வாழ்க்கை ஒரு வானவில் 25.

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

ஜோதிர்லதா கிரிஜா

சேதுரத்தினம் வழக்கம் போல் அலாரம் இல்லாமலே ஐந்தரை மணிக்கு எழுந்துகொண்டு காலைக்கடன்களை முடித்த பின் காப்பி போட்டான். ரமணி கண்விழித்த போது ஆறரை மணி ஆகிவிட்டிருந்தது. மேசையருகே அமர்ந்து காப்பி குடித்த போது, “நீங்களே தினமும் காப்பி போட்டுப்பீஙளா?” என்று ரமணி சேதுரத்தினத்தை விசாரித்தான். “ஆமா. காலை ப்ரேக்ஃபாஸ்டும் நானே பண்ணிடுவேன். இட்டிலி அல்லது தோசை. சில சமயம் பம்பாய் ரவை அல்லது கோதுமை ரவை உப்புமா. சின்ன வயசுலேர்ந்தே சமையல் பண்ணிப் பழக்கம். ராத்திரி மட்டும் ஓட்டல்லே டிஃபன்… அப்படி முருகன் ஹொட்டேலுக்குப் போனப்பதான் ராமரத்தினத்தோட பழக்கம் ஏற்பட்டுது…ஆமா? நீங்க உங்க வீட்டிலேர்ந்து வெளியேறிட்ட விஷயம் ராமுவுக்கு – ஐ மீன் – ராஜாவுக்கு இன்னும் தெரியாதில்லையா?” என்று சேதுரத்தினம் அவனை வினவினான். “நேத்து சாயந்தரத்துக்கு அப்புறந்தானே அப்படி ஒரு முடிவுக்கு வந்தேன்? இனிமேதான் சொல்லணும்…” “அவங்கம்மா பயப்படுவாங்க. தன்னோட பொண்ணுமேல வெச்ச ஆசையாலதானே இப்படி ஆச்சுன்னு…’ “அதுக்கென்ன பண்ண முடியும்? காப்பி ரொம்ப நல்லாருக்கு – எங்க வேலுமணி போடுற காப்பிமாதிரி.” “தேங்க்ஸ்….நான் காலையிலேயே குளிச்சாச்சு.” “தெரியுது. நெத்தியில விபூதியையும் பாத்ரூம்ல உங்க துணிகளையும் பார்த்ததுமே நினைச்சேன்.” “எதுக்குச் சொன்னேன்னா, நீங்களும் உங்க சவுகரியம் போல குளிச்சுடலாம். வெந்நீர் வேணும்னா ஹீட்டர் போட்டுக்கலாம். ..” “பச்சைத்தண்ணிதான் பழக்கம்….என்ன சமையல் பண்ணப் போறீங்க?” “ரொம்ப அயிட்டம்ஸ் பண்ணமாட்டேன். ரசம், இல்லேன்னா சாம்பார். ஏதாவது ஒண்ணுதான்.. இன்னைக்குத் தக்காளி ரசம், கோஸ் கூட்டு, உருளைக்கிழங்குக் கறி. அவ்வளவுதான். தயிர் சாதத்துக்கு பூண்டு, ஆவக்காய், எலுமிச்சங்காய் ஊறுகாய்கள் வாங்கி வெச்சிருக்கேன்… போதும்தானே?” “கொள்ளையோ கொள்ளை. என்னைக் கேட்டா எதானும் ஒரு காய் போதும்னுவேன். எதுக்கு ரெண்டு?” “காய்கள் சேரணுமில்லையா? அதுக்காகத்தான். சாம்பாருக்குப் பதில் கூட்டு. அதிலேயே பிசைஞ்சும் சாப்பிடலாம்…சரி. நான் போய் என் வேலையைப் பார்க்கிறேன்…” “அப்ப நான் உங்களோடவே இங்கே தங்கிக்கலாம்ன்றீங்க?” “கண்டிப்பா. தயங்கவே வேண்டாம்…” “அப்ப, வீட்டு வாடகை, சாப்பாட்டுச் செலவு, மத்தச் செலவுகள் எல்லாத்தையும் சரிபாதியாப் பங்கு போட்டுக்கணும்…” “செஞ்சுடலாம். உங்களுக்குக் கூச்சம் ஏற்படுத்துற எதையும் நான் செய்ய மாட்டேன். அப்பதான் ரெண்டு பேருமே சகஜமா யிருக்க முடியும்…அப்புறம் ஊர்மிளா…. அதான் என் ஒய்ஃப் …. ஊர்மிளாவுடைய கோத்ரெஜ் அலமாரியை ஒழிச்சுக் குடுத்துடறேன். சில புடவைகள் மட்டும் இருக்கு. கல்யாணப் புடவையை மட்டும் ஞாபகார்த்தமா என் அலமாரியில வெச்சிண்டிருக்கேன். மத்த புடவைகளை ராமு வீட்டில குடுக்கணும்னு. ஆனா அவங்க எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல்லே. தயக்கமா யிருக்கு…” “ராஜாவுடைய அம்மா கிட்ட அது பத்திப் பேசுங்க. வாங்கிப்பாங்கன்னுதான் நினைக்கிறேன்…” சேதுரத்தினத்தின் விழிகள் கலங்கியிருந்தன. ரமணிக்குப் பாவமாக இருந்தது: “என்ன செய்ய முடியும், சேது? மனசைத் தேத்திக்குங்க…கண் கலங்காதீங்க…அப்புறம் எனக்கு இன்னொண்ணு கூடத் தோணுது….” “என்ன?” “இப்ப வேணாம். அப்புறமாச் சொல்றேன்…” “….சரி. அப்ப நான் என் வேலையைப் பார்க்கிறேன். நீங்க போய்க் குளிச்சுட்டு வாங்க…” “அப்புறம்… நீங்க ஏன் பைக் வெசசுக்கல்லே?” “ஊர்மிளாவுக்கு அதுலே இஷ்டமில்லே. ஆக்சிடெண்ட் ஆயிடும்னு அவளுக்குப் பயம். அதனால பஸ்லதான் நான் போக்குவரத்து வெச்சுக்கணும்னு ஒரே பிடிவாதமா யிருந்தா. நானும் சரிதான்னு அவ இஷ்டத்துக்கு விட்டுட்டேன்.” “எங்கிட்ட பைக் இருக்கிறதால, நான் போற வழியில இருக்கிற உங்க ஆஃபீஸ்ல உங்களை ட்ராப் பண்ணிடறேன். சாயந்தரம் நான் ஆஃபீசை விட்டுக் கிளம்புற நேரம் ஒத்து வந்தா, திரும்பி வர்றப்பவும் உங்களை பிக்-அப் பண்ணிக்கிறேன்…” “நீங்க எத்தனை மணீக்குக் கிளம்புவீங்க?” “கரெக்டா அஞ்சு மணிக்குக் கிளம்பிடுவேன்.” “நானும்தான்.” “அஞ்சு நிமிஷப் பிரயாணந்தானே? உங்க ஆஃபீஸ் கேட்டுக்குப் பகத்துல நின்னீங்கன்னா வந்து பிக்-அப் பண்ணிக்கிறேன்…” “சரி. தேங்க்ஸ்…” “இருக்கட்டும்.” இருவரும் எழுந்தார்கள்….. …. ரமணி கிளம்பிப் போன அன்றிரவு கணேசனுக்கும் உறக்கம் வரவில்லை. வேலுமணியும் உறங்கவில்லை. இருவருமே அரையும் குறையுமாகத்தான் தூங்கினார்கள். காலையில் தமது அறையை விட்டு வெளியே வந்த கணேசனின் பார்வை அவரையும் மீறி ரமணியின் அறைப்பக்கம் பதிந்து, பின் மீண்டது. அதைக் கவனித்த வேலுமணி சன்னமாய்ப் பெருமூச்செறிந்தார். ‘என்னதான் வெளியே போடான்னு ஒரு கோவத்தில சொல்லிட்டாலும், மனசுக்குள்ளே வேதனை இருக்குமில்லே? பெத்த தகப்பனாச்சே! அதிலேயும் ஒரே பிள்ளை வேற… .சின்ன வயசுலேயே பொண்டாட்டி வேற செத்துப் போயிட்டா. அதுக்கு அப்புறம் அவர் மறு கல்யாணம் பண்ணிக்கவே இல்லே. எத்தனையோ சொந்தக் காரங்க வந்து வந்து பேசித் தங்களோட பொண்ணுங்கள்ள ஒண்ணை
அவர் தலையிலே கட்டப் பார்த்தாங்க. அவர் அதுக்கு இடம் கொடுக்கல்லே… ஆனா இவர் ரமணி கல்யாணம் பண்ணிக்க இருக்கிற பொண்ணை ஒரு கெட்ட வார்த்தை சொல்லித் திட்டினாரே, அது மாதிரிப் பொண்ணுங்க கிட்ட அப்பப்போ போய் வந்துண்டு இருக்கிறது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுண்டு இருக்கார். அன்னைக்கு ஞாபகப் பிசகா அந்தத் தடுப்புப் பாக்கெட்டை வெளியில வெச்சுட்டுப் போயிருந்தார். நான் கண்டுக்காத மாதிரி இருந்துட்டேன். திடீர்னு அது ஞாபகம் வந்துடவே, அன்னைக்கு மத்தியானம் ரெண்டு மணிக்கே ஆஃபீஸ்லேர்ந்து திரும்பிட்டார் – தலைவலின்னு பொய் சொல்லிண்டு. அந்தப் பாக்கெட்டை எடுத்து உள்ளே மறைச்சு வைக்கிக்கிறதுக்காக வந்தார்னு எனக்குப் புரியாதா என்ன! இத்தனை வயசுக்கு அப்புறம் இவ்வளவு உடம்பு வெறி இருக்கிறவர் ஒரு சின்னப் பையனோட ஆசையைப் புரிஞ்சுக்க மாட்டேன்னு இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறாரே! தூ!’ பல் விளக்கிவிட்டு வந்து சாப்பாட்டு மேசைக்கு அருகே அமர்ந்த அவருக்கு முன்னால் காப்பியை வேலுமணி கொண்டுவந்து வைத்தார். “ரமணி இன்னும் தூங்கிண்டு இருக்கானா?” என்று வினவிய அவரை வேலுமணி விழிகள் விரிய அதிர்ச்சியுடன் பார்த்தார். உடனேயே சுதாரித்துக்கொண்ட கணேசன், “மறந்துட்டேன். அவன் தான் இல்லையே! ஏதோ ஞாபகம்…” என்று முனகிவிட்டுக் காப்பியை எடுத்துப் பருகலானார். “கோவிச்சுக்காதீங்கய்யா. உங்களால ரமணியை விட்டுட்டு இருக்க முடியாது…இன்னைக்கோ இல்லே இன்னும் ரெண்டொரு நாள் கழிச்சோ அவனோட ஆஃபீசுக்கு ஃபோன் பண்ணிப் பேசி வரச் சொல்லிடுங்க. கவுரவமெல்லாம் பார்க்காதீங்கய்யா. அடுத்தாப்ல அவன் பார்த்தானா? பெட்டியைத் தூக்கிண்டு அவன் கிளம்பினப்போ அவன் செய்யறது சரியில்லைன்னு சொல்லி நான் தடுத்து புத்திமதி சொன்னதும் உடனே திரும்பித் தன்னோட ரூமுக்குள்ளே போய் உக்காந்துட்டானே! இத்தனைக்கும் இளவட்டம். அவனுக்கு உங்களை விடவும் இன்னும் அதிகமான ரோசம் இருக்கும்…இல்லையா?” என்று நீளமாய்ப் பேசிய வேலுமணியை அவர் குறுக்கிட்டுப் பேசித் தடுக்காவிட்டாலும் அவரை முறைத்துக்கொண்டிருந்தார். “அப்போ? வயசாயிட்டா, ரோசம், மானம், மரியாதை, சூடு, சொரணை எல்லாத்தையும் மூட்டை கட்டி வெச்சுடணும்கிறயா?” “அய்யோ! நான் அப்படிச் சொல்லுவேனாய்யா? நான் முப்பது வருஷத்துக்கும் மேலா உங்க உப்பைத் தின்னு வாழ்ந்துண்டு இருக்கிறவன். உங்க ரெண்டு பேரோட நல்லதுக்காகவும்தான் நான் இதிலே தலையிடறேன். புரிஞ்சுக்குங்க. ரமணி சின்னப்பையன். அவனுக்குச் சரியா பெரியவங்க நாமளும் பிடிவாதம் பிடிக்கக்கூடாதுங்கய்யா! …” “சரி, சரி….உன் வேலையை மட்டும் பாரு,.” வேலுமனி காலிக் காப்பிக் கோப்பையை எடுத்துக்கொண்டு சமையல்கட்டுக்குப் போனான். கணேசன் தம் அலுவலகத்துக்குப் புறப்பட்டுப் போன பிறகு ரமணியைத் தொலைப்பேசியில் கூப்பிட்டுப் பேசவேண்டும் என்று அவர் நினைத்துக்கொண்டார். எனவே அவர் கிளம்பும் நேரத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கலானார்.
பதினொரு மணிக்கு வேலுமணி தொலைப்பேசியை நெருங்கிய போது, அதுவே ஒலித்தது. ரமணியாகத்தான் இருக்கும் என்கிற ஊகத்துடன், “ஹல்லோ!” என்ற வேலுமணி, “அண்ணா! எப்படி இருக்கீங்க?” என்ற அவன் குரலைக் கேட்டதும் மகிழ்ந்து போனார். “எனக்கென்ன கேடு, ரமணி? நான் நல்லாத்தான் இருக்கேன். நான் உனக்கு ஃபோன் பண்ண நினைச்சு ஃபோன் கிட்ட வந்தேன். நீ பண்ணிட்டே. நீ எப்படி இருக்கே? எங்கே தங்கிட்டிருக்கே? உன்னோட அட்ரெஸை எதுக்கும் என்கிட்டயாவது சொல்லிவைப்பா…” மறுமுனையில் ரமணி சிரித்தான்: “உங்க கிட்ட மட்டுந்தான். பின்னே வேற யாருகிட்ட?” “உங்கப்பாவும் பாவந்தான், ரமணி. இன்னைக்குக் காலையிலே காப்பிக்கு டைனிங் டேபிளண்ட வந்து உக்காந்ததும், ‘ரமணி இன்னும் தூங்கிண்டு இருக்கானா’ அப்படின்னு கேட்டுட்டு உடனேயே, ‘மறந்துட்டேன். அவந்தான் இல்லையே. ஏதோ ஞாபகம்’ அப்படின்னாருப்பா…தகப்பன்-மகன் பந்தமெல்லாம் அவ்வளவு லேசில அறுந்துடக் கூடியது இல்லேப்பா, ரமணி. புரிஞ்சுக்கோ.” “தெரியும், அண்ணா. அவருக்கும் அது புரியணுமில்லே?” “புரிஞ்சிருக்கிறதுனாலதான் நேத்து ராத்திரி முழுக்கத் தூங்காம படுக்கையிலெ புரண்டுண்டு கிடந்தார். …” “நான் மட்டும் தூங்கினேனா என்ன?” “நீயும் தூங்கியிருக்க மாட்டேன்னு தெரியும். அதனாலதான் சொல்றேன் – இவ்வளவு பாசத்தை ரெண்டு பேருமே மனசில சுமந்துண்டு எதுக்கு இப்படி வேஷம் போட்றீங்கன்னுதான் கேக்கறேன்…” “மனசில இருக்கிற பாசம் செயல்லே வெளிப்படணும், அண்ணா! சும்மா வாயால பாசம், அன்பு, அது, இதுன்னு பேசிட்டாப்ல ஆச்சா?” வேலுமணி சில நொடிகளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தார்.. “என்ன மவுனமாயிட்டீங்க? நான் சொல்றது சரியா, தப்பா?” “சரிதான். ஆனா அவரும் இதையே சொல்லலாமில்லே?” “சொல்லலாம்தான். ஆனா நியாயம்னு ஒண்ணு இருக்கில்லே? என் ஆசைக்கு அவர் குறுக்கே நிக்கிறது நியாயமா, அண்ணா?” “நியாயம்னு நான் சொல்லுவேனா? உனக்குப் பரிஞ்சு பேசி நல்லா டோஸ் வாங்கிண்டேன் உங்கப்பா கிட்ட! இருந்தாலும், அவரு இளகிடுவார்னுதான் தோணுது. ‘உங்க ரெண்டு பேரோட நல்லதுக்காகவும்தான் நான் இதிலே தலையிடறேன். புரிஞ்சுக்குங்க. ரமணி சின்னப்பையன். அவனுக்குச் சரியா பெரியவங்க நாமளும் பிடிவாதம் பிடிக்கக்கூடாதுங்கய்யா!’ அப்படின்னு நான் சொன்னேன். ‘சரி, சரி. உன் வேலையை மட்டும் பாருன்னாரு.” “எனக்காகப் பரிஞ்செல்லாம் பேசி அவர் கிட்ட நீங்க டோஸ் வாங்க வேண்டாண்ணா. நான் பார்த்துக்கறேன். என்னால உங்களுக்குள்ளே மனக்சசப்பும், மனத்தாங்கலும் வேண்டாம்….” “நீயே அவரோட மனக்கசப்பைப் பொருள்படுத்தல்லே. நான் என்னப்பா? வெறும் சமையல்காரன். எனக்கென்ன வந்தது? இந்த மடம் இல்லேன்னா,
இன்னொரு சந்தை மடம். அவ்வளவுதானே? அதுக்காக நான் வாயை மூடிண்டு யாருக்கு வந்த விருந்தோன்னு சும்மா இருக்க முடியுமா? நீ சின்னக் குழந்தையா யிருந்ததுலேர்ந்து உன்னை எடுத்து வளர்த்தவன் நான் …அதான் சும்மா இருக்க முடியல்லே… அது கிடக்கு. நீ எங்கே இருக்கே? இன்னும் உன்னோட சாமான்கள் சிலதெல்லாம் இருக்கே? எப்ப வந்து எடுத்துண்டு போறதா யிருக்கே?” “அதெல்லாம் அவ்வளவு முக்கியமானதில்லே. இப்போதைக்கு அங்கேயே கிடக்கட்டும். அப்புறமா ஒரு நாள் சாவகாசமா வந்து எடுத்துக்கறேன்…” “நீ எங்கே தங்கி யிருக்கேன்னு கேட்டேனே?” ரமணி எல்லாவற்றையும் விவரமாய்த் தெரிவித்துத் தன் இருப்பிடத்தையும் வெளிப்படுத்திக் குறித்துக்கொள்ளச் சொன்னான். “சரி, அண்ணா. வெச்சுடட்டுமா? சும்மாதான் கூப்பிட்டேன். அப்பா வேற ஏதானும் சொன்னாரா?” “எங்கிட்ட சொல்ல மாட்டார். சொன்னா நான் உனக்குப் பரிஞ்சுதான் பேசுவேன்னு அவருக்குத்தான் தெரியுமே! அதான்!” “முக்கியமான விஷயம் ஏதானும் இருந்தா ஃபோன் பண்ணிச் சொல்லுங்க, அண்ணா. என்னோட ஆஃபீஸ் நம்பர்தான் உங்களுக்குத் தெரியுமே?” “எத்தனை நாள் இப்படியே வெளியே இருக்கிறதா எண்ணம்?” “அவர் மனசு மாறுற வரைக்கும்…..ரெண்டு வருஷம் வரைக்கும் காத்திண்டிருப்பேன். அப்பவும் அவர் மனசு மாறல்லேன்னா, அவர் வராமலே என் கல்யாணம் நடக்கும். ஆனா இன்விடேஷன் கொடுப்பேன்…அப்ப வச்சுடட்டுமா?” “சரிப்பா. முடிஞ்சா தினமும் பேசு…” “கண்டிப்பா!” என்ற ரமணி தொடர்பைத் துண்டித்தான்…. …..சேதுரத்தினம் தூக்கத்தில் தெள்ளத் தெளிவாக உளறினான். “ஆகட்டும், ஊர்மிளா! உன்னிஷ்டடப்படியே செய்யறேன்.” அருகில் படுத்திருந்த ரமணி – அரைத்தூக்கத்தில் இருந்தவன் – விழித்துக்கொண்டு அவனை இலேசாக உலுக்கினான்: “சேது! சேது!” சேதுரத்தினம் கண் விழித்தான்: “என்ன, ரமணி?” “அடிக்கடி உன்னிஷ்டப்படியே ஆகட்டும்னோ, இல்லேன்னா, அப்படியே செய்யறேன்னோ தூக்கத்துல உளறுறீக்க…உங்க ஒய்ஃப் பேரைச் சொல்லித்தான்..” சேதுரத்தினத்தின் முகம் சற்றே சிவந்தது விடிவிளக்கின் மங்கலான வெளிச்சத்திலும் ரமணிக்குத் தெரிந்தது. “என்ன சொல்றாங்க அவங்க? சொல்லலாம்னா சொல்லுங்க.” “மரணப் படுக்கையில இருந்தப்ப, எனக்கு ரொம்பச் சின்ன வயசானதுனால நான் மறுபடியும் ஒரு நல்ல பொண்ணாப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லிட்டுத்தான் செத்துப் போனா. அடிக்கடி என் கனவிலேயும் வந்து அதைத் தான் ஞாபகப்படுத்தறா….” சில நொடிகள் போல் ஒன்றும் சொல்லாதிருந்த ரமணி, “நான் ஒண்ணு சொல்லட்டுமா, சேது?” என்று கேட்டான்.
”சொல்லுங்க,” என்ற சேதுரத்தினம் என்ன என்கிற கேள்விக்குறி சிந்திய பார்வையால் அவனை ஏறிட்டான். – தொடரும்

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *