அரசற்ற நிலை (Anarchism)

author
0 minutes, 13 seconds Read
This entry is part 6 of 16 in the series 26 அக்டோபர் 2014

 

-ஏகதந்தன்

 

அனார்க்கிஸம் (Anarchism)- ‘இந்த ஆங்கில எழுத்தைத் தமிழில் எந்த வார்த்தையைக் கொண்டு குறிப்பிடுகிறார்கள்’, என்று எனக்கு ஓர் ஆவல்! நௌம் சௌம்ஸ்கி (Noam Chomsky) என்ற மொழியியல் பேராசிரியர், அமெரிக்க அரசியலினால் உலக மக்களும், ஏன் அமெரிக்கர்களும் படும் துன்பத்தையும், அதற்கான தீர்வாகச் சரித்திரத்திலிந்து இந்தத் தத்துவத்தைக் கூறி, செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் முன் மொழிகிறார்; இதைப் படிக்கும்பொழுது பிறந்ததுதான் இந்த ஆவல். பல இணையதளங்கள் அனார்க்கிஸத்தை வன்முறை என்றும், கலகமென்றும், ஒழங்கீனமென்றும் குறிப்பிட்டிருந்தது; இதற்கு முதல் காரணம் அமெரிக்க ஊடகங்களும், திரைப்படங்களும்?! அனார்க்கி(anarchy), அஃதாவது அரசற்ற (அ) அரசியலற்ற (அ) தலைவனற்ற நிலையைக் கலகம்(chaos) என்று கூறுகிறார்கள். சுயேட்சைக்கும், தனிமனித சுதந்திரத்திற்கும் வழி வகுக்கும் உயர்ந்த தத்துவம் இப்படி தவறாகப் போதிக்கப் படுவதேன்? ‘ச்சீ எந்த கட்சியும் உறுப்படியில்லை’, என்று நொந்துக் கொள்பவனே அனார்க்கிஸ்ட் (anarchist). இதுதான் இத்தத்துவத்தின் எளிய விளக்கம். இப்படிப் பார்த்தால் விதுரர், ஸ்பார்ட்டாகுஸ், இயேசு, மகாவீரர், புத்தர், சாணக்கியனிலிருந்து ப்ரதௌன் (Proudhon), பகுனின் (Bakunin), வ. உ. சி., பாரதியார், பகத் சிங், காந்தி, விவேகானந்தர், சுபாஷ் சந்திர போஸ், சௌம்ஸ்கி வரை அனைவரும் இந்த ரகம்தான். இதில் சிலர் அஹிம்சை வழியையும், சிலர் ஹிம்சையையும் தேர்ந்தெடுத்தார்கள்.

 

‘இது தேவையா?’, என்று கேட்பது, ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட பொழது ‘விடுதலை தேவையா?’, என்று சில மடையர்கள் கேட்டது போலத்தான் இருக்கிறது. ‘உன் தொழிலை நீ தொடங்கு, அதன்மூலம் உன் சமூகத்திற்கு பலன் தருவதை செய்; இதற்கு சமூகத்தின் உதவியைப் பெறு; சட்டமும், காலத்திற்கேற்ப மாறும் திட்டங்களும் போதும்; அரசியலும், அரசியல்வாதிகளும் தேவையில்லை, அவர்களும் பணக்காரர்களாக குறுக்கு வழியில் சுரண்ட முற்ப்படுவார்கள்’- இவை அனார்க்கிஸ்டுகளின் வாதம். அப்படியல்ல, மக்கள் அவர்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்கள்மூலம் அரசமைத்து, நன்மை அடைவதுதான் சாலச் சிறந்தது என்றார்கள் மார்க்ஸிஸ்டுகள். இந்தச் சண்டை நடந்தது 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில்! இப்பொழுது உலக நாடுகளில் உள்ள நிலையைப் பார்த்தால், அனார்க்கிஸ்ட்டுகள், அதாவது சுயேட்சைவாதிகளின் வாதம் சரித்திரத்தினால் வலுக்கிறது. இதைப் பரிணாம வளர்ச்சியையும், மனிதனின் மிருகக் குணத்தையும் வைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. பல மிருகக் கூட்டத்திற்கு ஒரு தலைவன் உண்டு. கூட்டமாகச் சேர்ந்து வேட்டையாடிய உணவை விநியோகம் செய்யும் உரிமை தலைவனுடையது. பெரிய, சத்தான இரைச்சியை உண்டபின், மிச்சத்தை விட்டுச் செல்லும்; மற்றவை இதற்காக அடித்துக்கொள்ளும். இந்த அரசியல் புரிந்த ஒரு விலங்குத் தலைமை எதிர்க்கும். ஜெயித்தால் வாழ்வு, தோற்றால்?! காங்கிரஸ் போலச் சில காலத்திற்கு எழுந்திருக்க முடியாது. இவ்விரு விலங்குகள் சண்டைப் போடுவதை வேடிக்கைப் பார்க்கும் மற்ற விலங்குகள் ஆர்ப்பரிக்கும்- தொண்டர்களைப் போல், ஊடகங்களில் பணம் பெற்று விமர்சிக்கும் அரசியல் ஆய்வாளர்களைப் போல.

 

மிருகம்போல வாழ்வனவிற்கு தலைவன் தேவை; மனிதனுக்கு? காந்தி, விவேகானந்தர், பாரதி – இவர்களைத் தலைவன் என்று அழைப்பது சரியன்று. இன்று வாழும் மனிதர்களுக்கு எடுத்துக்காட்டாய் திகழும் ‘வாழ்வாங்கு வாழ்ந்த தெய்வங்கள்’. அரசின்றி ஒரு நாடு இயங்க முடியுமா? ஏன் முடியாது? சட்டமும், காவலும் இருந்தாலே போதும். இவற்றிக்குத் தடையாக இருப்பதே அரசை நிர்வகிக்கும் அரசியல்வாதிகள். இரண்டு ரவடிகளில், எவன் குறைந்த அட்டகாசம் செய்கிறான் என்பதே இன்றைய நிலை. நீங்கள் நிம்மதியாக இருந்தால், இவர்களால் அரசியல் செய்ய முடியாது. ஓரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதற்கு வாக்கெடுப்பதைப் போலக் கீழே இறக்குவதற்கு வாக்கெடுத்தால், எந்தக் கட்சியும் ஐந்தாண்டுகள் தாக்குப்பிடிக்க முடியாது. அப்படியே ஒரு நல்ல தலைவன் கிடைத்து, நல்லவை நடந்தாலும், அவனுக்குப் பிறகு வருபவன் அவற்றைக் கெடுக்கிறான். இது இந்தியாவில் மட்டுமில்லை, உலகளவில் இதுதான் நிதர்சனம். மக்களைப் பாதிக்கும் பொருளாதார முடிவுகள் இரகசியமாக எடுக்கப்படுகின்றன. இதனால் மூன்றாம் உலகப் போர் நடக்க வாய்ப்பிறுக்கிறது! அமெரிக்க மக்களின் ஆதரவின்றியே வியட்னாம், க்யூபா, ஈராக் போன்ற நாடுகளில் யுத்தம் நடந்தது; அதைத் தடுக்கும் சக்தி அவர்களிடம் இல்லை. பொது வாக்கெடுப்புகள் இல்லாமல், மூடர் கூடமொன்று முடவெடுப்பதைத் தடுப்பதே இந்தத் தத்துவத்தின் நோக்கம். “மக்கள் முட்டாள்கள். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் அவர்களை வழி நடத்துகிறோம்”, என்று தங்கள் அறிவை உயர்வாகக் குறிப்பிட்டவர்கள் உண்டு. “இந்தியர்கள் தங்களை ஆளும் திறமை இல்லாதவர்கள்”, என்று மடயனான சர்ச்சில் கூறியது, ஆங்கிலேயர் விட்டுச் சென்ற ஊழலை பின்பற்றும் நிர்வாகிகளையும், அரசியல் மடையர்களையும் பார்க்கும்பொழுது நினைவிற்கு வருகிறது.

 

அரசற்ற (அ) அரசியலற்ற (அ) தலைவனற்ற நிலை சாத்தியமா?- இதுவல்ல என் கேள்வி- வருங்காலத்தில் அஹிம்சை வழியில் நடக்கவிருக்கிறதா, அல்லது 1871இல் பாரீஸில் பணக்காரர்களால் பொதுமக்கள் உரிஞ்சப்பட்டு, அதனால் மன உளச்சளுக்கு ஆளாகி, பணக்காரர்கள் வாழும் வீடுகளை உடைத்ததைப் போல் ஹிம்சை வழியில் நடக்குமா? இதுவே என் கேள்வி. இதனால்தான் அனார்க்கிஸத்தை கலகத்தோடு ஒப்பிடுகிறார்கள். அப்படிப் பார்த்தால் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய மக்கள்மீது போடப்பட்ட குண்டுக்கு இரு நாட்டிலுமுள்ள அரசியல்வாதிகளே காரணம். அவர்களும் கவகவாதிகள்தானே? வாஞ்சிநாதன் (எ) சங்கரன், சுபாஷ் சந்திர போஸ் இவர்கள் விடுதலை பெற கலகம் செய்தார்கள். அந்தத் தியாகிகளினால் கிடைத்த விடுதலையை இந்தியர்கள் மறதியினாலும், பணம் தரும் மயக்கித்தினாலும் மறந்துவிட்டார்களோ? என்று கேட்கத் தோன்றுகிறது. ஒன்றைப் புரிந்துக் கொள்ளுங்கள். அடிமைத்தனம் என்பது பரிணாம வளர்ச்சி அடையும். இதனால் ஒரு நாட்டின் பொருளாதாரம் பெரியளவில் பாதிக்கப்பட்டால், பெரிய ஜனத்தொகையைக் கொண்ட இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில் என்னவாகும்-இது திறந்த கேள்வி; காலம்தான் பதில் சொல்லும். முடிந்தவரை வன்முறையைக் குறைக்க காந்திய வழி உதவும். பல இலக்கியவாதிகளும் (George Orwell, Leo Tolstoy, Oscar Wilde, etc.) இதையே விரும்புகின்றனர்.

 

இந்த நிலை அடைந்தாலும் சமூகத்தில் பிரச்சனைகள் இருக்காது என்று நினைக்காதீர்கள். அரசியலினால் சட்டம், காவல்துறை இப்பொழுது அனுபவிக்கும் இடையூருகளின்றி செயல்படும்-அவ்வளவே. அரசியல் அமைப்புகள் மக்களுக்குத் தொண்டு செய்ய மற்ற கட்சிகளுடன் போட்டி போடவோ, தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்ற அவசியமோ இல்லாமல் போகிறது. பிரச்சார செலவு கூடக் கிடையாது! மக்களுக்கு இலவசங்களைக் கொடுக்கும் அவர்களுக்கு இந்த நல்லதைக்கூட நாம் செய்யவில்லையென்றால், நாம் நன்றி கெட்டவர்கள் ஆகிவிடுவோம்!! விவேகானந்தர் இளைய தலைமுறையை நம்புகின்றார். “எந்தத் தலைமுறை இதை செய்யப் போகிறது?”, என்பதே கேள்வி. “அனைவரின் சுதந்திரத்தில்தான், என் சுதந்திரமும் அடங்கியுள்ளது”, என்ற பகுனினுடைய கூற்றைக் கூறி முடிக்கிறேன்.

 

 

 

 

Series Navigationபாரம்பரிய வீடுஅடுத்தடுத்து எமது இலக்கியக்குடும்பத்தில் பேரிழப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *