காலம் தன் வட்டத் திகிரியை மேலும் சுழற்றிக் கொண்டே இருக்கிறது.. – ஐயப்பன் கிருஷ்ணனின் ‘சக்கர வியூகம்’

This entry is part 2 of 22 in the series 16 நவம்பர் 2014

-ராமலக்ஷ்மி

இருபெரும் இதிகாசங்களாகிய இராமாயணமும் மகாபாரதமும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. பிரமிப்பைத் தருகின்றவை. எண்ணற்ற கதை மாந்தர்களைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு பாத்திரப் படைப்புக்கும் முக்கியத்துவம் தரப்பட்ட இவற்றைக் கட்டுரைகளாகச் சொல்லிச் செல்வது ஒருவகை உத்தி. கதையாகச் சொல்லிச் செல்வது இன்னொரு வகை. கட்டுரைகள் ஒரு நேர்கோட்டில் விளக்கங்களுடன் நகர்ந்து செல்பவை. அவற்றையே கற்பனை கலந்து காட்சி விவரிப்போடு புனைவாக வடிப்பது ஒரு எழுத்தாளனின் திறமைக்கான சவால் என்றே சொல்லலாம்.

பலமான பின்புலத்தின் இழையிலிருந்து விலகாதிருக்க வேண்டிய நிர்ப்பந்தம். சுவை குன்றாமல் சொல்ல வேண்டிய அவசியம். சறுக்கி விடாமல் கத்தி மேல் நடப்பது போன்றதான இந்தச் சவாலை எந்த சாமர்த்தியங்களும் தேவைப்படாமல் மிக இயல்பாகத் தன் நேர்மையான எழுத்தினால் கடந்திருக்கிறார் ஐயப்பன் கிருஷ்ணன். எழுத்து நடை நம்மைக் களத்தில் கொண்டு நிறுத்துவதற்கும், கதாபாத்திரங்களின் தன்மை எந்தப் பாதிப்பும் அடையாததற்கும் காரணம், ஆசிரியர் மனதால் அந்தக் காலக்கட்டத்துக்குள் பயணப்பட்டிருப்பதும் அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறி உணர்ந்து எழுதியிருப்பதுமே.

பல தலைமுறைகளாகப் பல வடிவங்களில் மக்களுக்குச் சென்றபடியே இருக்கின்றன இதிகாசங்கள். ஒரு பாத்திரத்தின் அந்நேரத்தைய செயல்களை விவரிக்கும், விமர்சிக்கும் போக்கினில் அவற்றின் முழுமையான குணாதிசயங்களை ஒரு சிலபேர் சொல்லத் தவறி விடுவதால் பல மகாபாரத, இராமாயணக் கதாபாத்திரங்கள் தவறான சித்தரிப்புகளுடன் வலம் வந்தபடியும் இருக்கின்றன. அந்தப் பிழையைக் கவனமாகத் தவிர்த்திருப்பதுடன் எடுத்துக் கொண்ட கருவினில் மட்டுமே கவனத்தைச் செலுத்தாமல் எதிர்மறையாகவே நாம் பார்க்கின்ற பாத்திரங்களின் நல்ல பக்கத்தையும் வாய்ப்பு வரும் போது காட்டத் தவறவில்லை ஆசிரியர். இளம் பாண்டவர்களைத் தவறுதலாகக் கொன்று விட்ட அஸ்வத்தாமனிடம் ‘குரு வம்சத்தைக் காக்கக் கடைசியாக இருந்த சிறார்களையும் அழித்து விட்டாயே’ எனக் கதறியபடியே துரியோதனன் உயிரை விடுவது ஒரு உதாராணம்.

மதம் கொண்டு திரிந்த ‘அஸ்வத்தாமன், என்றொரு யானை’ தன் உடலில் ஏற்பட்ட காயங்களுக்குத் தனது வெறிச்செயல்களே பொறுப்பென்பதை உணரவேயில்லை. தந்தை துரோணர் தன்னை வேண்டுமென்றேதான் எதிரிகளிடம் ஒப்படைத்துக் கொண்டார் என்பதை உணரும் அஸ்வத்தாமன் தலை குனிந்து நிற்கிறான் கண்ணனின் முன்னால். சிரஞ்சீவியான அவனது வேதனையும் சிரஞ்சீவி ஆகிவிட இன்றைக்கும் உலகில் அனைத்து ஜீவன்களின் வலிகளில், வஞ்சிக்கப்பட்டவர்களின் வருத்தம் தோய்ந்த குரல்களில் அஸ்வத்தாமனின் துயரும், குரலும் கலந்து ஒலிப்பதாகக் காட்டுகிறார் ஆசிரியர்.

கணநேரம் ஏற்பட்டுவிட்ட தான் எனும் அகந்தைக்காக, ஆண்டவனை அடையும் வாய்ப்பை அந்த அகந்தை இழக்கச் செய்யும் என்பதற்காக கல்லுக்குள்ளே அகலிகையின் உயிரை வைத்த கெளதமரால், விமோசனம் பெற்ற அகலிகையுடன் மீண்டும் ஒன்று சேர முடிந்ததா? விடை கிடைக்கிறது ஒரு கதையில். இராமரின் கால் பட்டுக் கிடைத்த புண்ணியத்தைக் காட்டிலும் அவர் ‘தாயே’ என்றழைத்த ஒரு சொல்லால் பெண்மை போற்றப்பட்டுப் போரொளியாகிறது. அதே இராமர்தான் சீதையைக் காட்டுக்கு அனுப்பினார். அதற்கானக் காரணங்களாக வரும் கதைகள் அதிகமாகச் சொல்லப்படுவதில்லை. இன்னொரு கதையில் பிறன்மனை நோக்கிய பாவத்துக்காகப் பழிக்கப்பட்ட இராவணன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என ஆசிரியர் தனது பார்வையில் கூறியிருப்பது சொல்லப்படாத அப்படியான ஒரு கதையோ என நம்மை எண்ண வைக்கிறது. சூர்ப்பநகை மணமானவள், இலட்சுமணனைப் பற்றி முறையிடும் முன்னரே அண்ணன் இராவணனுடன் அவளுக்கு மனஸ்தாபம் இருந்தது என்கிற ஒரு முடிச்சினை ஆசிரியர் பிரித்து எடுக்கும்போது ஜோதியாகின்ற இராவணனின் உயிர் இராமனைச் சுற்றி வந்து உயரக் கிளம்புகிறது.

கண்ணன் – குசேலன் நட்பு நாம் அறிந்த ஒன்றே. உயர்வாகப் போற்றப்படும் துரியோதனன் – கர்ணன் நட்புக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல இவர்களின் பரிசுத்த அன்பு. தெரிந்த கதையெனக் கடந்து விட முடியாதபடிக் கட்டிப் போடுகிறது குட்டிக் கண்ணனுக்கும் சிறுவன் குசேலனுக்கும் நடுவேயான கள்ளங்கபடமற்ற பால்ய கால உரையாடல்களும் நிகழ்வுகளும். அவல் பெற்று அரண்மனை அளித்த கண்ணனின் பேரன்பில் நெஞ்சம் நெகிழ்ந்த குசேலனும் பாண்டவர்களுக்கு உதவி செய்வதில் மும்முரமாகி விட்ட கண்ணனும் பின்னர் பார்த்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படவேயில்லை என்றாலும் அவர்களுக்கு நடுவே இருந்த ஆழ்ந்த அன்பு எப்படி இருவரின் கடைசிக் காலம் வரை நீடித்து அதற்குப் பிறகும் கூடத் தொடர்ந்தது என்பதை அற்புதமாகச் சொல்கிறது ‘அன்புக் கவசம்’. மெய்யான அவ்வன்பில் நாம் கரைவது திண்ணம். ஆபத்துக் காலங்களில் அரணாய் நின்று நம்மைக் காப்பது நாம் செய்த நல்ல காரியங்கள் மட்டுமே அல்ல. உற்றவர் நம் மீது வைத்திருக்கும் உண்மையான அன்பும், நமக்காகச் செய்கின்ற பிரார்த்தனைகளும்தான் என்பது மறுக்க முடியாத சத்தியம் அல்லவா?

கட்டை விரலைக் காணிக்கையாகத் தந்த வேடர் குலத் தலைவனின் குருபக்தியை, அவனது வெள்ளந்தி உள்ளத்தை வெகு அழகாகச் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர். தந்தையின் கடைசி வார்த்தைகளை வேதவாக்காகக் கொண்டு தேடலைத் தொடரும் மகனாக, சிறுவனின் பேச்சென்று ஒதுக்கிடாமல் மகனின் கேள்விகளை மதிக்கும் பொறுப்பான தகப்பனாக, ஈரக் களிமண்ணாக இருக்கும்பொழுதே மகனை நல்வழியில் வடிக்க நினைக்கும் சிறந்த குருவாகப் பல பரிமாணங்களில் ஏகலைவனைக் காட்டும் ஆசிரியர், உண்மையான தியானத்தின் பலனாக அவனுக்கு இறைவனுடன் உரையாடும் வரம் வாய்ப்பதையும், பின்னாளில் கண்ணனின் இறுதிக் காரியங்களைச் செய்யும் பெரும்பேறு கிடைப்பதையும் சொல்லி வியக்க வைக்கிறார்.

தலைப்புக் கதையான சக்கர வியூகம் இரண்டு பாகங்களாக அதீதம் மின்னிதழில் வெளிவந்த சமயத்திலேயே பலரது பாராட்டைப் பெற்று, பரவலாகக் கவனத்தை ஈர்த்த கதை. ஆசிரியர் தரும் நுண்ணிய விவரங்களால் சக்கர வியூகமும் அதற்கு எதிரான மகர வியூகமும் மலைக்க வைக்கின்றன. போர் வர்ணனைகள் நம்மையும் அந்த சக்கர வியூகத்துக்குள் கொண்டு சென்று அபிமன்யூவுக்கும் துரோணருக்கும் நடுவே சாட்சியாக நிறுத்தி விடுகின்றன. அபிமன்யூ தந்திரமாக வீழ்த்தப்பட்டது போலவே வீழ்த்தப்படுகிறார் பின்னர் துரோணரும். தர்மத்தை நிலைநாட்ட நடப்பதாகச் சொல்லப்படும் போர்களில், மீறப்படும் போர் தர்மங்கள், போர் தந்திரங்களாக ஒப்புக் கொள்ளப்படுவது இன்றளவிலும் தொடரத்தானே செய்கிறது? ‘அனைத்தையும் பார்த்துக் கொண்டு காலம் தன் வட்டத் திகிரியை மேலும் சுழற்றிக் கொண்டே இருக்கிறது’. மெய்யான வார்த்தைகள்.

திருக்குறளைப் போலவே இருபெரும் இதிகாசங்களிலும் சொல்லப்படாத வாழ்வியலே இல்லை எனலாம். தர்மம், அதர்மம், துரோகம், வீரம், காதல், காமம், நட்பு, கடமை, பரிவு, அன்பு, பக்தி என சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கும் வாழ்வியல் தத்துவங்களையும் நீதிகளையும் அதே போலவே போதிக்காமல் நாம் உணர்ந்திடும் விதமாய்க் கதையின் போக்கில் கையாண்டிருக்கிறார் ஐயப்பன் கிருஷ்ணன். மொத்தம் ஏழு கதைகள். முதல் ஆறும் நேரடியாக இதிகாசப் பின்னணியைக் கொண்டிருக்க ஏழாவது கதை எல்லாக் காலங்களிலும் பெண்ணுக்குத் தொடரும் அநீதியைச் சுட்டிக் காட்டுவதாகச் சுடர் விடுகிறது. காட்டுக்குச் செல்லும் இலட்சுமணன் தன்னைப் பற்றியக் கவலை விடுத்து அண்ணனுக்கான கடமையைச் சரிவர ஆற்றட்டும் என அவனது தூக்கத்தை வரமாக வாங்கிக் கொள்ளும் ஊர்மிளையின் ஏக்கங்களையும், கெளதம சித்தார்த்தன் பிரிந்து செல்லுகையில் உறங்குவது போல நடித்து விடை கொடுக்கும் யசோதையின் வேதனைகளையும் எள்ளி நகையாடும் மூதாட்டி யார் என்பதே அச்சுடரின் திரி.

தான் வாசித்து வியந்த இதிகாசங்களை, தான் வியந்து மதித்த கதாபாத்திரங்களை தன் எழுத்தின் மூலமாக வாசகருக்குக் கொண்டு சேர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளவில்லை ஐயப்பன் கிருஷ்ணன். அதையும் தாண்டி இவற்றை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் இந்த மாபெரும் காவியங்களை முழுமையாக அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட வேண்டுமென விரும்புகிறார். நிச்சயம் அது நிறைவேறும். அவருக்கும், வித்தியாசமான முயற்சியான இந்த இதிகாசக் கதைகளை தொகுத்து வெளியிடும் அகநாழிகை பதிப்பகத்திற்கும் நல்வாழ்த்துகள்!
**

பக்கங்கள்: 96; விலை: ரூ. 80;
வெளியீடு: அகநாழிகை பதிப்பகம்;
தபாலில் வாங்கிட: aganazhigai@gmail.com
இணையத்தில் வாங்கிட: http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1821

Series Navigationதொடுவானம் 42. பிறந்த மண்ணில் பரவசம்பட்டிமன்றப் பயணம்
author

ராமலக்ஷ்மி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *