சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
http://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
https://www.youtube.com/watch?
http://video.
https://www.youtube.com/
**************
சூரிய குடும்பத்தில் முதன்முதல்
வியாழனும், சனியும்
தோன்றியதின் மர்மம் என்ன ?
பூமிக்குக் காவற் படைகளாய்க்
கோள்கள் சுற்றுவதின் காரணம் என்ன ?
நீள்வட்ட வீதியில் கோள்கள்
மீள்வதின் நியதி என்ன ?
அண்டக் கோள்கள் அனைத்தும்
சீரான கோணத்தில் சாய்ந்து
ஒரே திசை நோக்கி
ஓடிச் சுழல்வ தென்ன ?
ஒரே மட்டத்தில் அண்டக் கோள்கள்
சூரிய இடுப்பைச்
சுற்றுவதின் மர்மம் என்ன ?
யுரேனஸ் அச்சு
பேரளவில் சரிந்த தென்ன ?
பரிதி மண்டலத்தில்
வக்கிரச் சுற்றுச் சுழற்சியில்
சுக்கிரன் மட்டும்
திக்கு மாறுவ தென்ன ?
நிலவால் அலை பொங்கும் !
பருவங்கள் மாறும்
பூமியின் சாய்வு அச்சால் !
வாயுக் குடை பிடித்துச் சூழ்வெளியில்
உயிரினம் தழைப்ப தென்ன ?
+++++++++++++++
முன்பு ஏற்படுத்திய கணனிப் போலி வடிவமைப்புகளில் செவ்வாய்க் கோள் உண்டானது அறியப்பட வில்லை. ஐந்து முறைகள் போலி வடிவமைப்பு திருப்பிச் செய்தால் ஒருமுறை செவ்வாய்க் கோள் இருப்பைக் காட்டுகிறது. இவை பூமியை ஒத்த கோள்களின் இயக்கப்பாடு [Dynamics of the Terrestrial Planets] என்னும் வினைப்பாட்டில் காணப்படுவது.
ரிபெக்கா ஃபிஷ்சர் [சிகாகோ பல்கலைக் கழக பூதளவியல் விஞ்ஞான ஆய்வுப் பட்டப் படிப்பாளி]
யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் கருவிகள் இன்னும் சீராகப் பணியாற்றிச் சூரியப் புயல், அகிலக் கதிர்கள், சக்தி வாய்ந்த துகள்கள், சூரிய காந்த அரங்கம் பற்றிய தகவலைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. . . . ஏவிய நாளிலிருந்து (அக்டோபர் 1990) எந்தக் கருவியும் இதுவரைப் பழுதாக வில்லை !
ரிச்சர்டு மார்ஸ்டன், யுலிஸிஸ் சூரிய விண்ணுளவித் திட்ட மேற்பார்வை விஞ்ஞானி (European Space Agency) [ஏப்ரல் 15, 2008]
சூரிய மண்டலச் சுற்றுக் கோள்கள் முதலில் எப்படித் தோன்றின ?
4.6 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு சூரிய குடும்ப அகக்கோள்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் போன்றவை, புறக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை எப்படி, எப்போது தோன்றின என்பதற்குச் குறித்தடங்கள் ஏதேனும் உள்ளனவா ? இல்லை ! பூமியை நெருங்கிச் செல்லும் முரண்கோள்கள், [Asteroids] வால்மீன்கள், விண் தெறிப்பாறைகள் போன்றவை மூலம் ஓரளவு விளக்கங்கள் கிடைக்கின்றன. கோள்களின் திணிவுப் பிண்டம் பாறையா அல்லது வாயுவா, அண்டக் கோள்களின் வடிவப் பரிமாணம், தனித்துவச் சுற்றுப் பாதைகள் ஆகியவை இயற்கையாக நேர்ந்த விளைவுகளின் கிளை விளைவுகளா, அல்லது இயற்கையாகப் பிரபஞ்சத்தில் நிகழ்ந்த அபூர்வ விளைவுகளா ? தெரியாது ! வானியல் விஞ்ஞானிகள் இத்தகைய வினாக்களுக்கு மின்கணனிப் போலி வடிவுகள் அமைத்துப் [Computer Simulations] சரியான பதில் தேடிய வண்ணம் இருக்கிறார்.
புதிய கணனிப் போலி வடிவமைப்புகள் காட்டும் அண்டக்கோள் தோற்றக் கருத்துக்கள்
புதிய கணிப்பு வடிவமைப்புகள் செய்து பார்த்ததில் உதாரணமாக அகக்கோள் செவ்வாய் ஒருசில நிபந்தனைகளுக்கு உட்பட்டுத் தோன்றிய ஓர் அபூர்வக் கோள் என்று காட்டியுள்ளன. குறைந்த பட்ச வடிவமைப்பு யூகிப்புகள் [Parameters] முதலில் செம்மையாக இருத்தல் அவசியம். மேலும் துவக்க நிலை யூகிப்புகள் பொருந்தி அமைய வேண்டும். இம்முறைகள் மூலம் ஒரு காலத்தில் நீர்வளம் இருந்த செவ்வாய்க் கோள், நமது நீர்க்கோள் பூமி எவற்றிலிருந்து தோன்றி யவை என்று அறிய முடியும். செந்நிறக் கோள் செவ்வாயில் இப்போது நடமாடி உளவும் மூன்று தள உளவிகள் [Mars Landing Rovers : Opportunity, Spirit & Curiosity] அனுப்பிய தகவல்களில் நீரோட்டம் ஒரு காலத்தில் இருந்து ஹேமடைட் [Hematite] என்னும் அயர்னாக்சைடு செவ்வாய்க் கோளத்தில் உள்ள தென்று தெரிய வருகிறது.
சிகாகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பூதளவியல் விஞ்ஞான ஆய்வுப் பட்டப் படிப்பாளி, ரிபெக்கா ஃபிஷ்சர் போலி வடிவமைப்புகள் மூலம், பூமியும், பூமியைப் போன்ற மற்ற சூரிய மண்டல அண்டக் கோள்களும் எப்படித் தோன்றின என்று ஆராய்ந்து வருகிறார். சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு வாயுத் தூசிகள் பிணைந்து, பல்லாண்டுகள் ஈர்ப்பு விசையால் முகில் திரண் டு பூமியும், அதன் நிலவும் உருவாயின. அப்போது எந்த மாதிரி சூழ்வெளியும், நிபந்தனைகளும் சுற்றுப் பாதையில் நீடித்தன என்பதை அறிவது ஒரு பெரும் சவாலான செயல். அதே சமயத்தில் பூத வாயுக்கோள்களான வியாழனும், சனியும் தோன்றி எவ்விதம் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் போன்ற அகக்கோள்கள் பாதிக்கப் பட்டன என்று அறிவதற்கே கணனி போலி வடிவமைப்புகள் கணிக்கப் பட்டன. ரிபெக்கா ஃபிஷ்சர் பூத வாயுக்கோள் வியாழனும், சனிக்கோளும் அகக்கோள்கள் உருவாவ தற்கு முன்பே தோன்றியதாக நம்பினார். காரணம் இளஞ் சூரியன் முதலில் உருவாகி எஞ்சிய பேரளவு வாயு முகிலில் ஈர்ப்பு விசையில் திரண்டு வியாழனும், சனியும் தோன்றி இருக்க வேண்டும். சூரியனுக்கும், வாயுக் கோள் வியாழனுக்கும் இடையில்தான் அகக்கோள்கள் உருவாக முடியும் என்று போலி வடிவமைப்புகள் மூலம் செய்து காட்ட முடிந்தது. மேலும் பூதக்கோள் வியாழனின் சுற்றுப் பாதையும், சனிக்கோளின் சுற்றுப் பாதையும் அக்கோள்களுக்குத் தேவையான ஆவிமுகில் பிண்டங்களை [Volatiles] ஒதுக்கித் தர ஏதுவாக்கின. பூமிக்குத் தேவையான நீர்வளம் வால்மீன்கள் மூலமாய் வரவும், நைட்டிரஜன் வாயு, கார்பன் போன்ற மூலகங்களை வாயுக்கோள் வியாழனிடமிருந்துதான் பெற்றிருக்க முடியும் என்பது ரிபெக்காவின் கருத்து.
சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?
வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார். நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள். பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது ! பூதளத் தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன !
பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன. அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.
சூரிய மண்டலம் எப்படி உண்டானது ?
விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், பரிதி மண்டலம் எப்படி உண்டானது என்னும் கருத்து கடந்த 250 ஆண்டு காலமாக மாறவில்லை. 1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவெல் கென்ட் (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நிபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்: அதன்படி பேரளவு வாயு முகில் கொண்ட ஆதிச்சூரிய நிபுளா, பரிதி மண்டலத்தின் சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உண்டாக மூலாதாரப் பொருளானது ! 1796 இல் பிரெஞ்ச வானியல் நிபுணர் பியர் சைமன் லாப்பிலாஸ் (Pierre Simon Laplace) (1749-1827) அதே மாதிரிக் கோட்பாடை எடுத்துக் கூறினார். ஆனால் ஆழ்ந்த விண்வெளியை நோக்கி அவரால் அதற்குச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியவில்லை !
இம்மானுவெல் கென்ட் விளக்கிய நிபுளா கோட்பாடில் இருப்பது இதுதான் : பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு (Mass Gravity) விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன. திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி (Gravitational Contraction) வாயுக் கோள்களாகவும், திடக்கோள்களாகவும் உருவாயின.
இப்போது வானியல் விஞ்ஞானிகள் அவற்றை விபரமாகச் சொல்ல முடிகிறது. அதாவது முதலில் சூரிய மண்டலத்தின் வாயு முகில் மூலக்கூறு (Molecular Gas Cloud) முறிந்த போது அதன் விரிவு 100 AU (Astronomical Unit) [1 AU = Average distance between Sun & Earth (93 மில்லியன் மைல் /150 மில்லியன் கி.மீ.)] ஆகவும், திணிவு நிறை பரிதியைப் போல் 2 அல்லது 3 மடங்கு இருந்ததாகவும் யூகிக்கிறார்கள். அத்தகைய வாயு முகில் ஈர்ப்பு முறிவைத் (Cloud’s Gravitational Collapse) தூண்டி விட்டிருப்பது அருகில் இருந்த சூப்பர்நோவாவின் (Supernova) மின்னல் வெடிப்பில் நேர்ந்த அழுத்த அலையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. வாயு முகில் குவிந்து விழுந்த பிறகு பல முறைகளில் திணிவு சேர்ப்பு விரைவானது. முகில் திணிவின் உஷ்ணம் அதிகரித்து அது சுழலத் தொடங்கியது. வாயுப் பிண்டம் தங்கி அது வட்டத் தட்டு வடிவாக மட்டமானது. மிகையான ஈர்ப்பு சேமிப்புச் சக்தி (Gravitational Potential Energy) வெப்பமாக மாறி வாயு முகில் அடர்த்தி (Density) அதிகமானது. அதுவே கோள்களின் உட்கரு உலோக மாகப் பின்னால் திரட்சி யானது.
அண்டக் கோள்கள் உண்டான தெப்படி ?
வட்டவியல் திணிவு நெம்பு நிலைப்புப்படி (Conservation of Angular Momentum) வடிவம் சிறுகச் சிறுகச் சுழலும் மட்டமான தட்டின் வேகம் மிகையானது. மென்மேலும் விழுந்து சேரும் வாயுவும், தூசி துணுக்குகளும் சேர்ந்து கொண்டு முன்னோடிக் கோள் தட்டு (Proto-Planetary Disk) மையம் தடித்து ஓரம் மெலிவாகித் தமிழகத்தின் “ஆப்பம்” போல் (Pancake) உருவாகியது. நடுவில் மகா ஈர்ப்புச்சக்தி வாய்ந்த உட்கரு எழுவதும் அப்பால் விளிம்பு நோக்கிச் செல்லச்செல்ல வலுகுன்றிய கோள்கள் உருவாவதும் எப்படி என்று விளக்கிச் சொல்லலாம் ? பேரளவு வாயுப் பிண்டம் செழித்த நிபுளாவைச் சுற்றிலும் அதன் பூத ஈர்ப்பு மண்டலம் காந்த சக்தியால் சூடாக உள்ளது ! அந்த ஈர்ப்பு வாயுத் துணுக்குகளுக்கு சுழற்சியை உண்டாக்கித் தன் பூத ஈர்ப்புக் குழியில் சுற்றத் தூண்டுகிறது. அவ்விதம் சிறுகச் சிறுக்கச் சேர்ந்துதான் சுழலும் கிருஷ்ணச் சக்கிரம் போல் அசுர வடிவாகி வட அமெரிக்க வேனிற்தள ஹர்ரிக்கேன் (Tropical Hurricanes) சூறாவளிகள் உருவாகின்றன !
பேரளவு இயக்கம் மையத்தில் உண்டாகி முன்னோடிச் சேய் விண்மீன் (Infant Proto-Star) விரைவாக வாயுத் திணிவைத் திரட்டி சூரியனாகியது. அதன் பிறகு 50 மில்லியன் ஆண்டுகளாக பரிதி போதுமான வாயு நிறையைச் சுருட்டிப் பூரண எரிநிலை அடைந்து பிணைவு சக்தி தூண்டப் பட்டு சுயவொளி விண்மீனாக மாறியது. தட்டின் விளிம்புகளில் மேலும் வாயுத் துணுக்குகள் சேமிப்பாகி அங்குமிங்கும் கண்ட இடங்களில் சிறிதும் பெரிதுமாக வாயுவிலும் திடப் பிண்டத்திலும் கோள்கள் உண்டாயின.
பரிதி வெப்ப அணுக்கரு சக்தியால் தூண்டப் பட்டதும் அது அசுரப் புயலை எழுப்பித் தூசிகளையும் துணுக்குகளையும் தட்டிலிருந்து வெளியேற்றியது. அப்போது பூத வாயுக் கோள்கள் மென்மேலும் பெருக்க இயலாது போயின. தட்டில் தங்கிய மீத வாயுக்கள் பேரளவு வெப்பத்தாலும், ஈர்ப்பு விசையாலும் மூலகமாற்றம் நிகழ்ந்து குளிர்ந்து திரண்டு சிலிகேட்களும், உலோகங்களும் (Silicates & Metals) உண்டாயின. துணுக்குகளும், தூசிப் பனிகளும் மற்ற கோள்களின் முன்னோடிகளைக் கட்டி மென்மேலும் பெருக்க வைத்துப் பேரளவு அண்டங்களாக்கின.
பரிதி மண்டலத்தின் புறக் கோள்கள் பனி அண்டங்களாய்க் கட்டுமான மாகின. வாயுக் கோள்களின் உட்கரு அடர்த்தியாகி வாயு முகில்கள் அவற்றை இறுகிப் போர்த்திக் கொண்டன. புறக்கோள்களைச் சுற்றிலும் பல துணைக்கோள்கள் உண்டாகிச் சுற்றத் தொடங்கின. வாயு முகில்கள் வீசி எறியப்பட்டு வால்மீன்களாக “ஓர்ட் முகில்” மந்தையில் (Oort Cloud of Comets) சிக்கின. ஓர் அசுரப் பிண்டம் பூமியை மோதி நிலவு உண்டானது. செவ்வாய்க் கோளுக்குச் சந்திரன்கள் ஏற்பட்டுச் சுற்ற ஆரம்பித்தன. இவை அனைத்தும் இம்மானுவெல் கான்ட் 250 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய நிபுளாக் கோட்பாடைத்தான் முற்றிலும் மெய்ப்பிக்கின்றன.
பரிதி மண்டலப் படைப்பில் காணும் சில புதிர்கள் !
அண்டக் கோள்கள் ஏன் பரிதியை ஒரே தளமட்டத்தில் நீள்வட்ட வீதிகளில் சுற்றுகின்றன ? அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணம் உள்ளது ? அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் சுற்றி வருகின்றன ? சூரியனையும் மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஓர் விந்தைதான். கோள்களின் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவதும் ஒரு விந்தைதான். இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.
யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் பணி தொடர்கிறது !
ஏப்ரல் 15, 2008 ஆம் தேதி அண்டவெளித் தேடல் விஞ்ஞானிகள் 1990 ஆண்டு முதல் பதினேழு ஆண்டுகளாய்ப் பரிதியைச் சுற்றி ஆராய்ந்து வரும் “யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியைப்” (Ulysses Solar Probe) பூமி ஆட்சி அரங்கிலிருந்து தளர்த்தி ஓய்வாக இருக்கவிட்டு 2013 ஆண்டில் மீண்டும் ஆய்வு செய்ய மாற்றியுள்ளார் ! அப்போதுதான் மறுபடியும் பரிதியின் அடுத்த உச்சநிலைக் கதிராட்டம் தொடங்கும் ! அதுவரை விண்ணுளவியின் ராக்கெட் உந்தல் எரிசக்தியை வீணாக்காமல் சேமித்து வைத்து சில இயக்கங்களையும் முடக்கி உளவி ஓய்வெடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது ! பரிதியிலிருந்து 125 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றிவரும் நீள் வட்ட வீதியில் (Helio Centric Orbit) உறங்கி வரும் கருவிகளைச் சூரிய கனல் வெப்பமே எழுப்பிவிடும் தகுதி பெற்றது. இப்போது ஓய்வெடுக்கும் உளவி பரிதியை விட்டு அப்பால் நகன்று 250 மில்லியன் தொலைவை 2010 ஆண்டில் அடைந்து விடும்.
[தொடரும்]
தகவல்கள்:
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.
1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 http://www.thinnai.com/?
16 http://www.thinnai.com/?
17 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
18. Spaceflight Now -Breaking News. Controllers Working to Keep “Ulysses Sun Orbiter Alive” By :Stephen Clark (www.spaceflightnow.com/news/
19. http://www.astrobio.net/topic/
20. http://www.astrobio.net/
21. http://www.astrobio.net/news-
22. http://techn4all.com/
******************
S. Jayabarathan (jayabarathans@gmail.com) [
- யேல் பல் கலையில் அயான் ஹிர்ஸி அலி உரை – கருத்து சுதந்திரத்திற்கு முஸ்லிம் மாணவர்களின் எதிர்ப்பு
- நிஸிம் இசக்கியேல் – இருளின் கீதங்கள் – வயது வந்தோருக்கான கவிதைகள்
- ஒரு புதிய மனிதனின் கதை
- வாழ்க்கை ஒரு வானவில் – 21
- ஈரத்தில் ஒரு நடைபயணம்
- எக்ஸ்ட்ராக்களின் கதை
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 22
- பேசாமொழி 22வது இதழ் வெளியாகிவிட்டது
- தொடுவானம் 34. சிறு வயதின் சிங்கார நினைவுகள்
- பாவண்ணன் கவிதைகள்
- ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-6
- அமர காவியம்!
- சூரிய மண்டலத்திலே முதன்முதல் வாயுக் கோள்களான பூத வியாழனும், சனியும் தோன்றி இருக்க வேண்டும் என்று கணனிப் போலி வடிவமைப்புகள் [Simulations] மூலம் அறிய முடிகிறது.
- உஷாதீபன் “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பு பரிசு
- தினம் என் பயணங்கள் -34 திரு. வையவன் வருகை
- இந்த நிலை மாறுமோ ?
- அப்பா
- அழகுக்கு அழகு (ஒப்பனை)
- பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு
- பாகும் பாறையும் – பெருமாள் முருகன் நாவல் – பூக்குழி
- வாக்குமூலம்
- சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1
- அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்
- சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 93
- என் சுவாசமான சுல்தான் பள்ளி
- தந்தையானவள் – அத்தியாயம்-1