வாழ்க்கை ஒரு வானவில் – 20

This entry is part 23 of 25 in the series 14 செப்டம்பர் 2014

 

தந்தியில் “என் மனைவி ஊர்மிளா இறந்துவிட்டாள். குழந்தை உயிருடன் இருக்கிறது. சேதுரத்தினம்’ எனும் வாசகம் இருந்தது. பத்தாம் வகுப்பில் தவறி யிருந்த மாலாவால் அதைப் படித்துப் புரிந்துகொள்ள முடிந்தது. ராமரத்தினத்துடன் அன்றிரவு தன் வீட்டுக்கு வந்து சென்ற அவனுடைய புதிய நண்பன்தான் அதை அனுப்பியிருந்தான் என்பது அவளுக்குப் புரிந்தது. `தந்தியைப் படித்ததும் மயக்கம் போட்டு விழுகிற அளவுக்கு அண்மையில்தான் அறிமுகமாகி யிருக்கும் ஒருவர் மீது ராஜாவுக்கு இவ்வளவு பாசமா!’ எனும் கேள்வி எல்லாரையுமே அயர்த்தியது.

“தெரு முனையில இருக்கிற டாக்டரை வேணாக் கூப்பிடலாமாடி?” என்று பருவதம் வினவிய கணத்தில் ராமரத்தினம் கண் விழித்துப் பார்த்தான்.

“என்னடா, ராஜா? மாலா தந்தியைப் படிச்சுட்டு விஷயத்தைச் சொன்னா. அன்னைக்கு ராத்திரி வந்தானே அந்தப் பையன் தானே?” என்றாள் பருவதம் பெருமூச்சுடன்.

“ஆமாம்மா… ஏம்மா, நல்லவங்களுக்கு இப்படியெல்லாம் கஷ்டங்கள் வருது வாழ்க்கையிலே?” என்று கேட்ட ராமரத்தினம் தன் கண்களில் திமிறிய கண்ணீரை வேட்டி முனையால் துடைத்துக்கொண்டான்.

“அதுக்கெல்லாம் யாராலேப்பா காரணம் சொல்ல முடியும்? நம்ம மத நம்பிக்கைப்படி முந்தின ஜென்மத்துப் பாவம்னுதான் காரணம் சொல்ல முடியும்.. அவனோட பொண்டாட்டியை நீ பார்த்திருக்கியோ?.”

“இல்லேம்மா. இப்பதானே கொஞ்ச நாளுக்கு முந்தி அறிமுகம் ஆச்சு? …. “

“அவனுக்கு மாமனார் மாமியார் இருக்காங்களோ?”

“இல்லேம்மா. அவருக்கும் நெருங்கின சொந்தக்காரங்க இல்லே, அவரோட ஒய்ஃபுக்கும் இல்லே. கோயமுத்தூர்ல இருக்கிற தூரத்துச் சொந்தக்காரப் பொண்ணுகிட்டதான் பிரசவத்துக்காகப் போயிருக்காங்க. …”

“அப்ப, அந்தக் கொழந்தையை யார் பார்த்துப்பா?”

“அந்தச் சொந்தக்காரப் பொண்ணு கிட்ட விட்டுட்டு வருவாரோ என்னவோ.”

“அப்ப, கொழந்தையைப் பார்க்கிறதுக்கு அடிக்கடி இங்கேர்ந்து கோயமுத்தூருக்குன்னா போயிண்டிருக்கணும்?”

“ஆமாம்மா…”

“ஏண்டா? அவர் பணக்காரரா?”

“நடுத்தரம்மா. நல்ல சம்பளம். ஆனா ஒரு பைக் கூட வெச்சுக்கல்லே. அவரோட ஒய்ஃபுக்கு ஆக்சிடெண்ட் பத்தின பயமாம் . அதனால பைக் வாங்கக் கூடாதுன்னுட்டாங்களாம்…”

“அப்படியா? … தெரு முனையில இருக்கிற டாக்டரைக் கூட்டிண்டு வரட்டுமா? இப்படி மயக்கம் போட்டு விழுந்துட்டியே?”

“வெறும் அதிர்ச்சிதாம்மா. வேற ஒண்ணுமில்லே. இப்ப சரியாப் போயிடுத்து…”

“வெளியில போய் ட்ரங்க் கால் போட்டு அவனோட பேசேன்…”

“அதெல்லாம் வேணாம்மா. கோயமுத்தூர் அட்ரெஸ் தெரியாது. அதை அவரோட அஃபீஸ்லேர்ந்து வாங்கிட முடியும்தான். ஆனா அந்தக் கோயமுத்தூர் வீட்டிலே ஃபோன் இருக்கான்னு தெரியாது…..வந்ததுக்கு அப்புறமே போய்ப் பார்க்க்றேம்மா. ..அவரே ஃபோன் பண்ணினாலும் பண்ணுவார்…அப்ப எல்லாம் தெரியும்…”

பருவதம் சில நொடிகள் போல் ஒன்றும் சொல்லாதிருந்தாள். பிறகு, “ஒண்ணு வேணாப் பண்ணலாம். நாம வேணா அந்தக் கொழந்தையை வளர்த்துக் கொடுக்கலாம் – அந்த தூரத்துத் சொந்தக்காரப் பொண்ணுக்கு அது முடியல்லேன்னா… என்ன சொல்றே?”

ராமரத்தினம் ஒரு திடீர் மகிழ்ச்சியில் திகைத்துப் போனான்: “நிஜமாத்தான் சொல்றியாம்மா?”

“நிஜமாத்தாண்டா சொல்றேன். மூணு பொம்மனாட்டிங்க இருக்கோமே இந்த வீட்டிலே? பார்த்துக்க மாட்டோமா?….”

“அப்படின்றே?”

“ஆமாண்டா. தாயில்லாக் கொழந்தையை வளர்த்துவிட்டா புண்ணியம்….”

“தேங்க்ஸ்மா. அவர் வந்ததும் அது பத்தியும் அவர் கிட்ட சொல்றேன்…நீ சொல்றாப்ல அடிக்கடி கோயமுத்தூருக்குப் போயிண்டிருக்க வேண்டாம். இங்கே வரா வாரம் வந்து – ஏன் வாரத்துக்கு ரெண்டு மூணு தரம் கூட வந்து – கொழந்தையைப் பார்த்துட்டுப் போகலாம்…” – ராமரத்தினத்தின் விழிகள் ஒரு புதிய உற்சாகத்தில் பளபளத்தன.

“ராஜா! இன்னைக்கு சீக்கிரமே படுத்துண்டு தூங்கு… நைட் ட்யூட்டி வேற பார்த்துட்டு மத்தா நாளும் வேலைக்குப் போனே இல்லையா? தூக்கம் போறல்லே. அதான் ஒரு பலவீனத்துல விழுந்துட்டே. நல்லாத் தூங்கு…” என்று பருவதம் சொன்னதும் அவனுக்குக் கசப்பான சிரிப்புத்தான் வந்தது. `நான் இனி எங்கே நிம்மதியாத் தூங்குறது? ஓட்டல் முதலாளி இனி என்னை வேலைக்கு வெச்சுக்கிறது சந்தேகந்தான்…. இனி வேலைக்குப் போக முடியாதுன்றதுக்கு நம்பும்படியா அம்மாவுக்கு என்ன சமாதானத்தைச் சொல்றது?… `

மறு நாள் மாலையில் ரமணியை வேறு சந்தித்தாக வேண்டிய பரபரப்பும் சேர்ந்துகொள்ள அன்று அவனுக்குச் சிவராத்திரியானது. ….

….. ஊர்மிளா எரிந்து சாம்பாலாகிப் போய்விட்டாள் என்பதைச் சேதுரத்தினத்தால் துளியும் நம்ப முடியவில்லை. சிலரைப்போல் தான் சாகப் போவது தெரியாமல் மயக்கத்தில் போய்விடாமல், கடைசிக் கணங்களில் ஊர்மிளா தன்னுணர்வோடு இருந்தாள்.

அவளின் இறுதி நேரம் நெருங்கிவிட்ட நிலையில் சேதுரத்தினம் அவளோடு சில கணங்கள் தனியாக இருப்ப்தற்கு அனுமதிக்கப்பட்டான்.

அவனுடைய இரு கைகளையும் தன் வலுவற்ற கைகளால் பற்றிகொண்ட ஊர்மிளா, “இனி நான் உயிரோடு இருக்கப் போறதில்லேங்க. உங்களுக்கு இருபத்தேழு வயசுதான் ஆறது. ஒரு வருஷம் கழிச்சு நீங்க கண்டிப்பாக் கல்யாணம் பண்ணிக்கணும். நம்ம குழந்தையைப் பிரியமாப் பார்த்துக்க்க் கூடிய ஒரு நல்ல பொண்ணாப் பார்த்துப் பண்ணிக்கணும்…அழாதீங்க….”

அவளை இறுக்கமாய்த் தொடுவதற்குக்கூட அவனுக்குத் தயக்கமாக இருந்தது. அவள் அவ்வளவு பலவீனமாய்த் தெரிந்தாள். தனது அழுத்தமான தொடுகையை அவளால் தாங்க முடியுமா என்கிற கேள்வி எழுந்ததில் அவன் இலேசாக அவளை வருடிக்கொடுத்தான. அவனால் பேசவே முடியவில்லை. சொட்டுச் சொட்டாய் உதிர்ந்த அவனின் கண்ணீர்த் துளிகள் அவள் மீது விழுந்து சிதறின. அவள் வலுவற்ற தன் கைகளால் அவன் கண்ணீரைத் துடைத்துவிட்டு, “கொழந்தையைப் பார்த்தீங்களா?” என்றாள். அவள் கண்களும் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தன.

“உம்ம்…”

“உங்களுக்குப் பிடிச்ச மாதிரியே பொண்ணு பிறந்திருக்கு….”

“சரி… ரொம்பப் பேசாதே… மூச்சு வாங்கறது, பாரு..”

“மூச்சு வாங்கல்லே. மூச்சு போயிட்டிருக்கு… நான் சொன்னதை … ஞாபகம்… வெச்சுக்குங்க. ஒரு நல்ல பொண்ணாப் பார்த்து…”

– திக்கித் திணறிப் பேசிய ஊர்மிளாவின் தலை அவ்வாக்கியத்தை முடிக்கும் முன் அவன் தோளில் சாய்ந்தது. அவள் கைகள் பொத்தென்று விழுந்தன.

….. ஊர்மிளாவின் ஒன்றுவிட்ட அக்காள் தனக்கு வயதாகாவிட்டாலும் இரத்த அழுத்தம், இதய நோய் இரண்டுமே இருப்பதால் குழந்தையைப் பார்த்துக்கொள்ளத் தன்னால் இயலாதுள்ளதை மிகுந்த வருத்தத்துடன் அவனிடம் தெரிவித்தாள். அவனுடன் புறப்பட்டு வந்து ஒரு மாதம் போல் இருந்துவிட்டுக் கோயமுத்தூருக்குத் திரும்புவதாய்ச் சொன்னாள். அதற்குள் சென்னையில் ஏதேனும் விடுதியில் குழந்தைக்கான ஏற்பாட்டைச் செய்யுமாறும் யோசனை கூறினாள். இந்த யோசனைக்குச் சம்மதிப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழி ஏதும் தெரியவில்லை.

…. மறு நாள் மாலை கடற்கரையில் காந்தி சிலையை ராமரத்தினம் அணுகிய போது ரமணி ஏற்கெனவே அங்கு வந்து காத்துக்கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்துக் கையசைத்தவனுக்கு எதிரில் ராமரத்தினம் உட்கார்ந்து புன்னகை செய்தான். “சொல்லு ரமணி! என்ன பேசப் போறே என்னோட?”

முகத்துச் செம்மையுடன் சில நொடிகள் போல் உட்கார்ந்திருந்த ரமணி, கணம் போல் அவனை ஏறிட்ட பின் தலை குனிந்தவாறு, “மாலா விஷயமா உன்னோட நான் பேசணும், ராஜா…” என்றான்.

ராமரத்தினம், “மாலா பண்ணின காரியத்த்க்கு உங்கிட்ட நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன், ரமணி. உங்கப்பாவுடைய கோவம் நியாயமானதுதான்…”

ரமணியின் விழிகள் விரிவுகொண்டன: “என்ன சொல்றே நீ? மாலா என்ன பண்ணினா? எங்கப்பாவுக்கு என்ன கோவம்? புரியல்லே…”

அவனது எதிரொலியின் உட்கிடை ராமரத்தினத்துக்கும் புரியவில்லை: “மாலாவைப் பத்தி என்ன கேக்கணும் உனக்கு? முதல்ல நீ பேசு. நான் அப்புறம் பேசறேன்…”

“மாலாவுக்கு வேறா யார் மேலேயும் விருப்பம் இல்லைன்னா, அவளை நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன், ராஜா….”

ராமரத்தினம் தன் கையை நீட்டி ரமணியின் கையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டான். “நாங்க கொடுத்து வெச்சிருக்கணும், ரமணி. முக்கியமா, மாலா தான் ரொம்பவும் கொடுச்து வெச்சிருக்கணும்…அவளுக்கு வேற யார் மேலேயும் இஷ்டமில்லே. உன் மேலதான் இஷ்டம்…”

“என்னது! என்னடா சொல்றே நீ?”

“எல்லாம் விவரமாச் சொல்றேன்… முதல்ல நான் கேக்கறத்க்குப் பதில் சொல்லு. மாலாவைப் பத்தி உங்கப்பா கிட்ட ஏதாவது பேசினயா?”

“இன்னும் இல்லே. இனிமே தான் பேசணும்.”

“அவரும் உன்கிட்ட அவளைப் பத்தி எதுவும் பேசல்லையா?”

“இல்லே. அவர எதுக்குப் பேசப்போறார்? நீ ஏதாவது அவரை பார்த்துப் பேசினயா? என்னமோ `உங்கப்பாவுடைய கோவம் நியாயமானது தான்’னியே? என்ன அது?”

ராமரத்தினம் சில நொடிகள் வரையில் எதுவும் பேசாமல் இருந்தான்.

அதன் பின்னர் அவன் மாலாவின் கடிதம், அது அவன் அப்பாவிடம் போய்ச் சேர்ந்த கதை, அதைப் பிரித்துப் படித்துவிட்டு அவர் தன்னை அழைத்துச் சென்று பேசிய பேச்சு யாவற்றையும் ரமணிக்கு விவரமாய்க் கூறினான்.

“அப்படியா விஷயம்? … நான் டூர்லேர்ந்து வந்ததும் வராததுமா எங்கப்பா என்னோட கல்யாண விஷயமாப் பேச்செடுத்தார். கொஞ்ச நாள் போகட்டும்னு கண்டிப்பாச் சொன்னேன்…அதானா?”

“எங்களோட சம்பந்தம் உங்கப்பாவுக்கு அடியோட பிடிக்கல்லே, ரமணி. அதிலே எந்த ஆச்சரியமும் இல்லே. ஏன்னா நாங்க அன்றாடங்காய்ச்சிகள்….வீணா நீ அவரோட மன்கசப்பைச் சம்ப்பதிச்சுக்கப் போறே…”

“அதுக்கென்ன பண்றது? என் கல்யாணம் என்னோட சொந்த விஷயம். நீ கவலையே படாதே, ராஜா. நான் எப்படியாவது இதைச் சாதிப்பேன்.”

“ஆனா நீ உங்கப்பாவுக்கு ஒரே பிள்ளை. அவர் மனசு ரொம்பவே நொந்து போகும். ”

“அதுக்கென்ன பண்றது? ஒரே பிள்ளைன்னா இன்னும் அதிகமாவில்லே அவர் எனக்காக இறங்கிவந்து விட்டுக் குடுக்கணும்? பிள்ளைகள்னா அடிமைகளா என்ன? தவிர, கல்யாணம்கிறது ஒருத்தரோட எவ்வளவு தனிப்பட்ட விஷயம்? …”

“எல்லாம் சரிதான். ஆனா அவர் புரிஞ்சுக்கணுமே?”

“புரிஞ்சுக்க வைப்பேன்… என்ன, மிஞ்சி மிஞ்சிப் போனா, என்னோட சொத்துல ஒரு பைசாக் கூட உனக்குக் கிடைக்காதுன்னு பயமுறுத்துவார். செய்யட்டுமே! ஒரு கோவில்ல வெசுத் தாலிகட்டி சிம்ப்பிளா முடிச்சுடலாம். எனக்காக நீ ஒரு பைசா கூட செலவு பண்ண வேண்டாம். எல்லாம் நான் பாத்துப்பேன். கோவில்ல வெச்சுத் தாலி கட்டுறதோட நிக்காம, ரெஜிஸ்டரும் பண்ணிட்டா யாராலேயும் எதுவும் பண்ண முடியாது, ராஜா.””

“அப்ப, அந்த அளவுக்குத் துணிஞ்சுட்டியா?”

“பின்னே?”

அதன் பிறகு ராமரத்தினம் தன் ஓட்டல் முதலாளி மாலாவை மணக்க் விரும்புவது பற்றியும் மாலா தனக்கு ஏற்கெனவே ஒரு காதலன் இருப்பதாய்ச் சொல்லி அவரை நிராகரித்து விடுவாள் என்பதையும் அவனுக்குச் சொன்னான்.

“நானும் உனக்கு எப்படியாவது முயற்சி பண்ணி ஒரு நல்ல வேலையாப் பார்த்துத் தறேண்டா, ராஜா. ..என்னா, அதுக்கு அப்புறம் அந்த ஓட்டல்காரர் உன்னை வேலையிலேர்ந்து நீக்கிடுவார்…..”

“தேங்க்ஸ்… அப்புறம் ஒரு நாள் நீ எங்கம்மாவையும் பார்த்துப் பேசிடணும்…. ”

“கண்டிப்பா. மாலா கிட்டயும் ஒரு வார்த்தை பேசணும்…”

“ஒரு வார்த்தை என்னடா? நிறையவே பேசு…அதுக்கு நான் வசதி பண்ணித் தறேன்…”

பின்னர், கொஞ்க நேரம் பொதுவாய்ப் பேசிக்கொண்டிருந்து விட்டு, இருவரும் பிரிந்தார்கள்.

…… அன்றிரவு ரமணி, சாப்பாடெல்லாம் ஆனதன் பிறகு, “அப்பா! உங்க்கிட்ட ஒண்ணு பேசணும்!” என்றவாறு தம் முன் மேசைக்கு எதிரே வந்து உட்கார்ந்தபோது அவனைக் கணேசன் வியப்புடன் ஏறிட்டார்.

“என்னடா?” என்றார் அவர். அவன் எதைப் பற்றிப் பேசப் போகிறான் என்பது புரிந்து விட்ட தோரணையுடன் அவரது குரல் ஒலித்தது.

“எனக்கு அந்தப் பொண்ணு எழுதின லெட்டரை நீங்க பிரிச்சுப் படிச்சது நியாயமா?”

“என்னடா, என்னமோ மிரட்டுற மாதிரி பேசுறே? அந்தப் பையன், உன் சிநேகிதன் சொன்னானா? உங்கிட்ட அதைப் பத்திப் பேசவே கூடாதுன்னு படிச்சுப் படிச்சுச் சொல்லியிருந்தேனே?”

“அவன் தானா எதுவுமே சொல்லல்லேப்பா. சொல்லும்படி ஆச்சு.”

“என்னடா என்னமோ கதை யளக்குறே?”

“கதை இல்லேப்பா. நான் உண்மைதான் சொல்றேன். அவன் தங்கை மாலாவை நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்னு இன்னைக்கு பீச்ல அவனைச் சந்திச்சுச் சொன்னப்ப அவன் ஆச்சரியமா என்னைப் பார்த்தான். அது மட்டுமில்லே. `உங்கப்பாவுடைய கோவம் நியாயமானது. மாலா பண்ணினது தப்புத்தான். அவளை மன்னிச்சுடு’ அப்படின்னான். எனக்கு ஒண்ணும் புரியல்லே. `என்னடா சொல்றே? எங்கப்பாவுக்கு என்ன கோவம்? உன் தங்கை என்ன பண்ணினா அவளை நான் மன்னிக்கிற அளவுக்கு’ ன்னு நான் கேட்டதுக்கு அப்புறந்தான் நடந்ததை யெல்லாம் சொல்ல வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்பட்டுது. நீங்க எல்லாத்தையும் என் கிட்ட சொல்லிட்டீங்கன்னு முதல்ல தப்பா ஊகிச்சிண்டு அவன் அப்படிச் சொல்லியிருக்கான். ஆக மொத்தம், அந்தப் பொண்ணுக்கும் எனக்கும் … ஒரே நேரத்துல அப்படி ஒரு எண்ணம் மனசில தோணியிருந்திருக்கு…” -­ இவ்வாறு வெட்கத்துடன் சொல்லிவிட்டு ரமணி தலையைக் குனிந்துகொண்டான்..

“அதுக்காக உடனே உக்க்கந்து ஒரு ஆம்பளைக்கு வெக்கம், மானம் எல்லாத்தையும் உதிர்த்துட்டு லவ் லெட்டெர் எழுதிட்றதா?”

“அந்த லெட்டரை எடுத்துக் குடுங்க… அப்படி வெக்கங்கெட்டு என்னதான் அவ எழுதிட்டான்னு நான் பார்க்கணும்…”

“அதை நான் கிழிச்சுப் போட்டுட்டேன்.”

அவன் ஆத்திரத்துடன் அவரை ஏறிட்டான். “எனக்கு வந்த லெட்டரைப் பிரிச்சுப் படிச்ச அநாகரிகத்தைப் பண்ணினதுமில்லாம, அதைக் கிழிச்சும் போட்டிருக்கீங்களே! உங்களுக்கு வெக்கமாயில்லே?” – ரமணி எழுந்து நின்றான்.

“முதல்ல முந்திக்கிற பொண்ணு கண்ணியமானவ இல்லேடா. அதைத் தெரிஞ்சுக்கோ!”

“எந்த யுகத்திலேப்பா வாழ்ந்துட்டு இருக்கீங்க? ஆம்பளை முந்திண்டா சரி, பொண்ணு முந்திண்டா வெக்கங்கெட்டதனமா! காலம் ரொம்பவே மாறிண்டிருக்குப்பா. உங்க பண்டைக்கால அபிப்பிராயங்களை யெல்லாம் மூட்டை கட்டி வையுங்க… நான் அந்தப் பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்…”

அவன் நகர முற்பட்டான்.

“இருடா. நான் சொல்றதை யெல்லாம் கேட்டுட்டு, அப்புறம் பேசு… நீ மட்டும் என்னை மீறி அவளைத்தான்…”

“கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா என் சொத்துல ஒரு பைசா கூட உனக்குக் கிடையாதுன்னு சொல்லப் போறீங்க! அதானே?” என்று அவன் அந்த வாக்கியத்தை முடித்துவிட்டுக் கசப்புடன் புன்னகை செய்தான்.

“பரவால்லே. என்னை நல்லாவே புரிஞ்சுண்டு இருக்கே. நான் சொல்லவந்தது அதேதான்!”

“நீங்க சொல்லவந்ததை நான் சரியாச் சொன்னது மாதிரி, நான் சொல்ல இருக்கிறதை உங்களால சரியாச் சொல்ல முடியுமாப்பா?”

“………..?”

“என்னப்பா பார்க்கிறீங்க? உங்க சொத்து சுகம் எதுவுமே எனக்கு வேணாம்ப்பா… ஒரு ஏழைப் பொண்ணைத்தான் அவ குடும்பத்துக்குச் செலவே வைக்காம கல்யாணம் பண்ணிக்கணும்கிறது என்னோட லட்சியம். அதுக்குத் தோதா ராஜாவுடைய தங்கையை எனக்குப் பிடிச்சிருக்கு. நீங்க மனசு மாறி நடத்தி வெச்சா நல்லது….”

“இல்லாட்டி, நான் வராமலே நீ தாலி கட்டுவே. அதானே?”

“அதான் இல்லே. நீங்க சம்மதிக்கிற வரைக்கும் நான் காத்திண்டிருப்பேன். உங்க மனசு நிச்சயமா ஒரு நாள் மாறும்ப்பா… குட் நைட்…” – ரமணி தன்னறை நோக்கி நடந்தான். கணேசன் வைத்த விழியை அகற்றாது அவனது முதுகையே பார்த்தவாறு உட்கார்ந்து போனார். `இந்தக் கல்யாணத்தை நிறுத்துறதுக்கு என்ன பண்ணலாம்?’ – அவருடைய விரல்கள் எதிரே இருந்த மேசை மீது தாளம் போடலாயின.

(தொடரும்)

 

 

Series Navigationகபுசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நடுக்கம்தொடுவானம் 33. அகர முதல எழுத்தெல்லாம்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *