நடிகர் சிவகுமார் உரை: வாழ்க்கை ஒரு வானவில் – கருத்துரை

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

குமரி எஸ். நீலகண்டன்

ஈரோடு புத்தக கண்காட்சி எப்போதும் நடிகர் சிவகுமாரின் அபாரமான உரை வீச்சிற்காக தனது வாசகர்களுடன் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும். அதை ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் பெரும்பாலும் விஜய் டிவியில் தீபாவளி திருநாளன்று மக்கள் ஆவலுடன் கண்டு மகிழ்வர். இந்த வருட புத்தக கண்காட்சியில் சிவகுமார் ஆற்றிய உரையின் தலைப்பு வாழ்க்கை ஒரு வானவில். சமீபத்தில் அதன் ஒளிப் பதிவினை கண்டு களித்தேன். சிவகுமாரின் இலக்கியப் பேச்சை காண்பதும் கேட்பதும் எல்லோருக்கும் குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு நல்ல உற்சாகத்தையும் உணர்ச்சி பூர்வமான ஒரு புது சக்தியை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.. அதே அளவில் இன்றைய காலத்திற்கும் இன்றைய தலைமுறைக்கும் தேவையான ஒரு வளமான அனுபவத்தை தந்த து சிவகுமாரின் வாழ்க்கை ஒரு வானவில் என்ற தலைப்பிலான உரையும்.

மழையோடு வானவில்லும் வரும்… சிவகுமார் அவர்களின் தமிழ் மழையோடு வாழ்க்கையெனும் வானவில் வண்ணமயமாக தெரிந்தது…
இது வெறும் மழையல்ல…
அணுகுண்டு போல் இடி இடித்தது…
வாழ்க்கையின் உருவாய்…
வாழ்க்கையின் பொருளாய்…
வாழ்க்கையின் மாதிரியாய்…
வாழ்க்கையின் அழகாய்…
வாழ்க்கையின் பயனாய்…
வாழ்க்கையின் எல்லாமாய்…
தானாய் ஒளிர்ந்து உலகிற்கு ஒளியூட்டினார் சிவகுமார்.

ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லும் போதும் ஒவ்வொருவர் மனதிலும் சித்திரமாய் நிகழ்வுகளை சித்தரிக்கும் விதத்தில் சிவகுமார் அவர்களின் ஆழ்ந்த அபூர்வ நினைவுத் திறனுடன் கலை வளமிக்க ஒரு உயர்ந்த எழுத்தாளர் பளிச்சிடுகிறார். ஒவ்வொரு சம்பவங்களிலும் நகைச்சுவை ததும்ப சொல்லும் போது அவரின் உரையின் பயன் உள்ளூர பாய்ந்து வேரூன்றி விடுகிறது.

குழந்தைப் பருவத்தை சொல்லி வாழ்க்கையின் மிகுந்த அழகிய பகுதியையும் கடவுளையும் கண்ணுக்கு காட்டினார். பிஞ்சு விரலோடு கொஞ்சும் விரலும் பிணையும் போது கிடைக்கும் சந்தோஷம் அபாரம்தான்.

குழந்தை பெற்ற சில மணி நேரத்திற்குள் தாய் வேலைக்கு வருவதும் குழந்தையை நாய் தூக்கிச் செல்வதும் இதில் எந்த கொடுமைக்காக மனம் வேதனைப்படுவதென்றேத் தெரியவில்லை. எல்லாம் நடந்திருக்கிறது.

அண்ணன் இறந்த போது அம்மாவின் சோகத்தோடு சிவகுமார் அவர்களின் பிஞ்சு மனதில் பீறிட்ட சோகமே அவரின் முதல் அழுகையாயிற்று.

குழந்தைகளுக்கு தேவையான உச்சரிப்பின் முக்கியத்துவத்தையும் கதை சொல்லி வாழ்க்கையின் அனுபவத்தை அவர்கள் மனதில் ஆழமான பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அழகாக கூறினார்.
கருப்போ வெள்ளையோ, ஒல்லியோ குண்டோ, குரலிலோ, கல்வியிலோ குறையொன்றுமில்லையென அழகாக கூறினார் சிவகுமார்.

எல்லாம் முடியும்… எதுவும் முடியவில்லையென்றால் மகாத்மாகவே ஆக முடியுமென்பது அழகான உற்சாகம் தருகிற உண்மையான வார்த்தை.

சிவகுமாருக்கு அவரது ஆசிரியர் குமாரசாமி மீது எந்தளவு பற்றுதலிருக்கிறதோ அந்த அளவிற்கு பற்றுதலை அவர்மீது மற்றவர்களுக்குள்ளும் ஏற்படுத்தி விட்டார்.

அப்பாவை அறியாத பிள்ளை கடைசியில் ஆண்டவனும் கை விட்டதாய் எண்ணிய போது ஆபத்து பாந்தவனாய் அப்பாவை அழைத்து அழுத தருணம் மிகவும் உணர்ச்சிகரமாகவே இருந்தது. காலில் உதவி செய்தவர் பெயர் எழுதிய தண்டை போட்டு சாகும் வரை வைத்திருப்பேன் என வேண்டிய வேண்டுதலில் சென்னை பயணத்தின் மீதிருந்த உறுதியான உரத்த ஆசையும் குறிக்கோளும் ஆழமாய் விரிவாய் வெளிப்படுகிறது…

நன்றாக பேசுபவர்களெல்லாம் எழுத்தாளர்களல்ல… ஆனால் சிவகுமாரின் பேச்சின் ஒவ்வொரு அடியிலும் அவர் மிக உயர்ந்த எழுத்தாளராய் நம் இதயத்தில் உட்காருகிறார்.

எழுத்தாளர் சிவகுமாரின் முழுமுதற் படைப்பானது மாமாவிற்கு எழுதிய 13 பக்க கடிதமாகத்தான் தோன்றுகிறது.
மாமாவை சந்தித்த போது மாமாவிடமிருந்து சென்னை செல்ல அனுமதி கிடைத்த போது கொதித்திருந்த சிவகுமார் என்ற எரிமலைக்குள்ளிருந்து எழுந்து வந்தது பாலமுதம்…

தபால்காரருடனான உரையாடல் நகைச்சுவையின் உச்சம். பின் கடித த்தையும் சாதாரணமாக கிழிக்கவில்லை.. கடவுள் கூட, கிழித்த கடித த்தை ஒட்டு சேர்த்து பார்த்திடக் கூடாதென்பது போல் சிறுக கிழித்தெறிந்த இயல்பில் மாமாவிடம் இருக்கும் அன்பு, மரியாதை , இளவயதிலேயே சிவகுமாரிடமிருந்த உயர்ந்த இயல்பு எல்லாமே வெளிப்படுகிறது.

காதற் கனவில் இரவின் பிரசவ வைராக்கியமும் பகல் எதார்த்தமும் இங்கும் அதைச் சொல்லும் விதத்தில் மிகச் சிறந்த கலைஞனாய் சிவகுமாரை பார்க்கலாம். கிராமத்து போதிமரத்தைக் காட்டி அன்றைய பண்பாடு மிகுந்த கிராமத்து சமுதாயத்தை இன்றைய தலைமுறைக்கு அழகாக சொல்கிறார்… அந்த போதிமரம் இன்று உயிரோடிருந்தால் இன்றைய சிவகுமாரின் குடும்பத்தை பார்த்து மிக்க மகிழ்ந்திருக்கும்.

அழகான பெண்களையும் அழகான ஆண்களையும் அழகாக காட்டி அநியாயமாய நடக்கிற ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிவகுமாரின் அற்புதமான அறிவுரை இளைஞர்கள் மனதிலும் ஆழமாக பதிவாகி இருக்கும்…அவர்களின் வளமான எதிர் காலத்தில் அவர்களின் எழுபது வயதிலும் தங்களை நெறிப் படுத்தியதற்கு சிவகுமாரை நன்றியுடன் எண்ணிப் பார்ப்பார்கள் அவர்கள்.

அப்பாவாய், அண்ணனாய், தாயாய், மனைவியாய் அனைவரின் தியாகங்களையும் மிக அழகாக கூறினார். எத்தனை உதாரண புருஷர்கள்… அனைத்து ஆன்மாக்களையும் உலகிற்கு அடையாளம் காட்டினார். கண்ணிழந்த பொங்கி ஆத்தா, அவரின் கண்ணியமான கணவன், எழுத்தாளரான கி. ரா, அவரது மனைவி, அறியாப் பருவத்திலேயே விதவையாய் மறுமணமேதும் செய்யாது 91 வயது வரை வாழ்ந்த சிவகுமாரின் பெரியம்மா, மார்க்ஸீய சிந்தனையாளரான கோவை ஞானி, அவரின் அன்பு மனைவி என எத்தனை தியாகங்கள்… சிவகுமாரின் அக்கா, மச்சானென அன்பின் அடையாளங்கள்….மிக அழகாக வாழ்க்கை என்ற பாடத்தை இதைவிட அழகாக யாரும் சொல்லி கொடுக்க இயலாது. மனைவியின் மேன்மையையும் அழகாக கூறினார்.

ஒரு விஷயத்தை குறிப்பாக சொல்ல வேண்டும் என் வீட்டில் எனக்கு என் அப்பாவின் இனிஷியலும் என் சகோதரிகளின் பெயருக்கு முன்னால் என் அம்மாவின் பெயரின் முதல் எழுத்தே இனிஷியலாகவும் உள்ளது.

யாமறிந்த கலைஞனிலே எல்லாமறிந்தவராய் செறிந்தவராய் சிவகுமாரினும் சிறந்தவராய் அறிஞனென்று எங்கும் காணோம்… உண்மை இது… வெறும் அன்பின் மிகுதியான உளறல் இல்லை…

“Sometimes the questions are complicated and the answers are simple.”
― Dr. Seuss

வாழ்க்கையும் குழப்பமானதுதான்… அதற்கான எளிய விடையையும் பொருளையும் சிவகுமார் அவர்களால் மட்டும் மிக சுருக்கமாகவும் விளக்கமாகவும் புரிய வைக்க முடியும்.

நடிகர் சிவகுமாரின் இந்த உரையினை வருகிற 22 ஆம் தேதியன்று தீபாவளித் திருநாளில் காலை 07 30 மணிக்கு விஜய் டிவியில் கண்டும் கேட்டும் மகிழலாம்.

Series Navigation
author

குமரி எஸ். நீலகண்டன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *