மாதவன் இளங்கோ
லூவன் நகர உள்வட்ட சாலையில் அமைந்த கபூசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் நான் பிடித்திருக்கவேண்டிய பேருந்து அப்போதுதான் கிளம்பியது.
நிறுத்தத்தை ஒட்டி இருக்கும் பத்து அடுக்குமாடிக் கட்டிடத்தில் உள்ள பல பெட்டிகளில், ஒரு சிறு பெட்டி தான் என் வீடு. டச்சு மொழி தெரியாதவர்கள், இந்த இடத்தின் பெயரை கபுசிஜ்னென்வோர் என்று உச்சரித்து இந்த ஊர் மக்களின் ஏளனச் சிரிப்பைப் பரிசாகப் பெற்றுக்கொள்வார்கள். ஆரம்பகாலத்தில் நானும் நிறைய முறை இப்படிப்பட்ட பரிசுகளை வென்றிருக்கிறேன்.
பேருந்து நிறுத்தங்களால் சூழப்பட்ட எங்கள் குடியிருப்பின் மறுபுறம் இருக்கும் ரெடிங்கனாப் நிறுத்தத்தில் என்னுடைய அலுவலகத்திற்கு செல்லும் 7, 8, 9 எண் பேருந்துகளில் ஒன்றைப் பிடிப்பது வழக்கம். ஆனால் அன்றைக்கு இரயில் நிலையத்திற்கு வெகு அருகாமையிலேயே இருக்கும் லூவன் நகராட்சி மன்றத்துக்கு செல்லவேண்டி இருந்ததால் உள்வட்ட சாலைப் பேருந்தான 601-ஐப் பிடிக்க நினைத்தேன். வீட்டை விட்டு வெளியே வந்தவுடனேயே 601-இன் பின்புறம் தெரிந்தது. ஓடிச் சென்று ஏறுவதற்குள் கிளம்பிவிட்டது. இந்த ஊர் ஓட்டுநர்கள் வேறு கடமை தவறாத கனவான்கள் ஆயிற்றே. கதவை மூடிவிட்டு கிளம்பிவிட்டால், மீண்டும் நிறுத்தமாட்டார்கள்.
அடுத்த பேருந்து வருவதற்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் காத்திருக்கவேண்டும். உலகத்திலேயே எனக்கு பிடிக்காத விஷயம் காத்திருப்பது, குறிப்பாக இந்த பேருந்து நிலையத்திலும், இரயில் நிலையத்திலும் காத்திருப்பது. ஏழு, எட்டு, ஒன்பதுகளும் இரயில் நிலையம் செல்லும். ஆனால் அவை நகருக்குள்ளே உள்ள சந்து பொந்துகளில் ஆடி அசைந்து சென்று இரயில் நிலையத்தை அடைவதற்குள் தலை கிறுகிறுத்து விடும்.
வீட்டிற்கு திரும்பப் போய்விட்டு வரலாமா என்று கூடத் தோன்றியது. இன்னும் சில நிமிடங்கள் இங்கு தான் நிற்கவேண்டும். கைபேசியை எடுத்து முகநூலில் மேலும் கீழாகத் தள்ளி நிலைத்தகவல்களைப் பார்ப்பதற்கு அலுப்பாக இருந்தது.
நிறுத்தத்தில் எனக்கெதிரே உல்லாசப் பேருந்தான ஓஸ்டண்டுரேய்க் நின்றுகொண்டிருந்தது. வழக்கமாக இதுபோன்ற பேருந்துகள் வெளிவட்ட சாலைக்கு மறுபுறமுள்ள சதுக்கத்தில் தான் நிற்கும். அன்றைக்கு மட்டும் ஏன் அங்கு நிற்கிறது என்று தெரியவில்லை. அதுவும் வெகுநேரமாக. பேருந்துக்குள் ‘உலகத்தின் பாதி’ பல நிறங்களில் அமர்ந்திருந்தது.
நிறுத்தத்திற்கு எதிரே, உள்வட்ட சாலைக்கும் வெளிவட்ட சாலைக்கும் இடையே ஒரு பெரிய பாலமும், அதன் கீழே ஒரு பதினைந்து கார்கள் மட்டுமே நிற்கக்கூடிய தரிப்பிடம் இருக்கும். ஓஸ்டண்டுரேய்க்கிற்குள் இருந்த சில பயணிகள் மட்டும் நின்றுகொண்டு கண்ணாடி ஜன்னலினூடே அந்தத் தரிப்பிடத்தைப் சுவாரசியமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அங்கே நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு பின்னாலிருந்து யாரோ ஒரு மனிதர் உரக்கக் கத்திக்கொண்டு இருப்பது கேட்டது. ஒரு கறுத்த மொட்டைத் தலை இங்குமங்கும் நகர்ந்து கொண்டிருப்பது மட்டுமே எனக்குத் தெரிந்தது. சொகுசுப் பேருந்திலிருந்து பார்ப்பவர்களுக்கு ஒருவேளை அங்கு நடக்கும் விந்தையும் அந்த மனிதரும் தெளிவாகத் தெரியக்கூடும். எனக்கு சரியாகத் தெரியவில்லை.
அங்கே இரண்டு மனிதர்கள் சண்டைப் போட்டுக்கொண்டிருக்கிறார்களோ என்று நினைத்த வேளையில், கார் மறைவிலிருந்து வெளியே வந்து என் கண்களுக்குத் தென்பட்ட அந்த மனிதர் ஆக்ரோஷமாக கைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். அவரது உடலின் அத்தனை அங்கங்களும் பேசிக்கொண்டிருந்தன என்று சொல்லுமளவிற்கு அவருடைய உடல்மொழி பயமுறுத்தக்கூடிய விதத்தில் இருந்தது. அருகிலிருந்த காரை காலால் எட்டி உதைத்தார். பாலத்தின் பக்கம் ஓடிச்சென்று அதன் சுவரைக் குத்தினார். வானத்தைப் பார்த்துக் கத்தினார். இது உறுமலா, ஓலமா, கதறலா அல்லது அனைத்தும் கலந்த ஒன்றா?
திடீரென்று திரும்பியவர் சடாரென குனிந்து சாலையை குத்துசண்டையில் குத்துவது போல் அவரது இடது கை முஷ்டியால் குத்தினார். அப்படிக் குத்தும்போதும் அவர்போட்ட சத்தம் இருக்கிறதே! நான் மட்டும் அவ்வாறு கத்தியிருந்தால், ஒன்று என் தொண்டையிலிருந்து குருதி கிளம்பியிருக்கும் அல்லது நான் சற்றுமுன் தின்ற இட்லி வாந்தி வடிவம் பெற்றிருக்கும்.
அவர் ஒவ்வொருமுறை கத்தும் போதும், குத்தும் போதும், குதிக்கும் போதும் எனக்கெதிரே இருந்த சொகுசுப் பேருந்து பயணிகளின் சிரிப்பை பார்த்திருக்கவேண்டும். ஏதோ ஒரு தெரியாத காரணத்திற்காக நின்று கொண்டிருக்கும் அந்த பேருந்துவாசிகளுக்கு கிட்டத்தட்ட அவர் ஒரு வித்தைக்காரராகவே தெரிந்திருக்க வேண்டும்.
சில பயணிகள் இது எவற்றையுமே கண்டுகொண்டதாய் தெரியவில்லை. வேறு சிலர் சலனமின்றி பார்த்துக்கொண்டிருந்தார்கள், என்னைப்போலவே. எனக்கருகே என்னைப்போலவே பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்த இருந்த கனவான் அந்த மனிதரைப் பார்த்தார். ஒரு மெல்லிய புன்னகையுடன் என்னைத் திரும்பிப் பார்த்தார், நான் அவரைப் பார்க்கும் போது, நெற்றியைத் தேய்த்துக்கொண்டார், பிறகு மேலே பார்த்தார். ஏனோ இதையே திரும்பத் திரும்ப செய்துகொண்டிருந்தார். மேலே உப்பரிகையிலிருந்து வேறு ஒரு கூட்டம் நடப்பதை சலசலப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது.
அந்த மனிதரைப் பார்த்தபோது, என்ன நடக்கிறது என்று புரியாததாலோ என்னவோ எனக்கு அவர் மீது பரிதாபமே வரவில்லை. அதேசமயம் அதில் சிரிப்பதற்கும் எதுவும் இல்லை என்றும் தோன்றியது.
யாரிடம் இப்படி அடித்தொண்டையிலிருந்து ஓலமிட்டு திட்டியபடி பேசிக்கொண்டிருக்கிறார்? பிரஞ்சு மொழி தான். ஆனால், எனக்கு என் காதருகே வந்து, சாத்வீகமாக பிரஞ்சு மொழியில் யாராவது ஏதாவது பேசினாலே அதில் பாதிகூட விளங்காது. இருபதடி தூரத்தில் நின்றுகொன்று இந்த வேகத்திலும், கோபத்திலும், கொந்தளிப்பிலும் கத்திக்கொண்டிருந்தால் எனக்கு என்ன புரியப்போகிறது, அது பிரஞ்சு மொழியில் எழுப்பப்படும் சத்தம் என்பதைத் தவிர.
எதிர்முனையில் இருப்பது ஆணாக இருக்குமா? பெண்ணாகவும் இருக்கலாம். ஆனால், இதுபோன்று ஒரு மனிதர் கத்திக்கொண்டிருப்பதை யார் இவ்வளவு நேரம் பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருக்கக்கூடும்? இவர் மீது அதீத அன்பு வைத்தவர்களுக்கு மட்டுமே இத்தனை பொறுமை சாத்தியம். ஒருவேளை, எதிர்முனையில் இருப்பவனும் இதே போல் கத்திக்கொண்டிருக்கிறானோ என்னவோ? அல்லது கத்திவிட்டு போகட்டும் என்று சாமர்த்தியமாக கைபேசியை மேஜை மீது வைத்துவிட்டு வெளியே சென்று விட்டார்களா? இப்படி இருக்குமோ? இந்த மனிதர் நிச்சயம் நடித்துக்கொண்டிருக்கிறார். இல்லை. அதற்கும் வாய்ப்பே இல்லை. அந்த மனிதரின் கத்தலில் ஒரு உண்மை தெரிகிறது.
அந்த ஓலம் எனக்குப் பழக்கப்பட்டதுதான். அடிபட்ட தெருநாய்கள் வலியில் இப்படி ஓலமிடுவதைப் பலமுறை பார்த்திருக்கேன். பரிதாபமாக இருக்கும். இந்த மனிதரும் அப்படி ஏதோவொரு பொறுக்கமுடியாத வலியை நிச்சயம் அநுபவித்துக் கொண்டிருக்கவேண்டும். தலை வலிக்கும், கால் வலிக்கும் மருந்திருக்கிறது.ஆனால் மனவலிக்கு? அதற்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஏனோ அந்த வலி இருப்பவர்கள் மருத்துவத்தை நாடவும் ஏற்கவும் மறுக்கிறார்கள். அப்படி அவர்களே ஏற்றுக்கொண்டாலும், சுற்றி இருப்பவர்கள் அவ்வளவு எளிதாக அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. இப்போது எனக்கு அந்த மனிதர் மீது பரிதாபம் பிறந்திருப்பதை உணரமுடிந்தது.
இவருக்கென்ன காதல் தோல்வியா? மணமுறிவா? பண அழுத்தம் தந்த மன அழுத்தமா? ஒருவேளை வியாபாரத் தோல்வியா? எதிர்முனையிலிருப்பவன் வியாபாரக் கூட்டாளியாக இருப்பானோ? ஏமாற்றிவிட்டானா? அப்படி இருக்க வாய்ப்பு குறைவு. இங்கெல்லாம் ஒப்பந்தம் இல்லாமல் திருமணம் கூட செய்து கொள்ளமாட்டார்களே. மேலும் இவரைப் பார்த்தால் வியாபாரியாகவும் தெரியவில்லை.
ஏனோ எனக்கு இது நிச்சயம் தோல்வி சார்ந்த வலியாக இருக்கமுடியாது என்று தோன்றுகிறது. துரோகம் சார்ந்த வலியாக இருக்கலாம். ஆம். அதுவாகத்தான் இருக்க வேண்டும். அந்தக் கதறல், உடல்மொழி அத்தனையிலும் துரோகத்தின் வலி வெளிப்பட்டுக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அது எந்த வகை துரோகம் என்பது அவசியமில்லை. துரோகத்தில் என்ன வகை வேண்டிக்கிடக்கிறது. ஒருவேளை எதிர்முனையில் இருப்பவர் தெரியாமல் துரோகமிழைத்துவிட்டாரோ? அதனால் தான் பொறுமையோடு இவர் கத்துவதைக் கேட்டுக்கொண்டு அழுதுகொண்டு இருக்கிறாரோ என்னவோ. ஆனால், துரோகத்தைக் கூட தெரியாமல் செய்ய முடியுமா?
நான்கூட துரோகம் செய்திருக்கிறேன். நினைவறிந்து ஒரே முறை. அதுவும் ஒரு உற்ற நண்பருக்கு. சந்தர்ப்ப வசத்தால் செய்த துரோகம். ஆனால் அதற்கு பதிலாய் அத்தனையும் அனுபவித்தாகிவிட்டது. இதே போன்று ஒருமுறை எதிர்முனையில் நின்றுகொண்டு மன்னிப்பு கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் இதுபோலெல்லாம் கத்தவில்லை. நிதானமான மனிதர். இல்லை, அவரை மனிதர்கள் வகையில் சேர்க்கக்கூடாது. தெய்வம். துரோகத்துக்கு பிராயச்சித்தம் செய்யவும் வழி செய்து கொடுத்தவர். ஆனால், இங்கே இந்த முனையில் இப்படிப்பட்ட மனிதர் இருப்பதால், அங்கே அந்த முனையில் அப்படிப்பட்டவர் இருப்பதாகவெல்லாம் என்னால் அநுமானிக்க முடியவில்லை.
ஓஸ்டண்டுரேய்க் கிளம்ப ஆயத்தமானது. பயணிகளின் முகத்தில் கேளிக்கை முடியப்போகும் சோகமும், அதேசமயம் அவரைக் கடப்பதற்குள் என்ன நடக்கும் என்கிற ஆர்வமும் தெரிந்தது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே, அவர்களுக்கான உச்சக்கட்ட விருந்தாக அந்த மனிதர் கைபேசியை பாலத்தின் சுவர்மீது வேகமாக வீசி எறிந்தார். எறிந்த வேகத்தில் அது சுக்கு நூறாகப் போயிருக்கும். ஐபோனோ, சாம்சங்கோ என்னவென்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அது இனிமேல் நிச்சயம் பயன்பட வாய்ப்பேயில்லை.
ஒரு நல்ல விஷயம். இப்படி வீசி எறிந்ததில் அவருடைய ஆத்திரத்தில் ஒரு மூன்று சதவீதம் குறைந்திருக்க வாய்ப்புள்ளது.
எஞ்சியுள்ள ஆத்திரத்தை ஏந்திக்கொண்டு அருகே இருந்த காரில் ஏறி அமர்ந்தார். அடுத்த சில நொடிகளில் அந்தக் கார் க்ரீச்சென்ற சத்தத்தோடு திரும்பி, சாலையில் சீறிப் பாய்ந்து சென்றது.
அதுவரை சலனமற்று இருந்த என் உள்ளமும் உடலும் அப்போது நடுங்க ஆரம்பித்தது.
- தினம் என் பயணங்கள் -33 என்னால் ஒரு நல்ல காரியம்
- பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா, பூமியைப் போன்று நில நடுக்க அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] உள்ளது.
- உல்லாசக்கப்பல் பயணம் (ஆசிரியர் கிருத்திகா)
- பெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் போட்டியில் ஜெயந்தி சங்கருக்கு 2 பரிசுகள்
- “கையறு நிலை…!”
- கடவுளும் வெங்கடேசனும்
- ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் நூலுக்கு கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 21
- ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி-5
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 92
- கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014
- “மூட்டை முடிச்சுடன்….”
- நினைவிருக்கும் வரை நிலைத்திருக்கும் பெயர் – சு.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி
- வீரனுக்கு வீரன்
- எல்லை
- புறநானூற்றின் வழி அறியலாகும் ஆள்வோருக்கான அறிவுரைகள்
- எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்ற “அரேபிய இரவுகளும் பகல்களும்” புத்தகம் பற்றிய கலந்துரையாடல்
- தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்
- ‘மேதகு வேலுப்போடி’
- கோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு – பண்பாடும் மன உணர்வும்
- பாவண்ணன் கவிதைகள்
- கபுசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நடுக்கம்
- வாழ்க்கை ஒரு வானவில் – 20
- தொடுவானம் 33. அகர முதல எழுத்தெல்லாம்
- நொண்டி வாத்தியார்