சென்னையில் ஒரு சின்ன வீடு

author
0 minutes, 1 second Read
This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
2002 – லண்டன்

“இந்த தாய் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது”?
காயத்திரி சிவராமன் தனக்குள் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறாள்.
திருமதி சங்கரலிங்கம் காயத்திரியை மிகவும் கடினபார்வையுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.
“சில மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்கும் தங்களின் பாதுகாப்புக்கும் எந்தப் பொய்களையும் சொல்வார்கள். வறுமையான நாடுகளில் இது சகஜம். நாகரீகமான ஆங்கில நாட்டிலும் இப்படிப் பொய் சொல்கிறாளே………….இவள் இந்தப் பொய்களை ஏன் சொல்கிறாள்?”
காயத்திரியின் மனதில் பல கேள்விகள் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன.
திருமதி சங்கரலிங்கம் காயத்திரியின் மன ஒட்டத்தைப் புரிந்து கொண்டபடியாலோ அல்லது காயத்திரியின் கண்களில்; பிரதிபலித்த ஆத்திரத்தை உணர்ந்துகொண்டதாலோ என்னவோ தான் பேசிக் கொண்டிருந்த விடயத்தைச் சட்டென்று நிறுத்தினாள்.
காயத்திரி லண்டனில் பிறந்து வளர்ந்தவள். விடயங்களுக்கு நேரடியாக வருபவள். சுற்றி வளைத்துப் பேசுவதெல்லாம் அவளுக்குப் பிடிக்காது. ஏமாற்றிப் பிழைப்பவர்களும் அரசியல்வாதிகளும்தான் அதிகப்படியான வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள் என்பது அவளின் கருத்து.
காயத்திரி லண்டனில் ஒரு சோசியல் வோர்க்கராகப் பணி புரிகிறாள். அவளுக்கு முன்னால் ஒரு தமிழ்த்தாய் உட்கார்ந்திருக்கிறாள். அந்தத் தாயின் மகள் தனக்கு நடந்த துன்பத்தை சோசியல் சேர்விசுக்கு அறிவித்திருந்தபடியால், அவளை மருத்துவ சோதனைக்கு சோசியல் சேர்விஸ் உட்படுத்தியிருக்கிறது.
“அம்மா, மருத்துவ சேவையினர் எடுத்த பரிசோதனையை வைத்துக் கொண்டு இந்த நேர்ஸ் ஒரு முடிவெடுக்கலாம். அத்துடன் உங்கள் வாக்கு மூலத்திலிருந்தும் உங்கள் மகளின் வாக்கு மூலத்திருந்தும்தான் நாங்கள் ஒரு முடிவுக்கு வரலாம். உங்கள் இருவரின் வாக்குமூலமும் முரண்பாடாக இருந்தால்…ஒத்துப்போகாமலிருந்தால்…..”
காயத்திரி தனது பேச்சை முடிக்க முதல் தாய் ஆவேசத்துடன் பேசுகிறாள்.
“எப்படிப் பொருந்தும்? எனது மகள் சொல்வது எப்படிப் பொருந்தும். அவள் பொய் சொல்கிறாள் என்பது தெரியவில்லையா?
திருமதி சங்கரலிங்கத்தின் குரல் உரத்து ஒலித்தது. முகம் சிவந்து விட்டது. மூச்சு வாங்குகிறது. கண்கள் பனிக்கின்றன. முந்தானையால் முகத்தை மூடிக்கொள்கிறாள்.
“முகத்தை மறைக்கலாம், கண்ணீரைத் துடைக்கலாம். ஆனால் மகளுக்கு நடந்த களங்கத்தை மறைப்பது எப்படி? அவளால் அதை மறக்கப்பண்ண யாரால் முடியும். இப்படி எத்தனையோ கேள்விகள் காயத்திரியின் மனதில்.
“அம்மா, யாரையும் திட்டமிட்டுக் குழப்பத்தில் சேர்க்கும் வயது உங்கள் மகளுக்கில்லை. பதின்மூன்று வயதில் இப்படிப் பாரதூரமான பொய்யை அவள் ஏன் சொல்ல வேண்டும்”
தாய்: “உங்களுக்கு ஒன்றும் புரியாது. உங்களிடம் யாரும் உதவிக்கு வந்தால் அந்தச் சாட்டில் கும்பங்களைப் பிரிப்பது தானே சோசியல் வோர்க்கரின் வேலை”
தாய் ஆத்திரத்துடன் அதிர்கிறாள். உடம்பு நடுங்கிறது. நெற்றிக் கண் இருந்தால் எதிரிலிருக்கும் எதுவும் எரிபட்டுக் போகும் போலிந்தது.
காயத்திரி: “அம்மா, யாரும் எந்தக் குடும்பத்தையும் பிரிப்பதாகத் திட்டம் போடவில்லை. ஒரு குழந்தையின பாதுகாப்பு அந்தக் குழந்தையின் குடும்பத்துக்கு மட்டுமல்ல, அவளின் வாழ்க்கையின் சுகநலம், படிப்பு, பாதுகாப்பு என்றவற்றில் பொறுப்பெடுக்கும் அரசாங்கத்தின் கடமையுமாகும். உங்கள் பெண்ணுக்குப் பதின்மூன்று வயதாகிறது. அவள் எங்களிடம் வந்து தனக்குத் தன் குடும்பத்தில் பாதுகாப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறாள். அவளுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது எங்கள் கடமை. இந்த நாட்டுச் சட்டம் அப்படியானது. குழந்தைகள் அவர்கள் பிறந்த குடும்பத்தின் சொத்து மட்டுமல்ல. அவர்களின் பாதுகாக்கும் அரசின் – ஒரு நாட்டின் தேசியச் சின்னங்கள். அவனுக்குத் தேவையான ஆரோக்கிய சூழ்நிலையை அவள் குடும்பம் கொடுக்காவிட்டால் அந்தப் பொறுப்பை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும்”
திருமதி சங்கரலிங்கம் காயத்திரியின் பேச்சைக் கேட்டு ஏளனமாகச் சிரிக்கிறாள்.
“ஏதோ இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல இலங்கையில் சிங்கள அரசாங்கத்தின் கொடுமைக்குப் பயந்து லண்டனுக்கு வந்தால் இந்த நாடே ஒழுக்கம் கெட்டு நாறுகிறது”
“உலகத்தில் எந்த நாட்டில் பிரச்சினையில்லை?” காயத்திரி தன் பைலைப் புரட்டுகிறாள். வெளியில் நல்ல வெயில். ஜன்னலால் வந்த வெளிச்சத்தில் தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் திருமதியின் கண்ணீர்த்துளிகள் பளபளக்கிறது.
“உம், லண்டனில நடக்கிற விபச்சாரம், போதைமருந்து, எவ்வளவு கேவலமானது என்று பத்திரிகையில் படித்தாற் தெரியும்.”
திருமதி சங்கரலிங்கம் நக்கலாகச் சொல்கிறாள். யார் உங்களுக்கெல்லாம் வெற்றிலை வைத்து லண்டனுக்கு வரவழைத்தார்கள்?
காயத்திரி கேட்க நினைத்தாள். அவளின் உத்தியோக தோரனையில் அதையெல்லாம் கேட்க முடியாது.
உதவி கேட்க வருபவர்களின் தனிப்பட்ட விடயங்களில் தலையிடக்கூடாது. தனிப்பட்ட அபிப்பிராயங்களுடன் மோதக் கூடாது.
“ஏன் வந்தோம் இந்த நாட்டுக்கு” தாய் விம்புகிறாள்.
அண்மையில் ஐரோப்பிய நகரொன்றிலிருந்து லண்டனுக்கு வந்த லொறியில் பல நாட்டைச் சேர்ந்த அகதிகள் சுங்கப் பரிசோதனை அதிகாரிகளிடம் அகப்பட்டுக்கொண்டதாகவும் அவர்களிற் கணிசமான தொகையினர் இலங்கை இந்தியற் தமிழர்கள் என்றும் செய்திகள் வந்திருந்தன. இந்த அம்மாவுக்கு இதெல்லாம் தெரியாது போலும்!
பெண்களாயிருந்தால் இந்த நாட்டில் இவ்வளவு பிரச்சினை வரும் என்று தெரியாது.”
“அம்மா, உலகத்தில் எல்லா இடங்களிலும்தான் பெண்களுக்குப் பிரச்சினை இருக்கிறது. லண்டன் மட்டும் விதிவிலக்கல்ல. அனாதரவான, அபலைப் பெண்களை வைத்து இலாபம் தேடுவதிலும், அவர்களை வருத்திச் சுகம் காணுவதிலும் ஆண்கள் சாதி மதம், குல கோத்திரம், இனவேறுபாடு காட்டுவது கிடையாது. அப்படிக் கஷ்டப்பட்டு பெண்கள் எங்கள் உதவியை நாடினாலும் அவர்களுக்கு உதவி செய்யத்தான் நாங்கள் பாடுபடுகிறோம்.
காயத்திரி விளக்கமாகச் சொல்கிறாள்.
“என் மகள் சொல்வதில் உண்மை எதுவுமில்லை” திருமதி சங்கரலிங்கத்தின் குரலில் இன்னும் கோபம் தொனிக்கிறது.
“அதை நன்குக் விசாரிக்காமல் முடிவு கட்டமுடியாது”
“இதோ பாருங்கள். இலங்கையில் இருக்கேக்க அவளின்ர புத்தி சரியில்ல. பல விடயங்கள் பிரச்சினைதான். அவளுக்கு ஆறுவயதாக இருக்கும்போது தகப்பனை ஆர்மிக்காரன்கள் சுட்டுப் போட்டான்கள். வீட்டில ஷெல் விழுந்து பாட்டனார் கருகிச் செத்தார். அப்போது அவளுக்கு ஏழுவயது. இதெல்லம் அவளைக் குழப்பிப் போட்டுது. மனம் பாதிக்கப்பட்டுப்போச்சு.”
எத்தனையோ இலங்கைத் தமிழர் அனுபவித்த அனுபவிக்கும் கொடுமைகள் இவை. இதெல்லாம் நடக்க முதல் காயத்திரியின் பெற்றோர் லண்டனுக்கு வந்துவிட்டனர்.
ஆனால் அவளின் குடும்பத்தினரும் எத்தனையோ கொடுமைகளை அனுபவித்தவர்கள். அவர்களின் துயரக் கதைகள் கடிதங்களில் கண்ணீரால் எழுதப்பட்டு வரும்.
அந்தத் தாயைத் தொடர்ந்து விசாரிக்க அவளுக்கு மனம் வரவில்லை. அந்தத் தாய் இருக்கும் நிலையில் இந்த உலகமே தனக்கு எதிராக இருப்பதாக நினைக்கிறாள். அந்த உலகத்துடன் சேர்ந்து கொண்டு தனது மகள் சாந்தியும் தன்னைத் துன்பப்படுத்துவதாக அவமானப் படுத்துவதாக நினைக்கிறாள்.
“சரி இன்னும் இரண்டொரு நாட்களில் போன்பண்ணுகிறேன். தயவு செய்து நான் உங்களைத் தனிப்பட்ட முறையில் விசாரிப்பதாகவோ, பிழை கண்டு பிடிப்பதாகவோ நினைக்க வேண்டாம். எனது கடமையைச் செய்கிறேன்.”
காயத்திரி எழுந்தாள்.
தாய் தனது கண்ணீரைத் துடைத்தபடி வெளியேறுகிறாள். நடையில் சோர்வு.
அவளை பார்த்தபடி எழுந்த காயத்திரியின் கையில் மிஸ் சாந்தி சங்கரலிங்கம் என்ற பைல் இருக்கிறது. அந்த பைலில் சாந்தி என்ற இளம் பெண்ணின் துயர வரலாறு பதிக்கப்பட்டு பக்கம் பக்கமாகக் குவிர்க்கப்பட்டிருக்கிறது.
வாசலைத் தாண்ட முதல் திருமதி சங்கரலிங்கம் திரும்பிப் பார்க்கிறாள். “அவளுக்குப் பைத்தியம் என்கிறேன். நம்ப மாட்டேன் என்கிறார்களே. சொந்த மகளுக்குப் பைத்தியம் என்று எந்தத் தாயும் சொல்வாளா” என்று கேட்கிறாள். அவள் குரலில் வெறுப்பு.
பைத்தியமா? யாருக்கு?
அதிக வெறியால் தனது சொந்தத் தாயைக் கொன்ற உரோம சக்கரவர்த்தி நீரோவைப் பைத்தியம் என்று சொல்லலாம். தனது மனைவியையும் கொலை செய்தான். அவனைப் பைத்தியம் என்று சொல்ல உலகம் பயப்பட்டது. அவனின் அதிகாரம் மக்களின் வாய்க்குப் பூட்டுப் போட்டுவிட்டது.
இந்த பதின்மூன்று வயதுப்பெண் சாந்தி அவளின் தாயால் பைத்தியம் என்று பட்டம் சூட்டப்படுகிறாள்.
யார் பைத்தியம்?
சாந்தியின் கண்ணீர் ஞாபகம் வருகிறது. காயத்திரி கண்களை இறுக மூடிக் கொண்டு சாந்தியைத் தன் மனக் கண்ணில் படம் பிடிக்கிறாள்.
மலர முதலே கருகி விட்ட மொட்டா அவள்?
காயத்திரியின் பதினான்கு வருட சோசியல் சேர்விஸ் அனுபவத்தில் அவள் சந்தித்த இளம் பெண்கள் நூற்றுக்கணக்கானவர்கள். எத்தனையோ நாட்டைச் சேர்ந்தவர்கள்.
வெளிச்சத்தை நாடி ஓடிவந்து விழுந்து மடிந்த விட்டிற் பூச்சிகளாகிப் போனவர்கள் பலர்.
அவர்களின் கதைபோலத்தான் சாந்தியின் கதையுமா?
கதவை யாரோ தட்டுகிறார்கள்.
வரப்போவது அவளின் மேலதிகாரி பீட்டர் வலன்ஸ். சாந்தி சங்கரலிங்கம் என்ற பதின்மூன்று வயது தமிழ் அகதிப் பெண்ணின் எதிர்காலம் அவர் எடுக்கப்போகும் நடவடிக்கையில் தங்கியிருக்கிறது.
‘கம் இன் (ஊழஅந in)’ சாந்தியின் விடயத்தைப் பேசப் பேகும் மேலதிகாரியை எதிர்நோக்க காயத்திரிக்குத் தர்ம சங்கடமாகவிருந்தது.
சாந்தியின் தாய் திருமதி சங்கரலிங்கத்துடன் நடந்த சம்பாஷணை பற்றி அவர் கேட்பார். சாந்தி தங்களிடம் முறையிட்ட குற்றச்சாட்டுகள் பற்றி சாந்தியின் தாய் என்ன சொன்னாள் என்று கேட்கப்போகிறார்.
அவளையுற்று நோக்கியபடி அவர் முன் அமர்கிறார்.
அவளின் முகத்தில் தெரியும் சங்கடத்தைப் புரிந்து கொண்டவர்போல் “குட் நியூஸ் இல்லை என்று நினைக்கிறேன்” என்றார்.
சாந்தி தங்களிடம் சொன்ன விடயங்களைத் தாயிடம் கேட்டபோது சாந்தி சொன்னதெல்லாம் வெறும் கற்பனை என்று தாய் சொல்கிறாள்.
யாரை நம்புவது?
“இந்தத் தாய் தன் மகளுக்கு நடந்த கொடுமைகளைக் தனது மகளின் கற்பனைக் கதைகள் என்கிறாள். தனது சினேகிதிகளுடன் வெளியிற் போய் விளையாடித்திரியாமல் இவளை நான் வீட்டோடு கைத்திருப்பதால் இவள் எங்களைப் பழிவாங்குகிறாள் என்று தான் சாந்தியின் தாய் வாதாடுகிறாள்.
சாந்தியின் உடம்பில் இருந்த காயங்கள் எல்லாம் சாந்தி தனக்குத் தானே ஏற்படுத்திக்கொண்டது என்கிறாள் சாந்தியின் தாய்”
காயத்திரி பெருமூச்சுடன் சொன்னாள். சில பெண்கள் மற்றவர்களிலுள்ள கோபத்தில் தங்கள் உடம்பை வதைத்துக்கொள்வார்களாம். மிஸ்டர் வலன்ஸ் மௌனமாகிறார். பின்னர் “மெடிகல் றிப்போர்ட்டும் பொய் சொல்லுமா” என்று கேட்டார்.
சாந்தியின் பாடசாலை றிப்போர்ட் இருக்கிறது. அந்த றிப்போட்டின் சில பகுதிகள் ஞாபகம் வருகிறது.
“இன்று சாந்தி மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டாள். என்னவென்று விசாரித்த போது பதில் சொல்லாமல் அழத் தொங்கிவிட்டாள்.
அந்த றிப்போர்ட் சாந்தியின் பன்னிரண்டாம் வயதிலிருந்து தொடங்குகிறது.
ஸ்கூல் நேர்ஸின் றிப்போர்ட்: (ளுஉhழழட ரெசளந சநிழசவ)
“சாந்தியிடமிருந்து தகவல்களை எடுக்க எத்தனையோ நாட்கள் எடுத்தன. உண்மையைச் சொன்னால் தன் குடும்பம் தன்னை ஒதுக்கி வைக்கும் என்பதால் தான் உண்மையைச் சொல்லத் தயாரில்லை என்று சொல்கிறாள்.
பாடசாலை சைக்கோலஸ்ட்டின் றிப்போர்ட் : (ளுஉhழழட Pளலஉhழடழபளைவள சநிழசவ)
“பன்னிரண்டு வயதான இந்தப் பெண் இளம் வயதில் இலங்கையில் நடக்கும் அரசியற் பிரச்சினைகளால் தகப்பனையிழந்தவர். அவள் ஏழுவயதாக இருக்கும் போது அவளை அன்புடன் வளர்த்து வந்த பாட்டனும் ஷெல் விழுந்ததால் சிதறிச் செத்து விட்டார்கள். அன்றிலிருந்து இந்தப் பெண் உலகத்தை மிகப் பயங்கரமாய்ப் பார்க்கிறாள்.
தான் அன்பு வைத்தவர்கள் எல்லாம் தன்னை விட்டுப்போய் விடுவதாக நினைக்கிறாள். தாயை மிகவும் நேசிக்கிறாள். ஆனால் தனக்குத் தன் வீட்டில் நடந்த விடயங்களைச் சொன்னால் தாய் தன்னை நம்பப் போவதில்லை என்று நினைக்கிறாள். ஏனென்றால் இவர்களின் வாழ்க்கைக்குத் தாயின் தம்பியின் தயவு தேவைப்படுகிறது. அந்த ‘அங்கிளின் உதவி பறிபோனால் தாய் தன்னைப் பழிவாங்குவாள் என்று சாந்தி நம்புகிறாள்”
காயத்திரி தனக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் மிஸ்டர் வலன்ஸைப் பார்க்கிறாள்.
“நாங்கள் சாந்தியின் குடும்பத்தாரின் உதவியில் இந்தக் கேஸை முன்னெடுப்பது கஷ்டமாயிருக்கும்”
அவர் எழுந்து விட்டார். அவர் ஆங்கிலேயன். அதிகம் தலையிட்டால் தன்னை ‘இனவாதி’ என்று சொல்லிவிடுவார் என்ற பயம். காயத்திரியின் உதடுகள் கோபத்தில் துடிக்கின்றன.
தாய் தகப்பனின் வேண்டுகோளுக்காக விருப்பமில்லாதவர்கள் கல்யாணம் செய்து கொண்டு இயந்திரமாக உழைத்து இறக்கும் எத்தனையோ ஆசியப் பெண்களை அவள் சந்தித்திருக்கிறாள்.
கணவனின் கொடுமை தாங்காது தற்கொலை செய்து கொண்ட கேசுகளும் அவளுக்கு வந்து போய்ககொண்டிருக்கின்றன. காயத்திரி இந்த வேலைக்கு வந்தபின் அவள் சந்தித்த கண்ணீர்க் கதைகள் ஆயிரம். உறவினர் என்ற போர்வையில் வீட்டுக்கு வரும் மாமாக்கள், சித்தப்பாக்கள், தாத்தாமரில் ஒரு சிலர் செய்யும் மன்மத லீலைகளைச் சொல்லத் தெரியாத குழந்தைகளை பாடசாலை ஆசிரியை அடையாளம் காட்டும்போது “பெண்ணாகப் பிறந்தாலே……” என்று அவள் யோசிப்பாள்.
மிஸ்டர் வலன்ஸ் போய் விட்டார்.
இன்னும் சில கிழமைகளில் சாந்தியின் எதிர்காலத்தை நிர்ணயிக்க ஒரு கான்பிரன்ஸ் நடக்கும். அதில் சாந்தியின் பாடசாலை ஆசிரியை, பாடசாலை நேர்ஸ், பாடசாலை சைக்கோலஸ்ட், குடும்ப வைத்தியர், சோஸியல் வேர்க்கர், லோயர் என்று எத்தனையோ அரசாங்க உத்தியோகத்தர்களும் சாந்தியின் தாயும் வருவார்கள்.
அப்போது சாந்தியின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும்.
“இன்று சாந்தியின் உதடுகள் வீங்கியிருந்தன. அவள் வகுப்பு ஆசிரியை இது பற்றி அவளிடம் விசாரிக்கச் சொன்னதால் நான் சாந்தியை என் அறைக்கு அழைத்தேன்….”
பாடசாலை நேர்ஸின் றிப்போர்ட் தொடர்கிறது. இந்த றிப்போர்ட்டில் இருக்கும் எல்லாமே காயத்திரித் தெரியும்.
காயத்திரி சட்டென்று குபைலை முடிவிட்டு எழுந்தாள். இன்னுமொரு கேஸை அவள் பார்க்க வேண்டும்.
லண்டனில் வழக்கம்போல் மழையும் காற்றும் போட்டி போட்டுக் கொண்டு நடைபாதையில் போவோரை நனைத்துக் கொண்டிருந்தது.
மாசி மாதம் தொடங்கி விட்டது. குளிர் குறையப்போகிறது என்று கற்பனை செய்தவர்களுக்கு ஒன்பது செல்ஸியஸ் பாகையில் சூடு அசையாமல் நின்றபோது எரிச்சல் வந்தது. பற்றாக்குறைக்கு மழை வேறு. இந்த மழையில் குடை கொண்டு போனால் வாயு பகவான் அப்படியே பிடுங்கி விடுவான். காயத்திரியின் மனதில் அதைவிடச் சூறாவளி நடந்து கொண்டிருந்தது.
காயத்திரி நடையைக் கூட்டினாள்.
அந்த வீதியின் கடைசியில் சாந்தியின் பற்றிக் கூப்பிடுகிறது.
சாந்தியை அவள் முதற் தரம் சந்தித்தது ஞாபகம் வருகிறது.
“எங்கள் பாடசாலையில் படிக்கும் சாந்தி சங்கரலிங்கம் என்ற பெண் ஏதோ ஒரு மனப் பிரச்சினையிலிருக்கிறாள் என்று நினைக்கிறேன். அதற்குப் பின்னணிக் காரணங்கள் அவள் குடும்ப நிலையாகவிருக்கலாம்…….”
இப்படித்தான் தொடங்கியிருந்தது பாடசாலைக் கடிதம். அந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டு சாந்தியின் தாயைச் சந்திக்கச் சென்றது ஞாபகம் வருகிறது. வீட்டைத் திறந்தவுடன் ஏதோ பக்திப் பாடல் கேட்டது. சாம்பிராணி மனம் வீட்டை நிறைத்திருந்தது.
‘நீ யார்’ என்ற கேள்வியைக் கண்களில் தொங்கவிட்டுக்கொண்டு கதவைத் திறந்தவர் சாந்தியின் தாய்.
காயத்திரி தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். “நான் ஒரு சோஸியல் வேர்க்கர் சாந்தியின் பாடசாலையிலிருந்து வந்த ஒரு கடிதத்தை விசாரிக்க வந்திருந்தேன்” உத்தியோகதோரணையில் சொன்னாள் காயத்திரி.
தாய் ஒன்றும் தெரியாததுபோல் விழித்தாள். உண்மையாகவே ஒன்றும் தெரியாமல் இருக்கலாம்.
என்னவென்று இந்தத் தாய்க்கு விடயத்தைச் சொல்வது?
சாந்திக்கு நடக்கும் கொடுமைகளை இவள் விளங்கிக்கொள்வாளா? சாந்தியின் காயம் வந்த உதடுகளை உறிஞ்சியவன் உனது தம்பி என்று சாந்தி சொல்கிறாள் என்பதை எப்படி இந்தத் தாய் தாங்கிக் கொள்வாள்?
பூப்படைந்தது என்று நீ பெரிய கொண்டாட்டம் போட்டதின் காரணம் சாந்தியின் பெண்மையபை; புண்ணாக்கி விட்டதனால்தான் வந்தது என்பதை இவள் ஒப்புக்கொள்வாளா?
நகம் பதிந்து நீலம் பாரித்த இளம் முலையைத் திருகியவன் உன்னுடன் சேந்தது உன் தாயின் கருப்பப்பையைத் தனதாக்கிக் கொண்டவன் என்பதை இந்த அப்பாவித் தாய் மனம் தாங்கிக் கொள்ளுமா?
காயத்திரி திருமதி சங்கரலிங்கம் கொண்டு வந்து வைத்த தேனீரைப் பருகிக் கொண்டாள். வடையை எடுத்து மேலும் கீழும் பார்த்தாள்.
“உறைக்காது சாப்பிடுங்கள்” சாந்தியின் தாய் முக மலர்ச்சியுடன் சொன்னாள்.
சாந்தியை ‘பிரைவேட்டாகப்’ படிப்பிக்க எங்கு உதவி எடுக்கலாம் என்று சாந்தியின் தாய் பாடசாலை ஆசிரியரைக் கேட்டிருந்தாள். அது விடயமாகத்தான் இந்த சோஸியல் வேர்க்கர் வந்திருப்பதாக அவள் நினைத்துக்கொண்டாள்.
லண்டனுக்கு வந்த தமிழன் பலர் தாங்கள்பட்ட கஷ்டங்களைத் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்பதற்காக எப்படியோ கஷ்டப்பட்டு வேலை செய்து பிரைவேட்டாகப் படிப்பிக்கிறார்கள்.
சாந்தியின் தாயால் அதுமுடியாது. இலங்கையில் அவள்பட்ட கஷ்டத்தால் இப்போதே அவள் இருதயம் படபடக்கத் தொடங்கிவிட்டது. நீரழிவு நோய் எட்டிப் பார்த்து விட்டது. மாத்திரையும் குளிசையுமாகத் தன் நேரத்தைச் செலவழிக்கிறாள்.
“இந்த நாட்டுக் குளிர் உடம்புக்குப் பிடிக்கவில்லை. இரத்தம் உறைந்து இருதயம் சரியாக வேலை செய்ய மாட்டேன் என்கிறது”
பெருமூச்சுடன் சொன்னாள் சாந்தியின் தாய். “பிரைவேட் பள்ளிக் கூடத்திற்குச் சாந்தியை அனுப்பமுடியாவிட்டால் எப்படியும் இந்தியாவில் போய் இருக்கப்பார்க்கிறன். தம்பி உதவி செய்யுறன் என்று சொல்லியிருக்கிறான்.”
பெருமையுடன் சொல்லிக்கொண்டாள். சாந்தியின் தாய், தம்பி உதவிசெய்கிறானாம்! ஆடு நாயை அழும் ஓநாய்!
காயத்திரி வடையைச் சாப்பிட்ட உறைப்புத் தீர கொஞ்சம் தண்ணீர் குடித்தாள்.
“சாந்தியைப் பற்றி பாடசாலையில் சில கேள்விகள் வந்திருக்கின்றன” தயக்கத்துடன் தொடங்குகிறாள் காயத்திரி.
“எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எழுதிக்கொடுத்தேனே” தாயின் மறுமொழியிலிருந்து தெரிந்தது சாந்தியின் தாய்க்கு சாந்தி பற்றிய பல விடயங்கள் தெரியாதென்று.
மெல்ல மெல்லமாக விஷயத்திற்கு வந்தாள் காயத்திரி. உண்மை எப்படிக் கசக்கம் என்று அவளுக்குத் தெரியும்.
“மிஸஸ் சங்கரலிங்கம்……………..சாந்தி……சாந்தி……இந்த வீட்டில் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறாள்.”
காயத்திரி சட்டென்று நிறுத்துகிறாள்.
தாயின் முகத்தில் இன்னும் குழப்பம்.
“சாந்தி சிலவேளைகளில் ……………சில வேளைகளில் சில உடம்புக் காயங்களுடன் பள்ளிக்கூடத்திற்கு வருகிறாள்………காரணம் உங்கள் தம்பி என்று சொல்கிறாள்”
காயத்திரி கவனமாகத் தன் வார்த்தைகளை அவிழ்த்தாள்.
தாய் வெல வெலத்துப் போகிறாள். தன் குடும்ப ரகசியம் வெளி வந்ததால் வந்த பயத்தால் முகம் வெளிறி விட்டதா? “என்ன சொல்கிறாள்……..என் தம்பி இவளைத்தன் குழந்தைபோல் பார்க்கிறான். எட்டு வயதில இருந்து இவனுக்கு அவன் எவ்வளவு செலவழிச்சான் தெரியுமா”
தாய் அலறினாள்.
ஏன் செலவழித்தான் என்பதன் விளக்கம் உனக்குத் தெரியுமா என்று கேட்க நினைத்தாள் காயத்திரி.
ஆனாலும் மௌனமாக இருந்தாள்.
“இப்படிக் கதை கட்டிவிட்டவளுக்கு எப்படித் திமிர் இருக்க வேண்டும்” தாயின் ஆத்திரம் வார்த்தைகளாக வெடித்தன.
“மிஸஸ் சங்கரலிங்கம், சாந்தியாக எதையும் பாடசாலையில் சொல்லவில்லை. அவள் நடவடிக்கையில் மாற்றங்கள் இருந்ததை அவதானித்த வகுப்பு ஆசிரியை, பாடசாலை நேர்ஸ், பாடசாலை சைக்கோலஸ்ட் எல்லாரும் என்னவென்று விசாரித்த பின்தான் உங்களிடம் பேசச்சொல்லி என்னைக் கேட்டார்கள்.”
இந்த நாட்டில் உண்மையான அன்பைப் பற்றி என்ன தெரியும். எதையும் செக்ஸ் ஆக்கிவிடுவீர்கள். அவன் தனது பிள்ளைபோல் ஓடிவிளையாடுவான். அள்ளிப்பிடித்துக் கொஞ்சுவான். தகப்பன் இல்லாத குழந்தை என்று எவ்வளவு தயவாக இருந்தான்” தாயின் கண்களில் நீர்.
“பெண்களுக்குக் கொடுமை செய்பவர்களில் பெரும்பாலனோர் தெரிந்தவர்களும் சொந்தக்காரர்களும்தான். நாங்கள் பெண்கள், எங்களுக்குப் பருவம் தெரியாத வயதில் எந்தத் தாத்தா எந்த அந்தரங்கத்தில் கொஞ்சினான் என்று யாருக்குத் தெரியும். எந்த மாமா உன் மர்ம பாகத்திலும் என் மர்ம பாகத்திலும் சீனியே சங்கரையே என்தன் நாக்கையும் மூக்கையும் துளைக்கவில்லை என்று நம்புவாயா”
காயத்திரி தான் உத்தியோகத்திற்கு அப்பாற்பட்டுப்பேசினாள்.
“சட் அப்…….இந்த நாட்டுக்கு வந்த நாளிலிருந்து என மகளுக்குப் பைத்தியம். உங்கள் நாட்டில் பிறந்த நிமிடத்திலிருந்து சாகும் வரை ‘செக்ஸ்’ பற்றித்தானே பேசுவீர்கள்.”
தாய் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
“இவளின் நடத்தை வர வரச சரியில்லை என்று தான்………..”
பிரைவேட் பள்ளிக் கூடத்தில் சேர்க்க வெளிக்கிட்டீர்களா” காயத்தரி ஆறுதலாகக் கேட்டாள். இப்படி எத்தனை கொடுமைகளை எத்தனை தாய்மார் தாங்கிக் கொள்கிறார்கள்.
தனக்கு எல்லாம் தெரிந்தும் தெரியாததுபோல் அந்தத் தாய் நாடகமாடுவது காயத்திரிக்கு மனதில் பட்டது.
உண்மையைத் தாங்கிக் கொள்ளாத மனம் தான் எப்படியும் தன் மகளைப் பாதுகாப்பாக இருக்க பிரைவேட் பள்ளிக்கூடம் தேடுகிறாளா?
காயத்திரி தான் போக வேண்டிய இடம் வந்ததும் சாந்தியின் நினைவை அகற்றினாள்.
இந்தத் தாய் ஒத்துழைக்கா விட்டால் சாந்தியின் மாமனாரில் ஒரு நடவடிக்கையும் எடுக்கமுடியாது. சாந்தி ஏற்கனவே எத்தனையோ பயங்கர அனுபவங்களால் மிக மிக நொந்து போயிருக்கிறாள். தாய்க்குப் பயந்து பாடசாலையில் சொன்ன உண்மைகளை இன்னொரு தரம் சொல்லப் பயப்படலாம். ‘உண்மைகளைச் சொல்லி ஏன் வம்பில் மாட்டிக்கொள்ளவேண்டும் என்ற ரகத்தில் சாந்தியும் ஒருத்தியா? மிஸ்டர் வலன்ஸ் சாந்தியின் தாயின் முடிவுக்கு எதிராக ஒன்றும் சொல்லப் போவதில்லை. “அது அவர்களின் கலாச்சாரம்” என்று தட்டிக் கழிக்கலாம்.
எப்படி சாந்திக்கு உதவி செய்வது?
பதின்மூன்று வயதில் பெருமூச்சுவிடும் பெண்மைக்கு அவள் பாதுகாப்புக்கொடுக்கமுடியும். அவளுக்குத் தெரியாது.
கலாச்சாரம் குடும்ப அமைப்பு, சமயக்கோட்பாடுகள் என்பன எவ்வளவு தூரம் பாதுகாப்புத்தருகிறது?
கொன்பிரன்ஸ் நாள். காயத்திரிக்கு அன்றிரவெல்லாம் நித்திரை வரவில்லை.
குறிப்பிட்ட எல்லா உத்தியோகத்தர்களும் வந்திருந்தார்கள். சாந்தியின் தாய் வராததால் கொன்பிரன்ஸ் ஒத்தி வைக்கப்பட்டது.
இது பற்றி சாந்தியின் தாய்க்குப் போன் பண்ணினாள். கொன்பிரன்சுக்குத் தேவையான இன்னொரு திகதி எப்போது போடலாம் என்று கேட்டாள் காயத்திரி.
“எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள். என் மகளுக்குச் சுகமில்லை. என் தம்பிக்குக் கல்யாணம் நடக்கப்போகிறது. நான் உங்கள் உதவி ஒன்றுக்கும் வரவில்லை. தாய் விம்பினாள்.
அவள் தம்பிக்குக் கல்யாணம் நடக்கப்போகிறதாம். அதன்பின் சாந்திக்கு நிம்மதி கிடைக்குமா?
“இந்த நாட்டிலிருந்தால் என் மகளின் எதிர்காலம் பாழாகி விடும். என் தம்பி எனக்குச் சென்னையில் ஒரு சின்னவீடு வாங்கித்தருகிறேன் என்கிறான். எனக்கு இந்தக் குளிர் ஒத்துவராது மகளுக்கு இந்தச் சமுதாயம் ஒத்துவராது”
சென்னையில் ஒரு சின்னவீடு?
அடுத்த கான்பிரன்ஸ் திகதி வரமுதல் சாந்தியும் தாயும் லண்டனைவிட்டு ஒடிப்போய் விட்டிருக்கலாம். தனது சுயநலத்திற்கு, குடும்ப கௌரவத்திற்குச் சாந்தியின் தாய் தன் மகளின் எதிர்காலத்தைப் பணயம் வைக்கப்போகிறாளா?
சின்ன வீடு யாருக்கு?
(யாவும் கற்பனையே).

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *