சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

 

முனைவர்சி.சேதுராமன், தமிழய்வுத் து​றைத்த​லைவர்,  மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

 1. Mail: Malar.sethu@gmail.com

சங்க இலக்கியங்கள் உலக இலக்கியங்களோடு வைத்து எண்ணத்தக்க செவ்வியல் இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இவை பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களது பழக்க வழக்கங்களையும் எடுத்துரைக்கும் காலப்பெட்டகங்களாக மிளிர்கின்றன. பழந்தமிழகத்தில் மகளிர் கல்வியறிவில் சிறந்து விளங்கினர். கவிபாடும் வல்லமை பெற்றுத் திகழ்ந்தனர். தங்களின் புலமையாற்றலால் பல புதுமைகளைப் படைத்த பூவையராகப் பல பெண்கள் திகழ்ந்திருக்கின்றனர். இவ்வாறு திகழ்ந்த மகளிரின் வாழ்க்கையை சங்க இலக்கியங்கள் காலக் கண்ணாடி போன்று எடுத்துரைக்கின்றன. அதிலும் கைம்பெண்களை சமுதாயம் எங்ஙனம் நடத்தியது என்பதையும் இவ்விலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

கைம்பெண்

சங்ககாலப் பெண்கள் திருமணத்திற்குப்பின்  பிறந்த வீட்டில் பெற்றோருடன் உடனுறைந்து வாழவில்லை. கணவனுடன் இணைந்து இன்ப வாழ்வு வாழ்ந்தனர். பழங்காலத்தில் வாழ்ந்த பெண்கள் கணவரைப் பேணும் பண்புடையவர்களாக விளங்கினர்.  கணவனை இழந்த பெண்களைக் கைம்பெண்கள் என்று வழங்கினர். கணவன் இறந்த பின்னர் பெண்கள் கணவனுடன் தங்கள் உயிரையும் மாய்த்துக் கொண்டனர். அதைவிடப் பெண்கள் கைமை நோன்பு நோற்று தமது வாழ்க்கையைக் கழித்தனர் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

கைம்மைக் கோலம்

வளையல்களைக் களைதல்

பெண்களின் ஒப்பனை கணவன் இறந்த நிலையில் சிதைவு பெற்று கைம்மைக்குரிய தோற்றத்தை உருவாக்குகிறது. கணவனை இழந்து வாழும் பெண்கள் மங்கலப் பொருள்களை நீக்கி வாழ வேண்டும். வளையல் அணிதல் கூடாது என்று சமுதாயம் வலியுறுத்தியது. இதனை,

‘‘வாழைப் பூவின் வளைமுறி சிதற’’ (புறம்., 237.10-12)

‘‘தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடி’’ (புறம்.,238.5-7)

என்ற புறநானூற்றுப் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன. வெளிமான் என்ற மன்னன் இறக்க அவனுடைய உரிமை மகளிர் தங்கள் கைகளில் அணிந்திருந்த வளையல்களை உடைத்தெறிந்தனர். இதனால் அவர்களது கைகளின் கவின் குறைந்து பார்ப்பதற்கு வெறுமையாகக் காட்சியளித்தன என்று பெருஞ்சித்திரனார் குறிப்பிடுகின்றார்.

அணிகலன்களைக் களைதல்

கணவனுடன் வாழ்கின்ற பெண்களே பல்வேறு அணிகலன்களை அணிந்திருப்பர். கணவனை இழந்த பெண்கள் எந்தவிதமான அணிகலன்களையும் அணிதல் கூடாது. கரிகாற் பெருவளத்தான் மறைந்தான். அவனால் ஆதரிக்கப்பெற்ற அனைவரும் வருந்தினர். அவனது உரிமை மகளிர் தாங்கள் அணிந்திருந்த அனைத்து அணிகலன்களையும் களைந்து பெருந் துயருற்றனர். இதனை அவனது இறப்பினைக் கண்டு கலங்கிய கருங்குழலாதனார் எனும் புலவர்,

‘‘பூ வாட் கோவலர் பூவுடன் உதிரக்

கொய்து கட்டுஅழித்த வேங்கையின்

மெல்லியல் மகளிரும் இழை களைந்தனரே’’’ (புறம்.,224,15-17)

என்று துயருற்றுப் பாடுகின்றார்.

கூந்தல் களைதல்

பெண்களுக்கு அழகு தருவது கூந்தல். அக்கூந்தலிலேதான் பெண்கள் மலரணிந்து மகிழ்ந்தனர். கணவன் இறந்து படவே தமக்கு அழகு தந்த கூந்தலைப் பெண்கள் களைந்தார்கள். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியபோது,

‘‘மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல்

ஒள்நுதல் மகளிர் கைம்மைகூர

அவிர் அறல் கடுக்கும் அம்மென்

குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே’’ (புறம்.25:10-14)

என்று பாடுகின்றார். நெடுஞ்செழியனே நீ படையெடுத்துப் பகைவரை அழிப்பதால், பகைவர்களது மனைவியர் கைம்மையை மேற்கொள்ள வேண்டி விளங்கித் தோன்றும் ஆற்றின் கரிய தலைமுடியினைக் களைந்தார்கள் என்று கைம்பெண்கள் கூந்தலைக் களைந்ததை எடுத்துரைக்கின்றார்.

கைம்பெண்களின் உணவும் அவர்களது நிலையும்

கணவனை இழந்த பெண்கள் மிகவும் துன்பச் சூழலில் வாழ்ந்தனர். அவர்கள் தங்களை அழகுறுத்திக் கொள்வதும் நல்லுணவு உண்பதும் சமுதாயத்தால் மறுக்கப்பட்டது. அவர்கள் மிகுந்த இழிந்த வாழ்வு வாழ்ந்தனர். தமது கணவன் இருந்தபோது மகிழ்வுடன் வாழ்ந்த மகளிர் கணவன் இறந்த பின்னர் அனைத்து இன்பங்களையும் துறந்து வாழ்ந்தனர். இதனை,

‘‘குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்

இரவலர்த் தடுத்த வாயில், புரவலர்

கண்ணீர்த் தடுத்த தண்நறும் பந்தர்

கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி

அல்லி உணவின் மனவைியொடு இனியே

புல்லென்றனையால் வளம் கெழுதிருநகர்

வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்

முனிந்தலைப் புதல்வர் தந்தை

தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே’’ (புறம்.250:3-4)

என்ற தாயங்கண்ணியாரின் பாடல் தெளிவுறுத்துகின்றது.

தலைவனை இழந்து, பொலிவிழந்து காணப்பட்ட இல்லத்தைப் பார்த்த புலவர், மாளிகையே, புதல்வருடைய தந்தை தனியிடத்தையுடைய புறங்காட்டை அடைந்தான். தாளிக்கும் ஓசை மிகுந்த திரண்ட துவையலுடன் கூடிய உணவு இரவலரை மேற்செல்லாது தடுத்துத் தன்னிடம் வருமாறு செய்யும் வாயிலினையும் தன்னால் காக்கப்பெறுவோரின் கண்ணீரைத் தடுத்து மாற்றிய குளிர்ந்த மணமுடைய பந்தலையும் உடையதாய் முன் விளங்கினை. அத்தகைய இடத்தில் மயிரைக் களைந்தும் சிறிய வளையலை நீக்கியும் அல்லியரிசியாகிய உணவுண்ணும் மனயைிவியுடன் நீ இருந்து பொலிவழிந்தாய் என்று வருந்திப் பாடுகின்றார். இதில் கைம்பெண்களின் நிலைசித்திரிக்கப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

கைம்பெண்களின் அழகிழந்த நிலை

கணவனை இழந்த பெண்கள் கூந்தல், வளையல், அணிகள் ஆகியவற்றை இழந்து பொலிவிழந்து காணப்பட்டனர். அவர்களின் அழகற்ற நிலையானது அழகற்ற இல்லம்போன்று காணப்பட்டன. இத்தகைய கைம்பெண்களின் அவல நிலையை,

‘‘நிரை இவன் தந்து, நடுகல் ஆகிய

வென்வேல் விடலை இன்மையின் புலம்பி

கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய

கழிகல மகடூஉப் போலப்

புல்லென்றனையால் பல்லணி இழந்தே’’(புறம். 262)

என்று வாள்போரில் வீழ்ந்தவனைப் பார்த்து யாழ்ப்பாணர் வருந்தி ஆவூர் மூலங்கிழார் பாடுகின்றார். இப்பாடல் கைம்பெண்களின் வாழ்க்கைநிலையை தெளிவுறுத்தும் பாடலாக அமைந்துள்ளது.

கைம்மைத் துயர்

பூதப்பாண்டியன் இறந்தான். அவனது மனைவி பெருங்கோப்பெண்டு பெருந்துயருற்றாள். தன் கணவன் இறந்த பின்னர் உயிர்வாழ்வதா? என்று கருதி தீப்பாய்ந்து உயிர்விடத் துணிந்தாள். அப்போது கைம்மைத் துயர் எத்தன்மையது என்பதை,

‘‘அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்திட்ட

காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது

அடைஇடைக் கிடந்த கைபிழி பண்டம்

வெள்எட் சாந்தொடு புளிப்பெய்து அட்ட

வேளை வெந்தை வல்சி ஆக

பரற் பெய்பள்ளிப் பாய்இன்று வதியும்

உயவல் பெண்டிரேம் அல்லேம்மாதோ

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்

நுமக்கு அரிதாகுகதில்ல. எமக்கு எம்

பெருந்தோட் கணவன் மாய்ந்தென’’ (புறம்.,246)

என்று எடுத்துரைக்கின்றாள்.

சான்றோரே! அணிலின் மேலுள்ள வரிபோல் வரியை உடைய வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்து இடப்பட்ட விதை. அவ்விதை போன்றதும் நல்ல வெண்மையான மணம்மிகுந்த நெய் தீண்டப்படாததும், கீரை இடையிடையே பயின்று கையால் பிழிந்து கொள்ளப்பட்டதுமான நீர்ச்சோற்றுத்திரள். அதனுடன் வெண்மையான எள்ளுத்துவையலுடன் புளியுடன் சமைத்த வேளைக்கீரையையும் வேகவைத்து உணவாகக் கொண்டு உண்பர். கைம்மை மகளிர் இவற்றை உணவாகக் கொள்வதுடன் பருக்கைக் கற்கள் அமைந்த படுக்கையின் மீது பாயின்றிக் கிடப்பர். இத்தகைய கைம்மை நோன்பால் வருந்தும் பெண்டிராக யாம் விளங்கமாட்டோம். சுடுகாட்டில் உண்டாக்கியதும் கரிய விறகால் அடுக்கப்பட்டதுமான பிணப்படுக்கை உமக்கு அரியதாக இருக்கலாம். ஆனால் எங்களுக்குப் பெரிய தோளையுடைய எம் கணவன் இறந்தபிறகு மொட்டின்றி நிறைந்த இதழ் மலர்ந்த தாமரையை உடையதும் நீரு் செறிந்ததுமான பெரிய பொய்கையும் தீயும் ஒரு தன்மைத்தே ஆகும்’’ என்று கைம்பெண்களின் துயரைத் தெளிவுறுத்துகின்றாள்.

பாயின்றிப் படுத்தல், உப்பில்லா வேளைக் கிரை உணவை உண்ணல் உள்ளிட்ட துன்பங்களைக் கைம்பெண்கள் அனுபவித்த கொடியநிலையைப் பெருங்கோப்பெண்டின் பாடல் தெளிவுறுத்தியிருப்பது நோக்கத்தக்கது.

சங்க மகளிரின் திருமணத்தில் இழை அணிகள் அணியப்பட்டன. கைம்மையில் இழை, வளை, தொடி களையப்பட்டன. கைம்மை வாழ்க்கையில் கூந்தல் களைதலில் மலர் நீக்கம் தானாகவே நடக்கிறது. திருமணத்தில் மங்கல மகளிர் வாழ்த்துகின்றனர். சங்க காலத்தில் கைம்மை மகளிர் வாழ்த்தியதாகவோ, நிகழ்வுகளில் கலந்து கொண்டதாகவோ செய்திகள் இல்லை. கற்பு வாழ்க்கையில் விருந்தோம்பல் பண்பு சிறப்பாகப் போற்றப்பட்டது. இன்னாப்பொழுதில் பசலைக்கீரை, புல்லரிசி, வெள்ளைச்சாந்து, பழஞ்சோறு உண்பது கைம்மைக்குரியதாக உள்ளது.

கைம்மைத் துன்பத்தின் மூன்று நிலைகள்

ஒப்பனை நீக்கம், உணவு நீக்கம், பழக்கநீக்கம் என்ற கைம்மைத் துன்பத்தின் மூன்று நிலைகள்  காணப்படுகின்றன. வளை, தொடி, இழை ஆகியன கணவன் இறந்த நிலையில் களையப்பட்டிருக்கின்றன. பெருஞ்சித்திரனார், வெளிமான் என்னும் வள்ளல் துஞ்சிய போது, வருந்திப் பாடிய பாடலில் இச்செய்தி வெளிப்படுகின்றது. அறனில்லாத கூற்றம் வெளிமான் உயிரைக் கவர்ந்தமையால் அவனது மகளிர் தம் மார்பில் அறைந்து கொள்வதையும் கைம்மைக் கோலத்தின் அறிகுறியாக அவர் கைவளைகளை உடைப்பதையும் அவை வாழைப் பூப்போல சிதறிக்கிடப்பதையும் பாடியுள்ளார் (புறம். 237: 7-14). கைம்மை மகளிர் தம் கூந்தலை நீக்கிய செய்தியைப் புறநானூற்றில் நான்கு பாடல்கள் எடுத்து இயம்புகின்றன (புறம். 25,250,261,280). திருமணத்திற்கு முன்பும், மணநிலையிலும், பெண்கள் பூச்சூடியிருக்கின்றனர். கைம்மையில் கூந்தல் நீக்கத்துடன் மலர் நீக்கமும் இயல்பாகவே நிகழ்ந்துள்ளது. இது பழந்தமிழகத்தின் சமுதாய நிலையையும் பெண்களின் பெருந்துயரையும் விளக்குவதாக உள்ளது.

கைம்பெண்களுக்கு வழங்கப்பட்ட பெயர்கள்

தமிழகத்தில் கணவனை இழந்த பெண்டிர் கைம்மை மகளிர் என அழைக்கப்பட்டனர். கைம்மை நிலை என்பது தந்தைவழிச் சமுதாயத்தின் ஒருதார மணமுறை என்ற சமூக அமைப்பில் உருவாக்கப்பட்டது. கணவர் இறந்தால் மனைவி இறக்க வேண்டும். ஆனால் மனைவி இறந்தால் கணவர் இறக்க வேண்டியதில்லை. நற்றிணை, புறநானூறு ஆகிய நூல்களில் மட்டுமே கைம்மை பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. கணவனை  இழந்த பெண்களை,

 1. ஆளில் பெண்டிர் (நற்.353)
 2. கழிகல மகளிர் (புறம்,280)
 3. பருத்திப்பெண்டிர் (புறம்.125)
 4. தொடிகழி மகளிர் (புறம்.238)
 5. கைம்மை (புறம்.125, 261)
 6. படிவமகளிர் (நற்.273)
 7. உயவற்மகளிர் (புறம்.246)

என்ற பெயர்களில் சங்க இலக்கியங்கள் வழங்கியுள்ளமை மனங்கொளத்தக்கதாகும்.

மனைவியை இழந்த ஆண்கள் எங்ஙனம் வாழ வேண்டும் என்ற வரைமுறை சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படாதது சிந்தித்தற்குரியதாகும். பெண்களே கணவனுடன் இறந்துள்ளனர். பெண்களுக்கே கைம்மைக் கோலத்திற்குரிய வாழ்க்கை நடைமுறைகள் வகுத்துரைக்கப் பெற்றன. மனைவியிழந்த ஆடவர்கள் கைம்பெண்களுக்குரிய வாழ்க்கை வாழவில்லை. கைம்மைத் துன்பம் நிறைந்த வாழ்கையைவிட இறப்பதே சாலச் சிறந்தது என்று அரசமகளிர் முடிவெடுத்தனர். இந்நிலையே கைம்பெண்களின் நிலையை எடுத்துரைக்கின்ற சான்றாக அமைந்திலங்குகின்றது.

 

Series Navigation
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

2 Comments

 1. Avatar
  IIM Ganapathi Raman says:

  இஃதென்ன பெண்கள் வாரமா? ஒருவர் அரவாணிகளைப்பற்றி எழுதுகிறார்; இன்னொருவர் தேவதாசிகளைப்பற்றி எழுதுகிறார்; இவரோ கைம்பெண்களைப்பற்றி எழுதுகிறார் :-)

  கட்டுரையைப் பயந்து கொண்டேதான் படித்தேன். இவரோ தமிழ்ப்பேராசிரியர்; பழந்தமிழகம் என்றால் ஆஹா ஒஹோ என்று உணர்ச்சிவசப்பட்டுவிடுவாரோ! எங்கே கைம்பெண்கள நிலையைப்போற்றி விடுவாரோ? என்று பயந்தால், நல்ல வேளை, அந்நிலை பரிதாபமானது; பெண்கள் துயரத்துக்குள்ளாகினர் என்று சொல்லிவிட்டார். ரொமப நன்றி சார்.

  பாடல்களை எழுதியோர் சங்கப்புலவர்கள். இவர்கள் மன்னர்களின் மரணத்தின் போது அவனின் பெண்கள் – நோக்க: மனைவி மட்டுமன்று- பேராசிரியர் குறிப்பிடும் சொல் உரிமை மகளிர் – அனைவரும் விதவைக்கோலத்தை ஏற்றனர் எனப்புலவர்கள் பாடியதாக காட்டுகிறார். அந்தபுரத்தில் வைக்கப்பட்ட பெண்கள் உரிமை மகளிர். ஹி…ஹி…என்ன உரிமை சார்? இவன் சாக அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? அவர்கள் கைம்பெண் நோன்பும் அவனின் மனைவியின் நோன்பும் ஒன்றல்ல.

  உடன்கட்டை ஏறுதல் இல்லையென்றாலும் அதற்கொத்த செயலகள் நடந்தன என பேராசிரியர் கூறுகிறார். வளையல் களைதல்; கூந்தல் அறுத்தல், சுவையில்லா எளிய உணவை உட்கொள்ளல், இன்னபிற செயல்கள அவர்களே ஏற்றார்கள் என்று நம்ப முடியாது. இளம் விதவைகள் நிலையைப்பற்றிச் சொல்லாவிட்டாலும் அவர்களின் நிலையில் இதே.

  மன்னர்கள் தவிர பாமரர்கள் நிலை எப்படி இருந்தது என்று சங்கப்புலவர்கள் வழியாகத் தெரியவில்லை. ஓரளவுக்கு சமூகம் இப்படித்தான் இருந்தது என்றால், நாம பரவாயில்லை. இன்று விதவைக்கோலம் விரும்பியவர் வைத்துக்கொள்ளலாம். கூந்தலை அறுத்து மொட்டை போடுவதும், பூவும் பொட்டும் அணியக்கூடாதென்று ஃப்டவா போடுவதும், பட்டினி போட்டுக்கொல்வதும் இன்றில்லை. மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மட்டும் தடைசெய்யப்பட்டது. அவர்களும் கலந்து கொள்ள விரும்புவதில்லை. சுருங்கச்சொல்லின் கட்டாயம் எனப்து இல்லை.

  இக்காலம் பொற்காலம். அக்காலம் பேய்க்காலம்.

 2. Avatar
  IIM Ganapathi Raman says:

  //பழந்தமிழகத்தில் மகளிர் கல்வியறிவில் சிறந்து விளங்கினர். கவிபாடும் வல்லமை பெற்றுத் திகழ்ந்தனர். //

  இதை எப்படி ஏற்க முடியும்? கல்வியே மறுக்கப்பட்ட காலத்தில் எப்படி சிறந்து விளங்க முடியும்? தகப்பன் ஒரு படிப்பாளி; அல்லது ஒரு ஆசிரியராக இருந்து அவ்ருக்கு ஒரே மகள் இருந்தால், அத்தகப்பன் சேர்த்துவைத்த நூல்களையும் அவனிடமிருந்து கேட்டுப்பெற்ற அறிவாலேயும் பெண்கள் பலருக்கு கல்வியறிவு இருந்திருக்கலாம்; கவிபாடும் வல்லமை சேர்ந்திருக்கலாம். அப்படிப்பட்டோர் மிகச்சிலரே. அவர்கள் ஒரு சிலர், நூற்றுக்கும் மேலான சங்க ஆண்புலவர்களோடு சேர்த்து வைக்கப்படும் பெண் புலவர்கள். அச்சிலரை வைத்து பழந்தமிழகத்தில் மகளிர் கல்வியறிவில் சிறந்து விளங்கினர் என்று சொல்ல முடியாது.

  ஆண்டாள், பெரியாழ்வாரால் தத்தெடுக்கப்படாமல் இன்னொருவரால் எடுக்கப்பட்டிருந்தால், ஆண்டாள் என்று ஒரு பெண்பாவலர் வந்தே இருக்கமாட்டார். பெரியாழ்வார் பழந்தமிழ் இலக்கியங்கள், குறிப்பாக சங்க இலக்கியம், தமிழ் இலக்கணம் என்று ஒரு பிடி பிடித்துவிட்டுத்தான் பாசுரமழை பொழிந்தார். ஆழ்வார்கள் அனைவரும் சங்க இலக்கியத்தில் கரை கண்டவர்கள்.

  எல்லாப்பெண்களுக்கும் அப்படி தகப்பன் கிடைப்பானா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *