சுப்ரபாரதி மணியனின் நீர்த்துளி – உளவியல் பார்வை

author
0 minutes, 3 seconds Read
This entry is part 6 of 23 in the series 30 நவம்பர் 2014

மா.அருள்மணி
முனைவர்பட்ட ஆய்வாளர் தமிழ்த்துறை
பாரதியார் பல்கலைக்கழகம் கோவை – 46.
முன்னுரை
படைப்பிலக்கியங்களில் வாசகரிடம் தனக்கென தனித்ததொரு இடத்தினைப் புதின இலக்கியம் பெற்றுள்ளது. ஏனெனில் அவை மனித வாழ்க்கையை மிகையில்லாமலும் குறையில்லாமலும் முழுமையாகப் படம்பிடித்துக் காட்டுபவையாக உள்ளன. ஒவ்வொரு தனிமனிதனின் மீதான சமூகத் தாக்கங்களையும் அவனுக்குள் நிகழும் மனப்போராட்டத்தையும் அதனால் ஏற்படும் மனநோயையும் அந்நோயிலிருந்து அவன் மீண்டுவர மேற்டகொள்ளும் முயற்சிகளையும் விளக்குவதற்குத் தகுந்த களமாக புதினங்கள் விளங்குகின்றன.

புதின இலக்கியங்களில் மனநோய் ஆட்கொண்ட கதாபாத்திரங்களை அமைப்பதன் மூலம் அப்பாத்திரத்தின் குறைகளை மட்டும் காணாமல் அதற்கான காரணங்களையும் காண இயலும். இதன் மூலம் இயல்பாக சமூகத்தில் அந்நோய்க்கு ஆடப்பட்டவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பும் அரவணைப்பும் கிடைப்பதற்கு புதின இலக்கியம் துணை நிற்கின்றது. அது மட்டுமல்லாமல் இது போன்ற மனநிலையில் அந்நோயின் அறிகுறிகள் தென்படும் மனிதன் தன்னைத் திருத்திக் கொள்வதற்கு இப்புதினங்கள் உதவக்கூடும். எனவே இவற்றை உளவியல் நோக்கில் ஆய்வது துணைநிற்கும் எனும் கண்ணோட்டத்தில் சுப்ரபாரதி மணியனின் நீர்த்துளி புதினத்தில் ’கலா’ என்கிற மையப்பாத்திரம் இங்கு ஆய்வுக்குரியதாகிறது.

கதைச்சுருக்கம்
நீர்த்துளியின் கதாநாயகி கலா. அவளுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் பிறந்தன. ஒன்று பெண் குழந்தை சிவமணி. இன்னொன்று ஆண்குழந்தை. அது பிறந்தவுடன் இறந்துவிட்டது. கணவன் சுந்தரவேல் குடிகாரன். சரியான சந்தேகப்பேர்வழி. எனவே இருவருக்கும் அடிக்கடிச் சண்டைகள் நடக்கும். எனவே வீட்டை விட்டு வெளியேறி வந்துவிட்டாள். பெண் குழந்தையைத் தன்னுடன் சில மாதங்கள் தங்கவைத்து வளர்த்து வந்தாள். அவள் ஊருக்குச் செல்ல அடம்பிடிக்க சீனி மாமாவுடன் அனுப்பிவைத்தாள். பிறகு அவள் குழந்தை திரும்பி வரவேயில்லை.

பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து விடுதியில் தங்கி வாழ்ந்து வந்தாள். பணக்கஷ்டம் வரும் போது அடகு கடையில் சிறு நகைகளை அடகுவைத்துப் பணம் பெற்று தேவையானவற்றை வாங்குவது வழக்கம். அப்போது அவளைச் சந்தித்தவன் தான் லிங்கம் என்பவன். அவனுடன் பரஸ்பர அன்பின் நிமித்தம் பழகிய பழக்கம் தீவிரமாகி உடலளவிற்கு வந்தது. இது இரண்டு வருடங்கள் தொடர்ந்தது. பின்பு இருவரும் சேர்ந்து வாழ்வதென முடிவுசெய்து வாடகை வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர். தன் கணவன் விவாகரத்து கேட்டு தராததாலும் அவள் தன்னை மீறி எதுவும் செய்யமுடியாது என்று அவன் மிரட்டல் விடுத்ததாலும் அவள் தனக்குள் மிகவும் மனஇறுக்கம் அடைந்தாள். தன் கணவனால் லிங்கத்திற்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என்று பயந்தாள்.

மேலும் தன்னைச் சுற்றி இருந்தவர்களின் ஏளனப்பேச்சும் வேலைக்குப் போகும் இடங்களில் எல்லாம் ஆண்களால் ஏற்படும் பாலியல் தொந்தரவுகளினாலும் மனம் நொந்தாள். தன் மகள் சிவமணி பருவமடையும் வயதை நெருங்குகிறாள் என்கிறபோது தன்னால் ஏதும் செய்ய முடியாத கையற்ற நிலையையும் விவாகரத்துப் பெறாமல் லிவிங்–டூ-கெதர் முறையில் தான் வாழ்ந்து வருவதைத் தன்சுற்றத்தாரும் உறவினரும் ஏசுவார்கள் என்ற எண்ணத்தினாலும் மனதிற்குள்ளேயே புலம்பித் தவித்தாள். இதனால் லிங்கத்திற்கும் தனக்கிருக்கும் அன்பும் காமமும் பிளவுறுவதாகவே நினைத்தாள். மேலும் தாங்கள் சேர்ந்து வாழ்வதால் ஏற்படும் பணத்தேவையைச் சமாளிக்க முடியாமல் சாயப்பட்டறை தடை உத்தரவால் விளையும் வேலையின்மையைத் தீர்க்க முடியாமல் அவதிப்பட்டாள். அப்படியே சேர்ந்து வாழ்ந்தாலும் சமூகத்தின் ஏய்ப்புக்கும் உறவினரின் தூற்றலுக்கும் அன்பு மகளுக்காக ஏங்கும் மனதிற்கும் பதில் சொல்ல முடியாமல் போகுமே என்றெண்ணி லிங்கமும் தானும் பிரிவதென்று உறுதிசெய்து வெளியேறுகிறாள். இது கலா மனத்திற்கும் சமூகத்தின் நீதிக்கும் நடக்கும் போராட்டத்தில் மனநோய்க்கு ஆட்படாமல் மீளுவதை “இந்த பலவீனத்தொடு உன்னுடன் இருப்பது உறுத்தலாகவே இருக்கிறது” என்ற கலாவின் கூற்று உறுதிப்படுத்துகிறது.

பிராய்டின் உளப்பகுப்பாய்வு
மனிதன் வாழ்வில் உயர்நிலையடையவும் தாழ்நிலையடையவும் மனமே மூலக் காரணமாகும். பண்டைய காலந்தொட்டு தத்துவவாதிகள் முதல் இன்றைய நரம்புநோய் குறித்த ஆராய்ச்சியாளர்கள் வரை இதைப்பற்றி பல்வேறு விளக்கங்களை அள்ளித்தந்துள்ளனார். அவ்வழியில் மனதினைப் பற்றி ‘பகுப்பாய்வு’ எனும் அறிவியல் வழி ஆராய்ந்து விளக்கம் கூறியவர் சிக்மண்ட் பிராய்டு ஆவார். அவரின் இந்த மகத்தான பங்களிப்பு கலை இலக்கியம் சார்ந்த பல்வேறு துறைகளையும் பாதித்துள்ளது. அவர் மனத்தினை மூன்று கூறுகளாகப் பிரிக்கிறார்.

இட் (Id)
ஆழ்மனமான நனவிலி மனமே ‘இட்’ ஆகும். இது அறிவிற்கு ஆட்படாதது. இச்சைக்குரியது; அறியப்படாதது; ஆழ்மனத்தது; அந்தரங்க ஆசைகளைக் கொண்டது. மேலும், ஆசைகள், அச்சங்கள், அடக்கி வைக்கப்பட்ட காம இச்சைகள், பாலியல் வெறிகள், மன உணர்வுகள், இன்ப ஏக்கங்கள் ஆகியவற்றின் சங்கமமே இட் (Id) ஆகும்.

ஈகோ (EGO)
இது அறிவுப்பூர்வமானது; தர்க்கமுறையிலானது; விழிப்புணர்வு நிலையது ஆகும். இட் என்பது மனம் போல் இன்பம் நாட்டம் கொள்ளாது இயல்பாக வாய்மைக் கொள்கையின்பால் நாட்டம் கொண்டது. தனியொருவன் நெறித்தவறி காப்பற்றப்படுவதே இதன் மூலம்தான்.

சூப்பர் ஈகோ (Super Ego)
இது ஈகோவிலிருந்து கிளைத்த தனிப்பகுதியாகும். முறையற்ற ஆசைகளை ஆய்வுச்செய்து சமூகத்தன்மைகளுக்கேற்ப தகுதியற்றவைகளைத் தள்ளிவிடும் நிலையை ‘சூப்பர் ஈகோ’ மேற்கொள்கிறது. இது கிட்டதட்ட நீதிபதி, தணிக்கை ஆகியன போன்று செயல்படுவதாக ஃப்ராய்டு கூறுகிறார். மனசாட்சி, விதி, பாவம் புண்ணியம், காமம், நீதி, நியாயம் ஆகியன எல்லாம் இதில் அடங்கும்.

ஆழ்மன முரண்பாடுகளும் போராட்டங்களும்
இட் எனும் நனவிலி மனமானது, பிடிவாதம், சூழலைப் பற்றிய கவலையின்மை, தன்னலம் சார்ந்த இன்பக்கொள்கை ஆகியவற்றைக் கொண்டு விளங்குவதால் சூப்ப்ர் ஈகோ தனது வேண்டுகோள்களைக் கட்டாயத்தனமான கட்டளைகளாகவும், சட்டங்களாகவும், விதிகளாகவும் செயல்படுத்த முனைகிறது. சூப்பர் ஈகோவின் கருத்துக்கள், இட்டின் கருத்துகளுக்கு எதிராக இருப்பதால் இட்டை ஈகோ சார்ந்திருக்கும் போது ஈகோவையும் எதிர்க்கத் துணிந்து விடுகிறது. தனிமனித வாழ்வில் ஈகோ வலிமையானது என்றாலும் சமூக வாழ்வில் சுப்பர் ஈகோ வலிமையானதாகும். வலிமையற்றதை வலிமையானது அதிகாரம் செலுத்துவது போல ஈகோவை சூப்பர் ஈகோ ஆதிக்கம் செலுத்துகிறது. சூப்பர் ஈகோ சமூக வாழ்வில் நல்லவிதமாக செயல்பட்டாலும், அது ஈகோவிற்கு கெட்ட செயல்தான். ஏனெனில் ஈகோ சூப்பர் ஈகோவிற்காக தனது நன்மைகளையும் இன்பங்களையும் தியாகம் செய்ய வேண்டியுள்ளது. எனவே தனிமனிதனின் தியாக மனப்பான்மையிலேயே சமூகத்தின் நன்மை அடங்கியுள்ளது.

அமுக்கமும் தற்காப்பும்
இட்டின் உடனடித் தீவிரப் போக்கால் நனவிலிக்குள் இறுக்கம் ஏற்படுகிறது. இது ஈகோவிற்குத் துன்பத்தைத் தருகிறது. எனவே இறுக்கம் குறையக் குறைய ஈகோ இன்பம் பெறுவதைக் குறிக்கோளாகக் கொள்கிறது. இந்த நெருக்கடி நிலையிலிருந்து ஈகோ தன்னைத் தற்காத்துக் கொள்ள சில செயற்பாடுகளை மேற்கொள்கிறது. இவையே தற்காப்பு இயக்கம் எனப்படுகிறது. உளப்பகுப்பாய்வின்படி தற்காப்பு இயக்கம் என்பது ஈகோ தன்னைக் காத்துக் கொள்வதையே குறிக்கும். இதனால் சமூக நலன் காக்கப்படுகிறது. இவ்வாறு இல்லாமல் இட்டின் உடனடித் தீவிரப் போக்கால் தற்காப்பு நடைபெறாது போனால் நனவிலிக்குள் இறுக்கம் ஏற்படுகிறது. இதுவே ‘தகுநிலை அமுக்கம்’ எனப்படுகிறது. தணிக்கை அமுக்கம் தற்காப்பு நிலை கடந்து உருவாவது முறிவு ஆகும். வேட்கைகளை ஈகோ புறக்கணிக்க நேர்ந்தாலோ ’மோகப்பொருள் ஈர்ப்பு’ ஏற்பட்டாலோ ஈகோவின் விருப்பம் நிறைவேறாமல் போகிறது. இதையே ‘முறிவு’ என்கிறார் பிராய்ட்.

அமுக்கம் என்பது சூப்பர் ஈகோவின் செயல்பாடாகும். இட்டானது அமுக்கத்தின் போது வேட்கைகள் தம்மை முழுவதுமாக ஈர்த்து விடாமல் எதிர்த்துப் பொரிடும். அமுக்கத்தால் வேட்கைகள் அடங்கிப் போவதில்லை. ஆனால் முறிவு என்பது வேட்கைகளைத் தாமே புறக்கணிப்பதைக் குறிப்பதாகும். இதனால் வேட்கைகள் தாமாகவே அடங்கிப் போகின்றன. அமுக்கத்தினாலும் முறிவினாலும் ஏற்பட்ட பாதிப்புகளை விட்டுவிட்டால் அவை வளர்ந்து மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். சான்றாக மனநோய்க்கு ஆட்பட்ட விபரீத விளைவுகளை விட்டுவிடும். இதனைத் தவிர்க்கவே தற்காப்பு நடத்தைகள் மனிதனைப் பாதுகாக்கும் காவலனாய் விளங்குகிறது.

அமுக்கப்பட்ட எண்ணங்களும் – நோய்க்குறிகளும்
சூப்பர் ஈகோவில் அமுக்கப்பட்ட எண்ணங்ளே நோய்க்குறிகளாக வெளிப்படுகின்றன. ‘அமுக்கப்பட்டவைத் திரும்பி வருவதால் நோய்க்குறி உருவாகிறது’ என்று தி.கு. இரவிச்சந்திரன் கூறுகிறார். கடந்த காலமும் நிகழ்காலமும் நோய்க்குறிகளில் கலந்துள்ளன. எதிர்காலம் வெளிப்படையாகத் தெரிவதில்லை. இந்நோய்க்குறிகள் உளநோக்குத் தாக்குதலைப் புறநிலையிலோ, அகநிலையிலோ வெளிப்படுத்துகின்றன. இந்நோய்க்குறிகளைக் கண்டறிவதன் மூலம் எந்நோய்க்கு நோயாளி ஆட்பட்டுள்ளார் என்று அறியமுடிகிறது. நோய்க்குறிகள் ஒருவரிடம் நனவு நிலையிலோ, நனவு அறியா நிலையிலோ வெளிப்படுகின்றன. ஆனால் சிலரிடம் நரம்பு நோய்க்குறிகள் இல்லையென்று எண்ணுகிற அளவிற்கு மறைந்தும் இருக்கும். எனவே இவற்றை உளப்பகுப்பாய்வின் மூலம் கண்டறியமுடியும். எனவேதான் இலக்கியப் படைப்புகளில் கதாபாத்திரங்களை ஆராய உளப்பகுப்பாய்வு முறை பயன்படுகிறது.

கலாவின் பாத்திரப்படைப்பு
சிறிய வயதில் கலா தன் பாட்டி மட்டுமே உலகமென்று இருந்தவள். தனக்குச் சிறியதாக தலைவலி என்றாலும் பாட்டி துடிதுடித்து விடுவாள். அவர்களின் குடும்பத்திற்குள் பாட்டியும் அவளும் மட்டுமே உறுப்பினர். எனவே எதிர் பாலினத்தின்பால் மோகம் உண்டாகாமல் அமுக்கப்பட்டு தன்பாலின மோகம் வெளிப்படுகிறது. இதன் மிகை உணர்ச்சியே பாட்டியின் மடிமீது தலையை வைத்துத் தூங்குவது சுகமானது என்று கூறுவதுமாகும். இதன் உச்சமே பாட்டி கட்டும் கஞ்சி போடாத மொட மொடப்பான சேலையின் மீது ஏற்படும் ஆசை ஆகும். இது ’நோக்க மோகநிலை’யைச் சார்ந்ததாகும். பாட்டியின் மீதான தன்னின மோகமே எதிர்பாலினத்தின் மீதான வெறுப்பாகிறது.

சுந்தர வேலுக்கும் தனக்கும் ஏற்படும் திருமண உறவின் மூலம் இம்மோகம் தடைபடுகிறது. மேலும் அவனது புகையிலை போடுதல் சிகரெட் பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களும் அவற்றின் மீதான வாசனையும் அவளுக்குப் பிடிக்கவில்லை. இது அவனின் மீதான வெறுப்பாகிறது. அந்த வாசனைப் பற்றிய எண்ணங்கள் அவன் தன் அருகில் இல்லாத நேரத்திலும் அவனை வெறுக்க வைத்தது. இந்நிலையில் தன்னின மோகம் தனது திருமணத்தினால் அமுக்கப்பட்ட நிலையில் தனக்குப் பிறந்த குழந்தையின் மூலம் வெளிப்படுகிறது. இதனை அவளின் எண்ண ஓட்டத்தின் மூலம் (ப.94) அறிந்துகொள்ள முடிகிறது. கணவனை கைகழுவி வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில் அதுவும் தடைபடுகிறது. ஆனால் தனக்கும் தன் மனதிற்கும் விடுதலை கிடைத்ததை எண்ணி மகிழ்கிறாள். இந்நிலையிலேயே ஆழ்மனதில் அமுக்கப்பட்ட எதிர்பாலின மோகம் லிங்கம் என்பவனைப் பார்த்த பிறகே வெளிப்படுகிறது. இது அவனுடனான பாலுறவின் மூலம் வலுவடைகிறது. திருமணமாகாமல் தானும் லிங்கமும் சேர்ந்து வாழ்வதால் சமூகத்தின் ஏச்சுகளுக்கும் பேச்சுக்களுக்கும் ஆளாகிறாள். இதுவே அவளை மனநோய் ஆட்கொள்ள ஏதுவாகிறது. அவளுக்கு மனநோய்க்குறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.

மூடநம்பிக்கை
சமூகத்தில் மூடநம்பிக்கைகள் சல்லி வேர்களாகப் பரவி கிடக்கின்றன. மக்களின் நம்பிக்கையில் இவையே இருப்பதால் இலக்கியங்களிலும் இவை இடம் பிடிக்கின்றன. நாவலின் நாயகி கலாவிற்கும் ஒரு நம்பிக்கை உண்டு. எவரெனும் கர்சீப் புதிதாக கொடுத்தாலோ வாங்கினாலோ உறவு நீடிக்காது என்கிறாள் (ப.55) இந்நிகழ்வே லிங்கத்திடமிருந்து பிரியப் போகிறோம் என்ற எண்ணம் ஏற்பட முதல் காரணமாகிறது.

பூனை மீதான விருப்பும் வெறுப்பும்
அவள் வேலைக்கு போகும் இடங்களிலெல்லாம் ஆண்கள் உடம்பைத் துளைக்கும் கூரிய பார்வை பார்ப்பதைக் கண்டால் எரிச்சலை ஏற்படுத்தும். பூனையின் பார்வையும் ஆண்களின் பார்வையும் ஒன்றே போல் தோன்றுவதாய் நினைத்துக் கொள்வாள். இதனாலும் அவனது மனம் குறுகுறுப்பதாய்த் தோன்றும் (ப.56) இதுவே அவள் பூனையை வெறுப்பதற்குக் காரணமாகும். சில நேரங்களில் பூனைகளை மார்பில் ஏறவிட்டுக் கொஞ்ச வேண்டும் என்ற எண்ணம் கலாவிற்குத் தோன்றுகிறது (ப.137). இது அமுக்கப்பட்ட பாலியல் வேட்கைகள் மடை மாற்றம் ஏற்பட்டு விலங்குகளின் மீதான மோகமாக மாறுவதேயாகும்.

ஆவி பற்றிய நம்பிக்கை
கலாவிற்கு ஆவி, பேய் ஆகியவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. தான் தனித்து வாழ்ந்தபோது தங்கியிருந்த வீட்டில் ஆவியிருந்ததாகவும் அப்போது புகையிலை, சுருட்டு வாசனை பிடித்தமானதாக இருந்ததாகவும் கூறுகிறாள் (ப.67). இது அவள் தனிமையில் தன் கணவனுடன் வாழ்ந்த வாழ்க்கைப் பற்றிய எண்ணங்களை வெளிப்படுத்துவதாக உணரமுடிகிறது. மேலும் அவளுக்குப் பிடிக்காத வாசனை பிடிப்பதாக உணர்வது காம இச்சையைக் குறிப்பதாகும். இதையே ஆவியுடன் தொடர்புபடுத்தி உணர்ந்து கொள்கிறாள்.

மிகை மதிப்பும் ஆடம்பரமும்
அன்றாட உணவுக்காகவும் இதர செலவினங்களுக்காகவும் கஷ்டப்பட்ட சூழ்நிலையிலும் கண்ணாடி பீரோ வாங்க வேண்டும். நகையை அடகுவைத்து அலங்காரப்பொருட்கள் வாங்க வேண்டும் என்கிற அவளின் ஆசைகள் தன் மீதான மிகை மதிப்பீடாகவும் ஆடம்பரமாகவும் தெரிகிறது.

சாவுணர்ச்சி
வாழ்வுணர்ச்சிக்கு எதிரானது சாவுணர்ச்சியாகும். வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளால் உள இறுக்கங்கள் உருவாகின்றன. இவ்இறுக்கங்கள் உடைய மனம் சாவுணர்ச்சியை நாடுகிறது. தன் வாழ்வில் தொடர்ந்து வரும் இன்னல்களாலேயே கலாவிற்கு சாவுணர்ச்சி தோன்றுகிறது. இது பனியன் பிசிறு பார்க்கறப்போ அந்த பனியன் சூரிகயிறு கழுத்து சுத்தி மூச்சு திணறடிக்கறமாதிரி இருந்திச்சு. ஒரு சமயம் சொகமா இருந்துச்சு… அதை நானே எடுத்து கழுத்த இறுக்கனும் போல இருந்திச்சு” என்ற கலாவின் கூற்றின் மூலம் உறுதிப்படுகிறது.

கருவறைக் கருப்பை
ஒரு குழந்தை சமூக நெருக்கடி இல்லாமல் பாதுகாப்பாக இருப்பது கருப்பையில் மட்டுமே. கலாவும் சில முடிவுகள் எடுக்க கழிவறையை நாடுவதும் கருப்பைக்குத் திரும்புவதையே குறிக்கிறது. அங்குமட்டுமே எவ்வித இடையூறும் இல்லாமல் முக்கிய முடிவுகள் எடுப்பதற்குத் தகுதியான இடமாக இருக்கிறது என்று தேர்ந்தெடுக்கிறாள்.

பாலுறவில் நாட்டமின்மை
அனைவரிடமும் பாலுறவு மோகம் இயல்பாகவே அமைந்திருக்கும். ஆனால் கலா லிங்கத்துடன் முதலிலிருந்தே தனிமைப்பட்டது போன்ற உணர்வுடனே காணப்படுகிறாள். இதே இணைநிலையைப் பாலுறவிலும் காணமுடிகிறது (ப.157).

பிறருக்கான தண்டனை
இயல்பாகவே மனிதர்களிடம் தான் வெறுப்பவர்களின் மீதும் தனக்குப் பிடிக்காத காரியங்கள் செய்பவர்கள் மீதும் திட்டுதல், சாபமிடுதல் இருக்கும். ஆனால் கலா தான் வெறுப்பவர்களுடன் தன் நலம் விரும்பிகளுக்கும் சேர்த்தே சாபமிடுகிறாள் தண்டனையும் தரவேண்டும் என்கிறாள் (ப.167).

கொலையுணர்வு
கலாவிடம் சாபமிடுதல் தொடங்கி தண்டனை தர வேண்டும் என்ற எண்ணம் வலுத்து இறுதியில் கொலை செய்யவேண்டும் என்கிற கொலையுணர்வு உச்சம் பெறுகிறது. இதனை அரைக்கும் கல்லை எடுத்துத் தலையில் நச்சென்று வைத்து கொல்லலாம் போலவும் அல்லது யார் தலையிலாவது போடலாம் என்று யார் தலையில் போடுவது என்றும் ஒரு பட்டியல் மனதில் தயாராகிறது என்ற அவளின் எண்ண ஓட்டத்தின் மூலம் அறிய முடிகிறது (ப.198).

சாத்திர நம்பிக்கை
மனச்சோர்விற்கு உள்ளானவர்களிடம் எதைச் சொன்னாலும் நம்பிவிடுவர். ஏனெனில் அவர்களுக்கு ஏதாவது தீர்வுக் கிடைக்காதா என்று ஏங்குபவராக இருப்பர். இதனை வாஸ்து சாஸ்திரத்தின் மீதான கலாவின் நம்பிக்கையில் அறியமுடிகிறது (ப.179).

மனஅழுத்தம்
மனஅழுத்தம் என்பது மனிதன் தனது எண்ணங்களை நினைவுகளைத் தன் மனதிற்குள்ளேயே அடக்க முயலுவதைக் குறிக்கிறது எனலாம். இவ்வாறு அமுக்கப்பட்ட உணர்வுகள் சில குறிப்பிட்ட சூழல்களில் தம்மையும் அறியாமல் வெளியாகின்றன. தன் கணவன் தன்னை அடிக்கும் போது ஏற்பட்ட மன அழுத்தங்கள் லிங்கத்தின் உடனான வாழ்க்கையின் போது ஏற்பட்ட சிறுபிணக்கால் அவனை எதிர்ப்பது தன் கணவனையே எதிர்ப்பதாக நினைக்கிறாள்.

முடிவுரை
இலக்கியப் படைப்புகளை ஆய்வதற்கு உளப்பகுப்பாய்வு சிறந்த அணுகுமுறையாகும். தனிமனிதன் ஒருவனின் நடத்தை முறைகளைக் கட்டமைப்பது அடிமன வேட்கைகளும் சமூகச்சூழல்களும் ஆகும். எனவேதான் அமுக்கப்பட்ட அடிமன வேட்கைகளே வெளிப்பட்டு கலாவை லிங்கத்துடன் ஒட்டுதலாக்கியது. சமூகத்தின் சூப்பர் ஈகோ அவளை நெருக்கடிக்கு உள்ளாக்கி மனநோய்க்குறிகளைக் தோற்றுவிக்கிறது. இம்மனநோய்க்குறிகள் மனநோயில் தள்ளுவதை அறிந்துகொண்டு அவற்றிலிருந்து மீண்டெழவே லிங்கத்திடமிருந்து பிரிந்து செல்கிறாள்.

துணைநின்ற நூல்கள்
1. சுப்ரபாரதி மணியன் – நீர்த்துளி, உயிர்மை, அபிராமபுரம், சென்னை – 18,
பதிப்பு – 2011
2. சிக்மண்ட் ஃப்ராய்டு – தி. கு. இரவிச்சந்திரன், உளப்பகுப்பாய்வு அறிவியல்,
அலைகள் வெளியீட்டகம், கோடம்பாக்கம், சென்னை.
3. முனைவர்.மொ. இளம்பரிதி (தொ.ஆ) – நாவல்: நவீனப் பார்வைகள், காவ்யா
பதிப்பகம், சென்னை 24 பதிப்பு – 2007.

Series Navigationசாவடி – காட்சிகள் 7-9ஊழி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *