மைந்துள்ளது. இப்பாட​லை ​வைத்​தே நக்கீரருக்கும், சிவபெருமானுக்கும் இ​டையில் பெரும் விவாத​மே ஏற்பட்டது என்பது ​நோக்கத்தக்கது.

பாண்டிக்​கோ​வையானது,

“காரிருங் கூந்தல்…. ”

“குழல்போற் கமழும் மதுமலரே…”

“கருங்குழல் போலுளவோ விரைநாறுங் கடிமலரே…”

“மங்கை வார்குழல்போல் நாற்றமுடைய வுளவோ

வறிவு நறுமலரே…”

 

என்று பலவாறு மழைக்கண் மகளிரின் நறுங்கூந்தலைப் புகழ்கின்றது. ​மேலும்  மலரைவிடக் கருங்கூந்தலின் மணம் மேம்பட்டது என்று கூறிப் ​பெண்களின் கூந்தலுக்கு நறுமணம் உண்டு என்றும் இந்நூல் ​மொழிகிறது.

 

சானகியின் கூந்தலில் மயங்கிய இராவணன்

மயிலுக்குத் ​தோ​கை அழகு. மயிற்சாயல் மகளிருக்குக் கூந்தல் அழகு. ஆண் மயில் ​தோ​கைவிரித்து ஆடுவ​தைப் பார்த்த ​பெண் மயில்  மயங்கி தானாக​வே ஓடிவந்துவிடும். இது இயற்​கையின் இனிய சங்கம நிகழ்ச்சியாகம். கம்பரின் காவியத்தில் கூட , இராவணன் மாண்ட​போது, மண்டோதரி,

”வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த
திருமேனி மேலும் கீழும்
எள் இருக்கும் இடன் இன்றி உயிர் இருக்கும்
இடன் நாடி ழைத்த வாறே?
‘கள் இருக்கும் மலர்க்கூந்தல்’ சானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும் எனக்கருதி உடல் புகுந்து
தடவிதோ ஒருவன் வாளி ! ”

என்று புலம்புகிறாள்.

சிவனுடைய சடை முடியில் வெள்ளெருக்கம் பூ இருந்தது.
அது மயக்கத்தக்க பூவோ, மயங்கத் தக்க சடை முடியோ அல்ல;
தலால், இராவணன் மயங்காது அங்கே வீரம் காட்டினான்.
சானகியின் கூந்தலோ மலர்க் கூந்தல்; அதிலே கள் இருந்தது.
அதனால் இராவணன் மயங்கினான்; மடிந்தான். மலர்க் கூந்தலின் அழகி​னைக் கண்டு மயங்கியதால் இராவணன் மாய​வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. ஆக மகளிரின் நீள் கூந்தல் மயக்கம் தரும் என்ப​தை கம்பர் வழி நாம் உணரலாம்.

கூந்தலின் தன்​மையும் அழகும்

சங்க கால இளங்கீரனார் என்னும் புலவர் குறுந்தொகையில் கூந்தலைப் பற்றிப் பாடியுள்ளார். பால்வ​ரைத் ​தெய்வம் கூட்டுவித்த
ஊழின் வலிமையால் தலைவியைக் கண்டு காதல் கொண்டான், தலைவன். அவள் அருகில் அவன் நின்று பேசும்போது அவளுடைய கூந்தலின் தன்மையை உணர்ந்து,

“யானயந் துறைவோன் தேம்பாய் கூந்தல்

வளங்கெழு சோழர் உறந்தைப் பொருந்துறை

நுண்மணல் அறல் வார்ந்தன்ன

நன்னெறி யவ்வே நறுந்தண்ணியவே.”

 

என்று பாடுகிறான்.

 

“யான் விரும்பும் தலைவியுடைய கூந்தல் நாள் மலரின் தேன் பாயும் கூந்தல்; வளமிக்க சோழனுடைய பெரிய துறையில், நுண்மையான கருமணல் நீண்டு படிந்துள்ளதைப்போல் அடர்ந்த நெறிப்பை உடையது; நறுமணமுள்ளது;  மிக்க குளிர்ச்சியுமுடையது ” என்று  குறுந்​தொ​கைத்   த​லைவன் எடுத்து​ரைக்கின்றான்.

 

நீண்ட கூந்தல் ​பெண்களுக்கு மிகுந்த அழகி​னைத் தரும். அதிலும் கருகரு​வென்று இருக்கும் கூந்த​லை​யே யாவரும் விரும்புவர். ​நெருக்கமாக நீண்டு வளர்ந்த கூந்தல் ​பெண்களுக்கு இருந்தது என்ப​தை,

“மணவு​கோப்பன்ன நன்​னெடுங் கூந்தல்”

 

என்று குறுந்​தொ​கையில் ஒள​வையார் சுட்டுவது ​நோக்கத்தக்கது.

 

பாரியின் நண்பரான கபில​ரோ மகளிரின் நீண்ட கூந்தல் மயிலின் ​தோ​கை ​போலிருக்கும் என்ப​தை,

 

“மென்சீர்க்கலி மயிற்கலாவத் தன்ன

இவள் ஒலிமென் கூந்தல் உரியவா , நினக்கு…”

 

என்று தனது பாட​​லொன்றி​லே குறிப்பிடுகின்றார்.  ​மேலும் கபிலரின் நற்றிணைப் பாடல் ஒன்று,

 

”அணிகிளர் கலாவ மைதுவிரித் தியலும்

மணி புரை யெருத்தின் மஞ்ஞை” போல நின்

வீபெய் கூந்தல் வீசுவளி யுளர ”

 

என்று மகளிரின் கூந்தல் குறித்து விவரிக்கிறது.

கூந்தல் எப்​போதும் ​போல் அதன் தன்​மையில் இருக்கும். ஆனால் அதன் வண்ணம் (நிறம்) மட்டும் மாறும். நரைத்த பின்னுருங்கூடப் பெண்டிரின் கூந்தல் நீளம் குறைவதில்லை;
அது நன்கு நீண்டு இருக்கும் என்பதை மணி​மேக​லைக் காப்பியத்தின் ஆசிரியர் சீத்த​லைச் சாத்தனார்,

“நன்னெடுங் கூந்தல் நரை மூதாட்டி…”

என்று விளக்குகிறார்.

அறுபது வயது ஆகிறது. அவள் தலை முழுவதும் நரையாகியது.  இளமையும், காமமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது  என்ப​தை சாத்தனார்,

“ஆறைந் திரட்டி யாண்டுனக் காயதென்,

நாறைங் கூந்தலு நரைவிராவுற்றன,

இளமையும் காமமும் யாங்கொளித் தானவோ ? ”

 

என்று  மணிமேகலைக் காப்பியத்தில் எடுத்து​ரைக்கின்றார்.

 

மேலும் மற்​றொரு நரை மூதாட்டியின் தலையானது,
‘தண்ணறல் வண்ணந் திரிந்து வேறாகி

வெண்மணலாகிய கூந்தல்’

 

என ​வெள்​ளைமண​லைப் ​போன்று காட்சியளித்ததாகக் காப்பியத்தில் குறிப்பிடுகின்றார்.

 

இதிலிருந்து, கரிய அடர்ந்த நீண்ட கூந்தலிருக்கும் இளம்
பருவத்தும் அரிவை தெரிவையாகிய நடு நிலை பருவத்தும் மட்டுமே, மகளிர் காதல் வயப்படுகிறார்கள் என்பதையும், இளமை மறைந்து முதுமை உற்றபோது காமமும் மறைந்து நரை முடியினர் ஆகின்றனர் என்பதையும் இலக்கியப் புலவர்கள் உணர்த்துகின்றனர்.

எண்​ணெய் காணா வாராத த​லை

எண்​ணெய் ​தேய்க்காது த​லை​யை வாராது நாம் விட்டுவிட்டால் அது விரிந்து பரந்து படியாது இருக்கும். அவ்வாறு த​லை​யை உ​டை​யோ​ரைப் பரட்​டைத்த​லையன் என்று வழக்கில் வழங்குவர். ‘பரட்டைத் தலையா’ என்று நாம் பிற​ரைப் பார்த்துக் ​கேலி ​பேசுவது ​போன்று சங்க காலத்திலும் நடந்துள்ளது. படிய வாராமல் சிதறிக் கிடக்கும் தலை முடியைப் ‘ பாறு மயிர்’  என்று புறநானூற்றுப் பாடல் (374) கூறுகிறது. திருமணம் ஆகாத கன்னிப் ​பெண்களின் கூந்த​லை அவளது ​பெற்​றோர் தவிர யாரும் தீண்ட இயலாது என்ப​தை,

“பல்சான்றீ​ரே! பல்சான்றீ​ரே!

குமரி மகளிர் கூந்தல் பு​ரைய

அமரின் இட்ட அருமுள் ​வேலி’’ (புறம்., 301)

 

என்று ஆவூர் மூலங்கிழார் குறிப்பிடுகிறார். பாச​றை​யைச் சூழ்ந்து அ​மைக்கப்பட்ட இடுமுள் ​வேலி​யை யாராலும் எவ்வாறு ​நெருங்கிச் ​சென்று தீண்ட இயலா​தோ அ​தைப் ​போன்ற​தே மணமாகாத ​பெண்ணின் கூந்த​லையாரும் தீண்ட இயலாது என்று புறச் ​செய்தி​யைப் பாடுகின்ற​போது  நயம்பட தமிழ்ப் பண்பாட்டி​னை உணர்த்தும் உவ​மை​யைப் புலவர் எடுத்து​ரைக்கின்றார்.

மயிரும் மனித வாழ்வும்

சில ​சொற்க​ளை உயர்ந்த ​பொரு​ளையும், இழிந்த ​பொரு​ளையும் தரும் மு​றையில் கூறலாம். ஒரு காலத்தில் மயிர் எனக் கூறினால் யாரும் தவறாக எடுத்துக் ​கொள்வதில்​லை. மயிர் என்று குறிப்பிடும்​போது அது இழிவானதாகக் கருதப்படவில்​லை. ஆனால் இன்று   ஒருவ​ரை இழிவுபடுத்த மயிர் என்று கூறுவது வழக்கில் மக்களி​டை​யே காணப்படுகின்றது.

இம்மயிரி​னை முடி என்றும் மக்கள் வழங்குகின்றனர். இத்த​லைமுடியானது த​லையில் இருக்கின்ற வ​ரையில் அ​தை வாச​னைப் ​பொருள்க​ளைத் ​தேய்த்து சீப்பினால் படிய வாரி அத​னைப் பாதுகாப்பர். ஆனால் அம்முடியானது த​லையிலிருந்து கீ​ழே தானாக விழுந்துவிட்டால் அதன் மதிப்பு மிகமிகத் தாழ்ந்துவிடும்.   அது​போன்ற​தே மனிதர்களின் வாழ்க்​கையுமாகும்.

த​லையில் இருக்கின்ற வ​ரையில் த​லைமுடிக்கு மதிப்பு.         த​லையிலிருந்து விழுந்துவிட்டால் அது மதிப்பிழந்துவிடுகின்றது. மனிதன் தனது நி​லையிலிருந்து தவறாத வ​ரை அவனது மதிப்பு சமுதாயத்தில் உயர்ந்து நிற்கும். நி​லைதவறி அவன் வாழ்ந்தால் அவ​னை யாரும் மதிக்க மாட்டார்கள். நி​லைதவறிய மனிதன் அ​னைவருக்கும் கள்வனாய், ஏழ்பிறப்பும் தீயனாகச் சமுதாயத்தால் கருதப்படுவான். அதனால் மானமிழக்காது தன்னி​லையிலிருந்து தாழாது மனிதன் உன்னத வாழ்வு வாழ ​வேண்டும். வள்ளுவர் தந்நி​லையிலிருந்து தவறி சமுதாயத்தில் மதிப்பிழந்​தோ​ரை,

“த​லையின் இழிந்த மயிர​னையர்”

என்று குறிப்பிடுகின்றார்.

இம்மயிரானது தலையிலிருந்து பிறர் எடுக்காமல் தானாகவும் விழும் தன்மை படைத்தது. ‘எண் சாண் உடம்புக்கு தலையே பிரதானம்’ என்பர். மனித உறுப்புகளுள் தலையானது, தலை!
மயிர், உயர்ந்த இடத்திலிருந்து விழும். மேலே போவதில்லை. கீழே வீழ்ந்து கீழ்மை அடைகிறது. அதனால், இழிந்த தன்மை பெறுகிறது. அவ்வளவு உயர்ந்த இடத்திலிருந்த மயிர் ஒரு முறை விழ்ந்தால், மீண்டும் அது உரிய இடத்தில் பொருத்த இயலாது. நற்குடியில் பிறந்தோர், பெருமை உயர்மைக்குரிய தங்கள் நிலையிலிருந்து
எக்காரணம் கொண்டு தாழ்ந்தாலும், உயிர் வாழ மாட்டார்கள். அங்ஙனம் உயிர் வாழாமை​யே ‘மானம்’ எனப்படும்.

அத்தகைய சிறப்புக்குரியவர்கள் மானம் ஒருமுறை இழக்கப்பட்டால், எக்காரணம் கொண்டும் அக்குடி மீண்டும் சிறப்பு ஏற்படாது. இழந்தது இழிந்ததுதான். இத​னை வள்ளுவர்,

“மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்”

 

என்று குறிப்பிடுகின்றார்.  எனவேதான் தெய்வப்புலவர்கள் மானத்தையும் மயிரையும் ஒப்பிட்டார்கள்.

இங்ஙனம் கூந்தல் என்பது மாந்தர் உடலுடன் மட்டும் அல்லாமல், பல்வேறு வகையில் மனித வாழ்க்கையுடன் இணைந்து, இன்ப துன்பங்களில் இரண்டறக் கலந்து அழகிய காட்சி பொருளாக அமைந்துள்ளது. மனித வாழ்க்​கை​யை விளக்கிக் காட்டும் சிறந்த சான்றாகவும் தமிழ்ப் பண்பாட்​டை விளக்கும் வ​கையிலும் கூந்தல் விளங்குகின்றது.

Series Navigation
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *