பாவண்ணன் கவிதைகள்

This entry is part 21 of 25 in the series 14 செப்டம்பர் 2014

 

 

  1. பின்னிரவு வாகனம்

 

புத்தாடைகளோடும் கொலுசோடும்

பேருந்துச் சந்திப்பை அடைந்தபோது

பின்னிரவு நேரம்

சோர்வை மீறிய நிம்மதி

நிறைந்திருந்தது அவன் முகத்தில்

குட்டிமகளின் புன்னகையை நினைத்து

அவன் கண்கள் சுடர்விட்டன

 

விளக்குகள் அணைக்கப்பட்டு ஒதுக்கிய

வாகனங்களின் வரிசையைப் பார்த்தான்

எழுதப்பட்ட ஊர்களின் பெயர்களை

ஏமாற்றத்தோடு படித்தான்

கழுவப்பட்ட பேருந்துகளையும்

கண்ணாடி துடைக்கும் சிறுவர்களையும்

மாற்றப்படும் சக்கரங்களையும்

பழுது பார்க்கும் பணியாளர்களுக்காக

ஒளியுமிழும் விசேஷ விளக்குகளையும்

கிண்டலுக்கு ஆளாகியும்

தொடர்ந்து கையேந்தும் பிச்சைக்காரியையும்

பெருமூச்சோடு பார்த்துத் தடுமாறினாள்

 

பிறந்தநாள் கனவுடன் உறங்கும்

மகளின் பாதங்கல் மனத்தில் மிதந்தன

வந்த இடத்தில் நேர்ந்துவிட்ட

ஏமாற்றங்களும் கசப்புகளும்

அலைச்சல்களும் அடுத்தடுத்துப் புரண்டன

என்னால் என்ன செய்யமுடியும் சொல்

என்று ஆதங்கங்களை

பகிர்ந்துகொள்ள விரும்பினாள்

சொல்லிச்சொல்லி அந்தப் பாரத்தை

கரைத்துவிடத் தோன்றியது

காற்றோடும் இருட்டோடும்

கலங்கிய கண்களோடு முன்வைத்தான்

அக்கணத்தில் அதுதான் முடிந்தது

 

ஆடுபுலி ஆட்டக்காய்கள்

உருட்டப்பட்ட ஒரு தூணோரம்

சிறிய மேகம்போல

மேலெழும்பிப் பரவியது பீடிப்புன்னகை

தரைமீது எண்ணற்ற மக்கள்

தாளோ துணியோ பரப்பி

உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்

கூட்டத்தோடு ஒருவனாகக் கலந்து

உறங்கலாமா எனத் தோன்ரியது மறுகணம்

பழந்தலைமுறைப் பயணியர்போல

நடந்துவிடலாமா எனத் தோன்றியது மறுகணம்

இரண்டுமே சாத்தியமற்றதென நினைத்து

குழப்பத்தில் தவித்தான் அவன்

 

பின்னிரவு வண்டி

வந்தாலும் வருமென்று

யாரோ சொல்லக் கேட்டு

நம்பிக்கை படரக் காத்திருந்தான்

 

 

  1. காட்சி

 

குலுங்கித் திரும்பிய வாகனம்

ஒரே கணத்தில்

அக்காட்சியைக் கடந்துவிட்டது

 

விழுதுகள் இறங்கிய ஆலமரம்

ஏதோ கிளைகளிலிருந்து இறங்கிய ஊஞ்சல்

நுனிமுடிச்சிட்ட விரிகுழலசைய

அவசரமில்லாமல் ஆடும் இளம்பெண்

பலகையைத் தள்ளிவிடும் சிறுமிகள்

கைதட்டி இசைக்கும் பாடலின் துணுக்கு

கிளைமாறிப் பறக்கும் பறவைகள்

நிழலில் தழைமெல்லும் ஆடுகள்

நெளிந்து நீளும் வாய்க்கால்கள்

கண்களில் படாத காட்சிகள்

இன்னமும் இருக்கக்கூடும்

 

காணாத சித்திரங்களை

கற்பனையில்

இடம்மாற்றி இடம்மாற்றி நீள்கிறது

இந்தப் பகல்பயணம்

 

 

  1. பிரியம்

 

மூடப்பட்ட கதவுகளின்

சின்ன இடைவெளிக்குல்

காற்றின் பிஞ்சுவிரல்

தள்ளிக்கொண்டு நுழைகிறது

 

அதற்கு இருக்கும் பிரியம்

உலகத்தில் யாருக்குமே இல்லை

அனாலும் இந்த இடத்தில்

அதற்கு

எவ்விதமான வரவேற்பும் இல்லை

புன்சிரிப்பும் இல்லை

தொட்டுப் பேசவோ

கைகுலுக்கி கதைசொல்லவோ

ஒரு குழந்தைகூட இல்லை

 

இருப்பினும்

எந்த எதிர்பார்ப்புமின்றி

கதவுகளிடையே நுழைகிறது

 

  1. கனவுச்சித்திரம்

 

ஒரு பறவையென உருமாறி

வானத்தில் சிறகசைத்து நீந்தும்

என் சித்திரத்தை

இன்னுமொரு முறை தீட்டிப் பார்க்கிறேன்

 

பாலென வெளிச்சம் படர்ந்திருக்கிற

ஆகாயத்தின்

எல்லாத் திசைகளிலும் பறக்கிறேன்

ஒரு தடையும் இல்லாத சுதந்திரத்தால்

உயிரும் உள்ளமும் திளைக்கின்றன

இறைக்கப்பட்ட பொம்மைகளைப்போல

மேகங்கள் சிதறிக்கிடக்கின்றன

சிறகுகளால் அவற்றைத் தீண்டும்போது

உருகி வழிவதைப்போன்ற உணர்வில்

உத்வேகம் பலமடங்காகிறது

 

ஆறுகல் மீதும்

குளங்கள்மீதும்

பறப்பது ஆனந்தமாக இருக்கின்றது

தாழ்வாக இறங்கிவந்து

ஒரேஒரு முறை

தண்ணீரைத் தீண்டிவிட்டுத் தாவும்போது

உடலில் படரும் சிலிர்ப்பு

பித்தேறவைக்கிறது

மலையின் உச்சியில் பறக்கும்போது

மனத்தின் பாடல் பீறிடுகிறது

எதிரொலித்துத் திரும்பும் குரல்

எழுச்சியூட்டுகிறது

 

தோளுயர்த்தி நிற்கும் மரங்களில்

கால்பதிந்து இறங்கும் வேளை

நெருங்கித் தழுவுகிறது காற்று

களைப்பின் உச்சத்தில்

கலைந்துவிடுகிறது சித்திரம்

 

  1. மழையின் துணை

 

தொடக்கப்புள்ளியும் தெரியவில்லை

போய்ச்சேரும் புள்ளியும் தெரியவில்லை

கரைகளைத் தழுவிக்கொண்டு ஓடுகிறது

காட்டாறு

 

வெரியின் கர்ஜனையின் வெளிப்படுகிறது

வெல்லமுடியாத வேகம்

 

கரையில் கால்நீட்டி அமர்ந்த

பாறைமீது நின்று பார்க்கிறேன்

 

நான்குநாள் முன்புவரைக்கும்

மணல் புழுதியாகக் கிடந்த இடம்

நம்ப முடியாதவகையில் மாறிவிட்டது

அடங்க மறுக்கிற சீற்றத்தோடு

ஆற்றின் வேகம் பெருகியபடி இருக்கிறது

கண்ணுக்கெட்டும் தூரம் வரைக்கும்

கருமேகங்கள் நிறைந்திருக்கின்றன

எந்தக் கணமும்

அவை தீண்டப்பட்டு

பொழிவதற்குக் காத்திருக்கின்றன

 

வெளிச்சம் தன்னை மறைத்துக்கொள்கிறது

சூரியனின் அச்சம்

ஆச்சரியமாக இருக்கிறது

 

தற்செயலான ஒரு கணத்தி;

விசைபெற்ற கணைபோல இறங்கிய மழை

உடம்பை நனைத்து வழிகிறது

ஒவ்வொரு நீர்முத்தும்

பளீரென மோதி உடைகிறது

கண்களில் மின்னல் கூசும் கணத்தில்

உணரமுடிகிறது

மழையின் இருப்பை

யாரோ துணைக்கு நிற்பதைப்போல

Series Navigationகோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு – பண்பாடும் மன உணர்வும்கபுசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நடுக்கம்
author

பாவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *