வீரனுக்கு வீரன்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 14 of 25 in the series 14 செப்டம்பர் 2014

beeshama

“ஒரு அரிசோனன்”

(மகாபாரதத்தில் யுத்தபர்வத்தில், பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருந்தபோழுது, அவரை வணங்கி ஆசிபெற, கர்ணன் யுத்தகளத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தான் என்று குறிப்பிட்டிருக்கிறது. அந்தச் சந்திப்பு எப்படி இருந்திருக்கும் என்ற எனது கற்பனையே இது.)

 

 

“பீஷ்மப் பாட்டனார் களத்தில் வீழ்ந்து விட்டாராம். இனி, தாங்கள் களமிறங்கத் தடை ஏதும் இல்லை!” என்ற செய்தியைக் கேட்டு ஒரு கணம் அதிர்ந்துவிட்டான் கர்ணன். அவனுள் மகிழ்வும், துயரமும், மாறிமாறி அலை பாய்ந்தன. தன் நண்பன் துரியோதனனுக்காகக் களமிறங்கி, செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்கவும், தலையான எதிரியான அர்ஜுனனைப் பழிதீர்க்கும் வாய்ப்பும் கிட்டியதற்கு மகிழ்ந்தாலும், தன்னை ‘அரைத் தேர்வீரன்’ (அர்த்த ரதன்) என்று இகழ்ந்த பீஷ்மப் பாட்டனாரின் சரிவு ஏனோ அவனுக்கு மகிழ்வைத் தரவில்லை. உண்மை வீரரான அவர் தனக்கு வரவிருந்த அரசைத; தனது சிற்றன்னையின் வாரிசுகளுக்கு விட்டுக் கொடுத்ததோடு மட்டுமல்லாது, தனது இல்வாழ்வையும் தியாகம் செய்துவிட்டிருந்தார்.. அது மட்டுமா? தன் சுக துக்கங்களை மறந்து தனது வாழ்க்கையையே அத்தினாபுர அரசின் நலத்திற்காகவும் அர்ப்பணித்து விட்டார். தன் அருமைப் பேரர்கள் பாண்டவர்களுக்கு எதிராகக் அரசுக் காவலனாகக் களம் இறங்கி, தனக்குப் பிடிக்காத கெளரவர்களுக்காக அக்களத்திலேயே வீழ்ந்து பட்டதையும் குறித்துச் சிறிது கழிவிரக்கம் கொண்டான்.

“எப்படி பீஷ்மப் பாட்டனார் இறந்தார்? அந்த மாவீரரை வீழ்த்தியது யார்?” என்று வினவினான்.

“அரசே! அவர் இன்னும் இறக்கவில்லை. அம்புப் படுக்கையில் கிடக்கிறார்!” என்று பகர்ந்த தூதுவன் மேலே தொடர்ந்தான். “கர்ணப் பிரபுவே! இணையற்ற வீரரான அவரை யார் கொல்ல இயலும்? ஆண்மையற்ற சிகண்டி அவரைப் போருக்கு அழைத்து, கணைகளைத் தொடுத்தான். சிகண்டியைப் பெண் என்று கருதும் பீஷ்மப் பாட்டனார் ஒரு பெண்ணுடன் போரிடுவது க்ஷத்திரியனுக்கு அழகல்ல என்று வில்லில் நாணேற்றி அம்பைப் பொருத மறுத்து விட்டார். சிகண்டியை முன்னிருத்தி, பின்னாலிருந்து அவர் உடலைச் சல்லடைக் கண்களாகத் துளைத்து எடுத்துவிட்டான் அர்ஜுனன். ‘சிகண்டியுடன்தான் நீங்கள் போரிட மாட்டீர்கள், அர்ஜுனனுடன் போரிடலாமே!’ என்று துரோணாச்சாரியார் முதல் பலரும் எடுத்துச் சொல்லியும், ‘சிகண்டி முன்னிருக்கும்வரை யாரிடமும் போரிட மாட்டேன்!’ என்று மறுத்துவிட்டார். நூற்றுக்கணக்கான அம்புகள் உடம்பில் தைத்து, முள்ளம்பன்றியைப்போலக் காட்சி அளித்த அவர், ஒவ்வொரு அம்பையும் தடவிப் பார்த்து, ‘இது சிகண்டியின் அம்பு அல்ல; அந்தப் பேடியின் அம்பு என் நகக்கண்களைக்கூடத் துளைக்காது. இவை அனைத்தும் அர்ஜுனனின் கணைகள்தான். என் கவசத்தைக்கூட அவை பிளந்துவிட்டனவே?’ என்று ஒரு உண்மையான வீரனாக, அர்ஜுனனின் போர்த்திறமையை மெச்சினார்.

“எவ்வளவுதான் அவராலும் தங்க இயலும்? துளைப்பதற்கு வேறு இடம் ஒன்று இல்லை என்னும் அளவுக்கு உடலைக் கணைகள் துளைத்தவுடன் நிற்கத் திறனற்று அப்படியே கீழே சாய்ந்துவிட்டார். இருந்தபோதும், அவர் உடல் மண்ணில் விழவில்லை பிரபோ! அம்புகள் அவரைத் தாங்கி நிற்கின்றன. மேலும், அவராகத் தன் உயிரை விட்டால்தானே உண்டு? அப்படிப் பட்ட வரத்தை அல்லவே அவர் பெற்றிருக்கிறார்! தட்சிணாயணத்தில் உயிரை விடக்கூடாது என்று உத்திராயணத்தை எதிர்நோக்கி, அம்புப் படுக்கையில் நோன்பிருக்கிறார்.” என்று முடித்தான் தூதுவன்.

“அர்ஜுனனா இத்தகைய பேடித்தனமான செயலைச் செய்தான்? அவனது வீரம் எங்கு போயிற்று?” என்று உறுமினான் கர்ணன். தன்னை இழிவு செய்தவர்தானே, எப்படியாவது தொலைந்து போகட்டும் என்ற எண்ணம் இல்லை அந்த மாவீரனுக்கு. பீஷ்மரைக் கொல்வதற்காக வீரத்திற்கு இழுக்கு வரும் செயலையா அர்ஜுனன் போன்ற மாவீரன் செய்தான் என்ற மனக்குமுறல்தான் இருந்தது.

“பிரபோ! அர்ஜுனனாக மனமுவந்து அச்செயலை செய்யவில்லை. மிகவும் தயங்கிய அவரைக் கபட நாடக சூத்திரதாரியான கண்ணன்தான் இத்தகைய இழிசெயலுக்குத் தூண்டினார். ‘பீஷ்மப் பாட்டனாரை போரில் வெல்ல உன்னால் இயலாது. சிகண்டியால்தான் சாவு என்ற வரம் கொடுக்கப்பட்டுவிட்டது. எனவே, சிகண்டியை முன்னிருத்தி, அவனுக்கு உதவுவது போலப் போரிடு. இதுதான் ஒரே வழி.’ என்று கள்ள வழி காட்டினார். பலமுறை பாட்டனார் மீது பாணம் செலுத்தப் பார்த்திபன் மனம் தளர்ந்து நின்றபோதும், அவரை இடைவிடாது ஊக்குவித்ததும் கண்ணன்தான்!”

“அப்படியா? தவறான வழியில் சென்றதற்காக, மார்பில் கணை ஏற்று மடியும் வீரச் சாவை அர்ஜுனனுக்கு நான் தரமாட்டேன். வெற்றிக்காக அறம் தவறிய அப்பேடியின் தலையை என் நாகாஸ்திரத்தால் துண்டித்து, அவன் உடலை முண்டமாக்கி, அழியாப் பழியை அவனுக்கு ஏற்படுத்துவேன்! இது உறுதி!” என்று வீர முழக்கமிட்டான் கர்ணன். பீஷ்மப் பாட்டனாரின் மீது இருந்த சிறிதளவு மனக்கசப்பும் நீங்கி, அர்ஜுனனைப் பழிவாங்கவேண்டும் என்ற வெறியே பெரிதாக அவனுள் எழுந்து நின்றது.

“என் உயிர் நண்பன் துரியோதனனிடம் தெரிவி, நான் அவனப் போர்க்களத்தில் சந்திக்கிறேன் என்று.” என்று தூதுவனை அனுப்பிய கர்ணன் சிறிது சிந்தித்தான். என்னதான் தன்னை இகழ்ந்து பேசியிருந்தாலும், மாவீரரான பீஷ்மப் பாட்டனாரிடம் வாழ்த்துப் பெற்ற பின்னரே போரை வழிநடத்த வேண்டும் என்ற அவா அவனுள் எழுந்தது. தவிரவும், தன் மனதில் புழுவாகக் குடைந்து கொண்டிருக்கும் ஒரு கேள்விக்குப் பதிலை அவரிடமிருந்துதான் தெரிந்து கொண்டாக வேண்டும் என்ற விருப்பமும் அவனை அம்புப் படுக்கையில் கிடக்கும் பீஷ்மப் பாட்டனாரிடம் நடத்திச் சென்றது.

 

  • P P                      P

 

அம்புப் படுக்கையில் அயர்ந்து கிடந்தார் பீஷ்மப் பாட்டனார். அவரது தலையை மூன்று அம்புகள் தலையணையாகத் தாங்கி நின்றன. அந்த நிலையிலும் அவரது முகத்தில் அமைதியான வீர ஒளி மிளிர்ந்து கொண்டிருந்தது. கௌரவர்களும், பாண்டவர்களும் அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அனைவரின் முகங்களிலும் சொல்லொணாச் சோகம் குடி கொண்டிருந்தது. கர்ணனின் வரவைக் கண்டு துரியோதனனின் முகம் சற்று மலர்ந்தது. நண்பனை மார்போடு சேர்த்து ஆரத் தழுவி வரவேற்றான்.

“பீஷ்மப் பாட்டனாரே! ராதையின் மகனும், துரியோதனனின் உயிர் நண்பனும், அங்க நாட்டு அதிபனுமான கர்ணன், தங்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது வீர சாகசங்களை நேரில் கண்டு களிக்கும் வாய்ப்பில்லாமல் போனது எனது துர்பாக்கியம்!” என்று பணிவுடன் வணங்கினான் கர்ணன்.

“நலமுண்டாகட்டும். நல்வீரனாகத் திகழ்வாயாக!” என்று அவனை வாழ்த்தினார் பீஷ்மர். கர்ணனின் முகத்தில் ஊடாடிய உணர்ச்சிகளை ஊன்று நோக்கிய பீஷ்மர், “நான் கர்ணனிடம் சிறிது தனியாகப் பேச வேண்டும். நீங்கள் சற்று விலகி இருப்பீர்களாக!” என்று அனைவருக்கும் அன்புக் கட்டளை விடுத்தார். அரை மனதுடன் அனைவரும் அகன்று நின்றனர்.

“என்னால் இயன்ற அளவுக்கு கௌரவர்களுக்கும், அத்தினாபுர அரசுக்கும், காவலனாகவும் படைத் தலைவனாகவும் இருந்து என் கடமையைச் செய்துவிட்டேன். அறியாச் சிறுவனான துரியோதனனுக்கு இனி நீ காவலனாக மட்டுமல்லாமல், உயிர் நண்பனாகவும் அறிவுரை சொல்ல வேண்டும்!” என்று மெலிந்த குரலில் அன்புக் கட்டளை இட்டார் பீஷ்மர்.

“பாட்டனாரே! அப்படியே செய்கிறேன். இந்தப் போரில் வெற்றி வீரனாகத் திகழ வேண்டும் என்று என்னை வாழ்த்துங்கள்!” என்று வேண்டினான் கர்ணன்.

சற்று அமைதியாக இருந்த பீஷ்மர், “கர்ணா! ஒருவர் போரில் வெல்ல வேண்டுமானால் மற்றவர் தோற்றாக வேண்டும். பாண்டவர்களும், கௌரவர்களும் எனது பேரர்கள். அப்படி இருக்கையில், அவர்களில் யார் மடிந்தாலும் எனக்குச் சம்மதமாகுமா? பாண்டவர்கள் இறந்தால்தான் நீ வெற்றி வீரனாகத் திகழ்வது திண்ணமாகும். நீ வெற்றி வீரனாகத் திகழ வேண்டும் என்று என்னால் எப்படி வாழ்த்த இயலும்? இந்தப் போர் நடக்காமல் இருக்க எத்தனையோ முயற்சி செய்தேன். தோல்வியையே தழுவினேன். உனக்கே தெரியும், பாண்டவர்கள் பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்று. துரியோதனன் உன் உயிர் நண்பன். நீ ஒருத்தன்தான் அவனுக்கு அறிவுரை செய்து இப்போரை நிறுத்தி குருதிப் புனல் பெருக்கிடா வண்ணம் தடுத்து நிறுத்த முடியும்!” இறைஞ்சியது அவர் குரல்.

“பீஷ்மப் பாட்டனாரே! நான் ஒருவன் மட்டும் இறந்தால்தான் இப்போரை நிறுத்த இயலும் என்றால் அதைக்கூட மகிழ்வுடன் செய்வேன். நீங்கள் சொல்லும் அறிவுரையை – துரியோதனனிடம் நன்றிக் கடனும், நட்புக் கடனும் பட்டிருக்கும் என்னால் எடுத்துரைக்க இயலுமா? இப்போர் நடந்துதான் தீரும்.” என்று தன் இயலாமையைத் தெரிவித்தான் கர்ணன்.

“இப்போர் நடந்தால் அறமே வெல்லும். நீ, துரியோதனன், துரோணாச்சாரியார் உட்பட நிறையப்பேர் வீர சுவர்க்கம் எய்துவீர்கள். எனவேதான் வெற்றிவீரனாகத் திகழ்வாயாக என்று உன்னை வாழ்த்த முடியாது போய்விட்டது. இருப்பினும், உனது வீரம் இவ்வுலகம் உள்ளவரை அனைவராலும் புகழப்படும் என்று நான் வாழ்த்துகிறேன்.” என்ற பீஷ்மரிடம், “நான் அதை அறிந்து கொண்டேன்!” என்று பதிலிருத்துவிட்டுத் தயங்கி நின்றான் கர்ணன்.

“கர்ணா! கடைசியாக உன்னிடம் சொல்லவேண்டியது இன்னுமொன்றும் இருக்கிறது! பாண்டவர்கள் அணியில் அர்ஜுனன் ஒருவன்தான் உனக்கும், எனக்கும் இணையான வில்லாளியாவான். அவனை எதிர்த்துப் போரிட ஒரு பீஷ்மனோ, அல்லது ஒரு கர்ணனோதான் கௌரவர்கள் அணியில் இருக்க வேண்டும். அதுதான் யுத்த தர்மமாகும். ஒரே சமயத்தில் நம் இருவரையும் எதிர்த்துப் போராடும் நிலைக்கு அர்ஜுனனை உட்படுத்துவது அதர்மமாகும். கௌரவர்களின் படைத்தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் – யுத்த தர்மத்தை என்றுமே மீறாத நான் – எப்படி அதைச் செய்ய இயலும்? இந்த விளக்கத்தை அனைவரின் முன்னரும் சொல்லி, போரில் கலந்துகொள்ளாதே என்று, கௌரவர்களின் படைத்தலைவனாக உனக்கு நான் எப்படி ஆணை இட முடியும்?

“எனவேதான், என் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு, பெரும் தேர்வீரனாகிய (அதிரதன்) உன்னை, அரைத் தேர்வீரன் (அர்த்த ரதன்) என்று இகழ்ந்தேன்! நீயாகவே, ‘இந்தப் பீஷ்மர் போர்க்களத்தில் இருக்கும்வரை நான் போரிடமாட்டேன்!’ என்று சூளுரைக்கச் செய்துவிட்டேன். அதற்காக, இந்தக் கிழவனைக் கடைசிவரை வீரனை இனம் கண்டுகொள்ள இயலாத கயவன் என்று முடிவு செய்துவிடாதே கர்ணா!” என்று தழுதழுத்த குரலில் வேண்டினார் பீஷ்மர்.

அப்படியே நெகிழ்ந்து போனான் கர்ணன். “பீஷ்மப் பாட்டனாரே! என் மனதைப் புழுவாகக் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு விடை அளித்துவிட்டீர்கள். எப்பொழுது என்னைத தங்களுக்கு இணையான வீரன் என்று சொன்னீர்களோ, அப்பொழுதே என் மனம் பெருமிதத்தில் திளைத்து, மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடுகிறது. தங்களிடமிருந்து இதைவிடச் சிறந்த வாழ்த்து வேறென்ன கிடைக்கக் கூடும்? வீரனுக்கு வீரனாக என்னை நீங்கள் உயர்த்தியது, இப்பிறவியில் எனக்குக் கிட்டிய பெரும் பேறே ஆகும். நான் புகழோடு வீர மரணம் எய்தும்படி வாழ்த்துங்கள்!” என்று வேண்டி நின்றான் கர்ணன்.

இரு கரங்களையும் உயர்த்தி அவனை வாழ்த்தினார் பீஷ்மப் பாட்டனார்.

அவரை வணங்கிவிட்டு, தான் வீழப் போகும் போர்களத்தை நோக்கித் தெளிந்த மனத்துடன் நடந்தான் மாவீரன் கர்ணன்.

 

  • P P                      P

 

Series Navigationநினைவிருக்கும் வரை நிலைத்திருக்கும் பெயர் – சு.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலிஎல்லை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *